
ரித்துவின் கவிதையை வாசித்துக் காட்டினான் ஹேம். கொன்றை மரத்தின் மஞ்சள் சரடுகளுக்கு கீழே நின்றுகொண்டு பேனா வரிகளை உணர்வது அவனுக்குப் பிடித்திருந்தது.
பதினேழு வயதுக்கேயுரிய கமறும் மகரக்கட்டில் காற்றை உடைத்தான் கவிதையின் வரிகளை உடைத்தான். அதன் அர்த்தத்தை உடைத்தான்.
“போதும் போதும்….நிறுத்து .. தப்பு தப்பா வாசிக்கறே”…என்றாள் ரித்து.
வயசுக்காரி.கொஞ்சம் வளர்ந்த கன்றுக்குட்டி. மூக்கு சுருங்கச் சிரித்தாள்.
கழுத்து வெள்ளிச் சங்கிலியை விரல்களில் முறுக்கி எடுத்து முன்பற்களிடை வைத்துக் கடித்துக்கொண்டே நிலைக்கண்ணாடி முன்
சிரித்துப் பார்த்து அழகாயிருந்ததால் அதையே அடிக்கடி செய்ததில்
அந்த சிரிப்பு அவளது பழக்கமாகி விட்டிருந்தது.
லன்ச் பாக்ஸை திறந்துக்காட்டி எடுத்துக்கொள்ளச் சொல்லி கண்களால் சைகையித்தாள். உள்ளே அம்மாவின் கைவண்ணத்துப் சீம்பால் கட்டி மசமசத்தது.
இரு விரல்களால் எடுத்து வாயிலிட்டு சப்புக்கொட்டினான்.
“என்ன விசேஷம்”?…. என்றான்.
“க்கும்…மாடு ஈனிச்சு””….
“எனக்கு கஜ்ஜுகத்லிதான் புடிக்கும். அழுத்துற இடத்துல மெத்துன்னு உள்வாங்குற பதம்,”….
முழித்தாள்.
“அப்படியா” என்பது போல பார்த்தாள்.
“என்ன புரியலியா?”… என்றான்.
அவள் உதடு பிதுக்கி விழித்தாள்.
“உன் கன்னத்த சொன்னேன்”…. என்னத்த கவிஞியோ நீ….!” என்று சிரித்தான்.
அவள் பொய் கோபத்தில் செல்லமாய் அவன் குமட்டில் குத்தி விட்டு,
“நாளைக்குப் பாக்கலாம்” என்றபடி சைக்கிளை நகர்த்தினாள்.
பள்ளிக்கூடம் முடிகிற நேரத்தையும் பறவைகள் அம்பு வரிசையாய்
அணி அணியாய் கூடு திரும்புகிற நேரத்தையும் பின்னி சடையாக்கி
குலுக்கி மினுக்கிக்கொண்டிருந்தது சாயங்காலம்.
முன்னிரு ஹேண்டில் குடுமிகளைப் பிடித்துக்கொண்டு ஏதோ நினைப்பில் சிரித்தும் சிரிக்காத வாயை குவித்துக்கொண்டு ரித்து சைக்கிள் ஓட்டும் பாங்கு வித்யாசமாயிருக்கும்.
அயற்சியாய் நகர்ந்து கொண்டிருந்த ரித்துவின் சமீப நாட்களுக்குள் கிளர்ச்சியை விரவ விடுகிறான் ஹேம்.
………
நேற்று தட்டிய எரு மட்டையில் ரித்துவின் கை விரல்கள் ஐந்து ஐந்தாய் பிசிறில்லாது பதிந்திருந்தது.
பள்ளி விடுமுறை நாட்களில் கேட்பாரற்றுக் கிடக்கிற குட்டிச் சுவர்களிலெல்லாம் எரு மட்டை தட்டுகிற வேலையையும், சாயந்திரங்களில் வீடு வீடாக பாலுற்றுகிற வேலையையும் ரித்துவுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறாள் அவளது அம்மா ஒடுக்கி.
எப்படியாவது கஷ்டபட்டு மகளை பெரிய பள்ளியில் நன்றாக படிக்க வைத்துவிட்டால் போதும்… புருஷனுக்குப் பிறகு விசனம் அவளை வாட்ட ஆரம்பித்திருந்தது.
