இணைய இதழ் 122சிறுகதைகள்

விடுப்பு – மழைக்குருவி

சிறுகதை | வாசகசாலை

குமரனுக்கு படபடப்பாகவே இருந்தது. இன்றைக்காவது எப்படியாவது மேனேஜரிடம் லீவு கேட்க வேண்டும். லீவுக்காக சூப்பர்வைசரிடம் பேசும்போதெல்லாம்,”மேனேஜர் கடும் டென்ஷனில் இருக்கிறார். இப்பொழுது வேண்டாம்”என்று மறுத்து விடுகிறார். ‘ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பணிபுரியும் இத்தனை பிரம்மாண்ட தொழிற்சாலையில் என் ஒருவனுக்கு விடுப்பு கிடைப்பது என்ன அத்தனை கடினமா?’ என்று எப்போதும் நொந்து கொண்டிருக்கிறான் குமரன். அவன் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தன. அவன் ஒரு தமிழ் தெரிந்த தற்காலிக ஊழியன்.

முதல் மாதத்திலேயே ஒரு நாள் இப்படித்தான் குமரன், மேனேஜரிடம் விடுப்பு கேட்டபோது, மேனேஜர் அரங்கநாதன் சூப்பர்வைசர் கனியை தன் அறைக்கு வரவழைத்து,”யாரு இவன்? நேரடியா என்கிட்டயே வந்து லீவு கேட்கறான். நீ என்ன புடுங்கிட்டு இருக்க?”என்று கேட்டதும் அருகிலிருந்த குமரன் திடுக்கிட்டு அதிர்ந்து போனான். சூப்பர்வைசர் கனியும் தான் ஒன்றும் புடுங்கவில்லை என்பது போல் அமைதியாக நின்று கொண்டிருந்தான். மேனேஜர் திரும்பி குமரனை கேவலமாக ஒரு பார்வை பார்த்ததும் குமரனுக்கு ஏசியிலும் வியர்த்துவிட்டது.

“சாரி சார், இதுக்கப்புறம் இது மாதிரி நடக்காம.”

“ச்சீ, போ வெளில.”

அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் குமரனை ஓங்கி அறையலாம் போலிருந்தது கனிக்கு. இதுவரையிலும் யாரும் கனியைத் தாண்டி எதற்காகவும் அரங்கநாதனிடம் சென்றதில்லை. ஆனாலும் என்னவோ குமரனை ஒன்றும் சொல்லாமல்ஒரு முறை முறைத்துவிட்டு எதிர்த்திசையில் போய்விட்டான். இதெல்லாம் நடந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு.

***

இப்போது எப்படி லீவு கேட்பது? அன்றைய சம்பவத்திலிருந்து சூப்பர்வைசர் கனி வேறு குமரனிடம் சரியாகப் பேசுவதில்லை. ‘சீனியர் ஒர்க்கர் அனந்தராமனிடம் சென்று உதவி கேட்டால் என்ன?’ என்று திடீரென்று குமரனுக்குத் தோன்றியது. மேனேஜர் அரங்கநாதனும் ஒர்க்கர் அனந்தராமனும் பால்ய காலத்து சிநேகிதர்கள் என்று யூனிட் முழுவதற்கும் தெரியும். ‘ஆம்; அதுதான் சரி!’ என்று குமரனுக்குத் தோன்ற நேராக கேண்டீன் நோக்கி நடக்க ஆரம்பித்தான். கேண்டீனில் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேவில் அரிசி உப்புமா என்று எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன. குமரனுக்கு இதற்காகவே லீவு எடுக்க வேண்டும் என்று தோன்றியது.

கேண்டீனில் ரொம்ப நாளைக்குப் பிறகு அப்பாஸைப் பார்த்தான் குமரன்.

“அப்பாஸ் அண்ணே, யூனிட் 3க்கு மாறினதுக்கு அப்புறம் ஆளையே பார்க்க முடியல?”என்றான். அப்பாஸ் கவலை தோய்ந்த முகத்துடனே சொன்னார்,”போடாங் ரெண்டு மாசம் கழிச்சு நானே இப்பதான் வேலைக்கு வரேன்”என்றார்.

