
1
கடந்த ஒரு வாரமாக வாடகைக் காரை எடுத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் அருப்புக்கோட்டையில் தொடங்கி, சென்னை வரையிலும் பரவிக் கிடக்கும் உறவுக்காரர்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைத்துவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினார்கள். பயண அலுப்பை அகற்றுவதற்குப் பகல் நேரத்திலேயே பத்து மணி நேரம் தூக்கம் தேவைப்பட்டது அப்பாவிற்கு. கணக்குப் போட்டுப் பார்த்தால், அப்பா வீட்டிலும் அலுவலகத்திலும் செலவிட்ட நேரத்தைக் காட்டிலும், அலுவல் காரணமாக பைக்கில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த நேரமே அதிகமாக இருந்திருக்கும். ஆனால், அதெல்லாம் இரண்டாண்டுகளுக்கு முன்பு வரைதான். பணி ஓய்வு தொடங்கிய முதல் ஓரிரு மாதங்கள் விடுதலை பெற்ற ஆயுள் தண்டனை கைதியைப் போல உற்சாகத்துடன் காணப்பட்டார். ஆனால், வானத்து மின்னலைப் போல, ஒளிர்ந்து மறைந்தது அவரது உற்சாகம். ஆரம்பத்தில், ஆர்வமாக நண்பர்களைத் தேடிச் சென்றவர், வீட்டைவிட்டு வெளியேறுவதை மெல்லக் குறைத்துக்கொண்டார். டிவியின் முன் அமர்ந்துகொண்டு பழைய படங்களைப் பார்ப்பதையே தனது முழு நேரக் கடமையாக்கிக்கொண்டார். அவரது செயலின்மையைக் கண்டு அம்மா ஏதேனும் திட்டினால், ”வாக்கிங் போறேன்” என்று தெரு முனைவரை நடந்து சென்று டீக்கடையில் சிகரெட் பிடித்துவிட்டுத் திரும்புவார்.
இவ்வாறு பணி ஓய்விற்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றிக்கொண்ட அப்பா, எனக்குத் திருமணம் முடிவானதும்தான் மீண்டும் சுறுசுறுப்பானார். ஜோசியரிடம் நாள் குறிப்பதில் தொடங்கி, பத்திரிக்கை அச்சடித்து சொந்தக்காரர்களிடம் கொண்டு சேர்ப்பது வரை — எல்லாக் கல்யாண வேலைகளையும் பட்டியல் போட்டு, மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் செய்துவருவதைக் கண்டு அம்மாவிற்கு அத்தனை சந்தோஷம். இப்படி இவர் மாறுவார் என்று தெரிந்திருந்தால், எனக்கு ஒரு வருடம் முன்பே திருமணம் செய்து வைத்திருக்கலாம் என்றுகூட அத்தையிடமும் பாட்டியிடமும் அம்மா விளையாட்டாகச் சொன்னார்.
பத்து மணி நேரத் தூக்கத்திற்குப் பிறகு பயணக் களைப்பு குறைந்திருந்தாலும், முதுகுவலியும் மூட்டுவலியும் அவரை தொடர்ந்து இம்சித்துக்கொண்டே இருந்தன. அந்த வேதனையில் முனங்கியபடிதான் என்னுடன் பேசினார் அப்பா.
“நீ உன் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சிட்டேல?”
“ஒரு வாரமா எல்லார் வீட்டுக்கும் போயிட்டு வந்துட்டுதான்ப்பா இருக்கேன்”
“நம்ம பழைய ஹவுஸ் ஓனர்ட்ட கொடுத்தியா?”
“முடிஞ்சதுப்பா. கண்டிப்பா வந்திடுறேன்னு சொன்னார்”
“பாலமுருகன் மளிகை கடைக்காரர்ட்டயும் பத்திரிக்கை வைக்கணும். ஆனா, அத நானே பாத்துக்குறேன். அப்புறம், திருச்சியில வேற யாரெல்லாம் பாக்கி இருக்காங்க?”
“….”
