
அதிகாலை நான்கு மணிக்கு பதற்றமாக உள்ளே நுழைந்த போது, வரவேற்பறைப் பெண் மேஜையிலேயே தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவசரமாக அவளை எழுப்பி, ‘எமர்ஜென்சி.. ஸ்ட்ரெச்சர்’ என்றதும், சோஃபா அருகில் கீழே படுத்துக் கொண்டிருந்த வேலு அண்ணா பதறியடித்து எழுந்து ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக் கொண்டு வந்து, ஆட்டோவிலிருந்து அம்மாவைத் தூக்கி ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி அவசரமாக கேஷுவாலிட்டிக்குத் தள்ளிக் கொண்டு போனார்.
அந்த 24×7 பல்நோக்கு மருத்துவமனை வேளச்சேரியின் பிரதான சாலையில் இருக்கிறது. அவர்கள்தான் என் குடும்ப மருத்துவர்களும் கூட. அப்பாவுக்கு ரத்தக் கொதிப்புக்கும், அம்மாவுக்கு சர்க்கரை நோய்க்கும் அங்குதான் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.
இருட்டில் அமைதியாக இருந்த மருத்துவமனையில் நோயாளி வந்ததும் அனைவருமே பரபரப்பானார்கள். அங்கிருந்த டியூட்டி டாக்டர் ஸ்டெதஸ்கோப்பை வைத்து அம்மாவைப் பரிசோதித்துக் கொண்டே, “என்ன நடந்தது?” என்று கேட்டார்.
“என் அம்மா நம்ம பாஸ்கர் டாக்டரோட பேஷண்ட் தான். டிஸ்சார்ஜ் பண்ணி ரெண்டு நாள்தான் ஆகுது. நேத்து அவர் எழுதிக் கொடுத்தபடி இன்சுலின் ஊசி போட்டேன், தோசை சாப்பிட்டாங்க. மாத்திரையும் போட்டுட்டு தூங்கப் போனாங்க. அப்பா நடுவுல எழுந்தவர் பார்த்தப்போ பேச்சு மூச்சில்லாம இருந்தாங்க. உடனே கூட்டிட்டு வந்துட்டோம்.”
டாக்டர் பரிசோதித்துப் பார்த்து, “சுகர் லெவல் கம்மியானதால் அன்கான்ஷியஸ் ஆகிட்டாங்க. வில் டிரை டு ரெகவர்” என்று சொல்ல அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றேன். அப்பாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவர் முகத்தில் பயம் தெரிந்தது.
அம்மாவை ஐசியூவிற்குக் கொண்டு சென்றார்கள். உடலெங்கும் பல குழாய்கள் பொருத்தப்பட்ட நோயாளிகளின் ஈனஸ்வரங்கள், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களென உணர்த்தும் மானிட்டர்களின் பீப் பீப் சத்தங்கள் என்று ஐசியூ சூழ்நிலையே கலவரப்படுத்தியது. எங்களை வாசலிலேயே நிறுத்தி விட்டு அம்மாவை உள்ளே அழைத்துப் போனார்கள்.
வீடு, குழந்தைகள் மட்டும்தான் தன் உலகம் என்றிருந்த முந்தைய தலைமுறைப் பெண்களின் பிரதிநிதிதான் என் அம்மாவும். 73 வயது என்று சொல்ல முடியாதபடி, காட்டன் புடவை, ஒரு ரூபாய் நாணய அளவிலான பெரிய பொட்டு, அதற்குமேல் விபூதிக்கீற்று, வகிட்டில் குங்குமத்துடன், உதட்டில் மாறாப்புன்னகையுடன் பளிச்சென்று பிரகாசமாக இருப்பாள். பார்க்கும் அனைவரையும் சிநேகிக்கத் தூண்டும் முகம்.
இதற்கு முன்பு எப்போது உடம்பு சரியில்லையென்றாலும், அட்மிட் ஆக உள்ளே கூட்டிச்செல்லும் அந்த அவசர நிலையிலும், “எனக்கு ஒண்ணுமில்ல, நான் சீக்கிரம் சரியாகி வந்துடுவேன், குழந்தைகளைப் பாத்துக்கணுமே, நீ கிளம்பு, அப்பா பாத்துப்பா” – என்று அம்மா மெல்ல புன்னகைத்தபடியே என்னிடம் சொல்வாள். எங்கள் டாக்டரிடம், “பேரன் காலேஜ் சேர்ந்து, வேலைக்குப் போறதெல்லாம் பாக்கணும், நல்லா பாத்து சீக்கிரம் சரி பண்ணுங்க” என்று ஆணையிடுவாள். ஆனால், இம்முறை முற்றிலும் மயங்கிய நிலையில் எந்த சலனமுமின்றி உள்ளே போகிறாள்.
