தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
கட்டுரை | வாசகசாலை

தற்கொலைகளின் துரத்தல்களில் தன்மானத்தைக் காப்பதற்காக தமது வாழ்வையே தொலைத்து நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் எல்லாச் சிறுகதைகளிலும் இடம்பிடிக்கின்றனர். வாழும் வாழ்வை யாரும் குறை சொல்லாமல் யாரிடமும் கையேந்தாமல் குறையறியா மாந்தர்களாக வாழ்வதே அவர்களின் எழுதப்படாத விதியாகிறது. ஆனால் வாழ்வெனும் நதியின் போக்கு ஒற்றைத் தளத்தை பற்றி கொண்டு நேர் பாதையிலும் சமவெளியிலும் ஓடும் ஓட்டம் அல்லவே மேடுகளும் பள்ளங்களும் துன்பங்களும் துயரங்களும் துரத்திக் கொண்டு வரும் நேரம் அறியா காலத்தில் நம்மை திசை திருப்பி விடும் வாழ்வின் பயணத்தில் அவர்களால் தம்மை காத்துக் கொள்ள முடியாமல் தடுமாறிப் போகிறார்கள் தடம் மாறியும் போகிறார்கள் எல்லா துரத்தல்களுக்கும் சாவுதான் எல்லை என அதைத் தழுவி கொள்கிறார்கள் வாழ வழியற்றும் ஊராரின் நகைப்புக்கு ஆளாகும் அவலச் சொல்லிலிருந்து மீண்டெழவும் அவர்களுக்கு மரணமே வாழ்வளிக்கிறது பிறர் வாழ்வதற்காக தம் வழித்தடத்தையே அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்த மனிதர்களுக்கு அவர்களாலேயே வாழ்வு அறுபடும் என்ற கூர் கத்தியை அவர்கள் எப்போதுமே நினைத்துப் பார்க்கவில்லை தம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஆடுகளையும் மாடுகளையும் விற்றுவிட்டு அடுத்தவர் கையேந்தி கூலிக்காக ஓடும் அந்த வெள்ளந்தி மனிதர்களை நூல் காட்சிப்படுத்துகிறது ஆராய்ச்சி பட்டி என்ற ஒற்றை ஊரில் இத்தனை குணங்கள் கொண்ட மனிதர்களும் இத்தனை செயல்களை அடக்கி வைத்திருக்கும் சாயமலையும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அந்த மனிதர்களின் வாழ்வே சாட்சியாகிறது நூலின் 12 சிறுகதைகளும் எளிய மனிதர்களின் துன்பங்களை அவர்களின் வாழ்வியலோடு நம்மையும் பிணைத்து விடுகிறது எல்லா கதை மாந்தர்களும் நல்லவர்களாக படைக்கப்படும்போது ஒரு சிலரின் வஞ்சக எண்ணங்கள் எல்லோரது வாழ்வையும் முடித்து விடுகிறது. நிலத்திற்காகவும் சொத்திற்காகவும் அண்ணன் தம்பிகள் போராட்டம் அன்றிலிருந்து இன்றைய கணினி யுகம் வரை தொடர்கிறது காட்சிகள் தான் மாறுகிறதே ஒழிய கருவிகள் புதிதாகிறது ஆனால் மனம் இன்னும் பேராசையில் பற்றி கொண்டு நகர மறுக்கிறது
எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை யார் அறிவார்? அவரவர் வாழ்விற்கு சாதகமான பலன்களை சொல்வதாலேயே ஜாதகம் என்று பெயர் பெற்றது ஆனால் எல்லா ஜாதகப் பலன்களும் இப்போதும் பலனளிப்பதில்லை எனில் மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கையையும் அச்சத்தையும் தமது பலமாகக் கொண்டு வாழும் ஜோதிடர்களின் வாக்கு எப்போதும் பிற குடும்பங்களை வாழ வைக்க உதவுமானால் சிறப்பாகும் இங்கே ஒரு ஜோதிடர் கூறிய பொய்யால் ஒரு குடும்பமே தமது வாழ்வை தொலைத்து நிற்கையில் இறுதியில் ஜோதிடரும் தனது பாவத்திற்கு உரிய சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார்.
ஊர்க்கினறு அரியநாச்சியை அபகரித்துக் கொண்டதை எழுதும் கதையில் குடியில் வாழும் ஆண்களை கொண்டாட முடியாமல் தவிக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தை நடத்திச் செல்வதற்கு படும் பாட்டையும் அக்கம் பக்கத்தில் அதனால் விளையும் சண்டையையும் காட்சிப்படுத்துகிறது கிணற்றில் நீர் சேர்ந்துகையில் வாளியும் கயிறு உள்ளே விழுந்து விட அதை எடுப்பதற்காக அரியநாச்சி படும் பாடும் அவரது அம்மா அவளை துன்புறுத்தும் காட்சிகளும் வாசிக்கையில் நம் நெஞ்சை ரணப்படுத்துகின்றன.
