இணைய இதழ் 124சிறுகதைகள்

பரந்து கெடுக – பாக்கியராஜ் கோதை

சிறுகதை | வாசகசாலை

“எழுத்தாளரா மட்டும் ஆயிடாத, கிறுக்குப் புடிச்சிடும்”

“ஏன்?”

“உலகத்துல பாக்குறதெல்லாம் கதையாத் தெரிய ஆரம்பிச்சு, சாதாரண வாழ்க்கை வாழ முடியாம போய்டும். ஒருத்தன் செத்தாலும், ஒருத்தன் என்ன ஒருத்தன், உன்னப் பெத்த அம்மாவே செத்தாலும் அதுவே கதையாத்தான் தெரியும். வர்ற கண்ணீருக்கு முன்னாடி இது கதையா மாறுனா எப்படியிருக்கும்னுதான் தோணும், அம்மா செத்ததுக்கு அழுவாம அதுல கதையத் தேடுறவன் கிறுக்கனாத்தான இருக்க முடியும்”

கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அந்த எழுத்தாளருடனான இந்த உரையாடலை என்னால்  மறக்கவே முடியாது. அவர் சொன்னதை நான் கேட்டிருக்க வேண்டுமோவென  இந்தப் பழம்பெரும் போதி மரத்தின் சூடு குறையாத நிழலில் அமர்ந்திருக்கும்போது எண்ணிக்கொண்டேன்.

சில நாள்களாக யாருமே அறிமுகமில்லாத பீகாரின் கயாவில்  இந்த தான்வீரைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்தப்பகுதியில் இவரை எல்லோரும் அப்படித்தான் அழைக்கின்றனர். ‘தான்வீர்’ என்றால் தமிழில் என்னவென சாட்ஜிபிடி-யிடம் கேட்டதில் அது ‘கொடை வள்ளல்’ ‘கொடுப்பதில் சிறந்த வீரன்’, ‘தானவீரன்’  போன்ற பொருளைச் சொன்னது. அவர் வள்ளல்தான். எதிர்ப்படுகின்ற எல்லோருக்கும் அவர் எதையேனும் கொடுத்துக்கொண்டிருந்தார். கல், மண், இலைகளெனத் தன் கையில் கிடைக்கும் எதனையும் எடுத்துக்கொடுத்துவிடுவார்.   அவர் கொடுத்ததைப் பணிந்து வாங்கி மக்கள் தங்களுடைய பூஜை அறையில் வைத்துக்கொண்டனர். சிலர் அவர் காலடி மண்ணை எடுத்துத் திலகமிட்டுக்கொண்டனர். யாராவது அவருக்குக் காணிக்கையாகக் காசோ பொருளோ கொடுத்தால் அதை உடனடியாக அருகே இருக்கும் இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.

அவர் யார், எந்த ஊர், எப்படி இங்கே வந்தார் என்கிற விவரம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர் எதையேனும் கொடுக்கும்பொழுது  “நல்லாரு, நல்லாரு” என்று மெதுவாக உடைந்த குரலில் சொல்லியபடி கொடுத்ததனால் அவர் தமிழராகத்தான் இருப்பார் என எண்ணி அவரைப் பின் தொடர்ந்தேன். அவரிடம் ஒரு நல்ல கதை இருக்கக்கூடுமென உறுதியாக நம்பினேன். அவரும் ஒரு கிறுக்கர்தான். ஆண்டுகள் கடந்து கெட்டிப்பட்ட சடைமுடிக் கற்றைகளோடு நிறம் மங்கிப்போன வெள்ளைக் கோவணம் உடுத்தியிருந்தார். நெற்றியில் பட்டை போல ஆறிப்போன ஒரு தழும்பு இருந்தது. எங்கோ ஒரு புத்தக அட்டையில் பார்த்த பட்டினத்தாரை நினைவுபடுத்தியது அவர் உருவம். மீசை, தாடிகளெல்லாம் நரைத்திருந்ததால் அழுக்குகள் சற்றுத் தூக்கலாகத் தெரிந்தன. 

