![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/04/images-2020-04-22T015358.199-780x391.jpeg)
மனிதன் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களும் வாழும் இப்பூமிப் பந்தை “காதலும் காதல் சார்ந்த இடமும்” என்று சொன்னால் அதை மறுப்பதற்கில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களை தங்கள் வாழ்க்கையை சலிப்புறாமல் இயங்க வைத்ததும், இயங்க வைத்துக் கொண்டிருப்பதும் இனி இயங்க வைக்கப் போவதும் “காதல்” ஒன்றுதான் என்று உத்திரவாதம் கொடுக்கலாம். மனிதர்கள் அவர்களின் மீது வைத்துள்ள காதல் மனித இனத்தைப் பல்கிப் பெருக வைத்தது. காதல் மனிதர்களை படைப்பாளிகளாக்கியது. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை சங்க இலக்கியங்கள் காதலை அக உணர்வுகளாக வீரத்துடன் சேர்த்துக் கொண்டாடியது. இந்த இயற்கை அல்லது அறிவியல் உணர்வான காதலை ஆவணப்படுத்தும் போது பெரும்பாலும் அனைத்து படைப்புகளும் செய்ததையேதான் செய்கின்றன. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். முக்கியமாக ஒரு பெண் காதல் வயப்படுவதை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் சொல்லக்கூடிய படைப்புகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் K.S. அசோகா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தியா என்ற இந்த கன்னட படம் வழக்கமாக சொல்லப்பட்ட காதல் கதைகளிலிருந்து கொஞ்சம் விலகி நிற்கிறது.
ரசிகனை “கலா” ரசிகனாக மாற்றுவது என்பது ரசிகனை அவன் அனுபவித்து ரசிக்கக்கூடிய படைப்புக்குள் இயங்க அனுமதிப்பது. “மவுனத்தை உரக்கப் பேசும் திரைமொழி” என்ற ஜப்பானிய திரைப்படங்கள் குறித்த ஒரு கட்டுரையில் மிஷ்கின், எப்படி ஒரு ரசிகன் “கலா” ரசிகனாக மாறுகிறான் என்று சொல்லியிருப்பார். ஒரு படைப்பு முழுமையடையும்போது அது பார்வையாளனை / வாசகனை / ரசிகனை தனக்குள் இயங்க அனுமதிப்பதில்லை. வழக்கம் போல பத்தில் பதினொன்றாக பார்வையாளன் / வாசகன் / ரசிகன் அதை கடந்து போகிறான். ஆனால் முற்றுப்பெறாத அல்லது அளவாக சொல்லப்பட்ட ஒரு படைப்பு, பார்வையாளனின் / வாசகனின் / ரசிகனின் கற்பனையைத் தூண்டுகிறது. அது அவனை கூட்டுப் படைப்பாளியாக இயங்க அனுமதிக்கிறது. அவன் சொல்லப்படாத மீதமுள்ள அந்த படைப்பின் வெற்றிடத்தை தன் கற்பனையால் நிரப்ப முயல்கிறான்.
இந்தக் கோட்பாட்டை அப்படியே இந்தப் படத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். இந்தப் படத்தினுடைய முடிவு படம் பார்த்த அனைவருக்கும் கண்டிப்பாக அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். ஒருவேளை படம் அப்படி முடியாமல், தியாவும் ஆதியும் அல்லது தியாவும் ரோஹித்தும் சேரும்படி முடித்திருந்தால் இந்தப் படமும் வழக்கமான ஒரு காதல் படமாகவோ அல்லது வெண்ணிற இரவுகள், இயற்கை வரிசையிலோ இருந்திருக்கும். இப்போது படம் விட்டுப்போன அந்த வெற்றிடத்தை கீழ்கண்டவாறு நாம் கற்பனை செய்து நிரப்பிக் கொள்வதற்கான இடம் இருக்கிறது.
1) தியாவும் தற்கொலை செய்து கொள்வது.
2) மீண்டும் ரோஹித்துடன் இணைவது (தியா பாத்திர வடிவமைப்பைப் பார்க்கும் போது அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்)
3) கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலே, வேறு ஏதாவது ஒரு வழியில், தனக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமாகவோ (உதாரணம்: வாரணம் ஆயிரம்) அல்லது சமூக சேவைகள் செய்வதன் மூலமாகவோ தன் காதலின் தோல்வியிலிருந்து மீள முயற்சிப்பது.
இதே போல் படம் பார்த்த அனைவருக்கும், படம் முடிந்ததற்குப் பிறகு, இனி தியாவின் நிலை என்ன? அவள் என்ன ஆவாள்? என்பது பற்றிய வெவ்வேறு வகையான கற்பனைகள் தோன்றலாம். அதற்கான வாய்ப்பை இந்தப் படம் கொடுப்பதால் இது கண்டிப்பாக ரசிகனை “கலா” ரசிகனாக மாற்றும் படம்தான். மேலும் நாம் அடிக்கடி பார்க்கும் நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்றோ அல்லது கல்லூரியில் நம்முடன் படிக்கும் பெண் மாதிரியோ தியாவை காட்சிப்படுத்தியிருப்பதும் தியா நம் மனதிற்கு நெருக்கமாக இருப்பதற்கு இன்னுமொரு காரணமாக இருக்கலாம்.
மற்ற காதல் படங்களிலிருந்து இந்தப் படம் வேறுபடும் இன்னொரு இடம், படத்தின் முதல் 26 நிமிடங்கள். இந்த முதல் 26 நிமிடங்களும் ஒரு பெண் ஒரு ஆணைக் காதலிப்பதான அழகின் உச்சம். உதாரணத்திற்கு தியா முதல் முறை ரோஹித்தைப் பார்க்கும் போது காட்டப்படும் தியாவின் இதயத்துடிப்பு. மீதம் படத்தில்…
மீண்டும் தியா வேறொரு குணாளனை சந்தித்து அவன்பால் காதலும் கொள்ளலாம்…