சிறுகதைகள்
Trending

ஆட்டக்காரங்கோ

பிரவின் குமார்

“டேய் ஊள எனக்கு கொக்கோகோலா கார்க் ஒன்னு கச்சுகிதுடா”

பாந்தா கடையிலிருந்து கொட்டி விட்டுச் சென்ற குப்பையை நீண்ட நேரமாக கிளறிக் கொண்டிருந்த தரணிக்கு அதிஷ்டம் அடித்தது. வைரம் கிடைத்து விட்ட கணக்காய் முகம் மலர சோடா மூடியை வினோத்திடம் காண்பித்தான்.

“டேய் ஊள கொக்கோகோலா ஒன்னு மாட்டிக்கிச்சுடா”

“ஏ தர்ணி…! எனக்கு தாண்டா  எவ்ளோ தேடியும் ஒன்னு கூட சிக்க மாட்டேங்குது”

வினோத் சுவற்றோரம் மண்டிக் கிடந்த குப்பைகளை ஒரு புறம் கிளறிக் கொண்டிருந்தான்.

“செரி போதும் வா அவங்கோ விளையாட்ட ஆரம்பிச்சுடுவாங்கோ கடச்ச வரைக்கும் ஆடலாம்”

தரணி மட்டுமல்ல தெருவில் வசிக்கும் பலரும் வினோத்தை ‘ஊள ஒடம்பா’  என்றே அழைப்பார்கள். வினோத் பார்ப்பதற்கு தொலதொலவென்று சதைகள் கூடி குண்டாக இருப்பான். சிறுவர்கள்  அவனை ஊளை உடம்பு என்று நையாண்டி செய்ய ஆரம்பித்தனர் பின்னாட்களில் தெரு முழுவதும் அதுவே அவன் பெயராகிவிட்டது. தரணியும் வினோத்தும் தெருவின் எல்லையில் குழுவாக கம்போஸ் ஆடிக் கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்க்கச் சென்றனர்.

“ஏய் நாங்களும் அடுத்த கேம் வரோம் எத்தன கார்க் பெட்டு வெச்சு வெளாடுரீங்கோ”

“ரெண்டு கார்க் தான்டா”

கம்போஸ் விளையாட்டில் புத்து பிடிக்க தவளை சாயலில் இரண்டு கால்களை அழுத்தமாக ஊன்றி  அமர்ந்திருந்த ரமேஷ் அவர்கள் வருவதை திரும்பி பார்த்துக் கொண்டே பதிலுரைத்தான்.

ஆளுக்கு இரண்டு சோடா பாட்டில் மூடிகளை கம்போஸ் விளையாட்டின் வட்டத்துக்குள் செலுத்திவிட்டு ஆடுவதற்கு இருவரும் தயாராக நின்றிருந்தார்கள். ஆட்டத்தின் விதியின் படி வரிசையில் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட கோட்டில் இருந்து கம்போஸ் வட்டத்திற்குள் குறுக்காக போடப்பட்டிருக்கும் கோட்டை நோக்கி ஆளுக்கொரு சோடா மூடியை சிறுவர்கள் வீசி எறிந்தனர். கோட்டை உரசாமல் விளிம்பு வரை செல்லும் சோடா மூடியை வைத்து தங்களுக்கான இடத்தை சிறுவர்கள் பிடித்துக் கொண்டனர். கம்போஸ் ஆட்டத்தில் கொக்கோகோலா, தம்ஸ்சப் சோடா மூடிகளுக்கென்று தனி மதிப்பு இருந்தது. ஐந்து சாதாரண சோடா மூடிகளுக்கு ஒரு கொக்கோகோலா, தம்ஸ்சப் சோடா மூடி சமம் என்று சிறுவர்கள் கணக்கு வைத்திருந்தார்கள். ஆட்டத்திலும் கூட அதிக கொக்கோகோலா சோடா மூடியை அள்ளுவதில் தான் சிறுவர்கள் கண்ணாக இருந்தார்கள். பெப்சி, ஃபேண்டா சோடா மூடிகள் எல்லாம் ஆட்டத்தில் சில்லறைகளாக தான் கருதப்பட்டன.

வட்டத்திற்குள் இருக்கும் மொத்த சோடா மூடிகளை அல்லது ஒரு சோடா மூடியை மட்டும் வட்டத்துக்குள் இருந்து தனியாக வெளியே துள்ளி குதிக்க வைக்க வேண்டும். கல்லைக் கொண்டு குறி பார்த்து மொத்த சோடா மூடிகளில் ஒரு சோடா மூடியை மட்டும் இலக்காக வைத்து அடிக்கும் நேரத்தில் தரையில் பட்டு எழும்பும் கல்லை, அடுத்து ஆட இருக்கும் ஆட்டக்காரர் இரண்டு அடி தள்ளி அமர்ந்து விக்கெட் கீப்பர் பாணியில் கீழே அமர்ந்தவாறே அந்த கல்லைப் பிடிக்க வேண்டும். அப்படி சமார்த்தியமாக கல்லைப் பிடிக்கும் ஆளுக்கு அபராதமாக ஒரு சோடா மூடியை கல்லைக் கொண்டு அடித்தவர் வழங்க வேண்டும். பெரும்பாலும் ஆட்டத்தில் புத்து பிடிக்க சிறுவர்கள் உட்காருவதில்லை தப்பித்தவறி கல் முகத்திலோ, மண்டையிலோ பட்டுவிடும் என்னும் பயத்தில் விலகிக் கொள்வார்கள். தரணியும் கூட புத்து பிடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டான். அவன் கவனமெல்லாம் கம்போஸ் அடிப்பதில் தான் இருக்கும். ஒரு சில சிறுவர்கள் மட்டும் தங்கள் துணிச்சலை நிரூபணம் செய்ய புத்து பிடிக்க உட்காருவார்கள். சில சமயங்களில் வேகமாக தரையில் குத்தி எழும்பும் கல்லைப் பார்த்து சட்டென்று விலகிக் கொள்வார்கள்.

வரிசைப்படி தரணி மூன்றாவது இடத்தை பிடித்தான். விளையாட்டிற்கென்று தனியாக இரயில் தண்டவாளத்தில் இருந்து தேடி எடுத்துத் தேர்வு செய்து வைத்திருக்கும் கருங்கல்லைக் கொண்டு கம்போஸ் ஆடினார்கள். பல ஆட்டங்களில் உபயோகப்படுத்தப்பட்ட அந்தக் கல் விளையாடுவதற்கு தோதுவாகவும், ராசியானதாகவும் சிறுவர்கள் கருதினார்கள். WWF-ல் வரும் The Rock போல் தன்னைக் கற்பிதம் செய்து கொண்டு புருவத்தை உயர்த்திக் கொண்டே ஒற்றைப் பார்வையில் சிறுவர்கள் ஒவ்வொருவரும் தான் இலக்காக வைக்கும் சோடா மூடியை மட்டும் அடித்தார்கள். மற்ற சோடா மூடியுடன் உரசும் வேளையில் “பட்ச்சா உயுந்துச்சே” என்று சிறுவர்கள் கத்திக் கொண்டே குதித்தார்கள். மேற்கொண்டு விளையாட்டில் தொடர இன்னொரு சோடா மூடியை அபராதமாக வட்டத்திற்குள் செலுத்த வேண்டும் அப்படி செலுத்த இயலாத பட்சத்தில் ஆட்டத்தை விட்டு விலக வேண்டும் என்பது தான் ஆட்டக்காரர்களின் நிபந்தனை.

