Uncategorizedஇணைய இதழ் 123சிறுகதைகள்

முத்தத்தின் வாசனை! – ராம் சங்கர்

சிறுகதை | வாசகசாலை

“உனக்கு என்ன வேணும்?”

“எனக்கு என்ன வேணும்” எனத் தாமதிக்காமல் அவள் கேட்ட மறு கேள்வியால் உருவான மௌனம், அந்த மங்கலான அறையை ஆரத்தழுவியது. மௌனத்தின் வெப்ராளம் தாளாமல் மீண்டும் கேட்டான்…

“உனக்கு என்ன வேணும்?

“என் தலையை மட்டும் தொட்டு உன் மார்போடு அழுத்தி ஒரு நிமிஷம் கழிச்சு நெத்தில ஒரு முத்தம் தருவியா?”

“இதைக் கேட்க ஏன் தயக்கம்… வா. அறையின் மௌனம் என்னுடைய உள்ளங்களில் கொதித்துக்கொண்டிருந்தது. ஆனா, காஸ்ட்லியா எதாவது பொருளா கேளேன்!”

“எனக்கு இது போதும்… முடிஞ்சா இன்னும் கொஞ்ச நேரம் எங்கூட இப்படியே இரு!”

“ஒருநாளைக்கு நீ அத்தனை பேரச் சந்திக்கிற. எல்லாரும் உன்னை அணைப்பாங்க. ஏன், நாம இரண்டு பேரும் இவ்வளவு நேரம் அப்படித்தான இருந்தோம். அதுல இருந்து இந்த சில நிமிடங்கள்ல அப்படி என்ன ஸ்பெஷல்?”

தோள்ல சாய்ந்தபடியே அவன் கலங்கிய கண்கள், நடுங்கும் உடலோடு… “இங்க வர்றவங்க எல்லாரும் அவங்களோட நாற்றத்தை என் மேல பூசி, என்னோட வாசனையை எடுத்துட்டுப் போவாங்க. அப்படிப் போகும்போது, “உனக்கு என்ன வேணும்”னு கேட்டதில்லை. அடுத்த தடவை வந்தாலும் நீதான்னு மட்டும் சொல்லுவாங்க. எனக்கு அப்படி என்ன இந்த உடல்ல இருக்குனு தோணும்”.

“ம்ம்ம்…”

“எனக்கு நினைவு தெரிஞ்ச நாளைல இருந்து என் தலையை நெஞ்சோட அணைச்சு யாராவது உனக்கு என்ன வேணும்னு கேட்டு என் நெத்தில முத்தம் தரணும்னு ஆசை. இப்போ எனக்கு 27 வயசு. இன்னைக்குதான் அந்த ஆசை நிறைவேறியிருக்கு”.

“ம்ம்ம்…”

“உனக்கு நேரம் ஆகுதா… நீ அடுத்த முறை வரும்போது நான் இங்க இருக்கமாட்டேன்”.

“ம்ம்ம்…”

“ஒரு ரஷ்ய கதைல வரும் சம்பவம் போல இப்போ இருக்கு”.

“ஹாஹாஹா… அப்போ, இது நிஜம்னு உனக்குத் தெரியலையா?”

“என்னோட வாழ்க்கைல எப்பவுமே நான் தஸ்தயெவ்ஸ்கியின் வீதிகள்லதான் நடந்துட்டு இருப்பேன். எல்லாரும் அவரை படிச்சுட்டு தனிமை, வெறுமை, குற்றவுணர்ச்சினு பேசுவாங்க. ஆனால், எனக்கு அவரோட வீதிகள்ல நடக்குறப்ப காற்று எனக்கு மட்டுமே அடிக்கும். ஏதோ, இறக்கை முளைச்ச மாதிரி ரெண்டு கைகளையும் நீட்டி பறப்பேன். எனக்கு மதுக்கோப்பைகள் கிடைக்கும். ரொட்டித்துண்டுகள் கிடைக்கும். சாலையின் இறக்கங்கள், ஏற்றங்கள்ல பறந்துட்டே இருப்பேன். அப்போதான் கதவு தட்டுற சத்தம் கேட்கும். ரெக்கைகள் இல்லை கைகள், வெண்ணிறமான இரவுகள் இல்லை, காற்று இங்க ஏசி மட்டும்தான், மதுக்கோப்பைகள் இல்லை… இப்படியா ஒவ்வொன்னா உதிர்ந்து விழுந்து இந்த உடல் மட்டும் எனக்கு இருக்கும். நான் சொல்றது உனக்குப் புரியுதா? தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்யாலாம் தெரியுமா? எங்க தஸ்தயெவ்ஸ்கினு சொல்லு பார்ப்போம்!”

