
தெலுங்கில் நாகேந்திர காசி; தமிழில் ஸ்ரீநிவாஸ் தெப்பல.
பைப்லைன் சாலையின் அருகில் பஸ்தி. அதனை மூன்று பக்கமும் சுற்றி வளைத்து, இருபத்து நான்கு அடிகள் அகலமுள்ள குழாய் இருட்டில் அச்சு அசல் மலைப்பாம்பு போல் காட்சியளிக்கிறது. தொலைவில் தொழிற்சாலை பகுதியில் இரண்டாவது ஷிப்ட் சைரன் ஒலித்தது. குழாயில் அடர்த்தியாக, வண்ணமயமாக, நுரைகள் பொங்கியவாறு, காட்டமான வாடையுடன், மஞ்சள் நிற நீராவிகளுடன் ரசாயனங்கள் மெல்ல வருகின்றன.
மூன்று நாள்களுக்கு ஒருமுறை வரும் அந்த ரசாயனங்கள் என்றால் அந்தப் பஸ்தியில் வசிப்பவர்களுக்கு அச்சம். அன்று மட்டும் பதினொரு மணி வாக்கில் வீட்டின் கதவுகளை மூடிவிடுவார்கள். சாளரங்களுக்குப் பயன்படுத்திடாத போர்வைகளுடன் மூட்டை கட்டி, நாசிகளுக்குத் துண்டுகளைக் கட்டிக்கொண்டு படுப்பார்கள். இரண்டு மணி நேரம் வரை ராட்சதப் படையைப் போல் வாயுக்களின் தாக்குதல் இடம்பெறும். அவற்றினைச் சுவாசித்தால், சுவாசித்த பகுதியையும் நுரையீரல்களையும் நரிகள் இறைச்சியைப் பிடுங்கித் தின்பது போல் தின்றுவிடும். போர் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்தாலும், குழாயில் தண்ணீர் வாரத்துக்கு ஒருமுறை வந்தாலும் அந்தப் பஸ்தியின் மக்கள் அந்த இடத்தைவிட்டுச் செல்வதில்லை. அருகிலுள்ள தொழிற்சாலை பகுதியில் வேலை செய்யும் பல பேர் வாடகை குறைவென்று அங்கேயே வசிக்கின்றனர்.
பஸ்திக்கு ஒருபுறம் இன்னும் யாரும் ஆக்கிரமித்துவிடாத காலி இடம், வேலமரங்களுடனும் கற்களுடனும் நிறைந்துள்ளது. இருட்டுகையில் ஆங்காங்கே தெருவிளக்குகள் எரிந்தன. அந்த வெளிச்சத்தில் சில நிழல்கள் பாறைகளின் மத்தியில் படர்ந்தன. எந்த நியூஸ் சேனலின் ஆட்களாவது கண்டால் சமூக விரோதச் செயல்கள் இடம்பெறுகின்றனவென காட்டுவதற்குச் சாட்சியமாகக் கற்களின் மத்தியில் பீர் போத்தல்கள், பான்பராக் பாக்கெட்டுகள் இருக்கின்றன. அந்த மைதானத்தில் ஒருவருக்கொருவர் கண்ணில் படாமல் மூன்று நான்கு கோஷ்டிகள் வரை இருக்கின்றன.
கையில் போத்தல்கள், செல்போன் பிளாஷ் லைட் வெளிச்சத்தில் கையில் போத்தல்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள் தெரிகின்றன. சிரிஷா முகத்திற்குத் துப்பட்டாவைச் சுற்றிக்கொண்டு அந்த வேலமரத்தடியின் நிழலில் நின்று எதிர்பார்க்கிறாள். இரசாயனங்கள் வெளியிடும் அந்த நாள் யாரும் அந்தப் பகுதிக்கு வரமாட்டார்கள். அந்தக் கூட்டத்தில் ரமேஷ் இருக்கின்றானா என்கின்ற சந்தேகம் எழுந்தது. அதற்குள் குப்பென்று குழாயிலிருந்து வருகின்ற நெடியை அவர்கள் முகர்ந்தனர். குழாயின் பக்கம் பார்த்து, நான்கு மிடறுகளில் முழுமையாகக் குடித்துவிட்டு போத்தல்களை அங்கேயே விட்டுச் சென்றனர். அனைவரும் கிளம்புவதைக் கண்டு போர்வையில் வெக்கையாக இருந்தாலும் இறுக்கமாக மூச்சை இழுத்தாள்.
