
முன்குறிப்பு –
தன்னலம் இல்லாமல் மக்களுக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கும், உயிர் நீத்த, தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த, அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் கம்யூனிசத் தலைவர்களையோ தொண்டர்களையோ போராளிகளையோ அவமதிக்கும் நோக்கம் மொழிபெயர்ப்பாளனாக எனக்கு இல்லை. அவர்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளுக்கு என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன். மந்தையாகத் திரியும் உலகில் மாற்றுச் சிந்தனையைக் கற்றுக்கொடுத்தவர்கள் அவர்கள்.
கம்யூனிசத்தைக் கேள்விக்குட்படுத்தும் கருத்துக்களை வலதுசாரி சிந்தனைகொண்ட அறிஞர்கள் எவரும் தெரிவித்திருந்தால் புறம் தள்ளியிருப்பேன். சீனா கருத்துச் சுதந்திரம் இல்லாத கம்யூனிச நாடு. அங்கே கம்யூனிசத்திற்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது என்கிற கற்பனை உடைத்தார் ஜியாங் சூயின். கீழே இருக்கும் கட்டுரை சீனாவில் மாணவர்களுக்காக அவர் எடுக்கும் வகுப்பு என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
பாலஸ்தீனத்தின் இனப்படுகொலையும் அதை ஆதரிக்கும் வல்லாதிக்கச் சக்திகளையும் அதன் வேர்களையும் புரிந்துகொள்ள ஜியாங் சூயின் வகுப்புகள் உதவின. எப்ஸ்டீன் கோப்புகள் வெளிக்கொணர்ந்த உண்மைகளை அதிர்ச்சியாக உலகம் பார்க்கும் சூழலில் அதன் பின்புலத்தை முன்னரே வகுப்புகளில் எளிதாக விளக்கினார். வரலாற்றுக் குளத்தில் அவர் எறிந்த கல்லாகவே இந்த வகுப்பு எனக்கிருந்தது. அதையே அனைவரும் அறியத் தமிழில் தருகிறேன்.
கம்யூனிசப் பூச்சாண்டி (Communist spectre)
கம்யூனிசம் – மார்க்சியம் என்றால் என்ன, அது எங்கிருந்து வந்தது, அதன் வெற்றிக்குப் பங்களித்த காரணிகளைப் பற்றி ஆராய்வோம். 20ஆம் நூற்றாண்டானது, முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் (கம்யூனிசம்) இடையிலான தீவிரக் கருத்தியல் மோதலான பனிப்போரால் அடையாளப்படுத்தப்படுகிறது. மிக நீண்ட காலத்திற்கு, கம்யூனிச அமைப்பும் முதலாளித்துவ அமைப்பும் முற்றிலும் எதிரானவையாக—அதாவது கறுப்பு-வெள்ளை எனத் தெளிவான இரு எதிரெதிர் முரண்பாட்டுக் கொள்கைகளென நம்பிக்கொண்டிருக்கிறோம்.
அது உண்மையென்றால், சீனாவை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்வது? ஏனென்றால், மிக நீண்ட காலமாக, சீனா ஒரு கம்யூனிச நாடாக இருந்தது. பின்னர் 1980களில் சீர்திருத்தங்களைத் தொடங்கியது. இப்போது சீனா அதிகமும் ஒரு முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது. நீங்கள் இதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், இந்த மாற்றம் எந்தவித எதிர்ப்புமின்றி தடையில்லாமல் நடந்துள்ளது. இத்தகைய மிகப்பெரிய மாற்றம் நடைபெறுவதற்குத் தேவையான வன்முறைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இது சாத்தியமில்லை. ஏனெனில் வழக்கமாக இத்தகைய மாற்றங்கள் மிகவும் வன்முறை நிறைந்ததாகவே இருந்துள்ளன.
உதாரணமாக, நிலப்பிரபுத்துவத்திலிருந்து (Feudalism) முதலாளித்துவத்திற்கு மாறிய காலத்தை யோசித்துப் பாருங்கள். அது மிகவும் வன்முறை நிறைந்த ஒரு மாற்றமாக இருந்தது. அதுபோலவே, ஐரோப்பா கத்தோலிக்கச் சமயத்திலிருந்து சீர்திருத்தக் கிறித்தவத்திற்கு (Protestantism) மாறிய காலக்கட்டமும் வன்முறைகள் நிறைந்ததாகவே இருந்தது. ஆனால் சீனாவில், கம்யூனிசத்திலிருந்து முதலாளித்துவத்திற்கான மாற்றம் மிகவும் எளிதாகவும், வேகமாகவும், அதேசமயம் மிகுந்த வெற்றியுடனும் நிகழ்ந்துள்ளது.
இன்று சீனா சில கம்யூனிசக் கூறுகளுடன்கூடிய அதிகமும் ஒரு முதலாளித்துவ நாடாகவே இருக்கிறது என்று சொல்லலாம். அப்படியானால் எழும் கேள்வி இதுதான்: முதலாளித்துவம் கம்யூனிசம் ஆகிய இந்த இரண்டு கருத்தியல்களும் ஒன்றிற்கு ஒன்று முற்றிலும் எதிரான இயங்கியல் என்றால், சீனாவில் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இயல்பில் இது ஒரு ‘பொய்யான(தவறான) முரண்பாட்டு இயங்கியல்’ (False Dialectic). அதாவது, கம்யூனிசமும் முதலாளித்துவமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதைவிட, பல விடயங்களில் ஒன்று போலவே இருக்கின்றன. சொல்லப்போனால், முதலாளித்துவத்தின் முக்கிய எதிரிகளை அழிப்பதற்காக, முதலாளித்துவமே உருவாக்கிய ஓர் ஆயுதம்தான் கம்யூனிசம் என்பதை உங்களுக்குக் காட்ட முயல்கிறேன்.
கம்யூனிசம் உண்மையில் முதலாளித்துவத்தின் எதிரி கிடையாது. முதலாளித்துவத்தின் உண்மையான எதிரிகள் வேறு சில கருத்தியல்கள்/சித்தாந்தங்கள். அந்தக் கருத்தியல்களில் ஒன்று மன்னராட்சி/முடியாட்சி (Monarchy). ஒரு மன்னரின் கையில் முழு அதிகாரம் இருப்பதே மன்னராட்சியின் அடிப்படை. அதில் ஒரு முதலாளியின் கையில் அதிகாரம் இருப்பதில்லை. பொதுவில் ஒரு மன்னர் செய்ய வேண்டியது, மூலதனத்தை (Capital) அனைவருக்கும் நியாயமான முறையில் மறுபகிர்வு செய்வதுதான். உதாரணமாக, ஒரு மன்னன் முதன்முதலில் ஆட்சிக்கு வரும்போது, அவன் பெரும்பாலும் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்து, நிலங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பான். அதன்மூலம் அவன் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பான். ஆகவே, முதலாளிகள் மன்னர்களுக்கு அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு மன்னராட்சியில் உவப்பில்லை, ஏனெனில் ஒரு மன்னன் எப்போது வேண்டுமானாலும் சொத்துக்களை மறுபகிர்வு செய்யலாம்.
முதலாளித்துவத்தின் மற்றொரு பெரிய எதிரி மதம்/ மதத்தின் ஆட்சி (Theocracy). எல்லா மதங்களுமே ‘பணம் என்பது தீமையானது’ என்பதைப் போதிக்கின்றன. நீங்கள் பணம் சம்பாதிப்பதைக் கடவுள் விரும்புவதில்லை. மாறாக நீங்கள் மற்றவர்களிடம் கனிவாக நடக்க வேண்டும்; உங்கள் குழந்தைகளை நேசிக்க வேண்டும்; ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றுதான் கடவுள் விரும்புகிறார். இதனால்தான் கத்தோலிக்க ஐரோப்பாவில் மக்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தனர்; ஏனெனில் மக்கள் பணம் சம்பாதிப்பதில் காட்டிய ஆர்வத்தைவிட, ஆன்மீக விடுதலை (Redemption) மற்றும் இரட்சிப்பு (Salvation) ஆகியவற்றிலேயே அதிகக் கவனம் செலுத்தினர். எனவே, மத ஆட்சியும் முதலாளித்துவத்தின் ஒரு பெரும் எதிரியாகும்.
அடுத்து தேசியவாதம் (Nationalism). தேசியம் என்பது நீங்கள் உங்கள் மக்கள்மீது வைத்திருக்கும் விசுவாசமும் உங்கள் நாட்டின்மீது காட்டும் நாட்டுப் பற்றாகும். முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சிக்கல். ஏனெனில், முதலாளித்துவம் என்பது மூலதனத்திற்கு (Capital) மட்டுமே விசுவாசமாக இருக்க விரும்புகிறது. மூலதனம் எல்லைகளைத் தாண்டி தடையின்றிப் பாய வேண்டும் என்றே அது நினைக்கிறது. உதாரணமாக, சீனாவில் எனக்கு ஒரு முதலீட்டு வாய்ப்பு கிடைத்தால், எனது பணத்தை அமெரிக்காவிலிருந்து எடுத்து சீனாவில் முதலீடு செய்யவே நான் விரும்புவேன். ‘சீனா எனது எதிரி’ என்றோ அல்லது ‘சீனர்கள் என் மக்கள் அல்ல’ என்றோ நான் கவலைப்பட விரும்புவதில்லை. எனவே, தேசியவாதமும் முதலாளித்துவத்திற்கு ஒரு மிகப்பெரிய தடையாகவே இருக்கிறது.
அடுத்ததாக ஜனநாயகம் (Democracy) என்ற மற்றொரு சிக்கலும் இருக்கிறது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், முதலாளிகள் ஜனநாயகத்தை வெறுக்கிறார்கள். அவர்கள் ஏன் ஜனநாயகத்தை வெறுக்கிறார்கள்? நீங்கள் யோசித்துப் பார்த்தால், அதிகாரம் மக்களிடமும் தொழிலாளர்களிடமும் இருந்தால், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செல்வத்தை மறுபகிர்வு செய்ய வாக்களிப்பார்கள், இல்லையா? அதாவது செல்வந்தர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள். இதையே நாம் சமூகவுடைமை (Socialism) என்கிறோம்.