சிரிச்சிட்டேஅவன் ‘ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி’னு சொன்னான். அவளுடைய கண்கள் விரிந்து, மங்கிய அறையின் ஒளியைக் கூட்டின.

“இப்போ, நீயும் அந்த தெருல எங்கூட இருக்க. நான் யாரையும் அங்க வர அனுமதிச்சதில்லை. முதல் முறையா தஸ்தயெவ்ஸ்கி தெரிஞ்ச ஒருத்தனைப் பார்க்குறேன். என்னோட நாட்கள், வாழ்க்கை இந்த அறைக்குள்ளயே அடங்கிடும். வெளியப் போனா, எனக்கு ரஷ்யாதான். ஆனால், ரஷ்யாக்கு அடிக்கடி போக முடியாது”.

“ம்ம்ம்… நான் கிளம்பட்டுமா”ன்னு அவன் கேட்க…

“ஏன் ஆண்கள் எப்பவுமே அவசரமாகவே இருக்கீங்க. உங்க வாழ்க்கைல பொறுமையே கிடையாதா?”.

“ஹாஹாஹா… ஏன் அப்படி கேட்குற?”

“வரணும், போணும்… எனக்குப் பேச யாருமே இல்லை. வர்றவங்ககூட பேசலாம்னா… அவங்களுக்கு உரையாடல் எப்படி இருக்கும்னே தெரியலை. நான் சந்திக்கிற ஆண்கள் மட்டும்தான் அப்படியா? எல்லாருமே அப்படியா?”

“எனக்குத் தெரியலை.”

“டீ கேட்ருக்கேன். அந்த டீ உனக்கும் சேர்த்து சொல்லிருக்கேன். குடிச்சிட்டு கிளம்ப முடியுமா?”

“ம்ம்ம்…”

“என்னோட பக்கெட் லிஸ்ட்ல ஒரு விஷயம் நடந்துருச்சு. இன்னொன்னு நடந்துட்டு இருக்கு!”

“வேற என்னென்ன உன்னோட பக்கெட் லிஸ்ட்ல இருக்கு?”

“டீக்கடைக்குப் போய், சுதந்திரமா நின்னு ஒரு டீ குடிக்கணும். கடற்கரைக்குப் போய் அந்த காத்துல கஷ்டப்பட்டு தம் பத்த வைச்சு அடிக்கணும். உண்மையாவே இரவும் பகலும் கலக்குற அந்த வெண்ணிற இரவைக் கண்கூடா பார்த்து என் கைகளை உரசி, கன்னத்துல வைக்கணும். அவ்வளவுதான்!”

“இதெல்லாம் தினமும் எல்லாரும் பண்றதுதான… இதுல ஸ்பெஷல் என்ன இருக்கு?”

“உனக்குச் சாதாரணமா தெரியுறதெல்லாம். எனக்கும் சாதாரணமா இருக்கணும்னு அவசியம் இல்லையே!”

“ம்ம்ம்…”

கதவு தட்டுற சத்தம்… சில்வர் கவர்ல டீ. இரண்டு பேப்பர் கப்பு. கதவை இலேசா திறந்து கைகளை மட்டும் நீட்டிக் கொடுத்தது. அவளும் அதை வாங்கிட்டு டேபிள்ல வைச்சு கப்பைத் தனித்தனியா எடுத்து டீயை ஊத்துனா… ஒரு கப் எனக்குக் கொடுத்தா… நான் குடிக்க ஆரம்பிச்சேன். “எனக்குக் கண்ணாடி கிளாஸ்ல டீ குடுக்கணும்னும் பக்கெட் லிஸ்ட் இருக்கு!”