தரணியைத் தவிர மற்ற சிறுவர்கள் அனைவரும் பட்ச்சா செலுத்தினார்கள். தரணி இரண்டு ஆட்டத்திற்கு ஒரு முறை என்று கம்போஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தினான். வெற்றி பெற்ற சோடா மூடிகள் அவன் காக்கி டவுசர் பாக்கெட்டிற்குள் சலங்கை ஆடின.

“தரணியே எல்லாத்தையும் இன்னிக்கு அல்லினு போய்டுவான் போலடா.. அவனுக்கு தான்டா இன்னிக்கு கெலிப்புக்கை* ”

ஆட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, நாற்பது சோடா மூடிகளை இழந்த சிறுவன் ஒருவன் தரணி வெற்றி பெறும் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் ஏதாவது புலம்பிக் கொண்டே இருந்தான். இன்னும் சிலர் அவன் வெற்றி பெறக் கூடாது எனும் எண்ணத்தில் மனதிற்குள் வேண்டிக் கொண்டும், அவன் கவனத்தை திசை திருப்பவும் ஏதாவது செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பொழுது சாய சிறுவர்கள் ஒரு சிலர் மொத்த சோடா மூடியையும் இழந்த விரக்தியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். தோல்வியடைந்தவர்களில் சிலர் சோங்கு* ஆடச் சென்று விட்டார்கள். எஞ்சி இருப்பவர்களும் இனி தரணியை வெல்ல முடியாது என்பதை அறிந்து ஆட்டத்தைத் தொடர்வதற்கு போதுவான வெளிச்சம் இல்லையென்று ஜெகா* வாங்கினார்கள்.

‘டேய் தர்ணி இன்னிக்கு ஜெய்ச்ச மாதிரி நாளிக்கு ரயில்வே கேட்ல ஆடுற பசங்க கூட ஜெய்க்கனும்டா”

“அவங்கோ நம்மள மாதிரி சோடா கார்க் வெச்சா ஆடுறாங்கோ… அவங்க எல்லா பெரிய பசங்கடா… துட்டு வெச்சு தான் ஆடுவாங்கோ… நம்மோ காசு எத்துனு போனா கூட சேத்துக்கமாட்டாங்கடா ஊள”

“அப்டி இல்லடா… நல்லா ஆடுற பசங்க யாரா இருந்தாலும் சேத்துப்பாங்க. நாம நாளிக்கு போய் பாக்கலாம். நாளிக்கு நான் துட்டு எத்துனு வரேன். எங்கவீட்ல பீரோ கீல பிராந்தி பாட்டில் இருக்குது, அதையும் கடைல போட்டு அந்த காசுல வெளாடலாம்”

——

சியாமளா ராஜ் பவன் ஹோட்டலில் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தாள். மின்கம்பத்தின் மங்கிய வெளிச்சத்திற்கு அடியில் அமர்ந்து தகரைகளின் பாதுகாப்பில் இரண்டு அடுப்புகளை வைத்து கடாயில் எண்ணையை ஊற்றி கருக்கலை* பிரட்டிக் கொண்டிருந்தாள் பாப்பம்மாள். ஆட்களோடு சேர்ந்து அத்தெருவில் கருக்கலின் வாசமும் நடமாடிக் கொண்டிருந்தது. பாப்பம்மாள் சியாமளாவை பார்த்ததும் உரக்க அழைத்தாள்.

“ஏ… சியாமளா இன்னாமே பாவடைக்கு அடில பூரான் பூந்த மாதிரி அப்பிடி ஓடுற”

“ஐய வீட்ல புள்ளைங்க இல்ல… அதுங்களுக்கு சோறு ஆக்கி போடவேணா…? எழிலு மட்டும் தனியா இன்னா பண்ணுவா? உன்ன மாதிரி சூத்து கீல தலகாணிய வெச்சுட்டா குந்த சொல்ற

“சிலுத்துக்காதமே… நாளிக்கு ஹவுஸ் போடு ஆட வருவியா…? நேத்து ஆளே காணோம்”

“நம்ம பார்வதி அக்கா பையன் வெஷம் குஷ்ட்டு ஸ்டான்லில அட்மிட் ஆயிந்தான்ல அவன பாக்க போனேன். அதான் வரமுடில, நாளிக்கு வந்துர்றேன்”

“சரி போனி* பண்ட்டு போ அப்பிடியே போற”

“நீ கூப்டும்போதே நெனச்சேன்”

இரண்டு ரூபாய்க்கு கருக்கலும் மூன்று ரூபாய்க்கு கவாப்பும்* வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

……

“எழிலக்கா…. எழிலக்கா… புக்கு எத்துனு வந்துட்டியா”

பைண்டிங் செய்யக் கொடுத்திருந்த பாடப் புத்தகங்களை மீட்க வீட்டிற்குள் நுழைந்தாள் வினோதினி. எழிலரசி பைண்டிங் செய்யும் கம்பெனியில் வேலை செய்வதாலும், எழிலின் அப்பா சினிமா போஸ்டர் ஒட்டுவதாலும் வீட்டில் எப்பொழுதுமே பசையின் வாசம் சூழ்ந்து கொண்டே இருக்கும். அவ்வாசத்தை உணர்ந்ததும் வினோதினியின் முகம் சிறு கோணல்களை வரைந்தது. அடுப்பில் இருந்து சோற்றை வடித்துக் கொண்டிருந்த எழிலரசி முறைத்துக் கொண்டே வினோதினியைப் பார்த்தாள்.

“எத்துனு வன்டேன்டியம்மா… ஏன்டி பைண்டிங் கொடுத்தா ஒரு மூன்னாளு ஆவும்… அதுகூட அட்ஜஸ் பண்ணிக்க முடியாதா உன்னால?”

சாமி படத்திற்கு கீழ் சுவற்றோரம் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை எடுத்து வினோதினியிடம் நீட்டினாள். வண்ண காகிதங்களினால் சுற்றப்பட்டு பசையினில் மொழுகி காய்ந்து போயிருந்த அட்டையின் வாசம் அவ்விருவருக்கிடையில் மீண்டும் பரவத் தொடங்கியது.

“திங்கெழம எத்துனு போலனா டீச்சரு அடிப்பாங்ககா…. இந்தா… அம்மா காசு குத்துச்சி, மீதி காசு நாளிக்கு மணி ஆடும் போது குடுக்குதாம்”

“ஏன் முழு காசு குடுக்கலனா உங்கம்மாக்கு ஒன்னுக்கு வராதாமா…? நாளிக்கு வெச்சுக்குறேன்”

வினோதினி வெளியே சென்றதும் சியாமளா வீட்டிற்குள் நுழைந்தாள். ஹோட்டலில் இருந்து எடுத்து வந்த வடையை பிளாஸ்டிக் கூடையில் இருந்து வெளியே எடுத்துக்கொண்டே

“என்னடி சோறு வட்ச்சுட்டியா…?”

