
அரிதினும் அரிதே
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
குறுந்தொகை: 3
எழுதியவர்: தேவகுலத்தார்
[ஆசிரியர் அறியப்பட முடியாத பாடல்களுக்கு இப்படியான குறிப்பு இருக்கலாம்]
திணை: குறிஞ்சித்திணை
தலைவி தோழிக்குச் சொல்லியது.
தலைவியின் நேரடிக்கூற்றாக வரும் குறுந்தொகைப்பாடல்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை என்ற கருத்து எனக்குண்டு. எளிமையான சொற்களில் அறிந்த உவமையில் சட்டென்று தலையில் அடித்ததைப்போல நம்மை பொறி கலங்கச்செய்யும் உணர்வுகளை சொல்லிவிடும் தன்மை இப்பாடல்களுக்கு உண்டு. அந்த வகைப்பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது. இதுக்கும் மேல் என்னத்தை சொல்லிவிட முடியும் எனும்படி எதுவும் எஞ்சி நிற்காத முழுமை இப்பாடலில் உண்டு. சிறு ஐயமோ,தயக்கமோ அற்ற உறுதி நிலையில் இருக்கும் பாடல். மேலும் தலைவி கூற்று என்றாலுமே பாடியவர் பெயர் இல்லாதது இன்னொரு வசதி. பாடியவர் பெண்தான் என்றும் நினைத்துக்கொள்ளலாம். இந்த உணர்வுடன் வாழும் யாரோ ஒருவரைக் காணும் போது ஆணாகவும் இருக்கலாம் என்று மாற்றிக்கொள்ளலாம்.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை பால் வாங்கிவருவதும், மோர் வாங்கிவருவதும் காலையில் எனக்கான வேலை. தூக்கக்கலக்கத்தில் இரு தூக்குவாளிகளுடன் ஊரின் கிழக்கு திசையில் இருக்கும் புஷ்பவள்ளி அக்கா வீட்டிற்குச் செல்வேன். அவள் பால் விற்பனையகத்தில் வேலை செய்தாள். விற்பனையகத்திற்கு சற்றுத் தள்ளி இருந்த அவள் வீட்டில் மோர் விற்கப்படும். விற்பனையகத்தில் பால் அளந்து ஊற்றி பணம் வாங்குவது அவள் வேலை. மாட்டுக்காரர்கள் கொண்டுவரும் பாலை தரம் பார்த்து அளந்தெடுப்பது விசு சாரின் வேலை. சிறுபிள்ளையில் ஊரில் அவரை மட்டும்தான் ‘சார்’ என்று அழைத்திருக்கிறேன். அவர் பக்கத்து ஊர்க்காரர். வரிசையில் நின்று பால்வாங்கும் போது பிள்ளைகள் ‘விசு சார்தான் புஷ்பா அக்காவுக்கு மாப்பிள்ளை’ என்று சொல்வார்கள். அவள் எப்போதும் கருப்பு, கரும்சிவப்பு,அடர்பச்சை தாவணிகளையே மாற்றி மாற்றி உடுத்தியிருப்பாள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் சுபாவம் அவளுக்கு.
