தொடர்கள்
Trending

காகங்கள் கரையும் நிலவெளி; 6 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

ஓணான்களை இரக்கமின்றிக் கொல்லுதல் அல்லது வன்முறையின் அழகியல்:

அப்போது நாங்கள் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். இந்த ‘நாங்கள்’ என்பது புரிசை அரசு உயர்நிலைப் பள்ளியில் எங்கள் பிரசித்தி பெற்ற நால்வர் அணியைக் குறிக்கும். பிரபாகரன், மோகன்தாஸ், முருகன், சரவணன். எங்கள் ஊரைச்சுற்றி பெரியதும் சி றியதுமாய் இரண்டு ஏரிகள். அதற்கு முன்பு எங்கள் ஏரியைவிட இரண்டு மடங்கு பெரிய புரிசை ஏரி. அதன் கீழே நீண்டிருக்கும் சாலையில் நடந்து சென்றுதான் நாங்கள் தினமும் பள்ளிக்குப் போவோம். புரிசை வடதமிழ்நாட்டின் தெருக்கூத்துக்குப் பெயர்போன ஊர். பள்ளிக்குப் போகும்போது எங்களது பிரதான பொழுதுபோக்குகள் இரண்டு. ஒன்று அருகாமை சர்க்கரை ஆலைக்குக் கரும்புப் பொதிகளை ஏற்றிப்போகும் லாரிகளில் கரும்பு பிடுங்கி சாப்பிடுவது. இரண்டாவது ஓணான்களை வேட்டையாடுவது.

‘எங்களூரில் ஒரு செவிவழிக் கதை புழங்கிக் கொண்டிருந்தது. ராமரும் லட்சுமணரும் இலங்கைக்கு சீதாதேவியை மீட்கச் செல்லும்போது அணில் உதவி செய்தது. ஆனால் ஓணான் ஒண்ணுக்கடித்தது. ஆகவே ஓணான்களைப் பார்த்தவுடன் கொல்ல வேண்டும். இந்தக்கதையை யார் எங்களிடையே உலவவிட்டது என்று அதன் ஆதி அந்தம் எனக்குத் தெரியாது. ஆனால் பள்ளிப் பிராயத்திலிருந்த அனைவரும் ஆண் பெண் பேதமின்றி இந்த உயிர்க்கொல்லிக் கதையை வகை தொகையில்லாமல் நம்பினோம். அப்படியான வாய்வழி பரவிய வதந்திக் கதைக்கு ஏராளமான ஓணான்களை நாங்கள் உயிர் போக்கியுள்ளோம்.

பிரபாகரன் எனக்கு மூன்று மாதங்கள் மூத்தவன். மோகன் நான்கு மாதங்கள். முருகனும் நானும் ஒரே மாதத்தில் ஆனால் வேறு வேறு தேதிகளில் பிறந்தவர்கள். ஆகவே இயல்பான நெருக்கம் உண்டு இருவருக்கும். மூத்தவர்களான மோகனும் பிரபாகரனும்தான் எங்கள் கூட்டத்தின் தலைவர்கள். அன்றன்றைக்கு கொல்லப்படபோகும் ஒணான்களின் எண்ணிக்கையை அவர்கள் இருவர்கள்தான் பெரும்பாலும் தீர்மானிப்பார்கள். எங்கள் குழுவில் இது எழுதப்படாத விதி.

ஏரியின் மதகுக்குப் பக்கவாட்டில் கிளை பிரியும் ஒத்தையடிப் பாதை உண்டு. உள்ளே நுழைந்ததும் மனிதக் கழிவின் வாடை மூக்கை துளைக்கும். அதையெல்லாம் தாண்டி தென்னம் ஈர்க்குகளை நாங்கள் ஒளித்து வைக்கும் இடம் ஒன்று இருந்தது. நெடிய பனைமரங்கள் காற்றுடனான சலிக்காத உரையாடல். உடும்புகளின் திடீர் அரவம். பயம். இதயம் சட்டைக்கு வெளியே துடிப்பதான திக் பிரமை. இதுவே எங்கள் பிரதான காலை நேரம். காலையில் பள்ளிக்கு செல்லும்போது நாங்கள் மாணவர்கள். மாலை வீடு திரும்பும்போது கொலைகாரர்கள். எத்தனை எத்தனை ஒணான்களைத் தென்னை ஈர்க்கில் சுருக்கிட்டு சந்தியா வேளைகளில் கொன்றிருப்போம். கணக்கே இல்லை. எங்கள் பாடப் புத்தகங்கள் அழுக்கேறி மட்டுமல்ல இரத்தப் பிசுபிசுப்பின் வாடையும் ஒருங்கே கொண்டது.

