இணைய இதழ் 123சிறுகதைகள்

பழைய கணக்கு (வாத்தியார்)…..! – கே.ரவிஷங்கர்

சிறுகதை | வாசகசாலை

“மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? இவ்வளவு வருஷம் கழிச்சு இது தேவைதானா? அவரு மறந்தே போய் இருப்பாரு. எனக்கும் சொல்லிச் சொல்லி போரடிச்சுப் போச்சு. மனசுல இப்படி வாலண்டிரியா இழுத்துவிட்டுட்டு இருக்கீங்க” மனைவி சுந்தரி பரிதாபமாகப் பார்த்தாள் சிவஞானத்தை. நண்பன் சக்திவேல் சுந்தரியுடன் சேர்ந்துகொண்டான். “சுந்தரி சொல்றதல தப்பு இல்ல ஞானம். எதுக்கு வேண்டாத வேல? தங்கச்சிக்கும் மனசு பாரம் ஆயிடுது”

“நீங்க ஆரம்பிச்சிட்டீங்களா…? இங்க வந்தாலே இத வுடமாட்டீங்க. கிளம்பு சக்தி. அடுத்த வாரம் திருவண்ணாமலை தீபம் வீட்ல ஏத்தறோம். அம்மாவோட வந்துடு” சிவஞானம் இரண்டு கையையும் வைத்துக் கும்பிட, சக்தி அழகுக் காட்டிவிட்டுக் கிளம்பினான். சுந்தரி வாசல்வரை சென்று அவனை அனுப்பிவிட்டுத் திரும்பினாள்.

என் வலி எனக்குத்தான் தெரியும். உங்களுக்கு ஒன்னும் தெரியாது. வேண்டாத வேலை என்று சக்தி சொல்வது விஷயத்தை ஊறப்போடுவதுதான். காரணம், அவ்வப்போது மெனக்கெட்டு கணக்கு வாத்தியாருக்குக் கடிதம் எழுதிவிட்டுக் கிழித்துவிடுவான். சில சமயம் போஸ்ட் ஆபிஸ் வரை சென்றுவிட்டுப் போஸ்ட் செய்யாமல் வந்து வீட்டில் கிழிப்பான். இதுக்கு எல்லாம் பதில் கடிதம் போட அவர் என்ன லூசா என்கிற எண்ணங்கள்தான்.

எல்லாம் செய்துவிட்டு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து, விடிகாலையில் தூங்குவான். ஒரு வாரம் இப்படி இருந்து சரியாகிவிட்டு மீண்டும் நெருடல் ஆரம்பிக்கும். இதை விட்டொழிக்க முடியவில்லை. எப்படி இம்சைப்படுத்தி இருக்கிறார் கணக்கு விஷயமாக.

இன்று முடிவு செய்துவிட்டான் கேட்க. ஸ்கூல் பைனல் முடிந்து கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டன. இன்றுதான் கேட்கப் போகிறான். அதுவும் லெட்டரில். தீவிரமாக இரண்டு நாள் யோசித்ததில் இதில் தப்போ அசட்டுத்தனமோ இருப்பதாகத் தோன்றவில்லை சிவஞானத்திற்கு. ஆசிரியரிடமே பழைய மாணவன் எடுத்துச் சொல்லும் முதிர்ச்சி அணுகுமுறையாகக் கருதிக்கொண்டான். நான் ஒரு முன்மாதிரியாக இருந்துவிடுகிறேன். அவருக்கும் இவ்வளவு வருட ஆசிரியர் வேலை அனுபவத்தில் இது புதிதாக இருக்கும்.

இன்று சிவஞானம் என்றும் இல்லாத அளவிற்கு உள்ளத்தில் தெளிவோடு இருந்தான். சரியான நேரம் இது. சாமி கும்பிட்டுவிட்டு என்று எழுத ஆரம்பித்தான்.

வணக்கத்திற்குரிய கணக்கு வாத்தியார் துரை அய்யாசாமி அவர்களுக்கு அன்புடன்,
உங்கள் பழைய பள்ளி மாணவன் சிவஞானம் எழுதும் கடிதம். மீண்டும் என் பணிவான வணக்கங்கள். அய்யா நலமா? அன்றைய வழக்கமான ‘(மேக்ஸ் )சார்’ சொல்வதைத் தவிர்க்கிறேன். நீங்கள் பரிபூரண நலத்துடன் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். மூன்று நாளைக்கு முன்பு நீங்கள் எண்பத்து ஒன்றாவது வயதில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு சதாபிஷேகம் கோலாகலமாக நடந்ததாக என் வகுப்புத் தோழன் சக்திவேல் மூலம் கேள்விப்பட்டேன்.

81 வயது மட்டும் அல்லாமல் நீங்கள் ஆயிரம் பிறைக் கண்டவர். அதற்காக என் நமஸ்காரங்கள். நான் இப்போது கொல்கொத்தாவில் இருக்கிறேன். நீங்கள் இப்போது திருச்சியில் இல்லை என்பதும் தெரியும். ஓய்வு பெற்ற பிறகு அங்கிருந்து சில ஊர்களுக்கு மாறி இப்போது சென்னையில் அனகாபுத்தூர் அருகே இருக்கிறீர்கள் என்பதும் தெரியும். கடைசியாகப் பார்த்து (குட்டு வாங்கி) 45 வருடங்கள் ஆகிவிட்டன.