கதைகளில் எங்கும் கல்வியின் சுவடுகள் பதியவே இல்லை கதாபாத்திரங்கள் எப்போதும் கோபமும் பாவமும் கொண்டே உலவுகிறார்கள். சிந்தனையின் வீச்சை அவர்கள் எப்போதுமே அறியாமலேயே நகர்கிறார்கள். அதுவே அவர்கள் உடனடியாக தடுமாறி போவதற்கு மூல காரணமாக அமைந்து விடுகின்றன கொடுத்த வாக்கை காப்பாற்றுதல் என்ற எண்ணம் உடையவர்கள் அதை நிறைவேற்றுவதற்கு தங்கள் வாழ்வையே ஒப்படைத்துக் கொள்கிறார்கள்.
உரையாடல்களிலும் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கிலும் தனது முதல் தொகுப்பிலேயே முச்சிலன் பாரதி முத்திரை பதித்து விடுகிறார் கிராமத்துச் சொல்லாடல்களும் மக்களின் அன்றாட வாழ்வில் வெளிப்படும் பழமொழிகளும் கதைகளுக்கு அழகு சேர்க்கின்றன கதையின் இடையில் ஆங்காங்கே தென்படும் உரைநடைத் தன்மையை குறைத்துக் கொண்டால் இன்னும் கிராமத்து பாங்கின் அழகு வாசிப்போருக்கு முழுமையாக வெளிப்படக்கூடும்.
சாய மலையிலிருந்து ஒரு எரிகல் என்ற சிறுகதை தீண்டாமையின் அடிச்சுவட்டை எட்டிப் பார்க்கிறது புதிதாக ஊருக்குள் வரும் நபரின் சாதியை அறிந்து கொள்வதற்கு அந்த மக்கள் எப்படியெல்லாம் அவதாரம் எடுக்கிறார்கள் என்பதை டீக்கடை பணியாள் மூலம் வெளிப்படும் விளக்கம் தீண்டாமை சூட்டை எரியவைக்கிறது.
பல கதைகளில் பெண்கள் தற்கொலைக்கு தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் தருணத்தில் செங்காட்டுப்பூ அதிலிருந்து தனித்து மணம் வீசுகிறது. தனது வாழ்வு சீரழிந்த போதிலும் தன்னை நம்பி இருக்கும் தங்கைகளுக்காக வாழப் புறப்படும் பெண்ணை அவளின் போராட்ட குணத்தை அது வெளிப்படுத்தி விடுகிறது.
காணாமல் அறிந்து கொள்ளாமல் எத்தனையோ கற்பனை கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்படும் ஊர்களுக்கு இல்லாத சிறப்பு தன் கண்முன்னே நிகழும் மனிதர்களை காட்சிப்படுத்துவதில் தனித்து தெரிகிறது. அவரவர் ஊரின் சிறப்பை ஆவணம் செய்தல் வரலாற்றை பதிவு செய்வதன் அவசியத்தை ஆராச்சிப்பட்டி வழியே முகிலன் பாரதி முன்னெடுத்து இருக்கிறார்.
இலக்கியங்களில் கதை கூறல் எல்லோருக்கும் எப்போதும் பிடித்தமான ஒன்றாக மாறி நிற்கிறது மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவன் பெரும் அனுபவங்களில் கதைகளின் பங்கு அளப்பரியது. கேட்கும் கதைகள் நம்மை எப்போதாவது சிந்திக்கத் தூண்டுகின்றன ஒரு கணம் நாம் கடந்து வந்த பாதையின் வெப்பத்தை நமக்கும் கடத்துகின்றன கதைகளின் பெரும் பயனே அவை கொடுக்கும் மூச்சுக்காற்றை நமக்கான வாழ்வின் அடித்தளமாக மாற்றிக் கொள்வதே எனலாம். கதை கேட்டே வளர்ந்த தலைமுறை இன்னும் கொஞ்ச நாளில் கருவிகளின் பின்னே தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது அப்படியானதொரு சூழலில் எங்கோ ஒரு மூலையில் கவனிப்பாறை கிடக்கும் கிராமத்தின் உயிர்ப்பையும் அதில் உலவும் மனிதர்களின் குண நலன்களையும் வரலாறாக்கியிருக்கும் எழுத்தாளரின் கவனம் இன்னும் நிறைய நிறைய கதைகளை வெளிக்கொணர இந்தப் பூ பாதை அமைக்கிறது.
செங்காட்டுப் பூ
சிறுகதைத் தொகுப்பு
முகிலன் பாரதி
வெளியீடு தமிழ் வெளி சென்னை
பக்கம் 110
விலை ரூபாய் 160
முதல் பதிப்பு டிசம்பர் 2025



