
“அஸ்ஸலாமு அலைக்கும்!” நீட்டி முழங்கினான் முகமது இஸ்மாயீல். அவனது முகமனில் ஒரு நாடகத்தன்மை ஒளிந்திருந்தது.
முகமது இஸ்மாயீல் வயது 56. எக்ஸ்ட்ரா லார்ஜ் உருவம். நடிகர் வடிவேலு போல உடல் மொழி. தூங்கும் போதும் கழற்றி வைக்காத அழுக்குத் துணி தொப்பி. சவரம் தவறவிட்டதால் கன்னங்களில் வெள்ளை நிற ரோமப் புள்ளிகள். நொடிக்கு நூறு வார்த்தைகள் பேசும் வாய். சட்டைப் பையில் இரட்டை சிம்கள் கொண்ட திறன்பேசி. பேண்ட் பாக்கெட்டில் ஒரு நோக்கியா பட்டன் போன். இடது கக்கத்தில் ஒரு தோல் பை. சட்டைப் பையில் நான்கு வர்ணங்களில் பேனாக்கள். ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் எதிர்மறை பிரபலம் பெற்றவர் முகமது இஸ்மாயீல்.
“வஅலைக்கும் ஸலாம்… வாய்யா இஸ்மாயீல்!” என்றார் அப்துல் வதூத்.
“உங்களை பாக்றது கடவுளை பாக்ற மாதிரி இருக்கு வதூத் பாய்!”
“ரெண்டு நாளைக்கு முன்னாடிதானே பாத்த?”
“ரெண்டு நாள்ன்றது 48 மணி நேரம். நாற்பத்தியெட்டு மணி நேரத்ல உலகத்தில் என்னென்னவோ நடந்திருதே!”
“சரி விடு, என்ன விஷயமா வந்த?”
“விஜயகுமார் அம்மா பட்டம்மா பேர்ல இருக்ற இடத்தை செண்ட்டுக்கு ரெண்டு லட்சம்னு பேசி பவர் ஆப் அட்டர்னி நீங்க வாங்கப் போறதா சொல்ராங்க… நிஜமா?”
“ஆமய்யா… பட்டம்மாகிட்ட நாலு ஏக்கர் தரிசு நிலம் கிடக்குது. 400 செண்ட் இடம். ரெண்டு ரெண்டு செண்ட்டா பிரிச்சு 200 மனைகளாய் விக்கலாம். டிடிசிபி அப்ரூவல் வாங்க கொஞ்சம் செலவாகும். விளம்பர செலவு தனி. நானூறு செண்ட்டுக்கு எட்டு கோடி கொடுத்திட்டு அடுத்த ஐந்து வருஷத்ல 64 கோடிக்கு வித்து பெருசா லாபம் பாத்திரலாம்னு இருக்கேன். பட்டம்மா அசஞ்சு கொடுக்க மாட்டேங்குது!”
“ஏன்? என்ன சொல்லுது?”
“ரியல் எஸ்டேட் ரஹமத்துல்லா குறுக்குசால் ஓட்டுறான். அவன் லோக்கல் அமைச்சர் சிபாரிசுல தனியா பேரம் பேசிக் கொண்டிருக்கிறான்!”
“ரஹ்மத்துல்லா ஒரு வெங்கம்பய… வீணாப்போனவன்… அவனெல்லாம் ஒரு ஆளா பாய்? விடியாமூஞ்சி பய. தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்!”
“அவனை அன்டர்எஸ்டிமேட் பண்ணாதே… நான் ஓல்டு எஸ்எஸ்எல்சி அவன் எம்பிஏ படிச்சவன்!”
“படிச்சு கிழிச்சான் உங்க அனுபவத்திற்கு முன்னாடி அவன் ஒரு கால் தூசு…”’
“தூசு என் கண்ணில் பட்டு உறுத்துதே!”
“தூசியை ஊதி எடுக்கும் வித்தை எனக்குத் தெரியும்!”
“அப்படியா?’
“விஜயகுமார் எனக்கு வேண்டப்பட்ட ஆளுதான்… ரஹமத்துல்லாவை ஆட்டத்திலிருந்து நொடில கலைச்சு விட்ருவேன்!”
“என்ன செய்வ?”