“ம்.. வடிச்சாச்சுயம்மா”

“எங்கடி அந்த தர்ணி பையன்”

“இன்னிக்கு கஸ்தூரி ஆயா கருமாதில… அதனால நைட்டு டெக்கு போடுறாங்களாம் அங்க போறேன்னு சொன்னான்”

“இது என்னடி ரோதனையா போச்சு அவன் பாதிலயே தூங்கிடுவான்டி… என்னால எல்லாம் அவன தூக்கினு வர முடியாது… நான் கூப்டேன்னு சொல்லி அவன தர தரனு வலிச்சுனு வா”

டாக்டர் தாம்சன் வீட்டிலிருந்து வாடைக்கு எடுத்து வந்திருந்த ஒனிடா டி.வி.யை வீடியோ பிளேயருடன் பொருத்த இளசுகள் நீண்ட நேரமாக அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். வீடியோ பார்ப்பதற்காக காத்திருந்த கூட்டத்தில் ஒரு சிலர் சலித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவதும் மீண்டும் சிறிது நேரம் கழித்து வந்து வேவு பார்ப்பதுமாக இருந்தனர். வீட்டிலிருந்து ஆளுக்கொரு போர்வையை எடுத்து வந்திருந்த சிறுவர்கள் முந்தி அடித்து டி.வி. முன் அமர்ந்ததும் இரவு முழுவதும் கண் விழித்திருப்பதாக அவர்களுக்குள்ளே பந்தயம் கட்டிக் கொண்டார்கள். ஆனால் விடிவதற்கு முன்பே அப்பந்தயத்தில் தோற்று விடுவார்கள் என்பது சிறுவர்கள் அனைவருக்கும் தெரியும்.

எழிலரசி தரணியை தேடிக் கொண்டு வீடியோ போடும் இடத்திற்கு வந்தாள். கேசட்டை மாற்றி மாற்றிப் போடுவதும், டி.வி.யுடன் இணைத்திருக்கும் வயரை சரி செய்வதுமாக ஏரியா இளசுகள் ஷோ காட்டிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்களுடன் குழுவாக சேர்ந்து தரணி டி.வி.யின் முன் அமர்ந்திருந்தான். எழிலரசி அழைத்ததும் இடத்தினை இழந்து விடுவோம் என்று முன்னெச்சரிக்கையாக மற்ற சிறுவர்களிடம் இடத்தைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு எழுந்து சென்றான்.

“டேய் தரணி அம்மா சாப்ட கூப்புடுது வா”

“எக்கா இன்னும் படம் போட்லகா, நீ போ நான் வரேன்”

“அது போட்றதுக்கு லேட் ஆவும்டா, சாப்ட்டு வந்து பாரு… அம்மா உனக்கு கவாப்பு வாங்கி வெச்சுருக்கு”

அவன் கரத்தை பிடித்து செல்ல முற்படும் நேரத்தில் கூட்டம் சிரித்தும், ஆராவாரித்தும் கை தட்டிக் கொண்டிருந்தது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டது போல் ஒரு வழியாக அனைவரின் முன்பும்  டி.வி. நிலையாக ஓடத் தொடங்கியது. முதல் படமாக அப்போது வெளிவந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த அஜித் நடித்த தீனா படத்தைத் திரையிட்டார்கள். அஜித் டி.வி.யில் தோன்றும் அந்த காட்சி வந்ததும் மேலும் கூட்டம் அஜித்தை வரவேற்று கத்திக் கொண்டிருந்தது. அஜித்தின் தீவிர ரசிகையான திலகா, டி.வி.யின் முன் வந்து நின்று விரல்களால் நெட்டி முறித்து அஜித்திற்கு திஷ்டி கழித்தாள். ரிக்க்ஷாவில் அமர்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்த ஏகாசி,

“ஏ திலகா உன் சோம்பப்டி மூஞ்சிய தூக்கிட்டு அப்பிடிக்கா போமே அஜித்து பாத்து பயந்து ஓடிடப் போறான்”

ஏகாசி அப்படி சொன்னதும் திலகாவைப் பார்த்து அனைவரும் சிரிக்க தொடங்கினார்கள். திலாகவும் சிரித்துக் கொண்டே ஓங்கிய குரலில் கூட்டத்திற்கே கேட்கும்படி கத்தினாள்.

“யோவ் மாமா…! அஜித்து என் ஆளுயா…. அது கூட குடும்பம் நடத்திக் காட்றேன் பாரு”

“முதல்ல ஏ ஒன் பௌடரு போட்டு உன் மூஞ்சிய பாலிஷ் பண்ணுமே அப்புறம் குடும்பம் நடத்துவ”

திலகா ஓடி வந்து ஏகாசியின் முதுகில் ஒரு போடு போட்ட பின் எழிலரசி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவள் பக்கம் சென்றாள்.

“இன்னாடி ஆளையே காணோம்… நாஸ்டா* வாங்க கூட வீட்டாண்ட வர மாட்ற, நாளிக்கு ஞாயித்து கெழம தான மணி ஆட வருவியா?”

“ஓனரு கம்பெனிக்கு சீக்கிரம் வர சொல்லுறாருடி… அதான் வர முடில நாளிக்கு வரேன் வீட்டாண்ட”

கொஞ்ச நேரம் நின்றவாறே படத்தை பார்த்துவிட்டு தரணியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினாள். தரணி சிறுவர்களைப் பார்த்து,

“டேய் எடத்த பாத்துக்கோங்கடா, நான் சாப்ட்டு வந்துர்றேன்”

“சீக்கிரம் வந்துர்ரா இத முஷ்ட்டு ஜாக்கி சான் படம் போடுவாங்கோ”

என்று வினோத் அவனுக்கு நினைவூட்டினான்.

வீட்டின் எதிரில் கால்வாய் பக்கம் அன்னக்கூடையில் இருந்த தண்ணீரில் முகம் கழுவிக் கொண்டிருந்த தாமு, தரணியைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே அவனை நெருங்கினான்.

“ஏ நைனா எங்கடா போய்ந்த? அன்சாரி கடைலந்து உனக்கு கட்லீஸ்*  வாங்கினு வந்துர்க்கேன் பாரு… போய் துன்னு”

“கஸ்தூரி ஆயா வீட்டாண்ட டெக்கு போட்டாங்கப்பா… தீனா படம் போட்டாங்கோ, அக்கா தான் பாதிலே கூப்டுனு வந்துச்சி”

“சரி சாப்ட்டு போய் பாரு, நான் வேணுனா பர்ஸ்ட்ல இருந்து போட சொல்றேன்”

கம்போஸ் ஆட்டத்தில் நாளை பணம் வைத்து ஆடவேண்டும் என்று தரணிக்கு நினைவில் தோன்றியது. நைசாக பேசி சியாமளா, எழிலரசி, தாமு என ஆளுக்கொருவரிடமிருந்து இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டான். வினோத்தும்  நாளை காசு எடுத்துக் கொண்டு வருவான் அதை வைத்து எத்தனை ஆட்டம் விளையாட முடியும் என்று மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். நாளை மணி விளையாடுவதற்கு போதுமான பணம் இருக்கிறதா என்று எழிலரசியும் காமாட்சி விளக்கிற்கு அடியில் வைத்திருந்த பணத்தை சோதனையிட்டாள். நாளை செலவிற்கு போக ஹவுஸ் போர்ட் ஆடுவதற்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்று மணிபர்சில் வைத்திருந்த பணத்தை கணக்கிட்டுக் கொண்டிருந்தாள் சியாமளா. சுடுகாட்டு முள்செடி புதருக்குள் நாளை சீட்டு கட்டு விளையாடுவதற்கு இப்பொழுதே பணத்தை எடுத்து வைத்தான் தாமு. சியாமளா கருவாட்டுக் குழம்பு செய்திருந்தாள். சோற்றோடு சேர்த்து கட்லீஸ்சையும், கவாப்பையும் சாப்பிட்டான் தரணி. தாமு அதிகம் கருக்கல் சாப்பிடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினான். எழிலரசி எதிலும் ஆர்வமில்லாமல் சோற்றை மட்டும் குறைவாக சாப்பிட்டாள்.