ரமேஷ், சிரிஷா இருவரும் அதே பஸ்தியில்தான் வசிக்கின்றனர். இருவருக்கும் இருபத்து ஐந்து வயதுதான். வேலை செய்கின்ற நிறுவனத்தின் அருகில் சந்திக்க முடியாது. ரமேஷிற்குப் பவர் ஹாலிடே வைத்துதான் விடுமுறை நாள் மாறிக்கொண்டே இருக்கும். சிரிஷாவிற்கு ஞாயிறுதான் விடுமுறை நாள். அனைவரும் அச்சப்படும் அன்று, இருவருக்கும் பிடித்தமான நாள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை ரசாயனங்களை வெளியிடும் நாளில் சந்திப்பார்கள். ஏதோ பூங்காவிற்கு வந்தது போல் அந்த இரண்டு மணி நேரமும் விண்மீன்களைக் கணக்கிட்டபடி கதைப்பார்கள். பாறையில் அமர்ந்து ஒருவரின் உடல் மற்றொருவருக்குச் சன்னமாக உரசுகையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். டீசல் கூலென்ட்டுடன் அழுக்குப் படிந்த அவனது கைகளை, தனது கைகளுடன் பற்றிக்கொண்டு புன்னகையுடன் கோலமிடுவாள் அவள். இரசாயனக் கூட்டுப் பொருள்களினால் மச்சங்கள் நிறைந்த அவளது கைகளைத் தனது உதடுகளால் அவன் முத்தமிடுவான். இரண்டு மணி நேரம் அந்த வாயுக்கள் இருவரையும் நனைத்தாலும், அந்த நெடியே அறியாதது போல் அங்கு இருப்பார்கள். விட்டில் பூச்சிகள், அவர்களும் தவிர அங்கு வேறெவரும் இருக்கமாட்டார்கள்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத சிரிஷா தொழிற்சாலை பகுதியில் ஒரு தர்மோ பிளாஸ்டிக் நிறுவனத்தில் எந்திர செய்குநராகப் பணிபுரிகிறாள். அவளது தந்தை வெல்டிங் செய்குநர். எங்கேயோ கோயம்புத்தூரிலிருந்து வந்த ஒருவருடன் ஒரு பட்டறையை ஆரம்பித்தார். மின் கசிவினால் அந்தக் கடை தீ பற்றி எரிந்ததினால், கடன்களிலிருந்து விடுபட முடியாமல் நொறுங்கிப் போனார். முன்னொரு காலத்தில் குழாய்க்கு அந்தப் பக்கம் வாழ்ந்தவர்கள்தான். தற்போது பஸ்திக்குக் குடிபெயர்ந்தனர். சிரிஷாவிற்கு ஒரு தங்கை, அவள் இடைநிலை படிப்பை அரசு விடுதியில் தங்கிப் படிக்கின்றாள். வீட்டில் கடன் தொல்லையைப் பார்க்க இயலாமல் சிரிஷா செய்குநராக வேலைக்குச் சேர்ந்தாள்.
அதே பகுதியில் ரமேஷ் ஒரு பட்டறையில் CNC எந்திரத்திற்கு உதவியாளனாகப் பணிபுரிகிறான். ITI முடித்து, பின் ஹைதராபாத் வந்து வேலைக்குச் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. அந்த CNC மிஷன் ப்ரோக்ராமிங்கில் பயிற்சி பெற்று நல்ல சம்பளத்திற்கு ஏதாவது ஒரு டூல் நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது ரமேஷின் கோரிக்கை.
பல்பொருள் அங்காடியில்தான் இருவரும் அறிமுகமானார்கள். ஊமைக் காதல் ஏறத்தாழ மூன்று, நான்கு மாதங்கள் தொடர்ந்தது. போனில் மேலும் ஒரு மாதம். அதன்பின் நேரடியாகப் பேசிக்கொண்டனர். பத்து நிமிட ஷேர் ஆட்டோவின் பயணத்தில் அறிமுகம் மேலும் அடர்த்தியானது. இருவரும் சில நேரங்களில் லஞ்ச் பாக்ஸ்களைப் பரிமாறிக்கொண்டு மாலையில் சந்திக்கையில் அந்த பாக்ஸ்கள் நிறைய வார்த்தைகளை நிரப்பி எடுத்துச் செல்வார்கள். இன்னொரு நண்பனுடன் இணைந்து இரண்டாவது தளத்தில் மெத்தை வீட்டில் வசிக்கிறான். அங்கிருந்து பார்த்தால் சிரிஷா வசிக்கும் வீடு கண்ணில் தெரியும்.
சிரிஷா அந்த வேலமரத்தடியில் நின்றுகொண்டு இருந்தாள். ரமேஷ் இன்னும் வரவில்லை. குழாயில் இரசாயனங்கள் வெளியிடும் நாளில் கண்டிப்பாக வருவான். போன் செய்தாள்; எடுக்கவில்லை. வாட்ஸப்பிலும் குறுஞ்செய்தியை அனுப்பினாள்; பதில் வரவில்லை.
