இணைய இதழ் 122கவிதைகள்

இரா.மதிபாலா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சுக முகக் கடவுள்கள்

பூட்டிய கதவுகள்
முன் நின்று
முகக் குறிப்புகளின்
சாமுத்திரிகா இலட்சணங்களை
அலசி ஆராய்ந்து
தன் அலைவுக்கேற்ப
கள்ள முகச்சாவிகளை நோட்டமிட்டு தட்ட
உள்ளிருந்து துழாவும்
வசதி கொண்ட கதவமைப்பில்
பிறக்கிறது கண்ணாடி.

உருவம் பருவம் அளந்து
தோழமையைத் திறந்து உள்ளிழுத்து
மீண்டும் நடை சாத்தி
வரமளித்துக் களிக்கும்
சுகக் கடவுள்கள்.

கதவுகளின்
பின்புலத்திருக்கும்
மர்ம அறைகளின்
உள்டப்பிகள் எங்கும்
நீலச்சாயத்தில்
தோய்த்து, தோய்த்து,
துய்க்கும் சில காலம்.

ஆட்டம் சலித்ததும்
இன்னொரு பூட்டிய முகக்கதவு முன் நின்று
தட்டி அழைக்கும்.

திருட்டுச் சலனம்
அலை போல…
இரகசியக் காற்றும்
அத்தனை எளிதாய்
நிதானப்படுவதில்லை.

*

பூச்சூடிக் கொள்ளும் போட்டோக்கள்

உதிராது நிற்கிறது
அந்தச் சிரிப்பு

வாழ்ந்த வாழ்வினைப்
பேசுகின்றன கண்கள்

எதிலிருந்து எடுத்ததோ
நித்திய நினைவானது

அது
எடுத்துக் கொள்ளும்போது
தெரியாது

தன் கால சாட்சியாய்
அதுவே
நிற்கப் போகிறதென…

சிரிக்கச் சொல்லி
எடுத்த போட்டோவின்
கணம் அறியாது
நினைவு வாசம் வீசும்
கண்ணீர் மொட்டுகளை
பூக்க வைக்கும் முரண்
கணத்தை…

*
காலக் குரல்

மாலை வாக்கிங் வந்த
பெருமரம்
தவழ்ந்து வந்த
பேச்சுக் காற்றின்
அசைவுகள் தாளாது
உதிர்த்தது தன்னிலிருந்து
சில இலைகளை

இலைகள்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நிறம்
பட்டவை யாவும் நரம்புகளில்
கதை கதையாய்…

ஒரு மாற்றம் மட்டும்
நிகழ்ந்திருந்தது

முந்தைய
சிங்கக் குரலடங்கி
இப்போது எல்லாமே
பூனைக் குட்டிகளின்
மியாவ்.. மியாவ்..என
ஆகி இருந்தது.

*

era.mathibala@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button