இணைய இதழ் 123கவிதைகள்

ஆதன் ஆரா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

நண்டூருது… நரியூருது…

பசியோடு வீட்டிற்குள் நுழைந்தேன்
தன் ஒரு கையில்
ஐந்து வகை
கற்பனை உணவுகள் சமைத்து
உண்மை உணர்வோடு
மறுகையால் எனக்கு
ஊட்டிவிட்டாள் மகள்

பிறகு
இதர குடும்ப உறுப்பினர்களுக்கு
ஊட்டிவிட்டு
தனக்கும் ஒரு வாய்
ஊட்டிக்கொண்டாள்

தொடர்ந்து
சில வீட்டு விலங்குகளுக்கும்
சில காட்டு விலங்குகளுக்கும்
சில ஊர்வனவற்றுக்கும்
சில பறப்பனவற்றுக்கும்
ஊட்டிவிட்டாள்

இறுதியாக
நண்டூருது நரியூருது என்றபடி
என் ஒரு கையின் மீது
தன் பிஞ்சு விரல்களால்
மேல் நோக்கி ஊர்ந்து
சிரிப்பு மூட்டினாள்

எப்போதும்
சிரித்துவிடுவேன்
இன்று
அது முடியவே இல்லை

நல்லவேளை
ஏனென்று அவள்
கேட்கவே இல்லை.

*

பேராசை… பேராசை…

நான் இரவு வானத்தை
உற்றுநோக்கிக் கொண்டிருந்தேன்

அப்போது
நிலவில் இருந்து என் நினைவிற்கு
இறங்கி வந்த கடவுள்
உன் ஆசை ஒன்றை
பகிர்ந்துகொள்க என்றார்

உடனே நான்
கடவுளே
உனது நிழலில் இளைப்பாறவோ
உனக்கு நிழலாகவோ
எனக்கு ஆசையில்லை
உன்னுடைய நிழலாக ஆசை என்றேன்

மறுகணமே கடவுள்
பேராசை… பேராசை… என்று
உரக்கச் சொன்னபடி
என் நினைவை விட்டு நீங்கி
நிலவுக்கு ஏறிச் சென்றார்

இந்த நிகழ்வுக்கு முன்பு வரை
உலகியலில்
எந்தப் பேராசையும்
இல்லாதவன் என்றே
நான் என்னை
நினைத்துக் கொண்டிருந்தேன்
அப்படித்தான்
சொல்லிக்கொணடும் திரிந்தேன்

இப்போது எனக்குள்
ஒரு நன்றியும் பல மன்னிப்புகளும்
உருவெடுத்திருக்கின்றன
மன்னிப்புகள் மனிதர்களுக்கானவை
நன்றி மட்டும்
கடவுளே உனக்கானதுதான்

மன்னிப்புகளை நான் தீர்ப்பதற்குள்
மீண்டும் ஒரு முறை
என் நினைவிற்கு இறங்கி வந்துவிடு
நன்றிக்கடனோடு உன்னை அடைய
எனக்குத் துளியும் விருப்பமில்லை.

*

பங்கு போட்டுத் தின்னலாம்

மகள் பாடிய பாட்டு
’பங்கு போட்டுத் தின்னலாம்’ என்று
முற்றுப்பெற்றது
”அப்படினா என்ன?” என்று கேட்டேன்
பொருந்தாத பதில் சொன்னாள்
மீண்டும் கேட்டேன்,
”தெரியாது” என்றாள்

”அப்பாவுக்கு கொஞ்சம்
அம்மாவுக்கு கொஞ்சம்
ஆத்தாவுக்கு கொஞ்சம்
பாப்பாவுக்கு கொஞ்சம் என
கொடுத்து சாப்பிடுவது” என்றேன்
அதே கேள்வியை
மீண்டும் கேட்டேன்
”எல்லோருக்கும்
கொடுத்து சாப்பிடுவது” என்றாள்

’அவரவர் உணவை
அவரவர் உண்க’ என்ற
வகுப்பறைப் பாடத்தை
அவள்
நாள்தோறும் மீறுவதாய்
நான் அறிகின்ற வரையில்
சீரற்ற கால இடைவெளியில்
அதே கேள்வி
அவளுக்காய்
இனியும் காத்திருக்கும்.

ngk.ram@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button