![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/02/WhatsApp-Image-2019-02-19-at-2.52.51-PM-636x405.jpeg)
கண்ணன் ஹாலுக்கும் பெட்ரூம்முக்குமாக சுற்றிக்கொண்டிருந்தான் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலேயே எதையோ தேடினான். மனைவி லதா வாசலில் சாவியுடன் காத்திருந்தாள். வெகு நேரமாக இவனைக் காணாததால் சலிப்புடன் வேகமாக உள்ளே சென்று பார்த்தாள். கண்ணன் தலையை குனிந்தவாறு ஏதோ யோசித்துக்கொண்டு நின்றிருந்தான்.
“என்ன பண்றீங்க…?”
“இல்ல எதையோ மறந்துட்ட மாதிரி இருக்கு என்னனு தெரில, ஆமா நாம டெஸ்ட் பண்ணோமே… அது எங்க…?”
“அய்யோ… அது எதுக்கு இப்போ, அதான் லேப்ல டெஸ்ட் பண்ண ரிசல்ட் இருக்குள்ள…”
“எதுக்கும் இருக்கட்டும் எடு…”
அவள் கட்டிலுக்கு அருகில் இருந்த மேஜை ட்ராயரை திறந்து ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பியில் பத்திரப்படுத்தியிருந்த செவ்வக வடிவிலான ஒரு பொருளை எடுத்தாள். அவன் வேகமாக அருகில் வந்து அதை அவளிடம் இருந்து பிடுங்கிப் பார்த்தான். அதன் நடுவே சிறிய இடைவெளியில் சிகப்பாக இரண்டுக் கோடுகள் இருந்தது. அவன் அதைப்பார்த்து மெல்லப் புன்னகைத்தான்.
“போதும் குடுங்க, ரொம்பத்தான்…” என்று அவள் அதை வாங்கி தன் கைப்பைக்குள் வைத்துக்கொண்டு அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்து கதவை பூட்டினாள். கண்ணன் தன் வண்டியை வெளியே தள்ளிச் சென்று ஸ்டார்ட் செய்து அவளுக்காகக் காத்திருந்தான். அவள் வீட்டைப் பூட்டிவிட்டு வந்து பின்னாள் அமர்ந்துகொண்டாள். பக்கத்து வீட்டுப் பெண் தன் குழந்தைக்கு வெளியே வேடிக்கைக்காட்டி சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தாள். லதாவைப் பார்த்ததும் அவள் ஏதோ செய்கை செய்ய, பதிலுக்கு இவள் ‘போய்வந்து சொல்கிறேன்’ என்பது போல் செய்கை செய்துவிட்டு பின் சீட்டில் நன்றாக அமர்ந்துகொண்டாள். ஆனால் வண்டியை நகர்த்தாமல் அப்படியே நின்றிருந்தான். அவள் மீண்டும் அவனிடம், “என்னாச்சி” என்றாள்.
“எதையோ மறந்துட்ட மாதிரி இருக்கு”
“ஒண்ணும் மறக்கல, எல்லாம் எடுத்தாச்சு போங்க”
அவன் அரைமனதுடன் வண்டியை இயக்கினான். வண்டியை மிக மெதுவாக ஓட்டினான். மேடுபல்லங்கள், ஸ்பீட் பீரேக்கர் என எதன்மீதும் ஏறி இறங்குவதே தெரியாத அளவிற்குச் சென்றான். அவன் மனம் முழுக்க குதூகலத்திலும், ஒரு சிறு பதட்டத்திலும் இருந்தது. திரும்ப வீட்டிற்கு வந்ததும் யார்யாருக்கெல்லாம் போன் போட்டு சொல்ல வேண்டும் என மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் தன் அம்மாவிற்கு மட்டும் தான் சொல்லக் கூடாது என்றும், வேறு யாராவது மூன்றாவது மனிதர் மூலமாகவே தெரிய வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். தன் அம்மாவின் நினைவுகள் மனதிற்குள் வந்ததுமே இவ்வளவு நேரம் மனதுக்குள் இருந்த குதூகலம் சட்டெனக் காணாமல் போனது.