“தொழில் ரகசியத்தை எல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியுமா? ரஹ்மத்துல்லாவை கலைச்சு விட்டா எனக்கு என்ன தருவீங்க?”
“என்ன வேணும்?”
“இந்த டீலை சக்ஸஸ்புல்லா முடிச்சு குடுத்திட்டா எனக்கு ஒரு கோடி ரூபா தருவீங்களா?”
“ரொம்ப அதிகம்!”
“சரி உங்களுக்கு வேணாம் எனக்கும் வேணாம், அம்பது லட்சம் குடுத்திடுங்க. செண்ட்டுக்கு பைனல் ரேட் இரண்டரை லட்சம் கொடுக்க தயாரா இருங்க!”
“ஓகே!”
“பட்டம்மா பேர்ல இருக்ற மூலபத்திரம் ஜெராக்ஸ் குடுங்க. வில்லங்கம் நான் போட்டு பாத்துக்கிரேன்…”
“எத்னி நாள்ல முடிச்சுக் குடுப்ப?”
“ரெண்டே வாரத்ல…”
“முன்பணம் எதாவது தேவையா?”
“ஒரு லட்சம் கொடுங்க…”
கொடுத்தார் அப்துல் வதூத்.
“நான் கிளம்புறேன்!” அலுவகத்திலிருந்து வெளியேறினார் முகமது இஸ்மாயீல்.
*****
“அஸ்ஸலாமு அலைக்கும்!” நீட்டி முழங்கினான் முகமது இஸ்மாயீல். அவனது முகமனில் ஒரு நாடகத் தன்மை ஒளிந்து இருந்தது.
“வஅலைக்கும் ஸலாம்… வாய்யா இஸ்மாயீல்!” வரவேற்றார் ரஹமத்துல்லா.
“உங்கள பாக்றது கடவுளை பாக்றமாதிரி இருக்கு பாய்!”
“கடவுளை யாராலும் பார்க்க முடியாது. என்ன பேசுறாய்?”
“ஒரு உதாரணத்துக்கு சொன்னேன். ஹிஹி!”
“சரி விடு, என்ன விஷயமா வந்த?”
“விஜயகுமாரின் அம்மா பட்டம்மா பேர்ல இருக்ற இடத்தை செண்ட்டுக்கு மூணு லட்சம்னு பேசி நீங்க பவர் ஆப் அட்னி வாங்கப் போறதா சொல்றாங்க… நிஜமா?”
“ஆமய்யா… பட்டம்மாகிட்ட நாலு ஏக்கர் நிலம் கிடக்குது. நாலு நாலு செண்ட்டா நூறு மனை பிரிச்சு விக்க திட்டம். டிடிசிபி அப்ரூவல் டோட்டல் பெசிலிட்டீஸோட ஒரு கேட்டட் கம்யூனிட்டி பண்ண நினைக்கிறேன்… சென்ட்டுக்கு 3 லட்சம் கூட இல்லை நாலு லட்சமாக் கூட கொடுத்து நிலத்தை வாங்கிடனும். பட்டம்மா அசஞ்சு கொடுக்க மாட்டேங்குது!”
“ஏன்? என்ன சொல்லுது?”
“ரியல் எஸ்டேட் அப்துல் வதூத் குறுக்கு சால் ஓட்ரான்… தேசியக்கட்சி இன்ப்ரூயன்ஸ் அவனுக்கு இருக்குன்னு பேசிக்கிராங்க”
“யாரு அப்துல் வதூத்தா… அவன் ஒரு குப்பைத் தொட்டி… கிழட்டு குருட்டு நரி… பழைய ஓட்டை ஓரணாக்காசு… சனியன் சகடை… வெறும் வாய்ல முழம் போடுறவன்… அவன் நகர் ஏதாவது பிரிச்சு வித்து உருப்புட்ருக்கா? பல் இல்லாதவன் பக்கோடா தின்ன ஆசைப்படுரான்…”
“வேகத்தடையா குறுக்கே வந்து நிக்ரானே?”
“வேகத்தடையை டெமாலிஷ் பண்ணிரலாம்… நான் அதில் கெட்டிக்காரன்!”
“என்ன கெட்டிக்காரத்தனம் பண்ணி இந்த ரேஸ்ல அவனை ஓட விடாம தடுப்ப?”
