இணைய இதழ் 123கட்டுரைகள்நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் : தாழ்வரை -கமலா முரளி

கட்டுரை | வாசகசாலை

வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம்.    

(முதற்பதிப்பு ஜனவரி 2026, 168 பக்கங்கள், விலை 200ரூ )

தனியார் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கள் பல்வேறு இதழ்களிலும் தளங்களிலும் வந்துள்ளன. இதுவரை மூன்று கவிதை நூல்கள் (கோதமலைக் குறிப்புகள், நதி தொலைந்த கதை, அதீதத்தின் பசி) மற்றும் ஒரு சிறுகதைத் தொகுப்பு (கறுப்பு வண்ணமடித்த இரும்புக் கதவுகள்) வெளியிட்டுள்ளார். ‘தாழ்வரை’ இவரது முதல் நாவல் ஆகும். ‘நடுகல்’ இணைய இதழில் தொடராக இந்த நினைவோடை வகைப் புதினம் வெளிவந்தது.

தாழ்வரை நாவலைத் தனது ‘கோதமலைக் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பின் தொடர்ச்சியாகத்தான் பார்ப்பதாகவும் இந்த நாவல் முழுவதும் தனது சுயசரிதையன்று, புனைவும் கலந்த ஒன்று எனவும் ஆசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பதினொரு அத்தியாயங்களைக்கொண்ட ‘தாழ்வரை’  நடுத்தர வயதை மெல்லக் கடந்து வரும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவனது நினைவலைகளின் தாலாட்டு.

ஆர்ப்பரித்து வரும் கடலலைகள் மீண்டும் மீண்டும் கரை நோக்கி வருவது போல, தான் வாழ்ந்த வீடு, தன் வீட்டினர் பாடுபட்ட காடு மற்றும் தன் உறவுகளையும் நண்பர்களையும் பற்றிய நினைவலைகள் அவன் மனதில் ஆரவாரத்துடன் எழுகின்றன. அதன் தாக்கம் வாசிப்பவர் மனதிலும் அலைகளின் குளிர் சாரலாய் விழுகிறது.

கண்ணனுடன் பள்ளியில் படித்த சேகர், தன் மகளின் திருமணத்துக்கு அழைக்கிறார். சொந்தக் கிராமத்தின் நினைவுகள் மனதை அழுத்த, அண்ணன் சந்துருவுடன் திருமண விழாவுக்குச் செல்கிறார். ஊரில் அவர்களுக்கிருந்த நிலத்தை, கண்ணன் குடும்பத்தினர் விற்றுவிட்டனர். “முடிஞ்சா எப்படியாவது திரும்பி வாங்கிப் போடுங்கய்யா” என்கிறார் பக்கத்துவீட்டு ராமசாமி.

காடு கையை விட்டுப்போன சூழல்களையும் சுயநலமிக்க உறவுகளையும் கலங்கும் கண்களோடு, கனத்த இதயத்தோடு நினைத்துப் பார்க்கிறார் கண்ணன்.

சேலத்திலிருந்து வாழப்பாடி செல்லும் வழியில் மேட்டுப்பட்டிக்கு அடுத்ததாக இருக்கும் செல்லியம்மன் நகர்தான் கண்ணனின் ஊர். கோத மலை அடிவாரத்தில் அமைந்த அவர்களது காடுதான் கிராமத்தின் கடைசிப் பகுதி. அதற்குப் பிறகு ‘ஃபாரஸ்ட்’ ஆரம்பித்துவிடும்.

தாத்தா சொக்கலிங்கம் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று பலமுறை சிறைக்குச் சென்றவர். நாமகிரிப்பேட்டை சிராப்பள்ளியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரே தொண்டன் கண்ணனின் தாத்தாதான். சிறையில் அவர் வாங்கிய அடிகளின் தழும்புகள் மறையவேயில்லை.  

சுதந்திரப் போராட்டத் தியாகிகளைக் கௌரவிக்க அரசாங்கம் ஒதுக்கிய நிலம்தான் இந்தக் காடு. மலையடிவாரக் கிராமத்தின் ஊர்க்கோடியில்… அதிலும் பெரும்பகுதி மேட்டாங்காடு. பாதிக்கு மேல் பயிர் செய்ய முடியாது. பெரும்பாலும் சோளம், குச்சிக்கிழங்குதான் பயிர் செய்தனர். எப்போதாவது தண்ணீர் அதிகமாக இருக்கும் வருடத்தில் நெல் பயிரிடுவதும் உண்டு.

கண்ணனின் அப்பா கிராம அதிகாரியாக இருந்தார். தன் வருமானத்தையும் அப்பா அந்த நிலத்துக்காக, பயிர் செய்வதற்காகத்தான் செலவிட்டார். லாபமே இருக்காது.

கண்ணனுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு வருகிறது. அதற்கு உதவி செய்வதற்காக, நிலத்தை கை மாற்றுவது என்ற முடிவுக்கு வருகிறார்கள். தங்களுக்கும் நிலத்தில் பங்கு வேண்டுமென அத்தைமார் வந்துவிடுவர்.