ஒருநாள் நானும் முருகனும் தனித்துச் செயல்படுவது என்று தீர்மானித்தோம். அதற்கான செயல் திட்டங்களை முருகன் தீர்மானித்தான். அதை ஆமோதிப்பது மட்டும்தான் என் வேலை. அந்த நால்வர் கூட்டத்தில் சுருக்கில் தொங்கும் ஒணான் இறந்துவிட்டதா அல்லது உயிர் இன்னும் மிச்ச சொச்சமிருக்கிறதா என்று சோதிக்கும் வேலை என்னுடையது. ஒணானின் கழுத்தில் பெரும்பாலும் சுருக்கிடுவது மோகன் அல்லது பிரபாகரன்தான். இருவரில் யாரேனும் விடுப்பிலிருந்தால் அந்தப் பொறுப்பு முருகனுக்கு வரும். அந்த வாய்ப்பு எனக்கு அத்தி பூத்தார் போலத்தான் வரும். அந்த அரிய வாய்ப்புக்கான என்னுடைய கடவுளின் மன்றாட்டுகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

அந்த நாளும் வந்தது. மோகனும் பிரபாகரனும் அன்றைய தினம் பள்ளிக்கு வரவில்லை. எங்கள் இருவரின் சிறிய மூளை பெரிய அளவிலான திட்டத்தை வகுத்தது. அன்றைய தினம் ஏனோ மெதுவாகக் கடந்தது. பள்ளியிலிருந்து வயிறு உப்புசம் என்று பொய் சொல்லிவிட்டு நானும் முருகனும் வீட்டுக்குத் திரும்பினோம். வழக்கமாக நாங்கள் ஒளித்து வைக்கும் இடத்தில் அல்லாமல் வேறு ஒரு இடத்தில் எங்கள் கொலைக் கருவியான தென்ன ஈர்க்கை ஒளித்து வைத்திருந்தோம். அதை எடுக்கப் போகும் தருவாயில் உண்மையிலேயே முருகனுக்கு வயிற்றைக் கலக்கியது. அவன் மறைவாக ஒதுங்கப்போனான். நான் கையில் இருக்கும் கரும்பைக் கடித்துக்கொண்டே ஏரியின் மண் தடத்தில் நடந்து போனேன். பெயர் தெரியா தாவரங்களின் பச்சை வாசனைகள். ஜீவராசிகளின் அரவங்கள். எனக்கும் உள்ளுக்குள் லேசாக பயம் தொற்றிக்கொண்டது. தெளிவான மனம் ஏனோ மர்மத் தடம் பூண்டது. முருகனுக்குக் குரல் கொடுத்தேன். தூரத்தில் ஒரு பறவையின் குரல் போல அவன் குரல் காற்றில் மிதந்து வந்தது. சரி ஆள் இருக்கிறான். ஓடிப் போகவில்லை. நான் தைரியத்துடன் ஈர்க்குகளை எடுத்துக்கொண்டு நிமிர்த்து பார்த்தேன். மணிக்குட்டி மாமா வேப்ப மரத்தில் கயிற்றில் சுருக்கு மாட்டி காற்றில் ஆடிக்கொண்டிருந்தார். அவரது நனைந்த பின்புறம் ஏனோ திகிலூட்டியது. என் அலறல் கேட்டு முருகன் ஓடிவந்தான். வந்தவன் மணிக்குட்டி மாமாவைப் பார்த்தவன் மரணத்தைப் பற்றி எல்லாம் அறிந்தவன் போல என் கண்ணைப் பொத்தி அங்கிருந்து தார்ச் சாலைக்கு இழுத்து வந்தான். நான் மதகுக் கால்வாயில் விழுந்து செம்மண் நிறத்திலான கலங்கல் நீரை அள்ளிப் பருகினேன். தலையில் தெளித்து ஈரமாக்கிக் கொண்டேன். அத்தனை நீரை அள்ளிப் பருகியும் நா வறண்டு போனது. பேச்சு சுத்தமாக எழவில்லை. என் வார்த்தைகள் எங்கே போயின? மரணத்தின் முன் மனிதன் மண்டியிட வேண்டும்தான். வார்த்தைகள் கூடவா? முருகன்தான் வண்டியில் போகிறவர்களிடம் விவரம் சொன்னான். நாங்கள் இருவரும் ஊருக்குப் போனோம். அன்றைக்கு நிகழ்ந்த தற்கொலையின் தற்காலிக தூதுசொல்லிகள் நாங்கள்தான். அதன்பிறகு ஒணான்களைக் கொல்வதை நாங்கள் நிறுத்திவிட்டோம்.