சென்ற வாரம் இதே நாளில்தான் வீட்டிற்கு அருகிலிருந்த மினி ஹாலில் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சதாபிஷேகம் நடந்தது. அரக்கு கூறைப் புடவையும், கழுத்து நிறைய மாலையும், முகம் கொள்ளாத பெருமித சிரிப்புமாய் அப்பாவோடு வளைய வந்த அம்மாவின் முகம் அழகிய புகைப்படமாய் என் மனதில் பதிந்திருக்கிறது. பார்க்கிறவர்களை உற்சாகம் கொள்ளச் செய்யும் புன்னகையுடன் களையாக இருக்கும் அவள் முகம் இன்று எந்த அசைவுமற்றிருக்கிறது.
அப்பா மனமுடைந்து சோர்ந்து, பயத்தில் வெளிறிய முகத்துடன் நான் என்ன சொல்லப் போகிறேனென்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்பாவின் பலமே அம்மாதான். எங்களிடம் சற்றே முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் அப்பா, அம்மாவிடம் குழைவார். இணை பிரியாமல் எப்போதும் சேர்ந்தே வளைய வரும் அப்பாவும், அம்மாவும் எங்கள் உறவினர் வட்டத்தில் “ஆதர்ச தம்பதிகள்” என்று ஏக பிரபலம். சமயத்தில் வரும் முன்கோபத்தை தாண்டி அப்பா நல்ல புருஷன். “டியூட்டி டாக்டர் பார்த்துக்கிட்டிருக்கார். நம்ம டாக்டர்க்கும் சொல்லிருக்காங்க, அவர் வந்து பாத்துதான் சொல்லணும்” என்று சொல்ல, “சரி, நான் இங்கயே இருந்து பாத்துக்கறேன், குழந்தைகள் ஸ்கூலுக்கு கிளம்பணுமே, நீ போய் அவங்கள அனுப்பிட்டு வா” என்று சொன்னார். அங்கிருக்கும் நர்ஸிடமும், துப்புரவுப் பணியிலிருக்கும் அக்காவிடமும், “அப்பாக்கு காஃபி வாங்கிக் கொடுங்க, நான் வர வரைக்கும் பாத்துக்கோங்க” என்று சொல்லிக் கிளம்பினேன்.
வீட்டிற்கு வந்ததும், மகன்கள் இருவரும் பாட்டியைப் பற்றிக் கேட்க காத்துக் கொண்டிருந்தனர். பெரியவன் பத்தாவதும், சின்னவன் ஐந்தாவதும் படிக்கின்றனர். என் கணவருக்கு சமீபத்தில் திருச்சிக்கு மாற்றலாகியிருக்க, நானும், பசங்களும் இங்கே இருக்கிறோம். அதற்குள் தொலைதூரத்திலிருக்கும் அவரிடமும் சொல்லி விட்டார்கள். வந்தவுடனேயே அவர் அழைத்தார். “டாக்டர் என்ன சொன்னார்? இப்போதான சரியாகிடுச்சுன்னு டிஸ்சார்ஜ் பண்ணினாங்க?” என்று கேட்க, “ஆமாப்பா. ஏனோ ரொம்ப பயமாயிருக்கு. நம்ம டாக்டர் வந்து பாத்தாதான் சரியா தெரியும்.”
“காசு இருக்கா?”
“ஐசியூன்கறதால உடனே ஒரு லட்சம் கட்டச் சொல்லிருக்காங்க.”
“சரி, நம்ம அக்கவுண்ட்ல இருக்கறதைக் கட்டிடு.”
“வீடு லோன் இஎம்ஐ வருமே?”
“பரவாயில்ல, இதைக் கட்டிடு, அதை அப்புறம் பாத்துக்கலாம்.”
“சரிப்பா.”
“நம்ம டாக்டர் வந்ததும் பேசிட்டு சொல்லு” என்றவர் வைத்து விட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ரூ.75000/- கட்டி டிஸ்சார்ஜ் செய்திருந்தோம்.
