வளைந்த ஒற்றைப் பனைமரம் – அரிசங்கர்

இந்தக் கதை தொடங்கியது ஒரு சனிக்கிழமை இரவு என்றாலும் உண்மையில் இந்தக் கதை தொடங்கியது சுந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த கர்நாடகப் போர்கள் சமயத்தில் என்ற உண்மையைப் புரிய வைக்க சிலபல சரித்திரப் பாடங்ளை எடுக்க வேண்டும். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக அதைப்பற்றியெல்லாம் பேசி நேரத்தைக் கடத்தவோ உங்களை வெறுப்பேற்றவோ விரும்பவில்லை. இதைப் பட்டாம்பூச்சி விளைவு என்று அறிவியல் பூர்வமாக விளக்க முடியுமென்றாலும் இந்த கதை சில குடிகாரர்களைப் பற்றியது என்பதால் அவ்வளவு புத்திசாலித்தனமான விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டாமென்றே நினைக்கிறேன். இருந்தாலும் நடந்த, நடக்கப் போகிற காரியங்களுக்கு காரணம் முக்கியமல்லவா? அதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்? இருந்தாலும் குடிகாரர்களின் சச்சரவுகள் பற்றிய ஒரு கதையை வரலாற்றுத் தகவல்களிலிருந்து தொடங்கி கதையின் போக்கை மாற்ற விரும்பவில்லை. அது அது அவ்வப்போது நடக்கும்போதே புரிந்துகொள்ள வேண்டும்.
“ஏய்… என்னப்பா ஞாயித்துகிழமை அதுவுமா காலங்காத்துல வந்து உளறிகிட்டு இருக்க. நைட்டு அடிச்சது இன்னும் தெளியலையா?” என்று கடுப்பாகக் கேட்டார் ஏட்டு வாழைமுனி.
“நைட்டுலருந்து எதுவும் அடிக்க முடியல. ஒரே பிரச்சனையா இருக்கு. நீங்கதான் வந்து சரிகட்டனும்” என்று அதை விட கடுப்பாகச் சொன்னான் மலையாளத்தான்.
“என்னடா, வாரத்துல ஒரு நாள்தான் லீவு. அதுவும் ஞாயித்துக் கிழமை ஆஃப் கிடைக்கறதெல்லாம் எவ்ளொ கஷ்டம் தெரியுமா? ஏன் இப்படி வந்து சாவடிக்கற? ஊரப்பட்ட வேல கெடக்குதுடா. உங்க குடிக்கு பஞ்சாயத்து பண்றதாடா என் வேலை?”
“எனக்கின்னா, அப்பறம் எதுனா வெட்டுக்குத்து ஆச்சுனா நீங்கதான் வந்து நிக்கனும்”
“வந்து தொலையறேன் இரு” என்று எழுந்து உள்ளே சென்று கட்டியிருந்த கைலிக்கு மேலே ஒரு சட்டையைப் போட்டுக்கொண்டு வாசலில் இருந்த தோல் செருப்பை அணிந்துகொண்டு வந்து தனது இருசக்கர வாகனத்தை இயக்கினார். அவர் பின்னால் வேக வேகமாக மலையாளத்தானும் ஏறிக்கொண்டான். வீட்டின் உள்ளேயிருந்து, “கறி எடுக்கப் போவலயா?” என்று குரல் வந்தது.
“அங்கதான் போறேன்” என்று சொல்லிவிட்டு வண்டியை இயக்கினார்.
வாழைமுனி அந்தப் பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் ஊருக்குள் அனைவருக்கும் பழக்கமானவராக இருந்தார். நாற்பதுகளுக்கு மத்தியில் இருந்தவர், பல்வேறு ஊர்களில் பனியாற்றிவிட்டு எப்படியோ சொந்த ஊருக்கு அருகிலேயே கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊர்காரர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் அவர் உயிரை எடுக்கத் தொடங்கி விடுவார்கள். எதாவது பெரிய பிரச்சனை என்று தெரிய வந்தால் முடிந்தவரை அந்தப் பிரச்சனை முடியும் வரை ஊருக்குள் தலைகாட்ட மாட்டார். போனையும் அனைத்து வைத்துவிடுவார்.