முதலாளித்துவத்தின் எதிரி கம்யூனிசம் அல்ல. அது இந்த மற்ற நான்கு விஷயங்கள்தான் (மன்னராட்சி, மதம், தேசியவாதம், ஜனநாயகம்). நீங்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால், கம்யூனிசமானது முதலாளித்துவத்துடன் கைகோர்த்து இந்த நான்கு எதிரிகளையும் அழிக்க முயல்கிறது என்பது புரியும்.
முதலில் மன்னராட்சியை எடுத்துக்கொள்வோம். கம்யூனிசம் ஒருபோதும் மன்னர்கள் உருவாக வழிவகை செய்யாது. அது ஒரு கட்சியை (Party) மட்டுமே உருவாக்கும். கட்சி என்பது என்ன? அது ஒரு குழுவின் ஆட்சி (Oligarchy). அதாவது சில செல்வாக்கு மிக்க நபர்களின் கையில் அதிகாரம் இருப்பது. இதுவொரு வகையான முதலாளித்துவ ஆட்சி முறையே ஆகும். அடுத்து மத ஆட்சி (Theocracy). மார்க்ஸ் என்ன சொல்கிறார்? ‘மதம் என்பது மக்களுக்கு ஊட்டப்படும் அபின்’ என்கிறார். மதம் இந்த உலகின் மிகப்பெரிய தீமை, அது மக்களிடையே பொய்யானதொரு பிரக்ஞையை (False Consciousness) உருவாக்குகிறது என்கிறார். எனவே நாம் மதங்களை அழிக்க வேண்டும் என்கிறார். மதம் அழிக்கப்பட்ட பிறகு அங்கே எஞ்சி இருப்பது எது? – ‘பணம்’ மட்டுமே.
அடுத்து தேசியவாதம். கம்யூனிசம் என்பது அடிப்படையில் சர்வதேசத் தன்மைகொண்டது, இல்லையா? ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்’ என்பதுதான் அதன் முழக்கம். எனவே தேசியவாதமும் அதற்கு ஒத்துப் போகாது. நாம் ஓர் உலகமாக இணைய வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்று சேர வேண்டும். தேசிய அடையாளத்தைவிட ‘வர்க்க உணர்வு’ (Class Consciousness) என்பதுதான் மிக முக்கியமானது.
அடுத்து ஜனநாயகம். அதுவும் வேண்டவே வேண்டாம். ஏன்? ஏனெனில் தொழிலாளர்களால் தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. தொழிலாளர்களிடம் பொய்யான பிரக்ஞைகள் (False Consciousness) உள்ளன. பள்ளிகள், ஊடகங்கள், இணையம் மற்றும் ஹாலிவுட் சினிமாக்கள் மூலமாக முதலாளிகள் தொழிலாளர்களின் மூளையைச் சலவை செய்துள்ளனர். எனவே, ஒரு ‘முன்னணிப் படை’ (Vanguard), அதாவது கம்யூனிசக் கட்சிதான் மக்களைச் சமூகவுடைமை நோக்கி வழிநடத்திச் செல்ல முடியும்.
இதுதான் உண்மை என்று சொல்லவில்லை. ஆனால் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாக இதை முன்வைக்கிறேன். இதையெல்லாம் நான் ஓர் ஊகமாகவே (Speculation) சொல்கிறேன்; எனக்குத் தெரியாது. ஆனால் ஏன் இப்படி நடக்கிறது? இரண்டுக்குமான தொடர்பு (Correlation) என்ன? இதற்கு கார்ல் மார்க்ஸையே ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். கார்ல் மார்க்ஸ்தான் கம்யூனிசத்தின் தந்தை என்பது நமக்குத் தெரியும். ஆனால் கார்ல் மார்க்ஸின் வரலாறு என்பது மிகவும் விசித்திரமானது. உதாரணமாக அவர் ஒரு ஜெர்மன் குடிமகன். ஆனால் அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் பிரிட்டனில் கழித்தார்.
மார்க்ஸ் உலகப் புரட்சிக்காக வாதாடியதால் ஜெர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டார். அதன் பிறகு அவர் பிரிட்டனுக்குச் சென்றார். ஆனால் பிரிட்டனும் ஒரு முதலாளித்துவ நாடுதானே? அப்படியிருக்கையில், பிரிட்டனில் அவர் விரும்பியதைச் செய்ய அவர் எப்படி அனுமதிக்கப்பட்டார்? அவர் தனது படைப்புகளில் பெரும்பாலானவற்றைப் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் (British Museum) உள்ள நூலகத்தில் அமர்ந்துதான் எழுதினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை ஏன் அப்படிச் செய்ய அனுமதித்தார்கள்? இது நாம் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி, இல்லையா? 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன்தான் உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ நாடு. அப்படிப்பட்ட பிரிட்டன், மார்க்ஸை அங்கே வசிக்க அனுமதித்து அவர் விரும்பியதைச் செய்யவிட்டிருப்பது மிகவும் விசித்திரமானது.
இரண்டாவது விடயம், கார்ல் மார்க்ஸிற்குப் பணம் எங்கிருந்து வந்தது? மார்க்ஸின் மனைவி ஒரு ஜெர்மன் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் (Aristocrat). எனவே அவர் ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகியவர். ஆனால் மார்க்ஸ் தனது வாழ்நாளில் ஒருபோதும் பணம் சம்பாதித்ததில்லை. அவர் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (Communist Manifesto) ‘மூலதனம்’ (Das Kapital) ஆகியவற்றை எழுதி முடித்தவுடன் அந்தக் காலத்தில் யார் படிக்கப்போகிறார்கள். அவை விற்பனையாகப் போவதும் இல்லை. கார்ல் மார்க்ஸ் செல்வந்தர் இல்லை. ஆனாலும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்தார் என்பது நமக்குத் தெரியும். பிரபுத்துவர் இல்லை; செல்வந்தரும் இல்லை. ஆனால் அவர் ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்தார். அவருடைய குழந்தைகள் தனியார்ப் பள்ளிகளுக்குச் சென்றனர். பிரிட்டனில் அவர்களுக்கு ஒரு நல்ல வீடு இருந்தது. அப்படியானால் அவருக்குப் பணம் எங்கிருந்து வந்தது? அவர் தனது தோழர் ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸிடமிருந்து பணத்தைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. சரி, ஏங்கல்ஸிற்குப் பணம் எங்கிருந்து வந்தது? அவரது தந்தை ஒரு பெரும் தொழிலதிபர், ஒரு முதலாளி. இங்கேதான் உங்களுக்கான கேள்வி எழுகிறது: ஒரு மிகப்பெரிய செல்வந்தரான ஏங்கல்ஸின் தந்தை, தனது மகனுக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? அந்தப் பணத்தை ஏங்கல்ஸ் மார்க்ஸிற்குக் கொடுக்கிறார். மார்க்ஸோ முதலாளித்துவத்தையே அழிக்க உலகப் புரட்சிக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்? இது மிகவும் விசித்திரமானது.
மூன்றாவது விடயம் என்னவென்றால், அந்தக் காலகட்டத்தில் பல காரணங்களால் சமூகவுடைமை (Socialism) என்பது மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கருத்தியலாக இருந்தது. சோசலிசத்தின் அடிப்படை எண்ணம் என்னவென்றால், அது இயற்கையாகவே பரிணமிக்கும் (Evolve) என்பதுதான். ஆனால் மார்க்ஸ் ‘இல்லை, இல்லை… அது இயற்கையாகப் பரிணமிக்க நாம் அனுமதிக்க முடியாது, அது தானாக நடக்காது. நமக்கு ஒரு புரட்சி தேவை, ஓர் உலகப் புரட்சி தேவை’ என்கிறார். இங்கேதான் நமக்கு ஒரு கேள்வி எழுகிறது: அவர் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? சரி, இப்போது சமூகவுடைமை (Socialism) என்றால் என்ன, பொதுவுடைமை (கம்யூனிசம்) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
சமூகவுடைமை என்ற கருத்து மிகவும் எளிமையானது. ஆரம்பத்தில் நம்மிடம் ஒரு நிலப்பிரபுத்துவச் சமூகம் (Feudal Society) இருந்தது, பின்னர் அது தொழில்துறை சமூகமாக மாறியது. இது தொழில்துறை சமூகமாக மாறியதால், ஏராளமான தொழிலாளர்களும் முதலாளிகளும் உருவானார்கள். ஆனால் இங்கே உள்ள சிக்கல் என்னவென்றால், முதலாளித்துவம் உழைப்பைச் சுரண்டுகிறது. இது மக்களை மிகுந்த மகிழ்ச்சியற்ற நிலைக்குத் தள்ளுகிறது. எனவே, தொழிலாளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அடுத்ததாக, தொழிலதிபரான முதலாளியை எடுத்துக்கொள்வோம். மூலதனம் (Capital) என்பது ஓரிடத்தில் குவியும் தன்மைகொண்டது. உதாரணமாக, ஆரம்பத்தில் ஆயிரம் முதலாளிகள் இருக்கலாம், ஆனால் இறுதியில் ஒரு பத்துப் பேர் மட்டுமே எல்லாப் பணத்தையும் கைப்பற்றிக்கொள்வார்கள். அதாவது அனைத்து உற்பத்திச் சாதனங்களையும் தொழிற்சாலைகளையும் அந்தப் பத்துப் பேர் கட்டுப்படுத்துவார்கள். பிறகு அது ஒருவராகக்கூடக் குறையலாம். ஏனெனில் முதலாளித்துவம் அப்படித்தான் இயங்குகிறது. இங்கே உள்ள சிக்கல் என்னவென்றால், அது அதிகாரத்தை ஒரு புள்ளியில் குவிக்கிறது (Consolidation). இறுதியில் அந்த முதலாளியே முதலாளித்துவத்திற்கு எதிராகத் திரும்புவான்.