“என்ன ஆச்சுண்ணே?”

“சித்தப்பா சீரியஸா இருக்காருன்னு அரங்கநாதன்கிட்ட ரெண்டு நாள் லீவு கேட்டேன். ஏதோ அவன் சொத்துல பாதிய கேட்ட மாரி லபோதிபோனு கத்துறான். அப்படி கெஞ்சினேன். கால்ல விழாத குறை. மன்றாடுனேன். (பெருமூச்சு ஒன்றை விட்டபடி) தரமாட்டேனுட்டான். எங்க வீட்ல எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் என்ன தூக்கி வளர்த்ததே எங்க சித்தப்பாதான். அவர் சீரியஸா இருக்கும்போது கூட போய் பார்க்க முடியலன்னா மனசுக்கு எவ்வளவு வெறுப்பா இருக்கும்னு நீ யோசிச்சு பாரு. ரெண்டு நாள்ல சித்தப்பா காலமாயிட்டாங்க. அப்ப போய் லீவு கேட்டப்போ உண்மையிலேயே உனக்கு உன் சித்தப்பா மேல அன்பு இருந்திருந்தா என் பேச்சை மதிக்காம நீ போயிருப்ப. இதிலிருந்து எனக்கு ரெண்டு விஷயம் தெரியுது. ஒண்ணு – சித்தப்பா சீரியஸ்னு நீ சொன்னது பொய். ரெண்டு – அவர் உனக்கு அவ்வளவு முக்கியமான சித்தப்பா இல்ல. லீவுக்காக நீங்க சொல்றது எல்லாமே கற்பனைச் சாவுகள். கட்டாயம் லீவு வேணும்னா வேலையை ரிஸைன் பண்ணிட்டு போங்களேன்டா. ஏன்டா லீவு லீவுன்னு கேட்டு சொந்தகாரங்களயும் சாவடிக்கிறீங்க… என்னயும் சாவடிக்கிறீங்கன்னுட்டான்டா”

அப்பாஸின் கண்கள் பனித்திருந்தன. குமரன் அப்பாஸையே பார்த்துக் கொண்டிருந்தான். பெருமூச்சு ஒன்றை விட்டு அப்பாஸ் மீண்டும் தொடர்ந்தார்.

“போடா பொறம்போக்குன்னு மனசுல நெனச்சுட்டு, முதல்ல சித்தப்பான்னுட்டு ரோட்டுல வண்டில போயிட்டு இருக்கும்போது கூட அரங்கநாதனோட திமிருதான் மண்டக்குள்ள ஓடிட்டே இருந்தது. திடீர்னு ஏதோவொரு வெறில எதிர்ல வந்துகிட்டு இருந்த வேன் மேல வண்டிய விட்டுட்டேன். கால் எலும்பு பிராக்சர் ஆயிடுச்சு மெடிக்கல் லீவ்”

“லூசாண்ணே நீங்க எதுக்கு வேன் மேல போய் மோதுனீங்க?”

“வேன் மேல அரங்கநாதன் டிராவல்ஸ்னு எழுதி இருந்துச்சு.!!”

குமரன் தலையில் அடித்துக் கொண்டான்.

அரிசி உப்புமாவோடு போர் செய்துவிட்டு தேனீர் அருந்திக் கொண்டிருக்கும் பொழுது, மீண்டும் அப்பாஸ் மெதுவாக வந்து குமரனின் அருகில் அமர்ந்தார்.

“வேன்ல மோதுன நொடி செத்துப் போன சித்தப்பாவை பக்கத்துல பார்த்துட்டு வந்தேன்டா”

“ஏன்ணே அரங்கநாதன் இப்படி இருக்காரு?”

“ஒலகம் பூரா அரங்கநாதன்கள் இருக்காங்க. போதை… அதிகார போதை”

“நம்ம கனி சார் மாதிரி ஆட்கள் மேனேஜர் ஆயிட்டாங்கன்னா நமக்கு ஓரளவுக்கு லீவு ஈசியா கிடைச்சிடும் இல்லண்ணே”

பல நாட்களாக சவரம் செய்யப்படாத வெள்ளை தாடியை சொரிந்து கொண்டே அப்பாஸ் உலர்ந்த சிரிப்பொன்றை உதிர்த்தார்.