இவ்வளவு இடைவெளிக்குப் பிறகும் எழுதியே ஆக வேண்டும் என்கிற உந்துதலில் இந்தக் கடிதம் எழுதுகிறேன். நேரில் சொல்வது சரிப்பட்டு வராது. வீரியம் இருக்காது. ‘ஏதோ நடந்து போச்சு’ என்பீர்கள்.
பல மாணவர்களை மறந்தாலும் என்னை மறக்கவே முடியாது உங்களால். ‘குட்டுச் சிவஞானம்’ என்ற பெயரே நிலைத்து எவ்வளவு கூசி குறுகி அவமானப்பட்டிருக்கிறேன்? ‘மேட்ஸ் சார் வரார்’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் கிண்டலாக என்னைப் பார்ப்பார்கள். அவ்வளவு பள்ளி மாணவர்களிடம், உங்களிடம் இவ்வளவு இம்சைப்பட்டது நானாகத்தான் இருக்கும். இதைத் தாங்கத்தான் முடியவில்லை.
அப்பா ‘நீ பெரிய கணக்கு வாத்தியார்னா என் பையன கணக்குல மார்க் எடுக்க வச்சு ஆடிட்டராக்குப் பார்ப்போம்’ கொளுத்திப் போட்டார். மண்டையில் கணக்குப் புகுத்துவதை வாழ்க்கைச் சவாலாக எடுத்துக்கொண்டு எனக்குக் கணக்கு வருவதற்குப் படாதபாடு பட்டீர்கள். மற்ற மாணவர்கள் பொறாமைப்படும்படி பள்ளி நேரம் தவிர மீதி நேரங்களிலும் என்னை ஸ்பெஷலாகக் கவனித்தீர்கள். என்ன பயன்? நீங்கள் நொந்து போனதுதான் மிச்சம். பிறகு வன்மம்தான் வெளிவந்தது. அப்பாவிடம் நாற்பது வருடம் சகோதரப் பாசத்தோடு பழகி, திடீரென்று ஒருநாள் வெட்டுப்பட்டுப் பிரிந்துவிட்டீர்கள். அப்பாவின் தாங்க முடியாத கோபத்தின் காரணமாகக் குடும்பத்தோடு வேறு ஊருக்குப் போய்விட்டோம். வெட்டுப்பட்ட அந்த நாள் என் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியான மறக்க முடியாத நாள். உங்கள் இருவரின் ஆடிட்டர் கனவு நொறுங்கிய நாள்.

அப்பா கண்ட ஆடிட்டர் கனவு மெய்ப்பட எவ்வளவு தலைக் குட்டல்கள்? குட்டுவதற்கு என் தந்தையார் உங்களுக்கு லைஃப் டைம் குட்டும் உரிமை கொடுத்தது எனக்குத் தெரியும். சாதா கணக்கு வகுப்பிற்கு வாங்கிய வழக்கமான குட்டுகளும் ஆடிட்டர் கனவிற்காக ஸ்பெஷலாக வாங்கிய குட்டுகளும் மறக்க முடியுமா? ஸ்பெஷல் கிளாஸில் ஸ்பெஷலாகக் கிடைக்கும் குட்டு. பெருமாள் சன்னதியில் சடாரிக்குத் தலை நீட்டுவது மாதிரி நீட்டி இருக்கிறேன். குட்டின் ‘நங்ங்ங்ங்ங்’ ஒலி காதில் ரீங்காரம் இடும்.

எவ்வளவு டேஞ்சரான இடம். ஆடிட்டர் மூளைக்கு வேண்டிய முக்கியமான மூளை இருக்கும் இடம். எப்பேர்ப்பட்ட வன்முறை அது. குட்டும் போதெல்லாம் ’ஸ்கூல் பைனல் முடியட்டும் பார்த்துக்கிறேன்’ உங்கள் மீது கரம் வைத்து, கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கிறேன்.

தூக்கத்தில் கூடத் தேய்த்துவிட்டுக்கொண்டே தூங்குவதாக அப்பா பெருமையுடன் சொல்வார். ஆனால் அதே அப்பா இறப்பின்போது இரண்டு கைகளையும் பிடித்துக் கண்ணீர்விட்டார். உங்களின் தொடர்பு அறுந்தபோதே உணர்ந்துவிட்டார். அவருக்கு ஞானம் வந்தது. உங்களுக்கு?
விஷயத்திற்கு வருகிறேன். எனக்குச் சுத்தமாக வராத சப்ஜெக்ட். நீங்களாவது, ஒரு முறையாவது யோசித்தீர்களா அய்யா? மற்ற வகுப்பு ஆசிரியர்களைக் கேட்டால் கூடச் சொல்லி இருப்பார்களே? சரி, ஆடிட்டர் ஆகிவிட்டேனா?
விஞ்ஞானம் மற்றும் கெமிஸ்ட்ரியில் சொளை சொளையாக மார்க் வாங்குவேன். இருவரும் இதைப் பொருட்டாக மதிக்கவில்லை. அதற்கு விலை கொடுத்துவிட்டீர்கள். எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது?