இருவரும் சிக்னலில் நின்றிருந்தனர். பின்னால் இருந்த லதா அவன் தோளைத் அழுத்தியவாறு,
“என்னாச்சு, ஏன் கம்முன்னு வரீங்க”
அவன் அப்போது தான் சுயநினைவிற்கே வந்தான். சிக்னலில் நின்றிருக்கிறோம் என்ற உணர்வே அப்போது தான் வந்தது. சுற்றிப்பார்த்தான், சரியாகத்தா
“ஓன்னுமில்ல, ஏதோ மறந்துட்ட மாதிரி இருக்கு, அதான் என்னனு யோச்சிட்டு இருக்கன்”
“எத்தன வாட்டி சொல்றது வண்டி ஓட்டும் போது எதையும் யோசிக்காதீங்கனு, ஒழுங்கா வண்டியமட்டும் ஓட்டுங்க” என்றாள் கோவமாக.
சிக்னல் பச்சைக்கு மாறப் பின்னால் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் ஹாரன் மூலம் அதை உணர்த்த இவன் தன் பைக்கை மெல்ல நகர்த்தினான்.
வண்டி நகரத்துவங்கிய சிறிது நேரத்துக்குள்ளேயே அவன் அம்மா மீண்டும் நினைவுகளில் சூழ்ந்தாள். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் எதுவும் இல்லை, எதுவும் இல்லை என அவள் பேசிய பேச்சு இத்தனை ஆண்டுகள் அம்மா என்று இருந்த மதிப்பு அவனுள் மெல்ல மெல்லக் குறையத்துவங்கியிருந்தது. மனைவி எதுவும் கேட்காத போதும் இவனே முன் வந்து அம்மாவின் பேச்சை சகிக்க முடியாமல் தனிக்குடித்தனம் வந்தான். வந்து ஆறு மாதத்தில் அவர்கள் விரும்பிய அந்தச் செய்தி கிடைத்துவிட்டது. அதை ஊர்ஜிதம் செய்துவிட்டு இருவரும் மருத்துவமனைக்குப் போகலாம் என முடிவு செய்து புறப்பட்டிருந்தனர்.
கண்ணன் பைக்கை பார்க்கிங்கில் விட்டுவிட்டு வந்தான். அதுவரை லதா மருத்துவமனை வாசலில் காத்திருக்க, இருவரும் உள்ளே சென்று பெயரைப் பதிவுச்செய்துவிட்டு மகப்பேறு மருத்துவர் அறையை நோக்கிச் சென்றனர். மருத்துவர் அறை முதல் மாடியில் இருக்க அவன் படிகளுக்கு செல்லாமல் லிப்ட் அருகில் சென்று நின்றான்.
“ஏன் இங்க நிக்கறீங்க”
“லிப்ட்ல போலாம், படிலாம் ஏறக்கூடாதாம்”
அவள் மெல்லச் சிரித்தவாறு அவன் கையை பிடித்து இழுத்தவாறு படிக்கட்டில் ஏறினாள்.
அவர்களுக்கு முன்பாகவே நிறையப் பேர் காத்திருந்தார்கள். ஒவ்வொரு பெண்ணுடனும் வேவ்வேறு உறவினர்கள் இருந்தனர். பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள் அமர்ந்திருக்க உடன் வந்தவர்கள் நின்றிருந்தனர். கண்ணன் நாற்காலிகள் போடப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று ஏதேனும் நாற்காலி காலியாக இருக்கிறதா என்று சுற்றிப்பார்த்தான். எதுவும் காலியாக இல்லை. இவன் இடம் தேடுவதை அறிந்தக்கொண்ட ஒருவர் தன் மனைவியின் அருகில் இருந்து எழுந்து இடம் கொடுத்தார். கண்ணன் தன் மனைவியை அங்கு அமரச்சொல்லிவிட்டு அவரைப்பார்த்து ஒரு சினேகப் புன்னகையுடன் நன்றி தெரிவித்தான்.
