மடி கனத்துப்போன
காரிப் பசுவிடம்
முட்டி மோதிக் குடிக்கிறது
தாயை பறிகொடுத்த
செவலை நாய்க்குட்டி
வெண்கலப் பானையில்
அலம்பாமல் கிடக்கிறது தண்ணீர்;
அவளது சோர்வடைந்த
முகத்தைப் போல.
***
பலூன் விற்கிறாள் சிறுமி
பூ கட்டுகிறாள் அம்மா
காத்திருக்கிறது கொதிக்கும் உலை
இரயில் நிலையத்தில்
வரவேற்றன படிக்கட்டுகள்
நகரும் மாற்றுத்திறனாளி
அரங்கம் நிறைய கூட்டம்
சோகக் குரல்கள் ஒலித்தன
எப்போது இடைவேளையென்று
புயல் காற்று
அள்ளிச் சென்றுவிட்டது மாவடுக்களை
மூளியானது தோப்பு மரம்.
***
கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டில்
சிதறி விழுந்த இதயத்தை
பற்றிக் கொண்டாள் அவள்
பறிகொடுத்து விட்டேன் நான்
காத்திருக்கிறேன் இருகைகளேந்தி
அடுத்த சுற்று வரும்வரை.
***
குழாயடியிலிருந்து தூக்கி வந்த
நிறைதண்ணீர் சருவச்சட்டியின்
சிரிப்பலைகள் ஓய்ந்தது
வீட்டின் முற்றத்தை வந்தடைந்தபோது
இன்னும் சிலமணித்துளிகளில்
மறையப்போகிறோமென்று…
*******