“அதிகாரத்துக்கு இருக்குற பிரத்யேக குணம் ஒண்ணே ஒண்ணுதான், தனக்கு கீழே இருக்கிறவன துச்சமா கேவலமா மலத்துக்கு சமமா நெனைக்கிறது. அதிகாரத்துக்கு நல்லவன் கெட்டவன் குட்டை ஒசரம் கருப்பன் செவப்பன் அறிவாளி முட்டாள்னு எந்த அடையாளமும் கெடயாது. அது ஒரு நாற்காலி. யார் போய் உட்கார்ந்தாலும் அதோட மட்டரகமான இந்த தனித்துவம் மாறவே மாறாது.”

“அண்ணே, எனக்கு இப்ப ரெண்டு நாள் லீவு வேணும்ண்ணே”

“ஒனக்கு சித்தப்பா இருக்காரா?”

“அட ஏண்ணே… தங்கச்சி பெரிய மனுஷியாயிடுச்சுண்ணே!”

“அத அந்த பெரிய மனுஷன் ஒத்துக்கிடமாட்டானேடா? நீ எதுக்கும் அந்த நாமக்கட்டி அனந்தராமனப் போய் பாரு”

***

ஆலைச் சங்கு ஆங்காரமாய் முழங்கியது. பணியின் போது சூப்பர்வைசர் கனியிடம் லீவு பற்றிக் கேட்பதற்காக குமரன் வந்து கொண்டிருந்த போது, வடமாநிலங்களில் இருந்து தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருத்தி அரைகுறை ஆங்கிலத்தில் கனியிடம் லீவு கேட்டுக் கொண்டிருந்தாள். குமரன், அவர்கள் அருகே வந்துவிட்டபோது கனி அவளை அவசர அவசரமாக,”3 டேஸ் ஒன்லி… ஓகே? கோ… கோ”என்று சொல்லி அனுப்பினான். குமரனுக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது.

“சார், மூணு நாள் லீவா? எனக்கு ரெண்டு நாள் போதுங்க” என்றான்.

“ஒனக்கு பீரியட்ஸா?”

“சார்!?”

“அவ அவளோட உடல் உபாதைய சொல்லி லீவு கேக்குறா. அதோட வந்தா வேலையும் செய்ய மாட்டா. மெடிக்கல் சென்டர்ல போய் படுத்துக்குவா. M.C-ல மூணு நாள் M.L கொடுத்துருவாய்ங்க. அப்புறம் எல்லா பெண்களும் பீரியட்ஸ் வந்தா M.C போலாம், மூணு நாளு M.L கெடைக்கும்னு நம்ப ஆரம்பிச்சுருவாளுங்க அது நடக்கக் கூடாது. லீவு மட்டும் எப்பவுமே நம்ம கண்ட்ரோல்லையே இருக்கனும் குமரா”

சூப்பர்வைசர் கனி இப்போது குமரன் கண்களுக்கு வேறு மாதிரித் தெரிந்தான்.

“போன வாரம் ஜாயின் பண்ண வட மாநில பொண்ணுக்கு இருக்கிற சலுகை மூணு மாசமா வேலை பாக்குற எனக்கு இல்லல்ல?”

“அதுகிட்ட இருக்குறது எல்லாம் உங்கிட்ட இருக்கா?”

“சார்!!”

“சுறுசுறுப்ப சொன்னம்பா. இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல… நாளையிலிருந்து சுடிதார் போட்டுட்டு வந்துரு”

“என்ன சார், வெளாடுறீங்க… வர்ற திங்களும் செவ்வாயும் எப்படியாவது மேனேஜர்கிட்ட பேசி நீங்க…”

“எது திங்களும் செவ்வாயுமா? யோவ், ஏற்கனவே ஞாயிற்றுக்கிழம லீவாச்சே? அப்போ உனக்கு மூணு நாள் லீவா?”