“அடேய், அந்த கிறிஸ்டியன் குடும்பம் ஒன்னும் இருக்குமே. நம்ம பழைய வீட்டுக்கு எதிர்ல. அந்தப் பையன் கூட உனக்கு நல்ல ஃப்ரண்டுல”
“ஆமாம்பா. அந்த அண்ணா பேரு கெவின்.”
“ஆங்… அவுங்க வீட்டுக்கு வச்சிட்டியா பத்திரிக்கை?”
“இன்னும் இல்லப்பா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு”
“ஏன்டா சிவா! பழைய வீட்ல இருந்த வரைக்கு எல்லா கிறிஸ்மஸ்க்கும் அங்கு இருந்து தவறாம நமக்கு கேக்கும் பிரியாணியும் வந்திடும். திருச்சி வந்த புதுசல நம்ம வீட்ல இருந்ததவிட அங்கதான நீ அதிக நேரம் இருந்திருக்க. இன்னும் அகங்களுக்குப் பத்திரிக்கை வைக்காம இருந்தா எப்படி?”
என்னுடைய தயக்கத்தை அப்பா புரிந்துகொள்ளாமல் இருந்தது எனக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது. நடந்ததையெல்லாம் அவர் மறந்துவிட்டாரா? அல்லது அது அவருக்குப் பெரிய விஷயமாகவே தோன்றவில்லையா? என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும், அப்பா சொன்னதுபோல, இன்னும் கெவின் அண்ணாவிடம் என் திருமணச் செய்தியைத் தெரிவிக்காமலிருப்பது தவறுதான். ஆனால், அண்மையில் நடந்த நிகழ்வுகளை நினைத்தால், கல்யாணப் பத்திரிக்கையுடன் அவரது வீட்டிற்குச் செல்வதை நினைத்தாலே மனமும் உடலும் இலேசாக நடுங்குகின்றன.
2
அம்மாவுக்கு பிஷப் ஹூபர் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைத்ததும், அப்பாவும் பெரம்பலூரில் உள்ள அலுவலகத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டார். அம்மாவின் கல்லூரிக்கு அருகிலிருக்கும் குமரன் நகரிலேயே நல்ல வீடொன்று வாடகைக்குக் கிடைத்தது. மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என்னை கேம்பியன் ஸ்கூலில் சேர்த்தார்கள். காலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் என் வகுப்பு மாலை நான்கு மணிக்கு நிறைவடைந்துவிடும். நாலரை மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவேன். ஆனால், அம்மாவுக்கு ஆறரை மணிக்குத்தான் கல்லூரி முடியும்; வீட்டிற்கு வந்து சேர ஏழாகிவிடும். திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே அறுபது கிலோமீட்டர் தூரம் இருப்பதால், அப்பா ஒன்பது–பத்து மணிக்குத்தான் வருவார். மறுநாள் நான் தூக்கத்திலிருந்து கண் விழிப்பதற்கு முன்பே புறப்பட்டுவிடுவார்.
ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்து பிறகுதான் இரவு உணவைச் சமைக்கத் தொடங்குவார் அம்மா. அதுவரை எனக்குப் பசி எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகச் சுண்டல், பழங்கள் போன்ற சத்தான ஆகாரங்களை எப்போதும் வீட்டில் வைத்திருப்பார். அவற்றால் வயிற்றுப் பசியைத் தணிக்க முடியுமே தவிர, நாக்கின் பசியை ஒருபோதும் பூர்த்தி செய்ய முடிவதில்லை. அதனால், வீட்டு அலமாரியிலும்,சலவைக்காகக் காத்திருக்கும் அப்பாவின் சட்டைப் பைகளிலும் இருக்கும் சில்லறைகளைப் பொறுக்கிக்கொண்டு கடைவீதிக்குக் கிளம்பிவிடுவேன். சமோசா, பானிப்பூரி, தட்டு வடை, முட்டைப் பப்ஸ் என அம்மா நான் சாப்பிடவே கூடாது என்று தடை செய்திருந்தவற்றைத் திருட்டுத்தனமாக வாங்கித் தின்பதில் ஒரு தனி ருசி இருந்தது.
