நெல்லி படுகொலைகள்: நீதிக்காக நாற்பத்திரண்டு ஆண்டுகள் காத்திருப்பு
– ஹர்ஷ் மந்தர்; மொழியாக்கம்: அக்களூர் இரவி
நெல்லி படுகொலையில் உயிர் பிழைத்திருப்பவர்களின் ஆறாத வலி, இன்னமும் நீடித்திருக்கிறது. கூட்டமாக நடத்தப்பட்ட அந்த வன்முறையை நேரடியாக அனுபவித்தவர்கள் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். அரசாங்கத்தால் இந்த அளவுக்கு எவரும் கைவிடப்படவில்லை என்பதை இந்தத் தாமதம் உணர்த்துகிறது.
1979-83களின் அசாம் கிளர்ச்சி, மாநிலம் முழுவதும் சமூகங்களுக்கிடையில் அதிகரிக்கும் பதற்றங்களை உருவாக்கியது.
ஒருவருடைய வாழ்நாள் மறந்துவிட முடியாத அளவுக்கு மிகவும் குறுகியது.
கௌஹாத்தியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் நெல்லியில் 1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி ஓர் இனப்படுகொலை நடந்தது. வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் குடியேறிகள் குறைந்தது 2,191 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த அந்த மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டன.
இந்தப் படுகொலையை விசாரிக்க நீதித்துறை ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டது; ஆணையம் தனது அறிக்கையை மனசாட்சி என்பதே இல்லாத முறையில் 42 ஆண்டுகள் கழித்து அசாம் மாநிலச் சட்டசபையில் தாக்கல் செய்திருக்கிறது. இந்திய மக்களுக்கு இது ஒரு பாடம். எதிர்பார்ப்பிற்கும் மேலாக நீடித்த இந்தத் தாமதம் தற்செயலானது அல்ல. 1983-ஆம் ஆண்டில் இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்ட படுகொலையின் நினைவுகளை அழித்துவிட வேண்டும்; அந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்காமல் இருக்க, உணர்வுடன் செய்யப்படும் மாநில அரசாங்கத்தினுடைய திட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி இது.
விடுதலை பெற்ற இந்தியாவில் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான, எனினும், மறக்கப்பட்ட படுகொலைகளில் ஒன்று இது. ஆணையத்தின் அறிக்கை மாநில சட்டசபையில் தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைத்தவுடன், 2008-ஆம் ஆண்டில் அந்தப் படுகொலையின் 25-ஆவது ஆண்டு நினைவுநாளில் நெல்லிக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் நினைவுகள் என்னுள் மீண்டும் எழுந்தன. உயிர் பிழைத்திருந்தவர்கள் அப்போது என்னிடம் கூறியவற்றின் குறிப்புகளைத் தேடினேன். சில நாட்களிலேயே ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையிலும் அவற்றைப் பதிவு செய்திருந்தேன்.
2008-ஆம் ஆண்டில் துயரம் தோய்ந்த நெல்லி படுகொலையில் தப்பியவர்கள், அந்தப் படுகொலையின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், சிறிய சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர்; என்னையும் கலந்துகொள்ளும்படி அழைத்தனர். நாட்டின் தொலைக்கோடியில் வறுமை நிலவும் இடம் ஒன்றில் அவர்கள் கூடினர். கால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த, மனதில் பதிந்துபோயிருக்கும் நிகழ்வுகளின் வேதனையை என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.
குளிர்காலத்தின் ஆரம்ப நாள் அது. மென்மையாகச் சூரிய ஒளி வீசிய பெரிய திறந்தவெளி முற்றத்தில் கூடியிருந்தோம். மிக விரைவில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. கட்டம் போட்ட லுங்கியும், தாடியுமாக வந்த வயது முதிர்ந்த ஆண்கள், கிழக்கு-வங்காளத்து முஸ்லிம் வம்சாவளியினர் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பெண்களும் இளம் ஆண்களும் அசாமின் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர்களைப் போலத்தான் உடையணிந்திருந்தனர். பாரம்பரிய முறைப்படி எங்களை வரவேற்றனர். அத்தகைய வரவேற்பில் அளிக்கப்படும், வெள்ளை நிறத்தில் சிவப்பு நூலால் நேர்த்தியாகக் கை வேலைப்பாடுகள் செய்த அசாமிய ஸ்கார்ஃப்களை எங்களுக்கு வழங்கி மரியாதை செய்தனர்.
