தொடர்கள்
Trending

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;13 ‘மினிமலிசத்தின் அதிகபட்ச வாதம்’ – சுமாசினி முத்துசாமி

தொடர் | வாசகசாலை

போன வாரம் பதிவை வாசித்துவிட்டு சிலர், “அனைத்து மதங்களிலும் சில பழமைவாத குழுக்கள் இருக்கும்”  என்றனர்.   “இந்தக் காலத்திலும் அமெரிக்காவில் இப்படியா?, ஏதோ பத்து, பதினைந்தாம் நூற்றாண்டின் மாயக் கதை போல் இருந்தது” என்று சில தோழர்கள் வாட்ஸப்பில் அனுப்பி இருந்தார்கள். அமெரிக்காவிலேயே இருக்கும் தோழர்கள் சிலரோ, “கவனிக்கவே இல்லை! இங்கே இப்படி ஒரு உலகம் திகிலூட்டுகிறது(!)” என்றும் எழுதி இருந்தனர். எந்த ஒரு கூட்டு சமூகத்தின் குரலையும் மாயக் கதைகள் என்று வியந்து, கடந்து விடக் கூடாதவை.  திகிலூட்டுகின்றன என்று தள்ளி வைக்கவும் கூடாதவை. அவற்றின் குரலுக்குள் நாம் விடை தேட வேண்டிய அறைகூவலும் இருக்கலாம். நம் முகத்தில் அறைந்து சொல்லும் ஒரு இறுதி எச்சரிக்கையும் இருக்கலாம்.

உலகின் வரலாறு என்பது ஒடுக்குகிற அல்லது ஒடுக்கப்படுகிற மனித சமூகத்தின் வரலாறும் கூட. மனித சமூகத்தை ஒருங்கிணைப்பதிற்குப் பதில் பிரிக்கும் ஒவ்வொரு காரணிகளும் கவனிக்கப்பட வேண்டியவை. அது ஆண் – பெண் என்ற பேதமோ, மதமோ, மொழியோ, கலாச்சாரமா எதுவாகட்டும்! பிரித்து உணர்த்தினால் சில விஷயங்கள் எளிதடைந்துவிடும். சில விஷயங்கள் சிக்கலாகி விடும். சில நேரங்களில், ஏதோ ஒரு புள்ளியில் இந்த சிக்கல்கள் பெரு முடிச்சாகி விடுகின்றன. அந்த முடிச்சு சக மனிதனின் கழுத்தைத்தான் பெரும்பாலும் இறுக்குகின்றன. எந்த முடிச்சு இறுக்கும், எது நம்மை வலிமையாக்க சேர்த்துக் கட்டும் என்பதைத் தெரிந்து கொள்வது நம் கடமை.

மதம் என்பது இவற்றுள் மிகப் பெரிய, முக்கியமான முடிச்சு. நிர்க்கதியான தனி மனித உள்ளத்தின் முதல் மற்றும் கடைசி ஆறுதல் ‘கடவுளின் துணை’ என்றே கருதப்படுகிறது. மதங்கள் போதிப்பது அறமாக மட்டும் இருக்க வேண்டும். அதை விடுத்து ‘பெருமைகளை’ தூக்கிச் சுமக்கும் பொழுதும், கை நீட்டி ‘இது தவறு/ சரி’ என்று கூறும் பொழுதும், மதம் கூட்டுச் சமூகத்தின்  கழுத்தை நெரிக்கிறது. இந்த சுருக்குக் கயிற்றில் லட்சம், கோடி மக்கள் உயிர் மாய்த்துக்கொண்டே இருக்கின்றனர். மதம் சொல்லும் அறத்தின் அர்த்தம், சில சமயம் அதைத் தூக்கிச் சுமப்பதாய் நினைக்கும் சில நாக்குகளினால் அனர்த்தம் ஆகி விடுகிறது.  மதத்தின் பெயரால் சூறையாடப்பட்ட எந்த உயிருள்ளும் ஒரு பந்து உருண்டுகொண்டே இருக்கும். அது அழுத்தும் வலி கொடியது.

இப்படியான ஒரு உயிர் வலியோடு ‘ஆமிஷ்’ எனப்படுபவர்கள் ஒரு முந்நூறு ஆண்டுகளுக்கு முன் 1720களில் அமெரிக்காவில் குடியேறினர். இவர்கள் அனபாப்டிஸ் (Anabaptist) புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். அதாவது, குழந்தைப் பருவத்தில் அல்லாது வயது முதிர்ந்த பின் ஞானஸ்நானம் செய்யும் வழக்கம் உடையவர்கள். எங்கும் எதிலும் உள் முகமாக ‘சமாதானம்’ என்ற நோக்கத்தைக் கடைப்பிடிக்க  முயல்பவர்கள். அரசும் தேவாலயமும் பிரிந்தே இருக்க வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். இதற்காகவே சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்தவர்கள். அல்ட்ரா ஆர்த்தோடாக்ஸ் யூதர்கள் போலவே கூட்டுச் சமூகமாக வாழ்பவர்கள்.

