
“அகிலா! அகிலா!”
அடுக்களையில் காப்பி கலந்துகொண்டிருந்த அகிலா கையில் காப்பி டம்ளருடன் ஹாலுக்கு வந்தாள்.
நடேசனுக்கு அவர் மனைவி போனபின் வீட்டில் எல்லாமே அவர் தங்கை அகிலாதான். ஒவ்வொன்றுக்கும் அவள் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட்டுக்கொண்டிருப்பார்.
“நீ குடிக்கலியா?” காப்பியை ரசித்துக் குடித்துக்கொண்டே நடேசன் கேட்டார்.
“இதோ!” என்று சிரித்துக்கொண்டே கையில் ஒரு டம்ளர் காப்பியுடன் வந்து ஹாலில் ஓர் ஓரமாக உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தாள் அகிலா.
“இன்னிக்குதான் உனக்குக் கொஞ்சம் ரெஸ்ட் இல்லியா?” என்றார் நடேசன் கனிவாக.
நேற்றுதான் கோடை விடுமுறைக்கு வந்திருந்த அவருடைய இரண்டு பெண்களும் பேரக்குழந்தைகளும் அவரவர் ஊருக்குக் கிளம்பினார்கள். ஓய்வு ஒழிச்சலின்றி அகிலாவிற்கு வேலை. அவர்கள் கிளம்பும்போது திரட்டுப் பால் கிளறி, ஓமப்பொடி செய்து கொடுத்து வழியனுப்பி வைத்தாள். திரும்பக் குழந்தைகளுக்கு ஏதாவது லீவு இருந்தால்தான் வருவார்கள். அதுவரை நடேசனும் அகிலாவும்தான் அந்த வீட்டில்.
அகிலா தன் பதினேழாவது வயதில் கல்யாணமாகி அடுத்த வருடமே கணவனை இழந்து நடேசன் வீட்டுக்கு மதுரைக்கு வந்தவள்தான். அவள் இங்கே வந்து சில வருடங்களிலேயே நடேசனின் மனைவி பார்வதி நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகிவிட்டாள்.
அகிலா பம்பரமாய் சுழன்று வீட்டை நிர்வாகம் செய்து, குழந்தைகளை வளர்த்து, சுகவீனமாக இருந்த மன்னியையும் கவனித்துக்கொண்டாள். பார்வதி நாற்பது வயதிலேயே போய்ச் சேர்ந்தும்விட்டாள். அதன் பிறகு அத்தை அகிலாதான் குழந்தைகளுக்குத் தாய் ஸ்தானத்தில் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டாள்.
இரண்டு பெண்கள், ஒரேயொரு பிள்ளை. நடேசனுக்குத் துணையாக நின்று பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைத்தது, பிரசவம் பார்த்தது எல்லாமே அகிலாதான். நடேசனின் ஒரே மகன் பாலாஜி சென்னையில் வங்கியில் வேலையில் இருக்கிறான். அவனுக்குக் கல்யாணத்திற்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாலாஜிக்கும் ஒருவழியாகக் கல்யாணம் ஆகிவிட்டது. அவன் பணிமாற்றலில் மதுரைக்கே வந்துவிட்டான். அவன் மனைவி லீலா குடும்பத்திற்கேற்ற பெண். அத்தையிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டாள். அவளுக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. தன் வம்சம் வளர ஆரம்பித்துவிட்டது என்று நடேசன் அகமகிழ்ந்து போனார். அகிலா அண்ணனின் பேரனைச் சீராட்டிப் பாராட்டிக் கவனித்துக்கொண்டாள்.
கணவன் போனபின் அகிலா எப்போதாவதுதான் புகுந்த வீட்டில் ஏதாவது நல்லது, கெட்டது என்றால் சேலத்திற்குப் போய் வருவாள். ஒருமுறை அப்படிப் போனபோது பூர்வீக வீடு ஒன்று விற்று அவள் கணவன் பங்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் அவளிடம் கொடுத்தார்கள். அவளுக்கு ஒரே பூரிப்பு. அவள் தேவைகள் அனைத்தையும் அவள் அண்ணா கவனித்துக்கொண்டாலும் வாழ்வில் முதன்முதலாக அவள் கையில் அவளுக்கென்றே ஒரு தொகை கிடைத்திருக்கிறது. அதை அண்ணாவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
“அண்ணா! எப்படியிருந்தாலும் என் கடைசி மச்சினர் பிள்ளை பிச்சுமணிதான் எனக்குக் கொள்ளி போட்டு காரியமெல்லாம் பண்ணணும். என் கையில ஒத்த பைசா காசில்லாம வெறுமனே அவனை எப்படி எனக்குக் காரியம் செய்ய சொல்றதுன்னு யோசிச்சிண்டிருப்பேன். இப்போ பாரேன்! அவன் கையில் கொடுக்க ஒரு தொகை கிடச்சிருக்கு பார்த்தியா? அதான் ஒரே சந்தோஷமா இருக்கு! இதைப் பத்திரமா பேங்கில போட்டு வச்சிருந்து, எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவனைக் கூப்பிட்டுக் காரியம் பண்ண வச்சு இதை மறக்காமக் கொடுத்துரு!” என்றாள்.