ஜனநாயகம் இருப்பதால், மக்களால் வாக்களிக்க முடியும் என்பதாலும், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதுவே சமூகவுடைமைக்கு (Socialism) வழிவகுக்கும். சமூகவுடைமை என்றால் என்ன? சமூகவுடைமை என்பது செல்வத்தை மறுபகிர்வு செய்வது (Redistribution of wealth) மட்டுமே. புரிதலுக்காக, சமூகத்தில் மூன்று வர்க்கங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்: பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள். இப்போது இந்த மறுபகிர்வு என்பது பணக்காரர்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுப்பதுதான். இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தின் அந்தஸ்தும் அதிகாரமும் உயர்கிறது.
இந்த அமைப்பைப் பார்த்தால், ஏழைகள் ஏன் இதனை விரும்புவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களுக்கு அதிகப் பணமும் சமத்துவம் கிடைக்கிறது. ஆனால் உண்மையில் இந்த அமைப்பைத் தீவிரமாக விரும்புபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். ஏனெனில், காலப்போக்கில் பணக்காரர்களைவிடத் தங்களுக்கு அதிக அதிகாரமும் அந்தஸ்தும் கிடைக்கும் என்பதால்தான். இது ஒரு மிக வலிமையான கூட்டணி. அதனால்தான் சோசலிஸ்டுகள் இது காலப்போக்கில் ஏற்படும் ஓர் இயற்கையான பரிணாம வளர்ச்சி என்று நம்புகிறார்கள். பெரும்பாலான மனித வரலாற்றில் இதுதான் உண்மையும்கூட. உதாரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா கம்யூனிச நாடாக மாறவில்லை, அதே சமயம் அது தூய முதலாளித்துவ நாடாகவும் இருக்கவில்லை; அது சோசலிச நாடாக மாறியது. அங்கே மிக வலுவான மக்கள் நலத் திட்டங்கள் (Welfare System) இருந்தன. எனவே, மனித வரலாற்றின் இயற்கையான போக்கில் சோசலிசம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும்.
சமூகத்தில் இவர்கள்தான் பெரும்பான்மையான மக்கள். ஆனால் மார்க்ஸிற்கு இதில் ஒரு சிக்கல் இருந்தது. மார்க்ஸ், இதற்குக் காரணம் பொய்யான பிரக்ஞை (False Consciousness) என்றார். ‘இது ஏதோ இயற்கையான ஒரு செயல்முறை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆளும் வர்க்கமான முதலாளிகள் பல தந்திரங்களை வைத்திருக்கிறார்கள்.’ உதாரணமாக, அவர்களால் தொழிலாளர்களிடம் மூளைச் சலவை செய்ய முடியும். எனவே, இந்த சோசலிச மாற்றம் வேலை செய்ய வேண்டுமென்றால், நீங்கள் ‘உண்மையான பிரக்ஞையை’ (True Consciousness)’ உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் மதத்தை அழிக்க வேண்டும்; கல்வி முறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்; மேலும் ஊடகங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இல்லையெனில், முதலாளிகள் பள்ளிகள், ஊடகங்கள், மதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழிலாளர்களைத் தொடர்ந்து மூளைச்சலவை செய்வார்கள்.
மேலும், இந்தத் தொழிலாளர்கள் உண்மையான அதிகாரத்தைப் பெற உலகெங்கிலும் ஒன்றிணைய வேண்டும். ஏன்? ஏனெனில் உண்மையான போராட்டம் என்பது ‘வர்க்கம்’ சார்ந்தது. அது ‘பிரக்ஞை’ (Consciousness) சார்ந்தது. சோசலிசம் உருவாக வேண்டுமென்றால், நாம் ‘வர்க்கம்’ என்ற கட்டமைப்பையே அழிக்க வேண்டும். எனவே, நடுத்தர வர்க்கம் அதிகாரத்தைப் பெறுவது என்பது ஒரு தவறான விடயம். அதற்குப் பதிலாக அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதுவே சமத்துவம். அனைத்துச் சொத்துரிமைகளையும் அழிப்பதுதான் மார்க்சியத்தின் அடிப்படை நோக்கம். சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையிலான முக்கிய வேறுபாடே இதுதான்: சோசலிசம் என்பது சொத்துக்களை மறுபகிர்வு செய்வது; கம்யூனிசம் என்பது சொத்துரிமையையே அழிப்பது.
ஆனால் நீங்கள் இதை நடைமுறைப்படுத்தினால், நடுத்தர வர்க்கம் தனது அந்தஸ்தை இழந்துவிடும், இல்லையா? எனவே, கம்யூனிசத்தின் கீழ் பணக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் ஒருசேரப் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் இருவரும் இணைந்து ஏழைகளுக்கு எதிராகத் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். சோசலிசமும் கம்யூனிசமும் கேட்பதற்கு ஒன்று போலத் தெரிந்தாலும், அவை இரவும் பகலும் போல முற்றிலும் முரண்பட்டவை. சோசலிசம் என்பது ஓர் இயற்கையான இயங்கியல் வளர்ச்சியாகத் தோன்றுகிறது. அதனால் அது சரியாகவே தெரிகிறது. பிறகு ஏன் மார்க்ஸ் இதில் இவ்வளவு குளறுபடிகளைச் செய்கிறார்? ‘உங்களுக்கு ஒரு கட்சி தேவை; ஒரு முன்னணிப் படை (Vanguard) தேவை. அதாவது தொழிலாளர்களின் தவறான பிரக்ஞையை அழித்து, அவர்களை ஒன்றிணைத்து, ஒரு கம்யூனிசச் சமூகத்தை உருவாக்க ஓர் அறிவு வர்க்கம் (Elite) தேவை.’ என்கிறார். அந்த அமைப்பு முழுமையான கம்யூனிசச் சமூகமாக மாறிய பிறகு, அந்தக் கட்சி தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும்; அதன் பிறகு உங்களுக்கு ஒரு சோசலிச சொர்க்கம் கிடைக்கும் என்கிறார்.
ஆனால் இங்கே எழும் கேள்வி என்னவென்றால், அந்தக் கட்சி ஏன் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்? இல்லையா? ஒரு கட்சியால் மக்களிடையே ஒரு குறிப்பிட்ட பிரக்ஞையை (Consciousness) உருவாக்க முடியும் என்றால், அவர்கள் ஏன் அதை மற்றொரு ‘தவறான பிரக்ஞையாக’ மாற்றமாட்டார்களா? எனவே, மார்க்ஸின் சிக்கல், அவர் சோசலிசத்தை எடுத்து அதை இன்னும் அதி தீவிரமான (Extreme) ஒன்றாக மாற்றுகிறார். அதே சமயம் அதை அதிகக் குழப்பமானதாகவும் மாற்றுகிறார். அவர் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இப்போது அது மிகவும் குழப்பமாக இருக்கிறது. என்னுடைய வாதம் என்னவென்றால், ஒரு கருத்து எப்போது அதீத நிலைக்குக் கொண்டு செல்லப்படுகிறதோ, அப்போதே அதன் நோக்கம் அதைச் சிதைப்பதும், அதன் நம்பகத்தன்மையைக் கெடுப்பதும், இறுதியில் அந்தக் கருத்தையே அழிப்பதும்தான்.
நீங்கள் விளையாட்டுக் கோட்பாட்டின் (Game Theory) அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தால், கம்யூனிசத்திற்குக் காரணமானவர் மார்க்ஸ் அல்ல. கம்யூனிசத்திற்குக் காரணமானவர்கள் இந்த முதலாளிகளும் ஆளும் வர்க்கத்தினரும்தான். ஏனெனில், அவர்களுக்கு சோசலிசம் என்ற அந்த எண்ணத்தையே அழிக்க வேண்டியிருந்தது, இல்லையா? நடுத்தர வர்க்கத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இத்தகைய ஒற்றுமை ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மாறாக, நடுத்தர வர்க்கமானது பிரபுக்களுடனும் (Nobility) அதிகார வர்க்கத்துடனும் (Oligarchy) ஒட்டியிருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.
நிலப்பிரபுத்துவப் பொருளாதாரத்தில் (Feudal economy), உங்களிடம் மன்னரும் பிரபுக்களும் (Nobility) இருந்தார்கள். இந்த மன்னர் மற்றும் பிரபுக்களிடம் மூன்று வழிமுறைகள் மூலம் அதிகாரம் இருந்தது. முதலாவதாக, அவர்கள் நிலத்தைக் கட்டுப்படுத்தினார்கள். இரண்டாவதாக, ராணுவத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மூன்றாவதாக, மதத்தைக் கட்டுப்படுத்தினார்கள். இதுதான் அன்றைய நிலைமை (Status quo). நிலத்தில் உழைக்கும் மக்கள் விவசாயிகளாக (Peasants) இருந்தார்கள். கத்தோலிக்க ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் இதுதான் உண்மையாக இருந்தது. ஆனால் தொழில்துறை வளர்ச்சியின் எழுச்சியுடன் புதிய மனிதர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள். உதாரணமாக ‘பூர்சுவாக்கள்’ (Bourgeoisie) உருவானார்கள். பூர்சுவாக்கள் என்பவர்கள் வேறு யாருமல்லர், அவர்கள்தான் முதலாளிகள்; தொழிற்சாலை உரிமையாளர்கள். இந்தப் பூர்சுவாக்களின் வருகையால், இப்போது உங்களிடம் ‘தொழிலாளர்கள்’ (Workers) உருவானார்கள். அதன் தொடர்ச்சியாக, இந்தத் தொழில்துறை பொருளாதாரத்தின் காரணமாக ‘நடுத்தர வர்க்கம்’ (Middle class) உருவானது.