தரணி சாப்பிட்டு முடித்ததும் வீடியோ பார்ப்பதை மறந்து வீட்டின் வாசலில் தாமுவின் அருகில் படுத்துத் தூங்கலானான். சியாமளாவும், எழிலரசியும் கொஞ்ச நேரத்திற்கு வீடியோ பார்த்து விட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பினர். ஒத்திகையின்றி நாளைக்கு ஆட இருக்கும் ஆட்டத்தில் வெல்லும் முனைப்போடு நால்வரும் நித்திரையில் ஆழ்ந்தார்கள்.

——-

ஹவுஸ் போர்ட் ஆடுவதற்குத் தயாராக செங்கல்லை உடைத்து சிறு சிறு கற்களாகப் பதினைந்து கற்களை பொறுக்கிக் கொண்டு பெண்கள் அனைவரும் பாத்திமா வீட்டின் தெருவில் முகாமிட்டிருந்தார்கள். ஒரு ஹவுஸ் போர்ட் அட்டை இரண்டு ரூபாய் வீதம் என்று பாத்திமா அனைவரிடமும் ஹவுஸ் போர்ட் அட்டையை கொடுத்துக் கொண்டு பணத்தை வசூலித்துக் கொண்டிருந்தாள். பாப்பம்மாள் மட்டும் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் பத்து ரூபாய் கொடுத்து ஐந்து அட்டைகளை பெற்றுக் கொண்டாள். தன் வீட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சியாமளா இரண்டு அட்டைகளோடு நிறுத்திக் கொண்டாள். பணத்திற்காக ஆசைப்பட்டு வெறுங்கையோடு வீட்டிற்கு சென்ற அனுபவம் அங்கிருக்கும் பெண்கள் அனைவருக்கும் உண்டு. ஆனாலும் அன்றைய நாளில் தான் மட்டுமே சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டும் எனும் எண்ணமும் அனைவரின் மனதிலும் இருந்து வந்தது. அதனாலேயே பாதி பேர் தன்னால் வெற்றி பெற முடியும் என்னும் நம்பிக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹவுஸ் போர்ட் அட்டைகளை வாங்கிக் கொண்டார்கள். ஹவுசிங் போர்ட் ஆட்டத்தை நடத்துவதில் அப்பகுதியில் பாத்திமா கைதேர்ந்தவளாக இருந்தாள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை சௌகார்பேட்டைக்குச் சென்று வெவ்வேறு மாதிரி ஹவுஸ் போர்ட் அட்டைகளை வாங்கிக் கொண்டு வருவாள். மற்ற பகுதியில் இருக்கும் பெண்களும் அனைவரும் ஹவுஸ் போர்ட் விளையாட பாத்திமா வீட்டின் தெருவுக்குத் தான் வருவார்கள்.

அட்டைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட தனக்கு ராசியான அட்டைகளுக்காக ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். அட்டைகளைத் தேர்வு செய்ததும் சௌகர்யமான இடத்தைத் தேடிப் பிடித்து கையில் சிறுகற்களோடு அமர்ந்து கொண்டார்கள் ஆட்டக்காரர்கள். ஹவுஸ் போர்ட் ஆட்டத்தில் குறைந்தது ஐம்பது அட்டைகளாவது விற்கப்படும். 1 ல் இருந்து 100 வரை எந்த ஒரு விதிமுறைக்குள்ளும் உட்புகுத்த முடியாத கலவையான எண்கள் மூன்று அடுக்காக மொத்தம் பதினைந்து எண்களாக ஒவ்வொரு அட்டையிலும் அச்சிடப்பட்டிருக்கும். ஆட்டத்தை நடத்துபவர் எண்கள் வரைந்திருக்கும் பப்பர மிட்டாய் வடிவிலான பிளாஸ்டிக் நாணயங்களை பாத்திரத்தில் இருந்து சுழற்றிக் கொண்டே கையில் சிக்கும் எண்ணை ஆட்டக்கார்களுக்கு கேட்கும்படி உரக்கக் கத்தி சொல்வார். கையில் சிக்கும் ஒவ்வொரு எண்ணையும் சதுரங்க வடிவிலான அட்டையில் அதற்குண்டான இடத்தில் நிலை நிறுத்துவார். உரக்கச் சொல்லும் எண்களை நன்கு கவனித்துக் கொண்டும், அந்த எண்ணிற்கான இருப்பிடத்தை தனது அட்டையில் இருக்கிறதா? என்று தேடிப் பிடித்தும் அதன் மீது கற்களை வைத்து ஆட்டம் முடியும் நேரம் வரை செவியையும், கண்களையும் ஆட்டக்காரர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். மௌன அஞ்சலியைப் போன்று எந்த ஒரு சலணமும் இல்லாமல் ஹவுஸ் போர்ட் அட்டையில் வைத்த கண் வாங்காமல் அனைவரும் அமர்ந்திருப்பார்கள். எவர் ஒருவருக்கு முதல் ஆளாகத் தனது அட்டையில் இருக்கும் பதினைந்து எண்களும் பூர்த்தி ஆகிறதோ அவர் “ஹவுஸ்ஸு” என்று உரக்கக் கத்திக் கொண்டே பாத்திமாவிடம் சென்று அவ்வட்டையை நீட்டுவார். பாத்திமா அட்டையில் இருக்கும் எண்கள் வந்திருக்கிறதா என்று சோதனையிட்ட பின் கமிஷன் போக வசூல் செய்த மொத்த பணத்தையும் வெற்றி பெற்றவரிடம் கொடுத்து விடுவாள்.

ஒரு எண்ணிற்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டு மயிரிழையில் தோற்றவர்கள் உச்சுக்கொட்டிக் கொண்டு மற்றவரிடம் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அதிஷ்டத்தின் பார்வை எவர் பக்கம் திரும்புகிறது என்பதைப் பொறுத்துத் தான் இவ்வாட்டத்தின் முடிவு. பல ஆட்டம் கடந்தும் கூட சியாமளா வெற்றி வாசலை நெருங்க முடியாமல் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் “அட சனியன் இன்னாடி இது… ஒரு ஆட்டம் கூட அடிக்க முடில” “ஏ பாத்திமா நல்லா சுத்தி சுத்தி போடு, எனக்கு எந்த நம்பரும் வர மாட்டேங்குது” “எமன ஓத்தது ஒரு ஆட்டனாச்சு கெலிக்க முடியுதான்னு பாரேன்” என்று புலம்பிக் கொண்டே இருந்தாள். சியாமளாவின் புலம்பல்களைப் பார்த்து மற்ற பெண்கள் நையாண்டி செய்தும் சிரித்தும் அவர்களுக்குள்ளே மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். பாப்பம்மாள் மட்டும் எப்படியோ ஒரு ஆட்டம் வெற்றி பெற்ற பூரிப்பில் மகுடம் சூட்டியது போல் சிரித்துக் கொண்டு வெற்றி பெற்ற பணத்தை சுருக்கு பையில் திணித்துக் கொண்டிருந்தாள். சியாமளா அடுத்த ஆட்டத்தின் வெற்றியை எதிர் பார்த்துக் கொண்டு மீண்டும் ஹவுஸ் போர்ட் அட்டையின் மீது பார்வையை செலுத்தினாள்.