அன்றொரு மாலை, குழுமாயியம்மன் சமோசா கடையில் தின்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். எங்கிருந்தோ பாய்ந்துவந்த இரண்டு நாய்கள் என்னை நோக்கி ஆவேசமாகக் குரைத்தன. அவற்றின் கோரப் பற்களைப் பார்த்ததும், என்னுடைய கால்கள் மூளையின் உத்தரவின்றியே வேகமாக ஓடத் தொடங்கின. பின்னால் நாய்கள் துரத்துகின்றனவா என்று திரும்பிப் பார்க்கக்கூடத் துணியாமல், வீட்டை நெருங்கும் வரை ஒரே மூச்சாக ஓடினேன். வீட்டு வாசலில் இருந்த கல்லில் தடுக்கி சாக்கடையில் பொத்தென விழுந்தேன். முட்டியில் பலமான அடி! வலியில் துடித்துக்கொண்டே சாக்கடையிலிருந்து எழுந்தேன். சற்று வலி குறைந்தபிறகுதான் என் வெள்ளை நிறப் பள்ளிச் சீருடை சாக்கடைத் தண்ணீரால் கறுத்துப்போயிருந்ததைக் கவனித்தேன்.
அடிபட்ட வலியைக் காட்டிலும், என் கோலத்தைப் பார்த்து அம்மா எப்படி அடிப்பாளோ என்று நினைத்துத்தான் வீட்டு வாசலில் நின்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தேன். தெருவில் போவோர் வருவோரெல்லாம் பரிதாபமாக என்னைப் பார்த்து நடந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் எதிர் வீட்டில் வசித்த கெவின் அண்ணா எனக்கு அறிமுகமானார். எந்தத் தயக்கமும் இன்றி, சாக்கடைத் தண்ணீர் ஊறியிருந்த என் கைகளைப் பிடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். என்னைக் குளிக்க வைத்து, உடுத்துவதற்குத் தனது சுத்தமான ஆடைகளையும் கொடுத்தார். அடிபட்ட காயத்திற்கு மருந்து தடவி, தின்பதற்குக் கடலைமிட்டாயும் முறுக்கும்கூட ஒரு கிண்ணத்தில் வைத்து வழங்கினார். அன்றிரவு அம்மா வரும் வரை அவரது வீட்டில்தான் நான் இருந்தேன். அன்று மட்டுமல்ல — அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தினமும் அம்மா கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும்வரை நான் கெவின் அண்ணாவின் வீட்டிலேயே இருந்தேன்.
என்னைக் காட்டிலும் மூன்று வயது மூத்தவரான கெவின் அண்ணா அப்போது பிரான்சிஸ் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தார். நான் அடிபட்டதைப் பார்த்தவுடன், உடன்பிறந்த தம்பியைப் போல என்னைக் கவனித்துக் கொண்டதற்குக் காரணம் இருந்தது. உண்மையில், அவருக்கு என் வயதை ஒத்த ஒரு தம்பி இருந்திருந்தான். அவன் பெயர் ஜான்சன். ஆனால், சரியாக ஓராண்டிற்கு முன்பு, திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே நடந்த ஒரு விபத்தில் ஜான்சன் இறந்துவிட்டான். என்னைப் பார்க்கும் போதெல்லாம், தனது தம்பியின் ஞாபகம் வருவதாகவே கெவின் அண்ணா சொன்னார். அந்த விபத்து அவரது குடும்பத்தைப் பல விதங்களில் சிதைத்திருந்தது. கெவின் அண்ணாவின் அப்பா இருதயராஜனும் அந்த விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்திருந்தார். அதுவரை பெல் நிறுவனத்தில் பொறியாளராக இருந்தவர், அந்த விபத்திற்குப் பிறகு நிரந்தரமாகப் படுக்கையிலேயே கிடக்கும் நிலைக்கு ஆளானார். வீட்டுப் பொறுப்புகள் அனைத்தும் அவரது அம்மா ஜென்சியின் மீது விழுந்தன. மாவு அரைக்கும் கடை நடத்தி வந்த ஜென்சி ஆண்டிக்கு, வேலைக்குச் செல்லும் எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் வழக்கமான சுமைகளோடு, தனது கணவனை முழுமையாகக் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையும் சேர்ந்தது. பெருத்த உடல் கொண்ட அவரை தினமும் படுக்கையிலிருந்து தூக்கி, நான்கு சக்கர நாற்காலியில் அமர்த்தி பாத்ரூமுக்கு அழைத்துச் செல்வது முதல், அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் ஜென்சி ஆண்டியே ஒற்றை ஆளாகச் செய்ய வேண்டியிருந்தது. கெவின் அண்ணா உதவ முன்வந்தால் கூட, “நீ படிப்பில மட்டும் கவனம் செலுத்து” என்று பலமாக அதட்டுவார்.
