இணைய இதழ் 117குறுங்கதைகள்

இரு குறுங்கதைகள் – மணி ராமு – மலேசியா

குறுங்கதைகள் | வாசகசாலை

அதீதம்

இருட்டுவதற்குள் வீட்டில் விளக்கேற்றி விடுவார் வைதேகி. பூஜை மேடையில் பூச்சரங்கள் சருகாவதற்குள் மாற்றி விடுவார். அகர்பத்தியின் நறுமணமும் சாம்பிராணியின் வெண்புகையும் வீட்டைக் கடந்து வீதிவரை தத்தம் இருப்பை நிலைநாட்ட மறவாது. வைதேகியின் வீட்டைக் கடந்து போவது ஆலயத்தை கடந்து போகும் மனநிலைக்கு ஒப்பானதென்று அண்டை அயலார் பேசிக் கொள்வது வழக்கம்.

வைதேகிக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டிருந்தது. அவரது கணவன் மலர்மன்னனுக்கு வயது அறுபதைக் கடந்து கொண்டிருந்தது. வயதுக்கேற்ற பிணியேற்றங்கள் உடலுக்குள் நிகழ்வது தவிர்க்க முடியாததுதான். அந்த வகையில் அண்மையக் காலமாக மலர்மன்னனுக்கு சுவாசப் பிரச்சனைகள் தொற்றிக் கொண்டிருந்தன. அதன் நீட்சி, இருதயத்தையும் சோர்வுக்குள்ளாக்கி இரத்த ஓட்டத்தில் சரிசீரற்ற நிலையை உருவாகியிருந்தது.
அடிக்கடி மருத்துவனைக்குச் செல்வதும் பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்புவதுமாக இருந்தார் அவர். இடையில் சில முறை மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலையும் இருந்தது.

ஒவ்வொரு முறையும் நுரையீரலை பரிசோதித்துவிட்டு மருத்துவர் கேட்கத் தவறியதில்லை, ‘புகைப் பிடிப்பீர்களா? என்று. இல்லை என்கிற மலர்மன்னனின் பதிலில் நிச்சயம் பொய்யில்லை. எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத கண்ணியமான மனிதர் மலர்மன்னன் என்பது ஊரறிந்த உண்மைதான்.
வைதேகி மருத்தவத்தை விடவும் தெய்வத்தை அதிகம் நம்பினார். பூஜை புனஸ்காரங்களை அதிகப்படுத்தியிருந்தார்.
எதிர்பார்க்கவில்லை. ஒரு நாள் இரவு மூச்சிரைப்பு அதிகமாகி இருதயம் படபடத்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் மலர்மன்னனின் ஆதன் யாக்கையிலிருந்து விடைபெற்றுக் கொண்டது.

இறப்பு வீட்டில் சுகந்தமாய் கமழ்ந்து கொண்டிருந்தது அகர்பத்தியின் மணம். இடத்தை ஆக்கரமித்திருந்தது சாம்பிராணியின் வெண்புகை. மலர்மன்னன் சுவாசச் சிக்கலில்லாமல் நிம்மதியாய் படுத்திருந்தார்.
எல்லோரும் சோகத்திலிருந்தார்கள். இரசாயணக் கலப்படங்களை அறியாமல் அழுதுகொண்டிருந்தார் வைதேகி.