இருவரும் மெதுவாக ஊருக்குள் பயணிக்கத் தொடங்கினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என்று கலந்துகட்டியிருக்கும் அந்தத் தெருக்களுக்கு நடுவே நொடிக்கு நொடி ஒவ்வொரு மாநிலமாக மாறி மாறி பயணித்தனர். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மின்சாரம் இருந்தது. புதுச்சேரியில் மின்சாரம் தடைபட்டிருந்தது.
“என்னடா பிரச்சனை? என்றார் ஏட்டு.
“நம்ப சுப்ரமணி வூடு இருக்குதுல்ல…”
“எந்த சுப்ரமணி?”
“அதான் தூக்கு மாட்டிகினாறே மூர்த்தி, அவுரு புள்ள.”
“ஆமா; ஆனா, அது பாண்டிச்சேரியாச்சே.”
“அதுக்குப் பக்கத்துல இருக்குதுல்லா ரமேஷ் வூடு.”
“அது தமிழ்நாடுதானே”
“ஆமா, அது தமிழ்நாடுதான். இப்ப பிரச்சனையே அதான்.”
“அதுல இன்னா பிரச்சனை?”
“சுப்ரமணி வூட்டு பின்னாடி ஒரு பனைமரம் இருக்குது.”
“செரி.”
“அது கொஞ்சம் வளைஞ்ச மாதிரி இருக்கற மரம்.”
“பனைமரம் நேராத்தானேடா இருக்கும்?”
“அப்படி எதாவது சட்டம் இருக்குதா இன்னா?”
“செரி வுடு. மேட்டருக்கு வா.”
“அது வளைஞ்சி நேரா பாதி மரம் ரமேஷ் வூட்டுக்கு மேல வந்து நிக்குது.”
“செரி”
“சுப்ரமணி அந்த மரத்துல சுண்ணாம்பு தடவி பானைய கவுத்து வெச்சிருக்கான், கள்ளுக்கு”
“செரி, இப்ப இன்னா அதுக்கு?”
“இப்ப பிரச்சனை இன்னானா, மரம் இருக்கறது பாண்டிச்சேரில, அது வளைஞ்சி பானை இருக்கறது தமிழ்நாட்டுல. பாண்டிச்சேரில கள்ளு எறக்கலாம். தமிழ்நாட்டுல கள்ளு சாராயத்துக்குத் தடை. இப்ப இந்த மரத்துல கள்ளு எறக்கலாமா? கூடாதா? எறக்கிக் குடிக்க சுப்ரமணி குரூப்பும், எறக்கக் கூடாதுன்னு ரமேஷ் குரூப்புக்கு ராத்திரிலருந்து சண்ட. அத நீங்கதான் பைசல் பண்ணனும்” என்று மலையாளத்தான் சொன்னதும் ஏட்டு சரக்கெண்று பிரேக் பிடித்து வண்டியை நிறுத்திவிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தார்.
“மொறைக்காதீங்க. இத இன்னிக்கி பைசல் பண்ணலனா, வெட்டுக்குத்து ஆயிடும்.”
“எண்டா, அதான் ஊருபூரா ஒயின் ஷாப்பும் பிராந்தி ஷாப்பும் தொறந்து வெச்சி வா வான்னு கூப்புடறானுங்களேடா, அங்க போவ வேண்டியதுதானடா?” என்று சலித்துக்கொண்டார் ஏட்டு.
“கள்ளுதான் ஏட்டு ஒடம்புக்கு நல்லது. நம்ப பாரம்பரியம்.”
“அப்பறம் ஏன்டா நூடுல்ஸ் திங்கறீங்க?”
“சும்மா இப்படி ஏட்டிக்கு போட்டியா பேசக்கூடாது.”
“கள்ளு ஏறக்கிக் குடிக்கக் கூடாதுன்னு சொல்ற அளவுக்கு அந்த ரமேஷ் இன்னா அவ்ளோ நல்லவனா? நானே அவன ரெண்டு மூனு வாட்டி சரக்கோட செக் போஸ்ட்ல மடக்கியிருக்கேன். பல்ல பல்லக் காட்டி கெஞ்சி சரக்க எடுத்துகினு போனான். இப்ப இன்னாவாம் இவனுங்களுக்கு?”
