இணைய இதழ் 124சிறுகதைகள்

வெளிச்சம் – நிர்மல்

சிறுகதை | வாசகசாலை

சாயங்காலம், இருளில் மூழ்கிக்கொண்டிருந்தது. டார்கெட் ஸ்டோரின் வண்டி நிறுத்துமிடத்தில் நான் இருந்தேன். ஹென்னா, அடுத்த வாரம் எந்தக் கடையில் நண்பர்களுடன் சாப்பிட வேண்டும், ஏன் அங்கே சாப்பிட வேண்டும் என்பது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

அவளது இனிய உதடுகள் அசைகின்றன. ஆனால், எனக்குக் கேட்கவில்லை.

என் மனமும் காதுகளும் அதிகாலை மூன்று மணியின் ஒலியைவிட்டு வர மறுத்தன. அந்த நேரத்தின் ஒலி இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அப்பாவின் காலடி சத்தம். அதைவிடச் சத்தமாக இருந்தது அவரது தூக்கமின்மை. அதைவிடச் சப்தமாக இருந்தது அந்த நடையின் அமைதியின்மை.

“பார்த்தி?”

ஹென்னாவின் குரல் கூர்மையானது, அவள் என் பெயரைச் சொல்வதில் பல வகை உண்டு. பதினெட்டு மாதங்களாகப் பெண் தோழியாக அறிவேன். அதற்குமுன் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக, இரண்டாம் வகுப்பிலிருந்தே அவளை அறிவேன்.

“நான் பேசுவதை நீ கேட்கவே இல்லையே”

அது ஒரு குற்றச்சாட்டு அல்ல; அது அவளது அக்கறையின் தொனி என எனக்குத் தெரியும்.

“சாரி,” மனம் கேட்காமல் சொன்னேன்.

அவள் திரும்பினாள். முழங்கால்களை மடக்கி காரில் உட்கார்ந்தாள். இது அவளது கேட்பதற்கான தோரணை. இப்படி அமரும்போது எனக்குப் பேச இடம் கொடுப்பாள்.

“என்ன ஆனது?”

“ஒன்றும் இல்லை.”

“பார்த்தி.”.

“தூங்கவே முடியவில்லை.”

“எப்பொழுது கடைசியாகத் தூங்கினாய்?”

கண்களை மூடிக்கொண்டேன். அவள் கேள்வியைத் தவிர்க்க அது போதவில்லை.

“இரண்டு நாள் ஆகிறது…”

“ஏன்?”

இந்தக் கேள்வி வருமென்று எனக்குத் தெரியும். மௌனமாகச் சுமந்ததை இப்போது வாய்விட்டுச் சொல்ல வேண்டிய நேரம் வந்தது.

“அப்பா இர…வில்… தூங்குவதில்லை.” மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையும் சொல்வதா, வேண்டாமா என எண்ணியபடி நிறுத்தி நிறுத்திச் சொன்னேன்.

அவள் அசையாமல், மடக்கி வைத்திருந்த கால்களை நகர்த்தாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அது எனக்கு மேலும் பேச இடம் கொடுத்தது.

“இரவில் அப்பாவின் காலடி ஓசை… இரண்டு மணி… மூன்று மணி… நடை,. வெறும் நடை. “

ஹென்னா, நான் வழி கண்டுபிடிக்க அனுமதிப்பதைப்போல, ஒரு சொல்லும் பேசாமல் பொறுமையாகக் காத்திருந்தாள்.

எனக்குப் பின்னர் சொல்ல எதுவும் இல்லை என்று நினைத்தேன்; எல்லாமே சொல்லிவிட்டேன் போலிருந்தது.

“அம்மாவிடம் பேசினாயா?”

நான் கவனிக்காமலிருந்தபோது என் கண்களில் தண்ணீர் வந்திருக்கும்போல. அவள் துடைத்துக்கொண்டே கேட்டாள்.

‘அம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? பேச்சை மாற்று’ என்று என் உள்ளத்தில் ஒரு தடைச் சுவர் எழுந்தது. ஆனால், அதே நேரத்தில் ஏதோ ஒன்று ‘சொல்லிவிடு’ என என்னை உந்தியது.

“அம்மாவும் ஏதோ கவலையில் உள்ளார். வழக்கத்துக்கு மாறாக நிறைய இந்தியத் தொலைப்பேசி அழைப்புகள்… சுவர் வழியாகவே அவர் கவலை எனக்குக் கேட்கிறது.”

சில நேரம் அமைதியாக இருந்தோம். அடுத்து என்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை.

“அம்மா பேசும்போது ஆங்கிலம், தமிழ், மறுபடியும் ஆங்கிலம்… சில வார்த்தைகள் புரிகிறது, சில — கிட்டத்தட்ட இல்லை. ஆனால் அம்மா கவலைப்படுகிறார் என்பது எனக்குத் தெரிகிறது.”

ஹென்னா எதுவும் சொல்லவில்லை. எனக்கு ஆறுதலாக என் விரல்களைப் பற்றிக்கொண்டாள்.

“அவர்கள் எதுவும் என்னிடம் சொல்லவில்லை. என்னைப் பாதுகாக்க நினைக்கிறார்கள்… ஆனால் சொல்லாவிட்டால்..” நான் சொல்லடங்கி ஓய்ந்தேன்.

“சாரி பார்த்தி. விவாகரத்து பிரச்சனையா?”

“அது இல்லை என நினைக்கிறேன். அப்பாவுக்கு அவர் நினைத்த பதவி உயர்வு கிடைக்கவில்லை, வேலையில். மூன்றாவது முறையாக மறுக்கப்பட்டுள்ளது.”

ஹென்னாவின் மிருதுவான விரல்கள் என் கைகளை அழுத்திப் பிடித்தன.

“சூப் கிச்சனில் தன்னார்வலராக இருந்தார். அதையும் விட்டுவிட்டார். அவருக்கு மிகவும் பிடித்த ஞாயிறு காலை வேலை. அவரது நண்பருடன் ஏதோ சண்டை ஏற்பட்டது.”

“எவ்வளவு காலமாக இது நடக்கிறது?”

“சில மாதங்களாக இருக்கலாம். இப்போது மோசமாகிவிட்டது.”

“அப்பாவிடம் பேசு.”

“கடந்த வாரம் தொலைப்பேசியில் அம்மா, ஊரிலிருந்த தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தார். நீண்ட அழைப்பு, தமிழில். துண்டுத் துண்டாகக் கேட்டது. குலதெய்வம், கோயில்… ஆனால் முழுமையாகப் புரியவில்லை.”

“என்ன திட்டமிடுகிறார்கள்?”

“இந்தியா. இந்தக் கோடையில் போகிறோம்.”

“இரண்டு நாட்களுக்கு முன் அம்மா சொன்னார். இரவு உணவு சாப்பிடுகையில். என் சம்மதம் கேட்கவே இல்லை.”

“எப்போது?”

“அடுத்த வாரம் புறப்படுகிறோம்.”

ஹென்னாவின் முகம் கவலையிலிருந்து ஆச்சரியத்துக்குப் பாய்ந்தது.

“அடுத்த வாரமா? ஏன் சொல்லவில்லை?”

“எனக்கு விருப்பம் இல்லை. வர வேண்டாமெனச் சொல்ல நினைத்தேன்…”

வாக்கியம் முழுமையடையவில்லை. சொல்வதில் எனக்குள் குழப்பம் இருந்தது.

“ஏன் விரும்பவில்லை?”

“இது என் குடும்பத்தின் குழப்பத்தை எப்படித் தீர்க்கும்?”

ஹென்னா எதுவும் சொல்லவில்லை. ‘தொடர்ந்து சொல்’ என்பதுபோல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஒருவேளை, அவர் பிரச்சனையிலிருந்து ஓடுகிறார் என நினைக்கிறேன்.”

“எதிலிருந்து?”

நான் பதில் சொல்லவில்லை. அது, நான் எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி.

AP Psychஇல் படித்ததெல்லாம் நினைவுக்குள் ஓடிக்கொண்டது. கைவிரல்களை இறுக்கிக்கொண்டேன். மனதில் எண்ணங்களைத் தொகுத்துக் கொள்ள நினைத்தேன்.

நடுவயது நெருக்கடி இருக்கக்கூடுமா?… அடையாள நெருக்கடி?… தொழிலில் அதிருப்தி?
என்னவாக இருக்குமோ…

அவள் விரல்கள் என் தோளைத் தொட்டன.

“தெரியவில்லை. தோல்வியிலிருந்து  தான் எதுவாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதுவாக இல்லாததிலிருந்து.”  ஒரு பதிலைச் சொன்னேன். பொதுவான பதில். எனக்கே அவ்வளவுதான் புரிகின்றது.

பார்க்கிங் விளக்குகள் ஒளிர்ந்தன. வானம் ஊதா நிற இருளில் மூடப்பட்டது.

“நீ போனால், அப்பாவுக்கு உதவியாக இருக்குமா?”

“உதவியாக இருக்க ஆசை உள்ளது. ஆனால் பயமாக இருக்கிறது. நான் அவரை இப்படிப் பார்த்ததில்லை. ஊருக்குப் போனால் தாத்தா, பாட்டியைப் பார்ப்பேன். தாத்தாவிடம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அவருக்கு என்னைப் பிடிக்கும்; என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்வார்.”

“நான் உன்னை மிஸ் செய்வேன். எப்போது கிளம்புவாய்?”

அவள் முகத்தில் கவலையிலும் இனிமையிலும் ஒரு சேர வெளிப்பாடு ஏற்பட்டது.

“ஒரு வாரம்.”

“அங்கிருந்து செய்தி அனுப்பு?”

“தொலைப்பேசி சேவை இருந்தால்.”

“எவ்வளவு நாள்?”

“மூன்று வாரங்கள்.”

ஹென்னா கண்ணை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் ஸ்பாடிபை ஒலிக்கச் செய்தாள். அவள் உருவாக்கிய இசைப் பட்டியல். இசை அந்த இடத்தை நிரப்பியது.

“இதெல்லாம் என்னிடம் சொல்லலாம் தெரியுமா?” அவளது குரல் மென்மையானது. “என்னிடம் மறைக்க வேண்டாம்.”

“சரி..” என முணுமுணுத்தேன். அவளுக்குக் கேட்டது.

கார் ஜன்னல்கள் திறந்தன. கார் முன்னோக்கி நகர்ந்தது. மெல்ல பார்கிங் லாட்டைவிட்டு வெளியே வந்து, இலக்கின்றிப் பயணம் செய்தது. அவளுடன் கார் நகர்ந்தது.