கண்ணன் சுற்றி அந்த இடத்தை ஆராய்ந்தான். சில நர்ஸ்கள் வேவ்வேறு அறைக்கு மாறி மாறிச் சென்ற வண்ணம் இருந்தனர். சுவர் முழுக்க குழந்தைகள் படங்களும், கற்ப காலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள், செய்ய வேண்டிய டெஸ்ட்கள், உடற்பயிற்சிகள் அடங்கிய படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. கண்ணன் அவைகளை ஒவ்வொன்றாகக் கவனமாக மனப்பாடம் செய்தான். போகும் போது அதைப் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
முழுக்க ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் தன் பார்வையை தன் மனைவியின் மீது செலுத்தினான். இவன் பார்த்ததும் அவள் இவனைப் பார்த்து ஒரு கேலிசிரிப்பை உதிர்த்தாள். இவ்வளவு நேரம் அவள் தன்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் என புரிந்துகொண்டான். பதிலுக்கு வெட்கப்பட்டுச் சிரித்தான்.
திடீரென அந்த இடம் பரபரப்பானது. அமர்ந்திருந்த சிலர் எழுந்து நின்றனர். குள்ளமாக வெள்ளையில் பூப்போட்ட புடவை அணிந்த ஒரு நடுத்தர வயது பெண் அறைக்குள் நுழைந்தார். அவர் தான் மருத்துவர் எனக் கண்ணன் யூகித்தான். அவர் உள்ளே சென்ற சில நொடிகளில் ஒரு நர்ஸ் அறை வாசலில் வந்து நின்றுகொண்டு “டோக்கன் நம்பர் ஒன்” என்றால். முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மெல்ல எழுந்து உள்ளே சென்றாள். அவளுடன் அவள் கணவனும், ஆறு அல்லது ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் சென்றனர். அவர்கள் உள்ளே சென்ற சில நிமிடங்களில் சிறுவன் வெளியே அனுப்பப் பட்டான். “டோக்கன் நம்பர் டூ இங்க வந்து நில்லுங்க” என்றாள் நர்ஸ். கண்ணன் தன் டோக்கன் எண்ணைப் பார்த்தான். அதில் முப்பத்தி ஒன்று என இருந்தது. உள்ளே சென்றவர்கள் எந்த அளவிற்கு வேகமாக வந்தார்களோ அதை விட வேகமாக புதியவர்கள் உள்ளே வந்த வண்ணம் இருந்தனர். “கைராசியான டாக்டர்” என தன் நண்பன் இங்கே போக சொன்னதை நினைத்துக்கொண்டான் கண்ணன்.
கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து இவர்கள் எண் அழைக்கப்பட்டது. இருவரும் எழுந்து தயக்கத்துடன் உள்ளே சென்றனர். சிரித்த முகத்துடன் மருத்துவர் இவர்களை வரவேற்று அமரச் சொன்னார். உடனே கண்ணன் தன் மேல் பாக்கெட்டில் இருந்த லேப் ரிசல்டை எடுத்து மருத்துவரிடம் கொடுத்தான். மருத்துவர் அதை வங்கி மேலோட்டமாகப் பார்வையிட்டார். அந்த நேரத்தில் இவர்கள் வீட்டில் செக் செய்தவற்றை எடுத்துக் கொடுக்கும் படி மனைவிக்குச் செய்கை செய்தான். அவள் வேண்டாம் என்று மறுத்து அவனை அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தாள். காகிதத்தை மேஜை மேல் வைத்துவிட்டு லேசாகச் சிரித்தபடி லதாவை தன் அருகில் இருக்கும் நாற்காலியில் வந்து அமரச்சொன்னார். லதாவின் இதயத்துடிப்பு, நாடி என அனைத்தையும் பரிசோதித்த மருத்துவர், அவளை எழுந்து திரைக்கு பின் இருந்த படுக்கையில் படுக்கச் சொன்னார். இருவரும் திரைக்கு பின்னால் சென்றதும் கண்ணன் அந்த