...
சிறார் இலக்கியம்

பேராசை பெருநஷ்டம் – சிறுவர் கதை

ஞா.கலையரசி

ஒரு ஊரில் விறகுவெட்டி ஒருவன் வாழ்ந்தான். அவன் பெயர் பழனி. மரங்களை வெட்டி விறகாக்கி, விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தான்,

ஒரு நாள் குளத்துக்குப் பக்கத்திலிருந்த, அரசமரத்தை வெட்டும் போது, கோடரி கை தவறி, குளத்தில் விழுந்து விட்டது.

கோடரியைத் தேடி எடுக்க, அவன் குளத்தில் இறங்கிய போது, ஒரு தேவதை அவன் முன்னால் தோன்றியது. 

இந்தா, உன் கோடரி!என்று பள பளவென மின்னும் தங்கத்தாலான கோடரியை நீட்டியது. 

இது என்னுடையது இல்லை.  அது இரும்பு,” என்றான் பழனி.

தேவதை மகிழ்ந்து, “உன் நேர்மையைப் பாராட்டுகிறேன்.  இது தங்கம்; இதை விற்றால், ஆயிரக்கணக்காகப் பணம் கிடைக்கும் என்று தெரிந்தும், வாங்க மறுத்த உனக்கு, ஒரு பரிசு தர விரும்புகிறேன்.

இனிமேல் நீ எந்த மரத்தையும் வெட்டக் கூடாது.  ஏற்கெனவே உலகம் முக்கால்வாசி பாலைவனமாக மாறி விட்டதுஆகையால் இனி நீ தினமும் ஒரு மரமாவது நட வேண்டும்.  அதனால் கோடரிக்குப் பதிலாக, ஒரு மண்வெட்டி தருகின்றேன்.  இதை வைத்துக் கொண்டு, தினமும் ஒரு மரமாவது நடு,”. என்றது
தேவதையே மகிழ்ச்சி. கண்டிப்பாகத் தினமும் மரம் நடுவேன்.  ஆனால் எனக்கு மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.  என் குடும்பச் சாப்பாட்டுச் செலவுக்கு, எனக்குப் பணம் வேண்டுமே,” என்றான் பழனி..

தேவதை ஒரு கையடக்கமான இரும்புப் பெட்டி ஒன்றை, அவனிடம் கொடுத்தது.  மூடியிருந்த அப்பெட்டியின் மேல், கறுப்பாக ஒரு பொத்தான் இருந்தது.  பக்கவாட்டில் ஒரு ஓட்டை இருந்தது.

ஒவ்வொரு நாளும், ஒரு மரத்தை நட்ட பிறகு, பெட்டி மேலுள்ள இந்தப் பொத்தானை அழுத்தினால், இந்த ஓட்டை வழியாகத் தினமும் ஒரு தங்கக் காசு வெளியில் வந்து விழும்.  குடும்பச் செலவுகளுக்கு, அதை விற்றுக் காசாக்கிக் கொள்,” என்றது தேவதை.

தினமும் ஒரு தங்கக் காசு! செலவுகள் போக, நிறைய சேமித்து நிம்மதியாக வாழலாம்,’ என்று நினைத்துப். பழனிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மிகவும் நன்றி; இது போதும் இனிமேல் எந்த மரத்தையும் வெட்ட மாட்டேன்.  தினமும் தவறாமல், மரக்கன்றுகளை நடுவேன்,” என்றான் பழனி.

அந்தப் பொத்தானின் மேல், உன் வலது கட்டை விரலின் ரேகை படுமாறு வைத்து அழுத்த வேண்டும்.  அப்போது தான் காசு வரும்,” என்றது தேவதை.  

சொன்ன அடுத்த நிமிடம், தேவதை மறைந்துவிட்டது.

அவனுக்குத் தான் கண்டது கனவா, நனவா எனக் குழப்பமாயிருந்த்து.  கையில் கனமான அந்தப் பெட்டி இருந்ததால், நடந்தது உண்மை தான் என உறுதிப்படுத்திக் கொண்டான். 

