இணைய இதழ் 122சிறுகதைகள்

அம்மாப் பனை – ராஜேஷ் வைரபாண்டியன்

சிறுகதை | வாசகசாலை

ப்பா இறந்து அடக்கம் செய்த நாளின் பின்னிரவில் பாயில் சுருண்டு கிடந்த அம்மா எழுந்து வளவிலிருக்கும் ஒற்றைப் பனையின் அருகில் சென்றாள். இரவுப்பூச்சிகளின் சப்தத்தில் திளைத்துக்கொண்டிருந்த வளவு மரங்கள் அம்மாவை வினோதமாகப் பார்த்தன. பனைமரத்தடியில் நின்றபடி அண்ணார்ந்து பார்த்து ஏதேதோ பேசத் துவங்கினாள்.

“நீ பார்த்தியா… அவரு போனத…?”

பனை அமைதியாக நின்றிருந்தது.

குரலில் அழுகை இல்லை. அதுதான் அந்த இரவின் வலி. கண்ணீரில்லாத துக்கம், உடலைத் தாண்டி வெளியே வரும் போது ஒரு மொழியாக மாறிவிடும். அம்மாவின் மொழி அந்தப் பனையை நோக்கி இருந்தது. இரவுப்பூச்சிகளின் சப்தம் மட்டும் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சப்தங்களுக்குள், எங்கள் வீட்டின் நிசப்தம் மட்டும் தனியாக நின்றது, முதல் முறையாக.

நான் கதவின் ஓரத்தில் நின்றபடி பார்த்தேன். பாயில் கிடந்த அம்மா திடீரென எழுந்து நடந்து போவதைக் கண்டவுடன் பயம் என்னைக் கவ்விக்கொண்டது. அப்பாவை அடக்கம் செய்த நாள். மண் இன்னும் ஈரமாய் இருக்கும் நாள். அந்த ஈரம் அவள் மனத்திலும் ஒட்டியிருக்க வேண்டிய நாள். ஆனால், அவள் எழுந்து வளவுக்குள் போகும்போது, அது துக்கத்தின் நடையல்ல, ஏதோ பழைய பழக்கத்தின் நடையாய் இருந்தது, அப்பா வீடு வந்த இரவு போல.

வளவின் ஒரு மூலையில் பனை. இன்னொரு மூலையில் வெறும் மண். நடுவில் மாட்டுக்காடி. அதன் அருகில் அப்பா நிறுத்தி வைத்திருந்த பழைய சைக்கிள் மழையில் துருப்பிடித்து, அது இனி எங்கும் செல்லாது என்று முன்னமே முடிவு செய்தது போல இருந்தது. மாட்டுக்காடிக்கு அருகிலிருக்கும் கிணற்றில் இப்போதும் நீர் வற்றிவிடவில்லை. வளவுக்குள் இரவு வந்தால், எல்லா பொருள்களும் உயிருள்ளவைகளாக மாறிவிடும், மரங்கள் பேசும், கிணறு விசித்திரமானதொரு சத்ததை எழுப்பும். இவை எல்லாம் எனக்கு பழகிப்போனவைதான்.

அம்மா பனையிடம் பேசிக்கொண்டிருந்தாள். அது பனை அல்ல, அப்பா என்றுதான் மனம் சொல்லிற்று. பனையின் தண்டில் தெரிந்த ஒவ்வொரு சுருக்கமும் அப்பா சொல்லாமல் விழுங்கிய வார்த்தைகள் போல இருந்தன. அவர் பேசாமல் இருந்த காலமே அந்த மரமாக நின்றது போல அவளுக்குத் தோன்றியது.

“ ‘நம்ம வாழ்க்கைய பனை தாங்கும்டி’ இது நீ சொன்னதுதான். இப்போ நீயே போயிட்ட. நான் எதைத் தாங்கணும்?” என்று அம்மா கேட்டாள்.