இந்தியாவில் நாங்கள் எப்படி அப்பாவின் அமைதியையும், எங்கள் குடும்பத்தின் அமைதியையும் கண்டுபிடிப்போம் என்று தெரியவில்லை. இந்தியாவில், அந்தக் கிராமத்தில்… எனக்குக் குழப்பமாக இருந்தது.

பதில் தெரியாத கேள்வி, இருண்ட சாலையைப் போல முன்னால் விரிகிறது.

இந்தப் பயணம் பதில் தருமா? இந்தியாவில் என்ன நடக்குமென்று தெரியவில்லை. கோவில், தாத்தா… அது வேலை செய்யுமா?

இழந்ததை மீட்டெடுக்க முடியும் என்று அப்பா நம்புகிறார்.

இது வேலை செய்யுமா?

கேள்வி என் இதயத் துடிப்புடன் ஒத்திசைவாக ஒலிக்கிறது.

ஹென்னாவிடம் பேசி ஒரு வாரத்திற்குப் பின்னர், தாத்தாவின் வீட்டிற்குள் நுழைந்தேன்.

கிட்டத்தட்ட வருடாவருடம் கோடைக்கோ அல்லது குளிர்காலத்திலோ தாத்தா வீட்டுக்கு வந்து இருக்கிறேன். ஆனால் இந்த முறை, கொஞ்சம் பதற்றமாக இருந்தது.

அப்பாவும் அம்மாவும், எல்லாமும் சரியாகிவிட வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன்.

தங்கை இன்னும் சிறியவள், ஐந்தாம் வகுப்பு. அவள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தாள்.

முதல் நாள், அப்பாவும் தாத்தாவும் குலத்துக்கோயில் பூஜை ஏற்பாடுகள் தொடர்பாக, பங்காளி வகையறாக்களைப் பார்க்கச் சென்றுவிட்டனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான கால வேறுபாடு கொடுத்த இரவு பகல் குழப்பத்தில் நான் தூங்கி எழுந்தேன். எது பகல், எது இரவு என்றே தெரியவில்லை. அந்த நாள் முழுவதும் பாட்டியோடும் அம்மாவோடும் கழிந்தது.

இரண்டாம் நாள் அப்பாவைப் பார்த்தேன். நான் தூங்கி எழுந்தபோது, அவர் வருகை அறையிலுள்ள டீ டேபிளைத் துடைத்துக்கொண்டிருந்தார்.

“பார்த்திபா, ஜெட் லேக் போய்விட்டதா?” எனச் சிரித்தார். மணியைப் பார்த்தேன். மதியம் 12 மணி.

பாட்டி, தலை குளித்து ஒரு துண்டை சுற்றிக்கொண்டு, சாம்பிராணிப் புகையுடன் என்னைக் கடந்து சென்றார்; எனக்கும் புகை போட்டார்.

“உங்க அம்மா இப்படித்தான் உங்கள் ஊரிலும் தூங்குவாளா?” என்று கேட்ட பாட்டி, முடிந்த அளவு என்னைச் சுற்றி சாம்பிராணிப் புகை விட்டார்.

“அவளுக்கும் ஜெட் லேக்…” தாத்தாவின் குரல் ஒலித்தது.

அப்பா, என்னைச் சாப்பிட அழைத்து கை காட்டினார்.

நான் சாப்பிடும்போது, அப்பா என் பின்னால் வந்து நின்று எனக்குப் பரிமாறினார். அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு,  “பூஜைக்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும், அப்பா,” என்றேன்.

“அந்தக் கவலையெல்லாம் உனக்கு எதற்கு? பெரிய மனுஷனாகிவிட்டாயா? தாத்தாவும் பாட்டியையும் கொஞ்சிக்கொண்டு சந்தோஷமாக இரு, அது போதும். நானும், உன் அம்மாவு பார்த்துக்கொள்கிறோம்,” என்றார்.

“ம்…” என்றேன்.

மதியம் ஹென்னாவிடம் பேசிவிட்டுத் தூங்கினேன்.

சாயங்காலம் வந்தபோது, பாட்டி என் தங்கைக்கு மாம்பழம் ஊட்டிக்கொண்டிருந்தார். அம்மா மதில் சுவரைப் பிடித்துக்கொண்டு பக்கத்து வீட்டு மாமியுடன் ஏதோ வம்பு பேசிக்கொண்டிருந்தார்.

நான் பாட்டியின் அருகில் அமர்ந்ததும், பாட்டி எனக்கும் ஊட்ட ஆரம்பித்தார். முதலில் வேண்டாமெனச் சொல்ல நினைத்தேன்; பிறகு மாம்பழம் இனிப்பாக இருந்தது. பாட்டியிடம் சாப்பிடக் கூட இனித்தது.

பாட்டி கனைத்தார். எனக்குத் தெரியும், அது “தட்டில் மாம்பழம் தீர்ந்துவிட்டது” என்பதைக் குறிக்கும்.
பாட்டி அம்மாவை அழைக்கிறார். ஆனால் அம்மா திரும்பவே இல்லை. மதிலுக்கு அப்பால் இருந்து வரும் கதையில் மூழ்கியிருந்தார்.

பாட்டி திரும்பி, அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்து தொலைப்பேசியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவைக் கடும் கோபத்துடன் பார்த்தார்.

தாத்தா உடனே எழுந்து உள்ளே சென்று மாம்பழம் எடுத்து வந்து நறுக்கத் தொடங்கினார்.

“தாத்தா…” என அழைத்தேன். எனக்கு அப்பாவை பற்றிய யோசனை வந்தது.

“என்ன கண்ணா…”

“அப்பா எங்கே..”

“உங்க சித்தப்பாவைப் பார்க்கப் போயிருக்கான். மாமா வந்தான், இரண்டு பேரும் போயிருக்கிறார்கள்”

“ஏன்?”  மாம்பழம் அரிந்து தட்டினில் வைத்து என்னிடம் நீட்டினார். வாங்கி பாட்டியிடம் கொடுத்தேன்.

பாட்டி எனக்கொன்று ஊட்டிவிட்டு, தங்கைக்கு ஒன்று ஊட்ட ஆரம்பித்தார்.

“பேரனையும் பேத்தியையும் பார்த்தால் தலையும் காலும் புரியறது இல்லை”  என்றார்.

“என் சாமி“ எனப் பாட்டி என் தங்கையை இழுத்து முகத்தினை முகத்தோடு அணைத்துக் கொஞ்சினார்.

“தாத்தா நான் கேட்டேனே?” என்றேன்.

“சித்தப்பாதான் பூசாரி, பூசை வைக்கணும்ல. போய் பார்த்துவிட்டு பூசைக்குச் சொல்லிட்டு வரணும்ல”

“பூசை எதுக்கு தாத்தா?”

“நம்ம குலசாமி, நாமதானே பூசை வைக்கணும்..”

“தாத்தா, நமக்குக் குலசாமி எப்படி வந்தது?”

“நாமெல்லாம் சிதம்பரம் பக்கம். அங்கிருந்து திருச்சி வந்தோம். அப்போதுதான் வந்தது.”

“சிதம்பரமா? அது எங்கே இருக்கிறது? அங்கிருந்து ஏன் வந்தோம்?”

“சிதம்பரம் இப்பொழுது பக்கத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் அது தூரத்தில் இருந்தது.”

“அங்கிருந்து ஏன் இங்கே வந்தீங்க?”

“உங்க அப்பா ஏன் அமெரிக்கா போனாரு?”

“வேலைக்கு?”

“அதேதான் சிதம்பரத்திலிருந்து நம்மை திருச்சிக்குக் கூட்டி வந்தது.”

“வந்த பிறகு என்னாச்சு?”

“வந்த இடத்தில் வெள்ளாமை செய்ய முடியவில்லை. நம்மைக் கூப்பிட்டு வந்தவர்களும் நம்மை ஆதரிக்க முடியவில்லை. பாளையங்களுக்குள் சண்டை… தாயாதி பிரச்சனைகள்…”

தாத்தா பெருமூச்சுடன் சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்.

“அப்புறம்?” எனத் தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டேன்.

தாத்தா என்னைப் பார்த்துச் சிரித்தார்.

“திரும்பிப் போகக்கூடக் கௌரவப் பிரச்சனை. எல்லாரும் தடுமாறியபோது ‘ஆயிரம் வல்லி’ என்ற பெயரில் ஒரு வியாபாரி இருந்தார். நமது ஊரின் பெரிய குடும்பம். அவர் ஆதரவில் நம் குடும்பம் வாழ்ந்தது. அவருக்கு நம் குடும்பத்தில் இருந்த ஓர் அழகான பெண்மீது ஆசை. திருமணமானவளையே தூக்கி வந்துவிட்டார்…”

தாத்தா கதையை நிறுத்திவிட்டு, எனக்குப் புரிகிறதா என்று பார்த்தார்.

நான் “ம்…” எனத் தலை அசைத்தேன்.

அதற்குள்,

“பலாப்பழம் வேண்டும்…,” தங்கையிடமிருந்து தாத்தாவுக்குக் கோரிக்கை வந்தது.

“என் கண்ணுதானே…” பாட்டி கொஞ்சினார்.

தாத்தாவைக் கடைக்குப் போகச் சொல்கிறார் என்பதைக் குறிக்கும்.

தாத்தா எழுந்து, சட்டையைப் போட்டுக் கிளம்பினார்.

“என்னைப் பார்த்து “வா,” எனக் கைகாட்டினார்.

“ட்ரஸ் மாற்ற வேண்டுமா?” எனக் கேட்டேன்.

“நீ அமெரிக்காடா… என்ன ட்ரஸில் வேண்டுமானாலும் வரலாம். வா, கதையைச் சொல்றேன்…”

தோளில் கையைப் போட்டு இழுத்துக்கொண்டு சென்றார்.

தங்கைக்கு, கதையைவிடப் பழம் முக்கியமாக இருந்தது.

அவசரத்தில், அப்பாவின் செருப்பைப் போட்டுக்கொண்டு, தாத்தாவுடன் நடக்கத் தயார் ஆனேன்.

அதைப் பார்த்து, “கச்சிதமாகப் பொருந்துகிறது,” தாத்தா என்னிடம் சொன்னார்.

“பிள்ளையை விட்டுப்போங்கள்… வெயிலாக இருக்கிறது,” பாட்டி சொன்னார்.

“பழகட்டும்… அவனுக்கும் இந்த ஊரில் ஓர் இடம் இருக்கிறது…”

சொல்லிவிட்டு, தாத்தா முன்னால் இருந்த கிரில் கதவைத் திறந்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.

