
மணிஒலி தயங்குக
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே
அகநானூறு 154
பாடியவர்: பொதும்பில் புல்லாளங்கண்ணியார்
திணை :முல்லைத்திணை
வினைமுடித்து திரும்பும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொல்லியது.
இது தலைவன் கூற்று பாடல். மிகச்சிறிய விஷயங்களில் தலைவன் உணரும் மெல்லுணர்வுகளே தலைவன் கூற்றுப்பாடல்களை அழகாக்குகின்றன. சங்கக்கவிதைகளில் தலைவி கூற்று பாடல்கள் பேசப்பட்ட அளவு தலைவன் கூற்றுப்பாடல்கள் பேசப்படவில்லை என்று நினைக்கிறேன்.
தலைவி தன் காதலை ஆழமானது, அகலமானது, பெரிது என்று எப்படியோ சொல்லிவிடுகிறாள். அவளைவிட அவள் தோழி இன்னும் அழகாக எடுத்துரைக்கிறாள். ஆனால், தலைவன் எப்பொழுதும் சரியாக சொல்லத்தெரியாதவனாகவே இருக்கிறான். தலைவியை சந்திக்க இரவில் வனவிலங்குகளை, காவல்களை, காட்டுப்பகுதிகளைக் கடந்து வருகிறவனுக்கு சொற்கள் வழிகொடுப்பதில்லை என்றே நினைக்கிறேன்.
இப்படி தலைவன் செயல்கள் மூலமே காதலை காட்டுபவனாக இருக்கிறான். திருமணத்திற்கு முன் தலைவன் உணரும் மெல்லுணர்வுகள் கொண்ட சங்கக்கவிதைகள் அழகானவை. காதல் ஒருவனை அதுவரை இல்லாத ஒரு அனிச்ச நிலைக்கு மாற்றுகிறது. தலைவி தன்னையே அனிச்சமாக்கும் போது தலைவன் தான் காணும் அனைத்தையும் அனிச்சமாகக் காணும் ஒரு ஆழமான மனநிலையை எய்தும் இந்தப்பாடல் முக்கியமானது என்று நினைக்கிறேன்.
வேலெடுத்து போருக்குச் செல்லும் தலைவன் போர் முடிந்து தேரில் திரும்புகிறான். தேர்ப்பாகனிடம் தன் மன உணர்வுகளைச் சொல்கிறான். போருக்கு முற்றிலும் எதிர்நிலையான மனநிலையை இங்கு அவனுள் பூக்கவைப்பது காதலே. இதையே நான் வியந்து பார்க்கிறேன். அவன் போரில் ஒரு உயிரையாவது கொன்றிருக்கலாம். குதிரையை விரட்டியடித்திருக்கலாம். உச்ச குரலில் வெற்றி என்று வெறிகொண்டு கத்தியிருக்கலாம். இந்தப்பாடலில் உள்ள அதற்கு முற்றிலும் எதிரான மனநிலை வியக்கவைக்கிறது. அழகிய காட்டின் அமைதி கெடாதவாறு தேரைச் செலுத்தச் சொல்லும் ‘தார்மணி தயங்குபு இயம்ப ஊர்மதி வலவ’ என்ற வரி தலைவனின் மனநிலையை ஒரு பூவைப்போல காலத்தின் மீது எடுத்து வைக்கிறது.
என்னுடைய அண்ணன் திருமணத்திற்காக பெண் பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. இரண்டு பெண்கள் அண்ணனைப் பிடிக்கவில்லை என்று மறுத்திருந்தார்கள். இரண்டாவது பெண் பார்த்தல் நிகழ்வு முடிந்த அன்று இரவு அம்மாச்சியின் வயல்வீட்டில் இருந்தோம். இரவு உணவுக்குப்பின் களத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது அலைபேசியில் பெண்ணுக்கு அண்ணனை பிடிக்கவில்லை என்ற செய்தி வந்தது.
அண்ணன் முகம் சுருங்கியிருந்தான். பெரியம்மா இந்தப்பெண் அமைந்தால் நல்லது என்று சொல்லியிருந்தார். அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்த நான் அவன் தோளில் கை போட்டு , “ரொம்ப டென்ஷனாவே இருக்காத.. முன்னாடி சொட்டை விழும்ன்னு சொன்னா கேட்டாதானே,” என்று முதுகில் தட்டினேன்.