“சார், சண்டே ஆல்ரெடி ஹாலிடேதான சார்?”

“நம்ம மேனேஜர் எதையுமே பிரிச்சு பார்க்கமாட்டார். நீ ஒன்னு பண்ணு, தங்கச்சி ஃபங்ஷன்தானே சொந்த பந்தத்தை எல்லாம் சென்னைக்கு கூட்டிட்டு வந்துரு. இங்க ஃபங்ஷனை வச்சுக்க. நைட் ஷிப்ட் வீக்ல ஃபங்க்ஷனை வச்சுட்டேன்னா பகல்ல ஃபங்ஷனை கவனிச்சுக்கிடலாம். நைட்டு டூட்டிக்கு வந்துடலாம், எப்படி?” என்று சொல்லிவிட்டு சூப்பர்வைசர் கனி கெக்கேபிக்கேவென சிரித்தான்.

குமரன் கனியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா அப்படிப் பாக்க?”

“ஒண்ணுமில்ல சார் மேனேஜர்ங்குற பதவியோட ஒளிவட்டம் ஒங்க தலைக்கு பின்னால பிரகாசமா சுத்துது.”

“ஆங்… அந்த ஒளி வட்டத்தோட RPM இன்க்ரீஸ் பண்ணத்தான் ராத்திரி பகலா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்”.

***

சீனியர் ஒர்க்கர் அனந்தராமனை எங்கு தேடியும் காணவில்லை. யூனிட் 1 சூப்பர்வைசரிடம் போய் கேட்டுவிட்டு அவ்விடத்திற்கு வந்தான் குமரன். அந்த அறைக்கு வெளியில் இருந்து கத்தினான்.

“அனந்து சார்… அனந்து சார்”

“யார்ரா அது?”

“நான்தான் சார் குமரன், யூனிட் 7”

டாய்லெட்டிலிருந்து வெளியே வந்த அனந்தராமன் எரிச்சலோடு,”ஏன்டா பிரம்மஹத்தி, கக்கூஸ்ல இருக்கும்போது என்னடா கம்யூனிகேஷன்?”

“உங்க சூப்பர்வைசர்கிட்ட கேட்டேன். T4-ல இருக்கீங்கன்னு சொன்னாரு.”

“T4ன்னா?”

“டாய்லெட் 4”

“இவ்வளவு தூரம் வாட்ச் பண்றானுங்களா!!”

“சார், உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு வந்துருக்கேன்”

“லீவு ரெக்கமென்டேசன் தவிர வேறு எதனாலும் கேளு”

குமரன் நொந்து போனான்.

“குமரா, என் நாலாவது மச்சினிக்கு கொழந்த பொறந்திருக்குன்னு ஒரே ஒரு நாள்தான்டா லீவு கேட்டேன். பரதேசி எம்மேலேயே வள்ளுன்னு விழுந்துட்டான்.”

“அவர் ஒங்க க்ளோஸ் ஃப்ரண்டாச்சே!”

“க்ளோஸ் பிரண்டுங்கதான்டா நம்ம கதைய முதல்ல க்ளோஸ் பண்ணுவாய்ங்க”

“ஒங்களுக்கே லீவு இல்லன்னுட்டாரா ஏன்?”

“ஏன்னா அவன் மச்சினிக்கு பல வருசமா கொழந்தயே பொறக்கலயாம்!”

“என்ன சார் இது, கேடு கெட்ட லாஜிக்கா இருக்கு”

“என் மூணு மச்சினிக்கும் கொழந்த பொறந்தப்போ  அரங்கநாதன்கிட்டதான் ரெண்டு ரெண்டு நாள் லீவ் வாங்கிட்டு போனேன். இது ரொம்ப முக்கியமான மச்சினி. அவ கொழந்தைக்கு என் பேரு வைக்கிற அளவுக்கு முக்கியமான மச்சினின்னா பாத்துக்கோயேன்”

‘இரண்டு நாள் லீவுக்காக என்னென்ன கருமாந்திரக் கதைகளையெல்லாம் கேட்க வேண்டி இருக்கிறது?’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் குமரன்.

