இணைய இதழ் 117சிறுகதைகள்

பிடி மண் – சௌ.இரமேஷ் கண்ணன்

சிறுகதை | வாசகசாலை

சென்னையில் வசிக்கும் சம்பந்தமூர்த்தி அண்ணனிடமிருந்து காலையில் தொலைபேசி அழைப்பு வந்ததிலிருந்து எனக்குக் கை கால் ஓடவில்லை. குடும்பத்தில் அண்ணன்தான் மூத்தவர். தலைமைச் செயலகத்தில் உயர்பதவி வகித்து வருபவர்.அவருக்கு அடுத்து

பங்கஜம் அக்கா. அக்காவைச் சொந்தத்தில் கட்டிக் கொடுத்தோம். மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்தில் இருக்கிறாள். மாமாவிற்கு கூட்டுறவுத் துறையில் எழுத்தர் வேலை. அவ்வப்போது பங்கஜம் வீட்டுக்கு வந்து கண்ணைக் கசக்குவாள். மதுரையில் சுப்பிரமணியபுரத்தில் மூணு பத்தி வீடு. கல்லுச்சந்து. அப்பா சுயமா சம்பாதித்தது. அண்ணனுக்கு வேலை கிடைக்கும் வரை மாமா இப்படிச் செய்ததில்லை.

 அப்பா கே. எஸ். வி ராவுத்தர் கடையில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு அந்த வேலை கிடைத்ததில் ஒரு சுவராசியமான பின்னணி உள்ளது. காரைக்குடியில் இருந்து தாத்தா காலத்தில் மதுரைக்குப் பிழைக்க வந்தவர்கள். நேதாஜி ரோடு முருகன் கோயிலுக்கு அருகில் சின்னத் தாத்தா காபித்தூள் கடை வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் கடையை அடைத்த பின்னர், சிம்மக்கல் கோனார் கடைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டுச் செல்வது வழக்கமாம். சின்னத் தாத்தா வீடு கீழவாசல் அரசமரத்துப் பிள்ளையார் கோவில் பக்கம். அப்பா ,அப்போது சின்னத் தாத்தா கடையில் பொடி வேலைகளைச் செய்தபடி இருந்திருக்கிறார். சாப்பிட்டு முடித்துக் கணக்கை முடிப்பதற்காக தாத்தா கல்லாவில் இருந்தவருடன் கணக்கு விவரம் கேட்டுக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் பெரியவர் சொன்ன சாப்பாட்டுக் கணக்குக்கு கல்சிலேட்டில் எழுதிக் கொண்டிருக்கிறார் கடை வேலையாள். சிறுவனாக இருந்த அப்பா எட்டிப் பார்த்து கல்சிலேட்டில் எழுதிய கணக்கில் இருக்கும் பிழையைச் சுட்டிக் காட்டுகிறார். கணக்கு எழுதியவரோ வயதில் மூத்தவர், மீண்டும் ஒருமுறை சரிபார்த்து அப்பாவைப் பாராட்டியிருக்கிறார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், தாத்தாவிடம் அப்பாவை பற்றி விசாரிக்க, “நல்லா சூட்டிக்கா இருக்கானே, மேலமாசி வீதியில நம்ம கடை ஒன்னு இருக்கு. தம்பிய வேணா கடைக்கு அனுப்புங்க. நல்ல சம்பளமா தாரேன். அவங்க அப்பா கிட்டப் பேசிட்டு விவரத்தைச் சொல்லுங்க” என்று சொல்லி இருக்கிறார் ராவுத்தர். தாத்தாவுக்கும் ரொம்ப சந்தோசம். ‘பிள்ளை வளர்ந்து வரும் முன்னையே அறுவடைக்குத் தயாராயிருச்சு…நல்ல நாள் பார்த்து என்னைய ராவுத்தர் கடைக்கு வேலைக்கு அனுப்பி வச்சாங்க’ அப்படின்னு அப்பா சொல்றப்ப கண்ணுல தண்ணி கெட்டிட்டு நிக்கும். வேட்டி முனையை ஏந்தித் தலையைக் குனிந்து துடைத்துக் கொள்வார். நாங்க வளர்ந்து வருகிற நேரம். ராவுத்தர், கடையைப் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்.

