இணைய இதழ் 124சிறுகதைகள்

உணவுப் பொதி சுமக்கும் கடவுளின் தூதுவர்கள் – இலட்சுமணப் பிரகாசம்

சிறுகதை | வாசகசாலை

வீட்டுப் படிப்பறையில் அலுவலக அதிகாரி நடத்திக்கொண்டிருந்த கூகுள் மீட்டிங்கில் இருந்த வேளையில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவள்,

“உங்களுக்குச் சாப்பிட என்ன வேணும்?“ என்றாள்.

கூகுள் மீட்டிங் போய்க்கொண்டு இருப்பதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடியும் தறுவாயில் இருப்பதையும் சைகையால் காட்டி மீண்டும் கவனத்தை அலுவலக அதிகாரியின் கட்டளையைச் செவிமடுக்கத் தொடங்கினேன். அடுத்த சில நிமிடங்களில் இணைய வழியிலான கூகுள் மீட்டிங் முடிந்தது.

அதுவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காதுகளில் மாட்டியிருந்த கருவிகள் காதை சூடாக்கி இருந்தன. அதிகாரியின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் இருந்த வேளையில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதற்கும் தோன்றாது. இப்போதோ தொண்டை வறண்டிருந்தது.  காதுகளில் பரவியிருந்த சூடு உடல் முழுவதும் பரவி கொதிநிலைக்குச் செல்வது போலிருந்தது. எத்தனை மணி நேரம் உழைத்தாலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தங்களுடைய ஊழியர்கள் மீது கருணையே வராது. கார்ப்பரேட் கம்பெனியில் பணிக்குச் சேர்கிற நாள்முதல் அவர்களுடைய விதிகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். கார்ப்பரேட் கம்பெனியின் ஊழியர்கள் நவீன யுகத்தில் எளிதில் கிடைக்கிற அடிமைகள், சாசுவதமான சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பலியாடுகள் என்ற எண்ணம் ஐ.டி ஊழியர்களுக்குக் கல்வெட்டு போலப் பதிந்தாலும் நாளுக்கு நாள் அன்றாடப் பொருட்களின் விலைவாசி ஏறுகின்றன. மாதாமாதம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்துக்கொள்கிற வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த கடன்கள், நடுத்தரக் குடும்பங்களின் கனவுகளான காருக்கான ஈ.எம்.ஐ-கள், இதர கடன்கள் ஒரு புறமென விரட்டுகின்றன. சம்பாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தன்னைத் தானே ஒரு குழியில் தள்ளிக்கொண்டதை எண்ணிப் பார்க்கும்போது என்மீதே எனக்குப் பரிதாபம் கசிந்து உருகும்.

       கூகுள் மீட்டிங்களில் தொடர்ந்து அமர்ந்தபடியே இருந்ததில் ஏற்பட்ட சோர்வு அயர்ச்சியில் நீருக்கான தாகத்தைத் தணித்துக்கொள்ள அறையை விட்டகன்றபோது சுதந்திர காற்றைச் சுவாசித்தது போன்ற உணர்வு துளிர்விடுவது போலிருந்தது. கைகளையும் கால்களையும் அசைத்து அசைத்து ஆசுவாசம் தேடிக்கொள்கிறேன். காற்றாடிக்கு அருகில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருக்கையில் சமையல் அறையிலிருந்து வந்தவள் என் எதிரில் நின்றுகொண்டிருந்தாள்.

       “உங்களுக்குச் சாப்பிட என்ன வேணும்?” மீண்டும் அதே கேள்வி.

கடிகாரத்தின் மணி முள் இரவு ஒன்பதரை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.

       “இன்னைக்கு நைட் எதுவும் சமைக்கப் போவதில்லையா?”

       “வாரத்தில தினமும் வீட்டிலேயேதான் சமைச்சு சாப்பிடுறோம். ஒரு நாள் வெளியில் சாப்பிட்டால் ஒன்னும் ஆயிடப்போறதில்ல”. என்றாள்.