——–

விரித்து போடப்பட்ட சாக்கின் மீது, வளையல்களின் ஓசையைப் போல் சத்தம் எழுப்பிக் கொண்டு அலுமினிய குண்டானிலிருந்து கண் இமைக்கும் நேரத்தில் ஒவ்வொரு மணியாய் வந்து விழுந்து கொண்டே இருந்தது. வட்டமாக அமர்ந்து தனக்கு கொடுக்கப்பட்ட வண்ணங்களிலான மணியை எதிர்ப்பார்த்துக் கொண்டு கீழே வந்து விழும் மணிகளை பொறுக்கிக் கொண்டிருந்தார்கள் ஆட்டக்காரர்கள். எழிலரசிக்கு இது எட்டாவது ஆட்டம் இருந்தும் ஐந்து மணிகளுக்கு மேல் அவள் கையில் எந்த மணியும் சேர்ந்தபாடில்லை. மாதாவே… ஏசுவே என்று வேண்டிக் கொண்டிருந்த அல்போன்ஸ் மட்டுமே யாருக்கும்  சிக்கி விடாதவாறு அதிர்ஷ்டத்தைத் தன் வசமாக்கிக் கொண்டிருந்தாள். இன்றைய ஆட்டத்தை வென்றிருந்தவர்களை கணக்கிட்டதில் முதலிடம் வகிக்ததும் அவள் மட்டும் தான். செம்பட்டை தலையோடு அல்போன்ஸ் பார்க்க வெள்ளைகாரியை போல் பளீரென்று இருப்பாள். அதனாலேயே அவளை மிஸி என்று பலரும் அழைத்தனர்.

“ஏ மிஸி கொஞ்சம் வுட்டு குடுடி நீயே எல்லாத்தையும் ஓத்துனு போய்டுவ போலியே”

“அடிங் நோனி… மணிய குலுக்கி குலுக்கி போடுறதே நீ தானடி. என்ன வுட்டு குடுக்க சொல்ற…”

பாத்திரத்தை சாய்வாக பிடித்துக் கொண்டு சக்கரத்தைப் போல் வலது கையால் சுழற்றிக் கொண்டே கண் இமைக்கும் நேரத்தில் திலகா பல வண்ணங்களிலான மணியை வெளியே வீசி எறிந்தாள். ஆட்டக்காரர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணங்களிலான மணியை பொறுக்க தினறிக் கொண்டிருந்தார்கள். அடையாளத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மணி போக முதல் ஒன்பது மணியை சேர்ப்பவர்கள் சட்டென்று ஆட்டத்தை நிறுத்துவார்கள். கையில் சேர்த்து வைத்திருக்கும் மணியை சோதித்த பின் மொத்த பணமும் வெற்றி பெற்றவரின் வசம் செல்லும். ஒரு கலர் மணி ஒரு ரூபாய் என்று வரையறுக்கப்பட்டிருந்த ஆட்டத்தில் கூடுதலாக இரண்டு மணி சேர்த்து பார்த்தும் கூட எழிலரசிக்கு எந்த ஆட்டத்திலும் வெற்றி கிடைக்காமல் இருந்தது.

“நீ போடுடி திலகா வீட்டுக்கு போறதுக்குள்ள ஒரு ஆட்டனாச்சு அடிச்சு காட்றேன்”

———

தண்டவாளத்த்திற்கு இடையில் குறுக்காகப் போடப்பட்டிருக்கும் கல்லின் மீது இரு பக்கமும் கோடு போட்டு செவ்வக வடிவத்திற்குள் சில்லறைகளை வைத்து இளசுகள் கம்போஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் பந்தயம் கட்டி ஆடும் இளசுகள் கம்போஸ் விளையாட்டின் நுணுக்கங்களை அறிந்திருந்தார்கள். அவர்களை மீறி வெல்வதென்பது அவ்வளவு சுலபமான காரியாமாக இல்லை. இவர்களுடன் சேர்ந்து ஆடினால் நிச்சயம் மொட்டையாகத் தான் வீட்டிற்குச் செல்ல முடியும் என்று அறிந்திருந்த சிலர் அவர்களின் ஆட்டத்தை வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். வினோத் மட்டும் துணிந்து அவர்களிடம் என்னவோ பேசி தரணியை ஆட்டத்தில் சேர்த்து விட்டான்.

“டேய் படிக்குற பசங்க… நீங்க ஏன்டா காசு வெச்சு வெளாட வரீங்கோ, கார்க் வெச்சு வெளாட வேண்டியது தான?”

“அண்ணோவ் தர்ணி சம்மையா வெளாடுவான். அவன் வெளாடுறத நீயே பாரு… அப்புறம் டெய்லி அவன கூப்டுவ”

“ஏய் ஊள உன்னால தான் எல்லா பசங்களும் கெட்டுப் போறாங்கோ… தரணி உங்கப்பாக்கு தெரியுமாடா? அப்புறம் அந்த ஆளு எங்க கிட்ட தான் வருவான்”

தாமஸ் தனது லுங்கி மடிப்பில் சில்லறைகளை மடித்துக் கொண்டே எச்சரிக்கும் தொனியில் தரணியைப் பார்த்துக் கேட்டான். அப்படியே தெரிந்தாலும் பெரிதாக ஏதும் கலவரமா நடந்து விடப் போகிறது என்னும் மிதப்பில்

“தெரிஞ்சாக் கூட எங்கப்பா ஒன்னும் சொல்ல மாட்டாருனா” என்று தரணி பொய்யுரைத்தான்.

அனைவரும் ஒரு ரூபாய் சில்லறையை செவ்வக வடிவத்திற்குள் போட்டார்கள் அப்படி போடப்பட்ட பெரும்பாலான சில்லறைகள் கற்களினால் அடிபட்ட தழும்புகளைத் தாங்கிக் கொண்டு பழமையாகக் காட்சியளித்தது. தரணியைச் சேர்த்து மொத்தம் ஆறு பேர் கம்போஸ் விளையாடினார்கள். சில்லறைகள் வைத்து, தண்டவாளத்தில் ஆடிய போதிய அனுபவம் இல்லாததால் தரணி ரொம்பவே தடுமாறினான். பல சுற்றுகள் செல்லும் ஆட்டம் அனுபவசாலிகளால் ஒரே சுற்றில் முடிவுக்கு வந்தது. தரணிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் வழங்குவதாக இல்லை. தரணி எடுத்து வந்திருந்த சில்லறைகள் மற்றவரின் கரங்களுக்குத் தாவிக் கொண்டிருந்தன. வெற்றி பெறுவதற்கான எந்த ஒரு சாத்தியமும் இல்லை என்பதை அறிந்த வினோத், தரணி அருகில் சென்று மெல்ல அவன் காதில் கிசுகிசுத்தான்.

“இன்னிக்கு ஒரு ஆட்டம் கூட நாம கெலிக்க முடியாது போலடா”

——-

சுடுகாட்டு சமாதிகளுக்குப் பின் அமைந்துள்ள முட்புதருக்குள் ஒவ்வொரு ஆளாக நுழைந்து கொண்டே இருந்தனர். கிழிந்து போன  பழைய பாயைக் கொண்டும், அட்டைகளைக் கொண்டும் சௌகர்யமாக அமர்ந்து சீட்டு விளையாடுவதற்கு ஏகாசி அவ்விடத்தைத் தயார் செய்திருந்தான். எவரோ வெயிலிடமிருந்து  மறைவிடம் தேடி முட்புதரில் மலம் கழித்திருந்த நாற்றம் அவ்விடத்தைச் சுற்றி வீசிக் கொண்டே இருந்தது.

“எந்தத் தேவ்டியா புள்ளைங்கோ பேண்டு வைக்குதுனே தெர்ல… ஓத்தா மாட்ட்டும் கீச்சிர்றேன்”

ஏகாசி புலம்பிக் கொண்டே மீண்டும் அவ்விடத்தை சுத்தம் செய்தான். மற்றவர்கள் நாற்றத்தையோ, கொசுக்களையோ பொருட்படுத்தவில்லை எப்போது ஆட்டத்தைத் தொடங்கலாம் எனும் முனைப்போடு காத்திருந்தனர். தாமு வந்து சேர்வதற்குள் இரண்டு ஆட்டம் முடிந்திருந்தது. ஏகாசி பீடியை பற்களால் கடித்தபடி புகைத்துக் கொண்டே சீட்டுக்கட்டுகளை குலுக்கிக் கொண்டிருந்தான்.