துப்பட்டாவை அகற்றினால் தாங்க முடியாத நெடி. ரமேஷ் அருகில் இருக்கையில் அருகில் வராத நெடி. நேரம் ஒரு மணி ஆகின்றது. அவளது அப்பா தூக்கத்திலிருந்து கண்விழித்துவிடுவாரோவென அங்கிருந்து சென்றுவிட்டாள்.
குழாய்க்கு இந்தப் பக்கம் ஸ்ரீ சாய் பல்பொருள் அங்காடி. ரமேஷ் கண்ணை கசக்கிக்கொண்டு வந்து, “அண்ணா… ஏக் சோட்டா கோல்ட்” என்றான்.
“பய்யா, ஒரு சிக்ஷாம்பூ” என்ற சிரிஷா குரலைக் கேட்டதும், திரும்பிப் பார்த்தான். நைட்டியின் மீது துப்பட்டாவைப் போர்த்திக் கொண்டு, நெத்தியில் கொண்டையிட்டு, ஸ்டெயின்லெஸ் டூலுடன் ட்ரில் செய்தது போல் ரமேஷைத் தீவிரமாக நோக்கினாள்.
“நைட்டு ஓவர் டைம் செஞ்சேன்” என்றான் சிகரெட்டை வாங்கிக்கொண்டவாறு.
“மெசேஜ் செஞ்சேன், கால் செஞ்சேன், ரிப்ளை கொடுக்கலாமில்ல” என்றாள் கோபமாக.
அனைவரும் பட்டேல் என அழைக்கும் பல்பொருள் அங்காடியின் எஜமான் யாருக்கோ உப்புமா ரவை கட்டியவாறு கேட்டும் கேட்காதது போலவே கேட்கிறான்.
“மெஷின் ரன்னிங்ல இருக்கு, அதனால கேட்கல. சாக்லேட் வாங்கி கொடுக்கட்டுமா?” என்றான்.
“வேணாம், நீயே வாங்கிக்கோ” என்று ஷாம்பூ பாக்கெட்டை எடுத்துக்கொண்டு, காற்றில் கலந்த சிகரெட் புகை போல் மறைந்தாள்.
ரமேஷ் சிரித்தவாறு சிகரெட்டைப் பற்ற வைத்தான். முட்டைகள் வாங்க வந்த ஒரு குடும்பஸ்தன், முட்டைக் கண்களுடன் வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்தான். பட்டேலும் குதிரை கனைத்தது போல் சிரித்தான்.அந்தப் பல்பொருள் அங்காடியின் அருகே எத்தனையோ காதல் கதைகள் மலரும். சர்க்கரை, உப்புமா ரவை போன்ற தினசரி பொருட்கள் இணைத்த காதல் கதைகள்.
“என்ன விஷயம்?” என்றான் பட்டேல்.
“என்ன இருக்குண்ணா, எப்பவும் போலதான்” சிகரெட் பஃப்பை இழுத்தவாறு கூறினான் ரமேஷ்.
பட்டேல் சட்டை அவிழ்த்து பக்கத்தில் வைத்தான். பழுப்பு நிறத்தில் பனியன் அணிந்திருந்தான். கருப்பாகவும் இறுக்கமற்றும் தசைகள் தொங்கிக் கொண்டிருந்தன. மார்பில் வெள்ளை ரோமம் கொஞ்சம் வெளியே தெரிந்தது. பெரிய மூக்கு, கறை படிந்த பனை வெல்லம் நிறத்தில் பற்கள், சிறிய பூனைக் கண்கள், தளர்ந்த குரல். பார்த்த உடனே பிடிக்காமல் இருப்பதற்குத் தேவையான அத்தனை அவலட்சணங்களுடனும் செதுக்கியவாறு இருப்பான் முப்பத்து ஐந்து வயது நிறைந்த பட்டேல்.
“ஊ… ஒன்னோட எக்ஸ்போசிங்க் என்னண்ணா? நல்ல டீசர்ட்ட வாங்கி மாட்டிக்கலாமில்ல, காசு எல்லாத்தையும் என்ன பண்ணுவ அண்ணே, அதான் ஃபேமிலி கிடையாதில்ல” பட்டேலுடன் இருக்கும் நெருக்கத்தினால் கேட்டான்.
பட்டேல் சிரித்து, தனது உடலை மேலும் சற்று வெளிப்படுத்தினான்.
“என்னால முடியல அண்ண” என அங்கிருந்து வெளியேறினான் ரமேஷ்.
வழக்கமாகக் கேட்கும் குதிரை கனைத்தல் போன்ற சிரிப்பு பின்புறத்திலிருந்து கேட்கின்றது.
வீதியில் நடந்துகொண்டே சிரிஷாவிற்குப் போன் செய்தான். அவள் அழைப்பை எடுக்கவில்லை. இன்னும் இரண்டு மூன்று நாள் வரைக்கும் காத்து கிடக்கவேண்டுமாவென மனதில் நினைத்தான்.
