இணைய இதழ் 121சிறுகதைகள்

சுழிப்புத்தி – மணி ராமு

 காலை 9.00 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் பள்ளி மண்டபத்தில் தொடங்கியது.

கூட்டத்தில், பள்ளியின் தலைமையாசிரியர் பேசும் போது… இது வரையிலும் பலரும் பதில் தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த மகா சிக்கலான கேள்வி ஒன்றுக்கு ரொம்ப லட்சணமான பதிலை வாந்தியெடுத்திருந்தார். மெய்யறிவு உள்ளவர்களுக்கு அது அபத்தத்திலும் அபத்தமாகி உணர்வைக் குத்திக் கிழித்தது.

‘தமிழ்ப்பள்ளியில் படித்து, தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர் பணியில் அமர்ந்து, அப்பணியின் மூலம் சம்பளத்தை வாங்கி, அதில் உண்டு கொழுக்கும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ‘சிலர்’ ஏன் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதில்லை?’

இதுதான் இன்னும் பதில் தெரியாமல் பலரும் திண்டாடிக் கொண்டிருக்கும் அந்த மகா சிக்கலான கேள்வி.

இந்த உலக மகா கேள்விக்கு, பொறுப்புணர்ச்சியும் தமிழ்ப்பற்றும் நிறைந்தவராய்த் தன் வதனத்தில் போலியாய் பதாகை மாட்டிக்கொண்டு திரியும் அந்தத் தலைமையாசிரியர் சொன்ன பதில் வெட்கக்கேடானது.

“முதலாம் ஆண்டுக்கான மாணவர் பதிவு தொடங்கியிருக்கிறது. ஆகவே, உங்கள் வீட்டில் பிள்ளைகள் இருந்தால், கொண்டு வந்து இங்கே சேருங்கள். இந்தப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தன் பிள்ளையை வேற்றுமொழிப் பள்ளியில் சேர்த்திருப்பதால், ‘முதலில் அவரது பிள்ளையைக் கொண்டு வந்து இங்கே சேர்க்கச் சொல்லுங்கள்’ என்று பெற்றோர் ஒருவர் என்னிடம் கோபமாகப் பேசியிருந்தார். அவர் விவரமில்லாமல் பேசிவிட்டார். அவருக்கான பதிலை நான் உங்களுக்கும் சேர்த்தே இங்கே சொல்கிறேன்…” இப்படிப் பேச்சைத் தொடங்கிய ஊர்வசி என்கிற அத்தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர், தொடர்ந்து…

“ஆசிரியர்கள் மாதந்தோறும் கணிசமான தொகையைச் சம்பளமாகப் பெறுகிறார்கள். அதனால் அவர்களுக்குப் பொருளாதாரச் சிக்கல்கள் இருப்பதில்லை. எனவே, அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் பிற மொழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்குத் தாய்மொழியான தமிழ் மொழியின் மீது பற்றும் பாசமும் இல்லையா? எனக் கேட்டீர்களானால்… இருக்கிறது. இருப்பதனால்தான் அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பணம் செலுத்தி பிரத்தியேக வகுப்புக்குத் தாய்மொழியைக் கற்க அனுப்பி வைக்கிறார்கள்!” இப்படி மேடையில் வரம்பில்லாமல் பேசியவர், அதோடு நிறுத்திக் கொள்ளாமல்…

“இங்கே தமிழ்ப்பள்ளியில் பயில்கிற முக்கால்வாசி பிள்ளைகளின் குடும்பம் பி நாற்பது பிரிவிலிருக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவை. பொருளாதாரப் பிரச்சனைகள் நிறைந்த குடும்பங்கள். அப்படியிருக்க, வேற்று மொழிப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டுத் தனியாகப் பணம் கட்டித் தமிழ்மொழியைக் கற்கப் பிரத்தியேக வகுப்புக்குப் பிள்ளைகளை உங்களால் அனுப்ப முடியுமா? முடிந்தால் தாராளமாக வேற்று மொழிப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பி வைக்கலாம்!” என, சபையைப் பார்த்து வினா எழுப்பி விடையையும் சொல்லி, தனது உருப்படாத பிரசங்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

தரங்கெட்ட இது போன்ற மூளை முடக்கு வாதமுள்ள தலைமையாசிரியர்களால்தான் ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளிகளின் மீதும் களங்கம் கற்பிக்கப்படுகிறது.