‘சார், இதுக்கு என்ன செய்யட்டும்’, ‘பால் ஊத்தட்டுமா சார்… கடைசி நேரத்துல கேக்கறாங்களே?’ என்று விசு சாரைக் கேட்கும் அவளின் குரல் எனக்கு நினைவில் உள்ளது. நமக்கு சிறுவயதில் அக்காக்கள், மாமாக்களின் மீது ஏற்படும் ஈர்ப்புகள் அழகானவை. அவர்களும் நம்முடன் நெருக்கமாக இருப்பார்கள். புஷ்பா அக்கா நீண்ட முடியை ஒற்றைச் சடையாகப்பின்னி கருப்பு ரிப்பனால் முதுதுவரை மடக்கிக்கட்டி பெரிய குஞ்சம் போட்டிருப்பாள். குஞ்சமே பெரிய டேலியா பூப்போல இருக்கும். விசு சார் எப்போதும் பால்வாங்க வரும் பிள்ளைகள், பயல்களிடம் வம்பு பேசிச் சிரிக்க வைக்கும் இயல்புடையவர். அவரிடம்தான் முதன்முதலாக தீப்பெட்டியில் பொன்வண்டை அடைத்துக்கொண்டு போய் காட்டினேன். அதற்கு உணவாக புளிய இலைகளைப் போட்டு அதன் மேல் அதை வைத்திருந்தேன். பொன்வண்டு அடர்பச்சை நிறத்தில் தங்க மினுமினுப்புடன் தீப்பெட்டிக்குள் படுத்திருந்தது. அதை வைத்துக்கொண்டிருப்பது அப்போது பெரிய குறுகுறுப்பாக இருந்தது. புத்தகப்பையில் வைத்திருக்கும் தீப்பெட்டியை அடிக்கடி திறந்து பார்ப்பதும் மூடுவதுமாக பகல் முழுவதும் அந்தவண்டு என்னுடன் பள்ளியில் இருந்தது. சாயங்காலம் பால் வாங்க செல்லும் போது விசு சாரிடம் ரகசியமாக என் சட்டைப் பையிலிருந்த தீப்பெட்டியை காட்டினேன். அவர் அதை பறக்கவிட்டுவிட்டார். அப்போது புஷ்பவள்ளிஅக்கா சிரித்தது இன்னும் நினைவில் உள்ளது. அவள் அழகாக வாய்விட்டு சிரிக்கக்கூடியவள். அவளுக்கு அப்பா இல்லை. அதனால் கூட வாய்விட்டு சிரிப்பதைத் தடுக்க ஆளில்லாதால் இயல்பான சிரிப்புடன் இருந்திருப்பாள் என்று இப்போது தோன்றுகிறது.
ஒரு நாள் விசு சார்க்கு திருமணமானது. அழைப்பிதழில் புஷ்பவள்ளி அக்காவின் பெயர் இல்லையே என்று யாரிடமும் கேட்கமுடியாது. பூசை விழும். எங்கள் ஊரில் உள்ள மற்ற அக்காக்கள் மாதிரி இவள் வயல் வேலைக்குச் செல்வதில்லை. பால் விற்பனை நிலையத்தின் வேலைக்குப்பிறகு தையல் வேலை செய்தாள். சிறிய வயலெட் நிற வயர் கூடையில் தைத்த ஆடைகள் கொண்டுவந்து கொடுப்பாள். அந்த வயர் கூடையுடன் தாவணிப் பாவாடையில் அவள் வீதிகளில் நடக்கும் சித்திரம் மனதில் உள்ளது. என்ன படித்திருந்தாள் என்று தெரியவில்லை. ஐந்தாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்கு ட்யூசன் எடுத்துக் கொண்டிருந்தாள். பள்ளியிலிருந்து மதிய உணவிற்காக நாங்கள் வீட்டிற்கு ஓடி வரும் போது அவள் தாழம்பூப்போல விரியும் பாவாடையை சற்றே உயர்த்திப்பிடித்து கொண்டு, நியாய விலைக்கடையில் இருந்து சீமெண்ணெய் கேனுடன் யாரையும் பார்க்காத பார்வையுடன் நடந்து செல்வதைக் காணலாம்.
நான் உயர்நிலை வகுப்பில் படிக்கும் போது ஊர்க்காரர்கள் அவளுக்கு மனம் பிசகி விட்டது என்று பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். கிளையை வெட்டி விட்டான் என்றால் மரத்தை வெட்டி கட்டி தூக்கி சென்றுவிட்டான் என்ற கதை தான் இதுபோன்ற அலர் பரப்பும் விஷயங்களில் நடக்கும். ஆனால், அந்தஅக்கா திருமணத்திற்கு மறுத்துவிட்டாள். ஒரு முறை விஷம் குடித்தாள். விசு சார்க்கு இரண்டு பிள்ளைகள் பிறந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் அவள் அண்ணனுக்குத் திருமணமானது. அதன் பிறகு திருப்பூரில் உள்ள உறவினர் துணையுடன் அம்மாவும் அவளும் பனியன் கம்பெனி வேலைக்குச் சென்று திருப்பூரிலேயே தங்கி விட்டார்கள். ஊருக்கு வரும் போதெல்லாம் அய்யாவை பார்க்க வருவாள். அவள் அய்யாவுடன் பேசிவிட்டுச் சென்றபின் அம்மா அழுந்திய குரலில், ‘இவ மனசுக்கு விடிவு பெறக்காதா’ என்பார். நான் கல்லூரி முடிக்கும் போது விசு சார்க்கு நெஞ்சுவலி வந்து இறந்து போனார். அதற்குப் பிறகு இரண்டு மூன்று ஆண்டுகள் சென்று ஒருநாள் அம்மா ‘புஷ்பவள்ளிக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சாம்…நல்லாருக்கட்டும்’ என்று அய்யாவிடம் சொல்லிக்காண்டிருந்தார். அய்யா தெரியும் என்பதைப்போல தலையை ஆட்டி யோசனையில் இருந்தார்.