வீதியில் பேச்சிலர் அறைக்கு அருகில் ஐந்து கிலோ சிலிண்டர் மேலிருந்து முட்டைப் பொரியல், வெங்காயத்தின் வாசனை. ஃபேமிலி போர்ஷன்களுக்கு அருகில் குக்கர் விசில்ஸ் காவலாளிகளின் விசில் சப்தம் போல் ஒலிக்கின்றன. குழாயில் தண்ணீரும் வெளியிட்டதினால் மேலும் ஆரவாரமாக இருந்தது வீதி. பல பெண்கள் இன்று தலைக்குக் குளிப்பார்கள்.
ரமேஷ் அறைக்குச் செல்வதற்குள் அறை தோழன் சீனு குழம்பைச் சமைப்பதற்காகத் தக்காளிகளை நறுக்குகிறான்.
“ஒங்க லேடிஸ் பேசுனாங்களா?” என்றான்.
“இல்லை”
“போன்ல நாளைக்குக் கண்டிப்பா பேசும்.”
“எப்படி?”
“டேய், நாளைக்கு லவ்வர்ஸ் டே. மார்க்கெட்ல பரபரப்ப பாக்கலையா, கிப்ட் வாங்கிட்டியா?”
ரமேஷிற்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. பத்து நாள்களுக்கு முன்பாகவே ரோஜா நிறச் சுடிதார் வாங்க வேண்டுமென நினைத்தான்.
சம்பளம் வந்ததும் வீட்டிற்குக் கொஞ்சம், வாடகைக்கு, பட்டேலிடம் பல்பொருள்களுக்கும் செலுத்தினான். தினமும் பட்டறைக்குச் சென்று வருவதற்குத் தவிர கையில் சல்லி பைசா இல்லை. அறிமுகமாகி ஓராண்டு கடந்துவிட்டாலும் இதுவரை அவளுக்கு எதுவும் வாங்கித் தரவில்லை. எப்போதாவது ஒருமுறை சினிமாவிற்கு அழைத்துச் செல்வது தவிர.
“நான் சம்பளம் வந்தப்பவே சொன்னேன்” என்றான் சீனு.
“லவ்வர்ஸ் டேக்குதான் கொடுக்கணுமா? ஒருவேளை பர்த்டேக்கு கொடுத்தா?”
“பர்த்டேக்கு அந்த பொண்ணோட அப்பங்காரன் கொடுப்பான். லவ்வர்ஸ் டேக்கு நீ மட்டும்தான் கொடுக்கணும். அன்னைக்கு எதுவுமே கொடுக்கல்லன்னா உன்னை யாராவது லவ்வருன்னு சொல்வாங்களா. வெளியில போய் பாருடா. இதென்ன நம்ப ஊருன்னு நினைச்சியா, நம்ம ஊர்லயும் இப்ப எல்லாம் செலப்ரேட் பண்றாங்க.”
“ஒன்கிட்ட ஏதும் காசு இருக்கா?”
“நம்ம ரெண்டு பேருதானடா முந்தா நேத்து எங்க மாமா கேட்டரிங் வைக்கிறான்னா எங்க அக்காகிட்ட பத்தாயிரம் ரூவாவும்…. என்னோட முழுச் சம்பளத்தையும் கொடுத்துட்டு வந்தது.”
“இல்லன்னா ஒங்க அக்காகிட்ட ஒரு ரெண்டாயிரம் ரூவா கேட்கிறியா?”
“ஊ… அப்படின்னா சாயங்காலம் போலாம்.”
“அதுக்குள்ள எங்க சேட்டை கேட்டுப் பார்க்கிறேன். ஆனா, முந்தா நேத்துதான் சம்பளம் கொடுத்தேன்னு ஹிந்தில திட்டுவான்டா யப்பா” எனச் சோர்வாக உட்கார்ந்தான்.
சீனு பாக்ஸ்களை எடுத்து வைத்தான். குளித்து முடித்து இருவரும் வேலைகளுக்குச் சென்றனர். சாயங்காலத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும். இருவரும் குழாயைக் கடந்து சென்றனர்.
பட்டேலின் பல்பொருள் அங்காடியையும் கடந்தனர்.
“நாளைக்கு ரமேஷிற்கு ஷர்ட் வாங்கி கொடுக்கலாம்னு நினைக்கிறேன். சாயங்காலம் போகும்போது வாங்கிக்கலாம். ஒங்க வீட்ல எடுத்து வைக்கிறேன். காலையில வந்து வாங்கிக்கிறேன், ப்ளீஸ் டி” என்றாள் சிரிஷா அவளது தோழியிடம்.
“சரி முதல்லெ அந்த சூப்பர்வைசர் கண்ணுல மட்டும் விழுந்திராத, வரான். நீ வேலைல சேந்ததுலிருந்து ஒன்ன ட்ரை பண்றான்.”