‘அகிலா மனதில் இப்படி ஓர் ஆசை இருக்கா?’ என்று வியப்போடு அவளைப் பார்த்த நடேசன் ஒன்றும் சொல்லாமல் அடுத்த நாளே அதைத் தன் வங்கிக் கணக்கில் போட்டுவிட்டு வந்தார்.
ஓர் அமாவாசையன்று தர்ப்பணம் முடித்துச் சாப்பிட்ட நடேசன் எப்போதும் போல் மத்தியான சிறு தூக்கத்திற்காகத் தன் ஈஸி சேரில் போய் சாய்ந்துகொண்டார். மூன்று மணிக்குக் காப்பிக்கு அகிலா எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டது.
திடீர் மாரடைப்பு என்றார்கள். வாழ்க்கையில் தன் கடமைகளைச் சரிவர முடித்து ஒரு நிறைவைக் கண்டுவிட்டார். அந்த நிறைவிலேயே பிராணன் நிம்மதியாகப் பிரிந்துவிட்டது என்று ஒரு சாரார் வியாக்கியானம் செய்தார்கள்.
எது என்னவோ, அகிலாதான் பெரிதும் அதிர்ச்சியடைந்துவிட்டாள். கூக்குரலிட்டு அழுதாள்.
“அண்ணா! ஒன்னை நம்பி என் காசை குடுத்தேனே? அதைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லாமலேயே போயிட்டியே?” என்று புலம்பினாள்.
இதைக் கேட்ட பாலாஜி திடுக்கிட்டுப் போனான். லீலாவிடம் “அத்தை என்ன சொல்கிறாள் புரியலியே! அப்பா ஒன்னும் சொல்லலியே?” என்றான்.
அவளும் “எனக்கும் ஒன்றும் தெரியாது. அப்பா என்கிட்டேயும் ஒன்னும் சொல்லல! ஆனா அத்தை பரிதவிக்கிறதைப் பார்த்தா பாவமா இருக்கே? பேசாம அத்தைகிட்டேயே கேட்டுடுங்கோ!” என்றாள்.
அகிலாவின் புலம்பல் அதிகமாகிக்கொண்டே போனது.
“நான் இப்படி மோசம் போயிட்டேனே! யார்கிட்டேயும் சொல்லாம போயிட்டானே! அண்ணா மொதல்ல போயிடுவான்னு எனக்குத் தெரியலியே! நா கொடுத்த காசை இப்போ யார்கிட்டே போய் நான் கேக்குறது?” என்று அழுதாள்.
பாலாஜிக்கு கோபமும் ஆத்திரமும் தாங்கவில்லை. கணவன் போன நாளிலிருந்து இந்த வீட்டில்தான், சகோதரன் தயவில்தான் இருக்கிறாள். அவள் தேவைகள் அனைத்தையும் அப்பா கவனித்துக்கொண்டார். அப்படி இருக்கும்போது அண்ணா மறைவுக்குப் பிறகும் அவர் பிள்ளை தன்னைப் பார்த்துக்கொள்வான் என்று ஏன் அவளுக்குத் தோன்றவில்லை. அது என்ன அப்படிப்பட்ட அவளோட காசு?
அகிலாவைக் கோபமாக ஒரு பார்வை பார்த்த பாலாஜி லீலாவிடம், “அவளை அழாம பொலம்பாம இருக்கறதானா இங்க இருக்கச் சொல்லு!” என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு காரியங்களைக் கவனிக்க வெளியே சென்றுவிட்டான்.