கெவின் அண்ணாவைப் போலவே, ஜென்சி ஆண்டியும் என்மீது அளவற்ற அன்பைக் காட்டினார். இரவு அம்மா வரும் வரை அவரது வீட்டிலேயே இருக்கக் கருணையுடன் அனுமதி அளித்தார். எனவே, பள்ளி முடிந்ததும் நேராக கெவின் அண்ணாவின் வீட்டிற்குச் சென்றுவிடுவேன். அவர் தனது மிதிவண்டியில் என்னை அமரச் செய்து, அருகாமையில் இருக்கும் பேக்கரிக்கு அழைத்துச் சென்று நொறுக்குத் தீனி வாங்கிக்கொடுப்பார். அதை தின்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து, அம்மா வரும்வரை விளையாடிக்கொண்டிருப்போம். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் ஜென்சி ஆண்டியின் மாவுக் கடைக்கு விடுமுறை. காலை ஏழு மணிக்கே அவரும் கெவின் அண்ணனும் அந்தோணியார் கோவிலுக்குக் கிளம்பிவிடுவார்கள். திரும்புகையில், பிரியாணி சமைப்பதற்காகக் கறி வாங்கி வருவார்கள். நான் அவர்களோடு பழகத் தொடங்கியதிலிருந்து, எனக்கும் சேர்த்து சற்று கூடுதலாகவே கறி வாங்கத் தொடங்கினார் ஜென்சி ஆண்டி. அந்நாட்களில், கிட்டத்தட்ட அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் அவரது வீட்டில்தான் எனக்கு மதியச் சாப்பாடு. கிறிஸ்மஸ் சமயத்தில், என்னுடைய அப்பா அம்மாவிற்கும்கூட சேர்த்தே ஜென்சி ஆண்டி சமைப்பார்.
கெவின் அண்ணாவின் குடும்பத்துடனான என்னுடைய உறவு மாற்றமடையும் என்று அப்போதெல்லாம் நான் கற்பனைகூட செய்ததில்லை. ஆனால், ஆறு–ஏழு வருடங்களில் எல்லாம் மாறத்தொடங்கின. என் அப்பாவும் அம்மாவும் அல்லித்துறையில் நிலம் வாங்கி வீடு கட்டினார்கள். குமரன் நகரில் இருந்த வாடகை வீட்டைவிட்டு, சொந்த வீட்டிற்கு நாங்கள் குடிபெயர்ந்தோம். எங்கள் புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்திற்குக்கூட ஜென்சி ஆண்டியும் கெவின் அண்ணனும் வந்திருந்தார்கள். குழந்தை ஏசுவை மரியாள் தன் தோளில் சுமக்கும் அழகிய ஓவியத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். இன்றும்கூட அந்தப் படம் எங்கள் பூஜையறையில் இருக்கிறது. சாப்பிட்டுவிட்டு, அன்பளிப்பு கொடுத்துவிட்டுப் புறப்படுகையில், ஜென்சி ஆண்டி என் அம்மாவின் கைகளைப் பிடித்து இவ்வாறு சொன்னார்,
“வாரம் தவறாமா பையன நம்ம வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க. இத்தன வருசம் என்னோடு ரெண்டாவது மகன் மாதிரியே சிவா இருந்துட்டான். தூரம் பாக்காம கூட்டிட்டு வாங்க. இவன்னா கெவினுக்கும், அவுங்க அப்பாவுக்கும் ரொம்ப இஷ்டம்.”
