இணைய இதழ் 122சிறுகதைகள்

கேர்டேக்கர்[ஸ்] – சக மனிதர்

சிறுகதை | வாசகசாலை

இன்று உறுத்தலில்லாமல் சிரிக்க முடிவது அவனுக்கு சட்டென உரைத்தது. அவனை அறியாமல் கண்களில் நீர் திரண்டது. அது ஒரு பெருந்துளியாய் உருவெடுத்து ஆக்ரோஷமாய் அவன் இடது கன்னத்தில் தன்னைப் பதித்துக்கொண்டு ஓடிக் கரைந்தது. அவனுடைய விரல்கள் அவசரமாய் அதைத் துடைத்துவிட எத்தனிக்கவில்லை. அந்த ஈரம் அவனுக்கு இதமாய் இருந்தது. முகத்தில் அறைகிற குளிர்காற்று அதைச் சீக்கிரமாய் உலர்த்திவிடும் என அவனுக்குத் தெரியும். ஆயினும் அப்படியே அசையாமல் இருள் ஒளித்து வைத்தது போக மீதம் தெரியும் கடலை, மூடிய கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தான். ஓயாத அலைகளின் ஓசை அவனுக்குள் வந்தமர்ந்திருக்கிற அமைதியை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது.

தினம் இரவு கூடடைய வேண்டிய கட்டாயம் உள்ள பறவையின் சிறகுகள்தான் அவனுக்கு வாய்த்திருந்தன. ஆக, இந்தத் தருணம் இலகுவானது.

அமைதி!

இந்த எண்ணிக்கை எனச் சொல்ல முடியாத அலைகளின் தோற்றம், வாழ்வு, மறைவுக்குப் பின், அவனுடைய பெயர் அவன் தலைக்குப் பின்னால் மனிதக்குரலாய் ஒலிப்பது அவனுக்கு கேட்டது. இடது கையால் முகத்தைத் துடைத்தபடியே திரும்பினான். நண்பர்கள் மேசையைத் தயார் செய்திருந்தனர். அவனுடைய திரும்பிய முகம் மீண்டும் சிரித்தது. துடைத்த கையே மண்ணில் ஊன்றி உடலை எழுப்ப உதவியது. மெல்ல நடந்து நண்பர்களை நோக்கிச் சென்றான். துர்கா ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள். அவனுடன் கைகள் கோர்த்தபடி மேசையின் அருகில் செல்ல, ஒரு பாட்டிலில் இருந்து விஸ்கியை கண்ணாடிக் கோப்பை ஒன்றினுள் கவனமாகக் கவிழ்த்தபடியே,

“டேய், நீ குடிக்க வேண்டிய தண்ணி இங்க இருக்கு”

என சிரித்தபடியே மைக்கேல் சொன்னான். அவனும் சிரித்தான். துர்கா மைக்கேலின் தலைமுடியைக் கலைத்து தானும் சிரித்தாள். மற்ற நண்பர்களும் சிரித்தனர். பதினைந்து பேரும் மேசையைச் சுற்றி வட்டமாக நின்றனர். கையில் கோப்பையை ஏந்தியபடியே,

“ச்சியர்ஸ் துர்கா அண்ட் மைக்கேல் – விஷ்ஷிங் யூ வொண்டர்ஃபுல் டூகெதர்னெஸ் “

என ஆரவாரமாகக் கத்தினர். முதல் சிப்பைக் குடித்துவிட்டு அனைவரும் கூட்டமாக அவர்களைக் கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்.

ஹுதா துரிதமாகவும் கவனத்துடனும் செயல்பட்டுக்கொண்டிருந்தாள். ஏற்கனவே ஆம்புலன்ஸுக்குத் [மொபைல் ஐ.சி.யூ] தகவல் தெரிவித்து விட்டாள். எந்த நிமிடமும் அது வந்து விடும். முதலுதவிகள் அனைத்தும் செய்திருந்தாள். ஆனாலும் அந்த அம்மாவின் தாங்கமுடியாத வலியே அவளுடைய முகமாக மாறிவிட்டதையும் அவள் கவனித்தாள். இத்தகைய முகங்கள் பலவற்றை அவள் கடந்திருக்கிறாள். தன்னுடைய பிம்பத்தை நிழற்கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு கணத்தில், ”எல்லாப் பெண்களின் முகங்களுமே ஒன்றுதானோ?!” என அவளுக்குத் தோன்றியது. அந்த எண்ணம் இப்பொழுதும் மேலோங்கியது. வீட்டிற்கு அருகாமையில் கேட்ட சைரன் சத்தம் அந்த எண்ணத்தைக் கலைத்தது.

ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அந்த அம்மாவின் மணிக்கட்டு நரம்பு வழியே பெயின்கில்லர் ஏறிக்கொண்டிருந்தது. கார்டியாக் அரெஸ்டின் சிம்ப்டம்ஸ் என்பதை அந்த அம்மாவைத் தவிர மற்றவர்கள் உணர்ந்திருந்தனர். ஹுதா அந்த அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். இப்பொழுதும் அது வலியின் முகமாகவே இருந்தது. ஆனாலும் அந்த அம்மாவின் உதடுகளில் ஒரு புன்னகை அரும்பி, அவளது கண்களின் வழியே ஹுதாவின் கண்களைச் சந்தித்து, அதை அவளிடம் சேர்த்தது. ஹுதா அதை மனதாரப் பெற்றுக்கொண்டதை அவளுடைய விரிந்த உதடுகள் அந்த அம்மாவுக்கு உணர்த்தியது. அந்தத் தருணத்தில் அவர்களுடைய முகங்கள் வலியற்றதாய் இருந்ததை இருவருமே உணர்ந்திருந்தனர்.

அந்த அம்மா அவனுடைய அம்மாதான். அம்மாவுக்கும் மகனுக்கும் பெயர்கள் முக்கியமில்லை. எந்தப் பெயராய் இருந்தாலும் அவர்கள் அம்மாவாகவும் மகனாகவும் கடமையாற்றியே தீர நிர்பந்திக்கப்பட்டவர்கள். விதிவிலக்கு ஆக, சூழல் ஒத்துழைக்க வேண்டும்.

அவன் உற்சாகத்துடன் பாடிக்கொண்டிருந்தான். துர்காவும் மைக்கேலும் ஆடிக்கொண்டிருந்தனர். மிச்சம் பன்னிரெண்டு பேரில் ஏழு பெண்களும், ஐந்து ஆண்களும். நம்முடைய, நம் நண்பர்களுடைய பெயர்கள்தான் அவர்களுக்கும். ஒரு பெண் மேசையில் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள். இன்னொருவள் உகுலேலே இசைத்துக் கொண்டிருந்தாள். சிலர் வாயை அகல விரித்துச் சிரித்தபடி கைகளைத் தட்டித் தாளம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இடையிடையே ஆரவாரமாகக் கத்தினர். இவர்களின் சந்தோசம் அந்த ரிஸார்ட்டில் இருக்கிற மற்ற யாருக்கும் தொந்தரவாக இல்லை. தூரத்திலிருந்து சிலர் இவர்களின் கொண்டாட்டத்தை ரசித்து தாங்களும் பங்கேற்றுக் கொண்டிருந்தனர். இப்பொழுது நண்பர்களும் ஆட்டத்தில் சேர்ந்துகொண்டனர். அவர்களில் ஒருவருடைய மொபைல் ப்ளுடூத்துடன் இணைக்கப்பட்ட ஒரு போர்ட்டபிள் ஸ்பீக்கர் ஒரு பாடலை, இசையுடன் அலற விட்டுக் கொண்டிருந்தது. நமக்குப் பிடித்த ஏதோ ஒரு பாடல்தான் அது. அவனும் எல்லோருடனும் சேர்ந்து தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தான். மெளனித்து வைக்கப்பட்டிருந்த அவனுடைய மொபைலில் ”ஹுதா” என்கிற பெயர் சில நொடிகள் தன்னைக் காட்டிவிட்டு ஒலி மங்கி இருளுக்குள் அடங்கியது. தூரத்திலிருந்து இவர்களை வேடிக்கை பார்க்கிற யாரோ ஒருவர் அவன் பேண்ட் பாக்கெட் சில நொடிகள் ஒளிர்ந்ததைக் கவனித்திருக்கலாம்.

அம்மா எமர்ஜென்ஸி வார்டின் படுக்கையில் பல்வேறு ட்யூப்களும் வயர்களும் சொருகப்பட்டு, வெளிச்சத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். அரை மயக்கத்தில் இருந்தாள் . ஏதோ முனகிக் கொண்டிருந்தாள். அது அவனுடைய பெயராகவும் இருக்கலாம். அருகில் நின்றிருந்த ஈ.ஆர்.டெக்னீஷியன் முகேஷுக்கு அது என்னவென்று விளங்கவில்லை.

