
காலை எழுந்ததும் வாட்சப்பில் வந்த செய்தி இந்த நாளை இத்தனை நினைவுகளுக்குள் இட்டுச் செல்லுமென நினைக்கவில்லை. அந்தப் புகைப்படத்தைப் பார்க்கத் துயரமாய் இருந்தாலும், பார்க்காமல் இருக்க முடியவில்லை.
கொட்டாச்சி மாமா, எங்கள் பகுதிக்கு வந்த முதல்நாள் இன்னமும் நினைவில் இருக்கிறது. மாதா கோவில் தெரு, காமாட்சி அக்காவுக்கு மாப்பிள்ளையாய் வந்தவர்தான் இந்தக் கொட்டாச்சி மாமா. நான் அப்போது மூன்றாவது படித்த ஞாபகம். மாப்பிள்ளை ஊரான மன்னார்குடியில் திருமணம் நடந்ததால் எங்களால் போக முடியவில்லை. எனவே, காமாட்சி அக்காவின் வருகையை வடக்குவாசல் முழுதும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. மேலும், அவர்கள் வேனில் வருவதாகப் பரவிய செய்தி காமாட்சி அக்காவை ஒரு சினிமா நட்சத்திரம் போல எதிர்பார்க்க வைத்தது.
“கல்யாணம் பத்து மணிக்கு முடிஞ்சுது. ஆனா, அவனுவோ பண்ணுற ஆடம்பரத்துக்கு பொண்ணு மாப்பிளை வரதுக்கு சாயங்காலம் நாலாகிடும்” தாத்தாவுக்கு லட்சுமி சீவல் வாங்க அஞ்சம்மா கடைக்குச் சென்றபோது, காலையில் கல்யாணம் பார்த்துவிட்டு வந்த சோடாக்கடை ரவி பேசியதை ஒட்டுக் கேட்டு விட்டு எங்கள் தெரு பயலுகளிடம், “காமாட்சியக்கா எத்தனை மணிக்கு வரும்னு தெரியுமா?” என்று ஏதோ விடுகதைபோல் கேட்டு, “சாயங்காலம் நாலு மணி ஆகிடும்” என்றேன். மாதா கோவிலில் ஒளிந்து விளையாடிக்கொண்டு இருந்த ஆர்வத்தில் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனாலோ என்னவோ இப்போதும்கூட சுவாரசியமான தகவல்களை மிகைப்படுத்தி பகிர்வதில்லை.
காமாட்சி அக்காவின் பக்கத்து வீடு என்கிற முறையில், மணமக்களுக்கு ஆரத்தி எடுக்கும் பொறுப்பு எங்கள் தலைமேல் விழுந்தது.
மூக்கனாங்கயிறு பின்னும் வேலை தடைபட்டதில் அம்மாவுக்குச் சலிப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டாள்.
நேரமாக ஆகத் தெருவில் கும்பல் கூடத் தொடங்கியது. காலையில் என் செய்தியைக் கண்டுகொள்ளாதவர்களும் இப்போது திண்ணை அருகே உட்கார்ந்து இருந்தார்கள். ‘வேன் தெருவாசலுக்குள் நுழையுமா?’ என்ற சர்ச்சையை யாரோ கிளப்பி விட, “பொண வண்டியவிடவா பெருசா இருக்கப் போகுது? எல்லாம் சரியா வரும்” என்ற தாத்தாவை, “அட இந்தாள யார்ரா பேசச் சொன்னது? விளங்குமா இதெல்லாம்!” என்றது இன்னொரு குரல்.