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் ‘ஹெர்ஷி பார்க்’ என்று ஒரு பெரிய பொழுதுபோக்குப் பூங்கா உள்ளது. இது உலகப் புகழ்பெற்ற ஹெர்ஷி (Hershey) சாக்லேட் உரிமையாளர்கள் கட்டியமைத்தது. மிகப் பெரியது. குழந்தைகள் விளையாட்டு மற்றும் கேளிக்கைகளின் கூடாரம். அருகிலேயே ‘சாக்லேட் வேர்ல்ட்’  எனப்படும் பெரிய சாக்லேட் விற்பனை கிடங்கும் உள்ளது. அதில் சாக்லேட் செய்யப்படும் விதத்தை வேடிக்கையாக விளக்கவும் செய்வர்.  எங்கள் வீட்டிலிருந்து காரில் சென்றால் இரண்டு, மூன்று மணி நேரம்தான். குழந்தைகளை ஈர்க்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பையனையும் வைத்துக்கொண்டு, ஹெர்ஷியிற்கு அருகிலும் வசித்துக்கொண்டு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் அங்கு செல்லவில்லை. காண்போர் அனைவரும் இதை தெய்வக் குற்றம் போலவே அறிவுறுத்திக் கொண்டிருந்தனர். தோஷத்தைக் கழிக்க நாங்களும் யாத்திரை மேற்கொண்டோம். அப்பொழுது இதன் அருகில் பார்க்க வேண்டிய வேறு சில இடங்களையும் தேட ஆரம்பித்தோம். அப்படித்தான் ‘ஆமிஷ் வில்லேஜ்’ கண்களில் பட்டது.

இங்கு, ஒரு செட் (set) போல தனியாக ஒரு வீடு, தொழுவம் (அங்கே இரண்டு மாடு, குதிரை, இரண்டு கோழி), தொழில் செய்யும் இடங்கள், பள்ளி என்று எல்லாம்  இருக்கும். இவர்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள இந்த செட்டை சுற்றிக் காண்பிப்பர். பின் நிஜமான ஆமிஷ்  வீடுகளையும், மக்களையும், அவர்கள் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளச் சின்ன சின்ன குழுவாக ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு போய் காண்பிப்பார்கள். காசு வாங்கிக்கொண்டுதான். டூர் கைடு போல் ஒருவர் இவற்றை விளக்கிக் கூறுவார். அவர்கள் வசிக்கும் வீடு, தொழில்/ விவசாயம் செய்யும் இடம், உண்ணும் உணவு, குழந்தைகள் வளர்ப்பு முறை என்று பலவற்றைப் பற்றி கூறுவார்.

மிகப் புதுமையாக இருந்ததால், பார்வையாளர்களும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தனர். ஒருவர், அவர்கள் வாழ்வுமுறையின் அடி நாதம் பற்றிக் கேட்டதற்கு, “வாழ்க்கையில் அவர்களின் நோக்கம் பைபிளின் படி வாழ்ந்து, கடவுளைப் பிரியப்படுத்தி, பரலோக ராஜ்ஜியம் அடைவதே ஆகும்” என்றார் டூர் கைடு. அதாவது பூமியில் வாழும் வாழ்க்கை, அவர்களுக்கு ஒரு பயணம் போல்.  பரலோக ராஜ்ஜியத்தை அடைய முற்படும் இவர்களின் இந்த பயணத்திலும் நிறையச் சட்ட திட்டங்களும், விதிமுறைகளும் உண்டு.

திடீரெனக் கேட்டால், மின்சாரம் இல்லாமல், வெளியே செல்வதற்குக் குதிரை வண்டி மட்டும் உபயோகிப்பவர்கள் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்கள் என்று தோன்றும்? எனக்கு பதினெட்டாம் நூற்றாண்டு என்று தோன்றியது. ஆனால் இன்றும் இவர்கள் இப்படிதான் இன்னும் வாழ்கிறார்கள். வீட்டில் மின்சாரம், தொலைபேசி, மொபைல் போன் கிடையாது. அவர்களின் வீட்டை வெளி உலகோடு இணைக்கும் மின்சார ஒயர்கள், தொலைப்பேசி ஒயர்கள், வை-பை தொடர்பு எல்லாம் அவர்கள் வாழ்க்கை முறையில் தடை. இந்த தொடர்புகள் பொதுச் சமூகத்தோடு அவர்களை இணைத்து, ஆண்டுகளின் ஓட்டத்தில் பொதுச் சமூக நீரோடையில் அவர்களை இணைத்து விடுமோ என்று பயப்படுகின்றனர். அவர்கள் மட்டுமாக  தனித்து இயங்குகிறார்கள்.  அனைத்து சொகுசுகளையும் தவிர்த்து வாழ்கிறார்கள்.