இந்த நடுத்தர வர்க்கத்தினர் என்பவர்கள் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள், பத்திரிகையாளர்கள் எனத் தொழில்துறை பொருளாதாரத்திற்குத் துணையாக இருக்கும் மக்கள். சரிதானே? எப்போது இத்தகைய புதிய மக்கள் குழுக்கள் உருவாகிறதோ, அப்போது அங்கே ஒரு பதற்றமும் வன்முறையும் வெடிக்கிறது. இறுதியில் இதுவே பிரெஞ்சுப் புரட்சிக்கு இட்டுச் சென்றது. அங்கே உருவான இந்த ‘புதிய ஒழுங்கு’ (New Order), பழைய அதிகார அமைப்பை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்து செயல்பட்டது. இதுவே நெப்போலியப் போர்களுக்கும் (Napoleonic Wars) வழிவகுத்தது.
பிரான்சுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே ஏழு போர்கள் நடந்தன. இது ஐரோப்பாவில் பல லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான மக்களின் இறப்பிற்கு வழிவகுத்தது. அது மிகவும் கொடிய போராக இருந்தது. நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஐரோப்பாவின் அனைத்துத் தலைவர்களும் பிரபுக்களும் ஒன்றாகக் கூடி, இனிமேல் நாம் போரிடப் போவதில்லை என்று முடிவெடுத்தனர். அவர்கள் ‘கான்சர்ட் ஆஃப் யூரோப்’ (Concert of Europe) என்ற ஒன்றை உருவாக்கினர். இது அடிப்படையில் பல்வேறு மன்னராட்சிகள் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைப் போர்க்களத்திற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்ட ஓர் உடன்படிக்கையாகும். இதை அன்றைய காலத்து ‘ஐக்கிய நாடுகள் சபை’ (United Nations) என்று நீங்கள் கருதலாம்.
அந்த அமைப்பு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது எனச் சொல்லலாம். ‘மிகவும் சிறப்பாக’ அவர்கள் உண்மையான சிக்கல்களைத் தீர்க்க முயலவில்லை. பழைய அமைப்பிற்கும் புதிய அமைப்பிற்கும் இடையேயுள்ள இந்த முரண்பாட்டைத் தீர்க்காமல் பழைய அமைப்பினர் தங்கள் நிலையை அப்படியே (Status quo) நீடிக்க விரும்பினார்கள். ஆனால் தொழில்துறை பொருளாதாரமோ ஜனநாயகம், தாராளமயம் (Liberalism), சோசலிசம் ஆகியவற்றை அனுமதிக்கும் ஒரு புதிய ஒழுங்கை விரும்பியது. அதாவது செல்வத்தை மறுபகிர்வு செய்வது, அரசியல் அமைப்பில் அதிகப்படியான மக்கள் பங்கேற்பது, மதத்தின் அதிகாரத்தைக் குறைப்பது—அடிப்படையாகச் சொன்னால் பிரெஞ்சுப் புரட்சியின் அதே நோக்கங்களைத்தான் இவை கொண்டிருந்தன. பிரெஞ்சுப் புரட்சியைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, அமைதி தொடர்ந்துகொண்டிருந்தபடியால், மீண்டும் ஒரு பிரெஞ்சுப் புரட்சி வெடிப்பதற்கான காரணிகளை அதிகரித்துக்கொண்டே சென்றது.
இவை அனைத்தும் 1848 புரட்சிகள் (1848 Revolutions) என்று அழைக்கப்படும் நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றன. இது ஐரோப்பா முழுவதும் பரவியது. ஒவ்வொரு இடத்திலும் பூர்சுவாக்கள் (Bourgeoisie), நடுத்தர வர்க்கம், தொழிலாளர்கள் ஆகியோரின் கூட்டணி உருவானது. அவர்கள் அரசாங்கத்தில் மாற்றங்களைக் கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சில இடங்களில் இது வன்முறையாக வெடித்தது; சில இடங்களில் அமைதியாக நடந்தது. சில இடங்களில் ஜனநாயகம் முக்கியத்துவம் பெற்றது; சில இடங்களில் தாராளமயம் (Liberalism), சில இடங்களில் சோசலிசம் முன்னிறுத்தப்பட்டது. சரிதானே? 1848க்குப் பிறகு, ஐரோப்பியத் தலைவர்கள் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள், ‘இந்தச் சூழலைச் சரிசெய்ய நாம் ஏதேனும் செய்யாவிட்டால், இறுதியில் இந்த புதிய ஒழுங்கு (New Order) நம்மை முழுவதுமாக விழுங்கிவிடும்’.
முதலாளிகள், நடுத்தர வர்க்கம், தொழிலாளர்கள் ஆகியோரின் இந்த ‘புதிய ஒழுங்கு’ கூட்டணி நம்மை அழித்துவிடும். எனவே, நாம் என்ன செய்ய முடியும்? இதற்கான அவர்களின் தீர்வு என்னவென்றால், ‘நாம் அவர்களைப் பிரிக்க வேண்டும்’. இதற்கு முன்பு நடந்த மோதல்கள் அனைத்தும் அதிகாரம், அந்தஸ்து, மதம் சார்ந்தவையாக இருந்தன. எனவே, அவர்களின் முதல் திட்டம், ‘உண்மையான மோதல் என்பது வர்க்கம் சார்ந்தது’ என்ற எண்ணத்தை உருவாக்குவது. அதாவது, உண்மையான எதிரி பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் இல்லை; உண்மையான எதிரி முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில்தான் இருக்கிறது. இதுவே உண்மையான முரண்பாடு என்ற பிம்பத்தை உருவாக்குவதுதான் அவர்களின் திட்டம்.
இரண்டாவது திட்டம், நாம் இவர்களை அவமதித்து, இந்த இயக்கத்தை ஒரு தீவிரமான, மூர்க்கமான ஆவேசமான ஒன்றாகக் கட்டமைக்க வேண்டும். ‘யாருக்கும் சொத்துரிமை கிடையாது’ என்று கூறுவதன் மூலம் நீங்கள் அதைச் செய்யலாம். நாம் விரும்புவது ஒரு போர்ச் சமூகம் அல்ல. நாம் விரும்புவது, யாரிடமும் பணம் இல்லாத, யாருக்கும் எந்த உரிமைகளும் இல்லாத, யாருக்கும் எந்தச் சுதந்திரமும் இல்லாத ஒரு முழுமையான சமத்துவச் சமூகம். அதாவது கம்யூனிசம். புரிகிறதா? மேலும், இதை நிலைகுலையச் செய்வதற்கான மூன்றாவது வழி, இது ஒரு ‘சர்வதேசச் சதி’ என்று கூறுவதுதான்.
நண்பர்களே இதைச் செய்தவர்கள் யூதர்கள். அந்த கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் உலகத்தையே கைப்பற்றத் துடிக்கும் ஒரு ரகசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது ஏதோ ‘தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்’ என்பது போன்ற சாதாரண விடயம் அல்ல. தொழிலாளர்கள் ஒட்டுமொத்த உலகையும் ஆக்கிரமிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தில் வெறும் ‘கருவிகளாகப்’ பயன்படுத்தப்படுகிறார்கள். அக்கம்யூனிஸ்டுகளுக்கு யூதர்கள் மூலமாகவும் முதலாளிகள் மூலமாகவும் பிரிட்டிஷார் மூலமாகவும் நிதியுதவி கிடைத்தது. அவர்கள் ஜெர்மானியர்கள் அல்லர், பிரெஞ்சுக்காரர்கள் அல்லர், அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்லர். நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்: கம்யூனிசம் என்பது ஒரு ‘சை-ஆப்’ (PSYOP – உளவியல் தந்திரம்). ஜனநாயகம், சோசலிசம் மற்றும் தாராளமயம் (Liberalism) ஆகிய இயக்கங்களின் மதிப்பைச் சீர்குலைக்க, மேல்தட்டு வர்க்கத்தினராலும் பிரபுக்களாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி அது. இது ஒரு வகையான பிரச்சாரம் (Propaganda). நண்பர்களே, இப்போது இது உங்களுக்குப் புரிகிறதா?
சரி, இதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம். 1848 புரட்சிகளுக்குக் காரணம், நீண்ட கால அமைதி நிலவியதால், மக்கள் தொகை பெருக்கம் (Overpopulation) ஏற்பட்டது; அதனோடு பொருளாதார வளர்ச்சியும் உண்டானது. இது சமூகத்தில் பெரும் சமத்துவமின்மைக்கும் (Inequality), ஊழலுக்கும் வழிவகுத்தது. இதன் விளைவாக, புதிதாக எழுச்சி பெற்றுவந்த சக்திகளான ‘பூர்சுவாக்களுக்கும்’ (Bourgeoisie), அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் துடித்த ‘பிரபுக்களுக்கும்’ (Nobility) இடையே மோதல் வெடித்தது. இதனால்தான் ஐரோப்பா முழுவதும் இந்தப் புரட்சிகள் பரவின.
பிரான்சைப் போல் ஐரோப்பாவின் எல்லா இடங்களிலும் இது ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நாடும் இதற்கு ஒவ்வொரு விதமாக எதிர்வினையாற்றியது. ஆனால் ஐரோப்பாவிலேயே இந்தப் புரட்சிகளிலிருந்து தப்பிய ஒரே நாடு இங்கிலாந்து மட்டும்தான். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது: இங்கிலாந்திடம் காலனிகள் (Colonies) இருந்தன. உங்களுக்கு இங்கிலாந்தின் சூழல் பிடிக்கவில்லையென்றால், நீங்கள் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து போன்ற இடங்களுக்குச் சென்றுவிடலாம். அதாவது, உங்களுக்கு வெளியேறுவதற்கான வாய்ப்பு (Exit option) இருந்தது. ஆனால் மற்ற நாடுகளில் உள்ள மக்கள் அங்கேயே முடங்கிக் கிடந்தார்கள். அவர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருந்தது. இது ஐரோப்பியப் பிரபுக்களின் மனதில் மரண பயத்தை ஏற்படுத்தியது. நீண்ட காலமாக அவர்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக அமைதியைப் பேணி வந்தார்கள். ஆனால் இப்போது தொழிலதிபர்களான பூர்சுவாக்கள் (Bourgeoisie) இந்த ஆட்சியைக் கவிழ்க்க விரும்பினார்கள்.
