
சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கவிதைப் புத்தகம் இது. எழுத்தாளர் நரனை வாசிக்க ஆரம்பித்த சமயம். அவரது சில கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருந்தேன். அவருடைய புத்தகங்களைத் தேடி வாங்கி வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கிடைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.
எடுத்தவுடன் இந்தத் தொகுப்பைத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். கவிதைகளை வாசிக்க வாசிக்க என்னால் கவிதைக்குள்ளே நுழைய முடியவில்லை. வழக்கமான கவிதைகளாக இல்லாமல் இக்கவிதைகள் எனக்குப் பயம்காட்டின. ஒவ்வொரு கவிதையையும் வாசிக்க வாசிக்க மேற்கொண்டு வாசிக்க இயலாமல் இடைவெளிகள் வந்தவண்ணமே இருந்தன. இப்படியான கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றும் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரே குவியலாக வாசிக்கும்போது அந்தக் குவியல் எனக்குப் பதற்றத்தையும் படபடப்பையுமே கொடுத்தது.
இந்தக் கவிதைத் தொகுப்பை அப்படியே வைத்துவிட்டு, நரனின் சிறுகதைகளை வாசிக்கச் சென்றேன். அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன. நரன் காட்ட நினைக்கும் உலகம் அதன்வழி எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரிட்சியம் ஆனது. சில சிறுகதைகள் அவர் கையாண்டிருக்கும் வார்த்தைகளே எனக்குக் கவிதைகளாகத் தெரியவும் தொடங்கின.
சிறிய இடைவெளிக்குப்பின் நரனின் எழுத்துலகத்தை ஓரளவேனும் வாசித்தறிந்த அனுபவத்தில் அவரது கவிதைகளுக்குச் சென்றேன். நமக்கான எழுத்தாளரை நாம் கண்டறிய இப்படியான சில முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும், நரனின் கவிதைகளுக்குச் செல்ல அவரது சிறுகதைகளின் வழி நான் நுழைந்தது போல.
மீண்டும் அந்தக் கவிதைத் தொகுப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இப்போதும் மனம் சஞ்சலமையவே செய்தது. ஆனால் முன்பு போல் அல்லாமல் இம்முறை கவிதைகளைச் சற்றே தள்ளி நின்றபடி அனுபவிக்கத் தொடங்கினேன்.
இந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை எடுத்து எனது ‘குறுங்கதை எழுதும் வகுப்பிலும்’ பயன்படுத்திக்கொண்டேன். எந்தச் சிக்கலும் இல்லாமல் இக்கவிதைகளில் சில குறுங்கதைகளாகவும் சிறுகதைகளின் கதைக்கருக்களாகவும் பரிணமித்தன.
இந்தத் தொகுப்பில் கவிஞர் நரன் எனக்குக் காட்டிய உலகம் எனக்கு முற்றிலும் அன்னியமானது; பயங்கரமானது. அதே சமயம் இருகரம் கொண்டு அதன் உலகுக்கு என்னை ஒரு குழந்தை போல அழைத்துக்கொண்டது; அரவணைத்துக்கொண்டது; இம்சைக் கொடுத்தது; கொலை செய்யத் துணிந்தது; கொன்றுவிட்டு மீண்டுமென்னை கருத்தரித்தது; இன்னொரு முறை என்னைப் பிரசவித்தது.
காதலும் கவிதைகளும் ஒன்றுதான் போல. இரண்டுமே இம்சிக்கின்றன; இரண்டுமே இன்பமாய் இருக்கின்றன.
இக்கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘மிளகு-பருத்தி- மற்றும் யானைகள்’. சால்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். 2020ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகம்.
முதல் முதலில் இந்தக் கவிதைப் புத்தகத்தைத் திறந்து வாசித்த கவிதைகள் எனக்கு மேலும் வாசிக்கத் தடையாய் இருந்தன. அந்த வாசிப்பிற்கு நான் முழுமையாய்த் தயாராகவில்லை. அதன்பின் அவ்வப்போது ஒவ்வொரு கவிதைகளாக அதன் பக்கங்களை அதன் போக்கில் திறந்து வாசித்த கவிதைகளின் துன்பத்தையும் அதன் இன்பத்தையும் மெல்லமெல்ல எனக்குள் செலுத்தினேன்.
இவை நான் வாசித்த கவிதைகளிலிருந்து மாறுபட்டிருந்தன. முன்பே சொன்னது போல ஓரிரு கவிதைகளை இப்படி வாசித்தது உண்டு. ஆனால் ஒரு தொகுப்பு முழுக்கவும் வாசிக்கும் மனோதைரியம் பின்னர்தான் வந்தது.
இவை கற்பனைகளா, அதீதப் புனைவுகளா, வதைகளா, எதார்த்தமா அல்லது மிகை எதார்த்தமா என்கிற கேள்விகள் வாசிக்கும் மனதில் வந்துகொண்டே இருந்தன.