கூட்டத்தின் மத்தியில் உஷ்ணம் ஊடுருவுவதைத் தவிர்க்க முடியவில்லை. பலரும் கடுப்பேறி முணுமுணுக்கத் தொடங்கியிருந்தனர். கையை உயர்த்தி, இருகையை விட்டு எழுந்து, பலர் முன்னிலையில் காரமாய்க் கேள்வி கேட்கவும் கருத்துச் சொல்லவும் எத்தனிக்கும் மனதை, எதிரில் இருப்பவர் ஆசிரியர் என்பதனால் கட்டுப்படுத்திக் கொண்டான் பூங்குன்றன். அவனது இரு பிள்ளைகளும் அப்பள்ளியில்தான் பயில்கிறார்கள். ஒரு தந்தையாக அவனும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தான். ‘குருவருள் இல்லையென்றால் திருவருள் இல்லை’ என்பதில் தடித்த நம்பிக்கை உள்ளவன். ஆகவே, ஆசிரியர்களைச் சபையில் அசிங்கப்படுத்தும் எண்ணம் அவனுக்கு எப்போதுமே இருந்ததில்லை.

உடனடியாக அவன் எதிர்வினையாற்றாததற்கு மற்றொரு காரணம், தலைமையாசிரியர் இந்த அர்த்தமற்ற பேச்சை அவருக்காக உரை நிகழ்த்த ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசவில்லை. எல்லோரும் புறப்படும் ஆயத்த மனநிலைக்கு வந்துவிட்ட நண்பகல் 12:40க்கு நெறியாளரிடமிருந்து வலிய ஒலிவாங்கியைப் பிடுங்கிக் கொண்டு பேசினார். தெரியவில்லை அவருக்குள் தமிழ் மீதும் தமிழ்ப்பள்ளியின் மீதும் அப்படியென்ன வன்மமென்று?

பொதுவில் பேசி சர்ச்சைக்குள் கை நனைக்க விரும்பாத போதும், பள்ளியை விட்டு வெளியேறுவதற்கு முன் அவரிடம் தனிப்பட்ட முறையில் ஆதங்கத்தைப் பதிவு செய்துவிட வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தான் பூங்குன்றன். முறையாகச் சொன்னால் நியாயமானதை ஏற்பார் என்றே அதுவரையிலும் அவனுக்குள் கடுகளவு நம்பிக்கையிருந்தது.

அவரது அருகில் சென்று பேசினான். அவர் மேடையில் அமர்ந்த நிலையிலேயே இருந்தார். ‘பேசலாமா?’ என அனுமதி பெற்றே பேசத் தொடங்கினான். மண்டபத்திற்குள்ளும் வெளியிலும் ஆங்காங்கே‌ ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நடமாட்டத்திற்கு இடையில்தான் அவர்களின் உரையாடல் நிகழ்ந்தது.

