
ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவாக்கி, காடுகள்
அழிவதைத் தடுக்க ஒரு முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக ஒரு காடு இயற்கையாக வளர 200 முதல் 300 ஆண்டுகள் ஆகும். ஆனால், மியாவாக்கி முறையைப் பயன்படுத்தினால், வெறும் 20 முதல் 30 ஆண்டுகளில் ஒரு முதிர்ந்த காட்டை உருவாக்கிட முடியும். சாதாரணக் காட்டைவிட 10 மடங்கு வேகமானது. 30 மடங்கு அதிக அடர்த்தியானது. 100 மடங்கு அதிகப் பல்லுயிர் பெருக்கம் கொண்டது. சென்னையின் ஐடி ஹப் என்று அழைக்கப்படும் சிறுசேரி பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தரிசு நிலத்தில் இந்த அறிவியல் முறை பரிசோதனை செய்யப்பட்டது.
முதலில் அந்த நிலத்தின் மண் தரம் ஆராயப்பட்டது. அந்த மண்ணிற்குச் சொந்தமான வேம்பு, புங்கன், அரச மரம் போன்ற 40க்கும் மேற்பட்ட ரகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மரங்கள், மிக நெருக்கமாக ஒரு சதுர மீட்டருக்கு மூன்று செடிகள் என்று நடப்பட்டன. சுற்றியுள்ள கான்கிரீட் கட்டிடங்களைவிட, இந்தக் காட்டுப் பகுதியில் வெப்பநிலை குறைவாக இருந்தது. சாதாரண மரங்களைவிட இவை அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிட்டன. அடர்த்தியான மரங்களின் வேர்கள் மழைநீரை அப்படியே பூமிக்குள்
கடத்தின, இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

நமது வீட்டுத் தோட்டத்தில்கூட, செடிகளைத் தனித்தனியாக வளர்ப்பதை விட, பலதரப்பட்ட செடிகளை Polyculture முறையில் நெருக்கமாக வளர்ப்பது மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் என்றும் பூச்சிகள் வராமல் தடுக்கும் என்றும் அறிவியல் கூறுகிறது. இந்த அறிவியல் பூர்வமான ‘மியாவாக்கி’ முறையை நமது வீட்டின் ஒரு சிறிய மூலையில் செயல்படுத்த முடியும். இயற்கையுடனான சுற்றுச்சூழல் வாழ்க்கை என்பது வெறும் உடல் சார்ந்த மாற்றம் மட்டுமல்ல, அது ஓர் ஆழமான உளவியல் மாற்றமாகும்.
ஒரு மனிதன் எப்படித் தனது சிந்தனையை மாற்றுவதன் மூலம் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறான் என்பதை விளக்கும் சூழலியல் சார்ந்த உளவியல் விழிப்புணர்வு ஒருவருக்கு முக்கியம். மனிதர்களுக்கு இயற்கையாகவே செடி, கொடி மற்றும் விலங்குகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற ஆசை மரபணுவிலேயே உள்ளது. கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவே இருப்பதைவிட, பசுமையான மரங்களுக்கு நடுவே இருக்கும்போது மனித மூளை அதிகப்படியான டோபமைன் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களைச் சுரக்கிறது என்பது உளவியல் உண்மை. இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
நவீன உளவியல் ‘அதிகப் பொருட்களை வாங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும்’ என்று நம்மை நம்ப வைக்கிறது. ஆனால், சுற்றுச் சூழல் சார்ந்த ‘குறைந்தபட்ச நுகர்வு’ உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது. நமக்குத் தேவையற்ற பொருட்களைத்தவிர்ப்பது நமது மனச் சுமையைக் குறைத்து, ஒரு தெளிவான சிந்தனையைத் தரும். இயற்கையான சுற்றுச்சூழல் வாழ்க்கைக்கு மாறுவது ஒரு பழக்கமாக மாற மூன்று நிலைகளில் ஒன்று, பிளாஸ்டிக் இயற்கைக்குத் தீமையானது என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
‘இந்தப் பூமி எனக்கும் என் சந்ததிக்கும் வேண்டும்’ என்ற உணர்வுப்பூர்வமான பிணைப்பும் தயக்கமின்றி ஒரு துணிப்பையைத் தூக்கிக்கொண்டு கடைக்குச் செல்லுதலும் தினமும் ஒரு மணிநேரம் அலைபேசியைத் தவிர்த்துவிட்டு, ஒரு மரத்தின் அடியிலோ பூங்காவிலோ அமர்ந்தால் அது நமது மூளையை ‘ரீசெட்’ செய்யும். பொருட்களைப் பகிர்ந்து பயன்படுத்துவது சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும்.