“நீ என்ன நரகத்துலயா இருக்க? ஒருநாள் வெளிய போனாலே உன்னோட பக்கெட் லிஸ்ட் முடிஞ்சிடுமே. போக வேண்டியதுதான…!” திடீரென உதிர்ந்த அறையின் அமைதியை அவளது பெருமூச்சு கலைத்தது.

“இந்த பக்கெட் லிஸ்ட் மட்டும்தான் என்னோட வாழ்க்கையே. அதுக்கான நாள் இன்னும் வரலைனு தோணுது. அதுமட்டுமில்ல, இதையும் பண்ணி முடிச்சிட்டா… என்னோட வாழ்க்கைல வேற எந்த ஆசை, கனவுகளோட நான் வாழ்றது. சில சமயம் நிஜத்துல நடந்துட்டா… கனவுகள் சுவாரஸமற்று போய்டுமோனு பயம்…”

“கனவு கனவா மட்டுமே இருக்குறதுல என்ன அர்த்தம்?”

“ஒருவேளை அந்தக் கனவுகள் மட்டும்தான் வாழ்க்கையை நகர்த்துறதா இருந்தா… அதுதான அர்த்தம்!”

“அப்போ, இதெல்லாம் நடக்கலைனாலும் உனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லையா?”

“அதைப் பத்தி நான் யோசிச்சதில்லை. ஆனா, இதெல்லாம் நடந்து முடிஞ்சதும்… என் வாழ்க்கைல எல்லாமே நடந்து, முழுமையடைந்து, அதன்பிறகு நான் வாழ்றதுக்கான தேவை இருக்காதுன்னு நினைச்சிருக்கேன்!”

“உன்னோட இந்த ஆசைகள் நிறைவேறிடுச்சுன்னா… அடுத்து வேற எதாவது பெரிய ஆசைகள் உருவாகலாம்ல?”

“என்னோட இந்த ஆசைகள் பெருசு இல்லைன்னு நினைக்கிறியா?”

“உனக்கு பெருசுதான்.”

“ம்ம்ம்… சரி, இங்க யார் வந்தாலும் ஒரு கேள்வி தவறாமல் கேப்பாங்க. இவ்வளவு நேரம் பேசியும் நீ அதைக் கேட்கவே இல்லையே?”

“அது என்ன கேள்வி?”

“எப்படி நீ இப்படியான, ஏன், என்னாச்சு?”

“ஹாஹாஹா… சூழல் அமைஞ்சிருச்சு. இதுக்கான பதிலைக் கேட்டு நான் என்ன பண்றது?”ன்னு அவன் சொல்ல…

இரண்டு பேரும் சிரிப்புக்கு தெரியாமலயே சிரிச்சாங்க!

“உனக்கு எப்படிப் புத்தகங்கள் எல்லாம் பரிச்சயம் ஆச்சு? அதுவும் அறைல இருந்தே ரஷ்யால சுத்துற…”

“சரியா ஞாபகம் இல்லை. ஆனால், எனக்கு ஒரு கிண்டில் கிடைச்சுது. அதுல நிறைய வாங்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு புத்தகமும் என்னை ஒவ்வொரு ஊருக்கு அழைச்சுட்டுப்போச்சு. ஒவ்வொரு மனிதரையும் அதன் வழியாகவே தினமும் சந்திக்கிறேன். அவங்களோட கனவுகள், காதல்கள், தனிமைகள், குற்றவுணர்ச்சிலாம் எனக்கு ஆச்சரியமாகவும் சில சமயம் வேடிக்கையாகவும் இருக்கு. தஸ்தயெவ்ஸ்கியே சில நேரங்கள்ல ஏன் இவர் வாழ்க்கைல இவ்வளவு சோகம்னு தோணும். ஒருத்தரோட கவலையை உலகமே கொண்டாடுது. இவங்க வாழ்க்கை மாதிரியே இருக்குனு சொல்லுவாங்க. யாருமே சந்தோஷமா இல்லைனா… எதுக்கு இந்த உலகம்? அன்பு, அரவணைப்புனு இலக்கியம், இதுல படங்கள் வேறன்னு தோணும்!”