அவரைப் பின்தொடர்ந்த நாலைந்து நாள்களுக்குப் பின்னர்தான் அவர் கையில் அன்னம் எனத் தமிழில் பச்சை குத்தியிருப்பதைக் கண்டேன். அன்னம் அவர் மனைவியாக இருக்கலாம். அவர் இறந்திருக்கலாம். மனைவியைப் பிரிந்த துக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு அவரின் ஊரில் அலைந்திருக்கலாம். அவரைக் கவனிக்க முடியாது என முடிவெடுத்த அவர் பிள்ளைகள், அவரை ஏமாற்றி  வட இந்தியா செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டிருக்கலாம்.  இப்படி ஒரு கதையை இவரை வைத்து எழுதிவிடலாமா? கண்ணீர் வரவழைக்கும் இறுதிப்பகுதி கிடைத்துவிட்டால் நிறைவாக முடித்துவிடலாமென எண்ணினேன். எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கே பின்தொடர்ந்து அவரைத் தூரமாக நின்று படமெடுத்தேன்.  அருகே சென்று அவரிடம் பேச அச்சம் தடுத்தது.

ஏனெனில் சில நேரம் கையில் வைத்திருந்த கல்லை எதிர்ப்படுகிறவர்களின் மீது அவர் எறிந்துமிருக்கின்றார். அப்படி எறிந்தால் அவன் பாவம் செய்தவன், இழிவானவன் எனக் கயா மக்கள் முடிவு செய்து வைத்திருந்தனர். பால்கு நதியில் பிண்டத் தர்ப்பணம் செய்ய வந்து, அங்கிருக்கும் பிச்சைக்காரர்களுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஒரு பெரும் தொப்பையுள்ள ஆள் மீது எறிந்தார்.

கோபத்தோடு சீறி வந்த தொப்பையாரை, அங்கிருந்தவர்கள் அமைதியாக்கி அனுப்பிவைத்தனர். என்மீதும் கல்லெறிந்து விடுவாரோ எனப் பயந்து, பதுங்கிப் பதுங்கியே அவரைப் பின்தொடர்கிறேன். நானும் பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியாத எத்தனையோ பாவங்களைச் செய்திருக்கிறவன்தான்.

கற்பனையிலேயே தான்வீரை நினைத்ததுண்டு ஒரு கதை எழுதலாம்தான். ஆனால் கற்பனை செய்து செய்யும் சுய இன்பத்தைவிட, நேரில் மூச்சினைப் பகிர்ந்து, இதழுண்டு உடலுரசிச் செய்யும் உறவே மேம்பட்டதாய் இருக்குமென்பதைப் போல,  உண்மைக் கதை, கற்பனையைவிட நம்ப முடியாத சுவையோடு இருந்துவிடும். அதனால் அவரின் உண்மைக் கதையை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்று முடிவு செய்து பின்தொடரத் தொடங்கினேன்.

தான்வீரின் நடை நம்ப முடியாதது. எதிராளியிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ளும் சார்லி சாப்ளினின் வேகம். அவரின் நடைக்கு ஈடுகொடுத்தால்தான் அவரிடமிருந்து எதையேனும் வாங்க முடியும்.