அதற்கடுத்த 15 வருடங்களுக்குப் பிறகு கிம் கி டக்கின் ‘Spring Summer Winter Fall’.. படம் பார்த்தபோது உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து சிதறியது. தவளையின் முதுகில் கல் கட்டி விளையாடும் அந்தச் சிறுவனுக்குத்தான் எத்தனை பிரதிகள் உலகெங்கும். அந்தப் படம் ஆழ்மனதில் ஏற்படுத்திய தாக்கம் மேலதிகமானது. மறக்கவியலாதது. Spring Summer Winter fall படத்தைப் பார்த்தபோது என் அகம் புத்தொளி கொண்டது. அகத்தின் எல்லைகள் விரிந்தன. பௌத்தத்தின் சாரத்தை இத்தனை எளிமையாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் சொல்லி விட முடியும் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. Spring Summer.. படமும் 3 iron படமும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். 3 iron இல் அவர் காட்டிய உறவுகளின் சூட்சும இணைப்புகள் பின்னாட்களில் என் சக உறவுகளைக் கையாள உதவியாய் இருந்தது.  படம் முடியும் தருவாயில் ஒரு பாட்டு வரும். அதன் காட்சிகள் யதார்த்தத்துக்கும் கனவுக்குமான எல்லைகள் காணாமல் ஆக்கிவிடும். கிம்-கி- டக்கின் படங்கள் பிடிக்கிறதோ இல்லையோ பார்த்துவிடும் ஆவலைத் தூண்டின. 3 iron, Spring, Summer உள்ளிட்ட சில படங்களைத் தவிர அவரது மற்ற படங்கள் அவ்வளவாக என்னைக் கவரவில்லை. ஆனாலும் அவரது மோசமான படங்களில் கூட சினிமா பயில்பவர்களுக்குக் கற்றுக்கொள்ள ஏதேனும் கட்டாயம் இருக்கிறது. மனிதர்கள் தன் குறுகிய வாழ்வின் எல்லைகளில் நின்று சக மனிதர்களுக்கு நிகழ்த்தும் வன்முறையின் குரூரங்கள் என்று பொதுவாக கிம்-கி-டக்கின் படங்களை நாம் வகைப்படுத்தலாம். ஆனால் அவர் படங்கள் அதுமட்டுமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. அன்பு மிகும்போது எழும் குரூரங்களின் அழகியல் வெவ்வேறு விதமாக அவர் படங்களில் கையாளப்பட்டிருக்கிறது. அல்லது தான் விரும்பும் உறவு தன்னை மீறிப் போகும் போது எழும் வன்மம். வன்மத்தின் உன்மத்தம்.

இன்னமும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் ஒரு பரந்துபட்ட தத்துவப் பார்வை வந்துவிட்டதா என்று பார்த்தால் பதில் ஏமாற்றம்தான். ஆனாலும் மனிதர்கள் தம் வாழ்வில் மரணங்கள் உருவாக்கும் வெற்றிடம் எழுத்தில் சொல்லித் தீராதது. பெரும் வேட்கையின் தீவிர சாயல் கொண்டது. நன்மைக்கும் தீமைக்கும் ஒரே சாயல். அல்லது தீரா வாழ்வின் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அவர்கள். பேதம் பார்ப்பதில் பயனில்லை. மனிதன் எதன் பொருட்டும் வெறுக்கத்தக்கவன் அல்ல என்பது அவர் படங்களின் மூலம் நான் கண்டடைந்த உண்மை. நடைமுறை வாழ்வின் ஆன்மீக உள்ளீடற்ற வெற்று உறவுகள் உண்டாக்கிக் கொண்டே இருக்கும் சகிப்பின்மையின் இருளில் திண்டாடும் மனிதர்களைத் திரையில் உலவ விட்டவர் கிம்-கி-டக். அவர் படங்களின் தொடர்ந்த அடிநாதமாக இக்கருத்து வலுப்பெற்று வந்தது என்பது என் அபிப்பிராயம்.