“அதுவா, இந்த ரமேஷ் வூடு இருக்குதுல்ல, அது ரெண்டு பிளாட்டு. முன்னாடி தமிழ்நாடு, பின்னாடி பாண்டிச்சேரி. வூட்டுக்கு நடுவ ஒரு தடுப்பு மாதிரி போட்டு அத தனி வூடு மாதிரி காமிச்சி, தமிழ்நாட்டுல ஒரு ரேஷன் கார்டு, ஓட்டு கார்டு, இங்க ஒரு கரண்ட், அதே மாதிரி பாண்டிச்சேரிலயும் ஒரு செட் வாங்கி வெச்சிருக்கான். அத சுப்ரமணி போட்டு வுட்டான். போட்டுவுட்டும் எதுவும் ஆவல. இருந்தாலும் இவனுக்கு கடுப்பு. கெடைக்கும் போதெலாம் வம்பு பன்றான்.”
“சுதந்திரத்த கொடுத்து பிரிச்சி வுட்டவனுங்க ஒழுங்கா பிரிச்சி வுட்டிருக்கக் கூடாதா? ஏதோ இந்தியா பாகிஸ்தான் மாதிரி இதுவொரு பிரச்சனை. ஒரே நாட்லருந்துகினு ஒரு ஊர்லருந்து பொருள வாங்கின்னு இன்னொரு ஊருக்கு போவ முடியல.” என்றார் ஏட்டு.
“ஏன் ஏட்டு இப்படி பண்ணாங்க? என்று அப்பாவியாகக் கேட்டான் மலையாளத்தான்.
“ஞாயித்து கெழம அதுவும் வேற வேல மயிரு இல்லாம இப்படி போறோமே அதுக்குத்தான்” என்று எரிந்து விழுந்தார்.
ஏட்டும் மலையாளத்தானும் வண்டியில் வந்து நின்றபோது அங்கு யாருமே இல்லை. ஒரே ஒருவன் மட்டும் ரமேஷ் வீட்டிற்கு எதிரில் ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். யாராவது மரம் ஏறினால் தகவல் சொல்ல வேண்டியது அவன் வேலை. அதுவரை மற்றவர்கள் தங்கள் அன்றாட கடமைகளில் ஈடுபடச் சென்றிருந்தனர்.
வண்டியைவிட்டு இறங்கிய ஏட்டு, சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு, “எங்கடா ஏதோ பெரிய கலவரம் நடக்கப் போகுதுன்னு சொன்ன?” என்றார்.
“ஏட்டய்யா, எப்பவுமே பெரிய சம்பவம் நடக்கபோறதுக்கு முன்னாடி இப்படித்தான் அமைதியா இருக்கும். நாம அத நம்பி ஏமாந்துடக் கூடாது.”
ஏட்டும் மலையாளத்தானும் வந்து நின்றதைப் பார்த்த சுப்ரமணியின் அம்மா, “மொதல்ல அந்த மரத்த வெட்டி ஒழியனும். தெனிக்கும் எதுனா ரோதனையா இருக்குது. கள்ளு எறக்கறேன் மயிற எறக்கறேன்னு எழவக் கூட்டின்னு வந்து நிக்குதுங்க” என்றாள்.
அதைக் கேட்டும் ஏட்டுக்கு சுருக்கென்று ஆனது. அவள் தன்னைத்தான் திட்டுகிறாள் என்று உணர்ந்து கடுப்பானார். அந்த மொத்த ஆத்திரத்தையும் மலையாளத்தான் மீது கொட்டினார்.
“டேய் மயிரு. எல்லாரும் அவன் அவன் வேலையப் பாக்கப் போயிட்டானுங்க. என்னப் பாத்த இன்னா வேலைவெட்டி இல்லாதவன் மாதிரி தெரியுதா? சரக்கு கடத்தனீங்கன்னு மொத்தப் பேரு மேலையும் கேஸப் போட்டு உள்ள தள்ளிடுவேன்” என்றுக் கத்தினார்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்தவொரு பெரியவர், “ஏம்பா, நீயே காசு வாங்கின்னு சரக்க உள்ள வுடற ஆளுதானே, இன்னாமோ ஓக்கியன் மாதிரி பேசற” என்று அமைதியாகக் கேட்டார்.
