- உர மேலாண்மை.
நாம் வேளாண்மை செய்யப்போகும் பயிரானது உரம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அது வளர்ந்து பூத்து, காய்த்து, கனி தந்து தன் இனத்தைக்கடத்தும். இவை அவற்றின் அடிப்படை குணம். ஆனாலும் நாம் எதிர்பார்க்கிற விளைச்சலை அவை எட்டவேண்டுமாயின் உரம் கொடுத்தே ஆகவேண்டும்.
மனிதர்களுக்கு தேவையான கொழுப்பு, மாவு, புரதம், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட ஐந்து வகையான சத்துக்களைப்போல, தாவரங்களுக்கு தழை, மணி, சாம்பல், கால்சியம், மக்னீசியம், கந்தகம், கார்பன்…உள்ளிட்ட பேரூட்டச்சத்துகளும், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், குளோரின்…உள்ளிட்ட நுண்ணூட்டச்சத்துகளும் தேவைப்படும்.
அப்படிப்பட்ட சத்துள்ள உரங்களை நாம் தற்சார்பில் தயாரித்து வழங்கும் செயலே ‘உரமேலாண்மை’யாகும்.
உரத்தயாரிப்பு மொத்தம் இரண்டுவகைப்படும்.
- திட உரங்கள்.
- திரவ உரங்கள்.
- திட உரங்கள்.
ஆடு, மாடு, மற்றும் கோழி எச்சங்களைச்சேகரித்து ஓரிடத்தில் குவித்து மட்கச்செய்து பின் நிலத்தில் விசிறியடித்து உழவு ஒட்டி பாத்தியமைத்து செய்வது ஒருமுறை.
விலங்குக்கழிவுகள், தாவரக்கழிவுகள் மற்றும் எண்ணெய்வித்துக்களின் கழிவுகளைக்கொண்டு கலப்பு உரங்கள் தயாரித்து வைத்திருந்து அதை மிகச்சிறிய அளவீடுகளில் மட்டுமே கொடுத்து மண்ணில் நுண்ணுயிரிகளை பெருகச்செய்து பயிர்களில் உயர் விளைச்சலைப்பெறுவது மற்றொரு முறை.
கலப்பு உரம் தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து அவற்றைத்தாவரங்களுக்கு கொடுக்கத்தயாராக குறைந்தது மூன்று மாதம் காலம் எடுத்துக்கொள்ளும். ஆதலால் இவற்றை பயிர் செய்யும் முன்பே தயாரிக்கத்துவங்குவது நலம்.
அப்படித்தயாரான உரத்தை ஓரிடத்தில் சாக்கு போட்டு மூடியோ, அல்லது கோனிப்பைகளில் இட்டு மூட்டை கட்டியோ இரண்டு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
கலப்பு உரத்திற்கு தேவையானவை: நான்கு மடங்கு ஆடு, மாடுகளின் கழிவுகள்,
மூன்று மடங்கு சாம்பல்,
இரண்டு மடங்கு மரத்தூள்,
ஒரு மடங்கு செம்மண்,
மற்றும் பத்தில் ஒரு மடங்கு புண்ணாக்கு.
இவற்றை ஒருசேர சரிவிகிதமாக கலந்தால் கலப்பு உரம் தயார்.
விலங்குக்கழிவுகளை அப்படியே மட்கவைத்து கொடுக்கும் முறையும், கலப்பு உரம் செய்து கொடுக்கும் முறையும் தாவரங்களின் வேர் வழி உணவுக்கானது.
- திரவ உரங்கள்.
என்னதான் நாம் பயிர்களுக்கு வேர்வழி உணவு கொடுத்தாலும், சின்னக்குழந்தைகளுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும் நேரடியாக வாயில் உணவு ஊட்டுவதைப்போல தாவரங்களுக்கு இலைவழி உணவாகக்கொடுப்பதற்குத்தான் இந்த திரவ உரங்கள்.
இவை அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், குணபம், அமீனோ அமிலம், திறன்மிகு நுண்ணுயிரி, பஞ்சகவ்யா, ஆட்டூட்டம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் கூட சற்றேரக்குறைய ஒரே பயன்பாட்டைத்தர வல்லதால் இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டை மட்டும் தயாரித்து வைத்துக்கொள்வது நலம்.
நீண்ட நாட்கள் வைத்திருந்தாலும் இவற்றில் நுண்ணுயிர்கள் உறக்க நிலையிலிருக்கும். அதை தண்ணீரில் கலந்த அடுத்த நிமிடம் பல்கிப்பெருகும் ஆற்றலுடையதால் இவற்றை இயற்கைவழி வேளாண்குடிமக்கள் ‘உயிர் உரங்கள்’ என்றழைக்கிறார்கள்.
பண்ணை மேம்பாட்டுக்காக உயிர் உரங்களை முதன்முதலில் செய்ய ஆரம்பிக்கும்போது பால், தயிர், நெய், பசுஞ்சாணம், கோமியம், வாழைப்பழம், பூசணிப்பழம், பப்பாளிப்பழம், மீன், கறி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை நீங்கள் வெளியே போய் தேடிதேடித்தருவித்து செய்வதில் கொஞ்சம் சிரமம் அனுபவிக்கக்கூடும். அடுத்தடுத்த காலங்களில் பண்ணை வளர்ந்து விரிவடையத்துவங்கியதும் உயிர் உரங்கள் தயாரிப்பதில் தற்சார்படைவீர்கள்.
உயிர் உரங்களை தயாரிக்கப் போதிய அனுபவமில்லையென்று கவலை கொள்ள வேண்டாம். உங்களது பண்ணைக்கு அருகாமையிலிருக்கும் ஏதேனும் இயற்கைவழி வேளாண்பண்ணையை அனுகும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு கற்பிப்பார்கள். தான் கற்றதை பிறருக்கு எப்படியாவது கடத்திவிட வேண்டுமென்கிற அறச்சிந்தனையுள்ளோர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். தேடுங்கள் கண்டடைவீர்கள். அப்படி கண்டடைவதில் சோம்பல் கொண்டு உயிர் உரத்திற்காக இயற்கை அங்காடிக்கு உங்களது கால்கள் பயணிக்குமேயானால் எனக்கு வேலூர் சிறை பிடிக்கவில்லை, ஆதலால் என்னை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றிவிடுங்களென்று நீங்கள் சிறையதிகாரியிடம் கேட்பதற்கு ஒப்பாக மாறும்.
பாதை விரியும்…