சப்தம் ஆகாயத்தைத் தொட்டுவிட்டு திரும்பி வந்தது. பனையின் இலைகள் சற்றே அசைந்தன. அது பதில் சொல்கிறதோ என்று அவளது கண்கள் மேலே நிலைத்தன. அந்தப் பனையின் உச்சி, கருப்புக் காகிதத்தில் கிழிக்கப்பட்ட முக்கோணங்களாய் நிற்க, வானம் இன்னும் கருப்பாகவே இருந்தது. இடையில் சில நட்சத்திரங்கள் மட்டும் கண்சிமிட்டியபடி அமர்ந்து இருக்கும். மனிதன் துக்கப்பட்டால், அந்த நட்சத்திரங்களைத்தானே தேடுவான்?

அப்பா இறந்தது விபத்தென்று எல்லோரும் சொன்னார்கள். “அவருக்கு வலி இல்ல…சட்டுன்னு எல்லாம் முடிஞ்சிருச்சு” என்று ஊரார் சொன்னார்கள். வலி இல்லாமல் போவது என்னவோ பெரிய வரம் போல பேசினார்கள். இனி மிச்சமிருக்கும் நாளெல்லாம் வலியை தினம் தினம் விழுங்கியபடியே வாழத் துணிகிறவர்களை யார் பார்க்கிறார்கள்?

அப்பா போனதற்கு முன்பே வலி எங்கேயோ தொடங்கி இருந்திருக்க வேண்டும் என்று அம்மா சொல்லாமலே சொன்னாள். அப்பாவை “நல்லவன்” என்று எல்லோரும் முடிவு செய்து வைத்திருந்தார்கள். நல்லவன் என்றால் என்ன? எதையும் வெளியில் காட்டாதவன். எதையும் கேட்காதவன். எதையும் சண்டையாக்காதவன். அவன் உள்ளே எவ்வளவு வலி இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாதவன்.

அம்மாவின் உடல் அந்த இரவில் சிறிதாகத் தெரிந்தது. அவள் தேகம் எப்போதும் மெலிந்துதான் காணப்படும். ஆனாலும் அப்பா இருந்த போது, அவள் உடலில் ஒரு நிறைவு இருந்தது. இப்போது அது இல்லை. தோள்பட்டை சற்றே உள்ளே மடங்கி, தலையில் தென்பட்ட நரைமுடி காற்றில் அசையாமல், அவள் நின்றிருந்த தோற்றம், ஏதோ ஒன்று அவளிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து சென்றது போல இருந்தது. அது அப்பாவா, இல்லை அவள் நம்பிக்கையா என்று அப்போது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் கைகளின் நரம்புகள் வெளியே தெரிந்தன. கையில் கிடந்த வளையல் கூட அந்த நரம்புகளின் மேல் சத்தமில்லாமல் அடங்கியிருந்தது.

நான் அருகே போக நினைத்தேன். ஆனால், கால்கள் நகரவில்லை. அம்மாவை ஆறுதல்படுத்தும் சொற்கள் என்னிடம் இல்லை. இன்றிரவு நான் பெரியவன் இல்லை. மொழி இழந்தவன். நினைத்ததைச் சொல்ல முடியாமல் போகும் தருணமே முதிர்ச்சியின் ஆரம்பம்.

“இங்க வா,” என்று அம்மா திடீரென என்னைக் கூப்பிட்டாள்.

அவளது குரலில் கட்டளை இல்லை. அது ஒரு அழைப்பு. குழந்தை விழுந்த போது கை நீட்டும் அழைப்பு. நான் அருகே சென்றேன்.

“இந்தப் பனையைப் பாரு,” என்றாள். “உன் அப்பா, இந்தப் பனையின் கீழதான் உட்கார்ந்து இருந்தார். நான் தூரத்திலிருந்து பார்த்தேன். அவர் என்ன பார்த்தார் தெரியுமா? உன் முகத்திலிருந்த பசியை. அந்தப் பசியைத்தான் அவர் ஒழிக்க நினைத்தார்”

நான் பேசவில்லை. பசியின் முகம் எனக்குத் தெரியாது. ஆனால், அம்மாவுக்கு தெரியும். பசியும், நாணமும், கடனும், அவற்றிற்கு ஒரு முகம் இருக்கிறது. அவை எப்போதும் ஒரே முகம்; அம்மாவின் முகம்.