பாலுறவு, கட்டற்ற காமம், ஆன்மீக உள்ளீடற்ற வெறுமை, உறவுகளின் அதிகாரம் அல்லது அதிகாரம் உருவாக்கும் மூர்க்கம் சுரக்கும் உறவுகள், பிழைத்திருத்தல் அல்லது தன்னை தக்கவைத்துக் கொள்ளல் என அவர் படங்களின் பேசு பொருட்கள் ஒரு பெரும் விவாதத்தைக் கோருபவை. மிருகத்தனமான வன்முறை மற்றும் வன்முறையின் உளவியல், வன்முறையின் அழகியல் என அவர் படங்களின் கருத்தாக்கங்கள் மனித உறவுகளைப் பற்றிய, அதன் ஆழங்களில் ஒளிந்திருக்கும் வன்மத்தைப் பற்றிய ஒரு விரிவான பகுப்பாய்வு எனலாம். “மனித மனம் வன்முறையின் இருள் நிறைந்தது, அதன்மீது நான் வெளிச்சம் பாய்ச்சுகிறேன்” என்று அவர் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். ஒருமுறை சினிமா நண்பருக்கு கிம்-மின் படத்தை சிபாரிசு செய்து அவர் படம் பார்த்த பின் ‘இவ்வளவு வன்முறையை உண்டு செரிப்பவர்களா நீங்கள்’ என்று சொல்லி உறவு முறிந்த கதையெல்லாம் எனக்கு நடந்திருக்கிறது.

மணிக்குட்டி மாமாதான் தன் தற்கொலை மூலம் வாழ்வின் என்றைக்குமான பேரதிர்ச்சியை எனக்குப் பரிசளித்துவிட்டுப் போனார். அதே விதமான அதிர்ச்சியைப் பின்னாட்களில் நான் கிம்-கி-டக்கின் படங்களில் கண்டு அச்சம் கொண்டிருக்கிறேன். கிம்-கி-டக் தன் படங்கள் வழியாக ஒரு புராதன பவுத்த சமூகத்தின் முகமூடிகளைக் கழட்டி சர்வதேச சமூகத்தின் முன் வீசினார். மனிதர்களின் முகமூடிகளைக் கழட்டி வீசுவதில் அல்லது அடித்து நொறுக்குவதில் கிம்-கி-டக்குக்கு இணை அவரே. ஒரு மனிதராக, அக நேர்மையுடன் நாம் நம்மையே கேள்விக்குட்படுத்திக்கொள்ள வேண்டிய சுய பரிசோதனையைத் தீவிரமாக வலியுறுத்திய படங்கள் அவருடையது. அவை என்றைக்குமான தனித்துத் தெரியும் காட்சிமொழியில் ஜீவித்திருக்கப் போகும் படங்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. போய் வாருங்கள் கிம், அந்தியில் ஏகந்தாமாய் மிளிரும் உறைந்த ஏரியின் ஆழ்ந்த அமைதிக்குள் ஓய்வெடுங்கள்.

ஒரு ஜப்பானிய அல்லது கொரிய இயக்குநர் அல்லது படைப்பாளி நோயில் செத்துப்போவதென்பது மிகவும் துயரமானது. அப்படியான மரணத்தை என்னால் கடுகளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு மிதமிஞ்சிய வன்முறையை தன் படங்களில் நிகழ்த்திக்காட்டிய கிம்-கி-டக்-கும் தற்கொலை செய்துகொண்டுதான் இறந்துபோவார் என்று நான் என் ஆழ்மனதில் நம்பிக்கொண்டிருந்தேன். கொரோனா என்னும் கொடிய நுண்கிருமி நோய் முந்திக்கொண்டுவிட்டது. அவர் உருவாக்கி அளித்துவிட்டுப்போன வன்முறையின் தூய கணங்களின் கொந்தளிப்பை அவர் தற்கொலை கொஞ்சம் தனித்திருக்கக் கூடும் என்பது என் எண்ணம்.  எனினும் படைப்பு மனம் அழிவதில்லை. மனிதர்கள் தன் ஸ்தூல உடலைவிட்டு நீங்கிப் போவதுண்டு. மணிக்குட்டி மாமா போல, கிம்-கி- டக் போல. எனவே அஞ்சலி எல்லாம் இல்லை. அவ்வளவுதான்.