ட்யூட்டி டாக்டர் ஹெலனிடம் ஹுதா தன்னை ’ஹோம் நர்ஸ்’ என அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

பின் அவள் அந்த அம்மாவின் உடல்நிலை குறித்த அத்தனை விபரங்களையும் தெளிவாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். கேள்விகளும் பதில்களும் பொருந்திப் போய்க்கொண்டிருந்ததன. அவை வழக்கமான கேள்விகள்தான். அந்த அம்மாவும் எல்லா அம்மாக்களையும் போல வழக்கமான ஒருவர் தானே…

ஆதலால் அந்த உரையாடலின் தகவல்கள் அவசியமில்லை. ஏனெனில் ஹுதா துல்லியமானவள். அது அவளுடைய நிதானமான நடவடிக்கைகளில் வெளிப்படும். உதாரணத்திற்கு, அவள் இதுவரை அவனுக்கு ஒருமுறைதான் அழைத்திருந்தாள். அதுவும் அம்மாவை எமர்ஜென்ஸியில் சேர்த்தபிறகுதான். அவனுடைய அழைப்பிற்கு காத்திருக்கிறாள். தன்னுடைய மொபைலை கையிலேயே வைத்திருக்கிறாள். காரணம் ஹாஸ்பிட்டல் என்பதால் அதுவும் மெளனித்துதான் வைக்கப்பட்டிருக்கிறது.

சூழலுக்கேற்ப மொபைல்கள் மெளனிக்க வேண்டியது அவசியம்.

டாக்டர் ஹெலன் ‘அந்த அம்மாவின் ரத்த உறவுகள் யாரும் வரவில்லையா?’ எனக் கேட்ட அந்த நொடியில் மட்டும்தான் ஹுதா பேச்சற்று நின்றாள். சுதாரித்து, “ரீச் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன் டாக்டர்” என்றாள்.

ஹுதா அவனுக்கு மீண்டும் அழைக்கவில்லை.

அம்மாவின் அருகில் வந்து நின்றாள். அவளுடைய முனகலை அவளால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிந்தது. அது அவனுடைய பெயர்தான்.

இந்த முனகல் அவனைச் சென்றடைய சாத்தியமே இல்லை என்பது ஹுதாவுக்குத் தெரியும். ஆனால், அவளுடைய மொபைல் திரையில் அம்மா முனகிய பெயர் ஒளிர்ந்தது. மெல்ல எழுந்து அம்மாவின் படுக்கையிலிருந்து விலகி நடந்து, எமர்ஜென்ஸி அறையிலிருந்து வெளியே வந்தாள். குளிர்காற்று அவள் முகத்தில் மோதியது. இருமுறை மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள். அழைப்பை அட்டெண்ட் செய்தாள்.

“சிஸ்டர், அம்மா எப்டி இருக்காங்க?”

“இப்ப ஸ்டேபிளா இருக்காங்க. டாக்டர் ஒருநாள் அப்ஸர்வேஸன்ல இருக்கச் சொல்லிருக்காங்க. நெஞ்சு வலி. மைல்ட் கார்டியாக் அரெஸ்ட். கவர்ன்மெண்ட ஹாஸ்பிட்டல் எமர்ஜென்ஸில அட்மிட் பண்ணிருக்கேன்”

“நான்… வரேன்”

“ஓகே”

இருவருமே பதற்றமில்லாமல் பேசிக்கொண்டனர்.

பதறியபடி ஒருவர் எமர்ஜென்ஸி வார்டினுள் நுழைவதை ஹுதா கவனித்தாள். அது அந்த அம்மாவின் அண்ணன். ஹுதாதான் வீட்டிலிருந்தபோதே அவருக்கும் தகவல் சொல்லியிருந்தாள். நான்காவது முறை அழைத்தபோதுதான் அவர் போனை எடுத்து ”யாரு?” என எரிச்சலுடன் கேட்டார். இரண்டு தெரு தள்ளிதான் இருந்தார். ஆனாலும் இவ்வளவு தாமதமாகத்தான் அவரால் வர முடிந்திருக்கிறது. அந்த அம்மாவைப் பார்த்து அழ முயற்சி செய்துகொண்டிருந்தார்.

ஹுதா அவரை மெல்ல அந்த அம்மாவிடமிருந்து விலக்கி அழைத்துவந்து, “ஷீ இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்” எனக் கூறினாள்.