சூப்பர்வைசர் கோட்டி வந்தான். டெய்லி ப்ரொடக்ஷன் லாக் புக்கை பார்த்துக்கொண்டே சிரிஷாவை நோக்கினான். துருப்பிடித்த இரும்புத் துண்டு போல் இருந்தது அவனது பார்வை.
“என்ன சிரிஷா? என்ன விஷயம்?” என்றான் சாம்பல் நிற வாயுடன்.
சிரிஷா எதுவும் பேசவில்லை.
“நீ எங்க இருக்கிற?”
“பைப் லைன் ரோடு, பஸ்தி சார்.”
“அந்த குழாய்க்கு அந்தப் பக்கமா?”
ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
ப்ரொடக்ஷன் மேனேஜர் வந்துகொண்டு இருந்ததினால் அங்கிருந்து நகர்ந்தான்.
தோழி அருகில் வந்து “ஆமாம் காசு எப்படி வந்தது?” என்றாள்.
“முந்தா நேத்து சம்பளம் வந்ததும் ஹாஸ்பிடலுக்குப் போகணும்னு ரெண்டாயிரம் ரூவா எடுத்து வச்சுட்டேன். எங்க அம்மாவுக்குச் சந்தேகம் வந்துச்சி. ஆனா, எதுவும் சொல்லல. அம்மாகிட்டதான் எடுத்துவச்சேன்” என்று கண்ணடித்தாள்.
“ஷர்ட் எங்க வாங்க போற? ஆனா எதுக்கு இப்போ?”
“நாங்க போன வருஷத்துல ஒரு தடவ சினிமாக்குப் போனோம். அன்னைக்கு போட்ட ஷர்ட். அவங்கிட்ட உருப்படியா இருக்கிற ஷர்ட் அது ஒன்னு மட்டும்தான், பாவம் அவன். ஆனா இது எங்க முதல் லவ்வர்ஸ் டே. ப்ளூ செக்ட் ஷர்ட் வாங்க போறேன். ரமேஷுக்கு ரொம்பவே நல்லா இருக்கும் அந்தக் கலரு” என்றாள்.
சிரிஷா வீட்டுக்குச் சென்று, முகத்தை அலம்பிக்கொண்டு,
“அம்மா, முந்தா நேத்து கொடுத்த அந்த ரெண்டாயிரம் கொடும்மா” என்றாள் பவுடரைப் பூசியவாறு.
“குழாய்க்கு அந்தப் பக்கம் ஏதோ வீடு காலியா இருக்காம், ரெண்டு மாசம் அட்வான்ஸ் கேட்டாங்க, அதுக்கு ரெண்டாயிரம் ரூவா கம்மியா இருந்தது. நீ கொடுத்த பணத்த அப்பாகிட்ட கொடுத்துட்டேன். முதல்ல இந்தப் பஸ்தியவிட்டு கிளம்பணும். நான் இந்த ஆஸ்துமாவோட குப்பை கொட்ட முடியல. உன் காசு அப்புறமா கொடுத்துடுறேன்” என்றாள் தேனீரை அவளது கையில் கொடுத்தவாறு.
சிரிஷாவிற்குக் கோபம் வந்து பவுடர் டப்பாவை விசிறி அடித்து, “அது என் காசு, ஒரு மாசமா இந்த வீட்டுக்குத்தானே கொடுக்கிறேன். என்னை வளக்க முடியலன்னா அன்னைக்கே கொன்னு கூறு போட்டு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என அழுதுகொண்டு ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு வெளியேறினாள், அவளின் அம்மா அழைத்துக்கொண்டு இருந்தாலும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
பட்டேல் பல்பொருள் அங்காடி அருகில் நின்றாள். தோழிக்கு போன் செய்து,
“எங்க அம்மா காசை எங்க அப்பாகிட்ட குடுத்துட்டாங்கடி, உன்கிட்ட எதுவும் காசு இருக்கா?” என்றாள்.
“ஒனக்குத்தான் தெரியுமில்லடி, இப்பதான் சீட்டு கட்ட செயினை அடகு வச்சேன். நான் அங்க வரேன் இரு. எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆன்ட்டி இருக்கு, அங்க போலாம்” என்றாள்.
பட்டேல் கடையிலிருந்து அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான்.
சிரிஷா தனது கழுத்தில் இருந்த ரோல்டு கோல்டு செயினைத் தடவிப் பார்த்தாள். அழுதால் சரி வராதெனத் துப்பட்டாவை வாய்க்குக் குறுக்காக வைத்துக்கொண்டு படிகளில் உட்கார்ந்தாள்.