பென்சில் கோடு போல குச்சியாய் உருவம். அதனாலே அந்த பெயர் அவளுடன் ஒட்டிக்கொண்டது. ரித்து பதினோராம் வகுப்பிற்குப் பெயரும் போது அதே பள்ளியில் அதே வகுப்பில் புதிதாய் சேர்ந்தவன் ஹேம். அதுமட்டுமில்லாமல் அவளது தெருவிலேயே குடி வந்திருக்கிறார்கள். அந்த வயதுக்கேயான ஸ்டைலோடு முன் நெற்றி முடியை ஒதுக்கிக்கொண்டு ஆன்ட்ராய்டில் அவன் எதையோ மும்முரமாய் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க அலாதியாய் இருக்கும் அவளுக்கு. அவன் வீட்டிற்கும் சென்று பாலூற்றுகிறதை நினைக்கிறபோது அடிவயிற்றில் ஜிவ்வென்று எதுவோ செய்தது.
பள்ளியில் சிரிப்புப் பகிர்வுகளால் நெருங்கினார்கள். சில நாட்களுக்குள் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு யாருக்கும் தெரிந்துவிடாதபடி விரல்களால் ஜாடை பேசுமளவுக்கு அவர்கள் பழக்கம் வளர்ந்தது.
பதின்ம ஹார்மோன்களின் விளையாடலால் தன் உலகில் அம்மாவை நெருக்கியடித்து உட்கார்த்தி விட்டு ஹேமை தாரளமாய் வசதியாய் உட்காரவைத்தாள்.
ரித்து போனில் அவனுடன் பேசிக்கொண்டே அம்மாவை நோட்டம் விட்டாள். அவள் கொல்லைப் புறத்தில் பதியனிட்டிருந்த ரோஜா செடிகளுக்கு நோகாமல் கத்தரித்துக் கொண்டிருந்தாள்.
“ம்மா” என்றதில் நிமிர்ந்தாள்.
“என்னோட போன் ஹேங் ஆகுது. டச் ஸ்கீரின் போயிடிச்சு. புது போன்
வேணுமுன்னு எத்தன நாளா கேக்கறேன். ஏதாவது கண்டுக்கறியா?.”
அவள் விரலில் முள்ளொன்று சுருக்கென ரத்தப் பொட்டிட்டது. இது போன்ற காயங்களும், இது போலலல்லாத காயங்களும், ஒடுக்கியை நிறையவே பதம் பார்த்திருக்கின்றன.
“நிலம தெரியாதா… ஒரு வாரம் பொறுத்துக்கயேன்டாம்மா”
“போம்மா…. போன வருஷம் ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிச்சப்ப கேட்டேன். அப்பயும் இதத்தான் சொன்ன. இந்த வருஷம் பாதி பாடம் முடிஞ்சிருச்சு”.
வருத்தமான முகத்தோடு சொன்னதும் அம்மாவுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. பால் தூக்கினைக் கொண்டு வந்து அவள் கையில் திணித்தாள்.
“கொஞ்சம் இரு. உங்கூட படிக்குதே அந்தப் பையனோட அம்மா ஏங்கிட்ட ரோஜா செடிய பதியம் போட்டு குடுக்கச் சொல்லியிருந்துச்சி. நல்லா முளைச்சு வேர்பிடிச்சிருக்கு. புடுங்கித் தாரேன். அவங்க வீட்டுக்குப் பாலூத்த போறப்ப செடியையும் கொண்டுபோய் அந்தம்மாக்கிட்ட குடுத்துடு”
வழக்கம்போல சைக்கிளில் தூக்கினை மாட்டிக் கொண்டு ரித்து கிளம்பினாள்.
ஹேம் வீட்டிற்கு படியேறினபோதே அவனுடைய அம்மாவின் செருப்பைக் காணவில்லை. மனசுக்குள் சில்லென்று இருந்தது. அழைப்பு பொத்தானை அழுத்தும் முன்னமே பாத்திரத்தோடு ஹேம் முன்னே வந்து நின்றான்.
கள்ளமாய் கீழ்ப்பார்வை பார்த்துக் கொண்டே அவன் சிரிப்பதை கவனித்தாள்.
“யாரும் இல்லியா?”
“இல்ல, அம்மா பிரண்டு வீட்டுக்கு போயிருக்காங்க” என்றபடி அவன் அவளின் கையை வெடுக்கென பிடித்துக் கொண்டான்.
‘எப்படி இவ்ளோ தைரியம்?’ என்று நினைத்து வலுவில் கையை உதறிக் கொண்டு ஓட எத்தனித்தாள்.
அவன் கைகளை இன்னும் இருக்கினான்.
அவன் தலைவாசல் கதவுக்குப் பின்னால் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான்.
