பள்ளத்துள் விழுந்த யானைக்கன்றின் துயரக் கதறல் – அன்பாதவன்
கட்டுரை | வாசகசாலை

புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்குத் திரும்புதல் – கவிதைகள் – தீபிகா நடராஜன்
“இறந்த காலத்தில் உறைந்துவிட்ட / என்னைப்போலவே / யாரினும் இருக்கிறீர்களா என்ன..?” எனும் வேதனை வினாவோடு, படிமம், குறியீடு எனும் சமகாலத்துக் கவிதைப் பிரக்ஞைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றித் தன் வழியை, வாழ்வு துப்பிய தாங்கவொண்ணாத் துயரத்தைக் கவிதைகளாக்கித் தந்திருக்கிறார் தீபிகா.
“அறைந்து சாத்தப்பட்ட கதவுக்குப் பின்னின்று சாவி துவாரத்தின் வழியே மீண்டும் மீண்டும் யாரேனும் வருகிறார்களா எனக் கால்கடுக்கக் காத்திருந்த காலத்திலிருந்து எழுதிய கவிதைகள் இவை. அச்சமூட்டும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க விரும்பாதவர்களுக்கு இறந்த காலத்தை விட்டால் வேறு ஏது நிம்மதி? என் நினைவுகளின் ரயில்கள் பின்னோக்கி ஓடியே பழகியவை. கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான இந்த இடைவெளியை, கேள்விகளை, கோவத்தைக் கவிதைகளாக்குவதைத் தாண்டி வேறு எந்த வாய்ப்பையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. இத்தொகுப்பின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஏதோ ஒரு சம்பவமோ, ஏதோ ஒரு மனிதனோ நிச்சயம் உண்டு. இவ்வளவு காலமும் நான் கொண்டிருந்த ஆற்றாமையிலிருந்து இத்தொகுப்பின்வழி என்னை நான் விடுவித்துக்கொள்கிறேன். சிறு எறும்பினைப்போல் இனி அவை தன் திசைகளையும் மனிதர்களையும் தாமே கண்டுகொள்ளட்டும்.” [தீபிகா முன்னுரையில்]
தீபிகாவின் கவிதைகள் சமகாலப் பெண்கள் எதிர்கொள்ளும் கசந்த வாழ்வின் துயரத்தருணங்கள். இவருடைய கவிதைகளை வாசிக்கையில் பிரிவாற்றாமையின் அரற்றல் வாசகனுக்கும் கடத்தப்படுகிறது.
“தனித்து விடப்பட்ட நோய்மையின் இரவொன்றில்தான்
திரும்பத் தொடங்கினான் சித்தார்த்தன் புத்தனிலிருந்து”. (ப.11)
வரலாற்று நிகழ்வொன்றிலிருந்து தன் கவிதைக்கான மூலத்தைக் கண்டடையும் தீபிகாவின் சிறு வரியும் அவரது வலி வாதுமையை வாசகனுக்கு உணர்த்துகிறது. கவிதைக்குள் கட்டமைக்கப்படும் எந்தவொரு நிகழ்த்துதலும் அந்த ஒரு செயலை மட்டும் குறிப்பது இல்லை. அந்நிகழ்வின் பின்னணியில் வேறு செய்திகள் காத்திருக்கின்றன என்பதை புத்தன், சித்தார்த்தன் எனும் சொல்லாடல்கள் உணர்த்தும்
. “துயரென்பது
எப்போதும் பிரிந்து இருப்பதல்ல
எப்போதோ சேர்ந்து இருந்தது” (ப.32)
ஊதுபத்தியொன்று தன் தனித்துயரைக் கரைந்து வெளியேற்றுவதைப்போலப் பிரிவின் வாதையைக் கவிதைக்குள் தூபிக்கொண்டு வந்திருக்கிறார்.
“எப்படி வேண்டுமானாலும் நிகழ்ந்துகொள்ளட்டும்
இப்பிரிவு.
போகும்வழியில் ஒருமுறையேனும்
திரும்பிப் பார்த்திருக்கலாம்தானே..?” (ப.29)
படைப்பாளியின் நுன்னுணர்வுகளின் வேண்டல் பெரிய சங்கதிகளில் அல்ல. சிறிய விஷயங்களில் திருப்தி அடைந்துவிடுகிறது மட்டுமல்ல மிக விரைவாக, எளிதாக அதிருப்தியும் அடைந்துவிடும் வாய்ப்புமுண்டு. விதிவிலக்காகச் சில படைப்புகள் மனம் தற்காலிகமான மகிழ்ச்சிகளில் ஆசுவாசமடைவதைக் காட்டிலும் துக்கத்தின் நித்தியத்துவம் பற்றிய காரணங்களில் ஆழ்ந்திருப்பதையே பெரிதும் விரும்புகின்றன.