***

உலகிலேயே தற்கொலைகள் அதிகம் நிகழும் நாடு ஜப்பான் அல்லது தென்கொரியா. ஏன் இந்த ‘அல்லது’? காரணம் இல்லாமல் இல்லை. உலகளாவிய அளவில் தற்கொலை விகிதம் அதிகரிப்பில் இந்த இரண்டு நாடுகளுக்குள்தான் எப்போதுமே போட்டி. தற்கொலை என்பது அவர்களின் பாரம்பரிய பண்பாட்டுத்தளத்தில் ஒரு பிரிக்க முடியாத அங்கம். புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா குரசோவா பலமுறை தற்கொலைக்கு முயன்றவர். நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் யசுநாரி கவாபட்டா, ரியூனோசுகே அகுதாகவா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டார்கள். கவாபட்டா குளியலறையில் வாயுவைத் திறந்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். ரியூனோசுகே அகுதாகவா உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு இறந்துபோனார். அவர் தூக்கமின்மையாலும் அவரது அம்மாவின் மனநோய் குறித்த மன அழுத்தத்தினாலும் அவரது தற்கொலைக்கு முன்பான கடைசிக் காலங்களில் மிகவும் அவதியுற்றிருந்தார். ”என் வாழ்வு இப்போது மிகவும் குளிர்ந்த விறைப்புற்ற நரம்புகளில் உறைந்துபோயிருக்கிறது. என்னைப்பொறுத்தவரையில் வேறெதையும்விட இயற்கைதான் மிகவும் அழகானது. மரணத் தருவாயில் இயற்கை மீதான என் நேசிப்பு குறித்து எழுதப்பட்ட இந்த தற்கொலைக் குறிப்பைப் படித்து நீங்கள் நகைக்கக்கூடும், என் மரணம் தெளிவாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுதான். ஆனாலும் இயற்கையின் முடிவில்லாத வசீகரம்தான் என் கண்களுக்கு தெரிகிறது.” என்பது ரியூனோசுகே அகுதாகவாவின் தற்கொலைக் குறிப்பு.

இவ்விரு எழுத்தாளர்களின் தற்கொலை சுயம் சார்ந்தது என்றால் இன்னொரு ஜப்பானிய புகழ்பெற்ற எழுத்தாளரான யுகியோ மிஷிமாவின் தற்கொலை தீவிரமானது. அரசியல்மயப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான ஜப்பானிய நாட்டின் சூழல் குறித்து மிகுந்த அதிருப்தியைக் கொண்டிருந்தார் மிஷிமா. ஜப்பானிய சமூகம் உள்ளீடுகள்அற்று இற்று வீழ்ந்துகொண்டிருக்கிறது என்று அவர் உறுதியாக நம்பினார். அதனால் அவர் ஒரு தனிப்பட்ட ராணுவ குழுவை உருவாக்கி புரட்சி மூலம் அவர் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று முடியெடுத்தார். தனது பதிப்பாளருக்கு அனுப்ப வேண்டிய நாவலின்[The Sea of Fertility] கடைசி அத்தியாயத்தை முடித்து அனுப்பினார்.  நவம்பர் 25, வருடம் 1970. மிஷிமாவும் அவரது நான்கு சீடர்களும் ஜப்பானிய ராணுவ அலுவலகத்தில் புகுந்து ராணுவ ஜெனரல் மசூடாவை சிறை பிடிக்கிறார்கள். ராணுவ ஜெனரலின் கீழ் பணிபுரியும் எண்ணூறு ராணுவ வீரர்களை உடனடியாக மிஷிமாவின் பேச்சைக் கேட்க அங்கே குழும வேண்டும் இல்லையெனில் ஜெனரலை கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். ராணுவவீரர்கள் குழுமியிருந்த அந்நேரத்தின் அரைமணிநேர மிஷிமாவின் பேச்சு எடுபடவில்லை. அதன் பின்னர் ராணுவ வீரர்கள் ஏளனத்துடனும் கோபத்துடனும் அவரை சூழ்ந்து கொள்கிறார்கள். ஏழு நிமிடங்களுக்குப் பிறகு மிஷிமா, செப்பொக்கு[குறுவாள் கொண்டு வயிற்றைக் கிழித்துக்கொள்ளும் ஒருவகை தற்கொலை] என வகைப்படும் ஜப்பானிய புராதன தற்கொலையால் தன்னை மாய்த்துக்கொள்கிறார். உடன் மிஷிமாவை தீவிரமாகப் பின்பற்றிய வறட்டு இயக்கத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர் மாசாகட்சு மொரிட்டாவும் அதே முறையில் தற்கொலை செய்துகொள்கிறார். அதன் பிறகு அவரது இயக்கமும் அவரது அரசியல் செயல்பாடுகளும் நீர்த்துப்போகிறது. மிஷிமாவின் கடைசி தினத்தை டாக்சி டிரைவர் படத்தின் திரைக்கதையாசிரியர் பால் ஷுராடர் திரைப்படமாக எடுத்துள்ளார். அந்தப்படம் [Mishima: A Life in Four Chapters] மிஷிமாவின் நாவல்களிலிருந்தும் அவரது கடைசி தின நிகழ்வுகளிருந்தும் திரைக்கதை ஆக்கம் செய்யப்பட்ட ஒன்று.