ராவுத்தர், அப்பாவை ஆரத்தழுவி, “நீ இவனுங்க கிட்ட வேலை பார்க்கிறது எனக்கு சரியா படல …நான் உன்னை ‘ராஜா ராணி’ தையல் மெஷின் கடையில் சேர்த்து விடுறேன்” எனச் சொல்ல, அப்பா இப்படித்தான் ராஜா ராணி தையல் மெஷின் கடைக்குக் கணக்கராக மாறினார். ராஜா ராணி கடைக்கு வந்த புதிதில் அப்பா கொடுத்த ஆலோசனைகளில் விற்பனை அதிகரித்ததோடு, கம்பெனியின் பெயர் எல்லோருக்கும் பரிச்சயமானதில் முதலாளிக்கு சந்தோஷம். அந்தக் காலத்தில் திரையரங்குகளில் ஸ்லைடு போடும் வழக்கமிருந்தது. அதனை அப்பா முதலாளியிடம் சொல்லி கடையை விளம்பரப்படுத்த வலியுறுத்தினார். அதோடு கம்பனி எம்பளத்த இவரே வரைய இன்னிக்கும் அதான் ஜொலித்துக் கொண்டு நிற்கிறது. எம்பளத்துக்கு கீழே ‘சுலபத் தவணைகளில் கிடைக்கும்’ என ஒரு வரியைப் பெரிய எழுத்தில் போட வைத்தது தான் ஹைலைட்.

ராஜா ராணி தையற்கடையில் அப்பாவின் புகைப்படம் பக்கவாட்டில் வைத்ததோடு அதன்முன் சில பூக்களை நேர்த்தியாக வைத்து இன்று வரை மரியாதை செலுத்துவது சாதாரண விஷயமில்லை.

அப்பா கால்தடம் படாத தென் மாவட்ட கிராமங்களே இல்லை எனலாம். மோட்டார் பம்பு செட் சுற்றுச்சுவர் முதல் ஊரின் மந்தைகளில் வரையப்பட்ட தையல் எந்திரத்தின் அச்சு, தையல் மெஷின் சந்தையை அசைத்தது. அடுத்து அப்பா தினப்பூ, தினநிலவு பத்திரிகைகளில் அறிமுகப்படுத்திய முதல் தாளின் மேல் இரண்டு பக்கங்களிலும் இருந்த கருப்பும் மஞ்சளும் கலந்த தையல் மெஷின் லேபிள் அமர்க்களப்படுத்தியது.

சம்பந்தமூர்த்தி கல்லூரி முடித்து வெளியே வந்த சமயம், ஒரு நாள் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டுக்குப் போனவர் உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது.

விஷயம் கேள்விப்பட்டு அப்பாவின் தொழில் ரீதியான நண்பர்கள் வீட்டிற்கு முன் குவியத் தொடங்கினர். தென் மாவட்டத் தையற்கலைஞர்கள் சங்கத்தினர் அப்பாவிற்கு இரங்கல் தெரிவித்த சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன சங்கத் தலைவர் லஷ்மி இரங்கல் உரையாற்றினார் . புருஷனால் விரட்டப்பட்ட லக்ஷ்மி தாய் வீட்டிற்குச் செல்லப் பிடிக்காமல் பெரியார் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் மரப்பெட்டியைக் கவிழ்த்தி அதன்மீது பழங்களைப் பரப்பி வியாபாரம் ஆரம்பித்திருக்கிறார். ஏதேச்சையாக அந்தப்பக்கம் சென்ற அப்பா, ‘என்னம்மா, புதுசா கடை போட்டுருக்கியா?’ எனக் கேட்க, ஒரு பாட்டம் அழுது தீர்த்து இருக்கிறாள் லஷ்மி. அப்பா ஆறுதல் சொன்னபடியே, ‘வேறு என்னதான் உனக்குத் தெரியும்?’ எனக் கேட்க, ‘துணி தைக்க தெரியும். ஆனா, என்கிட்ட ஒரு பைசா கூட இல்லை!’ என்று சொல்லி இருக்கிறார். ‘அப்புறம் என்னம்மா வசதியா போச்சு’ என்று சொல்லி அவளைக் கடைக்கு அழைத்துச் சென்று, ஓனரிடம் சொல்லி ஒரு தையல் மிஷினை அவர் பொறுப்பில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அன்று லஷ்மிக்கு லட்சுமி கடாட்சம் கிடைத்தது என்றே சொல்லலாம். லஷ்மி கிடைத்த ஒரு தையல் மிஷினை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான ஆடைகளைத் தைக்க தொடங்கினாள்.அப்பாவே துணியை மொத்தமாக விற்கக்கூடிய பத்துத்தூண் சந்துக்கு கூப்பிட்டுட்டுப் போய் சில கடைகளில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். லஷ்மி பிட்டுத் துணிகளை வைத்து சிறிய குழந்தைகளுக்கு கவுன், ஃபிராக் தைத்து வண்ண வண்ணப் பூக்களை டிசைனாக விரும்பிச் சேர்த்தாள். அந்த ஆடைகளைப் பிளாட்பாரத்திலேயே வைத்து விற்கத் தொடங்கினாள்.