அதன் பின்னர், ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினர். அனைவரும் பேசியதிலிருந்து, அவர்களது காயங்கள் எதுவும் ஆறவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. வாழ்நாளில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை, உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே துறந்துவிட்ட நிலையில் எப்படி அந்தக் காயங்கள் ஆறும்?
அவர்களது பேச்சில் ஓர் அவசரத் தொனி இருந்தது; சொல்ல முடியாத அந்தக் கொடுமைகளை 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எதிர்கொள்ளவில்லை; மிகச் சமீபத்தில் நடந்த நிகழ்வுக்குச் சாட்சியமளிப்பதுபோல் அவர்களது பேச்சு இருந்தது. அங்கு கூடியிருந்த பலரும் குத்துவாள்களாலும் அகலமான வெட்டுக்கத்திகளாலும் தாக்கப்பட்டவர்கள். அந்தக் காயங்களால் உடல்கள் வளைந்தும், சிலரின் உடல்பாகங்கள் திருகிய நிலையிலும் இருந்தன. சிலரால் ஓரளவுக்கு மேல் நிமிர முடியவில்லை. ஆடைகளை விலக்கி ஒரு தலைமுறைக்கு முன்பாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏற்பட்ட காயங்களின் பயங்கரமான வடுக்களை அவர்கள் காட்டினர்.
அவர்களது சாட்சியங்களைக் கேட்பதற்காக- அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பலரும் அங்கு கூடியிருந்தோம். அவர்கள் அனுபவித்த பெருந்துன்பத்தையும் பின்புலத்தின் முழுமையான உண்மை நிலையையும் அறிந்து அனைவரும் உண்மையில் வெட்கப்பட்டோம்.
மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள், அங்கு செல்லவேண்டாம் என்று மென்மையாகத் தடுத்து நிறுத்த முனைந்தன. ‘பல ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தத் துயர நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களை மீண்டும் கிளறுவது விவேகமானதா? மக்கள் அந்த நினைவுகளிலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டனர்’ என்று என்னிடம் உறுதியாகக் கூறினர். இந்த நிலையில் நாங்கள் நெல்லிக்குச் செல்வதால் எந்த நோக்கமும் நிறைவேறப் போவதில்லை என்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே புதைக்கப்பட்டுவிட்ட நினைவுகளை மட்டுமே அது கிளறும் என்றனர். அந்த மாநிலத்தின் பல மேம்பாட்டு அமைப்புகளில் பணியாற்றிய அதிகாரிகளாக இல்லாத நண்பர்கள் பலரும் இதே ஆலோசனையை வழங்கினர். இந்த வருகை, மிகவும் கசப்பான உணர்வுகளுடன் கடுமையாக மோதிக்கொண்ட பிரச்சனைகளை மீண்டும் கிளறிவிடும் என்றனர்.
எனினும், உயிர் பிழைத்திருந்தவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்; அவர்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என்று விரும்பினர். அவர்களது வேண்டுகோளை என்னால் மறுக்க இயலவில்லை. ஒரு படுகொலையில் தப்பியவர்கள், அந்தப் பாதிப்பிலிருந்து குணமடைந்து அந்த நினைவுகளை மறந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிந்தால் மட்டுமே, மீதமிருப்பவர்களும் “அடுத்த கட்டத்திற்குச் செல்ல” முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
முகத்தில் தழும்புகளுடன் ஹசாரா காட்டுன் எங்கள் முன் தரையில் அமர்ந்திருந்தார். 1983-ஆம் ஆண்டில் அவர் மீது வாள் வீசப்பட்டது. தன்னுடைய வெறுமையான மடியை எங்களிடம் காட்டினார். “தொட்டிலாக, இங்கேதான் என் குழந்தையை வைத்துக் கொண்டிருப்பேன்” என்று தாழ்ந்த குரலில் கூறினார். “அவர்கள் அவனை இரண்டாக வெட்டிப் போட்டனர்.”
விதவையான அலெக்ஜான் பீவி மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த தாக்குதலிலிருந்து அவர் உடல் போதுமான அளவு குணமாகவில்லை. அவர் மனச்சமநிலையை இழந்திருப்பதை அனைவரும் அறிந்துகொண்டோம். படுகொலையில் அவரது குடும்பத்தினர் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். அந்தக் கும்பல் அவர்களை எவ்வாறு தாக்கிக் கொன்றது; அவர் எங்கு மறைந்திருந்தார்; அவரை எப்படிக் கண்டுபிடித்துத் தாக்கினர்; காயம்பட்ட அவர் எங்கு கிடந்தார் என்பதை நடித்துக் காண்பித்தார். காயம்பட்டு, ஆன்மாவும் உடலும் உடைந்து போயிருந்தாலும் எவ்வாறு உயிர் வாழ்ந்தார் என்பதைக் கூறினார்.