நான் ஆடிட்டர் இல்லை. தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம். சீஃப் கெமிஸ்டாகப் பெரிய கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறேன். “நல்லவேளை சார் அந்த சைடு போகல. கெமிஸ்டா ஆகி எங்க கம்பெனிக்கு வந்தது பெரிய வரம்” என்று சக அலுவலர்கள் அடிக்கடிப் புகழ்வது தெரியுமா?
கூடவே உங்கள் குட்டுகளும் ஞாபகம் வருவது அவர்களுக்குத் தெரியாது.

காலம் தலை சிறந்த மருந்து என்பார்கள். ஆனால் அந்த மருந்து எனக்குக் குணமளிக்கவில்லை. காலம் கடந்தாலும் சொல்வதில் தப்பில்லை என்று திடமான மன நிலையில் இருக்கிறேன். சொல்லிவிட்டேன் மேக்ஸ் சார்….! இதில் தவறு ஏதும் இல்லை.

இப்படிக்கு அன்புள்ள
அ.சிவஞானம்

கொரியரில் கடிதத்தை அனுப்பினான். மனப் புழுக்கம் போய் புது உலகில் பிரவேசிப்பது போல உணர்ந்தான். முக்கியமாக இன்று நல்ல தூக்கம் வரும்.

பத்து நாள் கழித்து சிவஞானம் விலாசத்திற்கு ஒரு கொரியர் வந்திருந்தது. அனுப்புநர் பகுதியில் ‘திருவாளர் துரை அய்யாசாமி’ என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு பக்கம் இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் படபடப்பு ஆரம்பித்தது. தன்னிச்சையாக உச்சந்தலையைத் தடவிக்கொண்டான்.

உள்ளே ஏ4 சைசில் மடித்து வைக்கப்பட்டிருந்த தாளைப் படபடப்புடன் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்.
அன்புள்ள என் பழைய மாணவன் ஏ. சிவஞானத்திற்கு,
என் ஆசீர்வாதங்கள். நான் நலம்தான் ஞானம். கடிதம் கண்டேன். மகிழ்ச்சி. இவ்வளவு வருடம் உன் ஞாபகத்தில் இருந்திருக்கிறேன். எப்படி வெறுத்திருக்கிறாய். இவ்வளவு வருட இடைவெளியில் உன் மனத்தாங்கலைத் தைரியமாகக் கடிதத்தில் கொட்டி இருந்தது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த விவேகம் எனக்கு இல்லை. நம்பவே முடியவில்லை. என்னை மன்னித்துவிடு ஞானம். உன் கடிதம் என்னை உலுக்கிவிட்டது; கலங்கியும் விட்டேன். மனதில் வைத்துக்கொள்ளாமல் நிம்மதியாக இரு. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. அங்கு எல்லோரும் நலம்தானே. இங்கும் எல்லோரும் நலம். நேரில் சந்திக்கத் தைரியமில்லை. அதனால் நீயும் தவிர்க்கவும்.
இப்படிக்கு அன்புடன்,
அய்யா துரைசாமி (Retired Head Master)

நம்ப முடியாமல் உறைந்து போய் பார்த்தபடி, “எதுக்கு அய்யா மன்னிப்பெல்லாம். ஏதோ தெரியாமல் எழுதிட்டேன். உலகம் தெரியாத சின்னப் பையன்” இலேசாகக் கண் கலங்கி முணுமுணுக்கும்போது சட்டென்று கடிதத்தின் கடைசி இரண்டு வரிகள் மனதில் உறுத்தின. சாரின் கையெழுத்தையும் பார்த்தான்.

போன வாரம் வந்திருந்தபோது மனைவியிடம் “ஒன்னும் மனசுல போட்டு உழப்பிக்காத சுந்தரி. கூடிய சீக்கிரம் இத ஒரு வழிக்குக் கொண்டு வந்துடுலாம். எவ்வளவு நாள்தான் இப்படி? உன்னையும் கூட்டு சேர்த்துப் படுத்தறான்” சிரித்துக்கொண்டே சக்திவேல் சொன்னது ஞாபகம் வந்தது.

காதைப் பொத்திக்கொண்டான். அப்படி இருக்காது. படித்து முடிக்கும் வரை அய்யாதான் நிறைந்திருந்தார். மன்னிப்பும் கேட்டுவிட்டார். நேரில் பேசுவது மாதிரி இருந்தது. அய்யாதான் அய்யாதான்…! மேக்ஸ் சார்தான்…..! அவர்தான் எழுதியிருக்கிறார். திருப்தியாகிவிட்டேன். இது போதும். மேற்கொண்டு விசாரித்து இதைக் கலைக்க விரும்பவில்லை.

ravishankark57@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button