முதலில் சிறிது சிறிதாக கவனப்படுத்தப்பட்ட கடை இன்று பெரிதாக நிற்கிறது. மதுரையில் மலிவு விலையில் துணிகளை வியாபாரம் செய்யும் ஒரு கடையாக இன்று எழுந்து நிற்கிறது. இன்றைக்கும் மரப்பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு ஆப்பிள் பழங்களைப் படர்த்தி இருக்கும் போது என்னிடம் வந்து ஐயா பேசியது மனதில் அகலாத காட்சியாக இருக்கிறது என்று லஷ்மி உருக்கத்தோடு சொன்னாள். கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவம் இருந்தது. தையல் எந்திரம் என்பது நலிந்தவர்களுக்காக கொடுக்கப்படும் ஆயுதம். அப்பா சொல்வார், “டேய், தையல் மெஷின் மணிமேகலையின் கையில் இருந்த அமுதசுரபி மாதிரிடா..

உண்மைதான், பெண்களுக்குத் தையல் இயந்திரம் ஒரு காலத்தில் கை கொடுத்த துருப்புச்சீட்டு என்றே சொல்லலாம். மயில்வாகனன் ஐயா எல்லா சடங்கு, சம்பிரதாயங்களை முன்னாடி நின்னு செஞ்சார். “தாயில்லாத புள்ளைகள கட்டு திட்டா வளக்குறது சாதாரணமா என்ன? யாராவது ஒருத்தர் அப்பா இடத்துல நின்னு வேலை செய்யுங்க கடைல” என்றார். அண்ணனைப் படிக்கச் சொல்லிட்டு நான் நுழைந்தேன் . அப்பா நடந்த அதே பாதை கரடுமுரடாக இருந்தது. அப்பா சொன்ன நெளிவு சுளிவு கை கொடுத்தது.

கிராமத்துல தையல் மெஷினை மந்தைல வைத்து தவணைக்குக் கொடுத்தோம். சில ஊர்களுக்கு நன்கொடை கொடுத்தோம். தெற்கே இப்போது போனாலும் ராஜா ராணி

படம் வெளிறி நிற்கும். இப்போதும் வியாபாரம் ஆகிறது. மனுஷங்க முகத்தைப் பாத்து செய்வதெல்லாம் மலையேறி போய் விட்டது. சின்ன முதலாளிகள் முதல் போட்டுத் தொழில் செய்கிறார்கள்.

“என்னதான் ஆனாலும் மனுசங்க முகத்தைப் பாத்து செய்யுற வியாபாரத்துக்கு முன்னாடி இப்ப ஒரு மச்சம் குறையத்தான் செய்யுது” என்றார் மயில்.

“ஆமாங்க ஐயா! ஆனா, இப்பத்தான் எல்லாமே இணைய வழின்னு சொல்றாங்களே ஐயா” என்றேன்.

“என்னத்த இணைஞ்சாங்களோ போ!” என்றார். அண்ணன் ஃபோன் செய்து விசாரித்தைக் கூறினேன்.

“அவன் போன்ல பேசுனானா?” என்று ஆச்சரியப்பட்டார். உண்மைதான், அண்ணனுக்கு அந்நியச் சம்பந்தம். கொஞ்சம் எங்கள காட்டிலும் உயர்ந்த இடம். அண்ணன் படிப்பு, வேலை அவர்களுக்குப் பிடித்துப் போய் மயில்வாகனன் ஐயா தலைமையில் தான் திருமணம். அண்ணன் சென்னையில் வேலை பார்ப்பதால் அடிக்கடி வந்து போக முடியாது. அண்ணி வீட்டிற்கு வந்த புதிதில் அண்ணனின் பொருட்களை எல்லாம் ஆசையாகப் பார்த்தவர், அத்தனையையும் ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டார். அக்கா, அண்ணன் புகைப்படம் ஒன்றை வாங்கி டிவி மேசையில் வைத்தாள். கொடைக்கானலில் அவனது கல்லூரி நண்பர்களோடு எடுத்தது. அண்ணியால் மேற்கொண்டு பேச முடியவில்லை. வாசலில் கார் வந்து நின்ற சத்தம். மூட்டை முடிச்சுகளைக் கட்டி டிக்கியில் வைத்தோம். முன்னறையில் இருந்த ஆனந்த விகடன் புத்தகங்களையும் ஏற்றச் சொன்னார் அண்ணி டிரைவரிடம். நானும் அக்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். திருவாளர் சம்பந்த மூர்த்தி தனது அலுவலக கோப்புகளை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினார்.

