![ஜெயந்தி நாகராஜன்](https://vasagasalai.com/wp-content/uploads/2019/08/jeyanthi.png)
காட்சி 1. இடம் பள்ளிக்கூடம்
பாத்திரங்கள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தாமஸ்
த.ஆ: என்ன! நன்றாக யோசித்துத்தானே முடிவெடுத்திருக்கிறீர்கள்?
ஆ1: ஆம்! ஐயா! நன்கு தீர ஆலோசனைக்குப் பிறகே தங்களிடம் இவ்விஷயத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
ஆ2: நண்பர் சரியாகத்தான் சொல்கிறார். தாங்கள் அவசியம் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.
ஆ3: ஆம்! ஐயா! நாளுக்கு நாள் இவனது பிரச்சனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொஞ்சமும் குறைவதாகக் காணோம். மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதோ! கடிதம் கூடத் தயாராக இருக்கிறது, தாங்கள் கையொப்பம் மட்டுமே இட வேண்டும்
த.ஆ: அப்படியானால் சரி! உடனே தாமஸ்ஸை அழைத்து வாருங்கள்.
[ஓர் ஆசிரியர் எழுந்து செல்லல். தலைமை ஆசிரியர் கையொப்பம் இடுதல். தாமஸ்ஸும் ஆசிரியரும் வருதல்]தா: வணக்கம் ஐயா!
ஆ: வணக்கம்! தாம ஸ்! இந்தக் கடிதத்தை நீ உன் பெற்றோரிடம் கொடுக்க வேண்டும், புரிந்ததா! மறக்காமல் தரவேண்டும். நல்லது. நீ செல்லலாம்.
காட்சி 2
இடம் தாமஸ்ஸின் வீடு
பாத்திரங்கள் தாமஸ், அவனது அம்மா
தா:[ உற்சாகத்தோடு} அம்மா! அம்மா!
அம்: என்ன தாமஸ்! என்ன இன்று ஒரே உற்சாகம்! ம்! பள்ளியில் என்ன விசேஷம்? {அவனை அன்புடன் கட்டிக் கொள்கிறாள்}
தா: அம்மா! இன்று பள்ளியில் ஒரு கடிதம் கொடுத்தார்கள். அதுவும் தலைமை ஆசிரியரே என்னிடம் தனியாகக் கூப்பிட்டுக் கொடுத்தாரம்மா! அதில் என்னம்மா எழுதியிருக்கிறது?
அம்மா: கொண்டா அதை[ வாங்கிப் படித்தல். கண்களில் கண்ணீர்}
தா: அம்மா! சத்தமாகப் படியேன். அம்மா! ஏனம்மா அழுகிறாய்?
அம்: [சமாளித்தபடி] அழவில்லை கண்ணே! இது ஆனந்தக் கண்ணீர். படிக்கிறேன். தங்கள் மகனின் புத்திசாலித்தனம் எங்களை வியக்க வைக்கிறது. அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் அளவிற்கு எங்களிடம் ஆசிரியர்கள் இல்லை. எனவே அவன் நாளை முதல் பள்ளி வர வேண்டாம். வாழ்த்துக்கள்.
தா: ஐய்யா! ஜாலி. நாளை முதல் பள்ளிக்குப் போக வேண்டாம். [குதித்தபடி] அம்மா! நெஜமாவே நான் புத்திசாலியா!
அம்: ஆம்! கண்ணு! ஆனா நாளை முதல் நான் தான் உனக்குப் பாடம் சொல்லித் தருவேன். சரியா!
தா: சரிம்மா! நீயே கற்றுக் கொடு.
காட்சி 3
[குரல்] சிறுவன் தாமஸ் பின்னாளில் மிகப் பெரிய விஞ்ஞானியாக உயர்ந்தார். அவருடைய பல கண்டுபிடிப்புக்கள் அவர் பெயரை உலகிற்கு உரக்கச் சொல்லியது இடைப்பட்ட காலத்தில் அவரது தாயும் மறைந்தார். ஒரு நாள் அவர் தன்னுடைய அறையில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறா ர். .தா: [தனக்குள்] இங்கே தானே வைத்தேன்! வர வர ஞாபக மறதி
அதிகரித்துக் கொண்டே போகிறது. அதுசரி! இளைஞனாக இருந்த போதே என் திருமண தினத்தையே மறந்து வீட்டில் இருந்தவன் தானே! என் நண்பன் வந்து அழைத்தபோதுதானே நினனவிற்கே வந்தது.ம் ! எங்கே போயிருக்கும் அந்த முக்கியமான காகிதம்? [தேடுதல்]
அட! இது என்ன கடிதம்? [ ஒரு புத்தகத்தில் இருந்து அதை எடுத்தல்] அட! இது அன்று என் பள்ளி நான் மாணவனாக இருந்தபோது கொடுத்த கடிதம் அல்லவா?என் தலைமை ஆசிரியர் அன்றே என் திறமையை அறிந்து பாராட்டி எழுதிய கடிதம். இன்றுதான் அதை நான் பார்க்கிறேன்.[ படித்தல்]
தங்கள் மகன் தாமஸ்ஸிற்குக் கவனிக்கும் ஆற்றல் குறைவாக உள்ளதால் விஷயங்களைக் கற்றுக் கொள்ள அவன் மிகவும் சிரமப் படுகிறான். எனவே நாளை முதல் அவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். வாழ்த்துக்கள்!
[படித்த தாமஸ் கண் கலங்குதல்} அம்மா! என் தெய்வமே! இதை ஏன் நீ அன்றே சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நான் அன்றே உடைந்து போயிருப்பேன் என்று மறைத்தாயா! தாயே!நான் இத்த னை கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்கக் காரணமானவளே!இவை அனைத்துமே நிறைவேற அன்று நீ தந்த அன்பும், அரவணைப்பும் தானே மூலகாரணம் . தாமஸ் ஆல்வா எடிசன் என்று இன்று என்னை இந்த உலகமே கொண்டாடுகிறதே! அது யாரால்? அம்மா ! உன்னால்தானே!
அம்மா! அன்றே இக் கடிதத்தைக் கிழித்துப் போட்டிருக்கலாம். ஏனம்மா செய்யவில்லை. ஒருவேளை இதனை நான் அறிய வேண்டியது அவசியம் என்று நீ நினைத்தாயோ? அதை எப்போது அறிய வேண்டும் என்பதையும் நீயே முடிவு ம் செய்தாய்! என் தாயே! என் வெற்றிகள் அனைத்தையும் நான் உனக்கே காணிக்கையாக்குகிறேன்.