‘’உதவி தேவைப்படும் மனிதர்களுக்கும் நான் கட்டாயம் உதவத் தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்’’ – இதுதான் தகாஹிரோ சிராய்ஷ்ய் தனது டிவிட்டர் பக்கத்தில் வைத்திருந்த புரொபைல் வாசகம். இத்தனைக்கும் தகாஹிரோ சிராய்ஷ்ய் ஒன்றும் பெரிய ஆன்மீக மதகுருவோ அல்லது உளவியல் சிகிச்சை அளிப்பவரோ அல்ல. அவர் ஒரு சாதாரண ஜப்பானியப் பிரஜைதான்.  தகாஹிரோவின் அந்த டிவிட்டர் வாசகத்தைப் பார்த்து தற்கொலை மனோபாவம்கொண்ட பெண் ஒருவர் தகாஹிரோவை நாடிச் சென்றுள்ளார். பின்னர் அந்தப்பெண்ணை தகாஹிரோ கொலை செய்து அவருக்கு விடுதலை அளிக்கிறார். இப்படியே எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஒன்பது பேரைக் கொலை செய்தார். டோக்கியோ போலீஸ் தகாஹிரோவின் வீட்டுக்கு ரெயிடு சென்றபோது அதிர்ந்து போனது. தகாஹிரோவின் வீட்டில் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் ப்ரீஸரில் வைக்கப்பட்டிருந்தன. போலீஸ் அவரைக் கைது செய்தார்கள். வாக்குமூலத்தில் தகாஹிரோ சாவகாசமாகச் சொன்னது இதுதான். ”மன அழுத்தத்தால் துன்பமுற்றவர்களுக்கு நான் விடுதலை அளித்தேன்”. நீதிமன்றத்திலும் இதையேதான் தகாஹிரோ சொன்னார். வழக்கு விவாதத்தின் போது ‘’தானாகத் தற்கொலை மனநிலையோடு விரும்பி வந்தவர்களைத்தான் தகாஹிரோ கொலை செய்தார், அவராகத் தேடிப்போய் கொலை செய்யவில்லை எனவே தண்டனை குறைத்துத் தரவேண்டும்’’ என்று தகாஹிரோவின் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். ஆனால் டோக்கியோ நீதிமன்றம் தகாஹிரோவுக்கு சமீபத்தில் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 29 வயதாகும் தகாஹிரோ ‘டிவிட்டர் கொலையாளி’ என்று ஜப்பானியர்களால் அழைக்கப்படுகிறார். குற்றமும் நிருபிக்கப்பட்டுவிட்டது. ஜப்பானும் தற்கொலையும் எக்காலத்திலும் பிரிக்க முடியாத ஒன்றுதான் எனத் தோன்றுகிறது.