எதற்கோ அவளது அப்பா செய்த தவறுகள் அனைத்தும் சட்டென நினைவுக்கு வந்தன. அவ்வப்போது குடிப்பார், வந்ததும் அவளது அம்மாவின் மீது கை போடுவார். இருப்பது ஒரே அறை என்று நினைக்காமல், ஒரு பெண் வீட்டில் இருப்பதையும் மறந்து போவார். அவர் குடித்துவிட்டு வீடு திரும்பும் போதெல்லாம் இயர் போன்ஸை காதில் வைத்துக்கொண்டு அதிகச் சப்தத்துடன் பாட்டுகளைக் கேட்பாள். அப்போதும் அவள் ஏதும் பயப்படவில்லை.
ஆனால் ரமேஷ், அவனிடம் எவ்வளவோ சுதந்திரம் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது என்றால் அதற்கு அவன்தான் காரணம். அவனுடன் நெரிசலான ஷேர் ஆட்டோவில் செய்த பயணம் எவ்வளவு அருமையாக இருக்கும். கணிசமாக அவளால் அவனுக்கு ஒரு சட்டைகூட வாங்கித் தர முடியாத இயலாமை. சிரிஷாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அதற்குள் அவளது தோழி வந்தாள். இருவரும் சேர்ந்து அந்த ஆண்ட்டியிடம் சென்றனர்.
“ஒங்க சேட்டுகிட்ட கேட்டியா?”
“இன்னிக்கி வேற ஒரு ஆப்பரேட்டர்னால டைமண்ட் டூல் ஒடைஞ்சிடுச்சு. இப்போ போய் கேட்டா அங்கேயே வெச்சு கொன்னுடுவாரு. ரொம்ப காண்டுல இருக்காரு” என்றான் ரமேஷ்.
ரமேஷ், சீனு உடன் சேர்ந்து அவனது அக்காவின் வீட்டுக்குக் கிளம்பினான்.
இருவரும் செல்வதற்குள் இருண்டுவிட்டது. இறுக்கமான காலனி. இரண்டு மூன்று கரி பாயிண்டுகள் அந்தத் தெருவில் உள்ளன. சீனு அவனது அக்கா வீட்டிற்குச் செல்கையில் கதவின் இடுக்கிலிருந்து கூச்சல்கள் ஒலித்தன. உள்ளே சென்று பார்த்தான் சீனு. அவனது அக்காவை மாமா அடிக்கிறான். வேகமாகச் சென்று அவனை அங்கிருந்து தள்ளுகையில் மூலையில் சென்று விழுந்தான். மதுவை அருந்துவதினால் அவனால் எழ முடியவில்லை.
ரமேஷிற்கு இருந்த ஆசையும் இறந்துவிட்டது.
வெளியில் உட்கார்ந்தான். உள்ளிருந்து கூச்சல்கள். அதற்கு மேல் கேட்க முடியாமல் அவன் ஒருவனே பேருந்து ஏறி வந்துவிட்டான்.
பட்டேல் இன்னும் கடையை மூடவில்லை. வீதியில் மக்கள் ஆரவாரம் பெரிதாக இல்லை. யாரோ பொடியர்கள் கின்லே சோடாவை வாங்கிச் சென்றனர். சட்டை வெளியே எடுத்து வைத்து உள்ளே வெங்காயத்தையும் தேங்காய்களும் அடுக்கிக்கொண்டிருந்தான். பார்த்துச் சிரித்தான். ரமேஷ் ஒரு சிகரெட்டை வாங்கினான். சிவப்பு புகையை நெஞ்சிலிருந்து வெளியேற்றினான்.
சிரிஷா… தினமும் தன்னுடன் பேசுவதினால்தான் ஊரைவிட்டு, பெற்றோர்களைவிட்டு அவனால் இருக்க முடிகிறது. ஜுரம் வந்தால் அம்மாவைப் போல் கதறுவாள். சிகரெட்டைப் பிடித்தால் அப்பாவைப் போல் திட்டுவாள். கணிசமாக ஒரு டிரஸ்கூட வாங்கி கொடுக்காமல் போனதினால், தனது குறைவான சம்பளத்தின்மீதும், சம்பாதிக்க முடியாத இயலாமையின்மீதும் கோபம் வந்தது.
சிரிஷா, அவளது தோழியும் பூட்டி இருந்த ஆண்ட்டியின் வீட்டு வாசலின் முன்பு நின்றனர். எதிர் வீட்டில் கேட்டால், ஊர் சென்று இருப்பதாகக் கூறினார்கள். சிரிஷா நம்பிக்கையை இழந்தாள்.
“சரிடி, இனிமே வேலைக்கு ஆகாது. டேட் வந்து இருக்கு. வர முடியாதுன்னு ரமேஷிற்கு மெசேஜ் அனுப்புறேன்” என்றாள்.
“ஒன்ன பத்தி அவனுக்கு எல்லாமே தெரியும். ஒன் டேட்கூட. எனக்கு ஒரு மணி நேரம் டைம் கொடு. ஒருத்தங்க இருக்காங்க கண்டிப்பா வேலை முடியும்” என்றாள் தோழி.