“தாத்தா, அப்புறம் என்ன ஆச்சு?”

“அப்புறம்… ராவண பிரபுவுக்கு என்ன நடந்ததோ, அதுதான் நடந்தது. ஊர்க்காரர்கள் ஒன்றுகூடி, அவரை அடித்துத் தள்ளினர். அவர் சாகக் கிடந்தபோது, தன் தப்புக்காக மன்னிப்பு கேட்டு, ஊருக்குத் தன் நிலத்தையும் சொத்தையும் கொடுத்தார். அதில் பெரிய குளம் வெட்டினார்கள்.  சுத்தி இருந்த குடும்பத்துக்கு எல்லாம் அந்த நிலந்தான் வாழ்க்கையைக் கொடுத்தது. அதிலிருந்துதான் அவர் நம் குலத்துக்குக் குலசாமி ஆனார். எங்கப்பா சொன்ன கதைதான் இது… முழுமையா ஞாபகம் இல்லை. ஞாபகம் உள்ளதைச் சொல்கிறேன்.”

“அதற்காக அவர் குலசாமியாக வேண்டியதா, தாத்தா?”

“பெரியவங்க சொன்னார்கள்… ஊர்க் கட்டுப்பாடு இருக்கணும். நம் குடும்பம் நல்லபடிதான் இருக்கேடா… சாமியோட அருளால்தான் நம்ம குடும்பம் இப்படி நல்லா இருக்கிறது. நம்ம குடும்பம்தான் கோவிலுக்குப் பூசாரி குடும்பம். எங்க தாத்தா, அப்பா, நானும் செய்தோம். உங்க அப்பா தலைமுறையில்தான் அந்த உரிமையை நம்ம பங்காளி குடும்பத்துக்குக் கொடுத்தோம். உங்க அப்பா ஊரில் இல்லையே. வந்தால் போய் பூஜை போடுவார்.”

“பங்காளி என்றால் யார், தாத்தா?”

“அண்ணன் தம்பி முறை.”

“ம்,” எனத் தலையசைத்தேன்.

“சிதம்பரத்திலிருந்து வரும்போது ஏழு குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு கோவில் இருக்கிறது. நமக்கிதுதான் கோவில்.”

“அப்போ நம்ம மாமாவுக்கெல்லாம்…?”  அம்மாவின் தம்பி நினைவுக்கு வந்து கேட்டேன்.

“நாளைக்குப் பூஜைக்கு வருவார் கேளு… சொல்லுவார். அவர்களுக்கும் ஒரு குலசாமி இருக்கிறார்.”

“ம்…” என்று சொன்னேன்.

அந்தக் கதையை என் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்த்தேன்.

இந்தப் பூஜை வேலை செய்யுமா? இப்படி ஒரு கடவுள் இருக்க முடியுமா?

அந்தக் கேள்வியுடன் அந்த வார இறுதி சனிக்கிழமையன்று, நான், பாட்டி, என் மாமாவின் பையன் முகிலன், அத்தை, தங்கை, அம்மா எல்லாரும் கடைக்குப் போய்க்கொண்டிருந்தோம்.

முகிலன் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். எங்கள் ஊரிலிருந்து திருச்சிக்கு நாங்கள் வரும் போதெல்லாம், பாட்டி எங்களுக்கு சாரதாஸ் கடையில் துணி வாங்கித் தருவார். அவளுக்கு அது திருச்சியின் மையம்.

“எங்க ஊரிலேயே பெரிய கடை அங்கில்லாதது ஏதுமில்லை!” என்று சொல்லுவார், பெருமையோடு.
ஒவ்வொரு முறையும் சொல்லுவார்; இந்த முறையும் அப்படித்தான். இந்த முறை, பூஜைக்குப் புதிய உடை என முன்கூட்டியே முடிவு செய்திருந்தார்.

போகும் வழியில், மறுநாள் பூஜைக்குத் தேவையான பூ வாங்க வேண்டியிருந்தது. வழிபடு முருகன் கோவிலுக்கருகே கடை இருக்க, முகிலன் காரை நிறுத்திவிட்டு, பூ வாங்கப் போனான்.

காரில் பயணிக்கும்போது, நான் பாட்டியிடம் கேட்டேன், “ஏன் பாட்டி… இப்படி எனக்கு ஒரு கடவுள், மாமா வீட்டுக்கு ஒரு கடவுள் இருக்க முடியுமா?”

பாட்டி என்னைக் கடுமையாகப் பார்த்தார். “அப்படியெல்லாம் பேசக்கூடாது,” என மென்மையாகச் சொன்னார்.

பின்புற இருக்கையில், தொலைப்பேசியில் ஊரிலுள்ள தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த அம்மாவை நோக்கி, பாட்டி வருத்தமாகச் சொன்னார், “பிள்ளைக்கு நல்லது சொல்லி வளர்க்கணும்… என்ன சொல்லி இருக்கிறாளோ!”

அம்மா, சிறிய சிரிப்பொன்றைக் கொடுத்துவிட்டு, தன் தொலைப்பேசியில் பேசத் தொடர்ந்தார்.

“எப்படி?” என அத்தை கேட்டாள்.

“பாட்டி, அப்பா வீட்டுக்கு ஒரு கடவுள், மாமா வீட்டுக்கு இன்னொரு கடவுள். இப்படி இரண்டும் இருக்க முடியுமா?”

அத்தை பதிலளித்தாள். “நீ ‘கடவுள்’ன்னு நினைக்கற… நாங்க ‘தெய்வம்’ன்னு சொல்றோம்.”

பாட்டிக்கோ, அத்தையின் வார்த்தைகள் புரியவில்லை என்பதுபோல முகத்தில் குழப்பம் தென்பட்டது.

‘சும்மா இரு’ எனக் கண்ணால் அத்தையிடம் சொன்னாள்.

முகிலன் பூ வாங்குவதில் தாமதம் செய்துகொண்டிருந்தான். பின்னால் ஹார்ன் ஒலித்தது. வண்டியை நகர்த்தச் சொல்லும் அழைப்பு.

உடனே அத்தை பின்னிருக்கையிலிருந்து இறங்கி, காரை நகர்த்தி, பின்னால் வந்த வண்டிக்கு வழிவிட்டார்.

முகிலனிடம், “கண்ணா சீக்கிரம் வா!” எனக் கட்டளையிட்டாள்.

“அங்க மயில்மார்க் மிட்டாய்க் கடையில் என் பேத்திக்குக் கடலைமிட்டாய் வாங்கிக்கொடு,” என்று பாட்டி, அத்தையிடம் சொன்னார்.

அத்தை, திரும்பி சற்றே கோபமாக, “இங்கு வண்டி நிறுத்தக்கூடாது, பெரியம்மா!” எனச் சொன்னார்.

பாட்டி அதைக் காதில் வாங்கியது போலவே தெரியவில்லை. முகத்தினைக் கோபமாக வைத்துக்கொண்டு வெளியே சாலையில் எதையோ பார்த்தாள்.

இத்தனை களேபரத்துக்குள், நான் அத்தையின் பதிலை மனத்தில் தொடர்ந்துகொண்டிருந்தேன்.

முகிலன் ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டான்.

அத்தை காரை நகர்த்தினார்.

“கடவுளும் தெய்வமும் வேறுதானா?” என்று, நான் அத்தையிடம் கேள்வியைத் தொடர்ந்தேன்.

“எனக்கு வேறில்லை. இரண்டும் ஒருவிதத்தில் ஒன்றுதான். உன் வரையறையில்தான் வேறுபாடு,” என அத்தை, சற்று வலியுறுத்திக் கூறினார்.

முகிலைப் பார்த்து “நீ சொல்லுடா, முகில்?” என்றார்.

அத்தை, முகிலனைச் சிரிப்புடன் இழுத்தார்.

“உனக்கு ஏன்டா இந்தக் கவலை…” என்று முகிலன் சிரித்தான்.

“சொல்லு, முகில்…” என அத்தையிடம் மீண்டும் கேட்டார்.

“இரும்மா… யோசிக்கணும்,” என்றான்.

“என்னடா, ஐஐடியில் எலக்ட்ரிக்கல் படிக்கிற! உங்கம்மா கேள்வி கேட்டா பதில் தெரியலைன்னா…”

அம்மா, தொலைப்பேசியை வைக்கும்போது சிரித்தபடியே கிண்டலாகக் கேட்டார்.

“ஏன் அத்தை, உயிரை வாங்கறீங்க! எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கும் இதுவும் ஒன்றா? உங்கம்மாவிடம் பேசுங்க! தொலைப்பேசியைக் கீழே வச்சா, பாட்டிக்கிட்ட பிடித்துக் கொடுத்துருவேன்,” என முகிலன் சிரித்தான்.

தன்னை பேரனும், பிள்ளையும், மருமகளும் இழுப்பதால் பாட்டிக்குச் சற்று வருத்தமாக இருந்தது. என் தங்கையை இழுத்து அணைத்துக்கொண்டார்.

“நீ வாடி என் கண்ணு! இவர்களையெல்லாம் தாத்தாவிடம் சொல்லி, நன்றாக ஓர் அடி வாங்கி தருவோம்!,” பாட்டி சொன்னார்.

சின்ன சிரிப்பொன்று வேனுக்குள் பரவியது.

முகிலன், பாட்டியைத் தோளில் கை போட்டு இழுத்தான். பாட்டி, பேரனின் தோளில் சாய்ந்துகொண்டார்.

நேரம் ஓடியது.

நாங்கள் காவிரிப் பாலத்தைக் கடந்துகொண்டிருந்தோம். முகிலன், அதைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

“அங்கே மேலே இருக்குற சூரியனைப் பாரு, அது காவிரியிலும் தெரிகிறதே… காவிரியில் தெரியும் சூரியனும், மேலே இருக்குற சூரியனும் ஒன்றுதானே? அது போலத்தான் தெய்வம். நம் ஊரில், நம் குடும்பத்தில் தெரிகிறது. கடவுள் என்பது வானத்துச் சூரியன் என்று வைக்கலாம்…,” திடீரென முகிலன் சொன்னான்.

அம்மா, முகிலனின் முதுகைத் தட்டிக்கொடுத்தாள். அத்தை திருப்தியுடன் புன்னகைத்தாள்.

“இந்த வருடம் காவிரியில் நல்ல ஓட்டம். இவ்வளவு தண்ணீர் பார்த்திருக்க மாட்டாய்!” என்று பாட்டி, திருச்சியின் பெருமையைத் தொடர்ந்தார்.

எனக்கு முகிலன் சொன்னது மனதில் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.  காவிரியில் தெரிவது, பொட்டோமாக்கில் தெரியலாம். என் குடும்பம் தன் உள்ளங்கையில் அள்ளும் நீரிலும் தெரியலாம்.