“பணம் இருந்தால் வேற்று மொழிப் பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்று நீங்கள் சொல்வது, தமிழ்ப்பள்ளிகள் வசதியற்றவர்களுக்கானது மட்டுமே என்கிற பொருள் தருவதாய் ஆகாதா? உங்களுடைய இவ்வாறான கருத்து இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு வேற்று மொழிப் பள்ளியில் தமது பிள்ளையைச் சேர்த்திருக்கும் குறிப்பிட்ட ஆசிரியரின் செயலை நியாயப்படுத்துவது போல அமையாதா? தமிழ்ப் பற்று இருப்பதனால்தான் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைப் பிற மொழிப் பள்ளியில் சேர்த்தாலும் அவர்களைப் பணங்கட்டி தமிழைக் கற்க வைக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். சரிதான். தமிழை அவர்கள் காப்பாற்றி விடுவார்கள். தமிழ்ப்பள்ளிகளை யார் காப்பாற்றுவது? மாணவர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடுவதற்குப் பலர் காத்துக் கொண்டிருக்கும்போது, உங்களின் நியாயம் அநியாயமல்லவா? இப்படித்தானே எல்லோரும் ஏதோ ஒரு காரணத்தைக் கையில் வைத்துக் கொண்டு திரிகிறார்கள்? பணம் இருக்கிறது… இல்லை… என்பது இங்கே விடயமல்ல. தமிழ்ப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பது தமிழர்களின் இன மான உணர்வாக அல்லவா இருக்க வேண்டும்? அவ்வுணர்வு தமிழால் வயிறு நிரப்பிக் கொள்பவர்களுக்கு சற்றுக் கூடுதலாக இருக்க வேண்டாமா? இப்படி அவரவர் தனித்தனியே தமிழைப் படிக்க வைத்துக் கொள்கிறேன் என்று கிளம்பிவிட்டால், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் என்னாவது? வீட்டுக்கு வீடு ஐந்தடியிலும் வீட்டெதிரிலும் சிறு கோயில்களை நிறுவிக் கொண்டதால் பொது வழிபாட்டுத் தலங்களில் திருவிழா, தைப்பூசம் போன்ற விசேஷமல்லாத நாட்களில் மனிதத் தலைகளைப் பார்க்க முடிவதில்லை. இதே நிலைதான் நாளை தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிகழும் அல்லவா?” எனப் பூங்குன்றனிடமிருந்து கேள்விகள் வெடித்துக் கொண்டிருந்தன.

கேள்விகள் தொடர்ந்து கொண்டிருந்தபோது இடை மறித்தத் தலைமையாசிரியர்…

“எண்பது சதவிகித தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில்தான் சேர்க்கிறார்கள். இருபது சதவிகித ஆசிரியர்கள்தான் பிற மொழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்!” என்றார்.

அவரது பேச்சின் உட்பொருள் இந்த இருபது சதவிகிதத்தால் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் என்ன கேடு வந்துவிடப் போகிறது? என்பதாகவே பூங்குன்றனுக்கு மனதில் பட்டது.

அப்போது அவன் திரும்பக் கேட்டான்…

“இருபது சதவிகிதம் என்பது குறைவுதான். ஆனால், பல குடங்களின் பாலை சிறு துளி நஞ்சு கெடுத்துவிடுவது போல இந்தக் குறைந்த சதவிகித நபர்களின் செயல்பாடுகள் பொதுவெளிகளில் அதுவும் சமூக ஊடகங்களில் பூதாகரமாக வெடித்துப் பரவ நேர்ந்தால், ஒட்டுமொத்தத் தமிழாசிரியர்கள் மீதும் கடுஞ்சொற்கள் வீசியெறியப்படாதா? ‘தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களே, தங்கள் பிள்ளைகளைத் தாய்மொழிப்பள்ளியில் சேர்க்காத போது நமது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க வேண்டுமென்று நமக்கென்ன தலையெழுத்தா?’ என ஊர் வாய் கேள்வியெழுப்பத் தொடங்கிவிடாதா? கடவுளே தவறு செய்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நின்று, குற்றம் குற்றமே என வாதிட்ட நக்கீரனின் மரபில் வந்த எந்தத் தமிழனும் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தம் பிள்ளையை வேற்று மொழிப் பள்ளியில் பதிந்ததற்கு நியாயம் கற்பிக்க மாட்டான். ஒரு தமிழ்ப்பள்ளித் தவைமையாசிரியராக இருந்துகொண்டு நீங்கள் எப்படி இந்த இழிசெயலை ஆதரித்துப் பொதுவெளியில் பேசலாம்?”