ஜென்சி ஆண்டியின் வேண்டுகோளுக்கிணங்க, சில ஞாயிற்றுக் கிழமைகள் என்னை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அம்மா. ஆனால், தொடர்ந்து அங்குச் செல்வது சாத்தியப்படவில்லை. கெவின் அண்ணன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்; பொதுத் தேர்வும் நெருங்கிக்கொண்டிருந்தது. நான் அங்கு அடிக்கடி செல்வது அவரது படிப்பிற்கு இடையூறாக இருக்கலாம் என்று வீட்டில் கூறினார்கள். வாரா வாரம் சென்றுகொண்டிருந்த நான், மெல்ல மாதம் ஒருமுறை, பின்னர் இரண்டு–மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என கெவின் அண்ணா வீட்டிற்குப் போவதை மெல்லக் குறைத்துக்கொண்டேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிப் படிப்பிற்காக சென்னைக்குச் சென்ற பிறகு, கெவின் அண்ணாவின் குடும்பத்துடனான எனது உறவு கிட்டத்தட்ட முற்றிலுமாக அறுந்துவிட்டது என்று சொல்லலாம். ஊருக்கு வரும்போது, கடைவீதியில் கெவின் அண்ணனையோ ஜென்சி ஆண்டியையோ எதேச்சையாகச் சந்தித்தால், பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்வோம். “ஒருநாள் கண்டிப்பாக வீட்டிற்கு வந்து சாப்பிட்டு போகணும்” என்று எப்போதும் வலியுறுத்துவார்கள். ஆனால், ஒருமுறைகூட அவர்களது வீட்டிற்குப் போவதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
3
ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக கெவின் அண்ணாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஊர்ல இருக்கியா சிவா?”
“ஆமாண்ணே! பொங்கலுக்கு நாலு நாள் ஆஃபிஸ் லீவு. இப்போ திருச்சியிலதான் இருக்கேன். நாளை மறுநாள் ராத்திரிதான் டிரெயின்”
“நல்லது சிவா. எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு. அதான் வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைக்கணும். அம்மாக்கிட்ட சொல்லு, இன்னைக்குச் சாயங்காலம் வரேன்னு”
”வாழ்த்துக்கள் அண்ணே. கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க எப்ப வேணாலும் வீட்டுக்கு வாங்க. அப்பாவும் ரிடையர் ஆகி வீட்லதான் பொழுது போகாம உக்காந்து இருக்காரு. நீங்க வந்தா சந்தோசப்படுவாரு”
அன்று மாலை வீட்டிற்குப் பத்திரிக்கை கொடுக்க வந்த கெவின் அண்ணா இரவு ஒன்பது மணி வரை எங்களோடு பேசிக்கொண்டிருந்தார். நான் படித்த கேம்பியன் ஸ்கூலில் தற்போது ஆங்கில ஆசிரியராக இருக்கும் அவர், சக ஆசிரியை ஒருவரையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகச் சொன்னார்.
“லவ் மேரேஜாண்ணே?” என்று நான் கேட்டதற்கு, “லவ் கம் அரேண்ஜடு மேரேஜ்” என வெட்கத்தோடு பதிலளித்தார்.
எனினும், அன்று கல்யாணத்தைப் பற்றிப் பேசியதைக் காட்டிலும், அவரது வீட்டு நிலைமைகள் பற்றியே அதிகமாக எங்களிடம் புலம்பினார்.
