![Paravai Bala](https://vasagasalai.com/wp-content/uploads/2019/03/Paravai-Bala.jpg)
பட்டம்
நம் கையில் வைத்திருக்கும் விதைகளை மண்ணில் தூவி தண்ணீர் பாய்ச்சினால் அவைகள் அனைத்தும் முளைத்துவிடும் ஆற்றல் பெற்றவைதான், எனினும் முளைத்தபின் அவை வளர்ந்து கிளைபரப்பி பூத்து, காய்த்து, கனி தந்து, விதைகளை கடத்தி தன்பிறவிப்பயனை எட்டுவதற்கு புறச்சூழல் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதைத்தான் நமது முன்னோர்கள் ‘பட்டம் பார்த்து பயிர் செய்’ என்றார்கள்.
சூரிய ஒளி, காற்று, மற்றும் மழைநீர் ஆகிய பூதங்கள் பட்டத்தை தீர்மானிக்கின்றன. ஆதலால்தான் சில விதைகள் தனக்கான காலம் கனியும் வரை மண்ணில் புதையுண்டும் முளைவிடாமல் காத்திருக்கின்றன.
சித்திரை துவங்கி பங்குனி மாதம் வரைக்கும் பல்வேறு பட்டங்கள் இருந்தாலும் பொதுவாக ஆடிப்பட்டமே விதைப்பிற்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
தமிழகத்தைப்பொறுத்தவரை நமக்கு இரண்டு பருவமழை கிடைக்கும். ஒன்று ஆடியில் கிடைக்கும் தென்மேற்குப்பருவமழை, மற்றொன்று ஐப்பசியில் கிடைக்கும் வடகிழக்குப்பருவமழை.இதில் ஆடி மாதம் பெய்யும் தென்மேற்குப்பருவமழை சில நாட்கள் இடைவெளி விட்டு விட்டு பெய்வதால் தாவரங்கள் தானியப்பயிர்கள் உயர்விளைச்சலைப்பெற ஆடிப்பட்டம் சிறந்ததாக இருக்கிறது.
‘ஆடிப்பட்டம் தேடிப்பாத்து விதைக்கனும் சின்னையா…
ஏறுபூட்டும் ஏழைக்கூட்டம் வாழனும் பொன்னையா’
என்கிற பாடல் எழுதப்பட்டதின் பின்னனி இதுதான்.
விளைநிலம் திருத்தி, வேலியமைத்து, பாத்திகட்டி …என்று நீங்கள் ஒவ்வொரு வேலையாக செய்துகொண்டு வரும்போது விதைப்பதற்கான காலம் கனியும் போது ஒரு வேளை ஆடிப்பட்டம் தவறிப்போனால் உடனே பதற்றமடைய வேண்டாம்.
கார்த்திகையில் மரவள்ளியும்; மாசியில் உளுந்தும்; புரட்டாசி ஐப்பசியில் முருங்கையும்; பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்ட கொடிக்காய்களை சித்திரை, ஆவணியிலும்; மாசி, பங்குனியில் கம்பையும்; கார்த்திகை, மார்கழியில் வாழையையும்; மாசியில் சோளத்தையும்; வருடம் முழுவதும் ஆமணக்கையும் பயிர் செய்யலாம்.
தமிழகத்தில் மாவட்டத்துக்கு மாவட்டம் பயிர்செய்யும் முறையும், பட்டத்தின் நாட்கள் பத்து நாட்கள் கூடியோ, குறைந்தோ இருப்பதைக்காணமுடியும். அந்தந்த பகுதியில் பரம்பரை பரம்பரையாக வேளாண்மை செய்து வருபவரை கூர்ந்து கவனித்தால் பட்டத்தை மிகச்சரியாக கணிக்க முடியும்.
மனிதர்களிடம் பட்டம் குறித்து பாடம் கேட்க சிரமமேற்படுகிற பட்சத்தில் நீங்கள் இயற்கையிடமே நேரடியாக பாடம் கற்கலாம். புளியமரம் கார்த்திகையில் பூத்து பங்குனியில் பழங்கள் மொத்தத்தையும் உதிர்க்கும். காரணம் அடுத்த இரண்டு மாதத்தில் பெய்யப்போகிற தென்மேற்குப்பருவமழையை கருத்தில் கொண்டு, வெள்ளத்தின் மூலம் தன் இனத்தை தொலை தூரம் கடத்தும்.
மாமரம் தைமாதம் பூவெடுத்து கடுங்கோடையான சித்திரையில் ஆடு, மாடு, குரங்கு, மனிதர்கள், மற்றும் பறவைகள் உள்ளிட்டவைகளை தன் சுவை தரும் கனிகளின் மூலம் ஈர்த்து உணவாகக்கொடுத்து தன் இனத்தைக்கடத்தும்.
மனிதர்கள் கூட பட்டத்தைக்கனிப்பதில் தவறிழைக்ககூடும். ஆனால் தாவரங்களும், விலங்குகளும், பூச்சியினங்களும் தன் இனக்கடத்தலுக்கு ஒருபோதும் பட்டத்தை தவறவிடுவதேயில்லை.
பாதை விரியும்…