இயற்கையைப் பாதுகாப்பதன் மூலம் நாம் உண்மையில் நம்மை பாதுகாத்துக்கொள்கிறோம். ஆரோக்கியமான பூமிதான் ஆரோக்கியமான மனதிற்கு அடிப்படை. சூழலியல் உளவியல் அடிப்படையில், நமது மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு சிறிய, ‘வீட்டுத் தோட்டம்’ அமைப்பது எக்காலத்திற்கும் சிறந்த ஐடியாவாக இருக்கும். இயற்கையான சுற்றுச்சூழல் வாழ்க்கை என்பது வெறும் ஒரு செயல்முறையன்று; அது ஓர் ஆழமான தத்துவமாகும். இது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை ஒரு வணிகமாகப் பார்க்காமல், ஒரு பிணைப்பாகப் பார்க்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ தத்துவம்.
ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரங்களை நடுவது; நிலத்திலிருந்து நீரை எடுத்தால் மழைநீர் சேமிப்பு மூலம் அதை மீண்டும் நிலத்திற்கு அனுப்புவது. தேவைக்கும் ஆசைக்கும் இடையிலான கோடு. “இந்த உலகம் ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் போதுமான வளங்களைக் கொண்டுள்ளது, ஆனால் ஒரே ஒரு மனிதனின் ஆசைக்குக்கூட இங்கே பூமியில் இடமில்லை.” என்று காந்தி சொல்கிறார். இயற்கையை ஒரு கருவியாகப் பார்க்காமல், அதையொரு ‘பேராற்றலாக’ பார்க்க வேண்டும். .
இயந்திரத்தனமான ஓட்டத்தை நிறுத்திவிட்டு, ஒரு நிமிடம் செடி கொடிகளுடன் பொழுதைப் போக்கினால் அதுவே நமக்குச் சூழலியல் தத்துவத்தைக் கற்றுக்கொடுக்கும். நாம் இன்று பயன்படுத்தும் இயற்கை வளங்கள் (நீர், காற்று,
மண்) அடுத்த தலைமுறைக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நமது முதல் கொள்கையாக இருக்க வேண்டும்.
இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதன்று. பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் மரங்களுக்கும் இதில் சம பங்கு உண்டு. அவற்றை அழித்து நாம் வாழ நினைப்பது சுயநலம். எந்த ஒரு பொருளும் அது உற்பத்தியாகும் இடத்திற்கு அருகிலேயே நுகரப்பட வேண்டும். Localism.
இதனால் போக்குவரத்து மூலம் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் குறைகிறது. ‘உள்ளூர் உணவை உண், உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்து’ என்பதே இதன் மந்திரம். இந்த மந்திரத்தை மீறலாம்; ஆனால் அதற்கான கடும் அளவுகோல்களை நாம் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி. இந்தச் சித்தாந்தம், நுகர்வு கலாச்சாரத்திற்கு எதிரானது. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ இயற்கையான சூழலியலுக்கு நட்பானது. நிலம் ஒரு தாய்; நிலத்தை வெறும்
சொத்தாகப் பார்க்காமல், அதை ஓர் உயிராகப் பார்க்கும் மனநிலையை வளர்க்க வேண்டும். அதனால்தான் ரசாயனம் இன்றி இயற்கை விவசாயம் செய்வதற்கு உத்வேகம் கொடுக்க வேண்டும். ரசாயனம் கலக்கப்பட்டால் அதற்கான அளவுகளைச் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்ற கண்காணிப்புகள் அரசின் துறைகளின் மூலமாக நிவர்த்தி செய்யப்படவேண்டும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் முக்கியம்.