பசங்களுக்கு லன்ச் கொடுக்க வேண்டுமென்பதால் அவசரமாக சமைக்க ஆரம்பித்தேன். இதேபோல்தான் சதாபிஷேகத்திற்கு முந்தைய நாளில் நானும் அம்மாவும் பேசிக் கொண்டே சமைத்துக் கொண்டிருந்தோம்.
“உங்கப்பாவால யாருமே வேண்டாம்னு எங்க வேணும்னாலும் தனியா இருந்துட முடியும். ஆனா, என்னால முடியாது. எல்லா பொம்மனாட்டியும் சுமங்கலியா போகணும்னுதான் வேண்டிப்பா. ஆனா, உங்கப்பா எனக்கு முன்னாடியே போயிடனும்னு நான் வேண்டிக்கறேன்.”
அதிர்ச்சியாக, “ஏன்மா?” என்றேன்.
“ஆம்பிளைங்களுக்கு பொண்டாட்டி இருக்கற வரைக்கும்தான் கெத்தெல்லாம். நான் போயிட்டா, உங்கப்பா இங்க எல்லார் கூடயும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கமாட்டார். ஈகோ இருக்கும். பென்ஷன் பணம் வேற வரதால, யாரை நம்பியும் நான் இல்லன்னு அது ஒரு தைரியம் குடுக்கும். எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசச் சொல்லும். அதுவே பொம்பிளைங்கன்னா, எது நடந்தாலும் தன் பையன், பொண்ணு, பேரப் பசங்கன்னு எல்லாத்தையும் ஈசியா எடுத்துட்டு சமாளிச்சு இருந்துடுவாங்க” என்று சொன்னாள்.
இப்படியெல்லாம் சொன்ன அம்மா, தான் போய் விட்டால் அவர் என்னாவார் என்று கூட யோசிக்க முடியாத கோமா நிலையில் இருக்கிறாள்.
சமைத்துக் கொடுத்து அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, கையில் டிபன் எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் வந்து அப்பாவிடம் கொடுத்தேன். சாப்பிட மறுத்தவரை வற்புறுத்தி சாப்பிடச் சொன்ன போது டாக்டர் வந்தார்.
அப்பாவை சாப்பிடச் சொல்லிவிட்டு டாக்டரின் அறைக்குள் நுழைந்தேன்.
“என்னாச்சு டாக்டர் அம்மாக்கு, ஏன் கண்ணு கூட முழிக்கல?”
“இது hypoglecemia. பிளட்ல சுகர் லெவல் கம்மியாகும் போது இப்படியாகும். அல்மோஸ்ட் கோமா ஸ்டேஜ் போய்ட்டாங்க. ரெகவர் பண்றதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மிதான். உடனேயே வந்திருந்தால் ஏதாவது செய்திருக்கலாம், இருந்தாலும் வீ டிரை அவர் பெஸ்ட். எப்பவும் சீக்கிரம் என்னை சரி பண்ணுங்க டாக்டர்னு பெரியம்மா என்னையே அதட்டுவாங்க, தான் குணமாகிடனும்னு அவங்களும் நம்பிக்கையா ஃபைட் பண்ணுவாங்க. இந்த தடவை அவங்களும் ஏனோ மனசு வைக்கல” என்றார்.
அவர் சொன்னது உண்மையாக இருக்கக் கூடும். அம்மாவிற்கு சதாபிஷேகம் முடிந்த அன்றிலிருந்து வாழ்க்கையில் எல்லாமும் அடைந்து விட்டோம் என்கிற மனநிறைவு வந்து விட்டது. அப்பாவிடம் இதை எப்படி விளக்குவதென்று புரியாமல், கண்ணீரை மறைத்துக் கொண்டு வீட்டிற்கு அவசரமாக வந்தேன். இத்தனை நேரமும் அடைத்து வைத்திருந்த உணர்வுகள் வெடித்து சிதற ஓவென்று அழுதேன்.
குண்டுமல்லிகைப்பூ வைத்து மட்டை தைத்து, தாழம்பூ சடை பின்னி என்று என்னை அலங்கரித்து அழகு பார்த்த அம்மாவின் மலர்ந்த கண்கள் நினைவில் வந்தது. சிறுவயதில் அப்பாவுடன் நெருக்கமாக இருக்கும் பெண்கள், திருமணமாகி குழந்தை பிறந்தவுடன் அம்மாவோடு நெருக்காமாவார்கள். ஒவ்வொரு பெண்ணிற்கும் பிரசவத்திற்குப் பின் அவர்கள் குழந்தை வளர்க்கும் போதுதான் அம்மாவின் அருமை புரிய ஆரம்பிக்கும். கண்களைத் துடைத்துக் கொண்டு அப்பா காத்திருப்பாரே என்று அவசரமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தேன்.