ஏட்டு திரும்பி அவரை முறைத்துவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்திருந்தவனை எழுப்பி, மற்றவர்களையும் அழைத்து வரும்படி விரட்டிவிட்டு அதே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். அவர் அருகில் மலையாளத்தான் அமைதியாக நின்றுகொண்டான்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் அந்த விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் வந்துவிட்டனர். ஏட்டு கடும் கோபத்தில் இருந்தார். அனைவரையும் பார்த்து, “எண்டா, ஞாயித்து கிழமை அதுவுமா உங்களுக்கு வேற வேலை மயிரே இல்லையாடா? எண்டா, ஏன் உயிர எடுக்கறீங்க?” என்று பொதுவாக அனைவரையும் பார்த்துக் கத்தினார்.
“இதப்பாருங்க, ஏட்டைய்யா, அது எங்க வூட்டு மரம். அது பாண்டிச்சேரியில இருக்குது. மொதல்ல நீங்க இத விசாரிக்க வந்ததே தப்பு, பாண்டிச்சேரி போலிஸும் வந்தாத்தான் இந்தப் பிரச்சனை நியாயமா முடியும்” என்றான் சுப்ரமணி.
“ஏன், சி.பி.ஐ.யக் கூப்புடுவோமா. இன்னும் நியாயமா முடியும். குடிகார நாயிங்களா. காலங்காத்தால கள்ளு குடிக்க பிரச்சனை பண்ணிகினு நியாயம் தர்மம் பேசற நீ.” என்று கத்திவிட்டு, ரமேஷைப் பார்த்து, “எண்டா, அவன் வூட்டு மரம். அவன் இன்னாமோ பண்ணிட்டுப் போறான். உனுக்கு இன்னாடா?”
“அவன் அப்படியில்லையே. ஏன் வூட்டு விஷயத்துல அவன் மூக்க நுழைச்சா, நான் சும்மா இருக்கனுமா?” என்றான் ரமேஷ்.
அங்கே அவ்வளவு பிரச்சனை நடந்துகொண்டிருந்த அதே சமயம் ரமேஷின் வீட்டிருலிருந்து அவன் அக்கா ஒரு கிண்ணத்தில் எதையோ எடுத்துக்கொண்டு சுப்ரமணியின் வீட்டிற்குள் நுழைந்தாள். ஏட்டு உட்பட அதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். ரமேஷ் மட்டும் கோபமாக முனுமுனுத்தான்.
அப்போது தெருக்காரர் ஒருவர், “எங்கயோ அரிக்கறதுக்கு எங்கயோ சொறிஞ்சிகினு இருக்கானுங்க” என்றார்.
ஏட்டு புரியாமல், “இன்னா சொல்றான் அவன்” என்று மலையாளத்தானிடம் கேட்டான்.
“அது வேற கதை ஏட்டையா” என்றான்.
“அதான் ரோட்டுக்கு வந்துடுச்சில, சொல்லுடா” என்றார்.
சுற்றியிருந்தவர்கள் நெளிந்தார்கள். ரமேஷ் கோபமாக, “தேவையில்லாத விஷயத்தயெல்லாம் பேச வேணாம். அப்பறம் பிரச்சனை பெருச்சானா நான் பொறுப்பில்ல.” என்றான்.
தெருவில் ஆங்காங்கே தங்களுக்குள் கிசுகிசுப்பாக ஏதோ பேசி சிரித்துக் கொண்டனர். அது சுப்ரமணியை உசுப்பிவிட்டது. உடனே அவன் ஏட்டைப் பார்த்து, “இதப்பாருங்க ஏட்டு, அது எங்க வூட்டு மரம். நான் ஏறி கள்ளு ஏறக்கப் போறேன். உங்களால முடிஞ்சதப் பார்த்துக்கோங்க” என்று நகர்ந்தபோது, “பானை இருந்தாத்தானே எறக்குவ” என்று ரமேஷும் அவன் ஆட்களும் ஆளுக்கொரு கருங்கல்லை கையில் எடுத்து மரத்தை நோக்கி நகர்ந்தார்கள்.
பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த ஏட்டு சற்று சத்தமாகக் கத்தினார். பிறகு நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தெருக்காரர்களிடம், “தெருவுல பெரிய மனுஷங்கன்னு இருக்கறீங்க. இப்படி கம்முன்னு வேடிக்கை பார்த்தா இன்னா அர்த்தம்?” என்று கோபமாகக் கேட்டார்.
“அந்த ரெண்டு குடும்ப விஷயத்துல தெருக்காரங்க யாரும் தலையிடறதுல்லன்னு முடிவு பண்ணிருக்காங்க” என்று மலையாளத்தான் ஏட்டு காதுகளில் கிசுகிசுத்தான். அவர் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “எண்டா?” என்றார்.
அதற்கும் அவன் கிசுகிசுப்பாக “அப்பறம் சொல்றேன்” என்றான்.
ஏட்டிற்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. தன்னுடைய ஒருநாள் விடுமுறை இப்படி வீணாகிக் கொண்டிருப்பதை நினைத்து எரிச்சலைடைந்தார். பிறகு இரண்டு கோஷ்டிகளைப் பார்த்துப் பொதுவாக, “இதப்பாருங்க, நாளைக்கு நான் பாண்டி போலிஸ் ஒருத்தரக் கூட்டிகினு வரேன். அதுவரைக்கும் இங்க எவனும் எந்தப் பிரச்சனையும் பண்ணக் கூடாது. இதப்பாரு சுப்ரமணி, இந்தப் பிரச்சனை முடியர வரைக்கும் நீ மரத்து மேல ஏறக்கூடாது. இதப்பாரு ரமேஷ் உனக்கும்தான், நீயும் எதுவும் பிரச்சனை பண்ணக் கூடாது. கல்ல மொதல்ல கீழ போடுங்க” என்றார். வேண்டாவெறுப்பாக கற்களை கீழே போட்டனர் ரமேஷின் ஆட்கள்.
“கெளம்புங்க எல்லாரும்” என்று விரட்டினார் ஏட்டு. பிறகு மலையாளத்தானிடம், “வண்டிய எடு” என்றார். அவன் வண்டியை எடுக்க பின்னால் ஏறி உட்கார்ந்தவர், “கறிக்கடைக்கு வுடு” என்றார்.
“உன்னால காலங்காத்தால தலைவலி வந்துடுச்சி” என்று புலம்பினார். மலையாளத்தான் எதுவும் பேசவில்லை. இருவரும் கறிக்கடைக்கு வந்துச் சேர்ந்தனர். கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏட்டு கறிக்கடைக்காரரிடம் ஜாடைக் காட்டிவிட்டு எதிரிலிருந்த டீக்கடைக்குச் சென்று, ‘ரெண்டு டீ’ என்று சைகை செய்தார்.
மலையாளத்தான் அவர் பின்னால் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
டீ வந்ததும் அதை வாங்கிக்கொண்டே, “இன்னாதான்டா அந்த ரெண்டு குடும்பத்துக்குப் பிரச்சனை?” என்றார்.
“அதுவா, இந்த சுப்ரமணிக்கு ஒரு அண்ணன் இருக்கான் தெரியுமா?” என்றான் மலையாளத்தான்.
“ம்…செந்தில் தானே அவன் பேரு. வெளியூர்ல வேல பக்கறான்னு சொன்னாங்க.”