ஜன்னல் வழியே பார்த்தேன். காவிரி அகன்றும் விரிந்தும் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது.

ஷாப்பிங் முடித்து வருகையில் மூன்றாம் நாள் இரவு. அன்று அப்பா எங்களுக்காகக் காத்திருந்தார். வந்து இறங்கியதும் மாமா ஷாப்பிங் பையை எல்லாம் உள்ளே எடுத்து வைத்தார்

அம்மா வீட்டுக்குள் இருந்து என்னை அழைத்தாள். உள்ளே போனதும், பின்னாலேயே தாத்தாவும் வந்தார். அவருக்கு ஹோட்டலில் வாங்கிய இட்லியை அம்மா எடுத்து வைத்தாள். தண்ணீர் எடுத்து வைத்தாள்.

அவர் சாப்பிட உட்கார்ந்தார்.

“அப்பாவுக்கு..” என்றேன்.

“அவன் நாளைக்குக் கோவிலில் பூசை என்பதால் ஒரு வேளை சாப்பாடுதான்..” தாத்தா பதில் சொன்னார்.

“ம்..” என்றேன்.

“காலையில் நேரத்துக்கு எழுந்து அப்பாவுடன் கோவிலுக்கு போ, அப்பாவுக்குத் தேவையானதைச் செய்து கொடு… தூங்கி விடாதே..” அம்மா குரலில் கடுமை இருந்தது.

பாட்டி “அவன் எதுக்கு? சின்ன பையன். குழந்தை. நான் ஊரிலிருந்து ஆள் வர சொல்லியிருக்கேன்”  என்றாள்.

“பேரனை இடுப்பில் சோறூட்டக் கூடாது. அவனும் தலைக்கு மேலே வளர்ந்துவிட்டான், அவன் போய் அவன் அப்பாவுக்கு உதவியாக இருக்கட்டும்..”, சட்டென கடுமையான குரலில் தாத்தா சொன்னார்.

பாட்டியின் கண்ணசைவில், குரலசைவில் ஓடி ஓடி உதவி செய்யும் தாத்தா, குரலில் கடுமைக்கும் இடம் வைத்துள்ளார். அது என்றாவதுதான் தெரியும். அப்பா அந்தக் கணங்களைச் சொல்லியிருக்கின்றார், இன்றைக்குத்தான் பார்த்தேன்.

“பார்த்தி..” தாத்தாவின் குரல் என்னை அழைத்தது.

“காலையில் போகும்பொழுது எக்ஸ்ட்ரா ஒரு ட்ரஸ் எடுத்துக்கிட்டு போ. அங்கே கொஞ்சம் வேலை இருக்கும்..,” தாத்தாவின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. 

சரி என்று தலை அசைத்தேன். அம்மா அறைக்குள் நுழைந்து அவள் துணிமணிகளை எடுத்துக்கொண்டு அவள் அண்ணன் வீட்டுக்குக் கிளம்பினாள். பாட்டி கொஞ்சம் முகச்சுளிப்போடு இருந்தாள். அப்பா, பாட்டி முதுகில் தட்டிக் கொடுத்தார்.

பாட்டி தங்கையை அம்மாவோடு அனுப்ப மறுத்துவிட்டாள். தங்கையும் பாட்டியைக் கட்டிக்கொண்டு வரவில்லை எனச் சொல்லிவிட்டாள்.

அம்மா காரில் ஏற அத்தை முகத்தில் அத்தனை ஆனந்தம். கார் நகர்ந்ததும் உள்ளே இருந்து சிரிப்பு கேட்டது. பாட்டி கொஞ்சம் கோபமாக உள்ளே போனாள். அப்பா சிரித்துக்கொண்டே கதவைப் பூட்டினார்.

“நீ போய் தூங்கு, காலையில், எழுந்திருக்கணும்” என்னைத் தூங்க அனுப்பினார்.

நான் சென்று என் அறைக்குப் போய் கதவைச் சாத்தினேன்.

செல்போனை எடுத்துப் பார்த்தேன். ஹென்னாவிடம் இருந்து குறுஞ்செய்தி. நாள் எப்படி எனக் கேட்டாள்.

‘நிறையச் சாப்பாடு. ஷாப்பிங், .ஊர் சுற்றல்..’ எனப் பதில் செய்தி அனுப்பினேன்.

“அப்பா?,” எனச் செய்தி அனுப்பினாள்.

“தூங்குகின்றார்,”  எனப் பதில் செய்தி அனுப்பினேன்.

“மகிழ்ச்சி,”  என்றாள்.

அவள் கோடை வகுப்புக்குப் போவதால் விடைபெற்றாள்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. அப்பா விரதம் எனச் சாப்பிடுவதில்லை, திருச்சி வெயிலில் தாத்தாவுடன் கோவில் வேலையாக அங்குமிங்கும் போய் இதர உறவுகளைச் சந்திக்கின்றார். அதனால் தூங்குகின்றாரா? இல்லை உண்மையில் அவருக்கு அமைதி கிடைக்கின்றதா?

எது உண்மையாக இருக்கும்?  நாளை பூஜை உண்மையில் வேலை செய்யுமா? சில கேள்விகள் வந்தன.

எப்பொழுது தூங்கினேன் எனத் தெரியவில்லை.

கனவில் காவிரியில் சூரியன் உதித்து, அது வானத்தில் பிரதிபலித்தது. வானத்துச் சூரியன் கீழே இறங்கியது. நீரில் இருந்த சூரியன் மேலே எழுந்தது. பூமி வானம் போல விரிந்தது. மேகங்கள் போல மிதந்தது. வானம் பூமி போல கனத்தது. கல் போல விழுந்தது. மேலும் கீழும் மாறின. வலதும் இடதும் குழப்பமானது. நான் எங்கே இருக்கிறேன்?

அந்தக் காட்சியில் உடல் நடுங்கியது. அது பேயோ, பூதமோ இல்லை. ஆனாலும் ஏன் இப்படி?  வேர்த்தது. கொஞ்ச நேரம் எதுவும் பிடிபடவில்லை.

ஏசி ஓடியது, பேன் ஓடியது. ஆனாலும் வேர்த்தது. கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன்.

ஹென்னாவுக்கு செய்தி அனுப்பினேன். பதில் இல்லை. அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது. கொஞ்ச நேரம் ஸ்போட்டிபையில் அவள் உருவாக்கிய பாடல் பட்டியலைக் கேட்டேன். அது சலித்தது.

கிண்டிலில் ஹென்னா படிக்கச் சொன்ன ஓடிசியைப் படிக்க ஆரம்பித்தேன். ஒடிஸியஸ் போரிலிருந்து வீடு திரும்புகிறான். வழியில் கடவுள்கள் அவனைச் சோதிக்கின்றன. சர்ஸி, சைக்ளோப்ஸ், சைரன்கள். இருபது வருடங்கள் அலைகிறான். வீட்டில் அவன் மனைவி பெனலோப் நெசவு செய்துகொண்டே காத்திருக்கிறாள். பகலில் நெய்வது, இரவில் அவிழ்ப்பது. காலத்தை நிறுத்த முயற்சி. அது எனக்கு மிகுந்த தொந்தரவினைத் தந்தது. புத்தகத்தினை மூடி வைத்தேன்.

லேப்டாப்பில் நெட்பிளிக்ஸில் பாக்கி வைத்திருந்த ப்ளாஷ் பார்க்க ஆரம்பித்ததேன். ப்ளாஷ் ஓடிக்கொண்டே இருந்தான். வேகமாக, மிக வேகமாக. சிறையில் இருந்த தந்தையை மீட்கப் போராடினான். காலத்தில் பயணம் செய்தான்.

அப்படியே தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை 3 மணிக்கு எழுந்துவிட்டேன்.

அறைக் கதவைத் திறந்தேன். வெளியில் அப்பா, மென்மையான சிரிப்புடன், அறையில் மாட்டியிருந்த கண்ணாடியின் முன்னால், தன் வழுக்கைத்தலையை ஸ்திரமாகச் சீவிக்கொண்டிருந்தார். அப்பாவை இப்படிப் பார்த்து ஒரு சில மாதங்கள் ஆகிவிட்டன.

“கடகடவென குளிடா… நாம நான்கு மணிக்கு கிளம்பணும்.”

அப்பாவின் கண்ணாடியில் என் முகமும் தெரிந்தது. திரும்பிப் பார்க்காமலேயே என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.

பாட்டி என்னைத் தனியாக அழைத்து “நீ பத்திரமாக போ, அங்கே பூச்சி, கீச்சி இருக்கும். கவனமாக இரு. பாட்டி ஆறரை மணிக்கு வந்துவிடுவேன். மாமா ஆறு மணிக்கு வந்துவிடுவான். உனக்குச் சாப்பாடு கொண்டு வருவான்”, சொல்லிவிட்டு அப்பாவிடம் “பைக்கை வேகமாக ஓட்டாதே”, என்றாள்.

நாங்கள் கிளம்பும்போது, தாத்தா தூங்கிக்கொண்டிருந்தார்.

கோவிலுக்குப் போகும் வழியில், முதலில் மாமாவின் வீட்டில் போய், ஊதுபத்தி, சூடம், பூக்கள், மாலைகள் போன்ற பூஜை சாமான்களை எடுத்தோம்.

அம்மா ஒரு பொங்கல் பானையை வேறு கொடுத்தாள். ஒரு பைக்கில் அவ்வளவு விஷயங்கள் சவாரி செய்ய முடியும் என்பதே அப்பொழுதுதான் தெரிந்தது. மாமா எல்லாவற்றையும் அழகாக அடுக்கிக் கொடுத்தார். அப்பா சீராக மெதுவாக ஓட்டினார்.

மைய சாலையிலிருந்து பக்கச் சாலைக்குள் திரும்பியபோது, தூரத்தில் பாறைகள் சூழ்ந்த கோவிலைக் கண்டேன். கோவிலுக்குள் நுழைந்த நேரம்  காலை ஐந்து மணியிருக்கும். வாசலில், சித்தப்பா ஒருவரும், யாரென அடையாளம் தெரியாத இன்னொருவரும் நின்றிருந்தார்கள்.

அப்பாவைப் பார்த்ததும், சித்தப்பா “வணக்கம் அண்ணே” என்றார். இன்னொருவர் மையமாகத் தலை அசைத்தார். அவர்கள் பைக் இருளில் நின்றிருந்ததால், அதை நன்றாகக் கவனிக்கவில்லை. என்னைப் பார்த்து, அவர்கள் சினேகமாகப் புன்னகைத்தார்கள். கோவில் வாசலின் கிரில் கதவை க்ரீச் எனச் சப்தம் வரத் திறந்தார்கள். சப்தத்தில் உடல் கூசியது.