“எனக்கு இந்த உலகத்தில் எவருமில்லை” என்று அமைதியாகக் கூறி முடித்தார்.
முப்பதுகளின் தொடக்கத்திலிருந்த முகமது மோனூருதீன் எங்கள் முன் அமர்ந்தவுடன் அழத் தொடங்கிவிட்டார். அவரைத் தேற்ற முடியவில்லை. “என் சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர், துண்டுத் துண்டாக வெட்டிப்போடப்பட்டனர்” என்று அந்த நாளை நினைவு கூர்ந்தார்:
“அப்போது எனக்கு ஏழு வயதுதான். என் கண் முன்னே என் பெற்றோர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்தேன். இன்னொரு பெண்மணியும் கொல்லப்பட்டார். அவருடைய கைகளிலிருந்து அவரது குழந்தை பிடுங்கப்பட்டு நெருப்பில் வீசப்பட்டதைப் பார்த்தேன். அன்று முழுவதும் அந்தக் கொடூரத்தை நினைத்து அழுதுகொண்டிருந்தேன். மாலையில் அங்கு வந்த மத்திய ரிசர்வ் போலிஸ் படையினர் என்னை மீட்டனர். அதன் பின்னர், எங்களுடைய வீடு எரிக்கப்பட்டதை அறிந்துகொண்டோம். எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. எங்களுடைய உடைமைகள், வைத்திருந்த அரிசி சேமிப்பு என்று அனைத்தும் தீயில் எரிந்துவிட்டன. நாகோனிலிருந்த எனது பெரிய அண்ணன் என்னை வளர்த்தார். நான் மிகவும் தனிமைப்பட்டு நிற்கிறேன்.”
இன்னும் பலரும், அவர்களுடைய சொல்லமுடியாத தனிமையைப் பற்றிப் பேசினர். நூன் நஹர் பேகத்திற்கு அப்போது 10 வயது. கொலைகள் தொடங்கியவுடன் அவள் அங்கிருந்து ஓடிப்போக முயன்றாள். ஆனால், தாக்கியவர்கள் அவளைப் பிடித்து, மோசமாகக் காயப்படுத்தினர். அவள் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியிருந்தது. அவளுடைய தாயும் உடன் பிறந்தவர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டனர்.
“நாங்கள் இன்று நிற்கும் இடத்தில்தான் அவர்கள் அன்று படுகொலை செய்யப்பட்டனர்,” என்றவர், மேலும் தொடர்ந்து கூறினார்: “கடந்த 25 ஆண்டுகளாக எனக்கு மன அமைதி கிடைக்கவில்லை. நான் அமைதி பெற எனக்கு நீதி தேவை. நீதி முக்கியமானது. ஏனென்றால், அன்று நடந்தது மிகவும் கொடூரமான குற்றம். நான் தனித்து நிற்கிறேன். என் குடும்பத்தை நான் இழந்துவிட்டேன்…”
இன்று ஒரு தையல்காரராக வாழ்க்கையை நடத்தும் பபூல் அகமது, அந்தப் படுகொலையில் பெற்றோரை இழந்தார்; அன்று அவருக்கு இரண்டு வயது. அவருடைய தாத்தாவும் பாட்டியும் அவரை வளர்த்தனர். அவரது சகோதரிகள் SOS குழந்தைகள் கிராமம் ஒன்றில் வளர்க்கப்பட்டனர்.
இவ்வாறாக நீண்ட காலமாக அவர்களது துயரக் கதைகள் கேட்கப்படாமலும் கவனிக்கப்படாமலும் மறுக்கப்பட்டும் குழம்பி தேங்கிக் கிடந்தன. இப்போது உடைந்த அணையிலிருந்து வேகமாக வரும் வெள்ளம் போல வெளிவந்தன.