“குமரா, யாராவது எறந்துட்டாங்கன்னு சொல்லி எமர்ஜென்சி லீவ் போட்ரு”

“சார், நல்ல காரியத்துக்கு போறேன்”என்று இழுத்தான் குமரன்.

“அப்புறம் உன் இஷ்டம்” – என்று சொல்லிவிட்டு நகர்ந்து போய்விட்டார் அனந்தராமன். குமரனுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. சூப்பர்வைசர் கனியிடமே திரும்பி வந்தான் குமரன்.

“பாரு குமரா… நம்ம மேனேஜர். ஒர்க்கர்னு இல்லை, யாரையுமே நம்ப மாட்டார். போன வருஷம் எங்க அப்பா இறந்துட்டார். சாவு வீட்டுல இருந்து ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல எனக்கு அனுப்புன்னு சொன்னான் அந்த நாயி”

குமரன் திடுக்கிட்டு கனியைப் பார்த்துக் கேட்டான்.

“என்ன சார் பண்ணீங்க?”

கனி தலையை தொங்கப் போட்டுக் கொண்டபடியே சொன்னான் – ”போட்டோ அனுப்புனேன்”

“தப்பா நெனச்சுக்காதீங்க சார். ஒங்கள ஒண்ணே ஒன்னு கேட்கறேன்… இதெல்லாம் ஒரு பொழப்பா சார்?”

“எங்க பொழப்பு இப்படித்தான். சாக்கடையாட்டம். கெளறுனா இன்னும் நாறும். செண்டிமெண்ட் சீன் எமோஷனல் சீன்ல்லாம் காலாவதியாப் போன கட்டிடம் இது. பாரு குமரா… அரங்கநாதன் ரொம்ப பேஜாரான ஆளு. அவனுக்கு அவனே கூட லீவ் குடுக்க மாட்டான். தான் வேலைல இருக்கும்போது வீட்டிலருந்து கூட யாரும் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு பெர்சனல் நம்பரயே ஸ்விட்ச் ஆப் பண்ணி வெக்கிற ஒரு கம்பெனி பைத்தியம்.”

குமரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. விடுப்பு கிடுப்பு என்று சொல்லிக்கொண்டு நீயாக மேனேஜரின் அறைக்குச் சென்றுவிடாதே என்றும் எச்சரித்து விட்டுப் போனான் கனி. HR துறைக்குச் சென்று யாரேனும் உதவ முடியுமா என்று ஒரு அதிகாரியைப் பார்த்துக் கேட்டான். இரண்டு நாள் விடுப்பையெல்லாம் ஒரு பிரச்சனை என்று தூக்கிக்கொண்டு HR-க்கு வந்து விட்டாயா என்று காறித்துப்பாத குறையாக குமரனைத் திட்டி அனுப்பிவிட்டார் அந்த அதிகாரி. பாவம் குமரனால் என்னதான் செய்ய முடியும். ஒரு தொழிலாளி ஒரு நாள் விடுப்பு எடுத்தால், அந்த ஒரே நாளில் அந்த தொழிற்சாலையே அதள பாதாளத்தில் விழுந்துவிடும் என்பது போன்ற கட்டமைப்பு அங்கே இருந்தது. ‘கடைசியாக ஒருமுறை அரங்கநாதனிடமே லீவு கேட்டு விட்டால் என்ன?’ என்று தோன்றியது குமரனுக்கு.

சூப்பர்வைசர் கனியை அழைத்துக் கொண்டே மேனேஜரின் அறைக்குச் சென்றான் குமரன். கணினித் திரையில் மூழ்கி இருந்த அரங்கநாதன் மூக்கு கண்ணாடியை சற்று கீழிறக்கி இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் கணினித்திரையில் மூழ்கிப் போனார். இருவரும் இருபது நிமிடங்களுக்கு மேலாக அங்கேயே அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அரங்கநாதன் தன் மேசையில் இருந்த தண்ணீர் குடுவையைத் திருகி ஒரு மடக்கு நீர் அருந்திவிட்டு கனியைப் பார்த்துக் கேட்டார்.

