
உயிரின் நிழல்
1
எனக்கு இன்று
மரணத்தின் அறிமுகம் கிடைத்தது
அது முகவரியற்ற கடிதம் போல
இன்று என்னை வந்தடைந்தது
அது இரவு வானவில்லைப் போல
காணக்கூடியதாக இல்லை
அது இத்தனை ஆண்டுகள்
பால்வீதியில் தொலைந்து போயிருந்தது
அது சற்றுமுன் இதழ் விரித்த
மலரை விட மென்மையானதாக இருந்தது
அது மேரியின் கற்பை விட
பரிசுத்தமானதாக இருந்தது
இதுநாள் வரை நெருங்க நெருங்க
விலகிக் கொண்டேயிருந்தது
அது கைவிடப்பட்ட மனிதனைப் போல
புலம்பிக் கொண்டிருந்தது
வாழ்க்கையின் இருவேறு முனைகளுக்கிடையில்
ஊசலாடிக் கொண்டிருந்தது
அர்த்தமில்லாத சொற்களின் அணிவகுப்பை
அது நிகழ்த்திக் கொண்டிருந்தது
எதிர்கொண்டேயாக வேண்டுமென்பதால்
அது புதிர் நிறைந்ததாக இருந்தது
இரவுகள் ஒவ்வொன்றும்
தன்னுடைய தீராத பக்கங்களில்
அதனைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தன
விடியலின் முதல் வெளிச்சம்
பூமியில் விழுந்தவுடன்
அது சிலிர்த்துக் கொண்டது
அந்தப் புதிருக்கு விடைகாண நீங்கள்
வாழ்வின் ஒவ்வொரு முடிச்சுக்களையும்
அவிழ்த்துக்கொண்டே வர வேண்டும்
இந்த இசை எங்கிருந்து எழுகிறது
என அப்போது நீங்கள் கேட்பீர்கள்
எனது தூண்டிலில் இருந்து
லாவகமாகத் தப்பிப்பது எப்படியென்று
அது அறிந்திருக்கிறது
உயிர்த்தெழுதல் சாத்தியமற்ற ஒன்றல்ல
நீ மரணத்திடம் சரணடையும்போது
ஒரு விதையாகிவிடுகிறாய்
தன்னை அழித்து
மண்ணைப் பிளப்பது
அபூர்வமாக அப்போது நிகழ்கிறது.
2
இந்த ஏமாற்றத்துடன்
நான் வீடுபோய்ச் சேர விரும்பவில்லை
தரையில் விழுந்த மீனைப் போல
எனது இதயம் துடித்துக் கொண்டிருந்தது
ஆளற்ற ஒரு தீவினில் நான் மட்டும்
தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன்
சிறு பறவையிலிருந்து எழுந்த ஒலி
என்னை வந்தடைய ஒரு யுகம் ஆனது
இந்த உவப்பான கண்ணீர் கலந்தவுடன்
பாற்கடல் கரிக்கத் தொடங்குகின்றது
ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு
முத்தங்கள் பரிமாறப்பட்டன
இரவுகளின் நிர்வாணம்
போதை தருவதாய் இருந்தது
பனித்திவலையின் ஒரு சொட்டு
என் உடலைத் துளைத்து
உள்ளே ஊடுருவியது
கடவுளின் இருப்புக்கு
நான் எப்படி உத்தரவாதம் தர முடியும்
எனது நம்பிக்கைகள் அனைத்தும்
பொய்யாகிப் போயின
இரு நிலவுக்கு மத்தியில் ஒரு
நட்சத்திரமாய் என்னை இருக்க விடு
யாராவது ஒருவர் பெற்றுக் கொள்ளுங்கள்
என்னிடமிருந்து அந்த மகத்தான ஒன்றினை
நான் இரண்டு முறை சாக விரும்புகிறேன்
ஒருமுறை காதலிக்கப்படும்போது
மற்றொருமுறை கவிதையெழுதும்போது
இந்த ரோஜாச் செடி என்னை
மன்னித்துக் கொள்ளட்டும்
எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி
மலரைக் கொய்ததற்காக
இந்த ஒருமுறை தப்பித்துவிடலாம்
அடுத்தமுறை பயணப்பட்டே ஆகவேண்டும்
சபிக்கக்கூடிய ஒன்றாகிவிட்டது இந்தப் பிரிவு
ஆகவே சந்திப்புகள் இனிக்கவே செய்கின்றன
அந்த இடிந்த சுவரில் எழுதப்பட்ட வாக்கியத்தை
நான் படிக்காமல் கடந்திருக்கலாம்
ஆகவே முற்றுப்புள்ளியுடன் முடிந்துவிடுவதில்லை
எல்லாக் கவிதைகளும்.