வழக்கமாக நான் வாசிக்கும் கவிதைகளை நானும் எழுதியிருக்கலாமே எனத் தோன்றும். அதேபோல என்னாலுமே அப்படி எழுத முடியும் எனவும் தோன்றி நின்ற ஆணவத்தை இக்கவிதைகள் அடித்து நொறுக்கின. என்னால் இந்த மனநிலையில் ஒருபோதும் இப்படியான கவிதைகளை எழுத முடியாது. வாசிக்கவே இத்தனை வேதனைகளையும் இத்தனை தொந்தரவுகளையும் அனுபவிக்கும்போது எப்படி எழுத முடியும்.
இந்தத் தொகுப்பில் பத்துத் தலைப்புகளில் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை ’அம்மா என்றொரு பாலூட்டி விலங்கு’, ‘பிறழ்வு’, ‘சிறு மரணமென்பது’, ‘மரணம் என்பது’, ‘கூரென்பது’, ‘வாழ்வென்பது’, ‘அறுவடை வயல்’, ‘வனமென்பது’, ‘கடவுளென்ற’, ’அதிகாரமென்பது’ என அடங்கும்.
இத்தலைப்புகளிலேயே ஒரு மறைமுகக் கேள்வியை வைத்துக்கொண்டு; அதற்குப் பதில் தரும் வேலையைத்தான் இக்கவிஞன் செய்திருப்பதாகவும் எனக்குத் தோன்றியது.
‘அம்மா என்றொரு பாலூட்டி விலங்கு’ கவிதை முழுக்கவும் அம்மா வருகின்றார். இந்த அம்மா நமக்குப் பழக்கமான அம்மா அல்ல. மகா காளி; இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி சக்தி. எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து வெறிகொண்டு சிரிப்பவள். ஒரு கையில் மண்டையோட்டை அதன் இரத்தம் சொட்டச் சொட்டப் பிடித்தபடி மறுகையில் நம்மை மார்போடு அணைந்து பாலூட்டி பசி தீர்ப்பவள். ‘எனக்குத் தெரியும் அம்மா எல்லாவற்றையும் பிரசவிப்பாள்’ என்று கவிதையில் ஒரு வரி வருகிறது. இதை நம்மால் வேறெப்படி புரிந்து கொள்ள முடியும்?
நீங்கள் யாரும் யாரும் கோபித்துக்கொள்ளமாட்டீர்கள் என்றால், தாய்மையையும் பேய்மையையும் ஒன்றாக இணைத்து கவிதையாய்க் கோர்த்திருக்கிறார் கவிஞர்.
‘அம்மா இறந்த பின்கூட
தன் கல்லறை மேட்டின் மேல் செழிப்பாகக் கொஞ்சம் புற்களை வளர்த்தாள்’ (ப.17)
என்று ஒரு கவிதையும்,
‘அம்மா பிரசவம் முடிந்த பெரும் பசியில்
பிறந்த ரெட்டையில் ஒன்றைக் கையிலெடுத்து
உண்ண வாயருகே கொண்டு போகையில்…
அப்பா பிரசவ அறையின் கதவைத் திறந்தார்.’ (ப.15)
என்று இன்னொரு கவிதையும் வருகிறது.
‘பிறழ்வு என்பது’ என்ற தலைப்பில் இருக்கும் கவிதைகள் உண்மையில் மனம் பிறழ்ந்த ஒருவனின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாகவே தெரிகிறது. அதுவும் இவ்வளவு நெருக்கமாகவும் எழுத முடியுமா எனவும் கேட்க வைக்கிறது.
அதற்கு உதாரணமாக இக்கவிதையைச் சொல்லலாம்.
‘இறந்த பறவையை மலை உச்சிக்கு எடுத்துப்போய் பறக்கவிட்டான். அது
பள்ளத்தாக்கு நோக்கிச் சிறகு விரிக்காமல் பறந்து விழுந்தது. அவன் மீண்டும்
மீண்டும் பள்ளத்தாக்கிலிருந்து எடுத்து வந்து தன் பைத்தியத்தைப்
பறக்கவிட்டான்.
பறத்தல் இன்னும் இருக்கிறது. பறவை இன்னும் வாழ்கிறது.(ப.27)
இக்கவிதையில் நம்மை இம்சை செய்வது இறந்த பறவையைக் காட்டிலும் அதை ஒவ்வொருமுறையும் பள்ளத்தாக்கிலிருந்து எடுத்து வந்து மீண்டும் மீண்டும் பறக்கவிடும் மனிதனாகத்தானே இருக்கிறான். பொதுவாகவே நாம் அந்தப் பறவைக்குப் பரிதாபப்பட்டு அந்த மனிதனைப் புறக்கணித்துவிடுகின்றோம். ஆனால், இக்கவிதை நாம் காப்பாற்றத் தவறியதை நமக்கு நினைவூட்டுவதாகவும் சொல்லலாம்.