அவரை இன்று, இன்னமும் கண்டறிய முடியவில்லை. இதுபோல நிறைய முறை அவரைத் தவறவிட்டிருக்கின்றேன். பால்கு ஆற்றில் தொடங்கி, பால்கு ஆற்றிலேயே முடியும் நடை சுழற்சியே அவரின் அன்றாடம் என்பதால் எப்படியேனும் அவரைக் கண்டுபிடித்துவிடலாம். பகல் பன்னிரண்டு மணியளவில் பெரும்பாலும் இந்த  மகாபோதிக் கோயிலில்தான் சுற்றிக்கொண்டிருப்பார். அவரைக் காவலாளிகள் நுழைவுச்சீட்டு இல்லாமலே அனுமதித்தனர். அவர் கொடுத்த கற்கள் நுழைவுச்சீட்டு வாங்கும் அறையின் சாமிப் படத்திற்குக் கீழேயும் இருந்தன. அங்குள்ள புத்தப் பிட்சுகளும் ‘ஆகச்சது பந்தே’ என்று தலைவணங்கியபடி அவரை வரவேற்பார்கள். கடவுளுக்குப் படையலிட்ட நீரை அவருக்கும் தருவார்கள். ‘தேனே வாலா படா பக்வான் ஹை’ (கொடுப்பவன் பெரிய கடவுள்) என்பது அவர்களின் நம்பிக்கை. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கோயில் முழுவதும் அலைந்து திரிந்து விசாரித்த நிலையிலும் அவரைக் கண்டறிய முடியவில்லை. களைப்பு படுத்தி எடுக்கவே, பச்சைநிற இரும்புத் தாங்கிகள் அரவணைப்பில் வாழ்ந்து வரும், இந்தப் போதிமர நிழலில் சூடு குறையவில்லையெனினும் அமர்ந்துவிட்டேன். எனக்கு ஞானம் தேவையில்லை. அவர்தான் தேவை.  அவரென்றால் கதை.

பிள்ளைகள் கைவிட்டதனால் தான்வீர் விரட்டப்பட்டு, வழிதவறி இங்கு வந்திருக்கக்கூடும். ஆனால் இந்தக் கொடுக்கும் பழக்கத்திற்கு ஏதோ காரணமிருக்க வேண்டும். இரண்டையும் இணைத்துவிட்டால் உணர்ச்சி மிகுந்த ஓர் இறுதிக்கட்டம் கிடைத்துவிடும். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்தானா என்பதிலேயே எனக்குச் சந்தேகமுண்டு. என்னுடைய ஊரில் இருந்த மிலிட்டரி கிறுக்கன் நாராயணன் தேசியக்கொடியின் கீழேகூட மலம் கழித்து அடிவாங்கியிருக்கிறார். இதுவரை தான்வீர் குளித்ததைப் பார்த்திருக்கவில்லைதான், ஆனால் மலஜலம் சரியாக மறைவாகச் சென்று கழிக்கின்றார். வெட்கம், மானம் பற்றிய அறிவு இன்னமும் போய் இருக்கவில்லை எனப்பட்டது. முழுக் கிறுக்கர் அல்லர் என்பது போலத்தான் பட்டது. குழப்பம் மிகுந்த மனிதராகத் தெரிந்தார்.

நேரம் கடக்கக் கடக்க, இனி இங்கிருந்து பயனில்லையெனக் கருதி, வடக்குப் பக்கமாகப் பால்கு நதி நோக்கி நடக்கத் தொடங்கினேன். பகிர்தானியில் (share Auto) செல்வதைவிட நடந்து செல்வது, அவரைக் கண்டறியக் கூடுதலாக உதவும். ஒரே சிக்கல் விடாது தொடரும் பிச்சைக்காரர்கள்தாம்.

இங்குப் பிச்சைக்காரர்களை எதிர்கொள்வதுதான் பெரும்பாடாக இருந்தது. எங்குப் போனாலும் இரக்கம் வரவழைக்கும் முகத்தைக்கொண்டு  ‘சாஹிப்’, ‘சாஹிப்’ எனச் சுற்றிக்கொள்வார்கள். ஒருவருக்கு இட்டால் அடுத்ததாக இன்னும் பலரும் வந்து நிற்பார்கள். தொட்டும் பேசுவார்கள். அதனால்தான் சிலருக்குப் பிச்சைக்காரர்களைக் கண்டாலே எரிச்சலாகிறது. தொப்பையார் போலச் சண்டையும் நடந்திருக்கிறது. பிச்சைக்காரர்களைப் போலக் கையேந்தும் நிலை வந்துவிடக்கூடாது என்பதுதான் என் வாழ்நாளின் முழுமுதல் பயம். 