சென்னையில் வசித்தபோது வாரத்தின் இறுதி நாட்களில் வெளியில் எங்காவது சுற்றிவிட்டு இரவு வீடு சேர்கிற வரை எங்களுக்கான உணவு ஹோட்டல்களில்தான் கழியும். கொரோனா காலத்தில் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டது. அப்போது ஊரடங்கு உத்தரவுகள் சற்று தளர்ந்தபோது சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தேன். வீட்டிலிருந்தபடியே வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஆனால் என் மனைவிக்கு சிதம்பரம் வருவதில் ஆர்வம் இருக்கவில்லை. எப்படியோ சமாதானம் செய்து அழைத்து வந்துவிட்டதில் எதையோ சாதித்ததுபோல இருந்தது. அவளுக்கு சிதம்பரம் சிறு ஊர்  அல்லது சற்று பெரிய கிராமம் என்பதான எண்ணம்தான் இன்றுவரை இருந்து வருகிறது. அங்கு எந்த வசதியும் இல்லாமல் எப்படி வாழ்வதெனக் கேட்கிற போதெல்லாம், “இங்கயும் சுற்றிப் பார்க்க சில்வர் பீச், சாமியார் பேட்டை பீச், பிச்சாவரம் போட்டிங் ஹவுஸ், நடராஜர் கோயில், சினிமா தியேட்டர்-லாம் இருக்கே” எனச் சொல்லி திருமணம் ஆன புதிதில் அங்கெல்லாம் அழைத்துப் போனேன். அதற்குப் பிறகுதான் சிதம்பரம் அவளுக்குப் பிடித்துப் போனது.

விடுமுறைகளுக்கு விஷேசங்களுக்கு சிதம்பரத்திற்கு வருகிற போதெல்லாம் நடராஜர் கோயிலுக்கு மாலை நேரப் பூஜைக்குச் செல்லாமல் இருக்கமாட்டாள்.

கொரோனா காலம் தீவிரமடைந்த பொழுதில் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யத் தொடங்கின. சிதம்பரத்திலிருந்தபடி ‘வொர்க் ப்ரம் ஹோம்’இல் பணி செய்து வந்த என்னையும் அந்நிறுவனம் ஏதேதோ சில காரணங்களைச் சுட்டிக் காட்டி நீக்கியது. அதன் பிறகு அடுத்த சில மாதங்களிலேயே பெங்களூரில் உள்ள ஐ.டி  நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். எல்லாமே இணைய வழியேதான் நடைபெற்றது. இடையில் இரண்டு நாட்கள் மட்டும் பெங்களூர் போய்வந்தேன்.

சிதம்பரம் சிறு நகரம் என்றாலும் நள்ளிரவு வரை சில ஹோட்டல்கள் செயல்படுவதுண்டு. ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகளுக்காக அவை திறந்திருக்கின்றனவா அல்லது மாறிவரும் மக்களின் பண்பாடுகளையும் அதிதீவிர நுகர்வு கலாச்சாரத்திற்கு ஏற்ப உணவு வகைகளின் மீதான ஆர்வங்களும் புதிய ஹோட்டல்களைத் திறக்கச் செய்கின்றனவா என மனதில் தோன்றியது.

பெருநகரங்களில் மட்டுமே இருந்த துரித உணவுக் கடைகள் இப்பொழுது சிறுநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் ‘பாஸ்ட் புட்’ கடைகளாகவும் ‘சூப் ஸ்டால்’களாகவும் ஈசல்கள் போலப் பெருகிவிட்டன.

வீட்டில் ஒவ்வொரு மாதமும் மாதச்சம்பளம் கணக்கில் ஏறிய பின் மளிகை சாமன்கள் வாங்கிவருகிறபோதும் அன்றைய நாளில் ஏதாவதொரு ஹோட்டலில் சாப்பிடுவது எங்களின் வழக்கம். “ஒவ்வொரு மாசமும் சம்பளம் ஏறுற நாளைக்கு ரெண்டு பேரும் ஹோட்டல்லதான் சாப்பிடணும். ஓகேவா?” அன்று அவளுடைய பார்வையில் காதல் மின்னிய அந்நொடியில் காதல் மலர்ந்த முகத்துடன், “சரி. உனக்கு புடிச்சத எல்லாம் வாங்கித் தரேன். ஆனாலும் எனக்கு உன் கையாலதான் சமைக்கணும். எனக்காக செய்வியா?”. “நான் சமைக்க மாட்டேன் நீங்கதான் எனக்கு ருசியா சமைச்சு போடணும்” என இப்படியான அன்பான மொழிகள்  திருமண நிச்சயம் நிகழ்ந்தபோதே எங்கள் இருவருக்குள் பேசிக்கொண்டன. அதை எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது பேச்சின்போது இதைச் சொல்லிக்காட்டுவாள்.

எப்போதாவது வீட்டில் “இன்னைக்கு நீங்க சமைங்க. காலத்துக்கும் பொண்டாட்டிதான் சமைச்சு போடணுமா?” என்பாள்.

