
நாள்காட்டியைக் கிழிக்கும்போதெல்லாம்
எழும் பெருமூச்சொன்று காதெட்டுகிறது
இனிப்பு செய்யும் நாட்களில்
உப்பாய் துளி கண்ணீர் சேர்கிறது
பூவினை முகர்கையில்
தானே எழும் மெல்லிய புன்னகை
விரக்தியில் முடிகிறது
பண்டிகை நாட்களில் வாங்கிய துணிகள்
அவளைப் போலவே
அவனுக்காகக் காத்திருக்கின்றன
விஷேசங்களுக்குச் செல்கையில்
‘அவர் வரலையா?’ என்ற கேள்வியில்
பூட்டி வந்த புன்னகை சிறிது சிதிலமடைகிறது
‘உனக்கென்னமா, வெளிநாட்டுக் காசு’
பந்தங்களின் வார்த்தைகள் கேட்கையில்
வரும் வலியை
வீடியோ காலில் வரும் புருஷனிடம்
மறைத்துச் சிரிக்கையில்
கண்ணின் ஓரம் துயரப் பூ பூக்கிறது.
*
மரணத்தை எதிர்நோக்குபவனின்
கண்களைக்
கண்ணீரை மறைக்காமல்
எப்படி எதிர்கொள்வது?
ஜீவனற்றிருக்கும் அவன் புன்னகையை
கலங்காமல் எப்படிப் பெற்றுக்கொள்வது?
நலிந்திருக்கும் அவன் கைவிரல்களை
நடுங்காமல் எப்படிப் பற்றிக்கொள்வது?
மெல்லிய குரலில் அவன்
சொல்லும் நன்றியையோ
கேட்கும் மன்னிப்பையோ
பதற்றப்படாமல் எப்படி ஏற்றுக்கொள்வது?
அவனது இறுதி நிமிடங்களைப்
பதறாமல் எப்படிக் கடத்துவது?
அவனது நீளும் மரண அவஸ்தைகளை
விட்டத்தையோ, வெற்றுச் சுவர்களையோ,
கட்டாந்தரையையோ
பார்க்காமல் எப்படிப் பொறுத்துக்கொள்வது?
இறுதியாக விடைபெறுபவனை
வலியில்லாமல் எப்படி வழி அனுப்புவது?
நெருக்கமானவர்கள் மரணிக்கும் தருவாயில்
அவருடனே மரணிக்கும் நம் மனத்தை
எப்படி மீட்டெடுப்பது?
*
லாரியில்
அடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
சற்றே சேதாரங்களுடன் கூடிய வீடு
பழகிய இடத்தை விட்டு
அகலுவதில்
கீறல்கள் விழாமல் இல்லை
வேண்டாத பொருட்கள்
சிலவற்றோடு
வேண்டிய நினைவுகள் சிலவும்
உதிர்ந்து கிடக்கின்றன
பெயர்த்தெடுத்த இடத்தில்.
குழந்தைகளின் கிறுக்கல்களோடு
நட்சத்திரங்கள் ஒட்டிய கூரையோடு
இடம்பெயரும் வீட்டின்
வாசனையும் தங்கிவிடுகிறது
அங்கே மங்கலாக.
லாரியின் தடம் நகர்ந்த பின்
இவற்றோடு சேர்த்து
அங்கே உருண்டு கிடக்கிறது
இடம்பெயரும் வீட்டின் கண்ணீர் துளி ஒன்று.
*