“வேன் வடக்குவீதி திரும்பிட்டு” என்றான் சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துக்கொண்டு வந்த சரவணன். அடுத்த சில நிமிடங்களில் அந்த மஹிந்திரா வேன் மாதா கோவில் தெரு முனைக்குள் திரும்ப முயன்று அப்படியே நிற்க, சில நொடிகளில் ‘வேன் உள்ள வராதாம்’ என்ற குரலோடு வேனுக்குள் இருந்தவர்கள் இறங்கித் தெருவுக்குள் வரத்தொடங்க, பட்டுச் சேலை பெண்கள் வரிசையாக எதையோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வர, அவர்களைத் தொடர்ந்து கொட்டாச்சி மாமாவும், அவருக்கு அரை அடி பின்னே, அவருக்கு நிகராய் நடக்க முயன்ற காமாட்சி அக்காவும் நடந்து வந்தார்கள். வீட்டுக்கு முன் அவர்கள் நிற்க, அம்மாவோடு சேர்த்து மூன்று பெண்கள் ஆரத்தி எடுக்கத் தொடங்கவும், ஓரமாய் நின்ற என்னை, “டேய் சண்முகா, காமாட்சி அக்காவ பாத்தியா, பக்கத்துல போடா” என்றாள் அம்மா. சங்கடமாய் முன்னே வந்தேன். காமாட்சி அக்கா தலை குனிந்தவாறே என்னை அவள் பக்கம் இழுக்க, நான் இருவருக்கும் இடையில் நின்றேன். கொட்டாச்சி மாமாமேல், மாலை, சந்தனம், பட்டுச் சட்டை, ஜவ்வாது எல்லாம் கலந்து வாசனை அடித்தது. மாமா என் தலை கோதி, “நல்லாப் படிக்கணும்” என்றுவிட்டு காமாட்சி அக்காவைப் பார்த்தார். அக்கா ஓரக்கண்ணில் பார்த்துச் சிரித்தாள். எனக்கு உடல் ஜிவ்வென்று இருந்தது. சட்டென்று மின்னல் போல் ஒளி வீச, பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் வானவில் ஸ்டூடியோ கேமரா எங்களைப் படம் பிடித்தது.
மொபைல் அழைத்தது. எதிர்முனையில் சரவணன். “சொல்லு மாப்ள”
“மாப்ள, நம்ம கொட்டாச்சி மாமா…”
“குரூப்புல பாத்தேன் மாப்ள”
“சரி மாப்ள, தகவல் சொல்லத்தான் கூப்பிட்டேன்”
“காசு எதும் அனுப்பவா?”
“இங்க வேற கதை மாப்ள, நான் அப்புறமா கூப்பிடுறேன்”
காமாட்சி அக்கா கல்யாணத்திற்கு பிறகு எப்போதாவது வந்து போவாள். வரும்போது கொட்டாச்சி மாமாவின் அருகில் சென்று அந்தத் திருமண நாளின் வாசனை கிடைக்குமா எனத் தேடுவேன். ஆனால், அவர் உடலின் கற்றாழை வாசம் மூச்சிலேறிச் சங்கடப்படுத்தும். “நல்லா படிக்கணும் சண்முகா” என்பார்.
இரண்டு குழந்தைகளுக்குப் பின் காமாட்சி அக்கா இரண்டு ஆள் ஆகிப் போனாள். மாமாவுக்கும் நரை எட்டி பார்க்கத் தொடங்கியது.
நான் ராஜா ஸ்கூலில் பத்தாவது முடிந்தபோதே சாஸ்திரா பாலிடெக்னிக்கில் டிப்ளமோ சேர முயல, அங்கே கிடைக்காமல், நாமக்கலில் ஒரு கல்லூரியில் கிடைத்து, அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன்.
அதன் பிறகு ஊரின் முக்கிய நிகழ்வுகள் எல்லாம் வெறும் செய்திகளாக மட்டுமே கேட்க முடிந்தது. கல்லூரி இரண்டாம் ஆண்டு செமஸ்டர் லீவுக்கு சென்றபோதுதான் காமாட்சி அக்கா இறந்த செய்தி தெரிந்தது.