“அத சொல்ல வேண்டியதுதான? இப்படி அடிச்சிப் பிடிச்சி அர்த்தராத்திரியில நான் ஓடி வந்துருக்க மாட்டேன்ல..?” எனக் கத்தினார். ஹுதா அமைதியாக நின்றாள். அவளுடைய அமைதி அவரை இன்னும் எரிச்சலாக்குவதையும் கவனித்தாள்.

“அவனை எங்க?” என மீண்டும் கத்திய அவர் சுற்றிமுற்றிப் பார்த்தார். அவனைத்தான் தேடுகிறார் என ஹுதாவுக்குப் புரிந்தது. “வந்துட்ருக்கார்” என மெல்லிய குரலில் பதில் சொன்னாள். “வந்துட்ருக்கானா…?” எனக் கத்தியவர், ”அம்மாவை இந்த நிலைமைல விட்டுட்டு எங்க போய்த் தொலைஞ்சான்?” என இன்னும் கத்தினார். ஹுதா அமைதியாக இருந்தாள்.

அவருடைய மொபைல் அவரை விட சத்தமாக ஒலித்தது. “சைலண்ட்ல போடுங்க சார்…சுத்தி பேஷன்ஸ் இருக்காங்க” என ஹுதா மீண்டும் மெல்லிய குரலில் சொன்னாள். “அது எங்களுக்குத் தெரியும்” என அலட்சியத்துடன் சொல்லிவிட்டு, போனை அட்டெண்ட் செய்து, “ஆமா, ஹார்ட் அட்டாக்தான். இப்ப ஓகேதானாம். அவன் எங்க போனானோ…?”, குரல் தணிந்து, “ஆள் இல்லிய இங்க..இந்த லட்சணத்துலதான் புள்ளைய வளத்து வச்சிருக்கா…நம்ம உயிர வாங்குறதுக்கு…சரி, நீயும் வந்து தலையக் காட்டிரு. நம்ம ஃபேமிலி குரூப்புல மேஸேஜ் போட்டுர்ரேன். ஆமா, அப்புறம் ஒவ்வொருத்தரயா கூப்டா சொல்லிட்டு இருக்க முடியும்…?” எனக் கத்தல் மீண்டும் தொடங்க, ஹுதா அவரை சற்று மெதுவாகப் பேசும்படி கேட்டுக்கொண்டதை அவர் பொருட்படுத்தவே இல்லை. ட்யூட்டி டாக்டர் ஹெலன் சொன்னபோதுதான் அவர் குரல் தணிந்தது.

மீண்டும் ஹுதாவிடம் வந்தார் அவர். “எங்கதாம்மா இருக்கான் அவன்? எனக் கேட்க, “நீங்களே கேளுங்க..” என அவள் நிதானமாய்ச் சொன்னாள். அவர் ஒரு நொடி சலித்துவிட்டு, “அவன் நம்பர் சொல்லு” என்றார். ஹுதா அவர் கண்களுக்குள் எதையோ தேடினாள்.

வெளியே வந்தவர், “ஹலோ, எங்கடா இருக்க?” என போனில் கத்த, அவன் நிதானமாக ”நீங்க யாரு?” என்றான். “சொந்தத் தாய்மாமன் நம்பர் கூட இல்ல…நீயெல்லாம் பெத்தவள பாத்துக் கிழிப்ப…” என எகிற, அவன் இணைப்பைத் துண்டித்தான்.

அவன் முகம் மாறியதை வைத்தே எதையோ புரிந்துகொண்ட மைக்கேல், “மச்சான், நீ ஹுதா கால் மட்டும் அட்டென்ட் பண்ணு, அம்மா கண்முழிச்ச உடனே வீடியோ கால்ல பேசிக்கலாம்” என்றான். துர்காவும் அவன் கையைப் பிடித்து அதை ஆமோதித்தாள். எல்லோரும் ஒரு வேனில் இருந்தனர். அவன் துர்காவின் தோளில் சாய்ந்தபடி சன்னல் சட்டகத்துக்குள் வேகமாக வந்து செல்லும் காட்சிகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.

தந்தையின் மறைவுக்குப் பின் அண்ணனாக வாழவேண்டியிருந்தது. தங்கையின் திருமணத்திற்குப் பிறகு அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டி மகனாக வாழ்ந்து கொண்டிருந்தான். அவள் அம்மாவாகவே இருக்க விரும்பினாள். அப்படித்தான் பழக்கப்பட்டிருந்தாள். மகனாய் இருந்தே ஆகவேண்டிய அழுத்தம் உள்ளே இருக்கும் மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாய் தின்று கொண்டிருந்தது.