அதே போலப் பிண்டத் தர்ப்பணப் பணி செய்யும் புரோகிதர்கள் கூட்டமும் இங்கு அதிகம். வெறுமனே ஆற்றங்கரையில் நின்றாலே கடைக்கு வாடிக்கையாளர்களை அழைப்பது போல ‘ஆயியே, ஆயியே ஸ்ராத் கரியே’ எனப் புரோகிதர்களின் உதவியாளர்கள் இழுத்துச் சென்றுவிடுவார்கள். ஆள் பிடித்தலில் தலைக்கு நூறு ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்பதால் உள்ளூர் மக்கள் பலர் இதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். இராமரின் அப்பாவிற்குச் சீதை பிண்டத் தர்ப்பணம் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமென்று புராணங்கள் கூறுவதால், எல்லா நாள்களிலும் ஓரளவு கூட்டமிருக்கும். அமாவாசை நாள்களில் நம்பமுடியாத அளவு கூட்டம் ஈ போல மொய்க்கும். இன்று அமாவாசை வேறு.

கேஷவயாதவ் என்னைக் கவனிக்காமல் இடித்துக்கொண்டு ஓடினார். அவரை நிறுத்தி விசாரித்தேன். அவரின் பதற்றம் மிகுந்த அரைகுறை இந்தி எனக்குப் புரியவில்லை. “போலிஸ் தான்வீர் கேட்சிங்” என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லியதால் தான்வீருக்கு ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்று உணர்ந்துகொண்டு நானும் அவருடன் சென்றேன்.

புரோகிதர்களுக்கு ஆள் பிடித்துத்தரும் வேலை செய்யும் கேஷவயாதவுடன் ஒரு மெல்லிய பழக்கம் ஏற்பட்டதும் தான்வீரால்தான். பிண்டத் தர்ப்பணம் செய்வதற்கு ஆள்பிடிப்பதில் வல்லவர் இவர். கூட்டத்தில் இவர் குரல் தனித்து ஒலிக்கும். வெட்கப்படாமல் பணிவு காட்டி, உரிமையோடு பேசி எந்த மொழிக்காரரையும் அழைத்து வந்துவிடுவார். ‘அச்சா மஜ்தூர்’ (நல்ல வேலைக்காரன்) என்கிற பெயர் அவருக்குண்டு. ஒரு நாள் கேஷவயாதவைக் கட்டிப்பிடித்து தான்வீர் அழுவதை நான் பார்த்தேன். இருவருக்கும் கிட்டத்தட்ட சம வயதுதான்.

அவர் ஏன் உங்களை அணைத்து அழுதார் எனக் கேட்டேன். சத்தியமாகத் தெரியவில்லை, ஆனால் இறைவனின் கருணையெனக் கண்ணீரோடு சொன்னார் கேஷவயாதவ். உடல்நலமில்லாத தன் மனைவியைக் காப்பதற்காக இப்படி ஓடி ஓடி உழைப்பதாகத் தெரிவித்தார். நோயாளியான தன் மனைவியின் தலையணை அடியில் இருக்கும் தான்வீரின் கற்கள் அவளைக் காக்கும் என்று அவர் உறுதியாக நம்பியிருந்தார். தான்வீர் ஒரு தமிழர் என இவரும் கண்டுபிடித்திருந்தார். நானும் அவருக்கு ஆயிரம் ரூபாய் அளித்திருந்தேன். கருணையாலன்று,  இவரின் மூலமாக தான்வீர் கதையைத் தெரிந்து கொள்ளமுடியுமென்பதால்.

காவல் நிலையத்தில் நல்ல கூட்டம். மண்டையில் ரத்தம் வழிய ஒருவர் அமர்ந்து, தான்வீரைக் கத்திக்கொண்டிருந்தார். பிச்சைக்காரர்களுடன் கடுமையாக விவாதம் செய்து கொண்டிருந்தபோது தான்வீர் தன்னைத் தாக்கியதாகக் காவல்துறையிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார். தான்வீர், காவலர்களைப் பார்த்து அச்சப்படுகிறவர் போலத் தெரியவில்லை. சினம் குறையாமல் இன்னமும் ரத்தம் வழிகிற நபரை முறைத்துக்கொண்டிருந்தார்.