“ஏன் காலம் முழுக்க சம்பாதிக்குற எனக்கு, நீ சமைச்சு போட்டா கொறஞ்சு போய்ருவியா?” என்பேன். நான் எதிர்பார்த்தது போலவே குறுகிய நேரச் சண்டை தொடங்கிவிடும்.

சிறு சண்டைக்குப் பிறகு சமாதான ஒப்பந்த நடவடிக்கையைப் போலக் கோவில்களுக்கோ, சில்வர் பீச்சிற்கோ நடராஜர் கோயிலுக்கோ மால்களுக்கோஅல்லது சினிமாவுக்கோ செல்வோம். மாலையில் மீண்டும் வீடு திரும்பும் வேளையில் வண்டிகேட்டில் உள்ள முபாரக் நடத்தும் அல்-சப்ரான் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுத் திரும்புவோம். 

இரவு நேரம் கடந்துகொண்டிருந்தது. “சீக்கிரம் சொல்லுங்க. இன்னிக்கு எனக்குப் பீரியட்ஸ். இன்னிக்கு முதல்நாள். வலி அதிகமா இருக்கு. தயவு செஞ்சு இன்னிக்கு என்னால சமைக்க முடியாது” என்று நின்றுகொண்டிருந்தவள் அருகே அமர்ந்து தோள்களில் சாய்ந்தாள்.

அதுவரை கூகுள் மீட்டிங் நடைபெற்ற ஒன்றரை மணிநேரமும் ‘ப்ராஜெக்ட்’ அதிகாரியின் கேள்விகள், செய்து முடிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்கள் குறிப்புகள் என வீட்டிற்குள் அமர்ந்து வேலை பார்ப்பதில் ஏற்படுகிற மன அழுத்தத்தை போக்குவதாக அவளது மென்மையான தோள்சாய்வு இருந்தது.

மென்மையாக அவளுடைய கன்னங்களை வருடி தலையை மடியில் கிடத்தித் தடவியபடி, “சரி. சாப்பிட உனக்கு என்ன வேணும்?”

“முதல்ல எனக்கு மாத்திக்க பேட் வேணும். இன்னும் மூனோ நாலோதான் இருக்கு.” என்றாள்.

சற்று அதிர்வு ஏற்பட்டதுபோலும், உள்ளுக்குள் புழுவொன்று வெய்யிலில் வாடி வதங்குவதுபோலும் எனக்குத் தோன்றியது. எப்போதும் மாதாமாதம் விலக்காகிற நாளில் அவசரத் தேவைக்காகச் சில பேடுகள் இருந்துகொண்டே இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் விலக்கு ஆகிறபோது அவள் உடைந்து அழுவது போலிருக்கும். திருமணம் ஆகி மூன்றாண்டுகளாகிவிட்டன இன்னமும் “விசேஷம் என்ன?” என உறவினர்களும் சொந்த பந்தத்தினரும் கேட்கிறார்களென அவள் என் பக்கத்து உறவினர்களுடைய விசேஷங்களையும் அவளுடைய உறவினர்கள் வீட்டு விசேஷங்களையும் தவிர்த்துவிடுகிறாள்.

“பேட் சைஸ் தெரியும்ல?”

“ம்.. தெரியும். எக்ஸ்–எல் தானே?” என்றேன்.

“அதுதான். இதையாவது ஞாபகம் வச்சிருக்கியே, அதுபோதும்,” என்றாள்.

போன மாதம் வாங்கிய பேட் மீதம் இருப்பதாகவும் இப்போதைக்குப் போதுமென்றும் சொல்லிவிட்டதனால் இவ்வேளையில் வெளியில் கடைக்குச் செல்ல வேண்டியதில்லை எனத் தீர்மானித்தேன். ஆனால் பசிக்கிறது. இப்போது சமைக்க முடியாதெனச் சொல்லிவிட்டாள்.

செல்போனில் பதிவிறக்கம் செய்திருந்த உணவு ஆர்டர் செய்யும் செயலியில் நுழைந்து உணவு வகைகளில் சென்று தேடிக்கொண்டே, “உனக்குச் சாப்பிட என்ன வேணும்?” என்றேன்.

சில நிமிடங்கள் யோசித்தவள், “பன்னீர் ரைஸ் வித் ஸ்ட்ராபரி ஐஸ் கிரீம். அப்பறம் உங்களுக்குச் சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணிக்கோங்க.” என அவளது மொழிதலில் அசதியும் சோர்வும் வெளிப்பட்டன.