“விசுமேல எவ்வளவு விருப்பம் இருந்திருந்தா இந்த பாப்பா இவ்வளவு வருஷமா தனியாவே இருந்திருக்கும்… எவ்வளவு பேச்சு வாங்குச்சு. எங்கிட்ட படிச்ச பிள்ளை…பாக்கறப்பெல்லாம் மனசே ஆகாது. ஒரு நாளு, சார், அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல; அண்ணன் கோவமா இருக்கான்…பணம் வேணுன்னு கேட்டுச்சு. எனக்கு கைகாலெல்லாம் நடுக்கறமாதிரி ஆயிருச்சு..ஒரு வயசுப்பொண்ணு வந்து நின்னு கடன் கேக்கறது எவ்வளவு கஸ்ட்டம்…எவ்வளவு யோசிச்சிருக்கும். அதுக்கப்புறம் ஒரு மாசம் கழிச்சு அதுக்குத் தெரியாம திருப்பூர்லருந்த அவங்க மாமாவுக்கு லெட்டர் போட்டேன்..”
“எங்கிட்ட சொல்லவே இல்ல…” என்று வழக்கம் போல அய்யா அம்மாவிடம் மாட்டிக்கொண்டார்.
பேருந்து நிறுத்தத்தில் ஒருநாள் புஷ்பவள்ளி அக்கா புன்னகைத்தபடி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாள். அவளுக்கு அப்போது நாற்பத்தைந்து வயது இருக்கலாம். நாற்பதிற்கு மேல் ஒரு தேஜசும் அழகும் பிறக்கும். அந்த அழகு முழுமையாக அவளிடம் இருந்தது. கொஞ்சம் பெரிய சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு,சந்தன நிற புடவையில் இருந்தாள். எங்கள் ஊருக்கு ஒருமுறை மட்டும் வரும் நாமக்கல் பேருந்தில் ஏறும் அவசரத்துடன் பைகளை கையில் எடுத்துக்கொண்டாள். திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தவள், “போயிட்டு வரேன்,” என்றாள். நான் தலையாட்டியபடி அவள் பக்கத்தில் நின்றவரை பார்த்தேன். அக்கா ஏதோ அவரிடம் சொன்னாள். “வரேம்மா,” என்றவரிடம், “சரிங்க மாமா,” என்றேன். இவர் மாதிரியானவர்களை மாமா என்று அழைப்பதன் சுகமே தனி. இந்த மாதிரி மாமாக்கள் அரிது. அவள் வாழ்வின் அனைத்தும் தெரிந்தபின் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார். விடாப்பிடியாக காத்திருந்த காதல் அவருடையது. அவர் அக்காவின் மாமா மகன். அக்காவிற்கு திருமணமாயிருந்தால் ஒரு வேளை அவரும் இளம் வயதிலேயே திருமணம் செய்திருக்கக்கூடும். இந்த மாதிரியான முழு அன்பு ஒருபக்கமே சாத்தியம் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டு திருவிழாவில் அவர்களை பார்த்தேன். அக்காவிற்கு ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும். அவள் சுகமாக இருக்கிறாள் என்று பார்க்கும் போதே தெரிந்தது.