நான், புரோகித உதவியாளர்கள் சிலரெனப் பத்து, பதினைந்து பேர் சேர்ந்து பணம் கொடுத்தோம். ரத்தம் வழிகிறவரை ஆற்றுப்படுத்தி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இன்னொரு முறை இதுபோல நடந்தால் தான்வீரை மனநலக் காப்பகத்துக்கு அனுப்பிவிடுவோமென எச்சரித்து வெளியே விட்டனர்.

ஒரு கதைக்காக இவ்வளவு காசு செலவழிப்பது உறுத்தலாகப்பட்டது. புத்தகமெழுதி இந்தக் காசை எப்படி மீட்பது; ஒரு வேளை இதைத் திரைக்கதையாக மாற்றிட இயக்குநர் யாரேனும் வாய்ப்பளித்தால், செய்த செலவுகளை ஈடுகட்ட இயலும். ஜெயமோகன் அவருடைய திரைக்கதைப் பணிக்கு ஒரு கோடி ரூபாய் வரை வாங்கியதாகச் செய்தி உண்டு. அவரின் வலைத்தளத்தைப் படிக்கும்போது அது உண்மையான செய்தியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இப்படி நான் எழுதிய கதைகளெல்லாம் திரைக்கதையாக மாறினால் ஜெயமோகன் போல நானும் லிவிங் தமிழுக்கு ஈடான விருதொன்றைத் தமிழுலகுக்கு வழங்கிப் பெருமிதம் கொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டேன். நாளை கதை விவாதத்திற்குச் சென்னை செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், இன்றைக்குள் எப்படியேனும் தான்வீர் கதையைக் கறந்துவிடத் திட்டமிட்டேன்.

பால்கு ஆற்றங்கரையின் உடைந்த மண்டபத்தில் முதல் முறையாக தான்வீர் அருகே இருக்கும் வாய்ப்பை அமைத்துக்கொண்டேன். அமாவாசையாதலால்  இருளில் அவர் அருகே இருப்பது என் அச்சத்தைக் குறைத்திருந்தது. அவரின் மேலடித்த திருநீற்றின் மணம் ஆற்றின் புலால் வாசனையை மறக்கடித்தது. கொசுத்தொல்லையால் காலிலிருந்து ஷூவைக் கழற்றவே இல்லை.  தூரத்தில் சில துறவிகள் கஞ்சா புகைத்துக்கொண்டு உடுக்கையடித்து எதையோ பாடிக்கொண்டிருந்தனர். கேஷவயாதவ் அவருக்கு லிட்டி சோகா கடலைமாவு உருண்டைகளை இரவுணவுக்கு அளித்துவிட்டுச் சென்றிருந்தார். எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்றறியாமல் சில நிமிடங்களாக அமைதியாக ஊர்ந்து செல்லும் ஆற்றை நோக்கியிருந்தேன்.

“எதுக்கு எல்லாருக்கும் எதையாவது கொடுத்துக்கிட்டே இருக்கீங்க?” என்றேன்.

“கொடுக்காம ஒருத்தரால எப்படி வாழ முடியும்?” என்றபடி அந்த லிட்டிசோகாவை எனக்களித்துவிட்டு உடுக்கை ஒலிக்கேற்ப நடனமாடத் தொடங்கினார்.  ஆனந்த நடனம். எல்லாவற்றையும் கொடுத்துவிட்ட சுமையற்ற விடுதலையின் நடனம். கஞ்சாப்புகை சுழற்ற அவரின் கதையைக் கேட்க  முடியாமலேயே  தூங்கிவிட்டேன். மறுநாள் காலை நான் விழிப்பதற்கு முன்பே, அவர் கொடுப்பதற்கான பயணத்தைத் தொடங்கியிருந்தார். தான்வீருக்கு உரிய மரியாதையினைக் கதையின் மூலமாகச் செய்ய வேண்டும் என உறுதியெடுத்தேன்.