செயலியில் உணவுப் பட்டியல்களும் அதன் விலைகளும் அதன் ஆஃபர்களும் திரையில் ஒளிர்ந்தபடி இருந்தனவற்றை விரல்களால் மேலும் கீழும் தள்ளிக்கொண்டே சமீப நாட்களுக்கு முன்பாக திறக்கப்பட்ட ரெஸ்டாரண்ட் ஒன்றில் அவள் கேட்ட ‘பன்னீர் ரைஸ்’ ஆர்டர் செய்தேன். மற்றொருமுறை அதேபோன்று ஐஸ் கிரீமையும் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தேன். அப்போது அவள் உடல் சோர்வாக இருப்பதாகவும் உணவு வந்தவுடன் எழுப்புங்களென படுக்கைக்குச் சென்றுவிட்டாள்.

நுகர்வு கலாச்சாரம் அன்றாடம் உண்ணும் உணவிலும் எத்தகைய பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறதென அப்போதுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

சிதம்பரத்தில் புதியதாகப் பெரிய ரெஸ்டாரண்ட் ஒன்று பல வசதிகளுடன் நெடுஞ்சாலைக்கு அருகில் திறந்திருப்பதாகவும் முதல்நாளில் வரும் வாடிக்கையாளர்களுக்கு ‘ஒன் பிளஸ் ஒன்’ ஒன்று ஆர்டர் செய்தால் வாடிக்கையாளர் விரும்பும் குறிப்பிட்ட சில உணவுகள் ஆஃபர்கள் எனப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. திறப்பு விழா நாளில் ஒரு நடிகை அந்த விழாவிற்கு வருகை தர இருப்பதாகவும் அந்த நடிகையின் படத்துடன் பேனர்கள், நோட்டீஸ்கள் என நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

என் மனைவி தன்னுடைய கல்லூரி நாள்களில், கோவையில் தங்கிப் படிக்கிற நாட்களில், வார விடுமுறை நாட்களில் அங்குள்ள ரெஸ்டாரண்டுகளுக்குத் தோழிகளோடு செல்வதையும் அங்கு விதவிதமான உணவுகளை உண்ணும் பழக்கத்தைப் பற்றியும் அவளோடு அப்பொழுது படித்த கேரளப் பெண்கள் நண்பர்களைப் பற்றியும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். அவர்களில் சிலரை இன்றும் ஏதாவதொரு விஷயங்களைப் பற்றிப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறாள். குறிப்பாக, அவர்களுடைய குடும்பப் பின்னணிகளை ஒரு கதைபோல சொல்லவும் செய்வாள். அப்போதெல்லாம் அவர்கள் யாரையும் எனக்கு நினைவில்லை. அவர்களுடைய முகம் நினைவில்லை என்பேன். சட்டென அலமாரியில் இருக்கும் திருமணப் புகைப்பட ஆல்பங்களை எடுத்து வந்து அதுவரை ஒரு கதைபோல சொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை விரல்களால் சுட்டிக் காட்டி அவளுடைய முகத்தைச் சற்று தூக்கி வைத்துக்கொண்டு கோணிக்காட்டுவது போல உதட்டைச் சுளித்துக்கொள்வாள்.

 இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்கள் பொருட்களை எளிதில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கத் தங்கள் நிறுவனத்தின் சார்பில் செயலிகளை வெளியிடுகின்றன. அச்செயலிகளின் வழியே விளம்பரங்களாக அத்தனை கவர்ச்சிகரமான சலுகைகளை எப்படி அந்நிறுவனங்களால் வழங்கமுடிகிறது என்பது எனக்குச் செயலிகள் அறிமுகமாக முதல்முறை புதிராக இருந்தது. பிறகு அவை பெரும்பாலும் தரமற்றவையாகவும் ஒருமுறை அல்லது சில முறைகள் மட்டுமே பயன்படுத்தத் தகுதியான பொருட்களாகவும் இருப்பதை மூன்று நான்கு முறை ஏமாந்ததில் கிடைத்த அனுபவம் பெருநிறுவனங்களின் இணைய வழி மோசடித் தனங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது.

இருப்பினும், பலர் இணைய வழியில் பொருட்களை வாங்குவதையும், அவற்றை ‘unBox’ அல்லது ‘vlog’ என்னும் பெயரில் வீடியோ எடுத்து தனது சமூகப் பக்கங்களில் பகிர்வதன் மூலம் சில விருப்பக் குறிகளுக்கோ அல்லது குறிப்பிட்ட பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அவ்வாறு செய்வதை அவர்கள் ஒருவித மோசமான நுகர்வு வலைவிரிப்பில் வீழ்ந்தவர்களாக எண்ணத் தோன்றுகிறது.