“அந்தப் பாவத்த ஏன் சாமி கேக்குற, புள்ள வீட்டுக்கு வந்துட்டு சிவனேன்னு பஸ் ஏறப் போச்சு, இந்த வீரா பய ஆட்டோல போனவன், புள்ளைய தூக்கிட்டு சிரமப்படுதேன்னு ஆட்டோல ஏத்திட்டு போய் இறக்கிவிடப் பாத்து இருக்கான்…” அம்மாவின் குரல் நடுங்கியது, “அந்தக் கொடிமரத்து மூலைல திரும்பும்போது லாரிகாரன் விட்டு அடிச்சு, ரெண்டு உசிரும் லாரி டயர்ல போச்சு, வீரா பய ஒரு மாசம் ஆஸ்பத்திரில இருந்து வந்தான்” என்று சொல்லிமுடிக்கக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அம்மா என்னை இழுத்து அணைத்து அழுதாள். என்னைத் தூக்கி வளர்த்த காமாட்சி அக்காவின் இழப்பு அதுவும் அந்த அகால மரணம் என் நெஞ்சை அடைத்தது. எதை நினைத்து அழுவது எனப் புரியாமல் அழுதேன். அம்மா அழுதடங்கி, விசும்பிகொண்டிருந்த என் தலையைக் கோதினாள். சில நிமிடங்களுக்குப் பின் வெளியே வந்து காமாட்சி அக்கா வீட்டு திண்ணைக்குச் சென்று அமர்ந்தேன். சரவணன் வந்தான். என்னிடம் பேசாமல் அமைதியாய் இருந்தான். என்னிலிருந்து வந்த எஞ்சிய விசும்பலைக் கண்டு என் முந்தைய அழுகையை கண்டுபிடித்தவன் என் கையைப் பிடித்தான்.
மீண்டும் வந்த அழுகையை அடக்கிக் கொண்டு “மாமா எங்க?” என்றான்.
“தெரில மாப்ள. கலியா அண்ணன் வசூலுக்கு மன்னார்குடி போனப்போ, அவங்க வீட்டுப் பக்கம் போனாறாம், அவர காணோம்னு வந்து சொன்னாரு”
டிப்ளமோ முடித்து மீண்டும் ஊருக்கு வந்து, BHEL-ல் apprenticeship training-காக காத்திருந்தபோது, ஒரு மதிய வேளையில் கொட்டாச்சி மாமா மீண்டும் எங்கள் பகுதிக்கு வந்தார். அவராக வரவில்லை சைக்கிள் சீட் கவர் தயாரித்து விற்கும் கலியா அண்ணன் நாகப்பட்டினம் சென்றபோது பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்துகொண்டிருந்த மாமாவைப் பேசி அழைத்து வந்திருந்தார்.
மாமாவை முக்கத்தில் நிற்க வைத்து இருந்தார்கள். என்ன செய்வது என்று முடிவெடுக்க ஆலோசனை நடந்தது. “யாராச்சும் கொண்டுபோய் மன்னார்குடில விட்டு வந்துடுங்க” என்றார் கவுன்சிலர். மாமா இயல்பாய் இல்லை. நானும் சரவணனும் சைக்கிளில் அங்கே சென்றபோது மாமாவின் நடவடிக்கை வினோதமாய் இருந்தது. அவருக்குப் பின்னால் திரும்பிப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். அங்கே யாரும் இல்லை. எனக்கு அருகில் செல்லப் பயமாய் இருந்தது.
“அவர அங்க கொண்டு போய் விட்டு என்ன பிரயோஜனம்? பேசாம இங்கயே இருக்கட்டும். யாராச்சும் அந்தப் பக்கம் போனா அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லுங்க, வந்தா கூட்டிட்டு போகட்டும்” என்றார் ஒருவர். அதுவே முடிவும் ஆனது.