ஞானஸ்நானம்
1
உதிரும் இரு இலைகளுக்கு மத்தியில்
வானம் பார்த்து மண்ணில் இதழ் விரித்து
கிடந்தது ஒரு மலர்
தனிமை என்பது
மெல்லக் கொல்லும் விஷம்
தற்கொலைக்கான மற்றொரு உபாயம்
நான் கொடுத்த வாக்குறுதிகளை
அவ்வப்போது நினைத்துப் பார்க்கிறேன்
எந்த வாக்குறுதிகளை மீறவும்
நான் தயங்கியதே இல்லை
நான் எப்பொழுதுமே தவிர்க்க நினைப்பது
மனிதர்களற்ற பொழுதுகளை
ஓசைகளற்ற அமைதியினை
நான் என்றுமே வெற்றியை ருசித்ததில்லை
தோல்வியென்பது எதிர்பாரா ஒன்றல்ல எனக்கு
ஒரு மிகப்பெரிய கடலை
தனது அசைவுகளால் அசைத்துப் பார்க்கிறது
ஒரு சிறிய மீன்
பகலின் அவசரமும், ஆர்ப்பாட்டமும்
எனக்குப் பிடிப்பதில்லை
இரவு மெல்ல வருகிறது
நினைவுகளில் நீந்தவிட்டுவிட்டு
கடந்து சென்றுவிடுகிறது
எந்த நிர்ப்பந்தத்தையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை
சுதந்திர நாட்டில் அடிமைகளாக விலைபோக
என் ஆன்மா ஒருபோதும் விரும்பியதில்லை
எனக்கு தெரிந்துவிடுமோ
என்ற பயத்தில் தான்
சுவனத்தின் திறவுகோலை எங்கேயோ
ஒளித்து வைத்திருக்கிறான்
இறைவன்!
*
2
எனது நியாயங்கள்
தற்கொலை செய்து கொண்டுவிட்டன
எனது நிலைப்பாட்டுக்காக
நான் சாகவேண்டுமென்று
எனக்குத் தெரியும்
வாழ்க்கையின் மகத்துவத்தை
மரணம்தான் புரிய வைக்கிறது
நான் சந்திக்க விரும்பாதவர்களின் பட்டியல்
நீண்டுகொண்டே செல்கிறது
இந்த மழை மேகங்கள்
என் பாலை நிலத்தை ஏமாற்றி
நனைக்காமல் செல்கிறது
ஒருமுறை தான் பிறக்க முடியும்
ஆனால் ஓராயிரும் முறை
சாக முடியும்
நான் யார் என்பது
எனது அந்தரங்கத்தை முற்றிலுமாக அறிந்த
என் வீட்டு நிலைக்கண்ணாடிக்குத் தெரியும்
நீங்கள் என் கிளைகளில்
அமர்கின்றீர்கள்
மலர்களைப் பறிக்கின்றீர்கள்
கனிகளை சுவைக்கின்றீர்கள்
ஏனோ வேர்களை மட்டும்
மறந்துவிடுகின்றீர்கள்
எனது கிழக்கு
உதயத்தை மறந்து
கால்நூற்றாண்டு காலம் ஆகிறது
அடிமை உலகத்திலிருந்து
நான் கடவுளுக்கு எதிராக
கலகக்குரல் எழுப்புகிறேன்
பறிக்கப்பட்ட எனது தனியுரிமையை மீட்க
நான் இரண்டாவது முறை இறக்கவும்
தயாராக இருக்கிறேன்!
*
3
நான் இரண்டு முறை இறந்து
மூன்று முறை பிறந்தவன்
ஒரு நீண்ட பகலுக்குப் பின்
இரவின் சங்கீதம்
கேட்க ஆரம்பித்தது
ரயில் கடந்து சென்ற பிறகும்
தடதட சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது
எப்படியேனும் ஒரு துளி
விழுந்துவிடுகிறது விதையின் மீது
வேதமனைத்தும் உண்மையினை
பூடகமாக பேசுகிறது
மரணத்தை தண்டணையாகக் கருதுபவன்
தோற்றுவிடுகிறான்
மரணத்தை பரிசாகக் கருதுபவன்
வென்றுவிடுகிறான்
என்னதான் கல்நெஞ்சம்
படைத்தவனாயினும்
வழியனுப்பி விடைகொடுத்து
கன்னத்தில் இதழ்பதித்து
உச்சிமுகரும் போது உடைந்துவிடுகிறேன்
சபிக்கப்பட்டவனின் நிழல்
எப்போதும் அடைக்கலம் தேடி
அலைந்து கொண்டிருக்கும்
அன்பிற்குரியவர்களின் மரணம்
என்னுள் ஒருபாதியை
இழக்கச் செய்துவிடுகிறது
அடிக்கடி துக்கமடைவதும்
அடிக்கடி அழுவதும்
அடிக்கடி பொய் கூறுவதும்
அடிக்கடி பாவமன்னிப்பு கோருவதும்
ஒரு நாளின் பாதியை
நரகமாக்கிவிடுகிறது!
*