“ஏன் இங்கே கிரில் கதவு?” என்று எனக்குள் தோன்றியது.

கோவிலில் ஓர் ஆள் உயரத்தில் மதில் சுவர்; யாரும் சுவரை ஏறி உள்ளே சென்றுவிடலாம் போல இருந்தது. அப்பா என் முகத்தில் என் கேள்வியை வாசித்தார் போல, “நாய் உள்ளே வந்து தொந்தரவு செய்கிறது. அதனால்தான்,” என்று விளக்கம் அளித்தார்.

கையில் இருந்த பூ, மாலை, சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி, பழங்கள் கொண்ட பையைக் கீழே வைத்தேன். அப்பா சட்டையைக் கழட்டி, அருகிலிருந்த மரக்கொம்பில் தொங்கவிட்டார்.

என்னிடம் “டீஷர்ட்டை மாற்றிக்கொள்,” என்று சொன்னார்.

பிறகு, அங்கிருந்த ஐயனார் சன்னதி, பிள்ளையார் சன்னதி ஆகியவற்றைத் திறந்தார்.

குலசாமிக்குச் சன்னதி இல்லை. பாறையில் ஒரு கல்லோவியம் போலவே அவர் நின்றிருந்தார்.

சித்தப்பாவும் இன்னொருவரும், சட்டையைக் கழட்டிவிட்டு, பிள்ளையாரிடமும் ஐயனாரிடமும் சென்று நின்றனர்.

தூரத்தில் கல்லாக இருந்த வீரர்கள் சிலைகளாக அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“சும்மா நிற்காதே, போய் பொங்கல் பானையும், அரிசியையும் கொண்டு வா,” என்றார் அப்பா.

பைக்குக்கு அருகில் தரையில் வைத்திருந்தவற்றை எடுத்துக்கொண்டு வந்தேன்.

திரும்பி வந்தபோது, அப்பா அங்கிருந்த துடைப்பத்தால் கோவிலைக் கூட்ட ஆரம்பித்திருந்தார்.

என்னிடமும் ஒரு துடைப்பத்தைக் கொடுத்து, கூட்டச் சொன்னார். நானும் சேர்ந்து கோவில் முன்பகுதியைக் கூட்ட ஆரம்பித்தேன்.

அதை முடிக்கும் நேரம் பிள்ளையார் சன்னதியைக் கூட்டி சுத்தம் செய்துவிட்டு, அதைக் கழுவிவிடக் குடத்துடன் கிளம்பிய இன்னொரு புது மனிதரை நோக்கி அப்பா என்னை ஏவினார்.

“போய் பெரியப்பாவுக்கு உதவி செய்..” இதை நான் பார்த்துக்கொள்கின்றேன் என்றார்.

நான் போய் அவரிடம் நின்றேன், குடத்துக்கு கை நீட்டினேன். அவர் என்னை உற்றுப் பார்த்தார்.

“கொடுங்க அங்கிள், நான் போய் எடுத்து வருகின்றேன்,” என்றேன்.

“அங்கிள் இல்லடா, பெரியப்பா,”  என்றார்.

“சரி கொடுங்க பெரியப்பா,”  என்றேன்.

அவர் வெளியில் இருந்த பம்பைக் காட்டினார். அந்தக் காலத்து பம்ப். தண்ணீரை அடித்து நிரப்ப வேண்டியது. அதில் போய் எடுக்கச் சொன்னார். கிட்டத்தட்ட இருபது யார்ட் தூரம். முதல் இரு குடங்களுக்குப் பின்பே மூச்சு முட்டியது. நான் அரை மராத்தான் ஓடும் அளவுக்குத் தயாரிப்புடையவன். ஏன்? படிகளா? பம்பினை அடிப்பதா?

நான் தண்ணீரை ஊற்ற, பெரியப்பா கழுவினார்.

கழுவி பளிச்சென ஆன பொழுது,  “நான் யாரென உன் அப்பா சொன்னாரா?” எனப் பெரியப்பா கேட்டார்.

“இல்லை,” என்றேன்.

செய்யும் வேலையை நிறுத்திவிட்டு அப்பாவை முறைத்தார். அப்பா அதைப் பார்க்கவே இல்லை. அவர் வேலையில் மூழ்கி இருந்தார்.

“அவனுக்குக் கோவிலுக்கு வந்துவிட்டால் எதுவுமே தெரியாது,” பெரியப்பா பெருமூச்சுடன் சொன்னார்.

“உன் அப்பா பூசாரி ஆகி இருக்கணும், அவன் அமெரிக்கா போய்விட்டான். அடுத்து நான் பூசாரி ஆகி இருக்கணும். நான் வாத்தியார் ஆகிவிட்டேன்“ எனச் சொல்லி வேலையை நிறுத்தினார். சன்னதிக்குப் பக்கம் இருந்த பெட்டியைத் திறந்து அதிலிருந்து பூஜை தட்டு, பிள்ளையாருக்கு அணிவிக்கும் துணியை எடுத்தார்.

“என்னைக்காவது வரம் கிடைக்கையில் வந்து என் கையால செய்யறேன், முன்ன மாதிரி முடியறது இல்லை,” எனச் சொல்லிக்கொண்டே பிள்ளையாருக்கு மளமளவென துணி அணிவித்து முடித்திருந்தார்.

நான் சன்னதிக்கு வெளியே நின்றிருந்தேன்.

“சின்னவன் இருக்கான் பாரு,” சித்தப்பாவினைக் காட்டினார். நான் திரும்பிப் பார்த்தேன். சித்தப்பா ஐயனார் சன்னதியில் இருந்தார்.

“அவன்தான் இப்ப பூசாரியா இருக்கான்,”  எனச் சொன்னார்.

“அவர் எப்படி?,”  கேட்டேன். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது.

“அவனுக்கு உள்ளூரில் பாத்திரக் கடை. தினமும் ஒரு வேளை மணியடிச்சு பூஜை வைப்பான்.  நம்ம சொந்தத்தில் யார் பூசை வைக்கணும் எனச் சொன்னால் அவனால் வந்து செஞ்சு கொடுக்க முடியும்,”  பெரியப்பா சொன்னார்.

“ம்… சித்தப்பா பையன் மகேந்திரன் என்ஜியரிங் படிக்கறான்,”  என்றேன்.

“அதற்குப் பிறகு குடும்பத்தில் ஆள் இல்லையென்றால், நம்ம உலகநாயகி அம்மன் கோவிலில் தினமும் ஒரு வேளை விளக்கேற்றி பூஜை செய்யும் ஐயரையே இந்தக் கோவிலையும் பார்க்கச் சொல்ல வேண்டும். ஏற்கனவே இந்தப் பகுதியில் நான்கைந்து கோவில்களை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். கோவிலில் தினமும் மணி அடித்து, விளக்கேற்ற வேண்டும். பார்ப்போம்…” எனச் சிரித்தபடி சொன்னார்.

அதைப் புரிந்துகொள்ள நான் முயற்சி செய்தேன். “யாருக்குத் தினமும் பூஜை தேவைப்படுகிறது? ஏன் நிறுத்தக் கூடாது? ஏன் தொடர வேண்டும்?” என்ற கேள்விகள் என் மனதில் எழுந்தன. பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  “ஏன்” என முணுமுணுத்தேன். சொல் ததும்பி புறத்தே நீண்டது.

பெரியப்பா பக்கத்தில் இருந்த திருநீறு டப்பாவிலிருந்து கொஞ்சம் எடுத்து நெற்றியில் பூசிவிட்டார். முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

“போய் அப்பாவுக்கு உதவி செய்; நான் கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். சின்ன சின்ன வேலைதான். நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்றார்.

விநாயகர் சன்னதியிலிருந்து இறங்கியபொழுது சித்தப்பா அழைத்தார். இன்னமும் மூன்று குடம் தண்ணீர் வேண்டும் என்றார்.

இரண்டு  குடங்களை எடுத்து வந்த பின்னர், மூன்றாவது பத்துப் படிகளை ஏறித் தூக்கிச் செல்ல முடியவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு மேலே கொண்டு வந்து சேர்க்க முயன்றேன். சித்தப்பா ஓடி வந்தார். அவரும் ஒரு கை கொடுத்தார்.

“அடுத்த முறை உனக்காக, குழாயைத் திறந்தால் தண்ணீர் வரும் வசதி செய்வோம்,” எனச் சித்தப்பா சொன்னார்.

மேலே கொண்டு வந்து சேர்த்தோம். சித்தப்பா பொங்கல் வைக்கும் இடத்தினைச் சுத்தம் செய்துவிட்டு, அங்கிருக்கும் செங்கற்களை இரண்டிரண்டாக மூன்றாகப் பிரித்து அடுக்கினார். அதில் கொஞ்சம் ஈரத்தில் நனைத்த விபூதியையும் சந்தனத்தினையும் பூசச் சொன்னார். அதில் பொங்கல் பானையை எடுத்து வைத்து, செங்கற்களுக்குள் சில சுள்ளிகளையும் தேங்காய் நாரையும் போட்டு ஒரு சூடத்தினைக் கொளுத்தி அதை ஆயிரம் வல்லி பக்கம் நீட்டி ஏதோ உதட்டில் முனகினார். பின் சூடத்தினை  அதில் போட்டு அடுப்பினை மூட்டினார். பட்டெனப் பற்றி எறிந்தது. பக்கத்தில் இருந்த விறகிகை உள்ளே வைத்தார். நீரும் பாலும் என்னை ஊற்றச் சொன்னார். அது கொதிக்க ஆரம்பித்தது. விறகில் தீயின் வெம்மை படர்ந்து அதைச் சூழ்ந்தது. கலந்த நீரும் பாலும் தீ வெம்மையை ஏற்றுக்கொண்டு  கொதிக்க ஆரம்பித்தது.

நான் திரும்பி விநாயகர் சன்னதியைப் பார்த்தேன். பெரியப்பா அதன் வெளியில் உட்கார்ந்து இருந்தார்.

“என்னடா பார்க்கிற,” என்றார். கொதி வந்த பானையில் ஊற வைத்த அரிசியைப் போட்டார். போட்டுவிட்டு கண்ணை மூடி பிள்ளையார் சன்னதியை, ஐயனார் சன்னதியைப் பார்த்து முனகினார்.

“எங்க ஊரில் பிள்ளையார் கோவில் உண்டு சித்தப்பா,”  என்றேன்.