‘ஒரு நிற’ சட்டை, கருப்பு பாண்ட்தான் ஆண்களின் உடை. பெண்கள், நைட்டி போல் நீளமான கழுத்தை ஒட்டிய, தளர்வான ரவிக்கை மற்றும் பொருத்தப்பட்ட இடுப்பு கொண்ட ‘ஒரு நிற’ ஆடைகள் அணிவர். திருமணமான பெண்கள் தலைமுடியை ஒரு வெள்ளை தொப்பி (bonnet) போன்ற ஒன்றால் மூடி இருப்பர். ஆண்கள் தாடி வைத்திருப்பர். பெண்கள் முடி வெட்ட அனுமதி இல்லை. எந்த விதமான ஆபரணங்களும் கிடையாது. அழகு சாதனப் பொருட்கள் கண்டிப்பாக கிடையாது.

மிக எளிய விவிலிய வாழ்க்கை முறை இவர்களது லட்சியம். அடிப்படை என்று நாம் கருதும் வெயிலுக்கு ஃபேன், குளிருக்கு மின்சார ஹீட்டர்கள் கூட கிடையாது. பெரிய கூட்டுக் குடும்பம் இவர்களுடையது. பெண்களுக்கு வேலை, வேலை, வேலை மட்டுமே. துரிதப்படுத்தும் சாதனங்கள் இல்லாமல் அனைத்தும் கையால் செய்ய வேண்டும். அமெரிக்க உணவு தயாரிக்கும் முறையிலிருந்து இது நேர் எதிர்! இங்கு, என்னைப் போல் பெண்கள் பெரிதும் விரும்புவது வேலையை எளிதாக்கும் இந்த சாதனங்களின் உதவியைத்தான். அடுத்து, வார இறுதியில் சமைத்து பிரீசரில் வைத்து சாப்பிட அவர்களால் முடியாது. எல்லா வேளையும் உணவு தயாரிக்க வேண்டும்.

ஆண்கள், உழவு, தச்சு, மாடு வளர்த்தல், கை வேலைப்பாடுகள் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். தொழிலுக்காக டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சில சாதனங்களை உபயோகிக்கின்றனர். கொஞ்சம் சட்ட திட்டங்களைத் தளர்த்தி, சில கூட்டு சமூகத்தில் அந்தக் குழுவின் தலைவர் அனுமதித்திருந்தால் டீசலில் இயங்கும் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்றவையும் உபயோகிக்கப் படுகின்றது.

நம் ஜல்லிக்கட்டு மாடுகள் நமக்கு குடும்ப உறுப்பினராய் இருப்பது போல், ஆமிஷ்களுக்கு அவர்கள் குதிரைகள். நம்மூரில் ஒரு நாளுக்கு பதினெட்டு மணி நேரம் உழைத்தால் கூட, நிலத்திலும் தச்சுத் தொழிலும் இத்தனை பெரிய குடும்பத்திற்கு அரை வயிறு கஞ்சிதான் மிஞ்சும். அதற்கு, அமெரிக்கா பரவாயில்லை. தாத்தா, பையன், பேரன்கள், அண்ணன், தம்பிகள் என்று குடும்பமாகச் சேர்ந்து உழைக்கின்றனர். விதிவிலக்காக, தொழில் வியாபாரத்திற்காக மட்டும் சிலர் இணையச் சேவையை மற்றவர்களின் உதவியோடு உபயோகிக்கின்றனர்.

அவர்களின் கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில், முகம் வரையாத சில பொம்மைகள் விற்பனைக்கு இருந்தன. முகத்தை விட அகமே முக்கியம் என்று உணர்த்துவதற்காக சிறு வயதிலேயே இப்படி பொம்மைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். போட்டோ எடுப்பது கூட தனி மனிதர்கள் மேல் கவனத்தைத் திருப்பும் என்பதினால், இவர்கள் போட்டோ கூட எடுப்பதில்லை. மிக துரதிஷ்டவசமாக 2016ல் இவர்களின் பள்ளியில் ஒரு மாஸ் துப்பாக்கிச் சூடு நிகழ்வு நடந்துள்ளது. அதில் இறந்த குழந்தைகளை கண்டுபிடிக்கக் கூட அவர்களிடம் போட்டோ இல்லை என்று டூர் கைடு கூறியதை  ஜீரணிக்க எனக்கு வெகு நேரம் பிடித்தது.