பள்ளித் தலைமையாசிரியரின் முகமூடி நீங்கி… அம்பல முகம் அப்போதுதான் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிச்சத்துக்கு வந்தது. பூங்குன்றன் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதிலைச் சொன்னார். எல்லா பதிலும் தான் பேசியது ‘சரி’ என்பதனைத் தற்காக்கும் பாங்குடனே இருந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் தலையைச் சுற்றி; நொண்டியடித்து, மூக்கைத் தொடுகிற அவருடைய நேர்மையற்ற‌ செயல்பாடு, ‘இவர் தலைமையாசிரியராய் இருப்பதற்குத் தகுதியானவர்தானா?’ என்கிற ஐயத்தைக் கிளப்பியது.

ஐம்பது சதவிகித இந்திய மாணவர்கள் பிற மொழிப் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்பது கல்வி இலாகாவின் கணக்கெடுப்பு. இந்த ஐம்பது சதவிகிதத்தில் அவர் சொன்ன இருபது சதவிகிதமும் அடக்கம் என்பது எப்படி நெஞ்சுக்குள் நெருடாமல் போனது. மொத்தமாய் ஐம்பது சதவிகிதம் என்கிற விகிதம் வந்து நிற்கும் போது, குத்துதே குடையுதே… பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைக்கப்படுகிறார்களே… எனும் அபயக் குரல்கள் எட்டுத் திசைகளிலிருந்தும் எதிரொலிப்பது தெரிந்திருந்தும் வெறும் இருபது சதவிகிதம்தானே என்று அறிவிலியாய் கத்தும் அவரை, படித்த கோமாளியாய்த்தான் பூங்குன்றனால் பார்க்க முடிந்தது. ஆனாலும் காரியக்கார கோமாளி.

சீனப்பள்ளியின் தலைமையாசிரியரோ, மலாய்ப் பள்ளியின் தலைமையாசிரியரோ தத்தம் பள்ளிகளில் நடக்கும் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் இந்தத் தமிழ்ப்பள்ளி மேதாவித் தலைமையாசிரியர் உளறிக் கொட்டியதைப் போலப் பேசியதாகப் பூங்குன்றன் இதுவரையிலும் கேள்விப்பட்டிருக்கவில்லை. தலைமையாசிரியர் ஊர்வசியின் பேச்சால் அவனுக்குள் உதிரம் கொதித்தது. உள்ளம் வலித்தது. ஒரு தலைமையாசிரியருக்குள் இப்படியொரு சுழிப்புத்தியா? என விசனப்பட்டான்.

சீன மாணவர்கள் தொண்ணூற்றைந்து சதவிகிதம் சீனப்பள்ளியில்தான் பயில்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எல்லா வகையிலும் நிமிர்ந்து நிற்கிறார்கள். பிற மொழிப் பள்ளியில் பயிலும் 5 சதவிகித சீன மாணவர்களின் பெற்றோர்களோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளோ மறந்தும்கூட தங்கள் செயலை நியாயப்படுத்திக் கொக்கரிப்பதில்லை. நம்ம ஆளுங்கதான் தானும் படுப்பதில்லை தள்ளியும் படுப்பதில்லை… என பொருமினான். அவனது பொருமல் நியாயமானதுதான்.

இவர்களைப் போன்றத் தமிழின விரோதிகளைக் காணும் போது மனசு நொந்து, சமூக ஊடகங்களில் திட்டித் தீர்த்துவிட்டுக் கடந்து போய்க் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் உண்மையை நேர்பட பேசவும் கேட்கவும் திராணியுள்ளவனாகப் பூங்குன்றன் இருந்தான். ஆனால், அவனுக்குத் தெரியும் ஒரு கை தட்டினால் ஓசை எழாது. சுயநலப் போக்கோடு கள்ள மௌனம் காக்கும் ஒட்டுமொத்தத் தமிழ் ஆர்வலர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால்தான் ஊர்வசி போன்ற விஷச்செடிகளை வேரோடு பிடுங்கி எறியமுடியும்.

பூங்குன்றனின் மனதில் பாரதியாரின் கவிதை வரிகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன நிறுத்தமில்லாமல்…

படிப்பு வளருது பாவம் தொலையுது

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான் போவான் ஐயோவென்று போவான்

-maniramu5591@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button