சிலர் தங்களைப் பிரபலமான ‘இன்ஸட்டாகிரமார்’ என்றோ, அல்லது ‘யூடியூப் செலிபிரிட்டி’ என்றோ அழைத்துக்கொள்ளும் நபர்களின் சமூகவளைதளங்களில் அவர்களது வீடியோக்கள் பல இலட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்படுவதாலேயே எப்படிச் சமூகத்தில் மக்களிடத்தில் ஆக்கப்பூர்வ வேலைகளும் செய்யாமல் அங்கீகாரம் பெறுகின்றனர் எனக் கேள்விகள் மனதில் எழும். அதற்குப் பலர் சொல்கிற காரணம் ‘சப்ஸ்கிரைபர்கள் என்கிற தெய்வம்” என ஒரு வீடியோ வைரல் ஆகிறபோது அதற்கு நன்றி சொல்கிற வீடியோக்கள் ஒன்றிரண்டைப் பார்க்கிறபோதுதான் எனக்குப் புரிந்தது

சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்கள்கூட ஏதாவதொரு நிறுவனத்தின் பொருட்களை விற்கும் பிரதிநிதிபோல ஒரு நிறுவனத்தின் பொருளை விற்பதற்குச் சில வினாடிகளுக்கு இவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு அதை அப்பாவி மக்களின் தலையில் கட்டுவதைப் பற்றி ஒரு பிரபல நாளிதழில் கட்டுரை வெளியாகியிருப்பதையும் ‘ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் மோசடி’ குறித்தும் என் மனைவியிடம் அது குறித்துப் பேசியபொழுதெல்லாம் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படும்.

செயலியின் மூலம் இணையத்தின்வழி விற்பனை செய்யும் பிரபலமான ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் உடைகள் வாங்குவது பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள். தன்னுடைய அதி விலையுயர்ந்த செல்போனில் பத்திற்கும் மேற்பட்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்திருந்தாள். அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் செயலிகள் முதல் ஸ்விக்கி, சுமோட்டோ போன்ற உணவுகளை டெலிவரி செய்யும் செயலிகள் வரை என் மனைவியை அவர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனவோ என்ற அச்சமும் பதற்றமும் எனக்குச் சமீப நாட்களாக வந்துகொண்டிருந்தன.

அது தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்வு. அமேசான் நிறுவனம் சிறப்பு ஆஃபர்கள் என அறிவிப்பு வெளியிட்டு “குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட மணிநேரம் வரை பொருட்களை இணையத்தின் வழியே வாங்குகிறவர்களுக்கு மலிவான விலையில் அநேகமாகப் பல ஆயிரம் மதிப்புள்ள ஒரு பொருள் சில நூறு ரூபாய்களுக்கு அதனை வாங்கிக்கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டிருந்தது. அது ‘ஃபெஸ்டிவல் தமாக்கா’ என வாடிக்கையாளர்களைத் தங்கள் வலையில் விழ வைப்பதற்கான உத்தி  என்று செயலியில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தாள். நானும்கூட அப்படியான சில தருணங்களுக்காக வாழ்க்கையின் சில நேரங்களை வீணடித்துவிட்டதான குற்றவுணர்ச்சி சில ஏமாற்றங்களுக்குப் பிறகு எத்தகைய மோசமான வலையமைப்பில் வீழ்ந்துவிட்டதாகத் தோன்றும்.

ஆன்லைன் மார்கெட் கலாச்சாரம் சில பொருட்களைக் குறைவான விலைக்கு விற்பதை அறிகிறபோது இணையவழி நுகர்வு கலாச்சாரம் பிசாசைப்போல உள்ளுக்குள் புகுந்து நம்மை ஆட்டுவிக்கும்.

அன்று செல்போனில் செயலியில் மூழ்கியிருந்தவள் திருமணப் பரிசாக ஆளுக்கு ஒரு பொருளை மாற்றி ஆர்டர் செய்துகொள்ளலாம் என ஆர்வத்தோடு கேட்டாள். அப்போது திருமணப் பரிசுகள் ஒருவருக்கொருவர் அவர்களுக்குப் பிடித்த பரிசுகளை அன்போடு வழங்குவதுதானே என்றேன்.

“அது எல்லாம் உங்க தாத்தா காலத்து ஸ்டைல். நாம டிஜிட்டல் ஜெனரேஷன்” என்று சொல்லியவாறு தனது மொபைலில் பதிவிறக்கம் செய்திருந்த செயலியில் மூவாயிரத்துச் சொச்சம் மதிப்புள்ள இரண்டு வாட்சுகளை ஆர்டர் செய்து அதற்கான தொகையை அச்செயலியின் வழியே செலுத்தினாள். ஆர்டர் செய்த வாட்சுகள் திருமண நாளான அன்று சரியாக மாலைநேரத்தில் வீடு தேடி வந்து சேர்ந்தன. அவற்றின் பேக்கிங் முறையே வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கத் தூண்டும் விதமாக இருந்தது.