உடனே அம்மா பெரியம்மாவிடம், “எல்லாம் உன்னாலதான். பொண்ணு பாக்கறதுக்கு மொத நாளு போய் இவன முடி வெட்டிட்டு வரச் சொல்லியிருக்க…கிருதாவும் முடியுமா இருந்தாதானே பிள்ளைங்களுக்கு பிடிக்கும்,” என்றார்.
அம்மாச்சி, “அத்தனையும் தங்கம்; அரங்கில்லாத மாணிக்கம்,” என்று அண்ணன் முகத்தை வழித்தெடுத்து முத்தம் தந்ததும் சூழல் சிரிப்பாக மாறிவிட்டது. பெரியய்யா, ‘எங்களையெல்லாம் யாரு இப்படிக் கொஞ்சினாங்க’ என்ற முணுமுணுப்புடன் எழுந்து சென்றார்.
அடுத்த பெண் உடனே சரி சொன்னதாலேயே அண்ணனுக்கும் மிகவும் பிடித்துப் போனது. அன்றிலிருந்து திருமணம் ஆகும் வரை இப்படிதான் இருந்தான். நான்தான் ‘பூவெல்லாம் பறிக்கறதுக்கில்லை… செடியிலயே இருக்கறதுக்குன்னு பூத்தது,’ என்று சொல்லிக்கொண்டு திரிவேன். அவன் செடிகள் மீதும், எப்போதும் அவன் துரத்தியடிக்கும் மணி என்ற நாய் மீதும் அன்பானவனாக ஆனான். காதல் செய்யும் மாயம் என்று இதைச் சொல்லலாம். மூன்று மாதங்களுக்குள் கணினித் துறையாளனின் இறுக்கங்களும், கத்தல்களும் , சிடுசிடுப்புகளும் மாறி பார்க்கவே அத்தனை அழகாக இருந்தான். காதல் மனிதருக்குள் ஒரு இயல்பான கனிவை, மந்தகாசத்தைக் கொண்டு வருகிறது. மலரும் மொட்டின் நுனியில் உள்ள மினுமினுப்பை போன்ற ஒரு ஔி காதலிப்பவர்களை சூழ்ந்து கொள்கிறது.
அண்ணனின் பாடலாக இதைக் காண்கிறேன். அப்போது அவனை அருகில் இருந்து ரசிக்கும் வாய்ப்பை பெற்றவள் நானே. காதலிகளே அறியாத அண்ணன்களை சகோதரிகள் நம் கண்முன்னே கண்டு வியக்கிறோம். இந்தப்பாடல் அத்தகையதொரு இனிய தலைவனின் பாடல். [இப்பொழுது அண்ணன் எப்பொழுதும் போல இயல்பாக அவனுடைய முரட்டுத்தனங்களுக்கு மீண்டுவிட்டான்]
மழை பொழிந்து நிறைந்த
இம்முல்லை நிலத்தின் குளங்களில்…
பலஇசைக்கருவிகளை
இசைப்பதைப்போல
தேரைகளின் குரல்கள்
வழி நெடுக கேட்கின்றன.
நீண்ட காம்புகளை உடைய பிடவம் பூக்கள்
இந்த செந்நிலத்தின்
வழியெங்கும் உதிர்ந்து கிடக்கின்றன.
படம் எடுத்த
நாகப்பாம்பின் நச்சுப்பைகளைப் போல
வெண்காந்தள் மலர்கள் மலர்ந்துள்ள
வழி இது.
சுழல் கொம்புகளை உடைய மான்கள்
தன் இணையோடு நீரருந்தி
இளைப்பாறுகின்றன.
தேரோட்டியே…
காடு அழகுற விளக்கும் இவ்வழியில்
குதிரைகளின் கழுத்து மணிகள்
மெதுவாக ஒலிக்க நம் தேர் செல்லட்டும்.
நாமும் தலைவியை சென்று காண்போம்.
(தொடரும்…)