“தொழில் ரகசியத்தை எல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியுமா? அப்துல் வதூத்தை கலைச்சு விட்டா எனக்கு என்ன தருவீங்க?”
“என்ன வேணும்?”
“இந்த டீலை சக்ஸஸ்புல்லா முடிச்சு கொடுத்திட்டா எனக்கு ரெண்டு கோடி ரூபா தருவீங்களா?”
“ரொம்ப அதிகம்!”
“உங்களுக்கு கிடைக்கப் போற ராட்சச லாபத்ல தம்மாத்தூண்டு கேக்ரேன்… தரக் சுடாதா? நானும் செட்டில் ஆகக்கூடாதா?”
“சரி, ஒரு கோடி வாங்கிக்க…”
“எனக்கு பணமா வேண்டாம். மனைகளை பிரிச்சபிறகு ஒரு கோடி மதிப்புக்கு மனைகள் கொடுத்திருங்க!”
“ஓகே!”
“பட்டம்மாவோட மூலபத்திரம் ஜெராக்ஸ் குடுங்க. வில்லங்கம் நான் போட்டு பாத்துக்கிரேன்…”
“எத்னி நாள்ல முடிச்சுக்குடுப்ப?”
“ரெண்டே வாரத்ல…”
“அட்வான்ஸ்?”
“இரண்டு லட்சம் கொடுங்க…” கொடுத்தார் ரஹ்மத்துல்லா.
“நான் கிளம்புறேன்!” அலுவகத்திலிருந்து வெளியேறினார் முகமது இஸ்மாயீல்.
*****
யாஸ்மின் டிடக்டிவ் ஏஜென்ஸி.
யாஸ்மினுக்கு எதிரே அப்துல் வதூத்தும் ரஹ்மத்துல்லாவும் அமர்ந்திருந்தனர்.
“உங்க ரெண்டு பேரையும் நான்தான் வரச் சொன்னேன்!”
“சொல்லுங்கம்மா…”
“என்னை அமர்த்தியது ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் இலியாஸ்”
“என்ன அசைன்மென்ட் உங்களுக்கு கொடுக்கப்பட்டது?”
“இடைத்தாகர் முகமது இஸ்மாயீலின் டபுள்கேமை வெட்ட வெளிச்சமாக்க உங்கள் மகன் கூறியிருந்தார். ஸ்பை கேமிரா வைத்து இஸ்மாயீல் உங்களின் இருவரிடமும் தனித்தனியாகப் பேசியதை விடியோ பதிவு செய்திருக்கிறேன்!”
போட்டுக் காட்டினாள்.
“என்னை அசிங்கஅசிங்கமா திட்டிருக்கான்!”
“என்னையும்தான்!”
“முகமது இஸ்மாயீல் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வேலை பார்க்கிறான். உங்கள் இருவரையும் முட்டி மோத விட்டுவிட்டு நாலு ஏக்கர் நிலத்தை கார்ப்பரேட்டுக்கு முடித்துக் கொடுக்கப் போகிறான். நான் ஒரு யோசனை கூறுகிறேன். நீங்கள் இருவரும் போட்டி போடுவதற்கு பதில் பார்ட்டனராய் இந்த நாலு ஏக்கர் நிலத்தை முன்னபின்ன விலைக்கு வாங்கி பிளாட் போட்டு வித்ருங்க… முகமது இஸ்மாயீலை கூப்பிட்டு கொடுத்த முன்பணத்தை திருப்பி வாங்குங்க!”
“இஸ்மாயீல்! கொஞ்சம் உள்வாயைத் திற!” அப்துல் வதூத்தும் ரஹ்மத்துல்லாவும் கடுமையான குரலில் உத்தரவிட்டனர். ‘எவனுக்கு உலகில் இரு முகங்கள் இருக்கின்றனவோ அவனுக்கு மறுமை நாளில் நெருப்பிலான இரு நாவுகள் இருக்கும்’- என்கிற ஹதீஸ் அசரீரியாக ஒலித்தது.
முகமது இஸ்மாயீலின் திருவாய்க்குள் எரிமலைக் குழம்பால் செய்த இரு நாக்குகள் நெருப்பு நடனமாடின.