”ஆறேழு மாசத்துக்கு முன்னாடி அப்பா கட்டில்ல இருந்து தவறி கீழ விழுந்துட்டார். அப்புறமா அவுரு ஒடம்பு ரொம்பவே மோசமாக ஆரம்பிச்சிடுச்சு. எப்பவும், அம்மாகூடயே இருக்கணும் சொல்லுறாரு. எனக்கும் ஓரளவு நல்ல சம்பளம் கெடக்கிறதுனால, அம்மாவும் கடைய மூடிட்டு முழு நேரமா அப்பாகூடயேதான் இருக்காங்க. அடுத்த வருசம்தான் நானும் லில்லியும் மேரேஜ் பண்ணிக்கிடலாம்னு இருந்தோம். ஆனா, அப்பா அதுவரைக்கும் இருப்பாரான்னு தெரியல. அவரு போறதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணுன்னு அம்மா அழுதாங்க. அதான், அடுத்த மாசமே கல்யாணம் பண்ணுறோம்.”
கெவின் அண்ணா வந்து சென்ற பிறகு அவரது குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களே என் மனதை ஆக்கிரமித்தன. இத்தனை ஆண்டுகள் அவர் வீட்டிற்கு ஒருமுறைகூடப் போகாமலிருந்தது தவறு எனும் குற்றவுணர்வு என்னை இலேசாக வதைத்தது. எனவே, மறுநாள் பழங்கள் வாங்கிக்கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றேன். அவரது அப்பாவிற்கு என்னைச் சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. உண்மையிலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமாகத்தான் இருந்தது. ஆனால், ஜென்சி ஆண்டிக்கு என்னைப் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி. வருவதாக முன்கூட்டியே சொல்லியிருந்தால், வீட்டில் பிரியாணி செய்திருப்பேன் என்று சொன்னார். பிறகு, சட்டென ஹக்கிம் ஹோட்டலுக்குச் சென்று பிரியாணி வாங்கி வருமாறு கெவின் அண்ணனுக்கு ஆணையிட்டார். நான் வேண்டாமென எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.
சாப்பிட்டுவிட்டுப் புறப்படுகையில், எனது கையில் இரண்டாயிரம் ரூபாயைத் திணித்து, “கெவின் கல்யாணத்துக்குப் புதுத் துணி எடுத்துக்கோ” என்று அன்பாய் சொன்னார்.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்குத் திரும்பியதும், தில்லியில் பத்து நாட்கள் நடக்கும் ஒரு பயிற்சி முகாமிற்கு என்னை அலுவலகத்திலிருந்து அனுப்பினார்கள். முகாமில் இருந்த சமயத்தில் கெவின் அண்ணாவிடம் இருந்து போன் வந்தது. பயிற்சியில் இருந்ததால், உடனடியாக அவரது அழைப்பை எடுக்க முடியவில்லை. ஆனால், கால்களின்றிப் படுக்கையில் குழந்தையைப் போல உறங்கும் அவரது அப்பாவின் உருவம் நினைவுக்கு வந்தது. அவர் குறித்து ஏதேனும் கெட்ட செய்தியாக இருக்குமோ என்று மனம் யூகித்தது.
வேலை முடிந்து, அறைக்கு வந்ததும் கெவின் அண்ணாவை அழைத்தேன். இம்முறை அவர் போன் எடுக்கவில்லை. பிறகு அம்மாவிடம் பேசினேன். அவர்தான் விசயத்தைச் சொன்னார்.
“ஜென்சி ஆண்டி இறந்துட்டாங்க சிவா. நேத்து நைட்டு திடீர்னு ஹார்ட் அட்டேக்காம். நானும் அப்பாவும், போயி விசாரிச்சிட்டு இப்போதான் வீட்டுக்கு வந்தோம். பாவம் அந்தப் பையன் கெவின். நொடிஞ்சு போய் இருக்கான். இனிமே, அவன்தான் அவுங்க அப்பாவ பாத்துக்கணும்.”