“தாமே ஆட்டதுக்கு பத்ரூபா டெப்பாசிட்டு உனக்கு ஓக்கேவா?”

“லவடா உனக்கு எவ்ளோ வேணுனு சொல்ட்றா சேத்து கட்டுறேன்… எல்லாத்துக்கும் ரெடியா தான் வந்துக்குறேன். பர்ளு* விடாம மூட்ட்டு ஒழுங்கா போடு”

தாமு ஏகாசியை திட்டிக் கொண்டே சட்டை பாக்கெட்டில் இருந்த மானிக்சந்த் பான்பிராக்கை வாயில் போட்டுக் கொண்டான்.

மொத்தம் ஆறு பேர் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். எட்டு ஆட்டங்கள் முடிந்தும் கூட தாமு வெற்றிக் கணக்கை தொடங்காமலே இருந்தான். ஜோக்கருக்காகக் காத்திருந்து தான் மட்டும் ஜோக்கர் ஆனது போல் இருந்தது அவனுக்கு. அவன் எதிர்பார்த்த சீட்டு வராத விரக்தியில் சீட்டுகளை வசைபாடிக் கொண்டும், மண்டையை சொரிந்தும், நாக்கை கடித்துக் கொண்டும் தன் வெறுப்பை வெளிபடுத்தினான்.

“தாமே இன்னிக்கு உனக்கு தோப்புக்கை*… லக்கு இல்லனு நினைக்குறேன் எப்போமே ஜெயிக்காத ஏகாசியே நாலாட்டம் அடிஷ்ட்டான்”

என்று ஆடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவன் தாமுவிற்கு ஆறுதல் சொல்லும் பாவனையில் சொல்லிக் கொண்டே தனது வலது கையில் அடுக்கியிருக்கும் சீட்டிலிருந்து ஒரு சீட்டை விடுவித்தான். அச்சீட்டை எடுத்த ஏகாசி இரண்டு புருவங்கள் உயர அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.

“இன்னா சொன்ன…? நாலாட்டம் அஷ்ட்டனா…! அப்போ இந்தா அஞ்சாவதா இதயும் சேத்துக்கோ”

சீட்டை கீழே வைத்த அடுத்த நொடி பொதுவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை அள்ளி சட்டை பாக்கெட்டிற்குள் திணித்துக் கொண்டான் ஏகாசி. புதருக்கு வெளியே இருந்து ஒலித்த எச்சரிக்கை குரலின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியது.

“டேய் ஏகாசி போலிஸ்காரங்கோ ரவுண்ட்ஸ் வராங்கடா எல்லாரும் எஸ்* ஆவுங்கோ”

சட்டென்று சுதாகரித்து சீட்டுக் கட்டுகளை அங்கேயே விட்டுவிட்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடத் தொடங்கினார்கள். தாமுவும், ஏகாசியும் மட்டும் சுடுகாட்டின் தடுப்புச் சுவரைத் தாண்டி இரயில் தண்டவாளத்தின் வழியே தப்பிக்க முனைந்தனர். ஏகாசி போலீஸ்காரர்களை இடைவிடாது வசைபாடிக் கொண்டே மூச்சிரைக்க ஓடினான்.

“ஓத்தா டாபருங்கோ எங்கர்ந்து தான் மோப்பம் புடிச்சு வரான்ங்கன்னே தெர்ல… கட்டு கட்டா பணம் வெச்சினு கிளப்புல ஆடுற பணக்காரங்கள விட்டுடுவான்ங்கோ… சூத்து காஞ்சுதுனா மட்டும் நம்மள தேடினு வந்துடுவானுங்கோ”

—–

“அம்பத்தி ஒன்னே….”

பாத்திரத்தில் இருந்து சிக்கிய எண்ணை அத்தெருவுக்கே கேட்கும்படி உறக்கக் கத்தினாள் பாத்திமா. அடுத்ததாக கையில் சிக்கிய எண்ணை உரக்கக் கத்த இருக்கும் நேரத்தில் எண்கள் நிரம்பி இருந்த அப்பாத்திரம் உயரே பறந்து சென்று கால்வாய் பக்கம் போய் விழுந்தது.

“முண்டைங்களா… போன தடவையே வார்ன் பண்ணிட்டு தானே போனேன்… அவ்ளோ கொழுப்பாடி உங்களுக்கு?”

வழக்கமான தன் காவல் உடையின் அடையாளத்தை மறைத்து மப்டியில் வந்திருந்த போலிஸ் ஒருவன் தனது பூட்ஸ் ஷூக்களாலே ஹவுஸ் போர்ட் ஆட்டத்தைக் கலைத்தான். வந்திருப்பது போலிஸ் என்று அறிந்ததும் பாத்திமா வீட்டிற்க்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். வசூல் செய்யப்பட்டு பொதுவில் வைத்திருந்த பந்தயப் பணத்தை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டிற்க்குள் திணித்துக் கொண்டே அங்கிருந்தவர்களை விரட்ட தொடங்கினான். போலீஸ்காரனின் குரலுக்கும், அதட்டலுக்கும் பயந்து அங்கிருந்த அனைவரும் நழுவிக் கொண்டிருந்தார்கள்.

உடன் வந்திருந்த இன்னொரு போலீஸ்காரன் ஹவுஸ் போர்ட் ஆடிக் கொண்டிருந்த பெண்களின் அட்டைகளை வாங்கி இரண்டு துண்டாய் உடைத்து தூரே வீசிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அத்தெருவே கலவரத்தால் தன் இயல்பை இழந்திருந்தது போல் காட்சியளித்தது. பணத்தை இழந்த விரக்தியிலும், ஆட்டம் கலைக்கப்பட்ட வெறுப்பிலும் சியாமளா பாப்பம்மாளோடு புலம்பிக் கொண்டே வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

——

“ஏ ஆட்டத்த கலைங்கடி போலிஸ்காரங்கோ  எல்லாம் தெரு தெருவா ரவுண்ட்ஸ் வரான்கலாம்”

விஷயம் அறிந்த ஒருத்தி குழுவாக மணி விளையாடிக் கொண்டிருக்கும் பெண்களை பார்த்து எச்சரித்துச் சென்றாள். சிறிதும் யோசிக்காமல் அனைவரும் ஆட்டத்தை கலைத்து சிதறிக் கொண்டிருந்த மணியைப் போல் அவரவர்களின் வீட்டிற்குச் செல்ல ஆயுத்தமானார்கள்.

“சுமதியக்கா பைண்டிங் காசு குடுத்துட்டு போ, அப்பிடியே ஓடலாம்னு பாக்குற”

“நீ வேற ஏன்டி….? நானே எல்லா காசையும் தோத்துட்டு அம்போனு நிக்குறேன் வயித்தெரிச்சல கொட்டுற, நைட்டு வீட்டாண்ட வந்து தரேன்”

சுமதி சொல்லிக் கொண்டே வீட்டிற்கு ஓடினாள். தெருவில் என்ன நடந்திருக்கும் எனும் பதபதப்பில் திலகாவும், எழிலரசியும் சாரையாய் சந்துக்களில் புகுந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் செல்லும் போது தெருவில் போலிஸ்கார்கள் வந்து ஆட்டத்தை கலைத்து விட்டுப் போனதை பற்றி ஆங்காங்கே மாநாடு நடந்து கொண்டிருந்தது.