திருமண நாளான அன்று கேக்குகளை வெட்டிய பின் எங்களுக்காக அவள் ஆர்டர் செய்திருந்த மூவாயிரத்துச் சொச்சமான வாட்சுகள் எனக் கொடுக்கப்பட்ட கவரைப் பிரித்துப் பார்த்தாள். ஆர்டர் செய்தவாறு இரண்டு வாட்சுகள் இருந்தன. ஆனால் உண்மையில் அது மூவாயிரத்துச் சொச்சம் மதிப்புள்ள வாட்சுகள் இல்லை என்பது தெரிந்தது. அப்போது எங்கிருந்து கோபம் வந்ததெனத் தெரியவில்லை.

“எவ்வளவோ சொன்னேன் ஆன்லைன் விளம்பரம் எல்லாத்தையும் நம்பாத, என் பேச்சை கேட்டியா? இப்ப என்ன ஆச்சு? எல்லாம் வேஸ்ட்டு”

“உன் காசு. அதான் இப்பிடி அதட்டுற. ஆம்பளைங்கிற திமிருல, சம்பாதிக்கிற திமிருல.” என்றாள். நான் ஏதோ தவறு செய்துவிட்டவன் போல கோவத்துடன் சில வார்த்தைகளை என்மீது எறிந்துவிட்டு வெட்டப்பட்ட கேக்குகளையும் தட்டிவிட்டு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள். அன்றைய திருமண நாள் வீட்டில் கலவரமாக முடிந்தது. அன்று  திருமணக் கொண்டாட்டமாக இருந்த மனநிலை முற்றிலும் மாறியிருந்தது.

அடுத்த நாளே அதை ‘ஆர்டர் ரிட்டன்’ போட்டுவிட்டாள். ஒரு நாளுக்குள்ளாக அந்தப் பொருளுக்கான தொகை என்னுடைய வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும் என ஆர்டரை ரிட்டன் எடுத்துக்கொண்ட அந்நிறுவனத்தின் டெலிவரி பாய் சொன்னான். அதே போல் பணமும் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மற்றொரு முறை தோழியின் திருமண நிகழ்வுக்குச் செல்வதற்காக ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு சுடிதார் எடுக்கப் போவதாகவும் ஆன்லைனில் துணிகளைத் தேர்வுசெய்து வைத்திருப்பதாகவும் அதற்கான தொகையை என்னிடம் கேட்டாள்.

“ஆன்லைன்ல டிரெஸ் எல்லாம் பாக்க பளபளப்பா இருக்கும். ஆனா அது எல்லாம் நல்ல துணியா இருக்காது”

“ஆன்லைன்ல டிரெஸ் வாங்கறத பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?”

இரண்டு மூன்று முறை இதுபோன்று வாங்கிய துணிகள் எனக்குத் திருப்தி தராததால் அதன் பிறகு ஆன்லைன் வழியே மின்சாதனப் பொருட்கள், துணிகள் போன்றவற்றை வாங்குவதைத் தவிர்த்துவிட்டேன்.

“சரி. சொல்றத சொல்லிட்டேன். உன் விருப்பம். திரும்பவும் என்கிட்ட வாங்குன டிரெஸ் நல்லா இல்ல, அது சரியில்ல, இது சரியில்லன்னுலாம் சொல்லக்கூடாது” என்று அவள் தேர்ந்து வைத்திருந்த சுடிதார் துணிக்கான தொகையைச் செயலியின் மூலமாகச் செலுத்தினேன்.

அப்போது என்றும் இல்லாமல் அவ்வளவு முத்தங்களை “ஐ லவ் யூ டார்லிங்” எனது உதட்டில் பதித்து அன்பை வெளிப்படுத்தினாள்.