சட்டென்று விலகி கதவோரம் வந்து வெளியே யாரும் வந்துவிடுவார்களோ என்று கவனித்தான். யாருமில்லை.
தனிமையின் தைரியம் இருவரையும் உண்டி வில்லில் பொருத்தி விசையோடு இழுத்தடித்தது. அந்தரத்தில் பறந்தனர்.
ரித்துவை மெல்ல நகர்த்தி அடுக்களைக் கதவுக்குப் பின்னால் நிறுத்தினான் ஹேம்.
“உங்கம்மா வந்திடப்போறாங்க… நான் கிளம்பறேன்”… என்றாளே தவிர
ஒரு எட்டும் எடுத்து வைக்க முடியாதபடி கால்கள் வலுவிழந்து தடுமாறின.
“அம்மா வர இன்னும் நேரமிருக்கு,.” காதோரம் கிசுகிசுத்தான். இன்னும் வேகமாய் அவளை அணைத்தான். அந்த அணைப்பு வேண்டும் போலவும், ஐயோ பயமாயிருக்கு வேண்டாம் என சொல்ல வேண்டும் போலவும் இருந்தது அவளுக்கு.
காதலிக்கப்படுபவள்(ன்) யாரையும் விட வசீகரமானவர்களாகிவிடுகிறார்கள். “ஈர்ப்பு “உலகின் மாபெரும் சக்தி.
ரித்துவால் உதறிவிட்டு ஓட முடியவில்லை.
“ஐயே…போதும் விடு… நா போகணும்”. இதை சொல்லி முடிப்பதற்குள் ஆறு முறை திக்கித் திணறினாள்.
முதன்முறை அதிர்வுகளோடு தொடங்கிய மின்னல் உடலின் எல்லா நரம்புகளுக்குள்ளும் பாய்வது அப்பட்டமாய் தெரிந்தது. அரைக்கண்களை மலர்த்த முயற்சித்து.ம்ஹூம் முடியவில்லை. அவனும் அதே ரிதத்தில் அதிர்ந்து கொண்டிருப்பதை உணரமுடிகிறது.
அவன் நிகழ்த்தியதை இன்னொரு முறை அவள் முயற்சித்தப்போது அது வேறு மாதிரியான உணர்வாகத் தெரிந்தது.
அதே நேரம் வெளியில் பால் தூக்கை கவனித்தபடி உள்ளே நுழைந்த
ஹேமின் தாய்மாமன் அவர்களின் அசந்தர்ப்ப நிலையைக் கண்டதும்
பூனைப் பாதம் வைத்து மெல்ல நடந்து இன்னொரு அறையின் கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அவர்களை கண்ணிமைக்காமல் பார்த்துச் சிலிர்த்தான். எச்சில் கூட்டி விழுங்கினான். இலவசமாய் தெரிந்த அந்தரங்க காட்சி அவனை உசுப்பியது. ஒருக்கட்டத்தில் அவனால் அடக்க முடியாத வீரியத்தோடு
சடாரென அறையிலிருந்து வெளிப்பட்டவன் ஹேமை இழுத்துச் சென்று அவன் அறையில் தள்ளி தாழிட்டான்.
“மாமா… மாமா விட்டுடுங்க” என்று மெதுவான குரலில் உள்ளிருந்து அவனது கெஞ்சல் அழுகையோடு கேட்டது.
என்ன நடக்கிறது என்று ரித்து அறிவதற்குள் அவளை கீழே தள்ளினான்.
“இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னா என்னைய”… அசிங்கமாய் இளித்தான்.
“ண்ணா விட்டுடுங்கன்னா… ப்ளீஸ்ணா”
“அதெப்படி…. எத்தன நாளா நீ போறப்ப வரப்ப சும்மா பாத்துட்டே இருக்கிறது? இன்னைக்கு வசமா சிக்கிட்ட…விடுவனா அவ்ளோ சீக்கிரம்? ஹி..ஹி..” என்றாவறே, தன் கால் சராயின் ஜிப்பை கீழிறக்கி அவள் முகத்துக்கு நேராகத் திறந்து காட்டினான்.
ஓநாயின் சிரிப்பு ….
ரித்து வாயில் கோரி சேர்ந்த எச்சிலை மொத்தமாய் கொத்தையாய்
அவனது பிறப்புறுப்பின் மீது துப்பினாள்.
“கையை விடுறா பொருக்கி நாயே”… என்று ரித்து திமிரவும் ஹேம்- இன் அம்மா வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது.
அவன் கணநேரத்தில் ஜிப்பை மேலே இழுத்து விட்டுக்கொண்டு திரும்பி அக்காவைப் பார்த்துக் கத்தினான்.