—-

“டேய் பசங்களா… போலீஸ்காரன் தொரத்தினு வரான்டா… நீங்களும் ஓடுங்கோ உங்களையும் புடிச்சுக்க போறான்”

தூரத்தில் இருந்தே தண்டவாளத்தில் கம்போஸ் ஆடிக் கொண்டிருந்த இளசுகளை பார்த்து ஏகாசி கத்திக் கொண்டிருந்தான். அதைக் கேட்டதும் பையன்கள் சில்லறைகளாய் அவர்களின் தெருவை நோக்கிச் சிதறி ஓடினார்கள்.

“ஊள நாமோ சின்ன பசங்கடா… நம்மள எல்லாம் புடிக்க மாட்டாங்கோ”

“புடிக்க மாட்டாங்க தான்டா… ஆனா சூத்திலியே அடிப்பான்கோ வாய்ங்கிரியா?”

“இனிமே துட்டு வெச்சே ஆடக்கூடாதுடா.. எல்லா காசையும் தோத்தாச்சு”

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள மனம் இல்லாமல் தரணிக்கு அழுகை வந்தது. தனது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தான்.

—–

தாமு வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் ரேடியோவைத் திருப்பித் திருப்பி பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான். அவன் திருகல்களுக்கு அலைவரிசைகள் உடன்படுவதாக இல்லை ஒரு கட்டத்தில் முயற்சித்தது போதும் என்று எரிச்சலுடன் ஓரமாக வைத்துவிட்டான்.

“ஏ சியாமா சோறு ஆயிடுச்சாமே”

சியாமளா அவன் குரலுக்கு மறுமொழியாமல் அடுப்பில் கட்டைகளின் இடையே சிக்குண்டு மேலெழ முடியாமல் போராடும் தீயினை ஊதாங்குழல் வழியே தன் சுவாசகாற்றை நிரப்பி அத்தீயை உயிர்பித்துக் கொண்டிருந்தாள். புகையின் எரிச்சல் கண்களில் ஊடுருவ தன் முந்தானையின் ஓரத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு சோற்றை வடிப்பதிலேயே கவனமாக இருந்தாள்.

“ஏ உன்னதாமே கேக்குறேன் காது புட்டுக்குச்சா இன்னா?”

தாமுவை திரும்பி முறைத்துக் கொண்டே

“சாப்பாடுக்கு பத்து காசு கொடுக்க போஷி* இல்ல… காசே கொடுக்காம சோறு ஆய்டுச்சானு கேக்குறியே உனக்கு அசிங்கமா இல்ல?”

“கைல காசு இல்லமே… அதப் புரிஞ்சிக்காம சும்மா நொய்யி நொய்யினு கத்தினு இருக்க”

சியாமளா அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடப் பிடிக்காமல் மீண்டும் சமையல் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். அந்நேரம் பார்த்து பெப்சி பந்தை தரையில் தட்டிக் கொண்டே தரணி வீட்டினுள் நுழைந்தான்.

“டேய் ஒரு இடமா இருக்க மாட்ட…? நாய் மாதிரி தெருத் தெருவா ஒலாத்தினே* இருப்பியா நீ”

தாமு செலவுக்குப் பணம் கொடுக்காமல் போனது, போலிஸ் தெருவிற்குள் வந்து ஆட்டத்தைக் கலைத்தது, ஹவுஸ் போர்ட் ஆட்டத்தில் பணத்தை இழந்தது என்று சியாமளா சந்தித்தவை எல்லாம் அவளை சினத்தின் கட்டுபாட்டில் இயங்கச் செய்தது. சியாமளா கோவமாக இருப்பதை அறிந்ததும் தரணி எதுவும் பேசாமல் ஓரமாக அமர்ந்து கொண்டான்.

“உன்ன தான்டா கேக்குறேன் தூம…. குடும்ப கஷ்டம் தெரிஞ்சாத் தானே உனக்கு படிக்கத் தோணும், எப்போ பாத்தாலும் பம்பரம், கோலி, காத்தாடினு சுத்தினு இருக்க. நீ எல்லாம் எங்க இருந்து உருப்படப் போற. டேய்… உன் அப்பன் சினிமா போஸ்டர் ஒட்டுறான்டா இதுவரைக்கும் ஒரு நாளாச்சு சினிமா பாத்துருப்பானா….? உன் அக்கா புக்கு பைண்டிங் கம்பெனில வேல செய்றா ஆனா அவளால மத்த பொண்ணுங்க மாதிரி புக்கும் பையுமா இஸ்கூளுக்கு போவ முடிஞ்சுதா? ஏன் நான் ஹோட்டல்ல பாத்துரம் கழுவுறேன் நான் ஒரு நாளாச்சு ஹோட்டல்ல சாப்ட்டிருக்கேனா….? எதப் பத்தியும் யோசிக்காத. தெரு நாய் மாதிரி சுத்தினே இரு… தோ நாளைக்கு தண்டல்காரன் வேற வருவான் அவனுக்கு பய்ந்து எங்க போய் ஒளிர்துன்னே தெர்ல…”

தாமு நாக்கை கடித்துக்கொண்டு சியாமளா பக்கம் திரும்பினான்.

“ஏய் கம்முனு இருமே… புள்ள கிட்ட போய் புலம்பினுகீர… சின்ன புள்ள அவுனுக்கு இன்னாமே தெரியும். துட்டு இல்லனா இன்னா இப்போ? லைப்பூ ஜாலியா தானே போது…. ஓத்தா சினிமாக்கு போல ஊம்ப போலனு கத்தினு இருக்குற.”

பிரச்சனை பெரிதாகி விடுமோ எனும் பயத்தில் எழிலரசி இருவருக்கும் இடையில் குறுக்கிட்டு தாமுவை சாமாதானம் செய்ய முயற்சித்தாள்.

“எப்பா… கொஞ்சம் கம்முனு இருப்பா… டெய்லி உங்க ரெண்டு பேரு கிட்டயும் மாரடிக்க வேண்டிதா இருக்கு”

மேற்கொண்டு எதுவும் பேசாமல் சியாமளா சமையல் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்

வீட்டு வாசலின் வழியே ஏகாசியின் குரல் கேட்டது

“தாமே நான் முன்னாடி போறேன் நீ சீக்கிரம் வந்துடு”

சூழ்நிலையைப் புரிந்து கொண்டு தாமு வார்த்தைகளின்றி கையசைவின் மூலம் பதிலளித்தான்

“எங்கப்பா கூப்புடுறாரு அவரு”

“தாயபாஸ் ஆட கூப்புட்றான்மா”

தாமு அப்படி சொன்னதும் சியாமளா சட்டென்று திரும்பி அவனை முறைத்தாள்.

சியாமளா முறைப்பதைக் கண்டு கொள்ளாமல் தாமு தான் போலீசிடம்  சிக்கி தப்பித்து வந்த சாகசத்தை தரணியிடமும், எழிலரசியிடமும் விவரித்துக் கொண்டிருந்தான். சிறுது நேரத்திற்குப் பிறகு எழிலரசியே அக்கேள்வியை கேட்டாள்.