பெட்டியை எடுத்துப் போய், பத்திரமாக அலமாரியில் வைத்துப் பூட்டினான்.மறுநாள் அதிகாலையிலேயே  எழுந்து, மண்வெட்டியை எடுத்துக் கொண்டு மரம் நடக் கிளம்பினான்.

பூவரசு, ஆல், அரச மரக் கிளைகளை வெட்டியெடுத்துத் தரிசாகக் கிடந்த நிலத்தில், வரிசையாக நட்டுத் தண்ணீர் ஊற்றினான். 

தேவதை கொடுத்த மண்வெட்டியை, மண்ணில் வைத்ததுமே, அது  தானாகவே கிடு கிடுவென்று குழிகளை வெட்டியது.  எனவே காய்ந்து கிடந்த கட்டாந்தரைகளில் கூட, அதிகச் சிரமமில்லாமல் அவனால் மரக்கன்றுகளை  நடமுடிந்த்து.

வீட்டுக்குத் திரும்பி, அந்தப் பெட்டியை எடுத்து, பொத்தானின் மேல் வலது கட்டை விரலை வைத்தான்.

என்ன ஆச்சரியம்! உடனே அந்த ஓட்டை வழியாக, ஒரு தங்கக் காசு வெளியே வந்து விழுந்தது.  இன்னொன்று வருமா என்று பார்க்கும் ஆசையில்,மீண்டும் அதில் விரலை வைத்து, அழுத்தி அழுத்திப் பார்த்தான்.  விரல் வலித்ததே தவிர, எதுவும் வரவில்லை.

ஒவ்வொரு நாளும் கிடைத்த, ஒரு தங்கக் காசை வைத்துக் கொண்டு தாராளமாகச் செலவு செய்து, மகிழ்ச்சியாக வாழ்ந்தான் பழனி,

சில மாதங்கள் சென்றிருக்கும்.  ஒவ்வொரு நாளும் ஒரு காசு எடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பெட்டியிலுள்ள எல்லாக் காசுகளையும் மொத்தமாக எடுத்தால், பெரிய பங்களா வாங்கலாம், கார் வாங்கலாமே,’ என அவன் மனைவியும், மகனும் பழனியைத் தொடர்ந்து வற்புறுத்தினர்.

முதலில் அவன் மறுத்தாலும், நாளாக நாளாக, அவனுக்கும் அந்த எண்ணம் வந்ததுமொத்தமாக எல்லாத் தங்கக் காசுகளையும் எடுத்து விற்றால், எக்கச்சக்கமாகப் பணம் கிடைக்கும். அதற்குப் பிறகு, மரம் நடு வேலையும் செய்யாமல், ஜாலியாகப் பொழுதைப் போக்கலாம் என்ற ஆசை வந்தது.

எனவே ஒரு நாள், அந்தப் பெட்டியை உடைப்பது என முடிவு செய்தான்.  ஆனால் எளிதாக அந்தப் பெட்டியை உடைக்க முடியவில்லை.

ஒருவழியாக அவனும், மகனும் சேர்ந்து, மிகவும் கஷ்டப்பட்டுப் பெட்டியைச் சுத்தியலால் அடித்து உடைத்தனர். அதற்குள் ஏராளமான தங்கக் காசுகள் இருக்கும் என்று எதிர்பார்த்த பழனிக்கு, ஏமாற்றம் காத்திருந்தது.

அதனுள் ஒரே ஒரு தங்கக் காசு மட்டும் இருந்தது!

ஐயோ! பேராசை பெரு நஷ்டமாகிவிட்டதே! அவசரப்பட்டு பெட்டியை உடைத்து விட்டேனே!என்று பழனி அழுது புலம்பினான். 

தேவதையைச் சந்தித்த, அதே குளத்தங்கரைக்குச் சென்று

என்னை மன்னித்துவிடுதேவதையே!  இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்மீண்டும் எனக்கு ஒரு பெட்டியைக் கொடு,” என்று  வேண்டினான்.

ஆனால் தேவதை, மீண்டும் அவனுக்கு முன்னால் தோன்றவேயில்லை!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.