பிள்ளை குட்டிகளற்ற அன்னம் தனது இறுதிக்காலத்தில் உடல்நலமின்றி மருத்துவமனையில் இருக்க, பெரும் பணக்காரராக இருந்த அன்னத்தின் கணவர், உறவுகளின் சூழ்ச்சியால் சொத்தை இழக்கிறார். அதை மனைவிக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள கடும்பாடுபடுகின்றார். வறுமை வந்து வாட்டிய பொழுதும் மனைவியின் மகிழ்ச்சிக்காகப் பெரும் பணக்காரர் போலவே நடிக்க வேண்டிய சூழல். ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவரைக் கூட்டிவந்து மனைவி முன் கொடையளிப்பதைப் போலப் பாசாங்கு செய்ய வேண்டிய சூழல். கற்களையும் மண்ணையும் ஒரு பெட்டியில் போட்டு, ஏதோ விலையுயர்ந்த பொருளை அளிப்பதைப்போல அளிக்கிறார். புண்ணியம் காக்கும் என்று மனைவியை நம்ப வைக்கிறார். நாளடைவில் மனைவிக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. நான் உங்களுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு அன்னம் இறந்துவிடுகின்றார். மனநலம் சிதைகிறது. மனைவி இன்னமும் உயிரோடு இருக்கிறார், தன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் எனக் கருதி கல்லையும் மண்ணையும் வாரி வாரிக் கொடுக்கச் சிக்கல் பெருகுகிறது. ஊர்மக்களே அவரை வட இந்திய ரயிலில் தொலைந்து ஒழியட்டும் என ஏற்றி அனுப்பிவிடுகிறார்கள். ஊர் மாறினாலும் காட்சி மாறவில்லை. ஆன்மிக வட இந்தியப் பூமி அவரைக் கொடைக்கடவுளாக  ‘தான்வீராக’ வழிபடத் தொடங்குகிறது. இப்படி நான் எழுதிய “வள்ளல்” என்கிற கதை  ஓர் இணைய இதழில் வெளிவந்திருந்தது. கதை நன்றாகக் கைகூடி வந்திருப்பதாக என் எட்டு வாசகர்கள் படித்துவிட்டுப் பாராட்டி இருந்தார்கள். ஒருவர் கண்ணீர் உகுத்துப் பேசினார். தான்வீருக்கு உரிய மரியாதை செய்த நிறைவு கிடைத்தது.

ஒன்பதாவதாக இன்னொருவரும் அழைத்திருந்தார். அவர் தன்னைத் திருவாசகமென அறிமுகப்படுத்தி, அந்தத் தான்வீரைத் தனக்குத் தெரியுமென்றார். அந்தி நேரத்தில் பால்கு ஆற்றின் பின்னணியில் வானத்தை வெறித்திருந்த தான்வீரை, நான் எடுத்திருந்த படமும் அந்த இதழில்  வெளிவந்திருந்தது.  அவர் கதையைப் பற்றி ஒரு வரிகூடப்  பேசவில்லை. நேரில் பார்க்கவேண்டுமெனச் சொன்னார்.

கும்பகோணத்தில், நெரிசல் மிகுந்த ஆதி கும்பேஸ்வர பெரிய வணிக வீதியிலிருக்கும் திருவாசகத்தின் துணிக்கடையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அங்கிருக்கும் பிச்சைக்காரர்களின் கூட்டம் எனக்குக் கயாவை நினைவுபடுத்தியது.  சில கடைகளில் பிச்சைக்காரர்களை விரட்டுவதற்கு என்றே ஒருவரைப் பணியமர்த்தியது போலத் தெரிந்தது.  ந்தா, சீ போ, சனியனே, நாயே போன்ற வசைகள் பிச்சைக்காரர்களைப் பார்த்து தாராளமாக எய்தார்கள். ஒரு கடையைத் தாண்டும்பொழுது பிச்சைக்காரர்கள் மேல் நீரைக்கூட ஊற்றினார்கள்.  இப்படி ஓர் உலகை என்னால் நம்பவே முடியவில்லை.