“20 நிமிஷமா ரெண்டு பேரும் சும்மாவே நிக்கிறீங்க. இது மாதிரி இன்னிக்கு மட்டும் எத்தனை 20 நிமிஷம் சும்மா இருந்திருப்பீங்க? அப்போ இன்னிக்கி, நேத்து, போன வாரம், போன மாசம், எத்தனை எத்தனை 20 நிமிஷம் சும்மா போச்சுன்னு தெரியலையே?”

“சார், இவரு குமரன் டெம்ப்ரரி ஆப்ரேட்டர்தான். ஓன் சிஸ்டர் பெரிய மனுஷியா ஆயிட்டாங்களாம். அவங்க ஊர்ல பங்க்ஷனாம். வர்ற திங்களும் செவ்வாயும் லீவு கேக்குறாப்புல”

“ஒரு பெண் பெரிய மனுஷியாகறது ஒரு இயற்கை நிகழ்வு. அதுக்கு நீ போய் என்னடா செய்யப் போற. பாரின்லல்லாம் இப்படி ஒரு சடங்கே கெடயாது தெரியுமா?”

“எங்கூர்ல எல்லாம் உண்டு சார்” என்றான் குமரன்.

“ஒங்கூரு பாரின் இல்லியா?”

குமரன் படபடப்போடும் பரிதவிப்போடும் கனியைப் பார்த்தான். கனியோ தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சரி, நீ ஊருக்கு போனதிலிருந்து அங்கே உனக்கு என்னென்ன வேலை இருக்கும்னு இந்த A4 சீட்டில் எழுதிக் கொடு. அந்த வேலையோட முக்கியத்துவத்தைப் பொறுத்து நான் ஒனக்கு லீவு குடுக்கறேன்.”

குமரனுக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. பத்து நிமிடங்களுக்கு மேலாக பேப்பரை கையில் வைத்தபடியே சும்மா நின்று கொண்டிருந்தான். அரங்கநாதன் அந்த வெற்றுப்பேப்பரை படக்கென்று பிடுங்கி கசக்கி அவன் முகத்தில் விட்டெரிந்தார்.

“வீட்ல பெரியவங்க இருக்காங்கல்ல அவங்க பாத்துப்பாங்க.”

“சார், நான் அண்ணன் சார்”

“சரிங்க நொண்ணன். ஃபாரின்ல இருந்தா என்ன பண்ணுவீங்க நொண்ணன்?”

“பாரின்ல இருந்தாலும் வந்துருவேன் சார்”

“இங்கிலாந்து போயிருந்தா?”

“வந்துருவேன் சார்”

“இட்டாலி போயிருந்தா?”

“வந்துருவேன் சார்”

“சிக்காகோ போயிருந்தா?”

“வந்துருவேன் சார்”

“செத்துப் போயிருந்தா?”

குமரன் வாயடைத்துப் போனான். கனி திகைத்துப் போனான்.

“போ, செத்துப்போயிட்டேனு நெனச்சுக்கோ”

***

குமரன் காதில் யாரோ வயலினால் இசைக்கும் ஒரு சோக கீதம் ஒலித்தது. அழுகை கழுத்தில் நின்று கொண்டிருந்தது. ஆனாலும் அரங்கநாதன் முன்பு கண்கள் கசியக்கூடாது என்று நினைத்தான். சூப்பர்வைசர் கனியோ போகலாம் என்று தன் கைகளினால் குமரனுக்கு சைகை காண்பித்தான். குமரனோ விடுப்பு இல்லாமல் அவ்விடத்தை விட்டுச் செல்லக்கூடாது என்று நினைத்தான்.

“சார். எனக்கு கண்டிப்பா ரெண்டு நாள் லீவு வேணும். நான் ஒங்களுக்கு என்ன செய்யணும்?”என்றான். கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த அரங்கநாதனுக்கு, குமரனின் ‘கண்டிப்பாக’ என்ற வார்த்தையை கேட்டு மூளைக்குள் நரம்புகள் அதிர்ந்தன. நெற்றிக்கண் இருந்திருந்தால் திறந்து இருப்பார். திரும்பி குமரனைப் பார்த்தார்.