சுபாவத்திலேயே சற்று முன்கோபியான பாலாஜி, அன்றுடன் தனக்கும் அத்தை அகிலாவிற்கும் சொந்தம் அறுந்துவிட்டது என்பது போல, மேற்கொண்டு அத்தை அதே வீட்டில் இருந்தபோதிலும் அவளைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் அவளுடன் பேசாமல் முறைப்பாகவே இருந்தான்.
அப்பாவின் வங்கிக் கணக்கை முடித்துப் பணம் எடுக்கப் போனபோது, அப்பாவின் மாதாந்திர பென்ஷன் பணத்தைத் தவிர, ஒரு பத்தாயிரம் உபரியாக அப்பாவின் வரவில் இருந்ததைப் பார்த்தான். ஆனால் அதைப் பற்றி யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. அத்தையிடம் பேசியிருந்தால் அதைப் பற்றித் தெரிந்திருக்கும். வீம்பாக அத்தையிடம் பேசாமல் இருந்ததால், அந்தப் பணத்திற்குக் கணக்கு அவனுக்குப் புரியவில்லை.
தான் மார் மேலும் தோள் மேலும் போட்டு வளர்த்த பாலாஜி தன்னுடன் பேசவில்லை என்பதால் மனம் நொந்து போன அகிலா அப்போதிலிருந்து வீட்டில் யாருடனும் சரியாகப் பேசாமல் ஒரு மூலையில் முடங்கிக்கிடந்தாள். ஒரே வருடத்தில் அண்ணனைப் பின்பற்றி வீட்டிலேயே மாரடைப்பில் போய்ச் சேர்ந்தாள். அத்தையின் புக்ககத்து மனிதர்களுக்குத் தகவல் போக, அவள் மச்சினர் பையன் பிச்சுமணி வந்து கொள்ளி போட்டுவிட்டுப் போனான்.
பாலாஜிக்கு வங்கி அதிகாரியாகப் பதவி உயர்வில் திருச்சிக்கருகே திருவெறும்பூர் கிளைக்கு மாற்றல் ஆகிவிட்டது.
ஒருநாள் வங்கியில் கஸ்டமர்கள் அமரும் இருக்கையில் ஒரு மடிசார் புடவை கட்டிய பெண்மணியை உட்கார்த்தி வைத்துவிட்டு, சதீஷ், பாலாஜியிடம் வந்தான். அடிக்கடி வங்கிக்கு வருவதால் அவனுடன் பாலாஜிக்கு நல்ல பரிச்சயம் இருந்தது.
“என் தாயாருக்கு இங்கே ஒரு அக்கவுண்ட் இருக்கு. ஏ.டி.எம். கார்ட் எக்ஸ்பயர் ஆயிடுத்து. புது கார்ட் இன்னும் வரல. அதான் விசாரிச்சிட்டுப் போகலாம்னு வந்தேன்! கேஒய்சி வேற கேட்டு மெசேஜ் வந்தது. அதான் ஃபார்ம்ல, அம்மா கையெழுத்து வேணுமேன்னு அவங்களையும் அழைச்சிக்கிட்டு வந்தேன்.” என்றான் புன்சிரிப்புடன்.
பாலாஜி தூரத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணியைத் தலையை உயர்த்திப் பார்த்தான். அசப்பில் அவன் அத்தை அகிலா மாதிரி இருப்பதுபோலத் தோன்றியது. எப்படியிருந்தாலும் அந்தப் பெண்மணிக்கு 75 வயதிற்குக் குறையாமல் இருக்கும். இந்த வயதில் ஏ.டி.எம். கார்டா? அவங்களுக்கு உபயோகிக்கத் தெரியுமா?
தன் மனதில் எழுந்த சந்தேகத்தை சதீஷிடம் கேட்டுவிட்டான்.