எனவே, பிரபுக்கள் இப்போது என்ன செய்தார்கள் என்றால், முதலாளிகள், நடுத்தர வர்க்கம் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராகப் பிரிக்க ‘கம்யூனிசம்’ என்ற ஒன்று உருவாக்கப்படுவதை அவர்களே ஆதரித்தார்கள். அதாவது ‘வர்க்கப் போராட்டம்’ (Class conflict) என்ற எண்ணத்தை உருவாக்கினார்கள். அதன் விளைவாக, கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (Communist Manifesto) என்ற ஒன்றை எழுதுகிறார்கள். இது 1848 புரட்சிகளுக்குப் பிறகு வருகிறது. ஏனெனில், 1848 புரட்சிகளுக்குப் பிறகு ஐரோப்பா ஓர் உலகளாவிய புரட்சிக்குத் தயாராகிவிட்டது என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். இதுவே அவர்களின் செயல்திட்டம் (Agenda). அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஐரோப்பா முழுவதும் ஒரு ‘ரகசிய அமைப்பாக’ (Secret society) இருந்ததால், இது ஒரு ரகசிய ஆவணமாகவும் இருந்தது.
இந்த இயக்கம் அநேகமாகப் பிரபுக்களால் (Nobility) நிதியளிக்கப்பட்டிருக்கலாம் என்பதே எனது வாதம். ஏனெனில், இது ‘சொத்துரிமையை முழுமையாக ஒழிக்க’ (Abolition of property) அழைப்பு விடுக்கிறது. இனி யாருக்கும் சொத்து கிடையாது என்பது மிகவும் தீவிரமான ஒரு நிலைப்பாடு. மீண்டும் நினைவில்கொள்ளுங்கள், நடுத்தர வர்க்கம் சோசலிசத்தை ஆதரிக்க விரும்புகிறது; ஆனால் அவர்களால் கம்யூனிசத்தை ஆதரிக்க முடியாது. சோசலிசம் என்பது செல்வத்தை மறுபகிர்வு செய்வது மட்டுமே; ஆனால் கம்யூனிசம் என்பது செல்வத்தையே ஒழிப்பதாகும். இவை இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை. அடுத்து, ‘வாரிசுரிமையை ஒழிப்பது’ (Abolition of inheritance). நீங்கள் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்று வைத்துக்கொள்வோம். ‘நான் மிகவும் கடினமாக உழைத்து இந்தப் பணத்தைச் சம்பாதித்தேன்; இதை என் குழந்தைகளுக்குக் கொடுக்க விரும்புகிறேன்’ என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இப்போது உங்களால் அதைச் செய்ய முடியாது. இது மிகவும் மோசமான ஒரு விடயம்.
சரி, அடுத்து கவனிப்போம். கடனுதவி அல்லது நிதியை ஒரு தேசிய வங்கியின் மூலம் அரசின் கைகளில் மையப்படுத்துவது (Centralization of credit). இது கேட்பதற்கு மிகவும் தீவிரமான ஒன்றாகத் தெரியலாம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? முதலாளித்துவத்தில் ஏற்கனவே இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்குப் பெயர்தான் ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ (Bank of England), இல்லையா? எனவே முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையே ஏற்கனவே பல ஒற்றுமைகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள செல்வம் அனைத்தும் சேமிக்கப்படும் இடம்தான் இந்த ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ என்பதை நினைவில்கொள்ளுங்கள். எனவே ஒரு மையப்படுத்தப்பட்ட வங்கி என்பது கம்யூனிச அமைப்பிலும் சரி, இங்கேயும் சரி, ஒரே விடயம்தான். அதேபோல, தகவல் தொடர்பு சாதனங்களை (Means of communication) ஒரு கட்சியின் கைகளில் மையப்படுத்துவது.
இது வெறும் முதலாளித்துவ வர்க்கம் அல்லது ஒரு சில அதிகார வர்க்கத்தின் (Oligarchy) ஆட்சிதான். அது ஒரு சிறு குழுவாக இருந்தால் என்ன அல்லது ஒரு கட்சியாக இருந்தால் என்ன? உண்மையில் இரண்டுமே ஒன்றுதான், இல்லையா? தொழிற்சாலைகளின் விரிவாக்கம், உற்பத்திச் சாதனங்கள் அரசின் வசம் இருப்பது, அனைவரும் உழைக்க வேண்டும் என்ற கட்டாயம், விவசாயத்தையும் தொழில்துறையையும் ஒன்றிணைப்பது—இவை அனைத்தும் ஒரு ‘பாட்டாளி வர்க்கத்தை’ (Proletariat) உருவாக்குவதற்கான திட்டங்கள். அதாவது உற்பத்தி முறையை மாற்றுவது. உண்மையில் இதையல்லவா முதலாளித்துவமும் விரும்புகிறது? அந்த நேரத்தில் உலகின் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த நிலப்பிரபுத்துவச் சமூகமாக இருந்தது. ஆனால் இந்தத் திட்டம் ஒரு ‘தொழில்துறை பொருளாதாரத்தை’ உருவாக்கக் கோருகிறது. இதுதானே முதலாளித்துவத்தின் விருப்பமும்கூட? ஏனெனில், அப்போதுதான் அவர்களால் மக்களை இன்னும் சிறப்பாகச் சுரண்ட முடியும்.
அடுத்து, ‘அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி’. இதைக் கேட்டதும், ‘ஓ, இது நல்ல விடயமாயிற்றே, இலவசப் பள்ளிக்கூடம்!’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் இப்போது நீங்கள் அவர்களை மிக எளிதாக மூளைச்சலவை (Brainwash) செய்ய முடியும். இது ஒரு வகையான மூளைச்சலவைதான்.
எனவே, ‘இந்தச் செயல்திட்டங்கள் ஒரு கம்யூனிசத் திட்டம்’ என்று நீங்கள் சொன்னால், ஒரு முதலாளியாக நான் இதை ஏற்றுக்கொள்வேன். இந்தத் திட்டத்தை எண்ணி நான் மகிழ்ச்சி அடைவேன். இதில் என்ன தவறு இருக்கிறது?
கம்யூனிஸ்ட் அறிக்கையின்படி: ‘காலப்போக்கில் வர்க்க வேறுபாடுகள் மறைந்து, அனைத்து உற்பத்தியும் ஒட்டுமொத்தத் தேசத்தின் ஒரு பரந்த அமைப்பின் கைகளில் குவியும்போது, பொது அதிகாரமானது தனது அரசியல் தன்மையை இழந்துவிடும். அரசியல் அதிகாரம் என்று அழைக்கப்படுவது என்பது உண்மையில் ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே’. பூர்சுவாக்களுடனான போராட்டத்தின்போது, பாட்டாளி வர்க்கமானது காலத்தின் கட்டாயத்தால் ஒரு வர்க்கமாகத் தன்னைத் தானே தற்காத்துக்கொள்ள எழுகிறது. ஒரு புரட்சியின் மூலம் அது தன்னை ஆளும் வர்க்கமாக மாற்றிக்கொண்டு, பழைய உற்பத்தி முறைகளை வலுக்கட்டாயமாகத் துடைத்தெறியும்போது, அந்த முறைகளுடன் சேர்த்து வர்க்க முரண்பாடுகள் நிலவுவதற்கான காரணிகளையும் ஒட்டுமொத்த வர்க்க அமைப்பையும் அது அழித்துவிடுகிறது. அதன் மூலம் ஒரு வர்க்கமாகத் தனது சொந்த மேலாதிக்கத்தையும் (Supremacy) அது ஒழித்துவிடுகிறது.
சரி, இது பார்ப்பதற்குப் பொதுமக்களுக்கான ஒரு விடயமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அதுவல்ல. முதலாவதாக, கம்யூனிசம் முதலாளித்துவத்திற்கும் மன்னராட்சிக்கும் இடையிலோ அல்லது முதலாளித்துவத்திற்கும் மதத்திற்கும் இடையிலோ மோதல் இல்லை என்பதை நிலைப்படுத்த முயல்கிறது. மாறாக, உண்மையான எதிரிகள் பூர்சுவாக்களும் (முதலாளிகள்) பாட்டாளி வர்க்கமும்தான் (தொழிலாளர்கள்) என்ற பிம்பத்தை இது உருவாக்குகிறது. தொழிலாளர்கள் வெற்றி பெற வேண்டுமானால் அவர்களுக்கு ஒரு ‘கட்சி’ தேவை; ஒரு ‘முன்னணிப் படை’ (Vanguard Party) தேவை. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அந்த முன்னணிப் படை தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வர்க்கங்களை அழித்த பிறகு, அது தானாகவே மறைந்துவிடுமாம்! அது தனது அதிகாரத்தை சுயமாக முன்வந்து விட்டுக்கொடுத்துவிடுமாம்! உலக வரலாற்றில் இதுவரை இது ஒருபோதும் நடந்ததில்லை. ஆனால் ‘இந்த முறை எங்களை நம்புங்கள், இது வித்தியாசமாக இருக்கும்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். இது மிகவும் சுவாரஸ்யமானது, இல்லையா?
கம்யூனிஸ்ட் அறிக்கையில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அடிப்படைவாதிகளை ஆதரிக்கிறோம்; போலந்தில் விவசாயப் புரட்சியை ஆதரிக்கிறோம்; ஜெர்மனியில் பாட்டாளி வர்க்கத்தை ஆதரிக்கிறோம். அதாவது, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பிரச்சனைகளும் தேவைகளும் இருக்கின்றன, இல்லையா?