அப்பாவுக்கு பேசப் பிடிக்காது. அவர் பேசாததுதான் அவருடைய மொழி. காலை எழுந்தவுடன் சாமியறையில் உட்கார்ந்து, எதுவும் சொல்லாமல் விளக்கை பார்த்துக்கொண்டிருப்பார். அம்மா காப்பி கொடுத்தால், “சக்கரை கொஞ்சம்” என்று மட்டும் சொல்வார். அதற்கு மேல் எதுவும் இல்லை. அவர் துக்கப்பட்டபோது கூட, அவர் முகம் துக்கப்பட்ட மாதிரி தெரியாது. அதுதான் அவரை எல்லோருக்கும் “நல்லவன்” ஆக்கியது. நல்லவன் என்றால், எதையும் வெளியே காட்டாதவன் என்று அந்த இரவில்தான் என் பதின்ம வயது மனதுக்குப் புரிந்தது.

அப்பா சில சமயம் பனையைத் தாண்டி வானத்தைப் பார்த்தபடி நிற்பார். “இலை எல்லாம் அசையறப்போ, நம்ம மனசும் அசையுதுடா” என்று ஒரே ஒரு வரி சொல்வார். அது கவிதை இல்லை. வாழ்வின் வரைபடம். அப்பா இப்படிப்பட்ட வரிகளைச் சொன்ன நாட்கள், அவர் உள்ளே ஏதோ ஒன்று உடைந்திருந்த நாட்கள். அவர் சிரிப்பை பெரிதாக நான் பார்த்ததில்லை. சிரித்தாலும் அது பற்களோடு சிரிப்பு இல்லை. கண்களின் ஓரத்தில் மட்டும் நடந்த ஒரு அசைவு.

“உன் அப்பா இருந்தவரை, இந்த வீட்டுக்கு ஒரு நிழல் இருந்தது,” என்றாள் அம்மா. “இப்போ நிழல் கரைஞ்சிருச்சு. வீட்டுக்குள்ள வெயில்தான்.”

வெயில் என்ற சொல்லில் அவள் சொன்னது வெளிச்சம் அல்ல. வெயில் என்றால், எதையும் மறைக்க முடியாத நிலை. எல்லாமே வெந்து வெளியே வரும் நிலை. இப்போ இந்த வீடு, எதை மறைக்கப் போகிறது? எதை வைத்துக் காப்பாற்றப் போகிறது? அப்பா இருந்த போது மறைந்திருந்த கடன், மறைந்திருந்த பயம், மறைந்திருந்த ஒருவரின் பொறுப்பு, அவை எல்லாமே இப்போது வெயிலில் வந்துவிடும்.

அந்தக் கணத்தில் பனையின் உச்சியில் இருந்து ஒரு பெரிய இலை உதிர்ந்து வந்து தரையில் விழுந்தது. திடீரென்று விழுந்த அந்தச் சப்தம் இரவைப் பிளந்தது. அம்மா அசையாமல் நின்றாள். நான் மட்டும் நடுங்கினேன். அந்த உதிர்வு ஏதோ அறிகுறி போல இருந்தது.

“பாரு,” என்று அம்மா மெதுவாகச் சொன்னாள். “விழறதுக்கு முன்னாடி இலை எத்தனை நாள் மேல நின்னிருக்கும்? காற்று அசைச்சிருக்கும். மழை அடிச்சிருக்கும். வெயில் காய்ச்சிருக்கும். ஆனா, அது உதிரலை. ஏதோ ஒரு நாள் தான் உதிரும். அப்படித்தான் உன் அப்பாவும்.”

