தொடர்கள்
Trending

இசைக்குருவி- 3- “விழிகளில் ஒரு வானவில்…”

சரண்யா தணிகாசலம்

“தேர் சென்ற பின்னாடி வீதி என்னாகுமோ?”

சில உறவுகள் எதிர்ப்பாராத சூழ்நிலையில் நம்மை வந்து சேரும். நம் காலைச் சுற்றும் பூனைபோல் இருக்கும். அதன் அன்பையும் பிரியத்தையும் நாம் உணரும் வேளையில் அது நம்மை விட்டு விலகிவிடும்.

நிரந்தரமில்லாத இந்த வாழ்வில் நம்முடன் யார் யாரோ உடன்வர, நம் வாழ்க்கையை திசைமாற்றி அத்தனை இன்பங்களும் கொடுத்துவிட்டு பின் அமைதியாய் நம்மை விட்டு விலகும் உறவின் பிரிவு அவ்வளவு எளிதில் மறைவதல்ல…..
காயங்கள் ஆறிய பின்பும் தழும்புகள் தேங்கியிருக்கும் ஓர் அமுதவிஷமே இந்த வாழ்க்கை.

மென்மையாக மெட்டமைத்து,வண்ணங்களுக்குள் காட்சியமைத்த இந்தப் பாடலின் ஆழமான சோகம் மனதைப் பிசையும்.இப்பாடலை திரையில் காண்பதற்கும், கண்கள் மூடி கேட்பதற்கும் அத்தனை வித்யாசங்கள் இருக்கும். பாடல் அத்தனை அருமையாக திரையில் காட்சியமைக்கப் பட்டிருக்கும். வண்ணங்களும், இறகுகளுமாய் சிதறிக் கொண்டு மழையில் இரவு நேரப் பயணமாய் ரம்மியமான காட்சிகளாய் படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் கண்களை மூடிக் கேட்கும்போதோ ஓர் மெல்லிய சோகம் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.

தன் குழந்தை தனக்கு வேண்டுமென்று அனுவிடம் உதவி கேட்க வரும் கிருஷ்ணா மீது அனுவிற்கு காதல் மலர்கிறது.
அந்தக் காதலை உணரும் போதே அது உதிர்ந்துவிடுமென்று அவளுக்குத் தெரியும். வலிகள் இருக்குமென அறிந்தும், அவள் காதலுணர்ந்த அந்த நொடிப்பொழுதில் மயங்குகிறாள். அவனோ தன் குழந்தையை மீட்பதற்காக அவளிடம் உதவி கேட்டு வந்த இன்னொரு குழந்தை. வயதால் வளர்ந்தாலும்,மனதால் குழந்தை. முதலில் அவனுக்கு உதவ முன்வருகிறாள், பின் அவளை அறியாமல் அவனை நேசிக்கவும் செய்கிறாள். இந்த உறவு நிஜத்தில் சாத்தியமில்லை என்று அவளுக்குத் தெரியும். இருந்தும் அவள் மனம் அவனுக்காக ஏங்குகிறது.அவளின் காதலும், ஏக்கமும் நிறைந்ததே இந்தப் பாடல்.

படம்: தெய்வத்திருமகள்
பாடல்:விழிகளில் ஒரு வானவில்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்
பாடகி:சைந்தவி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இயக்கம்; A.L.விஜய்

“உன்னிடம் பார்கிறேன்… நான் பார்கிறேன்…

என் தாய்முகம் அன்பே…
உன்னிடம் தோற்கிறேன்… நான் தோற்கிறேன்…
என்னாகுமோ இங்கே…
முதன் முதலாய் மயங்குகிறேன்…
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னைக் காட்டினாய்
கனா எங்கும் வினா”

என்வென்று தெரியாத ஒரு உறவில் இதுவரை கண்டிராத ஒர் உணர்வு அவளுக்குள். தாயில்லாது வளர்ந்த அவள் ஒரு ஆணின் வடிவில் தாய்மையை உணர்கிறாள். முன்பு அவன் மீதிருந்த வெறுப்பு அக்கறையாய் மாறி பின் அன்பில் வந்து நிற்கிறது.

“நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ…”

“தேர் சென்ற பின்னாடி வீதி என்னாகுமோ” எனும் வரியில் அத்தனை பிரிவின் வலியும்,பயமும் நிறைந்திருக்கிறது. ஒருவரின் முதல் சந்திப்பில் நமக்கு தெரிவதில்லை, வரும் காலத்தில் அவர் நம் வாழ்வில் எவ்வளவு அழகான உறவாகவும், நம் மனதிற்கு எத்தனை நெருக்கமானவருமாக இருக்கப்போகிறாரென்று. அப்படியொருவர் பிரிய நேரும் போது, அதை மனம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வது இல்லை.தனிமையின் நிழலில் இருப்பவளுக்கு, யாரோ ஒருவரின் வருகை தேவையற்றதாக இருக்கும், பின் அந்த வருகை ஒரு குழந்தையென்றும்,சிறிது நேரத்தில் அந்தக் குழந்தை சிரித்துக்கொண்டே அவளைக் கடந்துபோனதும் மறுபடியும் அந்தத் தனிமையின் இருளில் வாடுபவள் போல்தான் இங்கு இவளும்.

அவன் ஏன் இவள் வாழ்க்கையில் வந்தான்?

அத்தனை இன்பங்களை உணரச்செய்து, தன்னை தனக்கே அடையாளம் காட்டிவிட்டு சட்டென்று பெய்து முடிந்த மழையைப்போல் காணமற் போகிறான். இவையெதற்கும் அவளிடத்தில் பதிலில்லை.அவன் வந்து சென்ற சுவடுகள் மட்டும் அவள் வாழ்க்கையில் சிதறிய வண்ணங்களாய் மின்னுகின்றன.அவன் நினைவுகள் மட்டும் அவளுக்கு சொந்தம்.  என்றோ ஒரு நாள் தன்னை விட்டுப் பிரிந்திடுவான். அந்தப் பிரிவின் நொடி இவளை என்ன செய்யும்?

அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு வீதியானது, அந்த தேர் கடந்து சென்றதும் உருக்குலைந்து, தேர் கடந்து சென்ற சுவடுகளை மட்டும் கொண்டிருக்கும். அமைதியான வீதியில் அந்தத் தேரானது கடந்து சென்றதும்
ஆரவாரங்கள் அடங்கி அனாதையாய்ப் போகும். அதேபோல்தான் அவள் மனதும்.
அவன் சென்றபின் எதிர்கொள்ள நேரும் வெற்றிடத்தை எண்ணிக் கொள்ளும்.

“நான் உனக்காகப் பேசினேன்
யார் எனக்காகப் பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன் வீசினேன்…”

அவன் குழந்தைக்காக அவள் பேசுகிறாள். ஆனால் அவளுக்காக அவனிடம் பேச யாருமில்லை. அவள் எண்ணங்கள் அவளுக்குள்ளே பூக்கத் துவங்கியது. அவள் மனதைத் தாண்டி அவள் எண்ணங்கள் பயணிக்கவில்லை.

“அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்பு தானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி …”

தன் தந்தையிடம் உணராத அன்பினை, ஒரு குழந்தைக்கு தந்தையாய் இருக்கும் அவனிடம் உணருகிறாள். அந்த அன்பில் நெகிழ்ந்து போகிறாள். அவன் மீதுள்ள உணர்வுகளில் அவள் தன்னை உணருகிறாள் இருப்பினும் அதை சொல்ல அவளிடம் வார்த்தைகள் இல்லை. தயக்கங்கள் இருக்கின்றன.

“நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி”

எத்தனை முறை தனக்குத்தானே அவள், இவை எதுவும் சாத்தியமில்லை என சொல்லிக்கொண்டாலும், அதைக் கேட்க மறுத்து அவனுக்காக அவள் மனம் ஏங்குகிறது. அவள் அந்த வழக்கில் வென்று அவனிடம் அவன் குழந்தையை ஒப்படைத்ததும்,அவன் சென்றுவிடுவான். அவனுக்காக வழக்கில் வாதாடி அவனயே இழந்துவிடுவாள். ஆயினும் அவன் குழந்தையை (சந்தோஷத்தை) அவனிடம் கொடுக்க அவளே வழி செய்வாள்.

இது அத்தனை மென்மையான இசையாய் இருந்தாலும் வரிகள், பாடலை கனக்கச் செய்கிறது.
அழகான காட்சிகளுக்குள் ஆழமான வரிகள், அவள் மனம் வலித்துக் கொண்டிருந்தாலும் அவன் அருகாமையில் அவனை இரசித்துக்கொண்டும் அவன் அன்பில் நனைந்து கொண்டும் இருக்கிறாள், இவை எதுவும் நிரந்தரமல்ல என்று உணர்ந்தபடி…

‘கீச் கீச்’ தொடரும்…..

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button