அந்தந்த நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள், ‘நாங்கள் எந்த உலகளாவிய சதித்திட்டத்திலும் (Natural conspiracy) அங்கமில்லை. எங்களுக்குத் தேவை ஒரு நியாயமான, சமத்துவமான சமூகம், அவ்வளவுதான். உலகைக் கைப்பற்றத் துடிக்கும் எந்த ஒரு ரகசிய அமைப்பிலும் நாங்கள் இல்லை’ என்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் அறிக்கை அதற்கு என்ன சொல்கிறது தெரியுமா? ‘ஆமாம், நீங்கள் அந்தச் சதியில் இருக்கிறீர்கள்! நாம் அனைவரும் இந்த உலகத்தைக் கைப்பற்றி, கம்யூனிசத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஒரு மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஓர் அங்கம்தான்’ என்கிறது.
இப்போது நான் 1917ஆம் ஆண்டைப் பற்றிப் பேச விரும்புகிறேன். 1917இல் முதலாம் உலகப் போர் வெடித்திருந்தது. அந்தப் போரில் ரஷ்யா தோற்றுக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் ஜார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் தனது பதவியைத் துறக்கிறார் (Abdicate). இப்போது ரஷ்யாவில் ஒரு ஜனநாயக அரசாங்கம் அமைகிறது. ஆனால் அதற்குப் பிறகு போல்ஷிவிக்குகள் (Bolsheviks) என்ற அதீதக் கம்யூனிசக் குழுவினர் அக்டோபர் புரட்சியைத் தொடங்குகிறார்கள். அடிப்படையில், அவர்கள் அதிகாரத்தைத் தாங்களாகவே கைப்பற்றிக் கொண்டு, பிறகு ஒரு தேர்தலை நடத்துகிறார்கள். இந்தத் தேர்தலிலிருந்து நீங்கள் ஒன்று காண்பீர்கள்: போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும், அவர்கள் சோசலிஸ்டுகளை (Socialists) விடப் பிரபலமானவர்கள் அல்லர். சோசலிஸ்டுகள் ஒரு மெதுவான, படிப்படியான மாற்றத்தை (Gradual change) வலியுறுத்தினார்கள். ஆனால் போல்ஷிவிக்குகள் தீவிரமான மாற்றத்தை விரும்பினார்கள்.
தேர்தல் முடிவுகளைப் பாருங்கள்: 1.7 கோடி (17 million) மக்கள் சோசலிஸ்டுகளுக்கு வாக்களித்தனர். போல்ஷிவிக்குகள் அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், அவர்களுக்கு வெறும் 1 கோடி (10 million) மக்கள் மட்டுமே வாக்களித்தனர். இறுதியில் பார்த்தால், அவர்களுக்கு வெறும் 23% வாக்குகளே கிடைத்தன. எனவே அவர்கள் ஒருபோதும் ஒரு பிரபலமான குழுவினர் அல்லர், அவர்கள் ஒரு சிறுபான்மையினரே. இதுவே ரஷ்ய உள்நாட்டுப் போருக்கு (Civil War) வழிவகுத்தது. வரலாற்றின் அந்தத் தருணத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ரஷ்யாவின் முக்கிய நகரங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்களே தவிர, ஒட்டுமொத்த ரஷ்யாவையும் அவர்கள் கட்டுப்படுத்தவில்லை.
உண்மையில், போல்ஷிவிக்குகளுக்கு ஏராளமான எதிரிகள் இருந்தனர். அவர்கள் ‘வெள்ளை இராணுவத்தை’ (Whites) எதிர்கொள்ளவேண்டியிருந்தது—அவர்கள் அடிப்படையில் பழைய பிரபுக்கள். அவர்களுக்கு எதிராகக் களமிறங்க நேச நாட்டுப் படைகளும் (Allied armies) இருந்தன. அதுமட்டுமின்றி, ‘பச்சை இராணுவம்’ (Greens) என்று அழைக்கப்பட்ட விவசாயிகளும் அவர்களுக்கு எதிரிகளாக இருந்தனர். வரலாற்றின் அந்தத் தருணத்தில், போல்ஷிவிக்குகள் இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவார்கள் என்று எவருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் அவர்கள் வென்றார்கள்.
இங்கே ஒரு சுவாரஸ்யமான விடயத்தைக் குறிக்க விரும்புகிறேன்: ரோமானோவ் வம்சத்தினர் ரஷ்யாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தனர். அவர்கள் ரஷ்ய விவசாயிகளால் நேசிக்கப்பட்டனர். அவர்கள் ரஷ்ய மரபுவழித் திருச்சபை (Orthodox tradition) பாரம்பரியத்தின் ஓர் அங்கமாகவே இருந்தனர். அவர்கள் ஐரோப்பாவின் பிற நாட்டுப் பிரபுக்களுக்கும் நெருங்கிய உறவினர்கள். குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அரச குடும்பங்களுடன் அவர்களுக்கு இரத்த உறவு இருந்தது. ஜார் இரண்டாம் நிக்கோலஸ் ரோமானோவ் வம்சத்தின் கடைசி மன்னர். புரட்சி வெடித்தபோது, அவர்கள் தங்களின் உறவினர்கள் இருக்கும் ஐரோப்பாவிற்குத் தப்பி ஓடிவிடுவார்கள் என்றுதானே நீங்கள் நினைப்பீர்கள்? ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அங்கேயே தங்கியிருந்தார்கள்.
அவர்கள் ஏன் அங்கேயே இருக்க வேண்டும்? அதற்கான பதில், தாங்கள் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் ஒருபோதும் நம்பவில்லை. முதலாவதாக, போல்ஷிவிக்குகள் வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இரண்டாவதாக, அவர்கள் ரஷ்ய விவசாயிகளால் நேசிக்கப்பட்டனர்; அவர்கள் ரஷ்ய மரபுவழித் திருச்சபையின் ஓர் அங்கமாக இருந்தனர். அவர்களுக்கு இங்கிலாந்து, ஜெர்மனியின் கைசர் (Kaiser) போன்ற ஐரோப்பாவின் மிகச் சக்திவாய்ந்த மனிதர்கள் உறவினர்களாக இருந்தனர். எனவே தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவே அவர்கள் நினைத்தனர். ஆனால், அதன் பிறகு ஒரு விசித்திரமான விடயம் நடந்தது.
போல்ஷிவிக்குகள் ரோமானோவ் குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல முடிவெடுக்கிறார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 17 முதல் 18 உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதைக் கேட்கும்போது, ‘இதில் எந்தத் தர்க்கமும் இல்லையே, அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?’ என்று உங்களுக்குத் தோன்றும். ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம் முதலில் விவசாயிகளைப் பகைத்துக்கொள்கிறார்கள் (ஏனெனில் அவர்களுக்கு அரச குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு இருந்தது). இரண்டாவதாக, ஐரோப்பிய அரச குடும்பங்களின் உறவினர்களைக் கொன்றதன் மூலம் அவர்களையும் உங்களுக்கு எதிராகத் திருப்புகிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் ஒரு வெறிபிடித்த புரட்சியாளர்களாகக் கருதப்படுவார்கள். பழமைவாத திருச்சபையினரையும் (Orthodox) பகைத்துக்கொள்வார்கள். கம்யூனிஸ்ட்டுகள் வெறுமனே வெறியர்கள் என்று கருதப்படுவார்கள்.
ஆனால் ஒரு நிமிடம் அவர்கள் வெறியர்கள் அல்லர் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் இக்கொலைச் செயல்களுக்குப் பின்னால் ஒரு பலமான காரணம் இருந்தது என்று கருதுவோம். அது என்னவாக இருக்கும்? அதற்கான விடை இதுதான். ரோமானோவ் வம்சத்தினரிடம் லண்டன் மற்றும் வால் ஸ்ட்ரீட் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கான டாலர்கள் இருந்தன. அவர்களின் செல்வத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அவர்கள் அனைவரும் இறந்துவிட்டால் என்னவாகும்? அந்தப் பணம் யாருக்குச் சொந்தமாகும்? சிந்தித்துப் பாருங்கள், அந்தக் கோடிக்கணக்கான பணம் இப்போது அந்த வெளிநாட்டு வங்கிகளுக்கே சொந்தமாகிவிடும். இது மிகப்பெரிய தொகை. உண்மையில் இதுதான் நடந்தது. அவர்கள் அனைவரும் இறந்த பிறகு, வெளிநாட்டு வங்கிகள் அந்தப் பணத்தைக் கைப்பற்றின. இது 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சர்ச்சைகளில் (Controversies) ஒன்றாகும்.
ரஷ்ய அரசாங்கம் இந்தத் தொகையைத் திரும்பப் பெற நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், வெளிநாட்டு வங்கிகளோ, ‘இந்தப்பணம் உங்களுக்குச் சொந்தமானதன்று. இது ரோமானோவ் குடும்பத்தினருக்குச் சொந்தமானது’ என்று கூறி மறுக்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? கம்யூனிஸ்ட்டுகளும் முதலாளிகளும் உண்மையில் நண்பர்கள். அவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. நண்பர்களே, நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? சரி, தொடர்வோம்.
போல்ஷிவிக்குகள் (Bolsheviks) மக்களிடையே அத்தனை பிரபலமானவர்கள் அல்லர். ஒரு பிரபுத்துவக் குடும்பத்தைக் கொன்றதால் விவசாயிகள் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகப் போரிடப் பெரிய அளவில் தொழிலாளர் பட்டாளமும் இல்லை. பிறகு எப்படி அவர்களால் இந்தப் போரில் வெற்றி பெற முடிந்தது? அவர்கள் லாட்வியா (Latvia), சீனா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளிலிருந்து வந்த சுமார் 2,00,000 கூலிப்படையினரை (Mercenaries) வைத்துத்தான் இந்தப் போரை நடத்தினார்கள்.
இங்கே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இந்தப் படைகளுக்குச் சம்பளம் கொடுக்க பணம் எங்கிருந்து வந்தது? போல்ஷிவிக்குகளிடம் அப்போது பணம் இல்லையே! பிறகு எப்படிச் சம்பளம் கொடுத்தார்கள்? அதற்கான விடை: வால் ஸ்ட்ரீட், லண்டன் மாநகரம் (City of London) இந்தப் படைகளுக்குச் சம்பளம் கொடுக்க போல்ஷிவிக்குகளுக்குப் பணம் அளித்தன. வால் ஸ்ட்ரீட்தான் இந்தக் கூலிப்படையினருக்கான செலவை ஏற்றது. அவர்களுக்கு ஏன் போல்ஷிவிக்குகள் மேல் அக்கறை?