பெரிய மாற்றங்கள் சிறிய செயல்களில் இருந்தே தொடங்குகின்றன. உதாரணமாக, பிளாஸ்டிக் உறிஞ்சுக் குழாயைத் (Straw) தவிர்ப்பது ஒரு சிறிய செயலாகத் தெரியலாம். ஆனால், கோடிக்கணக்கான மக்கள் அதைச் செய்யும்போது கடலில் வாழும் உயிரினங்கள் காக்கப்படுகின்றன. இயற்கையோடு மோதுவதை நிறுத்திவிட்டு, இயற்கையோடு இயைந்து வாழத் தொடங்குவதே உண்மையான அறிவு.
நம்மிடம் பெரிய நிலம் இல்லாவிட்டாலும், நம் வீட்டு வாசலிலோ அல்லது மொட்டைமாடியிலோ ‘குட்டி காடு’ (Mini Forest) போன்ற அமைப்பை உருவாக்கலாம். தொட்டிகளில் அடர்த்தியாகச் செடிகளை வளர்ப்பது; பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது; உள்ளூர் நாட்டு ரகச் செடிகளை நடுவது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓடந்துறை இந்தியாவின் முதல் ‘தன்னிறைவு’ பெற்ற பசுமை கிராமமாக அறியப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஓடந்துறை ஒரு சாதாரணக் கிராமமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த ஊராட்சியின் தலைவராக இருந்த ஆர். சண்முகம் அவர்களின் தொலைநோக்குப் பார்வையால், அந்தக் கிராமம் இன்று ஆசியாவிலேயே ஒரு சிறந்த ‘Eco-friendly’ கிராமமாகப் போற்றப்படுகிறது.

ஓடந்துறை ஊராட்சி, சொந்தமாக ஒரு காற்றாலையை (Windmill) நிறுவிய இந்தியாவின் முதல் ஊராட்சி ஆகும். இதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக்கொள்கின்றனர். விளைவு, அரசுக்கு மின்சாரக் கட்டணம் கட்டுவதற்குப் பதிலாக, உபரி மின்சாரத்தை அரசுக்கே விற்று ஆண்டுக்குச் சுமார் ₹20 லட்சம் வரை வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால் இப்போது அந்த ஓடந்துறை கிராமம் எப்படி இருக்கிறது என்பதும் தெரிந்துகொள்வது முக்கியம். அரசு போதுமான அக்கறையைக் காட்டாததால் இந்தக் கிராமம் இப்போது முடங்கிப் போயிருக்கிறது. ஒரு வீடு கூட இப்போது தற்சார்பாக வீடுகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.
“2001ல ரெண்டு கிராமத்துக்கு சோலார் பண்ணி வச்சேன். ஹை கப்பாசிட்டி பவர்
ப்ரொட்யூஸ் பண்ணனும் அப்படினு பிளான் பண்ணேன்” என்கிறார் சூரியன் மூலம் சோலார் சக்தியை எடுத்துக்கொண்டு ஒரு பேட்டரியில் சேமித்துக்கொண்டு மின்சாரம் கொடுக்கும் முறையைப் பயன்படுத்திய ஓடந்துறை கிராம தேவி.
“சோலார் ஒன்னறை வருஷம் எரிஞ்சிச்சி… அதுக்கப்பறம் பேட்டரிய சரி பண்ணி
வச்சோம் அப்பயும் எரியல” என்கிறார். இதுதான் அரசின் கவனக்குறைவு. துரிதமாகக் கவனித்துச் சரி செய்துகொண்டே இருந்திருந்தால் இன்று அதிக நுகர்வைச் சந்தித்து இது ஒரு வெற்றிகரமான திட்டமாக மாறியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். அரசும் முறையாக மக்களுக்கு இந்தத் திட்டத்தை எப்படிக் கையாள்வது, பயன்படுத்துவது என்று முழுமையாகப் பயிற்சி கொடுக்கவில்லை.