பின்னர் எப்போதாவது பேசுவார். தீபாவளி பொங்கல் வாழ்த்து சொல்வது, அதுவும் தேய்ந்து சுத்தமாக நின்று போனது.

இன்றைக்கு அத்திப்பூத்தாற் போல போனில் அழைத்து, “புது மாடலில் ஒரு தையல் மெஷின் வேண்டும். உடனே வாங்கி அனுப்பு” என்றார்.

“சென்னைல இல்லாத கடையா? எதுக்கு உன்ட்ட கேட்டிருக்கான்? ஸ்டாக் இல்லன்னு சொல்லி முடிச்சு விடுடா” என்றார் மயில்.

“இல்லைங்க ஐயா. நான் ஒரு எட்டு போய் கொடுத்துட்டு வந்துடுறேன் ஐயா” என்றேன்.

“நீ நான் சொன்னா கேக்கவா போற?”

“சில பேர் ராசிடா.. நம்மள மசிறுக்குக் கூட மதிக்க மாட்டானுக. ஆனா, ஒரு தடவ நம்மகூட பேசினாப் போதும் காலுல போய் கிடப்போம். சரி, மணிகண்டன்ட்ட சொல்லி டிக்கெட் போட்டு போயிட்டு வா… அந்தப் பெரிய மனுசன நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லு.”

எக்மோரில் இறங்கி தையல் மெஷின் மேற்பாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டேன். அப்பா சில சமயம் இப்படி தூக்கிச் செல்லும்போது கூடப் போயிருக்கிறேன். ஆட்டோ டிரைவரிடம் முகவரி சொல்ல, “மெயின் ரோடுக்கு அப்புறமா நீ வழி சொல்லு சார்” என்றார்.

வண்டி லிபர்ட்டி பஸ் ஸ்டாப்பில் நின்றது. “லெஃப்ட்டா ரைட்டா?” என்றார். ஏதோ அரசியல் பேசுவது போலத் தோன்றியது.

நான் “ரைட்” என்றேன். ஆட்டோ வளைந்து முன்னே சென்றது. அப்பா கல் சிலேட்டை எக்கிப் பார்த்தது போல நகரத்தைப் பார்த்தேன். அதில் பிழையாக ஏதும் தெரியவில்லை. அண்ணன் வீடு வந்து விட்டது. அண்ணன் “வாடா வாடா” என்று வாசல் வரை வந்தது. அண்ணி, பிள்ளைகள் வர நலம் விசாரித்து முடித்து அறைக்குள் நுழைந்தேன் .

அண்ணன் ,அப்பாவின் புகைப்படத்தைப் பெரிதாக்கி சுவரில் மாட்டியிருந்தார். அதன் கீழ்தாங்கியில் ஒரு ஜீரோ வாட்ஸ் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. புகைப்படத்திற்கு முன் சிமெண்ட் மேடை போட்டிருந்தார்.

எனக்குக் கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. “சரி, ஃபிரெஷ்ஷாயிட்டு வா” என்றார் அண்ணன். அண்ணி இட்லியை எங்களிருவருக்கும் வைக்க காலை டிபன் முடிந்தது. அண்ணன் மெள்ள ஆரம்பித்தார்.

“அப்பா கனவில் வந்து நீ என்னை குறையா வச்சிருக்க. சீக்கிரமா என்னைக் குளிர வைன்னு சொன்னார். அடுத்த நாள் காலைல வாசலில் ஏதாச்சும் கிழிஞ்ச துணியிருந்தா கொடுங்க தைச்சு தர்றேன்னு சொல்லி ஒரு பெண் வந்து நிக்கிறா. எனக்கும் , உங்க அண்ணிக்கும் தூக்கி வாரிப் போட்டது போல இருந்தது. அப்புறம் அந்தப் பெண்ணை வயிறார சாப்பிட வச்சு துணிமணி கொடுத்து அனுப்புனோம். அன்னைக்கு நைட்டு நல்ல தூக்கம்டா. அதான்.. தையல் மெஷின் அப்பாவுக்கு தெய்வம் போல. நீ செஞ்ச புண்ணியம் நீ இருக்குற இடமே அங்கதான். அதான், பிடிமண் மாதிரி வைக்கலாம்னு கொண்டு வரச் சொன்னேன்”

அன்று மாலை அப்பாவின் முன் ‘ராஜா ராணி’ தையல் மெஷினை வைத்து வழிபட்டோம்

அண்ணனின் கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டு ததும்பியது. மேசையின் மீதிருந்த ஆனந்த விகடனின் தாள்கள் காற்றில் சடசடத்தன.

-ramkan74@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button