“ஹாஹாஹா… உனக்கு சினிமா புடிக்காதா?!”

“நான் என் வாழ்க்கைல ஒருசில படங்கள் பார்த்துருக்கேன். ஆனால், அவங்க ஒரு உலகத்தை கிரியேட் பண்ணி, அதுக்குள்ள நம்மளை கூட்டிட்டுப் போறாங்க. அங்க நான் பார்க்குற யாரையும் என்னால ரிலேட் பண்ணிக்கவே முடியுறதில்லை. ஆனா, கதைகள் அப்படியில்லை. அதுவும் ஒரு உலகம்தான், அந்த உலகத்துல எல்லாத்தையும் நான் எனக்குத் தகுந்த மாதிரி செட் பண்ணிக்க முடியும், எனக்கு புடிச்ச கலரை வீடுகள்ல அடிச்சுக்க முடியும், எனக்கு புடிச்ச முகங்களை அதுல பொருத்திக்க முடியும், என்னால அந்த கேரக்டராகவே பல சமயங்கள் வாழ முடியும். சினிமால எல்லாமே செட் பண்ணி வேடிக்கை மட்டுமே பார்க்க வைக்கிறாங்க”.

“அப்படியா தோணுது… எனக்கு அப்படிலாம் இல்லையே!”

“உனக்கு அப்படினு நான் சொல்லல. அப்படி இருக்கவும் அவசியம் இல்லை. நான் எனக்கு மட்டும் சொன்னேன்!”

“ம்ம்ம்…”

“ம்ம்ம் தவிர வேற எதாவது சொல்லேன்… இந்தப் பேச்சு இனி எனக்கும் நடக்காது. உனக்கும் நடக்காது!”

“ஹாஹாஹா… உண்மையாகூட இருக்கலாம். இவ்வளவு நேரம் நீ பேசும்போது சமீபத்துல நான் ஒரு படத்துல டெலுலுனு ஒரு கேரக்டர் பார்த்தேன். அதை அப்படியே நியாபகப்படுத்துது.”

“டெலுலுனா…”

“டெலியூஷன் மாதிரி ஒரு கேரக்டர் ஹீரோகூடவே இருக்கும். ஒரு சர்ரியல் மொமண்ட் மாதிரி…”

“நான் சர்ரியல் இல்லை. ரியல்தான்!”

“ஹாஹாஹா…”

“சரி நீ கிளம்பு!”

“சரி… நீ டீ குடிக்கலையா?”

“இல்லை…”

“ஏன்…”

“எல்லாத்துக்கும் காரணம் கேட்காத… காரணம் இருக்காது!”

“சரி… சரி…”

கதவை திறந்துட்டு வெளிய போகுறப்போ… அவன் இடது கையை புடிச்சு மீண்டும் அறைக்குள் அவள் இழுத்து… “அந்த ஹக் மட்டும் திரும்ப ஒருமுறை கிடைக்குமா…?” எனக் கேட்டாள்.

அவன் கையை நீட்ட… அவள் கைக்குள்ள வந்து இறுக்கி அணைச்சுகிட்டா.

மீண்டும் நெத்தில ஒரு முத்தம் கொடுத்தான்.

கதவுகள் அடைக்கப்பட்டன… அவனது உலகம் அவளது வாசனையால் நிரம்பியது.

சென்னை தெருக்களில் அவன்மீது மட்டும் ரஷ்யப் பனிப்பொழிவுகள் நிகழ்ந்துகொண்டிருந்தன.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button