Green housing முறையில் இந்தக் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் சூரிய சக்தியால் இயங்க முயன்று இன்று தோற்றுப் போயிருக்கின்றன. தெருவிளக்குகள் முதல் குடிநீர் மோட்டார்கள் வரை அனைத்தும் இயற்கையான ஆற்றலால் இயங்குகின்றன. பவானி ஆற்றிலிருந்து நீரை எடுத்து, அதை இயற்கை முறையில் சுத்திகரித்து, கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணிநேரமும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்துள்ளனர். ‘சுற்றுச்சூழல் நட்பு என்னும் eco friendly வாழ்க்கை என்பது வெறும் தியாகம் அல்ல, அது ஒரு சிறந்த பொருளாதாரம்’ என்று ஆரம்பித்த கிராமம் இன்று முறையான கண்காணிப்பு இல்லாததால் நடைமுறை யதார்த்தத்திற்கு மாறான ஒரு திட்டமாக முடங்கிக்கிடக்கிறது. ஆனால் இந்தக் கிராமத்தை எப்படி அரசு மீண்டும் சுயசார்பு கிராமமாக மாற்றி அதை வைத்து அடுத்தடுத்த கிராமங்களைச் சுயசார்பு சோலார் கிராமங்களாக மாற்றலாம் என்று திட்டமிட வேண்டும்.
இயற்கையைப் பாதுகாப்பதன் மூலம் ஒரு கிராமமே கடனில்லாமல், சுயசார்புடன் வாழ முடியும் என்பதற்கு ஓடந்துறை எடுத்துக்காட்டாக இருந்திருக்க முடியும். ஆனால் தொடர் கண்காணிப்பும் பயிற்சியும் விழிப்புணர்வும் இல்லாததால் இப்போது சோலார் மின்சாரத் தற்சார்பு கிராம முயற்சியின் தோல்வியின் சாட்சியாக மாறிக் கிடக்கிறது.
நாம் என்ன செய்யலாம்? ஓடந்துறை போல நாம் ஒரு காற்றாலையை நிறுவ முடியாவிட்டாலும், நமது வீட்டில் சோலார் விளக்குகளைப் பயன்படுத்தலாம். மழைநீர் சேமிப்பு தொட்டியைச் சரியாகப் பராமரிக்கலாம். தேவையற்ற பயன்பாடு இல்லாதபோது மின்சாரத்தைச் சேமிக்கலாம். நானும் ஒரு சராசரி நகரத்து வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். மாடித்தோட்டம் அமைத்து, அதைக் கையாள கற்று, தொடர்ந்து மாடித்தோட்டங்களைப் பராமரிக்கும் நகரவாசியாக வாழ எனக்கு ஆசை இருக்கிறது.
தினமும் பிளாஸ்டிக் கவர்களில் காய்கறிகள் வாங்குவது, மினரல் வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்துவது, வீட்டில் சேரும் குப்பை அனைத்தையும் ஒரே கவரில் போட்டு எறிவது என என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஒருநாள் பலத்த மழை பெய்தபோது, எங்கள் தெருவில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. காரணம் பார்த்தபோது, சாக்கடை அடைப்புகளில் நான் எறிந்த அதே பிளாஸ்டிக் கவர்களும் பாட்டில்களும்தான் மடைப்பள்ளிகளாக நின்றன. “நானே எனக்குப் பள்ளம் தோண்டிக் கொள்கிறேனோ?” என்ற கேள்வி அன்றுதான் என் மனதில் எழுந்தது. அன்றிலிருந்து என் வாழ்க்கையை ‘Eco-friendly’ ஆக மாற்ற முடிவு செய்தேன்.