திருவாசகத்தின் கள்ளாப்பெட்டி மேசையின் பின்புறம் கண்ணதாசன், சுஜாதா, பாலகுமாரன்  போன்றோர் புத்தகங்களாகப் பெரிய சட்டகத்தில் அடைக்கப்பட்ட இந்துக் கடவுளர்களுக்கு அருகே சிறியவர்களாக இருந்தார்கள். இந்தக் கடையில் பிச்சைக்காரர்களை விரட்ட யாருமே இல்லை என்பதை நினைத்து அவர் மேல் மரியாதை வந்தது.

கைப்பேசியில் இருக்கும் தான்வீரின் படத்தைக்காட்டி இந்த அன்னம் இங்குதான் வேலைபார்த்ததாகக் கூறினார். “போலிஸ் கேசுக்குப் பயந்து ஓடிட்டான், கொலைக்கேசு” என்றார். “தம்பி.. அவன வள்ளல்.. தான்வீர்ன்னு ஏதேதோ நல்லா கதைவிட்டிருக்கீங்க” என்றபடி சிரித்தார். எனக்கு அசிங்கமாகப்பட்டது. தண்டனைக்குப் பயந்து தப்பி ஓடிய ஒரு கொலைக் குற்றவாளி எப்படி ஒரு தான்வீராக மாறமுடியும். அத்தனையும் பாசாங்கா? எவ்வளவு திறன் மிக்க நடிப்பு, இதுல கொடுக்கிறதப் பத்தித் தத்துவ மயிரு வேற என்று என்னை நானே நொந்துகொண்டேன். நல்லவேளை, தான்வீர் பற்றி உண்மையறிந்து எழுதியிருந்தால் இப்படி எட்டு வாசகர்களாவது பாராட்டும் உணர்ச்சி மிகுந்த கதையை எழுதியிருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.

சில நேரங்களில்  இதழுண்டு, மூச்சினைப் பகிர்ந்து உடலுரசும் உறவைவிட, நாமே நம்மைக் கவர்ந்தவர்களை நினைத்துக் கற்பனையில் செய்யும் சுய இன்பம் மேம்பட்டதாக அமைந்துவிடக் கூடிய உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்போல.

“இவரைப் புடிச்சா அந்த அன்னத்தப் புடிச்சிரலாம்” என்றபடி அவருக்கு கேஷவயாதவின் தொடர்பு எண்ணைக் கொடுத்துவிட்டு எழுந்தேன். விடைபெறுமுன் ஏதோ உள்ளுணர்வு சொல்ல, “எத்தன வருசமா இங்க சேல்ஸ்மேனா வேலை பாத்தாரு, என்ன கேஸு” என்றேன். சிரித்துக்கொண்டே திருவாசகம், “ஐய சேல்ஸ்மேனுமில்ல கீஸ்மேனுமில்லங்க. “அவன் ஒரு பிச்சை விரட்டி. ஒரு தடவ சண்ட முத்திப் போயி, பிச்சக்காரன் மண்டைய நல்லா உடைச்சிட்டான். கொலை கேசாகிப்போச்சு. அன்னிக்கு ஓடிப்போனவந்தான், இப்ப வரைக்க வரல. ஆனா நல்ல வேலைக்காரன். அவன் இங்க இருந்தா எந்தப் பிச்சக்காரப்பயலும் கடைப்பக்கம் வரவே நடுங்குவாங்க. பிச்சக்காரப்பயலுகள விரட்ட என்னென்னமோ டெக்னிக் வச்சிருப்பான். அவனுக்கப்பறம் நிறைய பிச்ச விரட்டிங்க வந்தும் ஒருத்தனும் சரியில்ல.  அவன் இருந்தா நல்லா இருக்கும்” என்றார்.

நான் “மண்டை பத்திரம், அவர் இப்போ தான்வீர்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

(முற்றும்)

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button