நண்பர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். ஓட்டுநர் கூட பாடல் எதுவும் கேட்கவில்லை. அவர் டபோலிம்மில் இருக்கிற கோவா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

சென்னையிலிருக்கிற சொந்தக்காரர்கள் எல்லோருமே ஹாஸ்பிட்டலுக்கு வந்துவிட்டனர். அவனுடைய தங்கை மற்றும் கணவர் குழந்தைகள் உட்பட. இப்பொழுது இங்கு இருக்கிற சொந்தக்காரர்கள் மத்தியில் விவாதப் பொருளாக ஆகியிருப்பது, ‘இன்னும் அவன் வந்து சேரவில்லை’ என்பதுதான். அந்த விவாதம் சாட் ஆகவும், வாய்ஸ் நோட்களாகவும் வாட்ஸப் குரூப்பிலும் தொடர்கிறது.

அந்த அம்மா இப்பொழுது ஐ.சி.யூவிற்கு மாற்றப்பட்டிருந்தார். உறக்கம் களைந்து மெல்ல அவர் கண்களைத் திறந்தார். ஹுதா அந்தக் கண்களை நேரிட்டாள். சொந்தக்காரர்கள் வந்திருப்பதையும், அவன் கிளம்பிவிட்டான் என்கிற தகவலையும் தெரிவித்தாள்.

அம்மா ஹுதாவிடம் ஏதோ முனகினாள்.

அங்கே இருப்பவர்களைப் பார்த்து, வந்துவிட்டதைப் பதிவுசெய்துவிட்டுக் கிளம்புபவர்கள், இருப்பவர்கள், கிளம்புபவர்கள் என முகங்கள் மாறிக்கொண்டே இருந்தன. இருந்தே ஆகவேண்டிய சொந்தங்கள் என்பவர்கள் சஞ்சலத்துடன் இருந்த இடத்திலேயே அலைந்துகொண்டிருந்தனர்.

அவன் கோவாவுக்குச் சென்றிருப்பது தங்கை கணவர் மூலமாகத் தெரியவந்தது. இன்ஸ்டாகிராமில் அவன் நண்பன் யாரோ டேக் செய்த போட்டோவைப் பார்த்திருக்கிறார்.

“இவதான் சீக்காளின்னு தெரியும்ல? ஆம்பளப்பய பெத்த தாய அம்போன்னு விட்டுட்டு இப்பிடி ஊர் சுத்தலாமா? கொஞ்சம் கூட பொறுப்பில்லாம, க்கோவாவுல [எள்ளலான உச்சரிப்பின் கோவா] போயி கூத்தடிச்சிக்கிட்டு இருக்கான்.. இப்படி ஒரு பிள்ளைய உலகத்துல பாக்க முடியுமா?” என்று குசுகுசுவெனக் குமுறினார் அத்தை போன்ற முகம் உடைய ஒருவர். அதை ’உச்’ கொட்டி ஆமோத்தித்தனர் சுற்றியிருந்தவர்கள்.

ஏர்போர்ட்டின் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு அவன் முகம் கழுவினான். துளிர்த்த கண்ணீரை நீரால் துடைத்து எடுத்தான்.

மகனாக அல்லாமல் சக மனிதனாக அம்மாவைப் பார்க்கத் தொடங்கிய கணத்திலிருந்து அவனுடைய முகத்தில் இறுக்கம் தளர்ந்திருந்தது. அந்த முகத்தில், கூடே கதியான அம்மா எதையோ கண்டாள். தன்னைப் பார்த்துக்கொள்ள வெளி இல்லாத வறட்டுப் பொறுப்புகளால் மனம் கசந்துவிடும் என அவளுக்குப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதுதானே அவளுடைய மனம், உடல், உடல் உபாதைகள், வாழ்வு எல்லாம்.

அவன் பறந்துதான் வருகிறான். எனினும் ஹாஸ்பிட்டலை அடைய குறைந்தது ஆறு மணி நேரங்களுக்கு மேலே ஆகும். டைரக்ட் ப்ளைட் கிடைத்துவிட்டது. ஆனால், அது கோவாவிலிருந்து கிளம்பவே ஏறக்குறைய முன்று மணிநேரம் இருக்கிறது.

அம்மாவைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர்களின் கட்டுப்பாடு அல்ல அது.

fellow.human.m@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button