முற்றிலும் எதிர்பாராத அந்தத் துயரச் செய்தியைக் கேட்டு என் மனம் கனத்தது. கெவின் அண்ணாவின் கல்யாணத்திற்குத் துணி வாங்குவதற்காக ஜென்சி ஆண்டி கொடுத்த பணம்கூட அப்படியே பர்ஸில் இருந்தது. அதைச் செலவு செய்வதற்குள் அவர் இறந்துவிட்டர். உடனடியாக திருச்சிக்குப் புறப்படலாமா என்று யோசித்தேன். ஆனால், கெவின் அண்ணாவிடம் என்னவென்று பேசுவது? எப்படி ஆறுதல் சொல்வது? அத்தனை பக்குவம் உடையவன் அல்ல நான். அப்புறம் என்னுடைய பணி உயர்வுக்கு இந்தப் பயிற்சி முகாமை முழுமையாக நிறைவு செய்வதும் அவசியம். எனவே, நீண்ட யோசனைக்குப் பிறகு போக வேண்டாம் என்றே முடிவெடுத்தேன். அத்தகைய முடிவை எடுத்ததற்காக என்னை நான் உடனடியாகச் சபிக்கவும் செய்தேன்.
தில்லியில் பயிற்சி முகாம் முடிந்து, மீண்டும் சென்னை வந்த சில நாட்களில் கெவின் அண்ணனிடம் இருந்து இக்குறுஞ்செய்தி வந்தது –
“என்னுடைய அம்மாவின் மரணத்தின் காரணமாக அடுத்த மாதம் நடக்கவிருந்த என்னுடைய திருமணம் நின்றுவிட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
உடனடியாக அவரை அழைத்து விவரத்தைக் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனால், ஜென்சி ஆண்டியின் இறப்பு குறித்து விசாரிப்பதற்குத் தைரியமற்ற எனக்கு, அவரது திருமணம் நின்றது பற்றியும் கேட்க மன வலிமை இல்லை. எனவே, தகவலை அம்மாவிடம் தெரிவித்து, அவரையே நேரடியாக கெவின் அண்ணாவிடம் பேசச் சொன்னேன். விசாரித்துவிட்டு, அவர்தான் என்னிடம் நடந்ததை விரிவாகச் சொன்னார்,
“நடந்தத கேட்கவே ரொம்ப கொடுமையா இருந்தது சிவா. கெவினோடு அப்பா படுக்கையிலயே இருக்கார்னு கேள்விப்பட்டதும், மொதல்ல பொண்ணு வீட்ல கல்யாணத்துக்குச் சம்மதிக்கலயாம். கல்யாணத்துக்கு அப்புறம், முடியாம கிடக்குற மனுஷன பாத்துக்குற பொறுப்பெல்லாம் அவுங்க பொண்ணு தலையில விழுந்திடும்ங்கிற நியாயமான பயந்தான். அப்புறம் ஜென்சி ஆண்டிதான் போயி பொண்ணு வீட்ல பேசுனாங்க. இந்த மாதிரி இத்தனை வருஷமா நான்தான் ஒத்த ஆளா என் புருஷன பாத்துக்கிட்டேன். இப்போ, அவருக்கு ஒடம்பு ரொம்ப முடியல. இன்னும் எத்தன காலத்துக்கு அவர் இருப்பார்னு சொல்ல முடியாது. இருக்கிற வரைக்கும் அந்த மனுஷன பாத்துக்கிற சக்தியும் தெம்பும் எனக்கு இருக்கு. உங்க பொண்ணுக்கு ஒரு சிரமமும் கொடுக்க மாட்டேன். வேண்டும்னா, கல்யாணத்துக்கு அப்புறம் அவுங்க ரெண்டு பேரும் தனியா வீடெடுத்துகூட போயிடட்டும் – அப்படினு பேசுனாங்களாம்.
அந்த வாக்குறுதிய நம்பிதான் கல்யாணத்துக்கு பொண்ணு வீட்டுக்காரங்க சம்மதிச்சாங்க. திடீர்னு இப்படி கெவின் அம்மா இறந்ததும், யாருக்கும் என்ன பண்ணறதுன்னு ஒன்னுமே புரியல. உண்மையிலயே எல்லாரும் தெகச்சுதான் போயிருந்தாங்க. அப்புறமா, பொண்ணோடு அப்பா யோசிச்சு ஒரு முடிவு சொன்னார். கெவின் அப்பாவை ஏதாவது ஹோம்ல சேக்கிறதா இருந்தாதான் கல்யாணம் நடக்குமாம். ஆனா, கெவினுக்கு அதுல சம்மதம் இல்ல. தன்னோடு அப்பாவுக்குத் துணையா கடைசி வரைக்கும் நான் இருப்பேன்னு சொல்லிட்டான். அவன் லவ் பண்ண பொண்ணுக்கும் படுக்கையிலேயே கெடக்குற மாமனார பாத்துக்கிறதுக்கு மனசில்ல. அதான், கல்யாணம் நின்னிடுச்சு.”