“நேரே HRக்கு போ. உன்னோட செல்வாக்குல ஒரு மேன் பவர் வாங்கிக்கோ. இந்த ரெண்டு நாள்ல நீ இந்த ஃபேக்டரியில் என்னென்ன ஒர்க் பண்ணுவியோ அதையெல்லாம் அந்த மேன் பவருக்கு டிரெயிண் பண்ணி விட்டுட்டு நீ லீவு எடுத்துக்கோ”

குமரன் பேயறைந்தது போலாகிவிட்டான்.

“அது எப்படி சார் முடியும்?”

“உனக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்துட்டேன். மேன் பவர் வாங்கு. ட்ரெயின் பண்ணு. லீவு எடுத்துக்கோ. குடும்பத்தோட குஷாலா இரு. நான் தடுக்கல”

குமரனுக்கு நந்தனார் கதை நினைவுக்கு வந்தது. கண்களில் இருந்து நீர் வடியத் தொடங்கியது.

“சார், ப்ளீஸ்… கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்”என்று நான்கைந்து முறை கேட்டுப் பார்த்தான்.

அரங்நாதனோ கணினித்திரையை விட்டு தலை திருப்புவதாய் இல்லை . இறந்து போன மனதுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான் குமரன்.

அரங்கநாதன் கனியிடம், “மண்டே இந்த ராஸ்கல் வரலைன்னா எனக்கு இன்பார்ம் பண்ணனும்” என்றார்.

***

திங்கட்கிழமை காலை. ஆலைச் சங்கு முழங்கியது. மணி ஏழானதும் வருகைப் பதிவு தொடங்கியது. குமரனை இன்னும் காணவில்லை. கனி, அரங்கநாதனுக்கு தகவல் தெரிவிக்க முனைந்த போது ஒரு மணி நேர பெர்மிஷனில் கூட வந்து விட வாய்ப்புள்ளது. கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று மற்ற தொழிலாளிகள் கூறினர். ஆனால், மணி 8, 9, 10, 11 என்று சென்று கொண்டே இருந்தது. குமரன் வந்த பாடில்லை. ஆப்சென்ட் உறுதி செய்யப்பட்டு மேனேஜருக்கு தகவல் அனுப்பப்பட்டது. குமரன் என்றைக்கு பணிக்கு வந்தாலும் தனது அனுமதி இன்றி பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார் மேனேஜர்.

ஆனால், சரியாக 12 மணிக்கு குமரன் பணிக்கு வந்தான். கனி, குமரனிடம் எதுவும் பேசவில்லை. நேராக மேனேஜரிடம் அழைத்துச் சென்றுவிட்டான்.

“குமரன் சார், வாங்க வாங்க. நீங்க வராததை பார்த்துட்டு நானே உங்களை ஹீரோன்னு நினைச்சுட்டேன்.”

“இல்ல சார் நான் ஊருக்குல்லாம் போகல”

“ஓஹோ அப்ப என்னோட இமேஜ ஒடக்கிறதுக்காகவே அரை நாள் லீவ் போட்டுருக்க”

“இல்ல சார். நான் வழக்கம்போல ஷிப்டுக்கு…”

‘எதுவும் பேச வேண்டாம்’ என்று சைகை செய்தபடியே ஒரு A4 தாளை எடுத்து அவனிடம் நீட்டினார்.

“நோ மோர் ஆர்க்யுமென்ட்ஸ். ஜஸ்ட் ரிஸைன்”என்றார் மேனேஜர்.

அவனுக்கு தொண்டை கட்டியது. குமரனுக்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் கலந்தோடி வந்தது. ஆயினும் கத்தினான்.

“இது அநியாயம்”

“டோன்ட் ஷௌட் யூ லிட்டில் பக். அவுட்” என்ற போது அரங்கநாதனின் கண்கள் ராவணத் தோற்றம் கொண்டிருந்தன.