“ஆமா, அவன்தான். சென்னையில வேல பாக்கறான். அவனுக்கும் நாம் பேசிகினு இருக்கறப்போ ஒரு பொண்ணு போச்சே, ரமேஷோட அக்கா, அதுக்கும் லவ். ஒரு வருஷத்துக்கு முன்னாடி அவங்க ரெண்டு வீட்டுக்கு பின்னாடி ஜாலியா இருக்கறப்போ மாட்டிகினாங்க. தெருவே கூடிடுச்சி. அந்தப் பொண்ணு அசராம தைரியமா நிக்குது. ‘ஆமா, நான் அவன் கூட இருந்தேன். அவனத்தான் கட்டிப்பேன்னு’ கத்துச்சி. ரமேஷ் ஊட்டுக்காரங்க அந்தப் பொண்ணப் போட்டு அடிக்க, அத அந்த செந்திலு போயி தடுக்க, அவனை அடிக்க. அவன் திரும்பி அடிக்கன்னு ஒரே தகராறு. தெருக்காரங்கங்களுக்கு ஒரே குஷி. நடுராத்திரில ஃபிரி ஷோ. கசக்குமா இன்னா? ஜாலியா வேடிக்கை பார்த்துகினு இருந்துச்சுங்க. அப்போ ஒருத்தன் சும்மா இல்லாம் நியாயம் பேசறேன்னு போயி அந்தப் பொண்ணு கிட்ட, ‘நீயெல்லாம் ஒரு பொண்ணா. இப்படி மேயறியே?’ன்னு சொல்ல, அந்தப் பொண்ணுக்கு பொத்துகினு வந்துடுச்சி. டக்குனு, ‘இந்தத் தெருவுல யாரு யாருக்கு யாரு யாரு கூட தொடர்பு இருக்குதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். எவன் யோக்கியம், எவ மேயறான்னு நானும் சொல்லுவேன். சொல்லவா?’ன்னு ஒரு போடு போட்டாப் பாரு ஏட்டு, அதுக்கப்பறம் எவனும் அந்த வூட்டுகிட்ட இல்ல. அதுக்கப்பறம் தெருக்காரங்க யாரும் அந்தக் குடும்பத்துப் பிரச்சனைக்கு போக வேணாம்னு பேசி முடிவு பண்ணிட்டாங்க. அப்பறம் அந்த செந்திலு வேலைக்கு வெளியூர் போயிட்டான். இந்தப் பொண்ணு அவனத்தான் கட்டிப்பேன்னு நிக்குது. ரமேஷுக்கு இந்தக் கடுப்புத்தான். மரமோ கள்ளோலாம் ஒரு பிரச்சனையே இல்ல.” என்று கதையைச் சுருக்கமாக முடித்தான் மலையாளத்தான்.
“ரெண்டு பேரும் ஒரே ஆளுங்கதான. இவ்ளோ ஆனதுக்குப்பறம் இன்னா முறிக்கிகினு இருக்குதுங்க. கட்டி வெச்சிட வேண்டியதுதானே?”
“அதுவா, அதுதானே நம்மளோட சாபமே, அதுங்களா கூட கெணத்துல புடிச்சித் தள்ளலாம். ஆனா, நம்பளாவே ஒரு நல்ல வாழ்க்கைய தேடிக்கக் கூடாது. இதுல பாண்டிச்சேரி இன்னா தமிழ்நாடு இன்னா. எல்லா பீயும் ஒரே நாத்தம்தான்.” என்றான் மலையாளத்தான்.
ஏட்டு மலையாளத்தானை விநோதமாகப் பார்த்தார். ‘அவ்வளவு நல்லவனா இவன்?’ என்று அவருக்குத் தோன்றியது. சட்டென, “உன் ஆளு எந்த ஊரு, எந்த ஆளுங்க” என்றார். அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தான் மலையாளத்தான்.