***

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு கோவிட்காலம் நமக்களித்த இன்னொரு  மாபெரும் பேரதிர்ச்சி. தமிழின் பதிப்புத்துறை சார்ந்து புத்தக உருவாக்கலில் பெரும் செய்நேர்த்தியை உருவாக்கிக் காட்டியவர் அவர். அதை ஒரு மௌனமான சவாலாக அவர் உருவாக்கிக் கொண்டேயிருந்தார். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின் போதும் அவர் வெளியிட்ட க்ரியா புத்தகங்களைப் புத்தக அட்டைகளை, அதன் அச்சு நேர்த்தியை விரல்களால் தடவித் தடவிப் பார்ப்பது என் பிரதான பொழுதுபோக்கு. அவ்வாறான ஒரு நேரத்தில்தான் அவருடனான அறிமுகம் உருவானது. புத்தகத்தின் எழுத்துருக்கள், அது சார்ந்த சந்தேகங்கள், புத்தக அட்டை உருவாக்கத்துக்கான முன்தயாரிப்புகள், பிரதி செம்மையாக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் என அவரிடம் கேட்க, கேட்டுப் பெற எவ்வளவோ இருந்தது. அவரும் இவன் புதியவன் தானே என்று சலித்துக்கொள்ளாமல் அல்லது அலட்சியம் கொள்ளாமல் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல் சளைக்காமல் பதில் சொல்வார். ஒரு எழுத்தாளனுக்கும் பதிப்பாளனுக்கும் இருக்கவேண்டிய அர்த்தப்பூர்வ உறவைப்பற்றி அவர் எனக்குக் கோடிட்டுக் காட்டினார். அந்த அர்த்தப்பூர்வ உறவு பதிப்பிக்கும் புத்தகங்களில் எவ்விதம் எதிரொலிக்கும் என்பதையும் அவர் அனுபவங்களின் வழி நின்று எனக்கு சொல்லித்தந்தார். நிறையப் புத்தகங்கள் பதிப்பிக்க வேண்டும் என்ற என் ஆவலை அல்லது அரைகுறைத்தனத்தை அவர்தான் மட்டுப்படுத்தினார். ‘எவ்வளவு சோறு பொங்கினாலும் வயிறு கொள்ளும் அளவுக்கு தானே உண்ண முடியும்’ என்ற அவரது கேள்வி தரம் சார்ந்த அளவீட்டை என்னுள் உருவாக்கியது. க்ரியா புத்தக அச்சுருக்கள்[Fonts] ஸ்ரீலிபி எனப்படும் ஒரு தனித்த வகை அச்சுறு. அதுசார்ந்த சந்தேகங்கள் எழும்போதெல்லாம் நான் அவரிடம் பல வருடங்கள் வேலை செய்த பணியாளர் ஒருவரைத்தான் அழைத்து சந்தேகம் கேட்பேன். அவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவரும் க்ரியா ராமகிருஷ்ணன் தான்.

அவர் கொண்டுவந்த மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் மற்ற பதிப்பாளர்கள் கொண்டுவந்த புத்தகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அவர் சாதனை எவ்வளவு பெரியது என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடியும். நான் வெறும் அச்சுத் தரத்தை மட்டும் சொல்லவில்லை. மொழிபெயர்ப்பு, செம்மையாக்கம், மூல மொழியுடனான ஒப்பிடல்கள், தேவைப்பட்டால் மொழி அறிஞர்களின் உதவியைக் கோரிப் பெறுதல், என அவர் உருவாக்கி வைத்துள்ள தர அளவு [Standard] நம்மை மலைக்க வைக்கக்கூடியது. க்ரியாவின் பிரதான மொழிபெயர்ப்பாளர் வெ ஸ்ரீராம் அவர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களின் போதெல்லாம் தன்னுடைய புத்தகங்களின் மொழிபெயர்ப்பு செழுமைக்கு ராமகிருஷ்ணனின் பங்கு பிரதானமானது என்று தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார். தமிழின் குறிப்பிடத்தக்க பிரதி செம்மையாக்க வல்லுநர்களில் அவர் முதன்மையான ஒருவர்.

மொழியை வைத்து அரசியல் அதிகாரத்தைப் பிடித்த சமூகப் பின்னணி நம்முடையது. ஆனால் அப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழுக்கும் தமிழ் மொழியின் செம்மைக்கும் செய்ததைவிடப் பலமடங்கு பங்களிப்பு செய்தவர் என க்ரியா ராமகிருஷ்ணனைச் உறுதியாகச் சொல்லமுடியும்.  ‘தற்கால தமிழ் அகராதி- ஒரு சமகால உதாரணம். பிரெஞ்சிலிருந்து நேரடியாக அவர் கொண்டுவந்த மொழிபெயர்ப்பு நூல்கள், தற்கால தமிழ் அகராதி, கூத்துப்பட்டறை ந.முத்துசாமியோடு உடன் சேர்ந்து அவர் நாடக வெளிக்குச் செய்த பங்களிப்புகள் மற்றும் ஐராவதம் மகாதேவன் அவர்களின் கல்வெட்டுகள் குறித்த நூல் என நீளும் அவரது சாதனைகளைக் காலம் கடந்தும் தமிழ் பதிப்புலக வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button