வால் ஸ்ட்ரீட் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக போல்ஷிவிக்குகள் ‘சிவப்பு பயங்கரவாதத்தை’ (Red Terror) உருவாக்கினார்கள். சிவப்பு பயங்கரவாதம் என்பது போல்ஷிவிக்குகள் ரஷ்யாவின் அனைத்துச் செல்வந்தர்களிடமும் பிரபுக்களிடமும் சென்று, ‘உன் சொத்துக்களை எங்களிடம் ஒப்படை, இல்லையெனில் உன் மகளைச் சீரழிப்போம்; உன் மனைவியைக் கொல்வோம்; உன்னையும் கொல்வோம்’ என்று மிரட்டினார்கள். இதன் மூலம் அவர்கள் மிக அதிக அளவு பணத்தைச் சேர்த்தார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு, வெளிநாட்டுக் கூலிப்படையினருக்காக வால் ஸ்ட்ரீட் செய்த செலவைத் திருப்பிச் செலுத்தினார்கள். மீண்டும் சொல்கிறேன், முதலாளித்துவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் இணைந்துதான் செயல்பட்டார்கள்.
அடுத்து, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற ‘நேச நாட்டுப் படைகள்’ (Allies) ரஷ்யாவிற்குப் பெரும் இராணுவத்தை அனுப்பின. அவர்கள் கம்யூனிசத்தை அழிப்பார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் உண்மையில் நடந்தது வேறு. அவர்கள் ரஷ்யா தங்களுக்குத் தர வேண்டிய கடனை வசூலிக்கவே சென்றார்கள். போல்ஷிவிக்குகள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன், நேச நாட்டுப் படைகள் அங்கிருந்து வெளியேறி, கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடிய ‘வெள்ளை இராணுவத்தையே’ (Whites) தாக்கினார்கள். சுருக்கமாகச் சொன்னால், நேச நாட்டுப் படைகள் போல்ஷிவிக்குகளுக்கு உதவின, வால் ஸ்ட்ரீட் அவர்களுக்கு நிதியளித்தது. இப்படித்தான் போல்ஷிவிக்குகள் போரில் வெற்றி பெற்றார்கள். இப்போது இது உங்களுக்குப் புரிகிறதா? முதலாளித்துவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் ஒரே மாதிரியான உலகப்பார்வையைக் கொண்டிருப்பதால் அவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள்.
ரிச்சர்ட் ஸ்பென்ஸ் எழுதிய ‘வால் ஸ்ட்ரீட் அண்ட் தி ரஷ்யன் ரெவல்யூஷன்’ (Wall Street and the Russian Revolution) என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இது. ரிச்சர்ட் ஸ்பென்ஸ் ஒரு வரலாற்று ஆசிரியர். வால் ஸ்ட்ரீட் எப்படி போல்ஷிவிக்குகளுக்கு நிதியுதவி செய்தது என்பதற்கான ஏராளமான ஆவணங்களை அவர் வைத்திருக்கிறார். அது ஏன் நடந்தது என்பதையும் அவர் விளக்குகிறார். ‘ரஷ்யா ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்ததால், அதன் பொருளாதாரத்தை முற்றிலும் அழிக்க வால் ஸ்ட்ரீட் விரும்பியது. ரஷ்யர்களின் செல்வத்தையும் இயற்கை வளங்களையும் திருடுவதே அதன் நோக்கம். இதற்காகவே அவர்கள் போல்ஷிவிக்குகளுக்குப் பணம் கொடுத்து, ரஷ்யப் பொருளாதாரத்தைச் சிதைக்கச் செய்தார்கள்.
1918 முதல் 1921 வரை, போல்ஷிவிக்குகள் ரஷ்யப் பொருளாதாரத்தை வெறும் ‘பண்டமாற்று’ (Barter) மற்றும் ‘கொள்ளை’ (Robbery) அடிப்படையிலான ஒன்றாக மாற்றினார்கள். அவர்கள் தங்கள் போருக்கான நிதியைத் திரட்ட பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள் என அனைவரிடமிருந்தும் எஞ்சியிருந்த அனைத்தையும் திருடினார்கள். தனியார் வர்த்தகத்தைத் தடுத்தது, பணப் பரிமாற்ற முறையை அழித்தது மட்டுமல்லாமல், அரண்மனைகள், வங்கி பெட்டகங்கள், தேவாலயங்கள் அருங்காட்சியகங்கள் என அனைத்தையும் சூறையாடி ஒரு மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றினார்கள். இதை நாம் ‘சொத்து அகற்றுதல்’ (Asset Stripping) என்று அழைக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், வால் ஸ்ட்ரீட் வழங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, போல்ஷிவிக்குகள் தங்கள் சொந்தச் சமூகத்தையே அழித்தார்கள்.
அவர்கள் கையில் கிடைத்த ஒவ்வொரு மதிப்புமிக்க பொருளையும் அபகரித்து, ஒரு புதிய அரசுக் கருவூலத்தில் பதுக்கி வைத்தார்கள். 1921ஆம் ஆண்டின் இறுதியில், சுமார் 45 கோடி டாலர் (450 million) மதிப்புள்ள பொருட்கள் அங்கே சேகரிக்கப்பட்டன. இவை அனைத்தும் வெளிநாடுகளில் உள்ள முதலாளித்துவ நாடுகளின் கரன்சிக்காக, அவற்றின் உண்மையான மதிப்பைவிட மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், போல்ஷிவிக்குகள் போருக்கான நிதியைத் திரட்ட அனைத்தையும் திருடினார்கள். இந்தச் செயல்பாட்டில், ரஷ்யாவின் பாரம்பரியம், செல்வம், மதம், பிரபுத்துவத்தை அழித்ததன் மூலம், சோவியத் யூனியனை முதலாளித்துவத்திற்கு மிகவும் இணக்கமான ஒரு நாடாக அவர்கள் மாற்றினார்கள். அதனால்தான் சோவியத் யூனியன் வீழ்ந்தபோது, அது உடனடியாக ஒரு முதலாளித்துவ நாடாக மாறியது.
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், முதலாளித்துவமும் கம்யூனிசமும் எதிரிகள் அல்லர். உலகைக் கைப்பற்றும் திட்டத்தில் இரண்டும் கூட்டாளிகள். இதுவே 20ஆம் நூற்றாண்டின் உண்மையான கதை.
சீனாவைப் பொறுத்தவரை, அது ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டபோது, பெரும்பாலானோர் நாம் கம்யூனிசத்தைப் பின்பற்ற வேண்டும், முதலாளித்துவத்தைக் கைவிட வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் மார்க்ஸின் சிந்தனைகளைப் பின்பற்றினார்கள். இங்கே ஒரு சிறப்பான சொல் பயன்படுத்தப்படுகிறது, அதுதான் ‘சீனத் தனித்துவத்துடன் கூடிய சோசலிசம்’ (Socialism with Chinese Characteristics). நாடு உண்மையில் முதலாளித்துவத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, கம்யூனிசம் என்பது வெறும் பெயரளவில் மட்டுமே சொல்லப்படும் ஓர் இலக்காக இருக்கும் சூழலைச் சமாளிக்கத் தலைவர்கள் கையாளும் ஒரு வழிமுறையாக இது என்று எனக்குத் தெரியவில்லை. சீனா ஒரு சுவாரஸ்யமான உதாரணம், ஏனெனில் மார்க்ஸ் உலகத்தை ஆய்வு செய்தபோது, அவர் பெரிதாகக் கருத்தில் கொள்ளாத இரண்டு இடங்கள் ரஷ்யா மற்றும் சீனா ஆகும்.
மார்க்ஸ் ஏன் ரஷ்யாவையும் சீனாவையும் புறக்கணித்தார்? அதற்கான விடை: இரண்டு நாடுகளுமே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ (Feudal) சமூகங்களாக இருந்தன. மார்க்ஸின் பார்வையில், ஓர் உலகளாவிய புரட்சிக்குத் தேவையான அந்த முதிர்ச்சியான வளர்ச்சி நிலையை (Industrial maturity) ரஷ்யாவும் சீனாவையும் அடையவில்லை. அவரைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தக் கவனமும் ஜெர்மனியின் மீதே இருந்தது. இதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. மார்க்ஸ் பிரிட்டனால் ஆதரிக்கப்பட்டார் என்பதை நினைவில்கொள்ளுங்கள். பிரிட்டனோ ஜெர்மனியின் பரம எதிரி. எனவே, பிரிட்டன் ஏன் மார்க்ஸை ஆதரிக்க வேண்டும்? ஏனெனில், பிரிட்டனின் பெரும் எதிரியான ஜெர்மனியில் ஒரு புரட்சியை உருவாக்கி, அதைச் சிதைக்க மார்க்ஸ் முயன்றார். இது ஒரு தெளிவான தந்திரம். மார்க்ஸைப் பொறுத்தவரை, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பின்தங்கியவை; அவை விவசாய நாடுகள்; அங்கே மன்னராட்சி நடக்கிறது—எனவே அவை ஒரு பொருட்டல்ல. அவை அவரது சித்தாந்த மாதிரியில் (Model) சரியாகப் பொருந்தவில்லை.