“உங்களுக்கு ஒன்னு வராம நீங்கள்லாம் நல்லவங்களா மாற மாட்டீங்களே” என்றார் ஏட்டு. மலையாளத்தான் எதுவும் சொல்லவில்லை. எதிரில் கறிக்கடையிலிருந்து சிக்னல் வந்தது. ஏட்டு மலையாளத்தானிடம் காலையில் வருவதாகச் சொல்லிவிட்டு நடந்து சென்று கறியை வாங்கிக்கொண்டு தனது வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தான் மலையாளத்தான். சட்டென ஒருநொடி அவன் மனதில் ரமேஷின் அக்கா முகம் வந்து சென்றது. தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
மறுநாள் காலை ஒரு பதினொரு மணியளவில் ஏட்டு தனது இருசக்கர வாகனத்தில் அந்தத் தெருவிற்குள் நுழைந்தார். அவர் உடன் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு காவலர் அவரது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தார். இந்த பஞ்சாயத்தை முடித்து இருவீட்டாரிடமும் எதாவது தேற்றலாம் என்று இருவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது. இருவருமே தங்கள் மாநில காவலர் உடையில் இருந்தனர். வேண்டுமென்றே உடன் யாரையும் அழைத்து வரமால் தனியாக வந்திருந்தனர். அந்த புதுச்சேரி போலிஸ் ஏட்டு வாழைமுனியின் நண்பர். அதனால் தனிப்பட்ட முறையில் வரவழைத்திருந்தார். எந்தப் பக்கம் காசுத் தேறுமோ அந்தப் பக்கம் தீர்ப்பு வழங்கிவிடலாம் என்றே முன்னரே பேசி வைத்திருந்தனர். அவர் புறப்படும் போதே மலையாளத்தானுக்குப் போன் செய்தார். அவன் போனை எடுக்கவில்லை. வரும் வழியில் அவன் வீட்டில் விசாரித்தபோது அவன் வேலைக்குச் சென்றுவிட்டதாக அவன் அப்பா தெரிவித்தார்.
இருவரின் வீட்டிற்கு நடுவே இரண்டு போலிஸ்காரர்களும் தங்கள் வண்டியை நிறுத்தி விட்டு சுற்றிப் பார்த்தார்கள். தெருவில் ஒரு நாய் மட்டும் படுத்துக் கொண்டிருந்தது. வேறு யாருமே இல்லை. நேற்று போர்க்களம் போல காட்சியளித்தத் தெருவா இது என்று ஏட்டிற்கு சந்தேகம் வந்தது. அப்போது எங்கிருந்தோ ஒரு குரல், “இன்னா வாழமுனி, இந்தப் பக்கம்?” என்றது. ஏட்டு சுற்றிப் பார்த்தார். எதிரில் ஒரு வீட்டிலிருந்து கிழவர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்ததும், “அதான் காலையில வரேன்னு நேத்து சொல்லிட்டுத்தானே போனேன். எங்க ஒருத்தரையும் காணோம்” என்றார்.
“ஏம்பா அவன் அவன் காலங்காத்தால எழுந்து பொழப்பப் பாப்பானா இல்ல நீ வந்து பஞ்சாயத்து பண்ணுவேன்னு உக்காந்துன்னு இருப்பானா?” என்றார்.
ஏட்டு கடுப்பானார். “அப்ப இன்னாத்துக்கு நேத்து என்ன இட்டுன்னு வந்தீங்க?” என்று கத்தினார்.
“இதப்பாரு வாழமுனி, ஒரு பிரச்சனைனா அத அப்பவே தீர்த்துப்புடனும். தள்ளிப் போடவே கூடாது. தள்ளிப் போட்டா அது என்னிக்குமே முடியாது. அப்பவே இந்த ஊரெல்லாம் ஒழுங்காப் பிரிச்சிருந்தா இந்தப் பிரச்சனையெல்லாம் ஏது சொல்லு. அப்ப உட்டாச்சி. இனி ஒன்னும் பண்ண முடியாது. நீ போயி எதாவது உருப்படியா வேலை இருந்தாப் பாரு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
ஏட்டுக்கு கோபம் தலைக்கேறியது. வேகமாக ரமேஷின் வீட்டு வாசலில் நின்று “யாரு வூட்டுல என்று கத்தினார். உள்ளேயிருந்து ரமேஷின் அக்கா வந்தாள். அவரை சந்தேகமாகப் பார்த்து, “இன்னா விஷயம் சார்?” என்றார். அவர் எதுவும் சொல்லாமல் ‘ஒன்றுமில்லை’ என்று தலையாட்டிவிட்டு தனது வண்டியை நோக்கி நடந்தார். சுப்ரமணியின் வீட்டிற்கு பின்னாலிருந்த வளைந்த ஒற்றைப் பனைமரம் நடந்து கொண்டிருந்த அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.