நாங்கள் இருவரும் அந்த உதிர்ந்த இலையை பார்த்தோம். அது முழு இலை இல்லை, நடுவில் கிழிந்து போயிருந்தது. கிழிந்த பகுதி வெண்மையாய் தெரிய, மீதமுள்ள பகுதி கருமையாக இருந்தது. ஒரே உடலில் உயிரும் மரணமும் அருகருகே இருக்க முடியும் என்பதை அந்த இலை உணர்த்தியது.

அம்மா குனிந்து அந்த இலையை எடுத்தாள். அதன் குச்சியைப் பிடித்தபடி வீட்டுக்குள் சென்றாள். பாயில் அதை விரித்தாள். அது ஒரு பெரிய பாய் போல விரிந்தது. அவள் அதில் உட்கார்ந்து கொண்டாள். அந்த அமர்வில் கூட, அவளுக்கு கால் வலித்தது தெரிந்தது. அவள் எப்போதும் வலியைச் சொல்ல மாட்டாள். வலி சொல்லாததுதான் அவளது பெருமை. இன்றிரவு கூட அவள் துக்கத்தைச் சொல்லவில்லை; பனையோடு பேசினாள்.

“இத்தனை வருடம் நான் உன் அப்பாவோடிருந்தேன்,” என்றாள். “ஆனா, நான் என்ன செய்தேன் தெரியுமா? அவர் சிரிச்சதை சேமிச்சேன். அவர் கோபத்தை சேமிச்சேன். அவர் சொல்லாம விட்டதை சேமிச்சேன். இப்போ அவர் இல்ல. என் சேமிப்பெல்லாம் இப்போ என்ன பண்ணுது தெரியுமா? என் உசிர குத்திக்கிழிக்குது.”

அம்மா பேசும் போது அவள் கண்களில் நீர் இல்லை. உலர்ந்த கண்களோடு துக்கம் பேசுவது ஒரு தனி வகை வலி. அது கண்ணீர் அல்ல. எரிந்த பின் மிச்சமிருக்கும் கருமை.

“நாளைக்கு எத்தனை பேரு வருவாங்க,” என்றாள். “அவரோட நல்லதையும் கெட்டதையும் சொல்லுவாங்க. ‘உன் புருஷன் கொஞ்சம் குடிப்பான்’ன்னு சொல்லுவாங்க. ‘எல்லாம் விதி’ன்னு சொல்லுவாங்க. நான் மட்டும்தான் எதுவும் சொல்ல முடியாம இருப்பேன். ஏன்னா அவர் எனக்கானவர். அவர் நல்லவரா கெட்டவரான்னு சொல்ல முடியாது. அவர் என்னோட வாழ்நாளோட ஒரு பகுதி.”

நான் திடீரென்று அழ நினைத்தேன். அழ முடியவில்லை. எனக்குள் எங்கோ ஒரு கசப்பு உறைந்திருந்தது. அப்பா இறந்த பின் நானும் ஏதோ ஒன்று ஆகிவிட்டேன். ஒரு வெற்றிடம் மனதெங்கும் வியாபித்திருந்தது.

அம்மா குரலை தாழ்த்தினாள்: “உன் அப்பா செத்துப்போனது விபத்தாலன்னு நினைக்கிறியா?”

நான் அவளைப் பார்த்தேன்.

“விபத்துன்னு எல்லோரும் சொல்றாங்க,” என்றாள். “ஆனா, அவர் போனதுக்கு முன்னாடி இரண்டு நாளா பேசவே இல்ல. சாமியறை முன்னாடி உட்கார்ந்து இருந்தார். ‘என்ன’ன்னு கேட்டேன். ‘ஒன்னுமில்லை’ன்னு சொன்னார். ஆனா, அவர் ‘ஒன்னுமில்லை’ன்னு சொல்ற போது, உள்ளுக்குள்ள நிறைய இருந்திருக்கும்.”