காடு இருந்தபோதும் லாபம் கொழிக்கவில்லை. கிரயம் ஆனபோதும் அதிகம் வரவு இல்லை. இருந்தாலும் அந்தக் காட்டின்மீது இருந்த ஈர்ப்பு போகவில்லை.

கிராமத்தைவிட்டு, ஊரகப் பகுதிக்குக் குடிவந்தபோதும், பெரிய நகரத்தில் பணிபுரிந்தபோதும், தன் ஊரின் மேல் உள்ள காதலும் பாசமும் கண்ணனுக்குக் கிஞ்சித்தும் குறையவில்லை. அவருக்கு மட்டுமன்று, அவருடைய சகோதரர்களுக்கும் அப்படித்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

நாவலில் கண்ணனின் உறவுகள், நண்பர்கள், பண்ணைப் பணியாளர்கள், ஊர்க்காரர்கள் என நிறையப் பேர் இருந்தாலும் காத்திரமான பாத்திரமாக இருப்பது ‘லேண்ட்ஸ்கேப்’தான். புத்தகத்தைப் படித்து முடித்தபின், மேட்டுப்பட்டி, செல்லியம்மன் ஓடை நிறுத்தம், சீன ஜவ்வரிசி மில், கோதண்டராமர் கோவில் மலைப்பாதை, வெள்ளாள குண்டம், அயோத்தியா பட்டினம், சிவக்குமார் டெண்ட் கொட்டகை, ஏன் பள்ளி செல்லும் வழியிலுள்ள ஆலமரம் எட்டி மரம்கூட மனதில் அழியாத ஓவியமாகப் பதிந்துவிட்டன.

கூரை வேய்ந்த வீட்டினுள்ளே சொட்டுகின்ற மழை நீரை அண்டாக்களை வைத்துச் சேகரிப்பது, விஷப்பூச்சிக் கடிகள், சினிமாவுக்குப் போகும் அனுபவம், கிரிக்கெட் விளையாட்டு எனத்  தன் பால்யகால அனுபவங்களை யதார்த்தமாக எழுதியுள்ளார்.

பொங்கல் திருவிழா, எருது கட்டிவிடுவது, மலையேறி சாமி கும்பிடுவது, பூசக் கூடை, தீர்த்தக்குடம் தூக்குவது, பூசை சடங்குகள், பலியிடுதல் எனப் பல நிகழ்வுகளைப் பற்றியும் சிறப்பாக விவரிக்கிறது நாவல்.

கிராமத்து எளிய முறைகளான ‘வாக்குக் கேட்பது’, ’கல் குறி பார்ப்பது’, கருந்தேள் கடிக்கு ‘பாடம் போடுவது’ போன்ற வெள்ளந்தியான வழக்கங்கள் பற்றிய விவரங்களும் மிகச் சிறப்பு.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் சேலத்தைச் சார்ந்த என்  உறவினர் ஒருவர் பேசும்போது ”அப்படியே ஒரு ’லவ் ஓ’ குடிச்சிட்டு” என்பதை அடிக்கடி சொல்லுவார். எனக்கு அது என்னவென்றே புரியாது. ‘லவ்’ என்ற சொல் வேறு இருக்கிறதே…. அதைப் பற்றிக் கேட்கலாமா என்ற தயக்கம் வேறு. பின்னர் ஒருமுறை துணிந்து கேட்டேன். “என்னவோ லவ் ஓ அப்படிங்கிறயே, அது என்ன?” என்னை ஏதோ ஒரு புழு போல் பார்த்துவிட்டு, “லவ் ஓ தெரியாது? சூப்பராக இருக்கும். ஜூஸ் டைப்” என்றார். தமிழகத்தின் வேறு பகுதிகளில் அந்த பிராண்ட் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ‘தாழ்வரை’யில் ‘லவ் ஓ’ குடிக்கும் அனுபவமும் வருகிறது. என்னுள்ளும் பழைய ஞாபகங்கள்.

இறுதி அத்தியாயத்தில் கண்ணன் தனது கிராமத்துக்குச் செல்கிறார், பல வருடங்களுக்குப் பின். நிறைய மாற்றங்கள். முன்பு பேருந்து அங்கே நிற்காது; இப்போது நிற்கிறது. ஆனால், செல்லியம்மன் ஓடை என்று சொன்னால் நடத்துநருக்குக்கூடத் தெரியவில்லை. ‘டோல்கேட்’ ஆகிவிட்டது.

//வார இறுதியில்தான் சீக்கிரமே விழிப்பு வந்துவிடுகிறது//  என ஆரம்பிக்கும் முதல் வரியிலிருந்து, // கோத மலை எங்களை அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்தது// என்ற இறுதி வரி வரையிலும் யதார்த்தமான ஒரு கிராம வாழ்க்கையை, ஓர் எளிய மனிதனின் ஆசைகளை நிராசைகளை ஏக்கங்களைக் கோட்டோவியமாக நம் கண்முன்னே நிறுத்தியுள்ளார் ஆசிரியர்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button