“பிள்ளையார் ஒரு பிடி மண்ணை பிடிச்சுக் கூப்பிட்டால்கூட அங்கு வந்து விடுவார். அதுதான் அமெரிக்காவும் வந்திட்டார்“  என்றார். அருகில் இருந்த ஒரு சிறு பாறையில் சாய்ந்து உட்கார்ந்தார்.

“கோவில் பேரு ஆயிரம்வல்லி கோவில். அப்புறம் எதுக்கு பிள்ளையார் சன்னதி…” எனக் கேட்டேன்.

நிமிர்ந்து என்னைப் பார்த்தார். பதில் சொல்லவில்லை.

“பிள்ளையாருக்கென்ன அவர் எல்லா இடத்திலும் இருக்கிறாரே..“ சொல்லிவிட்டு, அங்கே அவர் எடுத்து வைத்திருந்த கட்டைப்பையிலிருந்து கரண்டிகளைத் தேடி எடுத்தார். அப்பா சாமிக்கு மாலை சாற்றிக்கொண்டிருந்தார். அது சரியாக இருக்கிறதா எனக் கண்ணால் கேட்க, சித்தப்பா கையை முன்னும் பின்னும் அசைத்து கட்டளை கொடுத்தார்.

“நாம கும்பாபிஷேகம் செய்யும்பொழுது நாம அவரைப் பார்க்கணும்ல, அதுக்கு கட்டினோம்”  எனச் சொல்லிவிட்டு என் முகத்தினைப் பார்த்தார்.

“அப்புறம் ஐயனாரு…”  என் அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

“இது ஐயனார், பூரணி, புஷ்கலை கோவில்தான். அதில ஆயிரம்வல்லி தங்கியிருந்தாரு”  எனச் சொல்லிவிட்டு கரண்டியால் பொங்கலைக் கிண்டினார்.

“ஐயனார், ஆயிரம்வல்லி எங்க ஊரில் இல்லை”  என்றேன்.

“அதுக்கு இங்க வா. உன்னை அவங்க கூப்பிடுவாங்க. அது உனக்குக் கேட்கும் பொழுது கிளம்பி வா,”  எனச் சிறிய முறுவலுடன் சொன்னார்.

“அப்பா?,”  எனச் சொல்லிவிட்டு அப்பாவைத் திரும்பிப் பார்த்தேன்.

“அதான் வந்திட்டார்ல..”

அப்பாவைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“போய் அங்கே வீரன் காலுக்குக் கீழே ஒரு பையில் முந்திரிப் பருப்பும் வெல்லமும் இருக்கும். எடுத்திட்டு வா..” சித்தப்பா ஒரு வேலை கொடுத்து அனுப்பினார்.

போய்  எடுத்து வந்தேன். அதை ஓரமாக வைக்கச் சொன்னார்.

மார்பில் காற்று கசகசப்பாகப் பட்டுச் சென்றது.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அருகே வருமாறு அழைத்தார். பைக்கின் சாவியை என்னிடம் நீட்டினார்.

“வண்டியை எடுத்துக்கொண்டு போ. சாலை முடிவில் ஒரு டீக்கடை இருக்கும். போய் டீ குடிச்சிட்டு வா,” என்றார்.

சாவியை வாங்கிக்கொண்டேன்.

“உங்கள் மூன்று பேருக்கும் வாங்கி வரவா?” என்று கேட்டேன்.

“நீ போய் குடிச்சிட்டு  பொறுமையாக வா…” எனச் சொல்லிவிட்டு, அப்பா பூக்களை அலங்காரத்துக்காக நறுக்க ஆரம்பித்தார்.

நான் பைக்கை நகர்த்தினேன். என்றைக்காவது தாத்தா வீட்டுக்குப் போனபோது ஓட்டியதுதான். உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது. மெல்ல மண் சாலையில் நகர்ந்தேன்.

மண்ணின் கரடு முரடுகள், சாலையின் ஒவ்வொரு இடத்திலும் அது பதற்றம் தரும் அனுபவமாகவே இருந்தது.

அப்பாவிடம், “நடந்து போயிருக்கிறேன்” எனச் சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் கௌரவம் அதற்கு இடமளிக்கவில்லை. ஓர் இடத்தில், ஏதோ ஒரு கல்லோ அல்லது வேறு ஒன்றிலோ சிக்கி கீழே விழுந்தேன். விழும் தருணம், என் கௌரவத்தின்மீது பெரிய கல்லை வைத்து நசுக்கும் முயற்சி போலவே இருந்தது.

விழுந்துவிட்டேன். ஒரு சில நிமிடங்கள் எழ முடியவில்லை.

அப்போது, யாரோ ஒரு வயதானவர் ஓடி வந்து, பைக்கை தூக்கி நகர்த்தினார்.

என்னை எழுப்பி, சட்டையில் மண் ஒட்டியிருந்ததைத் துடைத்தார்.

கிழிந்திருக்கிறதா எனவும் பார்த்தார்.

அருகில் இருந்த ஒரு பாறையைக் காட்டி, “அங்கே போய் உட்கார்…” என்றார். அவர் பைக்கை ஒருமுறை சுற்றிப் பார்த்தார். அவர் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை வந்தது.

பாறையில் அமர்ந்தேன். எனக்கு அருகில் மெதுவாக வந்து நின்றுகொண்டார். “சுப்பிரமணியன் மகனா?” எனக் கேட்டார்.

அப்பாவை ஊரில் அனைவரும் அறிந்திருப்பார்கள்.

ஆனால், என்னைச் சுட்டிக்காட்டி அடையாளம் காண்பது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தலை அசைத்தேன்.

“அடி எதுவும் இல்லை, பயப்படாதே. பைக்கின் கண்ணாடியில் சின்ன விரிசல்தான். அப்பாவைக் கூப்பிடவா..,” என்றார்.

மீண்டும், வேண்டாமெனத் தலை அசைத்தேன்.

“பூஜைக்காக உங்க அப்பாவுக்கு உதவிக்காக வந்தீங்களா?”

“ம்…” என்றேன்.

விழுந்ததில், சிறிய தலைச்சுற்றல் போல இருந்தது.

அவர் மெதுவாக நடந்து சென்று, அங்கே மேய்ந்துகொண்டிருந்த மாடுகளுக்கு அப்பால் இருந்த மரத்தடியில் இருந்த கூடையிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்தார்.

“குடிங்க,” என்றார்.

வாங்கிக்கொண்டேன். ஒரு மடக்குக் குடித்தேன். கொஞ்சம் பரவாயில்லை என உணர்ந்தேன்.

“படிக்கிறீங்களா?”

“ஆமாம்…”

“என்ன படிக்கிறீங்க?”

“பன்னிரண்டாம் வகுப்பு.”

“நல்லா படிங்க. உங்க அம்மா, தங்கச்சி எல்லாம் நல்லாயிருக்காங்களா?”

“ம்…” என்றேன்.

கொஞ்சம் இடைவெளிவிட்டுச் சொன்னேன்,

“எல்லாரையும் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கே… நீங்களும் இந்தக் கோவிலா?”

“ஆமாம்,” என்றார்.

கொஞ்ச நேரம் அமைதியாக அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.

விடிந்துகொண்டிருந்தது.

“நேற்றுதான் தாத்தா இந்தக் கோவில் கதையைச் சொன்னார்,” என்றேன். பெரியவரிடம் ஏன் அந்தப் பேச்சை ஆரம்பித்தேன் எனத் தெரியவில்லை. காலில் வலி இருந்தது. நடக்கத் தயக்கம். பைக்கில் போகவும் விருப்பமில்லை. திரும்ப விழுந்துவிட்டால் என்ன ஆகும்?

பெரியவர் “ம்…” என்றார். ஒன்றும் சொல்லவில்லை.

இன்னும் கொஞ்ச நேரத்தில் மாமா, அம்மா, அத்தை, முகிலன் எல்லாரும் வருவார்கள். வரும் வழியைப் பார்த்தேன். அவர்கள் நினைப்பே பசியைக் கிண்டியது.

“வரும்போது சாப்பாடு ஏதாவது வாங்கிக்கொண்டு வா.” என அம்மாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

அம்மா கிளம்பியிருப்பார். ஏதாவது கொண்டு வருவார்.

“பசியா?” எனப் பெரியவர் கேட்டார்.

என் முகத்தில் உணர்வுகள் பளிச்சென தெரிந்ததைக் கண்டேன். வெட்கமாக இருந்தது.

திரும்ப நடந்து சென்று, அதே மாடுகளைத் தாண்டி, அதே கூடையிலிருந்த மேரி பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து வந்தார். பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினார். இரண்டு எடுப்பதா, ஒன்று எடுப்பதா என யோசித்து இரண்டு எடுத்துக்கொண்டேன். அவரும் ஒன்றை எடுத்துச் சாப்பிட்டார்.

“கோவில் கதை தாத்தா சொன்னார் என்றீர்களே… எனக்கும் தெரியும், நான் கோவிலுக்கு அருகில் இருக்கிறேன்..” எனச் சொல்லி கோவிலை நோக்கிக் கை காட்டினார்.

“ம். ஆயிரம்வல்லி” என்றேன்.

“அதேதான், நானும் சொல்லட்டுமா?” என்றார்.

“எனக்குத் தமிழில் நிறைய வார்த்தைகள் தெரியாது…” என்றேன்.

“உங்களுக்குத் தேவையான அளவுக்குச் சொல்கிறேன்,” என்றார்.

அவர் முகத்தைப் பார்த்தேன். “நான் கேட்கத் தயார்” என்ற நிலைக்கு வந்துவிட்டதை அவர் கண்டுகொண்டார். என்னருகில் அந்தப் பாறையில் உட்கார்ந்துகொண்டார்

“உங்களுக்கு என்ன தெரியும்?” எனக் கேட்டார்.

“நாங்கள் பூர்வீகம் சிதம்பரம். அங்கிருந்து வந்தோம் எனத் தாத்தா சொன்னார்,” என்றேன்.

“சரிதான். பாளையத்துக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், சிதம்பரத்திலிருந்து ராஜாம் பாளையத்துக்கும் பூனாம் பாளையத்துக்கும் நடுவில் உள்ள நிலத்தில் உழைத்து வாழ ஆட்களை அழைத்துவந்து குடிவைத்தார்கள்.  உங்கள் ஆட்கள் அப்படித்தான் இந்த மண்ணுக்கு வந்தார்கள்.”

“அப்போ நிலம் இருந்தது, ஆளில்லை. இப்போ ஆள் இருக்கு, நிலமில்லை,” என்றேன்.