நான் உள்நுழையும் போதே, அப்பா பதட்டமாக நின்று கொண்டிருக்க, ஐசியூவிற்குள் பல டாக்டர்கள் அவசரமாகச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் பரபரப்பாக வெளியே வர, உடன் நர்ஸுகளும் ஓடி வந்தனர். “அவங்க அட்டெண்டர் யாரு, சொல்லிட்டு ஃபார்மாலிட்டீஸ்லாம் முடிச்சு அனுப்பிடுங்க” என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டே வேகமாக நடந்தனர். ஐசியூவில் ஒரு அம்மா இறந்து விட்டார் என்று அங்கிருந்த நர்ஸுகளும், ரிசப்ஷனிஸ்டும் கிசுகிசுப்பாக பேசிக் கொள்ள, நான் பயத்தில் பொறுமையிழந்து அவர்களிடம், “யாருக்கு என்ன ஆச்சு, பிளீஸ் சொல்லுங்க” என்று கத்த தொடங்கிய போது, 60 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர், “என்னை விட்டுட்டு போய்ட்டியாம்மா” என்று கதறியபடியே வந்தார். அவர் அம்மாதான் இறந்து விட்டார் என்று அருகிலிருந்த நர்ஸ் சொன்னார். அவரை அணைத்துக் கொண்டேன். இறந்த அம்மாவுக்கு எண்பது வயதுக்கும் மேல். நேற்று அட்மிட் செய்திருக்கிறார்கள். என் அம்மாவிற்கு பக்கத்து பெட். நுரையீரலில் இன்ஃபெக்ஷன். மூச்சு விட முடியாமல் இறந்து விட்டார். இதைக் கேட்டதும் என் மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தது. அடுத்த வினாடியே, என்னுள்ளிருந்து ஒரு குரல் ‘அடுத்தவரின் துக்கத்தில் நீ நிம்மதியடைகிறாயா?’ என்று குரூரமாக என்னை நோக்கிக் கேள்வி கேட்டது. “என்னாச்சும்மா, யாருக்கு என்ன? என்று நடுங்கியபடி கேட்ட அப்பாவை வேறு பக்கம் அழைத்துச் சென்றேன்.
அம்மா சிறிது நேரம் உடனில்லையென்றாலும் அப்பா தவித்து விடுவார். அம்மாவுக்கு எப்போது உடம்பு சரியில்லையென்றாலும் அருகிலிருந்து அப்பாதான் பார்த்துக் கொள்வார். இதோ, இப்போது கூட என்னாகுமோ என்கிற பதட்டத்தில் ஐசியூ முன்பு தவித்துக் கொண்டிருக்கிறார்.
நர்ஸ் வந்து மருந்து சீட்டைக் கொடுத்து மருந்து வாங்கி வரச் சொன்னாள். ஏற்கெனவே ஒரு லட்சம் காலையில் கட்டி விட்டேன். ஐசியூவில் ஒரு நாளைக்கு 50000 ரூபாய் செலவானது. வங்கிக் கணக்கிலிருந்த பணம், மேலும் அவர் அனுப்பி வைத்த பணம் எல்லாவற்றையும் கட்டியாகி விட்டது. அடுத்த நாளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இழுத்துக்கோ, பறிச்சுக்கோ என்கிற பொருளாதார நிலையிலிருக்கும் கீழ் மத்திய வர்க்க குடும்பத்தில் இருப்பவர்களுக்குதான் பணக்கார நோய்கள் வருகின்றன. ஆனால், காசில்லையென்றாலும் ஏதாவது செய்து அன்புக்குரியவர்களை காப்பாற்றி விட வேண்டுமென்கிற அன்பும், மனதும் அவர்களிடம் தானிருக்கும்.
அப்பா என்னிடம், “உனக்குத் தான் சிரமம். பணம் பத்தலேன்னா அம்மாவோட நெக்லஸ் வைச்சிடு” என்று அழுதபடியே சொன்னார். “நான் பாத்துக்கறேன்பா அம்மாவை” என்று அவருக்கு தைரியம் சொல்லிக் கிளம்பினேன்.