அப்பா தற்கொலை செய்திருக்கலாம் என்று அவள் சொல்லவில்லை. அவள் அப்படிச் சொல்ல முடியாது. ஏன்னா அப்பா “நல்லவன்” என்று ஊர் ஏற்கனவே முடிவு செய்திருக்கிறது. “நல்லவன்” என்பதே ஒரு பூட்டு. அந்தப் பூட்டுக்குள் உண்மையை அடைத்து வைக்க முடியாது. அம்மாவின் மனம் அந்தப் பூட்டைத் தாண்டிப் போய்விட்டது. அவள் இப்போது பேசுவது ஊரின் மொழி அல்ல. அவளுக்கான தனி மொழி.

“அவரு போயிட்டாரு,” என்று அம்மா தொடர்ந்தாள். “இப்போ நான் என்ன செய்யணும்? உனக்கு சோறு போடணும். உனக்கு வேலை சொல்லிக் கொடுக்கணும். உனக்கு பயம் வராம பார்த்துக்கணும். ஆனா, எனக்கே பயம் வந்துடுச்சு.”

அந்தப் பயம் என்ன என்று நான் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. சில கேள்விகள் கேட்க முடியாதது,

அம்மா எழுந்து வெளியே சென்று மீண்டும் பனையின் அருகே நின்றாள். இப்போது அவள் பேசவில்லை. பனையைப் பார்த்தபடி நின்றாள். பனையும் அவளைப் பார்த்தபடி நின்றது. இரு உயிர்கள் அசைவற்று நின்றிருந்தன. ஒன்று மரம். ஒன்று மனிதம். இரண்டுக்கும் இடையே ஒரு பெரும் மௌனம் அமர்ந்திருந்தது.

அப்போது தொலைவில் இருந்து ஒரு நாய் குரைத்தது. பதில் குரல் அடுத்த வீட்டில் இருந்து வந்தது. அந்தச் சப்தங்கள் மனிதனின் துக்கத்திற்கு சம்பந்தமில்லாதவை போலத் தோன்றின. ஆனால், மனிதன் துக்கத்தில் இருக்கும்போதுதான், உலகம் இயல்பாகத் தொடர்வதைப் பார்க்கிறான். அதுதான் துக்கத்தின் மற்றொரு நிலை. உலகம் நின்றுவிட வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும். ஆனால், உலகம் நின்றுவிடாது. அது ஓடும். அவனும் ஓட வேண்டியிருக்கும்.

அம்மா திடீரென பனையின் தண்டில் நெற்றியை வைத்துக் கொண்டாள். ஒரு கணம். பிறகு மெதுவாகக் குனிந்து, தண்டின் அடியில் இருந்த மண்ணைத் தொட்டாள். அந்த ஈர மண் அவள் விரல்களில் ஒட்டிக்கொண்டது. மண் ஒட்டுவது ஒரு சாதாரணச் செயல்தான் எனினும் அந்த இரவில் அது ஒரு சடங்கு போல இருந்தது. இறந்தவனுக்கு பின் வாழ்வோர் செய்யும் சடங்கு. “உன் இறப்பு இங்கேதான். என் வாழ்வு இங்கேதான்” என்ற சாட்சி.

அவள் மீண்டும் என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு வேண்டுகோள் இருந்தது. ‘நீ என்னைக் காப்பாத்து’ என்ற வேண்டுகோள் இல்லை. ‘நீ உன்னை காப்பாத்து’ என்ற வேண்டுகோள்.

“நீ படி,” என்றாள். “என்னால உனக்கு நிலம் வாங்கித் தர முடியாது. வீடு கட்டித் தர முடியாது. ஆனா, படிப்பு இருந்தா, நீ யார்கிட்டயும் கையை நீட்ட வேண்டாம்.”

அப்பா சொன்னதை அம்மா சொல்கிறாள் என்று நான் நினைத்தேன். இல்லை. அது அம்மாவின் சொந்தக் குரல். அப்பா இருந்தபோது அது வெளியில் வராமல் இருந்தது. அப்பா போனதும் அது வெளியே வந்தது. இதுதான் வாழ்க்கையின் விசித்திரம். சில குரல்கள், கேட்பவரை இழந்த பின்புதான் முழுமையாக வெளியில் வரும்.

