இணைய இதழ் 124கவிதைகள்

கோபி சேகுவேரா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

வாம் – மனிதர்கள்

மட்ட மதியானத்தில்
ஒரு மரத்தடியில்
நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலுக்கு
உங்கள் பெருவாழ்வின்
இரண்டு மணி நேரங்களையாவது
கொடுத்துவிடுங்கள்.
சில நேரங்களில் நம்மைப் பற்றியோ,
சில நேரங்களில் வருத்தங்கள் பற்றியோ,
சில நேரங்களில் ப்ரியங்களைப் பற்றியோ,
சில நேரங்களில் தவறிய முடிவுகள் பற்றியோ,
சில நேரங்களில் அரசியல் பற்றியோ,
இப்படி எதையாவது பேச, கேட்க
நம்மிடம் இருக்கும் ஒரே ஆறுதல்
வாம்-வாக வேண்டாம்
குளிர்ச்சியாக இரண்டு போதும் என்பதே.

*
புதிய கண்டிப்புகள்

நள்ளிரவில் தாமதமாக
வீடு வந்து சேர்ந்த என்னை
யாருக்கும் தெரியாமல்
அத்துமீறி
வீடு நுழைந்துவிட்டதாக
அடுத்தநாள் காலையில்
தூக்கத்தில் கட்டியணைத்து
கண்டித்துக் கொண்டிருக்கிறான் மகன்
வாழ்வின் பூரணங்கள்
என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன.

*

ரீல்ஸ் ஜிலேபி

ரீல்ஸ்களால்
கையசைத்துக் கொண்டிருக்கிறார்
யாருமற்ற அந்த இல்லாத கடவுள்.

மனிதனுக்கு பீடித்துக்கொள்ளும்
மனச்சோர்வை விரட்டியடிக்க
ஜிலேபிகளை படைத்ததைப் போல
பீறிட்டெழுந்து ரீல்ஸ்யை
தன் தொப்பையை
தடவிக்கொண்டே கண்டெடுத்தார்.

அது,
மனிதனிடம் வசமிருக்கும் மனச்சோர்வை
தனது உருட்டுக்கட்டையால்
தலையில் அடித்து படுக்கப்போட்டது.

அது,
ஆள்காட்டி விரலை மட்டுமே
பிடித்து கூட்டிக்கொண்டு
களிபீடித்தாடும் வையகம் முழுக்க முழக்கமிட்டது.

அது,
காதலால் நொறுக்கப்பட்ட ஒருவனை
ஒரு முட்டுச் சந்தில் மடியில் கிடத்தி
விடிய விடிய தலைகோதி விட்டது.

அது,
மனதாடும் மதுவிடுதியோ,
அல்லது மூச்சிரைக்க கிடக்கும்
சிகிச்சையின் தீவிரப் பிரிவோ,
தடுப்பாரற்று உருண்டு வந்து
ஜிலேபிகளை ஊட்டிவிட்டது.

அது,
வெகுநாட்களாக ரீல்ஸ் போட மறந்த
தோழி ஒருத்தியைப் பற்றி மனச்சோர்வுற்று
குறுக்கும் நெடுக்குமாக ஓடத் துவங்கிவிட்டது.

எல்லாம் வல்ல ஒரு நன்னாளில்
ரீல்ஸ்களால் சுற்றி வளைக்கப்பட்ட மனிதர்களிடம்
‘எல்லாம் பரிசோதித்துப் பார்த்தாயிற்று,
கண்ணீரைத்ஹ் துடைத்தெறியுங்கள்’
என்றார் அந்த இல்லாதவர்.
தப்பிக்க ஏதேனும் வழியுண்டா?

*

நினைவுகளின் நாளை

என்ன செய்வதென்று
அறியாது,
நினைவுகளின் வெளிச்சத்தை
நின்றெரியும் சுடராக
ஒரு பாடலால்
குறுக்கும் நெடுக்குமாய் பறக்கவிடலாம்.

இடைவிடாது சூழ்ந்திருக்கும்
தனிமையில் கொஞ்சம்
திட்டமிட்டுப் பகிர்ந்தளிக்கலாம்.

யாரும் கூறாதொழிந்த
ஒரு வரியைப் போல்
அசந்து கேட்பாரற்று கிடக்கலாம்.

நுண்ணுணர்வற்று
வெளியே ஓடுகிற மதுரம்
இயல்பாகவே
அலுப்பூட்டுகிற நறுமணம் பெயர்க்கலாம்.

நெகிழும் அன்பின்
நிறைந்த நிலைக்கண்ணாடியாய்
யாருமற்ற
இந்த அறையெங்கும் பதிக்கப்படலாம்.

அந்தியில் அலைவுறும்
ஆயிரம் பறவைகளாக
தலைகீழாகப் புரண்டு
வானத்தோடு மினுங்கும்
உன் நினைவின் ஒவ்வொன்றும்
நாளைக்கு தேவைப்படும்
இன்றின் துணுக்குகள்.

*

ஸ்விகி தோழர்

‘இன்னும் பத்து நிமிடங்களில்
வந்து சோர்ந்துவிடுவார்’ என்றது
அந்த கண்காணிப்பு செயலி

இருபத்தி நாண்காவது முறை
மீண்டும் கடிகாரம் பார்த்தபோது
ஓயாது நெளிந்து கொண்டிருக்கும்
பசியின் கால்களை
பிடித்துக் கட்டிப்போடத் தெரியாமல்
அலுமினிய ஃபாயிலால்
சுற்றி வளைக்கப்பட்ட உணவோடு
துரத்திக் கொண்டிருக்கிறது

அமர்ந்துகொள்ளும் வெற்றிடத்தில்
சமாதானத்திற்கு வழிவிட்டபடி
கைவைத்த கண்ணத்தோடு
நேரம் தணிந்து கொண்டேயிருந்தது

சீறிக்கொண்டு இதோ வந்துவிட்டார்
நான்முனைச் சந்திப்பில்‌
சமிக்ஞையென ஸ்விகி தோழர்

சட்டமிட்டு மாட்டிய
அலுவலக சுவர் புத்தரும்
வாசலருகே வந்து நிற்கத்துவங்கினார்
கையில் கூகுள் பே-வோடு

இப்போது ஏதாவது
செய்துதான் ஆகவேண்டும்.
‘பையை உடனே கொடுங்கள்,
ஸ்விகி தோழரே’ என்றபடி.

*

சந்தை விலை

வறண்டுவிட்ட மரங்களில்
நினைவூட்ட என்ன இருக்கிறது
பூத்துக் கிடந்த கிளைகளையும் வெட்டிவிட்ட பிறகு
நியாயம் சொல்ல என்ன இருக்கிறது

உனக்கு நான்
என்னவாக இருந்தேன்
என்பதைத் தவிர
எல்லாமே உனக்கு
கை நழுவி வசீகரித்துவிட்டது

துர்க்கனவுகள் திடுக்கிட்டு
அடிக்கடி கட்டிக்கொள்ளும் என்னை
மிருதுவான உன் பிரமை
அரவமற்று தேற்றிக்கொண்டு இருக்கையில்
புறக்கணிப்பு சந்தையில்
மன அழுத்தத்தின் விலையை
‘ஒரு ஸ்க்ரீன் ஷாட்’ சாட்சிப்படுத்தலாம்.

*

gopi.poovaivasal@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button