“பால் வாங்கறேன், கீரை வாங்கறேன்னு கண்ட நாய்ங்கள உள்ள விட்டா இப்படி தான் நடக்கும். கைகாரி… உடம்பக் காட்டி உம்புள்ளைய வளைச்சுப்போடப் பாத்தா.. கையும் களவுமா புடிச்சுட்டேன்”… என்றான்.
அம்மாக்காரிக்குப் புரிந்தது.
“தேவ….முண்டை …கொஞ்சம் விட்டா வீட்டுக்குள்ளயே வந்துடுவியா” – ஆவேசம் வந்தவளாக வீடு துடைக்கும் ‘மாப்பை’ கையிலெடுத்து அதன்
குச்சிப் பகுதியை வைத்து ரித்துவை தெருவாசலுக்குத் தள்ளிக் கொண்டுவந்தாள்.
“சேரி நாய்களுக்கு தைரியத்த பாத்தியா…ஏன் உங்காளுங்கல்ல எவனும் கிடைக்கலியா வாட்டசாட்டமா”
பின்னால் ஹேமின் தாய்மாமன் குரல்கேட்டது.
ரித்து திரும்பி அவனை முறைத்தாள்
“உன்னையத் தொட்டு அடிச்சா எங்களுக்குத்தான் பாவம் சேரும்.. இனி இந்தப் பக்கம்வந்துடாத… மரியாதை கெட்டுடும்”…. ரித்துவுக்கு மட்டுமே கேட்கிற மாதிரிஅடிக்குரலில் சொன்னாள்.
“அக்கம்பக்கம் தெரிஞ்சா எங்களுக்குத்தான் அசிங்கம்”. என்றாள் அம்மாக்காரி.
ஆனாலும் எப்படியோ விஷயம் படக்கென்று பற்றிக்கொண்டது. தெருவில் வேடிக்கைப் பார்க்க கூட்டம் கூடியது.
அதிர்ச்சியும் அவமானமும் சேர்ந்து ரித்துவை அலங்கோலமாக்கியிருந்தது. குறுகி நின்றாள். அழுகை தேம்பலாய் வெளிப்பட்டது. பால் தூக்கை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள்.
விஷயம் கேட்டு ஒடுக்கி வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தாள். ரித்துவின் கலைந்த தலைமயிரைப் பார்த்ததும் அவளுக்கு ‘ஐயோ!’ என்றிருந்தது.
“என்னாச்சிமா…. சொல்லித் தொலையேன்.. என்ன பண்ணினே” – உலுக்கினாள் மகளை.
“ஒடுக்கி, பால் பாக்கிப் பணம் இந்தா பொறுக்கிட்டுப்போ… இந்தா, நீயும் உன் ரோசாச் செடியும்” என்றபடி தெருவில் விசிறியடித்தாள்.
“பொண்ண கூட்டிக் குடுத்து பொழைக்கறத்துக்கு நாண்டுகிட்டு சாகலாம். நல்ல ஜாதிக் காளையா கேக்குதா…. இனி இந்தப் பக்கம் உம் பொண்ணப் பாத்தேன் கொலை விழும் சொல்லிட்டேன்…த்தூ”
மகளை சோர்ந்துபோன கண்களால் ஏறிட்டாள் அம்மா.
கொஞ்ச நேரம் அவளையே பார்த்தபடி நின்ற ஒடுக்கி, “வா…வீட்டுக்குப் போலாம்” என்றபடி தன் காய்ப்பேறிய பிரண்டை விரல்களால் ரித்துவின் கைகளை ஆதுரமாய் பற்றினாள்.
“ஒடுக்கி, பொண்ணை பால் ஊத்த அனுப்புனியா இல்ல பால் குடுக்க அனுப்புனியா”- கூட்டத்திலிருந்து ஒரு குரல் விஷமமாய் வீரியது. விசில் சப்தமும் சிரிப்பும் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டது.
ஒடுக்கி தலையை குனிந்து கொண்டாள்
ரித்து திரும்பிப் பார்த்தாள்… வீட்டுக்கு வெளியே ஹேமின் மாமன்காரன் நின்றிருந்தான்.
“நல்ல வேளை.. அந்தக்குட்டி வாயைத் தொறக்கல…. இங்க நடந்தது யாருக்கும் தெரியாது” – அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
அவன் கால்சராயுள் சிறுத்துப்போன பிறப்புறுப்பிலிருந்து ரித்துவின் நுரைத்த எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.