சிரிஷா பொறுமை இழந்து சிரித்தாள்.
“இது மூனாவது சிகரெட், விஷயம் என்ன?” என்றான் பட்டேல்.
அப்போதுதான் ரமேஷிற்கு அதுவரை தான் மூன்று சிகரெட்டைப் பிடித்தது நினைவுக்கு வந்தது. தைரியத்தை வரவழைத்து பட்டேலிடம் கேட்க நினைத்தான். ஆனால், இப்படிக் கடனை வாங்கிக்கொண்டு, சொன்ன நேரத்தில் கொடுக்காததினால் பட்டேல் ஒருவனுக்குச் செய்த அவமானம் ரமேஷிற்கு இன்னும் நன்றாகவே நினைவில் இருக்கிறது. அதனால் பயந்தான். ஆனால், வேறு வழியில்லை, கேட்டுவிட்டான். பட்டேல் கல்லாப் பெட்டியிலிருந்து ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் எடுத்து “ரண்டு நாள்ல கொடுக்கணும்” என்றான்.
சட்டென கருப்பாக இருக்கும் பட்டேல் மலை உச்சியில் இருக்கும் கடவுளின் வடிவமாகத் தோன்றினான்.
காலையில் சிரிஷா தூக்கத்திலிருந்து எழாமல் அப்படியே படுத்துக்கொண்டிருந்தாள். அவளது அம்மா கேட்கையில் வேலைக்குச் செல்லவில்லையெனக் கூறினாள். அவளது அப்பா அந்த வார்த்தையைக் கேட்டுவிட்டு அங்கிருந்து அப்படியே சென்றுவிட்டார். சற்று நேரத்திற்குப் பின் சிரிஷாவின் தோழி வீட்டிற்கு வந்து மெதுவாகக் காதருகில் “காசு கிடைச்சுச்சு, வெளியில போலாம் வா” என்றாள்.
சிரிஷா மானைப்போல் துள்ளி எழுந்து ஆயத்தமானாள். இருவரும் மார்க்கெட்டுக்குச் சென்றனர். ஒரு பெரிய கடைக்குள் சென்று நீல நிற கோடிட்ட சட்டை வாங்கினார்கள். “காசு கொடுத்த புண்ணியவான் யாரு?” எனக் கேட்டாள் சிரிஷா பில்லை செலுத்தியவாறு.
“யாரோ இருக்காங்க, ஆனா ரெண்டு நாள்ல எப்படியாவது திருப்பிக் கொடுத்துடணும்” என்றாள்.
“கொடுத்துடலாம், ஒன்னது ரெண்டு, என்னது ரெண்டு, மொத்தம் நாலு கிட்னி என்றாள்” சிரித்தவாறு.
ரமேஷ் அவனது குடியிருப்பில் இருக்கும் ஓர் ஆண்ட்டியை அழைத்துச் சென்று ரோஜா நிறச் சுடிதாரை வாங்கினான்.
இருவரும் புதிதாகத் துவங்கிய மாலில் சந்தித்தனர். உள்ளே குளிர்ந்த காற்று. புதிய காற்று. மூச்சு முட்டும் காற்று. அதில் செக்யூரிட்டி கார்டும், ஃப்ளோர் கிளீன் செய்யும் துப்புரவாளர் மட்டும்தான் தனக்குத் தெரிந்தவர்களாகத் தோன்றினார்கள். ஒரு மூலையில் அமர்ந்தான். வெளிச்சத்தில் தனது பழைய காலணிகள்மீது ஆயில் கறைகள் தெளிவாகத் தெரிந்தன. வேலன்டைன்ஸ் டே என்பதால் அங்கு முழுக்க சிவப்பு நிற இதய வடிவில் இருக்கிற பலூன்களுடன் நிறைந்து இருக்கிறது அந்த மால். ஃபுட் கோர்ட்டில் லவ்வர்ஸ்க்கு ஏதேதோ ஆஃபர்கள். அங்கு வசதியாக இருந்தாலும், குழாய் அருகில் கிடைத்த வசதி எதுவோ தொலைத்தது போல் தோன்றியது இருவருக்கும். ஃபுட் கோட்டுக்குச் சென்று அதுவரை தெரியாததை எதுவோ சாப்பிட்டு வெளியேறினார்கள்.
வெளியே செக்யூரிட்டி கவுன்டரில் இருவரும் பேக்குகளையும் எடுத்துக்கொண்டனர்.
முன்னுக்கு வந்து சற்று இருட்டில், டிரஸ் இருக்கும் பாக்கெட்டை எடுத்து கன்னத்தில் சின்னதாக முத்தமிட்டான். ஷர்ட் இருக்கிற கவர் கையில் வைத்து “நான் நைட் கிரவுண்ட்ல கொடுக்குறேன்” என்று சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள் சிரிஷா.