வாங்கும் பிளாஸ்டிக்குகளை முடிந்தளவுக்கு நிறுத்தி வைத்துவிட்டு நமது முயற்சிகளை மீறிப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை மக்காத குப்பைத்தொட்டி பிரிவில் போட்டு வாழ வேண்டும். என் மாடித்தோட்டத்தில்
தக்காளி மற்றும் கீரைகளை விளைவித்துச் சாப்பிட வேண்டும். “இன்று நான் ஒரு பிளாஸ்டிக் பையைக்கூடப் பயன்படுத்தவில்லை” என்று நினைக்கும் ஒரு நாள் ஏற்படும்போது மனத்திருப்தி இருக்கும். மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது என் செலவைக் குறைக்கிறது.

இயற்கையான சுற்றுச்சூழல் வாழ்க்கை என்பது காடுகளுக்குச் சென்று வாழ்வது அல்ல. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே, ‘இயற்கைக்குக் குறைவான பாதிப்பை ஏற்படுத்துவது’தான் ஐந்திணை வாழ்வு. சங்க இலக்கியங்கள் (புறநானூறு, அகநானூறு) நிலத்தை ஐந்து வகைகளாகப் பிரித்தன. ஒவ்வொரு நிலப்பரப்பிலும் உள்ள மரம், செடி,
விலங்குகளைக் கடவுளாகவோ அல்லது வாழ்வின் அங்கமாகவோ போற்றினர். மழையை மட்டுமே நம்பி இருக்காமல், ஊர்தோறும் ஏரி, குளம், கண்மாய்களை வெட்டினர். ‘ஏரி வாரியம்’ என்ற தனி அமைப்பே இருந்தது. இது நீரைச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவியது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், காடுகள் அழிக்கப்பட்டு வணிக ரீதியான தோட்டங்கள் Tea Coffee estates உருவாக்கப்பட்டன. அப்போதுதான் சமநிலை குலையத் தொடங்கியது. இருப்பினும், கிராமப்புற மக்கள் தொடர்ந்து மண்பாண்டங்கள், ஓலைப்பாய்கள் மற்றும் துணிப்பைகளையே பயன்படுத்தி வந்தனர்.
1960களில் அறிமுகமான பசுமைப் புரட்சி (Green Revolution) ரசாயன உரங்களைக் கொண்டுவந்தது. 80களில் நம்மாழ்வார் ஐயா போன்றவர்கள் இயற்கை விவசாயத்தை மீண்டும் ஓர் இயக்கமாக மாற்றினர். பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும்
‘மஞ்சள் பை’ இயக்கங்கள் மீண்டும் உயிர்பெற்றன. இன்று சோலார் மின்சாரம், மாடித்தோட்டம் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத் திருமணங்கள் என வரலாறு மீண்டும் ஒரு முழுச் சுழற்சியை எட்டியுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் மண், கல் மற்றும் சுடுமண்ணால் ஆனவை. அவை 2500 ஆண்டுகள் கழித்தும் மண்ணுக்குப் பாரமாக இல்லை.
நான் ஒருவன் மாறினால் உலகம் மாறிவிடுமா என்று கேள்வி நமக்கு எழலாம். உலகம் மாறுகிறதோ இல்லையோ, நான் மாறினேன். மகிழ்ச்சியாக இயற்கையுடன் கைகோர்த்து மரம், செடி, கொடிகளையும் எனது மாடித் தோட்டத்தையும் நண்பர்கள் வீட்டுத் தோட்டங்களையும் தெருவில் காணக்கிடைக்கும் இயற்கைச் சூழலையும் ரசித்தபடி வாழ்கிறேன் என்கிற சந்தோஷமே போதும். தமிழகத்தின் வரலாற்றில் சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை என்பது ஏதோ ஒரு நவீனக் கோட்பாடு அல்ல; அது ஒரு வாழ்வியல் முறை.
***



