இணைய இதழ் 123கவிதைகள்

விஜி ராஜ்குமார் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அக்குளத்து மீன்களை எனக்குத் தெரியும்
அவையும் என்னை அறியும்.
ஒன்று நூறாகி பலவாகி
மடிந்த பின்னும் பழையவை
ஏனோ மிச்சமிருக்கின்றன
கோடையில் குளம் வற்றியபோது
கடைசித் துளி வரை
ஒரு மீன் துள்ளிக்கொண்டிருந்து
பாளம் பாளமாய் இருந்த பள்ளத்திற்குள்
பாதாளத்தினுள் சென்றிருக்கும் மீன்கள்
அம்மாவின் கண்ணீர்த் துளிகள் போல
கனவில் மின்னும்.

*

ஒவ்வொரு புள்ளியையும்
ஓராயிரம் முறையாய்
அழித்து எழுதுகிறேன்.
நீ அன்று நின்றிருந்த கோணத்தில்
அவ்வுருவை.
உன்னிலிருந்த
ஒளிக்கான
வண்ணம் மட்டும்
சரியாய் அமைவதில்லை.
மிக சன்னமான
மின்னலென அச்சூரியன்
இனி எப்போதும்
அக்கோணத்தில் உன் மீது
விழப் போவதில்லை.

*

சூடல்

தினமொரு முகம் கொண்டு
ஒரு பொழுதில் ஒரு ஆடையென
நிறங்களின் வீதியில்
செந்தழல் தேர் நின்றோடுகிறான்
அவன்…
விடியலில் கைநீட்டி
சோம்பலெடுக்கும் அவள்
அவன் வருகையில்
அதிர்ந்து
பனித் துகில்
எடுத்து முகம் மறைக்கிறாள்
பின் தன்
தழையாடையை
நீர்துளி விரல்களால்
நீவி அமைகிறாள்
நீரின் வீதிகளில் நூறாக
தெரியும் அவனை நேர்கொண்டு
காண நாணி
கடலின் வழி
விழி திறக்கிறாள்
அவளில் தன்னை
அவன் காண்கையில்
ஆவியாக்கி
சூடுகிறான்
நியதியை நீக்கி அவன்
சூல்கொள்கிறான்
அவள்
நீர் கொள்கிறாள்
விளையாட்டின்
வளைவுகளில்
முகிழ்கிறது
காலக்கனி
மீண்டும் கனிந்திறங்கும்
அவனை நினைத்து
கண்ணுறங்கும்… அவளுக்கு
அவன்
நாளை புதியவன்…
அவளுக்கு மட்டும்
அவளால்.

*

பறவையின் நிழல்
நிலத்தை வானமாக்குகிறது.
அல்லது கடலாக.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button