‘பிறழ்வின் உச்சம்
திறந்து கிடக்கும் கதவின் வழியே வெளியேறாமல்
அவன் இந்தச் சுவரைத் திறக்க முயற்சித்துக் கொண்டேயிருப்பதுதான்…’(ப.23)
என்றொரு கவிதை வருகிறது. அந்தக் கதவு திறந்திருக்கிறது எனச் சொல்வதற்காகவாவது அந்த மனிதனின் தனிமையை நாம் போக்க வேண்டாமா. இவர்களை ஏன் தனியாக விடக்கூடாது எனச் சொல்லாமல் இவர்களை ஏன் தனியாக விடவேண்டாம் என்கிற கருணையான பார்வையையும் இத்தலைப்பு கவிதைகளில் காணமுடிகின்றது. அதே சமயம் அந்தக் கருணையை வரவைக்கக் கவிதைகள் காட்டும் உலகம் பயத்தைக் கொடுக்கிறது.
‘சிறு மரணமென்பது’, என்ற தலைப்பில் இருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் மரணத்தைப் பேசுகின்றன. உங்களுக்கு இளகிய மனம் என்றால் இக்கவிதைகளை நீங்கள் தவிர்த்துவிடுவது நலம். அல்லது இந்தத் துக்கம் உங்கள் தூக்கத்தைக் கலைத்துவிடும்.
‘இரவில் பிறந்து
ஒரு மழையை மட்டும் பார்த்துவிட்டு இறந்து போன குழந்தை..’ (ப.31)
அந்தக் குழந்தை ஒருமுறைதான் மழையைப் பார்த்தது; இனி மழை வரும்போதெல்லாம் அந்தக் குழந்தையின் மரணம்தானே நம் நினைவிற்கு வரும்.
‘மார்ச்சுவரியிலிருக்கும் குழந்தைகள் பால் கேட்டு அழுகின்றன..’ (ப.33)
யோசிக்கையில் இது கொடூரமான சிந்தனைதான். இதனை என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை ஆனால்; குழந்தை அழுவது முதலில் தாய்க்குத்தானே கேட்கும். எழுதிய கவிஞருக்கும் வாசித்த வாசகருக்கும் உள்ளுக்குள் இருக்கும் தாய்மையை இக்கவிதை சற்றே சலனப்படுத்தித்தான் விடுகின்றது.
முதன் முதலில் கையில் குழந்தையுடன் வீட்டிற்கு வருவது எவ்வளவு அலாதியானது. மிகவும் பூரிப்பான தருணமல்லவா அது. ஒரு வருங்காலக் கனவைத் தம்பதிகளின் காதல் வெளிப்பாடாக அடுத்த சந்ததிக்கான நம்பிக்கையாக ஓர் ஒற்றை உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் எடுத்து வைக்கும் முதலடி என்பது பெரிய பாக்கியம் இல்லையா. ஆனால் அதற்கு மாறாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்தானே. வெளியில் சொல்ல முடியாத வேதனையுடனே தினம் தினம் வீட்டு வாசலை மிதிப்பவர்கள் இருக்கிறார்கள்தானே. அவர்களை நினைக்க நமக்கு நேரம் இருக்கிறதா?
‘இனி வீடு திரும்புதல் இல்லாத ஒரு குழந்தை..’ (ப.34)
‘ஒருபோதும் மட்காத பிளாஸ்டிக் குழந்தைகள்..’ (ப.35)
அவர்களையும் மறக்காது தன் கவிதைகளில் இடம் கொடுத்திருக்கிறார் கவிஞர்.
இப்படியாகப் பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் வாசகனின் அந்தரங்க நேரத்திற்கானவை. எனக்குமே என் வலி வேதனை கொண்ட நினைவுகளோடு பல நாள்கள் அந்தரங்க உரையாடலை நடந்த இந்தக் கவிதைகள் உதவின. உங்களுக்கும் அவை உதவக்கூடும்.
இப்படியெல்லாம் எழுதலாமா என்ற கேள்வி உள்ளவர்களுக்கு இப்படியும் கவிதைகள் எழுதப்படுகின்றன எனச் சொல்லும் கவிதைகள் கவிஞர் நரனின் கவிதைகள்.
‘இயேசு சிறுவயதில் ஏறி விளையாடிய மரத்திலிருந்துதான் அவருக்கொரு
சிலுவை செய்தார்கள்..’ (ப.73)
என்ற கவிஞர் நரனின் கவிதையைக்கொண்டே ‘மிளகு-பருத்தி-மற்றும் யானைகள்’ என்னும் அவரது கவிதைத் தொகுப்பு குறித்த என் வாசிப்பு அனுபவத்தை நிறைவு செய்கிறேன்.
-தயாஜி, மலேசியா