வயதில் எங்களுக்கு முதல் பேட்ச் ஆட்கள் சிலர் “அண்ணன வடவாத்துக்கு கூட்டி போய்க் குளிக்க வைப்போம்” என்று அவரைச் சைக்கிளில் பின்னால் அமர வைத்து அழைத்துப் போக, நாங்களும் பின்னாலேயே சென்றோம். “டேய், நீங்கப் போய்க் காமாச்சியக்கா வீட்ல அண்ணனோட சட்டை வேட்டி இருந்தா வாங்கிட்டு வாங்க” என்று கட்டளை வர, நாங்கள் பாதியிலேயே திரும்பி வீட்டுக்கு வந்தோம். “என்னாச்சு, எப்படி இருக்காரு காமாச்சி புருஷன்?” என்றாள் அம்மா.
“ம்மா, அக்கா வீட்ல அந்த மாமா துணி இருந்தா எடுத்துட்டு வா”
“நான் என்ன கேக்கறேன்…”
“அட, அவரு நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுத்துட்டு இருந்தாராம், ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி இருக்காரு, நீ துணி கொண்டாயேன்”
கொஞ்ச நேரத்தில் அம்மா துணியைக் கொண்டு வந்தாள். “பாவம் அந்த மனுசன் எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணானோ!” எனக் கவலையாய் கொடுத்தாள்.
“இதுக்கு பை ஒன்னு கொடும்மா” சொல்லிக்கொண்டே மர அலமாரியிலிருந்து ஒரு கட்டைப் பையை எடுக்கப் போக, “டேய், அத வைடா” என்றுவிட்டு, அடுப்படிக்குள் புகுந்து நான் பள்ளி சென்ற காலத்தில் புத்தக பையாகவும், ஒரு காது அறுந்ததில் ஓய்வு பெற்று இப்போது மீன் வாங்கும் பையாகவும் இருக்கும் ஒன்றைத் தந்தாள். துணிகளை வைத்துக்கொண்டு கிளம்பினேன்.
BHEL apprenticeship கிடைக்காததால் சென்னைக்கு வரவேண்டிய சூழல் வந்தது. ஒரு கார் தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியாளராக வேலையில் சேர்ந்தேன். இம்முறை ஊரோடானான உறவு முற்றிலும் தூண்டிக்கப்படாமல் மொபைல் பார்த்துக் கொண்டது.
அவ்வப்போது தகவல்கள் கிடைத்தன. கொட்டாச்சி மாமா அங்கேயே சுற்றிக் கொண்டு இருப்பதாய் சொன்னார்கள். தீபாவளி, பொங்கல் விடுமுறைகளுக்கு ஊருக்குச் செல்வேன். அப்படியொரு முறை சென்றபோது, பிள்ளையார் கோவில் வாசலில், பயல்களுடன் பேசிக்கொண்டிருந்த வேளை, சட்டென்று ஒரு நாற்றம் மூக்கில் ஏற, “ச்சை, என்ன நாத்தம்டா இது?” என்று பார்த்தபோது, நான் அன்று கொடுத்த பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, அழுக்கேறிய உடைகளோடு நடந்து வந்துகொண்டிருந்தார் கொட்டாச்சி மாமா.
“மாப்ள, மாமாவுக்குப் பைத்தியம் புடிச்சுடுச்சு மாப்ள. தெருவுல கிடைக்குற கொட்டாங்குச்சி எல்லாம் எடுத்துச் சேர்த்து வச்சுக்குவாரு, நல்லா போய்ட்டு இருப்பாரு, திடீர்னு நின்னு யார் மேலயாச்சும் தூக்கி போட்டுப் போய்டுவாரு, பயலுக ‘கொட்டாச்சி மாமா, கொட்டாச்சி மாமா’-ன்னு கத்திட்டு ஓடுவானுக, இவரும் துரத்துவாரு, பாவம்…” என்றான் சரவணன்.
அன்று தூக்கம் வர நேரம் ஆனது. முதன் முதலில் மாமாவின் அருகில் நின்றபோது வந்த வாசத்தை மூளை தேடியது. மனம் முழுக்க ஒரே கேள்வி, “ஏன் இதெல்லாம்?”