“வீடோ காடோ கடலோ அவள் எது வரைந்திடினும்
அங்குப் பறவைகள் சிறகடிக்கும்
கூண்டுக்குப் பழக்கப்பட்டவள் எப்படி வரைகிறாள்
சுதந்திர வானத்தை?” (ப.16)
கல்யாண்ஜியின் கூண்டுக்கிளி கவிதையை நினைவூட்டுமிந்த வரிகள் வெறும் வினாவெனக் கடந்து போகக் கூடியதல்ல. ஒரு கவிதையின் வரிகள் வாசகனுக்குள் மாத்திரையைப்போல உட்சென்று காலமெடுத்துக்கொண்டு தன் வினையைத் தொடங்குகின்றன. அதன் படிநிலைகள் வாசகனுக்கு வாசகன் வேறுபடக்கூடும்.
“அசைவனாய் இருப்பதற்காக வருத்தமொன்றும் வேண்டாம் நண்பா
நீ கத்தியை மட்டும் கூர் தீட்டு
அமைதியாய் தலை நீட்டும் என் ஆடு
அதற்குமுன் சூடாய் ஒரு கோப்பை மனித ரத்தம் தருவாயா
மிகக் குளிராய் இருக்கிறது.” (ப.26)
ஒரு காட்சி காட்டும் அதிர்வு வாசகனைத் தாக்கும்முன் அந்த வாழ்வுத்துண்டின் அபத்தம் ஒரு பேரலையாய் படிப்பவனுக்குள் புகுந்து மாயம் நிகழ்த்துவதை உணர இயலும்.
“கதவுகளற்ற என் அறையின் ஜன்னலில் தெரியும் வானம்தான் என் மொத்த உலகமும்.
…
….
ஆனால் ஒருமுறைகூட அது காட்டவே இல்லை வண்ணத்தில் செய்த வானவில்லை….
ஏதும் தெரியாமல் அல்ல நன்றாகவே தெரிந்துதான்
எல்லா முட்டாள் தனங்களிலும் தலைகொடுத்தேன்
இனி குறைந்தபட்சம் முளைக்காத விதைக்குத்
தண்ணீர் விடுவதையாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.” (ப.46)
வாசிப்பவனின் நுன்மனதைப் புதுப்பிப்பதுதான் கவிதையின் நோக்கம் எனில் இங்கோ குற்றவுணர்வுக் கூடிய சுயமொன்று, பெரும் காயத்தைக் காட்டி விரிகிறது.
“எனக்கோ உரசிய ஒரு தீக்குச்சியையே என்ன செய்வதெனத் தெரியவில்லை
இன்னும் சில இமைப்பொழுதில் இறந்துவிடப் போகிறதென் கடைசி தீக்குச்சி கருணையின் அகல் உங்களிடம் இருந்தால்
ஒருநாள் மட்டும் கடன் கொடுங்களேன்.” (ப.35)
இந்தக் கவிதை வழியாக தீபிகா வாசகனின் சுய இரக்கத்தைக் கோரினாலும் தனது கவிதை வரிக்கு வாழ்வியல் அர்த்தம் கூட்டுகிறார்; தன் சரணாகதியை ஒப்புக்கொள்கிறார். ஒரு தருணத்தைப் படைப்பாளி சந்திப்பதற்கும் வாசகன் சந்திப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கவிதையின் சக்தி, அதன் வீச்சு, விரிவு, ஆழம் எல்லாமும் கவிதைக்குள் நிகழ்கிற அனுபவம் சார்ந்ததாகும். இந்தக் கவிதையில் அது நேர்த்தியாக நிகழ்ந்திருக்கிறது
“ எவ்வளவு மன்றாடினாலும் நிகழ்காலத்திற்குத்
திரும்பத்தான் வேண்டும் இல்லையா..?” [ப.62 ]
துரத்தியடிக்கப்பட்ட பூனைக்குட்டியின் சப்தமில்லாத உள்நுழையல் போல மறக்க நினைக்கும் கடந்த காலங்களின் ஞாபகப் பிசுக்குகள் படைப்பாளியைக் கிள்ளும்போதெல்லாம் “என் தேவனே என் தேவனே என்னை ஏன் கை விட்டீர்?” என்கிற அரற்றல்.
“.வெளிச்சம் ததும்பும் வீட்டின்
கதவிடுக்கு இருளை யாரறிவார்” (ப.55)
ஆனால்,
“இனி இவ்விடத்திலிருந்து
தொடங்குகிறது ஒரு வாழ்வு” – எனக் கவிஞர் ப்ரிம்யா கிராஸ்வின் வரிகளால் யதார்த்தம் உணர்த்தி, ஆதுரமிக்க ஆறுதல் விரல்களால் ஆசுவாசப்படுத்தி வாழ்வின் நம்பிக்கைக் கீற்று உரத்த குரலில் கூவுகிறது. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை.. கைவிடுவதுமில்லை..!”
உயிர்த்தொழில்நுட்பவியல் பயின்ற கவிஞர் தீபிகா உணர்வார்… உயிர்ப்பார்.