சரியாக நான்காவது நாளில் ஆர்டர் செய்த துணி டெலிவரி ஆனது. ஆனால் அந்தத் துணி ஆர்டர் செய்கிறபோது தேர்ந்தெடுத்த ‘ஸைசுக்கும்’ டெலிவரி செய்த துணியின் ஸைசும் வேறாக இருந்தது. ஒருமுறை அணிந்து பார்த்தால்தான் சரியாக இருக்கும் என அணிந்து பார்த்ததில் அது தொளதொளவென வயதான பெண்மணி அணிந்துகொள்வதுபோல இருப்பதாகச் சொல்லி மறு வினாடி அதனைச் செயலியின் மூலமாக ‘ரிட்டன் ஆர்டர்’ போட்டுவிட்டு என்னைப் பார்த்தாள். அப்போது நான் திட்டுவேன் என அவள் நினைத்திருக்கக்கூடும். பெண்களின் சுபாவம் இப்படித்தான் எனத் தினமும் தொலைக்காட்சியில் தோன்றி சோதிடம் சொல்பவர் ஒவ்வொரு ராசிக்கும் பெண்களின் குணம் பற்றிப் பேசியது நினைவில் வந்தது. இவளுடைய ராசி மிதுனமோ? துலாமோ? என் ஞாபகத்தில் சரியாக இல்லை.

ஜோதிட சிகாமணி, ஜோதிட ரத்னா எனவும் பெயர்களுக்கு முன்பு ஆஸ்ட்ராலஜியுடன் சேர்த்து  டாக்டர் எனவும் முன்னொட்டுகளோடு சிலர் சோதிட ஆருடங்களையும் ஆண்-பெண் வசியம் பொருத்தம் பற்றியும் இன்ன ராசி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம் இப்படியெனக் கூறுவதையும் அதில் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும்போது எனக்குள் நகைப்பு ஏற்படாமலிருக்காது.

அவ்வப்போது ஏதேனும் சாப்பிட வேண்டும் போல் தோன்றினால் பெரும்பாலும் கடைக்குச் சென்று சாப்பிடவே விருப்பம்  கொண்டிருந்தவள் சமீப நாட்களில் “ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிடுவதில் என்ன இருக்கிறது? உள்ளங்கையில் ஹோட்டல்கள் விதவிதமான உணவு. பட்ஜெட்டுக்குத் தகுந்த டேஸ்ட்டு” என்று ராகம் படிக்கத் தொடங்கினாள்.

உணவு டெலிவரி செய்யும் செயலி ஒன்றிலிருந்து முதன்முறையாக அவள் ஆர்டர் செய்தபோது ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடவதைக் காட்டிலும் இதில் பலவகையான உணவுகளும் அதன் விலைகளும் ஹோட்டல்களுக்குச் செலவு செய்வதில் கஞ்சன் என நினைக்கும் எனக்கும்கூட இது வலைவிரிப்பதாகத் தோன்றவில்லை. இப்போது மாதத்திற்கு இரண்டு முறை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கத்திற்கு வந்திருக்கிறேன். ஆர்டர் செய்கிற உணவுகளில் மந்தி பிரியாணியும் சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ்–ஆகவோ கடாய் சிக்கனோடு சேர்த்து பரோட்டாக்களாகவோ அவை இருக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது உறவினர்கள் நண்பர்கள் வருகிற நாளில் உணவு செயலியின் மூலம் ஆர்டர் செய்கிற வழக்கத்திற்குப் பழகிவிட்டாலும் ஒவ்வொரு முறையும் ஆர்டர்கள் செய்யும்போது உணவு கொண்டு வரும் நபர்களின் நட்பு கிடைக்கும் வழிகளில் ஒன்றாக இப்போது இது மாறிவிட்டதெனத் தோன்றியது.

கல்லூரி படிக்கும் மாணவர்கள் முதல் அறுபது வயதான ஆண்களும், சில பெருநகரங்களில் பெண்களும் ஸ்விக்கி, சுமோட்டா நிறுவன டீ-ஷர்ட் அணிந்து நள்ளிரவுப் பொழுதிலும் ஆர்டர் செய்த உணவுகளை வீடு வரை டெலிவரி செய்கிறவர்களின் கண நேர நட்பை மக்களின் பசியாற்றும் உணவுப் பொதிகள் சுமக்கும் நடமாடும் கடவுளின் தூதுவர்களென நினைக்கத் தோன்றியது.

சென்னை வெள்ளத்தின்போது ஸ்விக்கி, சுமோட்டா நிறுவனங்களின் ஊழியர்கள் பெருநகர மக்களின் பசியைப் போக்க உயிரையும் பணயம் வைத்து மக்களுக்குச் சேவை செய்த நிகழ்வுகள் செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பினபோது அது எல்லா மக்களுக்கும் ஒரு நெகிழ்வான தருணங்களாகப் பார்க்கப்பட்டன.