அறையைச் சுற்றிப்பார்த்தான். இங்கேயும் வெளியே இருந்ததைப் போல் குழந்தைகள் படங்கள் மற்றும் இதர படங்கள் இருந்தது. மருத்துவர் மேஜையில் பல்வேறு சாம்பிள் மாத்திரைகள் இருந்தன. மேஜை மேல் இருந்த அவரின் செல் போனில் தொடர்ந்து ஏதோ வந்த வண்ணம் இருந்தன. ஒலி எழுப்பவில்லை என்றாலும் வெளிச்சம் விட்டு விட்டு வந்துகொண்டிருந்தது. திரையை விலக்கிக்கொண்டு இருவரும் வந்தனர். அவர்கள் உள்ளே என்ன பேசினார்கள் என கவனிக்காது விட்டுவிட்டோமே என்று நினைத்தான். இருந்தாலும் வீட்டுக்கு வந்து லதாவே சொல்லிவிடுவாள் என அவனுக்குத் தெரியும். லதாவும் மருத்துவரும் இருக்கையில் அமர்ந்ததும் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார். அனைத்தையும் கண்ணனிடமே தெரிவித்தார். அனைத்தையும் கவனமாக கண்ணன் கேட்டுக்கொண்டான். பிறகுத் தன் சீட்டில் போலிக் ஆசிட் மாத்திரைகளும் சில சத்து மாத்திரைகளும் எழுதித் தந்துவிட்டு அடுத்த வாரம் வந்து பார்க்க சொன்னார். மருத்துவர் தந்த சீட்டைக் கவனமாக மடித்து தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான். அறையை விட்டு வெளியேறும் போது மருந்தகம் கீழே இருப்பதாக நர்ஸ் தெரிவித்தாள்.
லிப்ட்டில் வேண்டாம் என்று அவனை வலுக்கட்டாயமாகப் படிகளில் கூட்டிச்சென்றாள் லதா.
“ஏங்க…”
“இன்னாடி”
“அங்க பாப்பா போட்டோலாம் இருந்துச்சுல…”
“ஆமா”
“அது மாதிரி வாங்கினு வந்து நம்ப வீட்டுல ஒட்டுங்க”
அவன் மெல்லச் சிரித்துக்கொண்டு சரி என்று தலையசைத்தான்.
மருந்தகத்தில் மருத்துவர் எழுதிக்கொடுத்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டனர். மாத்திரைகளைப் பார்த்தவுடன் லதா சற்று மிரண்டால்.
“இவ்ளோ மாத்திரையா”
“சப்பிப்போட்ட மாங்கொட்ட மாதிரி இருந்த இவ்ளோ மாத்திரத்தான் தருவாங்க… ஒழுங்க சாப்புடனும்”
அவள் உடனே ஒரு பொய் கோவத்தைக் காட்டினாள்.
கன்சல்டிங் பீஸ், மருந்து எனச் சற்று அதிகமாகச் செலவானதாகவே லதாவிற்கு தோன்றியது. வெளியே வரும் போது கண்ணனிடம்,
“நான் தான் கவுர்மண்ட் ஆஸ்பத்திரிக்கு போலாம்னு சொன்னேன்ல, எதுக்கு இப்புடி செலவு பண்ற”
“இன்னா செலவு பண்ணிட்டாங்க இப்போ, ஒண்ணும் ஆவல, ஏடிஎம்ல காசு எடுக்க மறந்துட்டன், அதான் பர்ஸ் காலி”
அவன் கூறிய சமாதானத்தை அரைகுறையாக ஏற்றுக்கொண்டு நடந்தாள் லதா. இருவரும் பார்க்கிங் சென்று வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். மருத்துவமனை வாசலில் ஒரு கிழவர் சிறிய தொட்டில்களும் குழந்தை பொம்மைகளும் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். அதைப்பார்த்தவுடன் வண்டியை அவரை அழைத்தான் கண்ணன். லதா அவனிடம் கோவமாக, “இப்போ எதுக்கு இதுலாம்” என்றாள். ஆனால் அவன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவரிடம் பேரம் பேசி, இருக்கும் பணத்தையும் சில்லறைகளையும் கொண்டு ஒரு குழந்தை பொம்மையை வாங்கி அதை லதாவிடம் கொடுத்தான். வாங்கும் போது அவனைத் திட்டியவள் இப்போது அதை ஆசையாக வாங்கி வைத்துக்கொண்டாள்.