வானம் சற்று வெளிரத் தொடங்கியிருந்தது. விடியல் வர ஆரம்பித்தது. இரவு முழுக்கப் பேசினவள், இப்போது மௌனமாய் இருந்தாள். அவள் மௌனம் அந்தப் பனையின் மௌனத்தைப் போல ஆகிவிட்டது.

விடியல் வந்ததும், இரவில் உண்மையாகத் தோன்றிய வாக்கியங்கள் காலை வெளிச்சத்தில் சாதாரணமாகத் தெரியும். ஆனால், உடம்புக்குள் மட்டும் இரவின் சப்தம் அப்படியே இருக்கும். அது ஒரு காயம் போல. வெளியில் தெரியாது. உள்ளே மட்டும் வலிக்கும். அம்மாவின் மௌனம் அப்படித்தான் இருந்தது. வெளியில் பார்த்தால் சாதாரணம். உள்ளே மட்டும் ஒரு முழு வீட்டின் அளவு வெற்றிடம்.

நான் அவளருகே நின்றேன். காற்று பனையிலைகளை அசைத்தது. அந்தச் சப்தம் தாலாட்டு போல இருந்தது. தாலாட்டும் துக்கமும் ஒரே இசையில் இருக்க முடியும் என்று அந்த இரவு கற்றுக் கொடுத்தது.

“வா,” என்றாள் அம்மா.

வீட்டுக்குள் வந்தோம். பாயில் அமர்ந்தாள். நான் எதிரே உட்கார்ந்தேன். அவள் என் முகத்தைப் பார்த்தாள். முதல் முறையாக அவள் கண்களில் நீர் வந்தது. அது விழவில்லை. கண்ணின் ஓரத்தில் மட்டும் நின்றது. விழியோரம் நின்ற நீர்தான் கனமான நீர்.

“இன்னிக்கு யாராவது கேட்டா,” என்றாள் மெதுவாக, “உன் அப்பா நல்லவர்ன்னு சொல்லு. அது உண்மை. ஆனா, உன் மனசுக்குள்ள…அவர் நல்லவராக இருந்ததாலதான் அவர் கஷ்டப்பட்டதும் அப்டிங்குறது உண்மைன்னு ஒத்துக்க.”

அவள் சொன்னது எனக்கு முழுசாகப் புரியவில்லை. ஆனாலும் அது ஒரு சாவி போல இருந்தது. கதவுகளுக்கானது இல்லை; மனசுக்குள் பூட்டப்பட்டிருந்த ஒன்றுக்கானது.

வெளியே விடியல். பனையின் நிழல் வளவில் நீண்டது. அந்த நிழலில் அப்பா நடந்து சென்றது போலத் தோன்றியது. இல்லையென்றால், அப்பா விட்டுச் சென்ற இடைவெளிதான் நிழலாய் நீண்டிருக்கலாம்.

அம்மா சுவற்றில் சாய்ந்து கண்களை மூடினாள். அவள் கையில் இன்னும் மண் ஒட்டியிருந்தது. அது அப்பா விட்டுச்சென்ற மண்ணா அல்லது அம்மா தாங்கும் மண்ணா அல்லது நான் நகர வேண்டிய மண்ணா என்பதை காலம்தான் எனக்குக் கற்றுத்தரும்.

பனையின் இலைகள் மீண்டும் அசைந்தன. அது பதிலா, ஆசீர்வாதமா, இல்லை உலகத்தின் இயல்பா என்று தெரியவில்லை. ஆனால், அந்தச் சப்தத்துக்குள் அம்மா மெதுவாக உறங்கத் தொடங்கினாள்.

அப்பா இறந்து அடக்கம் செய்த நாளின் பின்னிரவு, எங்கள் வளவின் ஒற்றைப் பனை, முதல் முறையாக வீட்டுக்குள் ஒரு குரலைக் கொண்டு வந்தது. அது அப்பாவின் குரல் இல்லை. அம்மாவின் குரல்!

svprajesh@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button