அவருடைய முகத்தில் மென்மையான ஒரு முறுவல் தோன்றியது.

“தாத்தா சொன்னார்,” என்றேன்.

“வந்த இடத்தில் வெள்ளாமை செய்ய முடியவில்லை. நீர் இல்லை, குளம் வெட்ட ஆசை, காசில்லை. அந்தக் காலத்தில் பாளையக்காரர்களிடம் இருந்த பணம், சண்டைகள், தாயாதி பிரச்சனைகளில் செலவாகிவிட்டது. அப்போது, மராட்டியச் சேனையுடன் போய் சண்டை நடக்கும் இடங்களில் சமைத்துப் போட்டுச் சம்பாதித்து, அதைப் பயன்படுத்தி வரகு, தினை வியாபாரம் செய்த ஒரு வியாபாரி இருந்தார். அவர்தான் ‘ஆயிரம் வல்லி’. தன் ஊருக்குப் புதிதாக வந்தவர்களைக் கைவிடக் கூடாது என்ற எண்ணத்தில், குளம் வெட்டக் கைக்காசு போட்டார்”

ஆர்வமுடன், “அப்புறம்?” என்றேன்.

“குளம் தோண்டத் தோண்ட, காசு குறைந்தது. வியாபாரம் மெதுவாகச் சீரழிந்தது. கடைசியில், குளத்தினைத் தோண்டும் ஆட்களுக்குக் கூலிகூடத் தர முடியாத நிலை. அதனால், ஆயிரம்வல்லியும் அவன் மனைவியும் சேர்ந்து, தாமாகவே தோண்ட ஆரம்பித்தார்கள். ஊரே அவர்களைக் கைவிட்டுவிட்டது.”

கதையை நிறுத்திவிட்டு, தள்ளி மேய்ந்துகொண்டிருந்த மாடுகளைப் பார்த்தார். ஒரு மடக்கு தண்ணீர் குடித்தார்.

“இருந்ததையெல்லாம் விற்று அவன் செலவு செய்தான். கடைசியில், குளம் தோண்டுவதற்குள் அவன் இறந்துபோனான். அந்தப் பாறைக்குக் கீழேதான், கடைசிக்காலத்தில் இருந்தார்கள். எல்லாச் சொத்தும் வீடும் போய்விட்டன.”

எனக்காக இடைவேளை விட்டு, நிதானமாக, மென்மையான ஒலியில் சொல்லிக்கொண்டிருந்தார்.

“அவன் மனைவி தாலியை அறுத்து, அதை விற்றுப் பணம் பண்ணி குளத்தினை முடித்தாள். அதற்குப் பிறகு, பெரிய மழை வந்தது. குளம் நிரம்பியது. அவளும் விரைவில் சாகக் கிடந்தாள். ஊரே வந்து அவளது வாசலில் மன்னிப்பு கேட்டது. அதன்பின், சுற்றியுள்ள மக்களெல்லாம் வெள்ளாமை செய்து வாழத் தொடங்கினார்கள். அத்தனை குடும்பங்களுக்கும் வழி கிடைத்தது. ஆடு, மாடு, கோழி வளர்த்தார்கள். அந்த ஆயிரம்வல்லி, அந்தக் குடும்பங்களின் குலசாமி ஆனார்.”

அவர் சொல்லி முடித்தபின்னும், கதையைக் கொஞ்ச தூரம் போய் பிடித்துக்கொண்டிருந்தேன். அவர் எனக்கான அவகாசம் கொடுத்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“செல்லி அம்மன் கோவில் கிழக்கே இருக்கிறது. அது அவன் மனைவி. அவளால்தான் குடும்பங்களுக்கு வாழ்க்கை கிடைத்தது என அந்தக் குடிகள் நம்பின. அவள்தான் அவர்கள் குடும்பங்களுக்குக் காவல்…,”” எனச் சொல்லிவிட்டு வானத்தை நோக்கி வெறித்துப் பார்த்தார்.

விடியல் வானம் மேகமின்றி நெளிந்து விரிந்தது. அவரது கண்களில் கனிவு தெரிந்தது. எதைப் பார்த்துக்கொண்டிருந்தார் எனக் கண்டறிய முடியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதுவும் தெளிவாகக் காணவில்லை.

“உங்கள் பக்கம் மட்டும் இல்லை, இங்குள்ள பல குடும்பங்களுக்கும் ஆயிரம்வல்லிதான் குலச்சாமி” என்று சொல்லி மீண்டும் அமைதியானார்.

ஒரு மாடு அவர் அருகில் வந்தது. இவன் யார் என்பது போல் என்னைப் பார்த்தது. மெல்ல அவர் அருகே சென்றது. அவர் காலில் சற்று முட்டியது. அவர் அதை மெதுவாகத் தலை தடவி அனுப்பி வைத்தார்.

“அப்படியா? ஆனால், தாத்தா வேறொரு கதை சொன்னார். ஊரிலேயே அழகான பெண்ணைத் தூக்கிக்கொண்டு கல்யாணம் செய்துகொண்டாராம். ஊரே வந்து அடித்து, பின் அவர் மன்னிப்பு கேட்டாராம்.”

அவர் சிரித்தார். “அந்த ஆயிரம்வல்லி நான் சொன்னவர் இல்லை. நீ சொல்லும் ஆயிரம்வல்லி அழகான பெண் என்றாயே, அவள்தான்..” எனச் சிரித்தார்.

“பெண்ணா?, தாத்தா ஆண் என்றாரே!” எனக்கு ஆச்சரியம் வந்தது.

“உங்கள் ஆட்களில் சிலர் அப்படிச் சொல்வார்கள்..” அவர் முகத்தில் இன்னமும் சிரிப்பு இருந்தது.

“அப்படியா.. அது என்ன கதை?..” எனக்கு ஆர்வம் வந்தது.

“ம்.. அவள் ஆயிரம்வல்லி சாமியைக் கும்பிடும் குடியில் பிறந்தவள். தவமாய்த் தவமிருந்து பிறந்ததால் சாமி பெயரை அவளுக்கு வைத்தார்கள். ஊரிலேயே பேரழகியாம். பாளைய ராஜாக்களெல்லாம் ஆசைப்படும் அழகாம். அவள் வையாபுரி என்னும் பலசரக்கு வியாபாரியை விரும்பினாள். அவனுக்கும் ஆசை. ஊரில் நடப்பதுதான்..”

“அப்புறம் என்ன ஆச்சு?”

“ஆனால் அவள் அழகைப் பார்த்து சம்பந்தம் செய்ய ராஜாவின் வீடெல்லாம் ஆசைப்பட்டது. அவள் தந்தைக்கு அவர்களைப் பகைத்துக்கொள்ளப் பயம். வையாபுரிக்கு இல்லை எனச் சொல்லிவிட்டார். வையாபுரி தன் ஆட்களுடன் போய் தூக்கி வந்துவிட்டான். அவனைத் துரத்தி ஆட்கள் வந்தார்கள். வரும் வழியில் குதிரையிலிருந்து விழுந்துவிட்டான். ஊரே அவனுக்காக ராஜாவின் சொந்தக்காரர்களிடம் பேசப் போனது. அவர்களும் ஊர்ப் பகைக்கு அஞ்சி திரும்பப் போய்விட்டார்கள். வையாபுரி குதிரையிலிருந்து விழுந்த இரண்டாம் நாள் இறந்தான். ஆயிரம்வல்லி அவனுக்கு மனைவியாகவே வாழ்நாள் எல்லாம் வாழ்ந்தாள். அதிகம் இல்லை. ஊரில் நோய் ஒன்று பரவிய பொழுது அவளும் இறந்தாள். அவள் தன் சொத்தெல்லாம் குளத்துக்கு எழுதி வைத்துவிட்டு அதன் புண்ணியமெல்லாம் அந்த வையாபுரிக்கு போகட்டும், தனக்கும் எதுவும் சேரக் கூடாது, தனக்கு அவன் மனைவி என்ற புண்ணியம் போதும் எனச் சொல்லிவிட்டாள். அந்தக் காசுதான் நோயிலும், பஞ்சத்திலும் குளத்தினைக் காப்பாற்றியது.”

“நீங்கள் சொன்னது நிஜமா? என் தாத்தா சொன்னது நிஜமா?”

“ஹ்ம்..” என முனகினார். பதில் சொல்லவில்லை. அவரது மாடுகளில் கொஞ்சம் விலகித் தனித்து நடந்தன. “ஹெ ஹெ…” எனக் குரல் எழுப்பி குச்சியால் பாறையைத் தட்டினார். அது மெல்ல நகர்ந்து மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டது.

நான் அவர் பதில் சொல்வாரென அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் கவனம் என்னிடம் இருந்ததுபோல் தெரியவில்லை. சில நிமிடம் பொறுமையாக இருந்தேன்.

மௌனத்தின் முடிவில், எனக்குள் வியப்பொன்று எழுந்தது. “எல்லாக் கதையும் கலந்துவிட்டது,” எனக் கூறினேன்.

“நல்லதெல்லாம் கலந்திடும். அப்போதுதானே நாடு வாழும். நல்லது தெய்வமாக வேண்டும் என்று நம்பும் குடி, அதை எப்படியாவது கட்டி எழுப்பத்தான் செய்யும்; வேறு வழியில்லை. அதோ, அந்த மரத்தின் நிழலில், உச்சி வெயிலில் பூச்சி, பறவையெல்லாம் அண்டுகின்றன. அதுபோல், தெய்வத்தோட நிழலில்தான் நமக்கு இடம்,” என அவர் கூறினார்.

“ம்… ஆனால், எனக்கு இன்னொரு விஷயம் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்றேன்.

என்ன எனக் கேட்பதுபோல் என்னைப் பார்த்தார். கேள்வியைத் தேடி எடுத்தேன்.

“நல்லது சாமியாகலாம். அதை மனித உருவத்திலே ஏன் கும்பிட வேண்டும்?”

“நீங்கள் விழுந்தால், தூக்குவதற்கு நான்தானே வந்தேன். நான் யார்? மனிதன்தானே? இங்கே இருக்கும் குடியெல்லாம் நல்லது அப்படியே இருக்கிறது என்று தெரியணும் அல்லவா? நாம் ஒருவரை ஒருவர் தினமும் நல்லதுக்காகவும் கெட்டதுக்காகவும் தேடுகிறோம், நம்புகிறோம்… நமக்குள்ளும் ஒரு தெய்வம் இருக்கலாம் என்று தெரியணும்.”