அவர்கள் பள்ளி முறை பற்றியும் பேச வேண்டும். ஒரே அறை கொண்ட பள்ளி. படிக்கப் பள்ளியில் கால் எடுத்து வைக்கும் குழந்தை முதல் பன்னிரண்டு, பதிமூன்று வயது வரை (எட்டாம் வகுப்பு) உள்ள குழந்தைகள் அனைவரும் ஒரே அறையில்தான் கல்வி கற்கின்றனர். பெரிய பிள்ளைகள் சிறு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பர். அடிப்படை ஆங்கிலம், கணிதம், அறிவியல், வாழ்க்கைக் கல்வி போன்றவைதான் கல்வித் திட்டம்.

<5>

வீடு தீப்பற்றிக் கொண்டாலும், குதிரை வண்டி குடை சாய்ந்தாலும், விபத்து ஏதேனும் நடந்தாலும் எல்லாம் கடவுளின் செயல் என்று நம்புகிறார்கள். இவை போல் எதுவும் நடந்து விடக்கூடாது என்ற முன்னேற்பாடுகள் பெரிய விதத்தில் இருப்பது போல் தோன்றவில்லை. இவர்களைப் போலவே சிறு சிறு கொள்கை வித்தியாசங்களோடு இருக்கும் மற்றொரு கூட்டுச் சமூகம் ‘மென்னோனைட்ஸ்’. உடை முதல் கடவுள் வழிபாடு வரை சிறு வேறுபாடுகள் உண்டு.  (ஆமிஷ்களின் தாய் சமூகம் இவர்கள். ஆனால் தாயை விட சேய்கள் பயங்கர ‘ஸ்ட்ரிக்ட்’). நமது சத்தீஸ்கர் மாநிலத்திலும் இந்த ‘மென்னோனைட்ஸ்’ கிறிஸ்துவ சபை உள்ளது.

கொஞ்ச தூரம் என்றால் நடந்து செல்லலாம். இன்னும் அதிகம் என்றால், குதிரை வண்டி. அதையும் தாண்டி, கொஞ்சம் தொலைவில் மருத்துவமனை போல் மிக முக்கியமான இடங்களுக்குச் செல்ல நேரலாம். அப்படி சமயங்களில், பொதுச் சமூகத்தின் உதவியை நாடுகின்றனர். காரில் இவர்களை அழைத்துச் சென்று சேவை செய்பவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களை வம்பிழுத்து, தொல்லை கொடுக்கும் பொதுச் சமூகத்து ஆட்களும் இருக்கின்றனர்.

திருமணம் என்பது அவர்களுக்குள் மட்டுமே. முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டிற்கு வந்தவர்கள் கிட்டத்தட்ட 500 பேர் மட்டுமே. அவர்களிலிருந்து பல்கிப் பெருகியவர்கள்தான் இப்பொழுது இருக்கும் அனைவரும்.  இன்று கிட்டத்தட்ட 270,000 மக்கள் இருக்கின்றனர். மிக நெருங்கிய சொந்தத்தில் தலைமுறை தலைமுறையாகத் திருமணம் செய்து கொள்கின்றனர். இவை மரபணு நோய்களை அவர்களுக்கு உருவாக்குகின்றது. இந்த மரபணு நோய்களை ஆராய்வதற்கே, சில மருத்துவர்கள் இவர்களின் சமூகத்தில் விரும்பி பணி  புரிகின்றனர்.

எவரேனும் பொதுச் சமூக மக்களைத் திருமணம் செய்துகொண்டால், மொத்த சமூகமும் சேர்ந்து அவர்களை ‘அன்னம் தண்ணி புழங்காமல் தள்ளி’ வைத்து விடுகின்றனர். எதிலும் ‘சமாதானம்’ என்பவர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை மட்டும் ஒட்டு மொத்தமாக ‘விலக்கி’ (shunning) வைக்கின்றனர் என்பதைப் பரமபிதாதான் விளக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தில் அவர்களின் கொள்கை கொஞ்சம்  திரிந்து,  வன்முறையின் சாயல் தெரிகின்றது. விவாகரத்து என்பது கிடையவே கிடையாது. செயற்கை கருத்தடை முறைகள் எல்லாம் தடை. கணவர் சொல்லே முடிவு. இதுவும், ஆண்களின் சமூகம்தான்.