வெய்யில் அதன் உக்கிரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. வரும் போது இருந்த டிராபிக் இப்போது அதிகரித்துக்கொண்டிருந்தது. கண்ணன் மெதுவாகவே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். இவ்வளவு நேரம் இல்லாத அந்த படபடப்பு மீண்டும் அவனைத் தொற்றிக்கொண்டது. எதை மறந்துவிட்டோம் என மீண்டும் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. அதே சமயம் தூரத்தில் டிராபிக் போலிஸ் வண்டியை மடக்குவதை கவனித்தான். அப்போது தான் அவனுக்கு பொறிதட்டியது ஹெல்மெட்டை மறந்துவிட்டோம் என்று. சட்டென்று வண்டிகளுக்கு இடையே புகுந்து சாலையின் மறுபுறத்துக்குச் செல்ல முற்பட்டான். திடீரென்று இவன் இவ்வாறு செயல்பட துவங்கியதும் குழப்பமான லதா,
“என்ன பன்னுறீங்க”
“அங்க வண்டி புடிக்கறாங்க”
“உங்க கிட்டத்தான் எல்லாம் இருக்குல”
“ஹெல்மெட் போடலடி”
“அதுக்கு வேணா ஃபைன் கட்டிக்கலாம், ஒழுங்கா போங்க, வண்டியெல்லாம் வருது”
“ஏது காசு, கம்முனு வா, அந்தப் பக்கம் போயிடலாம்” என்று வண்டிகளுக்குள் புகுந்துப் போக முயற்சித்தான்.
இவன் ஹெல்மெட் இல்லாமல் இவ்வாறுப் போக முற்படுவதைத் தூரத்திலிருந்தே கவனித்த டிராபிக் எஸ்.ஐ. வேகமாக இவர்கள் அருகில் ஓடிசென்று வண்டியை எட்டி ஒரு உதை உதைத்தார். இருவரும் நிலைத் தடுமாறி ஆளுக்கு ஒருபக்கம் கீழே விழப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி லதாவின் மேல் ஏறி சில அடி தூரம் அவளைச் சாலையில் தேய்த்தவாறு இழுத்துச் சென்று நின்றது. இந்த பெரும் சத்தத்தைக் கேட்ட மக்கள் கும்பலாக ஓடிவர, கூட்டத்தைப் பார்த்து பயந்த ஏஸ்.ஐ வேகமாக ஓடி தன் இருசக்கர வாகனத்தில் ஏறி கான்ஸ்டெபிளுடன் தப்பித்தார். லாரியிலிருந்து குதித்த டிரைவரும் கிளினரும் எஸ்.ஐ.யின் பின்னாலேயே ஓடினர். கும்பலில் சிலர் மறுபுறம் விழுந்த கண்ணனை தூக்கத் தலையில் ரத்தம் வழிய உடலெங்கும் ரத்த காயங்களுடன் எழுந்து வந்து சில பகுதி துண்டுகளாகவும் உடலின் பாதி சாலையோடு தேய்ந்து போயிருந்த தன் மனைவியைப் பார்த்து கதறத் துவங்கினான். லாரியின் டையர் தேய்த்துக்கொண்டு சென்று நின்றதில் சாலையில் அதன் அச்சு இரண்டு கோடுகளாக பதிந்து இருந்தது. டயருடன் லதாவின் உடலும் இழுத்துச் செல்லப்பட்டதால் அந்தக் கோடுகள் சிகப்பு வண்ணத்தில் இருந்தது. அந்த இரண்டு கோடுகளுக்கு நடுவில் எந்த வித சேதாரமும் இல்லாமல் அந்தக் குழந்தை பொம்மை சிரித்துக்கொண்டிருந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு வழக்கு நடந்து கொண்டிருந்த போது,வழக்கை விசாரித்த பெண் நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
“அந்த பொண்ணு கர்பமாக இருந்துச்சினு, பாவம் அந்த போலிஸுக்கு எப்படி தெரியும்?….”