ஆனால் லெனின், ‘இல்லை, புரட்சியை நம்மால் துரிதப்படுத்த முடியும். விவசாயிகளைத் தொழிலாளர்களாக மாற்றுவதற்கு உதவும் ஒரு கட்சி (Party) இருந்தால், அந்த மாற்றத்தை வேகப்படுத்தலாம்’ என்றார். இதுவே லெனினின் பங்களிப்பாக இருந்தது. ஆனால் மாவோ (Mao) இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘இல்லை, நமக்குத் தொழிலாளர்களே தேவையில்லை. விவசாயிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு முழுமையான இயக்கத்தை நடத்த முடியும்’ என்றார். புரட்சியில் வெற்றி பெற்ற பிறகு, நாம் ஒரு ‘தொழில்துறை புரட்சியை’ உருவாக்கிக்கொள்ளலாம் என்பது அவரது வாதம். எனவே, நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், மாவோ உண்மையில் ஒரு கம்யூனிசப் புரட்சியை நடத்தவில்லை; அது கம்யூனிசத்தின் முகமூடியை அணிந்திருந்த ஒரு விவசாயிகளின் எழுச்சி (Peasant uprising) மட்டுமே. மாவோ என்பவர் மார்க்ஸ் அல்லது லெனினைப் போன்ற ஒரு சிறந்த கம்யூனிசத் தத்துவவாதி இல்லை. அவர் ஓர் இராணுவத் தளபதி. அவர் கடந்த காலங்களிலிருந்த மிங் வம்சத்தின் ஜு யுவான்சாங் (Zhu Yuanzhang) போன்ற விவசாயத் தலைவர்களிடமிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர் அல்லர்.
மாவோ தனது ஆட்சிக்கு ஓர் அங்கீகாரத்தை (Legitimacy) உருவாக்கவும் சோவியத் யூனியனின் ஆதரவைப் பெறவும் கம்யூனிசம் என்ற முகமூடியைப் பயன்படுத்தினார். மேலும், மிக வேகமாகத் தொழில்மயமாக்க (Industrialize) கம்யூனிசம் ஒரு கட்டமைப்பை வழங்கியது. இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அந்தத் தருணத்தில் மாவோ அமெரிக்காவுடனும் இணைந்து செயல்பட முயன்றார். அவர் சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் உறவை வளர்க்க விரும்பினார். ஆனால் அமெரிக்காவோ சியாங் கே-ஷேக் (Chiang Kai-shek) என்பவரை ஆதரிக்க விரும்பியது. எனவே மாவோ வெற்றிபெற்றபோது, அமெரிக்கா, சீனாவைப் புறக்கணித்து, பொருளாதாரத் தடைகளை (Embargo) விதித்தது. இதுவே மாவோவை முழுமையாகக் கம்யூனிசத்தைத் தழுவும்படி கட்டாயப்படுத்தியது.
ஆனாலும், மாவோவிற்கு கம்யூனிசம் என்பது அத்தனை முக்கியமானது அல்ல. அவருக்கு மிக முக்கியமானது ‘விரைவான தொழில்மயமாக்கல்’ (Industrialization) மட்டுமே. மற்றொரு முக்கியமான விஷயம் ‘தேசிய இறையாண்மை’ (National Sovereignty). அவர் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பவில்லை. சீனா முழுமையாகக் கம்யூனிசப் பாதையில் சென்றால், சோவியத் யூனியன் சீனாவைத் தனது ‘தம்பி’யாக (Little brother) பாவித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். ஆனால் மாவோ தேசிய இறையாண்மையை மிக உயர்வாகக் கருதினார். இதுவே இறுதியில் 1957இல் சீனா-சோவியத் பிளவுக்கு (Sino-Soviet split) வழிவகுத்தது. இப்போது இது உங்களுக்குப் புரிகிறதா?”
அப்படியானால், முதலாளித்துவம் என்பது கம்யூனிசத்திற்குச் சமமானது என்றோ, அல்லது கம்யூனிசம் என்பது முதலாளித்துவத்தின் ஓர் ‘ஆயுதம்’ என்றோ நாம் புரிந்துகொள்ளலாமா? ஒருவேளை நாம் கம்யூனிசத்தைப் பின்தொடர்ந்தால், இறுதியில் நாம் அடைவது முதலாளித்துவத்தைத்தானா?
முதலாளித்துவம் என்பது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் ‘மூலதனத்தை’ (Capital) மையமாகக் கொண்டு கட்டமைக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கையாகும். இது பழைய அதிகார வர்க்கத்திற்கு (மதம், மன்னர், தேசியம், ஜனநாயகம்) ஒரு நேரடி அச்சுறுத்தலாகும். ‘இந்தச் சிக்கலான முறைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, மூலதனத்தையே சமூகத்தின் அடிப்படையாக மாற்றுவோம்’ என்பதுதான் முதலாளித்துவத்தின் வாதம். இந்த இரண்டு அமைப்புகளும் (பழைய அதிகார வர்க்கம் மற்றும் புதிய மூலதன வர்க்கம்) மோதிக்கொண்டபோதுதான் மாற்றங்கள் நிகழ்ந்தன.
தொழிலாளர்கள் விரும்புவது சமூகவுடைமை, அதாவது சமூக ஜனநாயகம். முதலாளித்துவத்திலிருந்துதான் சமூக ஜனநாயகம் பிறந்தது. சமூக ஜனநாயகம் என்பது எளிமையானது: ‘ஆம், நாங்கள் முதலாளித்துவத்தை நம்புகிறோம், ஆனால் அதன்மீது சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும், செல்வம் நியாயமாகப் பங்கிடப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்’ என்பதுதான். ஒரு சிலரிடம் மட்டுமே அனைத்துப் பணமும் குவிந்திருப்பதை எவராலும் ஏற்க முடியாது என்பதால் இது மிகவும் தர்க்கரீதியானது.
சமூக ஜனநாயகம் என்பது பழைய அதிகார வர்க்கத்திற்கும் சரி, தீவிர முதலாளித்துவத்திற்கும் சரி, ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியது. எனவே, பழைய அதிகார வர்க்கமும் முதலாளிகளும் என்ன செய்தார்கள் என்றால், சமூக ஜனநாயகத்தை ‘கம்யூனிசமாக’ உருமாற்றினார்கள் (Mutate). இதன் மூலம் சமூக ஜனநாயகத்தின் மதிப்பைக் குறைத்து (Delegitimize), அதை ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் எதிரான ஒரு ‘அச்சுறுத்தலாக’ சித்தரித்தார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், முதலாளித்துவம் என்பது வரலாற்றின் ஓர் இயல்பான வளர்ச்சி. இது பழைய அதிகார வர்க்கத்துடன் மோதும்போது, அதன் எதிர்வினையாகச் சமூக ஜனநாயகம் பிறக்கிறது. ஆனால் இந்தச் சமூக ஜனநாயகம், முதலாளித்துவத்திற்கும் பழைய அதிகார வர்க்கத்திற்கும் ஓர் அச்சுறுத்தலாக மாறும்போது, அவ்விருவரும் ஒன்றிணைந்து ஒரு ‘திட்டத்தைத் தீட்டியதன்’ மூலம் கம்யூனிசத்தை உருவாக்கினார்கள்.
கம்யூனிசத்தின் ஆரம்ப நாட்களில், பிரபுக்களும் முதலாளிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக அதை ஆதரித்தார்கள். அந்த ஆதரவின் காரணமாகவே, கம்யூனிசம் மெல்ல மெல்ல தீவிரமடைந்து ‘போல்ஷிவிசம்’ (Bolshevism) அல்லது புரட்சியாக மாறியது. இந்த அமைப்பு எப்படி உருவானது என்பது இப்போது புரிகிறதா? இது ஏதோ ஓர் அறையில் அமர்ந்து தீட்டப்பட்ட துல்லியமான திட்டம் என்று நாம் சொல்ல முடியாது. உண்மையில் இது மிகவும் இயல்பானதும் (Organic) குழப்பமானதுமான ஒரு வளர்ச்சி. முதலில், கம்யூனிசத்தை ஓர் உளவியல் தந்திரமாக (PSYOP) மட்டுமே அவர்கள் வைத்திருந்தார்கள். கம்யூனிசத்திலிருந்து போல்ஷிவிசம் போன்ற ஒரு தீவிரவாதம் பிறக்கும் என்று எவருமே அப்போது நம்பியிருக்கமாட்டார்கள். ஏனென்றால் போல்ஷிவிசம் என்பது அத்தனை பைத்தியக்காரத்தனமானது. ஆரம்பத்தில் கம்யூனிசமே ஒரு கிறுக்குத்தனமாகத் தெரிந்தது. ஆனால் அது காலப்போக்கில் பொது நீரோட்டமாக மாறியது. அதன் தொடர்ச்சியாகப் பிறந்த போல்ஷிவிசமும் தொடக்கத்தில் வினோதமாகத் தெரிந்து, பின்னாளில் அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சீனா உள்ளிட்ட உலகெங்கிலும் பரவியது.
1917ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி என்பது மிகப்பெரிய சூதாட்டம் (wild gamble). முதலாளிகளின் பேராசையாலேயே அது வெற்றியும் பெற்றது. ஆனால், அது ஒருமுறை வெற்றி பெற்று, சோவியத் யூனியனில் கம்யூனிசம் நிலைநாட்டப்பட்ட பிறகு, மக்கள் உலகைப் பார்க்கும் முறையையே அது மாற்றியது. அதன் விளைவாக, சீனாவிலும்கூட இப்போது கம்யூனிசம் சாத்தியமே என்று மக்கள் நினைக்கத் தொடங்கினர்.
பேராசிரியர் ஜியாங் சூயின் (Jiang Xueqin )- சீன-கனேடியக் கல்வியாளர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் புவிசார் அரசியல் கோட்பாட்டாளர். இவர் சீனாவில் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் வகுப்புகளை Predictive History என்னும் யூட்யூப் பதிவிட்டு வருகிறார். இவரின் சிறப்பு, இஸ்ரேல்-ஈரான் 12 நாள் யுத்த நிகழ்வை முன்கூட்டியே கணித்திருந்தார். இவரின் வகுப்புகளுக்கு உலகம் முழுவதும் இலட்சக் கணக்கில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இக்கட்டுரை, ‘கம்யூனிசப் பூச்சாண்டி’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட வகுப்பின் மொழிபெயர்ப்பு.