நிழலில் நிற்கும் அழகி

“அப்படி நம்மகிட்ட இல்லாதது அவகிட்ட பெருசா என்ன இருக்கு? மூஞ்ச மூடிட்டுப் பாத்தா மேலையும் கீழையும் ஒரு மாதிரிதானே இருக்கும். இங்க வீசுற வாட அங்க மட்டும் இல்லாமலா போகும். வரவனுங்க என்ன மணிக்கணக்காவா ஆட்டிக்கிட்டு இருக்கப் போறானுங்க. இந்தக் காலத்து ஆம்பளைங்களோட உயிர் சக்தியோட லட்சணம் நமக்குத் தெரியாதா என்ன? அவுத்துட்டு நின்னாலே வெரச்சிப் போறானுங்க. கை வச்சாலே கொதிக்குது ஒடம்பு. படுத்தப் பத்தாவது நிமிஷம் பிச்சிக்கிட்டு ஊத்திடுது. இந்த பத்து நிமிஷ சொகத்துக்கு நம்ம மூஞ்சிங்க பத்தாதா இவனுங்களுக்கு. அவதான் வேணுமா? அவளுக்கு மட்டும் அடியில தங்கத்துலயா செஞ்சி வச்சிருக்கு? இல்ல அவகிட்ட மட்டும்தான் மணக்குதா?”
எவ்வளவு நேரம் ஆனதோ தெரியாது. ஆனால் விடாத புலம்பலை விடாபிடியாய் பிடித்துக்கொண்டிருந்தாள் மதனா.

“ஏன்டி அலுத்துக்கிற. அவளுக்கு அமைஞ்சிருக்கு, அவ வாழறா. அவளும் நம்ம ஜாதிதானேன்னு நெனச்சிட்டு அமைதியா போயிட வேண்டியதுதானே!” தன்மையாகப் பேசினாள் காவியா.

“என்னது நம்ம ஜாதியா? அப்படி அவ நெனச்சிருந்தா நாம தொழில் பண்ற இடத்துல வந்து கடைய விரிச்சிருப்பாளா?” பேச்சுக்கேற்றபடி கைகள் இரண்டையும் விரித்துக் காட்டினாள் மதனா.

“இப்ப பொலம்பி என்ன ஆகப் போகுது?” எப்போதுமே அதிர்ந்துப் பேசாத தாரணி சன்னமானக் குரலில் கேட்டாள்.

“என்ன ஆகப் போகுதா? நான் வயிறெரிஞ்சி பொலம்புறது… சாபமா மாறி அவளப் போயி சேந்து… அவ இந்த எடத்தவிட்டேப் போகனும்!”

“ஆமாம், பெரிய கண்ணகி சாபம். அவளப் போயி எரிச்சி சாம்பலாக்கிடும்!” பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் பேசினாள் ரதிதேவி.

“சிரிப்படி சிரிப்ப. நான் எனக்காக மட்டும்தானே கத்திக்கிட்டு இருக்கேன். நாம நாலு பேரும் ஒன்னுமண்ணா இங்க வந்தோம் இத்தனை வருசமா எந்தப் பிரச்சனையும் இல்லாம சேந்து தொழில் பண்றோம். நேத்து வந்தவ நமக்கு வருமானம் இல்லாம ஆக்கிட்டாளே!”

“என்னடி பண்றது நாம வாங்கி வந்த வரம் அப்படி. என்னத்தான் பணத்த அழிச்சி; வலியப் பொருத்து ஆப்ரேஷனெல்லாம் பண்ணியிருந்தாலும் நம்மல பாத்த அடுத்த நிமிஷமே கண்டுபுடிச்சிடறானுங்க. ஆனா, அவளப் பாரு, அசப்புல பொண்ணு மாதிரியே இருக்கா. ஏன், அசல் பொண்ண விடவும் அவ்வளவு அழகா இருக்கா. பிறகு ஆம்பளைங்க அவப் பின்னால போவாம…” உண்மையை உடைத்துப் பேசினாள் காவியா.

ஏற்கனவே நான்கு திருநங்கைகள் பொழப்பு நடத்தும் தெருவுக்கு புது வரவாக வந்தவள் தேன்மொழி. அவளே சொன்னாலேயொழிய அவள் திருநங்கை என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. மற்றத் திருநங்கைகள் போலல்ல அவள்.‌ தன்னை பெண்ணென்று சொல்வதை விடவும் திருநங்கை என்று சொல்லிக் கொள்வதில்தான் அவளுக்கு பெருமகிழ்ச்சி இருந்தது. காரணம் அவள் மட்டுமே அறிந்த இரகசியம். உண்மையில் அவள் திருநங்கையே அல்ல. அதாவது அவள் நிழலல்ல நிஜம்.

maniramu5591@gmail.com

    மேலும் வாசிக்க

    தொடர்புடைய பதிவுகள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button