இரண்டு நாள் ஆனது.
அது பட்டேலுக்கு காசை திருப்பிக் கொடுப்பதாகச் சொன்ன நாள். ரமேஷிற்குப் பயமானது. ‘சம்பளம் வந்ததும் கொடுக்குறேன் அண்ணா’னு சொல்லும் தைரியம் இல்லை.
வேண்டுமென்றே தாமதமாக வந்தான். பட்டேல் கடை மூடி இருந்தது. யப்பாடா என்று அறைக்குச் சென்றான்.
பட்டேலிடமிருந்து ஃபோன் வந்தது. ரமேஷிற்கு நெஞ்சம் படபடத்தது. முதல் முறை செய்த கடன்.
போனை எடுத்தான்.
“காசு கொடுக்கிறேன்னு சொன்னியே?”
“அண்ணா அது, சம்பளம்…” என்று வாய் அடைத்துப் போனது.
“சரி ஒங்க கிரவுண்டுகிட்ட வா.”
“வர்றேன் அண்ணா” என்று போனை வைத்துவிட்டான்.
பதற்றத்துடன் கிரவுண்டுக்குக் கிளம்பினான்.
சிரிஷா படுத்துக்கொண்டு மாலில் எடுத்துக்கொண்ட செல்பிகளைப் பார்க்கிறாள்.
சூப்பர்வைசர் கோட்டியிடமிருந்து போன். அழைப்பை எடுத்துப் பேசினாள்.
“என் காசு” என்றான்.
“ஒங்க காசு என்ன சார்?”
“முந்தா நேத்து உன் பிரண்டு வாங்கிக்கிட்டா, உனக்கு ஏதோ பணம் தேவை இருக்குன்னு” சிரிஷாவிற்கு வேர்த்துக் கொட்டியது, வெளியே வந்தாள்.
“சார், சம்பளம் வந்ததும் கொடுத்துடுறேன்” என்றாள்.
உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற கிரவுண்டுக்கு வா, கொஞ்சம் பேசணும்” என்றான் இறுக்கமாக.
தொழிற்சாலை பகுதியில் செகண்ட் ஷிப்ட் சைரன் ஒலித்தது.
சிரிஷா முகத்திற்குத் துப்பட்டாவைக் கட்டிக்கொண்டு கிரவுண்டுக்குள் வந்தாள். அன்று இரசாயனங்களை வெளியிடும் நாள்.
அருகில் யாரும் இல்லை. தொலைவில் யாரோ இரு நபர்கள் தெரிந்தனர்.
கோட்டி வேலமரத்தடியின் நிழலில் இருந்தான். அருகில் சென்றாள்.
ரமேஷிற்குத் தூரமாக வேலமர அருகில் இரு நபர்கள் இருப்பதாகத் தெரிந்தது.
பட்டேல் மதுவை அருந்துகிறான்.
“பணம் எதுவுமே வேணாம்” என பட்டேல் சட்டையை எடுத்து ரமேஷ் தொடைமீது கையை வைத்து அழுத்தினான்.
உடம்பில் உள்ள நீர் முழுக்க கண் வழியாக வந்து நின்றது ரமேஷிற்கு.
“சம்பளம் அப்புறம் பாத்துக்கலாம், பணம் எதுவுமே வேணாம்” என்று சிரிஷாவின் தோளின்மீது கையை வைத்தான் கோட்டி.
கோட்டியினிடம் குழாயில் வருகின்ற இரசாயனங்களின் நெடி வீசியது. கண்ணில் நீர் கசிந்து, முகத்திற்குக் கட்டிய துப்பட்டாக்குள் சென்று உலர்ந்தது.
குழாயிலிருந்து படையெடுத்து வருகின்ற வாயுக்கள், மஞ்சள் நிற ஆவிகளுடன், காட்டமான வாசத்துடன் பஸ்தி முழுக்க சூழ்ந்தன.
தொலைவில் விட்டில் பூச்சிகள் சட்டென மின்னி மறைந்தன.
பச்சை வேலமரங்களைப் பற்றி எரித்ததுபோல் இருந்தது அந்த வெளிச்சம்.
விஷம் என்றால் என்னவென்று… அவ்விருவருக்கும் ஒரே நேரத்தில் புரிந்தது.
…
மூல ஆசிரியர்: நாகேந்திர காசி – 1983 இல், ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடாவில் பிறந்தார். விண்வெளி பொறியாளராகப் பணிபுரிந்து, தற்போது தெலுங்கு திரைத் துறையில் முழுநேர எழுத்தாளராகப் பணியாற்றுகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நல்ல வந்தெனா’ நான்கு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றது. இதுவரை புஷ்பா 2, ஹாய் நன்னா, கொட்டபொம்மலி (நாயட்டு ரீமேக்), ஸ்ரீதேவி சோடா சென்டர், பலாசா ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.