1983-ஆம் ஆண்டு நெல்லியில் நடந்து, அனைவராலும் மறக்கப்பட்ட படுகொலையைத் தொடர்ந்து, அஸ்ஸாமிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடந்த மன அதிர்ச்சியை ஏற்படுத்திய இன அழிப்பிற்கும் படுகொலைகளுக்கும் அரசாங்கம் வெளிப்படையாக உடந்தையாக இருந்தது; இரத்தக்களரியிலான பாதையை அமைத்தது எனலாம். தொடர்ந்து 1984-ஆம் ஆண்டில் டெல்லியிலும், 1989-ஆம் ஆண்டில் பாகல்பூரிலும், 1993-ஆம் ஆண்டில் மும்பையிலும் இதே போன்று அரசாங்கத்தின் துணையுடன் படுகொலைகள் நடந்தன. 2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் அது உச்சத்தை எட்டியது.
நெல்லி படுகொலையிலிருந்து தப்பியவர்களுக்கு, இறந்துபோன ஒவ்வொருவருக்கும், மிகக் குறைவாக ரூ.5,000 மட்டுமே அரசாங்கம் இழப்பீடாக வழங்கியது. மாறாக, சீக்கியப் படுகொலையில் உயிர் பிழைத்தவர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடாக 1984-ஆம் ஆண்டில் ரூ.7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும் அளிக்கப்பட்டது. எனினும் படுகொலைப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமானம் மிக்க ஒரு ஜனநாயக அரசு இழப்பீடாகக் கட்டாயம் வழங்க வேண்டிய தொகை என்று கருதப்படுவதைக் காட்டிலும் இது ஓர் அற்பமான தொகையாகும்.
நெல்லி படுகொலை தொடர்பாக அறுநூற்று எண்பத்தெட்டு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் 310 வழக்குகளுக்குக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. மீதமுள்ள 378 வழக்குகள் “ஆதாரங்கள் இல்லை” என்ற காவல்துறையின் கூற்றால் மூடப்பட்டன. எனினும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 310 வழக்குகளும் அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அசாம் கண பரிஷத் அரசாங்கத்தால் கைவிடப்பட்டன.
மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட படுகொலைக்காக ஒருவர் கூட விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை. விடுதலைக்குப் பிறகு நடந்த இனப்படுகொலை நிகழ்வுகளில் குற்றங்களுக்கு உரிய தண்டனை என்ற நீதி வழங்கப்படவில்லை என்ற தோல்வியின் மிக மோசமான வரலாற்றுப் பதிவு இது.
டெல்லி, பாகல்பூர், மும்பை, குஜராத், கந்தமால், முசாபர்நகர் போன்ற ஏனைய பெரிய இனப் படுகொலைகளிலும், கீழவென்மணி, தெஹுலி, கரம்சேடு, சுந்துரு, கைர்லின்ஜி போன்ற சாதியப் படுகொலைகளிலும் வழங்கப்பட்ட நீதியும் மிகவும் மோசமானது என்றே பதிவாகியுள்ளன
ஒப்பீட்டளவில், சில உயிர்கள் அரசால் மிகத் தெளிவாக, மதிப்பு இல்லாதவையாகக் கருதப்படுகின்றன. வெறுப்புப் படுகொலை செய்தவர்களுக்கு வெட்கக்கேடான முறையில் தண்டனை விலக்கு அளிப்பது போன்ற அவமானகரமான நடைமுறையிலும், நெல்லி பதிவுகள் மிக மோசமானவை.
மீண்டும் சொல்கிறேன்: விடுதலை பெற்ற இந்தியாவில் நிகழ்ந்த மிகக் கொடூரமான வகுப்புவாதப் படுகொலைகள் ஒன்றில் ஒரு மனிதரும் தண்டிக்கப்படவில்லை, அல்லது விசாரணையை எதிர்கொள்ளவில்லை.
நெல்லி படுகொலையிலிருந்து உயிர்பிழைத்தவர்களின் கண்ணீரையும் அழுகையையும் இன்று மீண்டும் நினைவுகூரும் நேரத்தில், அவர்கள் மீதான இரக்கமும், கோபமும் எழுகிறது; இந்தப் பெரும் துயரங்களிலிருந்து தப்பியவர்களுக்கு நீதி வழங்கும்படி காவல்துறையையும் நீதிமன்றங்களையும் கட்டாயப்படுத்தும் நாள் எப்போது வரும் என்று வியப்பாக இருக்கிறது.
அக்கறையுடன் கவனத்துடன் ஒன்றாக இணைந்து நின்றால் மட்டுமே நாம் பாதுகாப்புடன் இருக்க முடியும் என்பதை எப்போது உணர்வோம்?
[கட்டுரையாளர் ஹர்ஷ் மந்தர் – சமூக சேவகர், எழுத்தாளர்]