இணைய வெளியில் உலாவும் செயலிகளின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்கமுடியாதெனக் கனவிலும் நனவிலும் தோன்றி விரல்கள் எல்லா விதச் செயலிகளையும் இயக்க ஒரு மாய சக்தி என்னுள் புகுந்து ஆட்டுவிப்பதாக எண்ணிக்கொண்டேன்.

இரவு பத்து மணியைத் தாண்டி இருந்தது. ஆர்டர் செய்த உணவு இன்னும் வந்து சேர்வதற்கு எவ்வளவு நேரமாகும் எனச் செயலியில் டெலிவரி ஆகும் நேரத்தைக் காட்டிக்கொண்டிருந்ததையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் இருபது நிமிடங்கள் ஆகும்.

உணவு ஆர்டர் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் குறுஞ்செய்தி வந்தது. நேரம் ஆகிவிட்டபடியால் பசி இன்னும் அதிகமானது.

சென்னையில் இருந்தபோது உணவு ஆர்டரை டெலிவரி செய்ய வந்தபோது ஓர் இளம்பெண் மின்சார இருசகர வாகனத்தில் வந்து உணவை டெலிவரி செய்வதைப் பார்த்திருக்கிறேன். நகரத்தில் பெண்கள் வசிக்கும் ஹாஸ்டல்களுக்கு உணவு டெலிவரி செய்யும் பெண்கள் ஜீன்சும் டீ-ஷர்ட்டும் தொப்பியும் ஷூக்களையும் அணிந்து வருவதைப் பார்க்கிறபோது அவர்களோடு சில வார்த்தைகளாவது பேசிவிட வேண்டுமென்கிற ஆவல் எழும்.

இன்னும் பத்து நிமிடம், ஏழு நிமிடம் எனக் கூகுளில் டெலிவரி செய்யும் நபரின் வருகையைக் கண்காணித்துக்கொண்டிருந்தேன் அத்தனை பசியிலும். உணவு டெலிவரி செய்ய வந்த நபர் ஓர் இளைஞன், கறுப்பு ஜீன்சும் ‘ஸ்விக்கி டீ-ஷர்ட்டு’ம் அணிந்திருந்தான்.

வெளியூர் சென்றுவிட்டுத் திரும்புகிறபோது பசிக்கு ஆர்டர் செய்கிற நாளில் சிலபோது உணவுகள் விரைவாக டெலிவரி செய்கிற நபரை ‘நன்றியென’ ஆரத் தழுவிக்கொள்ளலாம் எனத் தோன்றும். அப்போது வெறுமனே புன்னகைக்கிறபோது அதை ஏற்றுக்கொண்டாரா இல்லையா அல்லது அவர் தன் கடமை நிறைவேறிய மனநிலையுடன் இருக்கிறாரா தெரிந்துகொள்ள மனம் ஆர்வம் காட்டும்.

அசதியிலும் சோர்விலும் படுத்திருந்தவளை எழுப்பிச் சாப்பிட அழைத்தேன். ஆர்டர் செய்த உணவில் சூடு குறையாமல் இருந்தது. உணவு தாமதமாக வந்தாலும் நன்றாக இருப்பதாகச் சொன்னாள். ஐஸ் க்ரீமை காலையில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என பிரிட்ஜில் குளிர்சாதனப் பெட்டியினுள் வைத்துவிட்டு எனது செல்போனை எடுத்து உணவு டெலிவரி செய்த ஹோட்டலின் உணவு பற்றிய தனது கருத்தைப் பதிவிடத் தொடங்கினாள். சில நேரங்களில் உணவுகள் கெட்டுப்போன வாடை வீசுவது போலிருக்கும். அவற்றைச் சாப்பிடுவதா வேண்டாமா எனச் சந்தேகத்தில் வீணாகிப் போய்விடுமெனவும் அது எப்படி இருந்தாலும் சாப்பிட்டுவிடுவதெனத் தீர்மானம் செய்து செய்துகொள்வேன்.

அப்போது சாப்பிட்ட உணவில் ஏதோவொன்று குறைவதுபோல இருந்தாலும் பசி அதைப் பொருட்படுத்தாது ஏற்றுக்கொள்ளும். சில வேளைகளில் சாப்பிட்டும் திருப்தியற்ற மனநிலையில் பசி அடங்காமலிருப்பது போன்ற உணர்வு தோன்றும். கெட்ட வார்த்தைகளில் உணவை டெலிவரி செய்தவனைத் திட்டவும் உள்ளூர கோபம் கனலாய் மூளும்.

முதல் வேளையாக என் செல்போனில் இருந்த செயலிகளை நீக்கிவிட வேண்டுமென விரல்கள் தானாய் அலைந்தன.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button