சதீஷ் சிரித்துக்கொண்டே “சார்! நான் ஒரே புள்ளை அவங்களுக்கு. அப்பா சின்ன வயசிலேயே போயிட்டார். அவங்களுக்கு என்ன வேணும்னாலும் அவங்க கேக்கறதுக்கு முன்னாலேயே நான் வாங்கிக் கொடுத்துவிடுவேன். ஆனா ரெண்டு வருஷத்துக்கு முன்ன, தனக்குன்னு ஒரு வங்கிக் கணக்கு வேணும்னு அம்மா கேட்டதும்தான், அவங்களுக்கு ஒரு பொருளாதாரச் சுதந்திரம் கொடுக்காம விட்டுட்டோமோன்னு மனசில ஒரு பொறி தட்டி, ஆரம்பிச்சு கொடுத்தேன். மாசாமாசம் ரெண்டாயிரம் அதில போட்டுடுவேன். ஏ.டி.எம். கார்ட் வேற வாங்கிட்டாங்களா, ஒரே தூள் கௌப்பறாங்க. பேரனைக்கூட அழைச்சிக்கிட்டுப் போய் ஏ.டி.எம்ல பைசா எடுக்க வச்சு அவன் பொறந்தநாளுக்கு ட்ரெஸ் வாங்கிக் கொடுக்கிறதென்ன, மத்த உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது பழம், பூன்னு தனக்குத் தோன்றியதை மகிழ்ச்சியா வாங்கிக் கொடுப்பதென்ன, எனக்கும் என் மனைவிக்கும் திருமண நாளுக்குப் பரிசு வாங்கிக் கொடுக்கிறதென்னன்னு அவங்க விருப்பத்துக்குச் செலவழித்து எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க தெரியுமா? “
பொருளாதாரச் சுதந்திரம்! பாலாஜிக்குப் பொட்டில் அறைந்தாற்போல் அகிலா அத்தை, அப்பா போனபோது புலம்பியதற்குக் காரணம் விளங்குவது போலிருந்தது. ‘என்னதான் தங்கள் வீட்டிலேயே வைத்துக்கொண்டு சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து, அத்தையின் தேவைகளைக் கவனித்தபோதும், அத்தை, தனக்கென்று தன் கையில் கொஞ்சம் பணம் இருக்கணும்னு நெனச்சதில என்ன தப்பு இருக்கு? அதுவும் அவள் புகுந்த வீட்டில் அவள் பங்காகக் கிடைத்த பணம், அவளுடைய பணம்.’
அப்பா இறந்தபோது, “அத்தைக்கு என்ன குறை இந்த வீட்டில? அவ தேவைகள் எல்லாத்தையும் அப்பா கவனிச்சிண்டுதானே இருந்தா?” என்று தான் சொன்னபோது, “பதினெட்டு வயசிலேருந்து இந்த வீட்டில ஓயாம ஒழச்சவாளுக்கு நாம அவா தேவைகளைக் கவனிச்சா மட்டும் போதுமா?” என்று லீலா சொன்னது நினைவுக்கு வந்தது. அன்றைக்கு இருந்த கோபத்தில் “பின்ன என்ன அவளுக்கு வைர நெக்லஸா வாங்கிக் கொடுத்திருக்கணும்னு சொல்ற?” என்று அவளிடம் எகிறியது நினைவுக்கு வர மனம் நொந்து போனது.
‘அத்தையை மனசார என் அம்மாவா நெனச்சிருந்தா சதீஷைப் போல அவளுக்கு ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணி ஏ.டி.எம். கார்டும் வாங்கிக்கொடுத்திருப்பேனோ? சே! சே! சே! என்ன மனுஷன் நான்? தாயைப் போலக் கூடவே இருந்து வளர்த்த அத்தையை வெறும் காசு பணத்தால எடை போட்டு…. கடைசி வரை பேசாம இருந்து தண்டித்து…..’ பாலாஜியால் எவ்வளவு முயன்றும் தன்னை மன்னித்துக்கொள்ளவே முடியவில்லை. மனசு நொந்து சுக்கல் சுக்கலாய்ப் போனது. எந்த விசேஷ நாளில் நமஸ்காரம் செய்தாலும், “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்” என்று மனதார ஆசீர்வாதம் செய்யும் ஓர் அன்பான ஜீவனை மனசு நொந்து போக வைத்த தன்னுடைய குற்றத்திற்கு பிராயச்சித்தமே கிடையாது என்று வருத்தத்தோடு நினைத்துக்கொண்டான்.
அகிலா அத்தை இறந்து போன பின் அவள் போட்டோ ஒன்றைப் பெரிதாக்கி ஹாலில் லீலா மாட்டினாள். பாலாஜி அதைப் பார்த்து கோபமாகக் கத்தியவுடன், தனக்குப் பயந்து அதைக் கழற்றி ஷெல்ஃபில் அவள் வைத்தது நினைவுக்கு வந்தது. அன்று மாலை வீட்டிற்குச் சென்றதும் அத்தை போட்டோவை எடுத்துத் துடைத்து ஹாலில் அப்பா, அம்மா போட்டோக்களுக்கருகே மாட்டி “என்னை மன்னிப்பாயா அத்தே?” என்று கண்ணீருடன் மானசீகமாகக் கேட்டான்.