அதன் பிறகு கொட்டாச்சி மாமாவும், நாற்றமும் வடக்குவாசல் வாழ்வியலோடு ஒன்றானது.
சரவணனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது குறித்து பார்ட்டி வைத்தான். நான் பீர் வாங்கிக்கொண்டேன். எல்லாரும் குடிக்க, திடீரென “CID சங்கர்” எனச் சொல்லிச் சிரித்தான் நரேந்திரன். அவன் சிரித்த சில நொடிகளில் மற்றவர்களும் அவன் போலவே சிரிக்க, “டேய், சொல்லிட்டு சிரிங்கடா லூசு பயலுவோளா” எனத் திட்டினேன்.
“மாப்ள, அத ஏன் கேக்குற, நம்ம சாணி கணேசன் இருக்காருல்ல”
அந்தப் பகுதி சாராய வியாபாரி, கட்ட பஞ்சாயத்துகாரர் அவர். “ஆமா. அவருக்கு என்ன?”
“இல்ல மாப்ள, அவருகிட்ட யாரோ நம்ம கொட்டாச்சி மாமா CID ஆளு, வேஷம் போட்டு அவர உளவு பாக்கறதா சொல்லி இருக்காங்க”
“அடக்கொடுமையே”
“முழுசா கேளு, அவரும் அத நம்பி ஆள் வச்சு தூக்கிட்டு போய் முக்கத்துல நிறுத்தி, எல்லார் முன்னாடியும் நீ CID-யா, எதுக்கு இப்படி சுத்துறன்னு கேட்டு அடிச்சு இருக்காங்க”
“அட பாவத்த”
“மாமா வழக்கம்போலப் பைக்குள்ள இருந்து கொட்டாச்சி எடுக்கவும், யாரோ ‘அண்ணே வெடிகுண்டு போடுறான்’னு சத்தம் போட, சாணி கணேசன் ஒரு நிமிசம் ஆடிப்போய் பத்தடி ஓடினாரு பாரு, வடக்கு வாசல் சனமே சிரிக்குது” என்று மீண்டும் சிரித்தான்.
எனக்கும் சிரிப்பு வந்தது. “பைத்தியத்த போய் CID-ன்னு நெனைச்சு இருக்கானுங்க பாரேன்”
வாட்ஸப்பில் ஏதோ செய்தி வர, திறந்து பார்த்தேன். கொட்டாச்சி மாமாவின் பழைய புகைப்படமும், அவர் உண்மைப் பெயரும் போட்டு, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வந்திருந்தது.
அதற்கு மேலே, காலை இந்த நாளை நினைவுகளால் நிரப்பிய, குப்பை தொட்டி அருகே கொட்டாச்சி மாமா இறந்து கிடந்த புகைப்படம் இருந்தது. சரவணன் அழைத்தான்.
“மாப்ள பெரிய பிரச்சனை ஆகிட்டு. இப்போதான் எல்லாம் முடிஞ்சுது. மன்னார்குடிகாரனுக இங்கயே அடக்கம் பண்ணச் சொல்லிட்டானுவோ, நாமதான் பாத்து செய்றோம். உன்னால முடிஞ்சத அனுப்பு” என்றவன், “மாப்ள, அவரு போட்டோ தேடினப்போ, உன் கூட இருக்க மாதிரி ஒரு போட்டோ கிடைச்சது பாரேன்” என்று வைத்துவிட்டான்.
பார்த்தேன். அந்தத் திருமண நாளின் புகைப்படத்தில் மாமாவுக்கும், காமாட்சி அக்காவுக்கும், நடுவில் நான் நின்றேன். இத்தனை நாளாய் மறந்து போய் இருந்த மாமாவின் பழைய முகம் கண்டதும் அழுகை வந்தது. அழத் தொடங்கிய அந்த நொடியில், என் மூச்சை நிரப்பியது மாலை, சந்தனம், பட்டுச்சட்டை, ஜவ்வாது எல்லாம் கலந்து அடித்த அந்த வாசனை.



