இணைய இதழ் 122கவிதைகள்

பிரபு கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

உதிர்தலென்பது

உதிர்தலென்பது
சில நேரங்களில் கனிதலின் முதிர்ச்சி
சில நேரங்களில் வசந்தத்தில் முன்னோட்டம்
சில நேரங்களில் ஆகப்பெரும் எடையிழத்தல்

நீ எதிர்கால நீட்சியாகவோ
நிகழ்காலக் கருவாகவோ அல்லது
இறந்த கால நினைவுகளாகவோ
இதில் எதுவாகினும்
நீடித்திருப்பதன் நிமிர்த்தமாய் நாம்
நிலைத்திருப்பதால்தான்
காலம் கடந்த திரட்சியாய்
நம் காதல் செழித்திருக்க முடிகிறது

உரையாடல்களின் வழியாகவும்
சந்திப்புகளின் வழியாகவும்
பரிமாற்றங்களின் வழியாகவும்
தொடுதலின் வழியாகவும்
நாம் சுகித்துக் கிடப்பது மட்டும் காதலாகிவிடாது
அது முற்றாகத் தொலைதலில் நிகழ்ந்தேறி
நினைவில் துகள்களால் ஒளிர்ந்து கிடக்கிறது

தொடுவானத்தின் எதிரெதிர் திசைகளாக
நாம் முரண்படவில்லை
இரு வேறு தேசங்களாகப்
பிரிந்து கிடக்கவில்லை
ஒரே உயிர்ப்பின் தத்துவத்தைப்
பற்றிக்கொண்டு இரு வேறு கணங்களாக
வியாபித்திருக்கிறோம்
காதல் மிக அற்புதமாய் அதற்கு
உயிரூட்டிக் கொண்டிருக்கிறது

ஏழு கடல், ஏழு மலை
தாண்டியெல்லாம்
அதன் உயிரை யாரும்
பூட்டிக் கிடத்தவில்லை
இதோ! இந்த ஒரு துண்டு வானத்தின்
நிழலில்தான்
நாம் பிளவுற்று இருக்கிறோம்

யாரும் நம் இடைவெளிகளைப் பிரயோகிக்கவில்லை
யாரும் நம் இடைவெளிகளை ஆவணப்படுத்தவுமில்லை
ஒவ்வாமையின் கூறுகளிலிருந்து
தனியே பிரிந்தெழ வேண்டி
காலத்தின் அதிநுட்பத்திற்குள்
நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட
இடைவெளிகள்தான் இவை

வாழ்வின் சுயநலங்களுக்கான
சில முன்னேற்பாடுகளை
கனக்கச்சிதமாகக் கையிலேந்திக் கொண்டிருக்கிற
இந்தத் தருணங்களில்
‘கால மீட்சி’ எதை வேண்டுமானாலும்
தந்தருளலாம்

வெறும் உணர்வுகளுடன் பேசுதல் என்பது
ஒரு பிரம்மை
இரவின் மடியில் நினைவின்
அலைக்கழிப்பை
மாறுதலடையச் செய்ய முடியுமென்பதெல்லாம்
ஆறுதலடையச் செய்வதற்கான வஸ்து

இருந்தும், ஆற்றாமையின் வேர்கள்
எப்போது வேண்டுமானாலும்
நினைவில் கருவில் படரலாம்

அமாவாசை நிலவைப் போல
மடிந்து கிடப்பது மாதிரி
இலையுதிர்கால பூக்களைப் போல
உதிர்ந்து கிடப்பது மாதிரி

ஒரு துயர் அதன்
நீண்ட வருடல்களைச் சந்திப்பதில்
பிழையேதுமில்லை

எனினும், மீட்சியின் வழியாக அது
மிக கனக்கச்சிதமாக
இயற்கையுடன் பொருந்தக்கூடியது

முழு முற்றாய் மறைந்து போன நிலவும்
பிறையாக வளரக் கூடியதுதான்
இலையுதிர் காலமும் வசந்தங்களாக
மாறக் கூடியவைதான்

ஆறாத்துயரமென யாருமறியாவண்ணம்
இடது கைகளில் பூட்டியபடி
கடக்க வேண்டியிருக்கும்
இந்த இடைவெளி
“ஒரு மீட்க முடியாத மரணத்தை எதிர்நோக்கியது”

இந்த வார்த்தைகளைப் போல
கனமானவைதான் இந்த இடைவெளிகள்

ஆனால், அதன் நுண்மை
“ஒரு மரணமில்லாப் பெருவாழ்வை எதிர்நோக்கியது”
என்பதை
இரு வேறு கூறுகளாகப் பிரிந்து கிடக்கும்
இந்தக் காதல் கணங்களால்தான்
புரிந்துகொள்ள முடியும்.

prabuuu33@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button