கொஞ்சநேரம் அவர் சொற்களிலேயே பற்றிக்கொண்டேன். அதிகாலையில் எழுந்தது, கோவில் வேலை, பைக்கிலிருந்து கீழே விழுந்தது, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசம். இவை அனைத்தும் ஒன்றாக என்னை மேய்ந்தன.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் என்னையும் அவரையும் அவருடைய மாடுகளையும் தவிர வேறு எந்த உயிரும் இல்லை. இன்னமும் ஏதோ ஒன்று… ஏதோ ஒன்று…

மாடுகள் தூரத்திலிருந்து ஓசை எழுப்பின. பின்னர், அவை அவரை நோக்கி வரத் தொடங்கின.

“வாழ்க்கையை வாழ, அச்சாணியாக இருப்பதுதானே தெய்வம்…” எனச் சொல்லி நிறுத்தினார்.

‘அச்சாணி’ என்னும் வார்த்தையை என்னுள் சித்திரமாக்க முயன்றேன். அதைத் தாத்தா வீட்டில் சிறுவயதில் மாட்டுவண்டியில் பார்த்திருக்கிறேன். அந்த வண்டியின் சக்கரம் சுழல்வது என் கண்களுக்குத் தெரிந்தது.

“அதைப் பார்க்க முடியுமா?” எனக்குள் ஓடிய கேள்வி என்னை அறியாமல் சப்தமாகச் சொன்னேன்.

அவர் “ம்…” எனச் சொன்னார். அவர் ஏதோ சொல்லவிருக்கிறார் என எனக்குத் தெரிந்தது.

அவர் கையில் இருந்த கம்பு தரையில் ஆழமாக ஊன்றப்பட்டது. அதன்மீது எடையைச் செலுத்தினார்.

அவர் இடுப்பில் இருந்த வேட்டியிலிருந்து தீப்பெட்டி ஒன்று கீழே நழுவி விழுந்தது; அதை நான் பார்த்தேன், பழைய தீப்பெட்டி.

அவர் குனிந்து, அதை எடுத்துக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து, தன் வேட்டிக்குள் வைத்து, தன்னைத்தானே சீர்செய்தார்.

“அச்சாணி என்று ஒன்று இருக்கின்றது எனத் தெரிய, வெளிச்சம் தேவையல்லவா?… ம்…” என என்னைப் பார்த்துக் கேட்டார்.

ஆமோதித்து தலை அசைத்தேன்.

“நம்முடைய உயிரிலும் உடம்பிலும், நல்லதும், போட்டியும், கெட்டதும் மூன்றும் இருக்கின்றனதானே…” என்றார்.

என்னிடம் கேட்கிறாரா அல்லது சொல்லுகிறார் எனத் தெரியவில்லை. என் தோள்கள் அறியாமலே ஆமோதிப்பது போல் உயர்ந்தன.

“அவை மூன்றும் நெருப்பைப் போல,” என அவர் தாழ்ந்த குரலில் கூறினார். அவர் அமைதியானார்.

என் முழங்கால்களில் கைகளை மடித்து, அவரை நோக்கி உடலை நிலைபெறச் செய்தேன்.

அவர் தன் தாடையைத் தடவிக்கொண்டார். குரலைச் செருமிக்கொண்டார். “நம் உள்ளே இருக்கும் நல்லது நெருப்பாக எரியும்போது, நமக்கும், நம்முடன் இருப்போருக்கும் வெளிச்சமாகும். வாழ்க்கையே போட்டியாகிவிட்டால், அது நம்மை எரிக்கும் நெருப்பாகி, சாம்பல்தான் மிஞ்சும். கெட்டதே மட்டும் நெருப்பாக எழுந்தால், அதன் புகையில் கண்ணுக்குத் தெரிவதில்லை; மூச்சும் தடுமாறிவிடும்,” சொல்லி முடிக்கையில் ஏதோ ஒரு மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலித்தது.

நான் அருகில் வந்து நின்ற அந்த மாட்டைத் தொட்டேன். அது தொட்ட இடத்தில் மட்டும் சிலிர்த்தது.

“சில நேரங்களில் ஏதோ ஒன்று நம்மை எரிக்கும்; கண்ணை மறைக்கும். அதைப் பற்றி என்ன செய்ய முடியும்?”  அவர் சொன்னதையே கேள்வியாக்கினேன். கேள்வி வானமென என் முன் தெரிந்தது. அதை உற்று நோக்கி அமர்ந்திருந்தேன்.

அவர், தன் தோளில் கிடந்த துணியால் தன் முகத்தைத் துடைத்தார். எழுந்து தன் உடலை மெல்ல அசைத்து தன்னை சரி செய்துகொண்டார். என்னிடம் மீண்டும் பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினார். நான் இன்னொன்று எடுத்துக்கொண்டேன்.

“வெளியில் எரியும் நல்லதைக் கிள்ளி நம்மிடம் வைத்துக்கொள்ளப் பார்ப்போம்… அங்கே உங்கப்பா அதுதானே செய்கின்றார்..” எனச் சொல்லி கோவிலை நோக்கி கைகாட்டினார்.

நான் கோவிலின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அப்பா தூரத்தில் தெரிந்தார். பெரியவரைப் பார்த்து,  “நீங்களும் பூஜைக்கு வாங்க,” என்றேன்.

சரியெனச் சொல்வது போல அவரிடம் ஓர் அசைவைக் கண்டேன்.

அவர் கோவிலைப் பார்த்தார். பின்னர் அவர் கோவில், மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த இடம், அதன் பின்னால் கண்ணுக்குத் தெரிந்த பாறைகள் நிறைந்த பொட்டல் வெளி எல்லாவற்றையும் சுட்டிக்காட்டினார் “இதெல்லாமே ஆயிரம்வல்லி இடம்தான். நான் எங்கே போக முடியும்?”, எனக் கேட்டார்.

தன் மாடுகளுடன் நடக்க ஆரம்பித்தார். மரத்தினைக் கடந்தார். தனது கூடையை எடுத்துக்கொண்டார். கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். பார்வையிலிருந்து மறைந்தார். அந்தத் திசையைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவர் வார்த்தைகள்  என்னைச் சூழ்ந்து அமர்ந்தன.

அரை மணி நேரம் ஆகி இருக்கலாம். அந்நேரம் முகிலனுடன், அம்மா, அத்தையெல்லாம் காரில் வருவதை மையச்சாலையில் கண்டேன். என் கவனம் மாறியது. அம்மா தண்ணீரும், கட்டி வந்த இட்லியும் கொடுத்தாள். நடந்து பார்த்தேன், முழங்கால் வலித்தது. வேறு ஒன்றும் இல்லை. நலமா எனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பிய ஹென்னாவுக்கு ‘ஐ மிஸ் யூ’ இமோஜி ஒன்றை அனுப்பினேன்.

அத்தை, அம்மா, மாமா, நான், முகிலன் அனைவரும் கோவிலுக்குள் நுழைந்தோம். அப்பா, உறவினர்களுடன் சாமிக்கு முழு அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து முழு ஏற்பாட்டுடன் இருந்தார். அவர் குரலின் கலகலப்பு கோவில் வாசலில் காலை வைத்த எங்களைத் தொட்டது. வேலை செய்த களைப்பினைத் தாண்டி முழு வேகத்துடன் இருந்தார்.

மாமா அம்மாவிடம் அப்பாவைக் கவனிக்கச் சொன்னார்.

“குட்ஜாப் சொல்லணுமா?” கிண்டலாகச் சொல்லிவிட்டு அம்மா கோலம் போடக் கோலப் பொடியுடன் நகர்ந்தார்..

அப்பா என்னை அருகே அழைத்து, “ஏன்டா லேட்டு?” என்றார்.

“சும்மாதான்,” என்றேன். தட்டிக் கொடுத்தார்.

“பைக்கில் இருந்து விழுந்துவிட்டான்… தெம்பில்லை….” என அத்தை கிண்டலாகச் சொன்னார்.

பக்கத்தில் நின்ற மாமா, என் தோளை இறுக்கி அணைத்துக்கொண்டு, “அடுத்த முறை மருமகன் விழாமல் ஓட்டுவான்,  கண்ணு வைக்காதீங்க” என்றார். ஆமோதித்து நானும் அத்தை, மாமாவின் சிரிப்பில் கலந்துகொண்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து தாத்தா, பாட்டியுடனும் என் தங்கையுடனும் வந்தார். உயரமான படிகளில் சிரமத்துடன் ஏறுகையில் தடுமாறினார்.

பூஜை தொடங்கியது. கூப்பிய கரங்களுடன் சன்னதிக்கு, சன்னதி நகர்ந்தோம். கண்களில் கோரிக்கையோடு, குவிந்த கரங்களோடு முழுக் குடும்பமும் நின்றிருந்தது.

சித்தப்பா பொங்கலைப் படைத்து, தேங்காய் உடைத்து, சாம்பிராணி போட்டு, சூடம் காட்டினார். சன்னதியின் மேடையில் ஏறி சித்தப்பாவுக்கு உதவியாக நின்றார். அப்பாவின் கையில் கோவில் மணி முழங்கியது. கிண் கிண் எனச் சப்தம் கோவில் சன்னதிகளில், எங்கள் நெஞ்சங்களில் நகர்ந்தது.

அங்கிருந்த சாம்பிராணி, ஊதுபத்தியின் மணம் சுவாசத்தில் இனித்தது. படையலில் பொங்கல் தெய்வங்களால் ஏற்கப்பட்டு எங்களுக்காகக் காத்திருந்தது. விடிந்திருந்த திருச்சியின் மெல்லிய புழுக்கம் உடலில் பரவ, இது எனக்கும் ஊர் என உணர்ந்தேன்.

பாறையின் செதுக்கோவியமென ஆயிரம்வல்லி பூமாலை சூடியிருந்தார். சூடம் அதன் அடி முதல் முடி வரை நகர்ந்து, இட வலத்தில் சென்றது. சூடத்தின் ஒளியில் ஆயிரம்வல்லியின் முழுமையைக் கண்டேன்.

சித்தப்பா சூடத்தட்டினை அப்பாவிடம் நீட்டினார். அப்பா வாங்கிக்கொண்டு எங்களை நோக்கித் திரும்பினார். அப்பா கரத்திலிருந்த தட்டில் சூடத்தின் சிவப்பு, மஞ்சள் நெருப்பு நின்றாடி எங்களை அழைத்தது. நாங்கள் நகர்ந்தோம். கரங்கள் ஒவ்வொன்றாக அவ்வொளியைத் தொட்டு வணங்கின. என் முறை. நிமிர்ந்து பார்த்தேன். அசையும் ஜுவாலையின் முழு வெளிச்சத்தில், அப்பா நின்றுகொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button