“எப்பா நம்ம வேணா வீட்லியே தாயபாஸ் வெளாடலாமா…? நான் வேனும்னா அம்மாவா செட்டு சேத்துக்குறேன். நீ தரணிய சேத்துக்கோ”

தாமு பதிலேதும் சொல்லாமல் அமைதி காத்தான்

“ஏ வேலைய பாருடி சாப்பாடு ஆய்டுச்சி தட்டுங்கள கொஞ்சம் கழுவி எத்துனு வா”

“உங்கம்மாக்கு… யங்கூட எல்லாம் ஆட தில்லு இல்ல… ஓடவுட்ருவேன்னு பயம்”

“இன்னாது தில் இல்லியா? உன் பவுசு* எல்லாம் உன் கூட்டளிங்க கிட்ட காட்டு என் கிட்ட ஆவாது”

“அப்போ ஒரு ஆட்டம் கெலிச்சு காட்டுடி பாப்போம்”

சியாமளா துணிந்து சிரித்துக் கொண்டே ஆட்டத்திற்கு தயாரானவளாய் எழுந்து வந்தாள். எழிலரசி ஆட்டத்தைத் தொடங்குவதற்கு அடுத்த கட்ட வேலையில் இறங்கினாள். கதவின் ஓரம் இருக்கும் மரக்கட்டையை எடுத்து வந்தாள். அடுப்பைச் சுற்றிக் கீழே உயிரிழந்து கிடக்கும் அடுப்புக்கரியை கொண்டு கட்டையின் மீது நான்கு திசையிலும் ஆறு கட்டங்களாக ஆட்டத்திற்கான வரைப்படத்தை வரைந்தாள். அடுப்புக்கரியை உடைத்தும், நறுக்கி வீசப்பட்ட வெண்டைக்காய் துண்டுகளை எடுத்து வந்தும் நான்கு நான்கு காய்களாக இரண்டு அணிக்கும் சேர்த்து கட்டத்திற்குள் வைத்தாள். பித்தைளையாலான தாய கட்டைகளை உருட்டிக் கொண்டே

“ம் ஸ்டார்ட் பண்லாமா…?”

“எப்பா எனக்கு தாயபாசு வெளாட தெரியாதுப்பா”

தரணி தன் நிலையை உணர்ந்து முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்

“நைனா நீ தாயபாச உருட்டிவுடு… நான் பாத்துக்குறேன், ஏ துட்டு வெச்சு இருக்கியா டெபாசிட் எவ்ளோனு சொல்லுமே”

“ச்சீ நீ எவ்ளோ வெக்குறேனு சொல்லு… கெலிக்க முடியாதுனு நீ தானே பிலிம் காட்டினு இருந்த”

தாமு தனது லுங்கி மடிப்பில் சுற்றி இருந்த சில்லறைகளை எடுத்து தலைக்கு இரண்டு ரூபாய் என்று கட்டத்துக்குள் வைத்தான். சியாமளாவும் தன் முந்தானையில் முடிச்சு வைத்திருந்த சில்லறைகளை எடுத்து வைத்தாள்.

தந்தையும் மகனுமாக, தாயும் மகளுமாக இரண்டு அணியாகப் பிரித்துக் கொண்டு ஆட்டத்தைத் தொடங்கினார்கள். தாமு தாயக் கட்டைகளை இரண்டு கரங்களுக்கு இடையில் வைத்து கர கரவென முறிக்கி ஓசை எழுப்பினான்.

காலத்திற்கும் அழியாத வரலாறு ஒன்றைப் படைக்க இருப்பது போல் தாயக் கட்டைகளை தரையில் உருட்டி தன் தொடையில் பலமாக அடித்துக் கொண்டு அவனுக்கு அவனே ஊக்குவித்துக்கொண்டான்.

“இதானடா தாயம்”

தாயம் விழாமல் போகவே தாமு கடுப்பில் ‘ஓத்தா’ என்று சொல்லி நாக்கை கடித்துக் கொண்டான். தாயக் கட்டை அடுத்து சியாமளாவின் கைக்கு வந்தது.

“தாயம் காட்டுடி அங்காளி”

சியாமளாவுக்கு தாயம் விழாததைப் பார்த்து தாமு நக்கல் அடித்தான்

“ஐயோ..! சூப்பரா காட்னா பார் உன் அங்காளி”

“எப்பா… நீ சூத்தமூடினு ஆடு”

சியாமளாவும் பதிலுக்கு பதில் அவனை நையாண்டி செய்தாள்.

“ரெண்டு பேரும் கம்முனு ஆட்றீங்களா”

எழிலரசி இருவரையும் எச்சரித்தாள். அடுத்து தரணியின் முறை வந்தது

“நைனா அஞ்சு வெச்சு போடு… அப்போ தான் தாயம் உய்யும்… நீ மட்டும் தாயம் போடுடுடா இவளுங்கள ஓடவுட்டு அடிக்குறேன்”

ஆட்டத்தின் முறை தெரியாவிட்டாலும் தன் திறமையை எப்படியாவது நிரூபித்தே தீர வேண்டுமென்று முழு நம்பிக்கையுடன் மெதுவாக தாய கட்டைகளை உருட்டினான். தரணியின் உருட்டலிலும் கூட தாயம் எட்டி பார்ப்பதாக இல்லை.

“ஐயோ…! மிஸ் ஆய்டுச்சுப்பா…?”

“செரி வுடு டென்சன் ஆகாத…”

அடுத்த வாய்ப்பு எழிலரசிக்கு வந்தது. எழிலரசிக்கு மெதுவாக தாய கட்டைகளை உருட்டி விரல்களை சொடுக்கினாள். அவளுக்கும் தாயம் விழாமல் போகவே மீண்டும் தாமுவின் முறை வந்தது.

“நைனா அப்பா இப்ப போட்டு காட்றேன் பாரு…. அடிங்கொம்மா இந்தாடா அந்த தாயம்”

தன் முழு பலத்தையும் சேர்த்து தொடையில் அடித்துக் கொண்டான். அப்பொழுதும் கூட காய் நகர்தலுக்கான தாயம் உருப் பெறாமல் இருந்தது.

ஒருவரை மாற்றி ஒருவர் நகைத்துக் கொண்டும், ஆதரவு அளித்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாயத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு சுற்றின் போதும் தாய கட்டைகள் தரையின் மீது உருண்டு கொண்டிருந்தன. ஆனால், தாயக்கட்டைகள் தாயத்தைக் காட்டுவதாக இல்லை. காய்களைக் கட்டத்திற்குள் இறக்க முதல் தாயத்திற்காக நால்வரும் போராடிக் கொண்டிருந்தார்கள். நிச்சயம் யாரோ ஒருவருக்கு தாயம் கண் திறக்கும். அப்படி விழும் அந்த முதல் தாயத்தில் நால்வருக்கான வெற்றியும் அடங்கியிருந்தது.

———————————————————————————————————————————————

கெலிப்புக்கை – தொடர்ச்சியாக வெற்றியை தன் வசம் வைத்திருப்பது

சோங்கு – கோலியை கொண்டு ஆடும் ஆட்டம்

ஜெகா – பின்வாங்குவது

போனி – முதல் வியாபாரம்

கவாப்பு – மாட்டின் குடலைக்கொண்டு செய்யப்படும் உணவு

கருக்கல் – மாட்டின் கொழுப்பைக்கொண்டு செய்யப்படும் உணவு

நாஸ்டா – காலை உணவு

கட்லீஸ் – மாட்டிறைச்சியுடன் கடலைமாவு சேர்த்து செய்யப்படும் வடை.

பர்ளு – சீட்டு கட்டுகள் மடங்கிக்கொள்வது

தோப்புக்கை – தொடர்ச்சியாக தோல்வி அடைவது

எஸ்ஸு – தப்பிப்பது

ஒலாத்தல் – திரிந்துகொண்டிருப்பது

போஷி – வழிவகை

பவுசு – பெருமை (பில்டப்)

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. அருமை. வடசென்னையின் பால்ய கால விளையாட்டுக்களை இயல்பாக பதிவு செய்துள்ளது. இச் சிறுகதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button