அன்பு வற்றி, ‘மதம்’ ஏறிய மனமும்,  மதத்தின் சட்டங்களை மட்டும் தூக்கிப் பிடிக்கும் சில நபர்களால் குடும்ப வன்முறை வழக்குகளும் உண்டு. வன்புணர்வு, குழந்தை பாலியல் துஷ்பிரயோக கதைகளுக்கும் குறைவேவில்லை. இப்படி சக உயிரை வதைக்கும் எவரையும் மனிதர்கள் என்றே கூற முடியாது. மதத்தினுள் எப்படிப் பொதிந்து பார்க்க முடியும்? ஒன்றை மட்டும் என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சனாதனமோ, பைபிளோ, ஏன் பெரும்பான்மையான மதங்கள் பெண்களை அடிமைகளாகவே கருதக் கூறுகின்றன? இதைக் கடவுள் கண்டிப்பாகக் கூறி இருக்க மாட்டார். கடவுளின் பெயர் சொல்லி சில ஆண்கள் எழுதினார்கள் என்றால், அது தவறு என்று தெரிந்தவுடன் தள்ளி வைத்து விட்டுச் செல்வதுதானே அறிவின் வளர்ச்சி? சரி,  இது பெரிய கேள்வி. இப்போதைக்கு விட்டு விடுவோம்!

(ஆமிஷ் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால் நிறைய டாக்குமெண்டரிகள் YouTube – ல் உள்ளன. அவர்களை நல்லவர்களாகவும், பழமைவாதிகளாகவும், வில்லன்களாகவும் காட்டும் வெவ்வேறு திரைப்படங்களும் உள்ளன.)

“வாழ்வு கொண்டாடுவதற்கு” என்று வாழும் பொதுச் சமூகத்தின் அங்கம் நாம். இருந்தும் துயரங்களினால் வாழ்வை நிறைத்துள்ளோம். வாழ்வு என்பது துயரப்பட்டு, துன்பப்பட்டு, கஷ்டப்பட்டு எந்த கேளிக்கைகளுக்கும் இடம் இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள். இருந்தும், மினிமலிச கொள்கையோடு, பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருப்பதாகக் கூறுகின்றனர்.  இது பெரிய முரண்.

Members of the Amish leave the U.S. Federal Courthouse Tuesday, Aug. 28, 2012, in Cleveland. A breakaway religious group spent months planning hair-cutting attacks against followers of their Amish faith, U.S. prosecutors said Tuesday as they laid out their case against 16 people charged with hate crimes. Such hair-cuttings are considered deeply offensive in the traditional Amish culture. (AP Photo/Tony Dejak)

முதல் நாள் பிரமாண்ட மார்கெட்டிங்கின் உச்சமான ஹெர்ஷி  பார்க்கையும், மறு நாள் ஆமிஷ் வில்லேஜையும் நாங்கள் பார்த்தோம். இரண்டு இடங்களுக்குமான வேறுபாடு அமெரிக்க வாழ்வையும், நெல்லையில் வீட்டுக் கூட்டில் மட்டுமே வாழ்ந்து விடத் துடிக்கும் மனதையும் சேர்த்து உலுக்கியது. ஆமிஷ் விதைத்த உணர்வுப்பூர்வமான ஆத்மீகமான கேள்விகளின் எண்ணிக்கையை மனதிற்குள் புதைக்க வெகு நாட்கள் ஆகியது.

பிரயாணங்களும், புது இடங்களும் வாழ்வின் இரகசியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டவிழ்க்க உதவுகின்றன. விடைகளை அல்ல, நிறைய நிறையக் கேள்விகளை நமக்கு அதன் பாதைக்குள் பொதிந்து வைத்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும், சமூகமும் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் தருணங்கள் அமையும். அப்பொழுது சில மைல் கற்களை வேறு விதத்தில் கடந்திருக்க வேண்டும் என்று தோன்றும். இப்படியான அனுபவங்களின் கோர்வைதானே வாழ்வின் சாரம்..! ‘டைம்ஸ் ஸ்கொயரில்’ சுற்றிச் சுற்றி எரியும் பெரிய பெரிய திரைகளைப் பார்ப்பதை விட, அதன் நடுவே நடமாடும் கண்களைப் பார்ப்பதில் ஒரு ஆர்வம் எனக்கு. அந்தக் கண்களில் எனக்கான விடை இருக்கலாம்.  கண்களின் ஒளியை விட எந்த ஆயிரம் வாட்ஸ் விளக்குகளும் நமக்கு வழி காட்ட முடியாது. சரிதானே?

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button