கர்ணனைப் பற்றி ஒரு மதிப்பீடு உண்டு. எந்த ஆணும் விரும்பும் பேரழன் என்று. தீயின் அழகு போன்றது. அதற்கு வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அந்த அழகின் கீழ் இருப்பவர்களுக்கு அந்த ஔியில் வேறெதுவும் தெரிவதில்லை. பேரரசன் துரியோதனன், கர்ணனின் அன்பின் ஆளுகைக்கு கீழ் இருந்தவன். அந்தப் பேரழகனை அவன் தொடுவதே அரிது. அப்படியே தோளில் தட்டிப் பேசினால் அந்த இனிமை நாள்முழுதும் துரியோதனனின் முகத்தில் இருக்கும். துரியோதனின் விழியை விட்டு கர்ணனனுக்கு விடுதலை இல்லை என்று கதைகள் உண்டு. இது அதிகபடியாக இட்டுக்கட்டபட்ட கதை என்று சொல்லக்கூடும். நம் அணி இலக்கணத்திலேயே உயர்வு நவிற்சி அணி என்று ஒன்று உண்டு. ஆனால், அது அரிதினும் அரிதாக எதார்த்தமாகவும் இருக்கிறது.
இந்தப்பாடலை நினைக்கும் போது அக்காவும் மாமாவும் என் மனதில் வருவதுண்டு. இருவரின் காதல்தான் வேறு வேறு. சில நேரங்களில் நடைமுறையில் தலைவி கூற்று தலைவன் கூற்றாகவும் மயங்கும் தன்மை உடையதாக இருக்கிறது. பொதுவாக குறிஞ்சிமலர் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது. குறிஞ்சி பூத்த மலையை நேரில் கண்டால் நமக்கு இந்தப்பாடலை விளக்க வேண்டிய அவசியமே இல்லை. குறிஞ்சிப் பூக்கள் மலையின் பசுமையை மூடி மலையையே நீலமாக மாற்றிவிடும். மலையை தேடித்தான் காண வேண்டும். சாதாரணமான மலர்தல் அல்ல அது. பெருந்தீ பற்றியதைப் போன்ற மலர்வு அல்லது ரஷ்யாவின் பெரும் பனி போல முழுக்க நிலத்தை மூடி விடும் ஒன்று. அரிதான ஓன்று எப்போதும் எளிமையானதாகவே இருக்கிறது. குறிஞ்சிப்பூ வஞ்சமில்லாமல் கொள்ளை கொள்ளையாய் பூத்து நிறைவது. அதே நேரத்தில் அரிதான ஒன்று. நம்முடைய கணக்கு வழக்குகளான பருவம், காலம், எண்ணிக்கை இவற்றிற்கு அப்பாற்பட்டு எங்கோ உயரத்தில் காலகாலத்திற்கும் அந்த மலர் மலர்ந்து கொண்டே இருக்கிறது.
“குறிஞ்சிப்பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும்…” – இந்த வரி பாடலின் ஆன்மா. மற்ற வரிகளெல்லாம் இந்த ஒற்றை வரியை விளக்கப்பயன்படும் விளக்கங்கள் மட்டுமே என்று தோன்றுகிறது.
சின்னஞ்சிறிய குறிஞ்சி பூக்களின் தேனெடுத்து தேனீக்கள் அவ்வளவு பெரிய தேனடைகளை கட்டியிருக்குமானால் எவ்வளவு பூத்திருக்க வேண்டும் என்ற வியப்பே இப்பாடல் தரும் ஆழமான உணர்வுநிலை.
மலைச்சாரலில்
கருத்தகிளைகளில் பூத்திருக்கும்
சிறுகுறிஞ்சிப்பூக்களில் தேனெடுத்த தேனீக்கள்,
அங்குள்ள மரக்கிளைகளில் பெரியதேன்கூடுகளைக் கட்டும்,
அத்தகைய மலையை தன் நாடாகக்கொண்ட
அந்த மலைநாட்டினன் மீது
நான் கொண்ட நட்பானது…
இந்த நிலத்தைவிட பெரியது,
அந்த வானத்தைவிட உயர்ந்தது,
எந்த கடலையும் விட ஆழமானது.
(தொடரும்…)