4
அச்சடிக்கப்பட்ட என்னுடைய திருமணப் பத்திரிக்கையை முதல் முறையாகப் பார்க்கையில், கெவின் அண்ணா வீட்டிற்கு வந்து அவரது கல்யாணப் பத்திரிகையை வழங்கியதுதான் ஞாபகத்திற்கு வந்தது. திருச்சியில் இருக்கும் வெவ்வேறு நண்பர்களின் வீடுகளுக்குப் பத்திரிக்கை கொடுக்கப் போகும் போதெல்லாம், கெவின் அண்ணாவின் வீட்டிற்கும் போக வேண்டும் எனத் தோன்றும். ஆனால், அவரது வீட்டருகே செல்வதற்குக்கூட மனம் கூசியது.
ஓரிரு தினங்களுக்கு முன்புகூட, குமரன் நகரில் நாங்கள் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்குப் பத்திரிக்கை வைத்தேன். எதிரேதான் இருந்தது கெவின் அண்ணனின் வீடு. இருந்தும், அவரை பார்த்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக அந்தத் தெருவைவிட்டு ஓட்டமெடுத்தேன். என் திருமணம் குறித்து அறிந்தால் அவர் நிச்சயம் மகிழ்வார் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், பத்திரிக்கை கொடுக்கும் தருணத்தில், தன்னுடைய கல்யாணம் நின்றுபோன நினைவு அவருக்குள் எழுந்துவிட்டால்? ஒரு நொடிகூட அவர் மனம் தளர்ந்துவிட்டால்? அதை நான் எவ்வாறு எதிர்கொள்வேன்? அந்த யோசனையும் அவரை நேரில் சந்திப்பதை நான் தவிர்த்ததற்கான காரணங்களில் ஒன்று.
ஆனால், இன்று அப்பா கெவின் அண்ணாவிற்குக் கண்டிப்பாகப் பத்திரிக்கை வைத்தாக வேண்டும் என்று வலியுறுத்தியதும், என் தயக்கத்தில் ஒரு விரிசல் ஏற்பட்டது. ஜென்சி ஆண்டி இறந்தபோதும், அவரது கல்யாணம் நின்றபோதும், அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாத எனக்கு —அவரை மீண்டும் நேரில் சந்திப்பதற்கு இதைக் காட்டிலும் வேறொரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று தோன்றியது. எனவே, தைரியத்தைத் திரட்டிக்கொண்டு, பத்திரிக்கையோடு அவரது வீட்டிற்குச் சென்றேன்.
ஜென்சி ஆண்டியின் இல்லாமையால், விளக்குள் ஒளிர்ந்தாலும் வீடு இருண்டிருந்தது. உயிரோட்டமில்லாத அவ்வீட்டில் வாழ்ந்த அப்பாவும் மகனும் ஜீவனற்றவர்களாகக் காணப்பட்டார்கள்.
முதலில் துக்கம் விசாரித்துவிட்டு, எனது திருமண விசயத்தைச் சொல்லி பத்திரிக்கையை நீட்டினேன்.
“ரொம்ப சந்தோசம் சிவா. நிச்சயம் வந்திடுறேன்” என்று சொன்ன கெவின் அண்ணனின் கண்களில் வலி தெரிந்தது.
நாங்கள் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கனத்த மௌனத்தோடு விடைபெற்றுக்கொண்டேன்.
என்னிடம் இப்போதும்கூட ஜென்சி ஆண்டி கைகளில் திணித்த அந்த இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறது. அந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பது ஒருபோதும் புலப்படப்போவதே இல்லை.
ந. அருண் பிரகாஷ் ராஜ்
8248170118