****

குமரனுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு தைரியம் வந்தததோ, வெள்ளைத்தாளை எடுத்து கடகடவென எழுதத் தொடங்கினான். ராஜினாமாக் கடிதத்தை எடுத்துக்கொண்டு HR துறைக்குச் சென்றான். அவன் அங்கு செல்லும் முன்னரே சம்பவங்கள் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. தன் ராஜினாமா உறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் மேனேஜர் அரங்கநாதன் அறைக்கு வந்தான். அங்கே அவர் இல்லை. ஹால் 17-இல் முக்கிய மீட்டிங்கில் இருப்பதாகச் சொன்னார்கள். நேரே ஹால் 17-க்குச் சென்றான். கண்ணாடிக் கதவிற்கு வெளியே குமரனைப் பார்த்ததும் அரங்கநாதன் திடுமென ஒரு கெட்ட வாடையை நுகர்ந்தது போல எரிச்சலானார். ஒரு மணி நேரம் குமரனை வெளியே காத்திருக்க வைத்தார். பிறகு உள்ளே வரும்படி அழைத்தார். கண்களை அசைக்காமல் புருவத்தினால் ‘என்ன?’ என்று கேட்டார்.

“ஸாரி சார். ஒரு விஷயம் சொல்லணும். அரை நாள் ஏன் லீவு போட்டேன்கிற காரணத்த சொல்லிட்டு போயிடுறேன். காலைல ஒரு ஆக்சிடெண்ட். அம்பேத்கர் சிலை கிட்ட. ஒரு அம்மா. மஞ்சள் கலர் புடவை உடுத்தி இருந்தாங்க. கைல கூட மரகதம் அரங்கநாதன்னு இங்கிலிஷ்-ல பச்ச குத்திருந்தாங்க.” – என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினான்

அரங்கநாதனுக்கு உடம்பெல்லாம் அதிரத் தொடங்கியது. வேக வேகமாக நடந்து செல்லும் குமரனைப் பார்த்து ஏதோ சொல்ல விழைகிறார். ஆனால், வார்த்தைகள் தந்தி அடிக்கின்றன. ஒரு வார்த்தையும் வெளியே வர முடியாத படிக்கு ஊழ்வினை எனும் சாத்தான் அவர் கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொண்டிருந்தது. ஒரு ஓநாய் போல ஊளையிட்ட படியே வெளியே ஓடி வந்தார். ஆங்காங்கே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டிகளும் அறைக்குள் இருந்த சில அதிகாரிகளும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அரங்கநாதனைப் பின்தொடர்ந்து ஓடி வந்தனர். குமரன் எனும் இளந்தாரியின் வேக நடைக்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு வழியாக தடுமாறி ஓடி வந்து குமரனைத் தடுத்து நிறுத்தினார், .

“எந்த எந்த. ஆஸ்ப… ?”

“நீங்க எனக்குக் குடுத்த கொடச்சல்ல எந்த ஆஸ்பத்திரியில அவங்கள சேத்தேன்னு மறந்து போச்சு சார்” என்றான் வேண்டுமென்றே.

“யூ ப்ளடி ச்சீட்” என்றவாறே குமரனின் சட்டையை ஆவேசமும் ஆங்காரமுமாகப் பிடித்து டர்ரென்று கிழிக்க செக்யூரிட்டிகள், ”வேண்டாம் சார்… வேண்டாம் சார்பக்கத்து ஸ்டேஷனுக்கு கால் பண்ணா அவங்க சொல்லிடப் போறாங்க” என்றபடியே அவரை பின்னோக்கி இழுத்தனர். ஆக்ரோஷமாய் அவனைப் பார்த்துக் கத்தினார்.

“மனிதநேயத்தோட நட்றா நாயே”

கிழிந்து தொங்கும் தன் சட்டையோடு அவரருகே வந்து ஒரு அவலச் சிரிப்புடன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“சார், என்னங்க சார் சொன்னீங்க…?”

அவனின் கண்களை ஏறிட்டுக் காண முடியாமல் அரங்கநாதன் உடல் மனம் என அனைத்தும் தளர்வுற்று சொத்தென்று கீழே சரிந்தார்.

mazhaikkuruvi@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button