அடுத்த வாரம் குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் வேறு கட்ட வேண்டும். நான் வீட்டுக்கு வந்து அப்பாவின் பீரோவைத் திறந்து பார்த்தேன். அம்மாவின் நெக்லஸ் இருந்தது.
ரிடையர் ஆன அன்று அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டே வந்தார்.
“வசந்தி, வசந்தி… கிளம்பு!”
“எங்கேங்க?”
“எதுவும் கேட்கக்கூடாது. கிளம்பி என்னோடு வா” – என்று அம்மாவை அழைத்துக் கொண்டு போனவர் இரவுதான் திரும்பி வந்தார்.
அம்மா வெட்கமாக என்னிடம் அந்த நகைப்பெட்டியைக் காண்பித்தாள். அழகான டிசைனில் நெக்லஸும், காதோடு வளைத்து போட்டுக் கொள்ளும் மாட்டலும் இருந்தன.
“உங்கப்பா முதன் முதல்ல எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கற நகை. இப்போ ஏன்பா எனக்குன்னு கேட்டேன். இத்தனை வருஷத்துல உனக்குன்னு ஒண்ணுமே வாங்கிக் கொடுத்ததில்ல. இனிமேல என்கிட்ட இவ்வளவு பணம் இருக்காது. அதான்னு சொல்லி வாங்கிக் கொடுத்தார்.”
நெக்லஸிலிருக்கும் அப்பாவின் அன்பை அப்படியே மூடி பத்திரப்படுத்தி வைத்தேன். என்னுடைய நகைகளைக் கொண்டு போய் வங்கியில் வைத்து பணம் தயார் செய்தேன். பணம் தண்ணீராய் செலவழிந்து கொண்டிருந்தது. அம்மாவைக் கண் விழிக்க வைக்க எதையும் செய்யத் தயாராக இருந்தோம்.
ரவுண்ட்ஸ் வந்து பார்த்த டாக்டர் என்னைத் தனியே அழைத்தார்.
“லைஃப் சப்போர்ட்லதான் இருக்காங்க. அவங்களுக்கு நினைவு திரும்ப வாய்ப்பில்ல. இதுக்கு மேல மெடிக்கலா எதுவும் செய்ய முடியாது. அதை எடுத்துட்டு நீங்க அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு போய்டலாம்” என்றார்.
டாக்டர் சொன்னதை மனம் உள்வாங்கிக் கொள்ளவே சிறிது நேரமானது. அப்படியானால் இனி அம்மா எங்களுக்கு இல்லையா? காப்பாற்றவே முடியாதா? அப்பாவிடம் இதை எப்படிச் சொல்வேன்?
ஐசியூவுக்குள் சென்றேன். எனக்கும், என் குழந்தைகளுக்கும் அமுதூட்டிய, பேரப்பசங்களுக்காக ஓயாமல் எதையாவது செய்து கொண்டேயிருந்த அந்தக் கைகள் சலனமற்றிருக்க, மருந்து இறங்கிக் கொண்டிருந்தது. ஆக்சிஜன் உதவியுடன் சுவாசம் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
லைஃப் சப்போர்ட்டை எடுத்துடுங்க என்று சொல்ல மனம் வரவில்லை. இப்போது அவள் உயிரோடாவது இருக்கிறாள் என்பது ஆறுதலாக இருக்கிறது. ஆனால், எத்தனை நாட்களுக்கு? அவ்வளவு நாட்களுக்கு பணத்திற்கு எங்கே போவது? இனி எதுவும் செய்வதற்கில்லை என்று டாக்டர்கள் சொல்லலாம். அவர்கள் என்ன கடவுளா? “நீ ஆக்சிஜனை எடுத்து விட்டால் அம்மா போய் விடுவாள், அதை நீ செய்யப் போகிறாயா?’ என்று மனம் கேட்டது. அன்று இரவு முழுவதும் முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். என்னால் அம்மாவின் மரணத்திற்கு தேதி குறிக்க முடியவில்லை.
ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் தனியொருத்தியாக அல்லாடிக் கொண்டிருந்தேன். எங்கள் திருமணத்திற்குப் பின் தனியாக இருந்த என் பெற்றோரிடம் சென்று, “எங்கம்மா சின்ன வயசிலேயே போய்ட்டா. உங்களுக்கு விருப்பம்னா, நீங்க எங்க கூடயே இருந்துடுங்களேன். அம்மாவோட பாசம் எப்படியிருக்கும்ன்னு நானும் தெரிஞ்சுக்கறேன்” என்று கேட்ட மாப்பிள்ளையிடம் நெகிழ்ந்து அம்மாவும், அப்பாவும் எங்கள் வீட்டிற்கு வந்ததிலிருந்து, அவர்களை அன்புடனும், மரியாதையுடனும் பார்த்துக் கொண்டிருந்தவர்க்கு, அம்மாவின் நிலை அச்சம் கொடுத்தது. டாக்டருக்கு ஃபோன் செய்து, அம்மாவைப் பிழைக்க வைக்க வேறு ஏதாவது வழியுண்டா என்று கேட்டார். “எதுவுமில்லை” என்று டாக்டர் கை விரித்து விட்டார்.
அடுத்த நாள் கட்டுவதற்குக் கையில் பணமில்லாத நிலை. காலை என் வீட்டிலிருந்து கிளம்பும் போது, ஏனோ அம்மாவோடு ஆம்புலன்சில் வருவது போல் உள்ளுணர்வு தோன்றியது. அன்று வியாழக்கிழமை. ஷீர்டி பாபாவின் பக்தையான என் தோழி பிரசாதத்துடன் எதிரில் வந்தாள்.
“உன் அம்மா சரியாகணும்னு வேண்டி இன்னிக்குப் பூஜை பண்ணியிருக்கேன், இதை வைச்சு விடு. சரியாய்டும்பா” என்றாள்.
என் மனம் உடைந்து போனது. கண்களில் கண்ணீர் பெருக, அவளிடம், “அம்மாவை இன்று அவரோடு அழைத்துக் கொள்ளச் சொல், எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தவளை இப்படி அசைவின்றி பார்க்க முடியவில்லை’ என்று சொல்லி விட்டு அழுகையை அடக்கிக் கொண்டு மருத்துவமனை கிளம்பினேன்.
டாக்டர் வந்தார்.
“நான் சொன்னதை யோசிச்சீங்களா? சம்டைம்ஸ், வீ ஹேவ் டு பி ப்ராக்டிகல்”
“புத்திக்கு எல்லாமும் தெரியும் டாக்டர். ஆனா, மனசு அதை ஏத்துக்க மாட்டேங்குது. லைஃப் சப்போர்ட்டை எடுத்துட்டு அவளை அனுப்பிடுங்கன்னு என்னால எப்படி சொல்ல முடியும் டாக்டர்?”
குரல் தடுமாறியது. டாக்டருக்கும் தர்மசங்கடமாக இருந்தது தெரிந்தது. முகத்தைத் துடைத்தபடி சொன்னார்.
“உங்கம்மா எனக்கே ஒரு இன்ஸ்பிரேஷன். அவங்களை எத்தனை வருஷமா பாக்கறேன். நீங்க சொல்லணும்னே இல்ல. பட் நவ் வீ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்ஸ். நோ ஹோப்…”
கண்களைத் துடைத்துக் கொண்டேன். மூச்சை ஆழமாக இழுத்து விட்டேன். ஒரு உயிரை, அதன் இழப்பை பிராக்டிக்கலாக அணுக முடியவில்லை. ஆனால், டாக்டர் சொல்வது போல், ’நோ அதர் ஆப்ஷன்ஸ்’
“ஓகே டாக்டர், லைஃப் சப்போர்ட் எடுத்துட்டு நார்மல் வார்டுக்கு மாத்திடுங்க. நாங்க இங்கேயே இருந்து பார்த்துக்கிறோம்” என்றேன். அதைச் சொல்வதற்குள் என் இதயத் துடிப்பு நின்று விடுவது போல் வேகமாக அடித்துக் கொண்டது.
அம்மாவின் மரணத்தை என் வார்த்தைகள் தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பணமிருந்தால், இன்னும் இரண்டு நாட்கள் கூடப் பார்க்கலாம். இருபது வருடங்கள் கழித்துக் கூட கோமாவிலிருந்து மீண்டு வந்த கதைகள் இருக்கின்றனவே, ஒரு வேளை அது போல் அம்மாவும் பிழைத்துக் கொள்வாளோ? அவளுக்கு வாய்ப்பு கொடுக்காமல், பணமில்லையென்று நானே அவள் உயிரைப் பறிக்கிறேனா? அப்போ நான்தான் அவளுக்கு எமனா? தவிக்கும் மனது கேட்கும் கேள்விகளுக்குப் பதில்கள் இல்லை. “பணமெல்லாம் எதுக்கு, உன் அன்பு இருந்தா போதும்” என்று அம்மா எப்போதும் சொல்வாள். ஆனால், என்னிடம் நிறைந்திருக்கும் அன்பைக் கொண்டு அவள் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே?
ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றி விட்டார்கள். “உன் அம்மாவை நான் சரியா பாத்துக்கலையோ? அவளுக்கு என்ன ஆசைன்னு கூட அவ சொன்னதேயில்லை. இன்னும் நல்லா அவளைப் பாத்திருக்கணும். இத்தனை வருஷம் குடும்பத்தைப் பார்த்து, உன்னை வளர்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துன்னு வாழ்க்கை போயிடுச்சு, அவளை இனிமேலாவது நல்லா பாத்துக்கணும்னுதான் கொஞ்சம் நாள் தனியா இருப்போம்னு கூட சொன்னேன். ஆனா அதை அவ சரியாவே புரிஞ்சுக்கல. பேரப்பசங்களை விட்டு எங்கேயும் வர மாட்டேனுட்டா. இப்போ நம்ம எல்லாரையுமே விட்டுட்டு போகப் போறா. நான் தனியா இருந்து என்ன செய்யப் போறேன்?” – என்று என் கையைப் பிடித்துக் கொண்டு உடைந்து அழும் அப்பாவை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தேன். அதற்குள் என் பையன்கள் வந்து பாட்டியின் அருகில் அமர்ந்து அவளோடு விளையாடிய கதைகளைக் கூறி அவளை எழுப்ப முயன்றனர். பேரன்களின் குரல் கேட்டால், எங்கிருந்தாலும் துள்ளிக் குதித்து ஓடி வருகிற அம்மா அசைவின்றி இருந்தாள். அவர்கள் மேலிருக்கும் பாசம் அவளை எப்படியாவது எழுப்பி விடாதா என்று நானும், அப்பாவும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். சின்ன அசைவு கூட இல்லை.
பெரிய பொட்டுடன் பளிச்சென்று இருக்கும் அவள் முகம் சலனமற்று இருந்தது “அம்மா, நான் பேசும் போது, பாட்டி கண் அசைஞ்சது” . சின்னவன் சொல்கிறான். அது எங்கள் ஆசையின் பிரமை. இனி எப்போது வேண்டுமானாலும் அது நிகழலாம். நம் அன்புக்குரிய ஒருவரின் மரண நொடிகளை அருகிலிருந்து பார்த்தல் என்பது மரணத்தை விடவும் கொடியது.
குழந்தைகளை அழைத்துக் கொண்டு இரவு உணவு செய்ய வீடு வந்தேன். வந்த உடனேயே ஆஸ்பத்திரியிலிருந்து ஃபோன் செய்தார்கள். “அம்மாவுக்கு பல்ஸ் குறைந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் வாங்க” என்று நர்ஸ் சொன்னதும் மருத்துவமனைக்கு விரைந்தேன்.
வண்டியில் போகும் போதுதான், அம்மா என்னிடம் கடைசியாக எதுவுமே பேசவில்லை என்பது உறைத்தது. என்ன பேசினாள் என்று நினைவுக்கு கொண்டு வர முயன்றேன். “தோசை போதும். டயர்டா இருக்கு, தூங்கறேன்” என்றாள். எப்போதும் சளசளவென்று பேசிக் கொண்டிருக்கும் அம்மாவிடம், “கொஞ்சம் நேரமாது சும்மாயிரேன்மா” என்று அவ்வப்போது அதட்டியது நினைவில் வந்தது. உறக்கத்திலேயே நினைவிழந்து போய் விட்டாள். நினைவு இருந்திருந்தால், ஏதாவது சொல்ல நினைத்திருப்பாளா? உறக்கத்திலேயே போய் விடுவது வரமென்று சொல்வார்கள். அது இறந்தவர்களுக்குத்தான். உடனிருப்பவர்களுக்கு சாபம்.
அம்மாவின் முகம் மரணத்தின் நுழைவாயிலில் மிகப் பொலிவோடு இருந்தது. அப்பா அழுது கொண்டிருந்தார். அம்மாவின் அருகில் போய் அமர்ந்து அவள் கையைப் பற்றிக் கொண்டேன். இனி யாரும் எதுவும் செய்து போய்க் கொண்டிருக்கிற அம்மாவின் உயிரைத் தடுத்து விட முடியாது. அம்மாவுக்கு வெனிலா ஐஸ்கிரீம் பிடிக்கும். வழியில் வாங்கிக் கொண்டு போயிருந்த ஐஸ்கிரீமை ஊட்டி விட்டேன். வழிந்தது. உள்ளே சென்றதா என்று தெரியவில்லை. அவள் காதருகில் சென்று, “அப்பாவை நாங்க நல்லாப் பாத்துக்கறோம்” என்று மட்டும் சொன்னேன்.
இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல், சரியாக அந்தக் கணத்தில் மானிட்டர் நின்று போக, அருகிலிருந்த நர்ஸ் அம்மாவின் கையைப் பிடித்துப் பரிசோதித்து, “சாரிக்கா” என்றாள். ஆறு நாட்களாக மனதுக்கும், உயிருக்கும் நடந்த போராட்டம் முற்றுப் பெற்றது.
அப்பாவைக் கட்டி கொண்டேன். தன் மொத்த பலத்தையும் இழந்து நின்றிருந்த அப்பாவை என்னால் பார்க்க முடியவில்லை.
அம்மாவிற்காக அழக் கூட முடியாமல், அடுத்து எல்லா காரியங்களுக்கும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். 13 நாட்கள் எல்லாக் காரியங்களும் திருப்தியாக செய்து அம்மாவின் ஆன்மாவை சாந்தியடையச் செய்து வேறு உலகத்திற்கு அனுப்பி விட்டாயிற்று. அனைவர்க்கும் புது துணி எடுத்து, வீடு முழுவதும் புனித நீர் தெளித்து, மெல்ல மரணத்தின் நெடியிலிருந்து வீடு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்று விட்டனர்.
அம்மாவின் குரலால் மட்டுமே நிறைந்து உயிர்ப்புடன் இருந்த என் வீடு முற்றிலும் வெறுமையில் ஓசையற்று அமைதியாக இருந்தது. அம்மா இனி வரமாட்டாள் என்பது அப்போதுதான் புத்தியில் முழுமையாக உறைக்க கதறியழுதேன். அம்மா மட்டுமே வீட்டிலிருக்கும் அனைவரையும் இணைக்கும் பாலமாக இருப்பவள். அம்மாவால் மட்டும்தான் வீடுகள் உயிர்ப்போடு இருக்கின்றன.
அழுதழுது கண்ணீர் வறண்டு போனவளாக எழுந்து போய் அலமாரி முன் நின்று ட்ராயரைத் திறந்தேன். அம்மாவின் இன்சுலின் மருந்துகள், ஊசிகள். அவற்றை எடுத்துப் பார்த்தேன். அம்மாவை நார்மல் வார்டுக்கு மாற்றும் முன் இறுதியாக டாக்டருடன் நடந்த தனி உரையாடல் என் காதில் ஒலித்தது.
டாக்டர், நீங்க நார்மல் ஆகிட்டாங்கன்னு சொன்னதாலதான் அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டுப் போனோம். அப்புறம் ரெண்டு நாளுக்குள்ள திடீர்னு அம்மாக்கு ஏன் இப்படி ஆச்சு?
அவங்க சுகர் லெவல் ரொம்ப கம்மியாயிருந்துருக்கு. அது தெரியாம, நீங்க இன்சுலின் ஊசி போட்டதும் இன்னும் கம்மியாகிடுச்சு. அதுக்கு நடுவுல நீங்க அவங்களை எழுப்பியாவது இன்னும் கொஞ்சம் சாப்பிடக் கொடுத்துருக்கணும். அதனாலதான் தூக்கத்திலயே கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டாங்க.
“அப்போ நான் ஊசி போட்டதால தான் அம்மாக்கு இப்படி ஆச்சா டாக்டர்? அன்னிக்கு ஊசி போட்டுருக்க கூடாதா? எனக்கு எப்படித் தெரியும்? அப்போ நான்தான் எங்கம்மாவைக் கொன்னுட்டேனா”?
“நோ, நோ நோ நோ..அப்படியில்லை. இட் மே ஹாப்பன் டு சம் ரேர் கேசஸ், இது உங்க தப்பு இல்ல. இதுல யாருடைய தப்பும் இல்ல. அவங்க விதின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.”
“பிகாஸ் வீ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்ஸ். நோ ஹோப்…”
“சரிங்க டாக்டர், ‘லைஃப் சப்போர்ட் எடுத்துட்டு நார்மல் வார்டுக்கு மாத்திடுங்க. நாங்க பார்த்துக்கிறோம்”
என் கையை ஓங்கி அலமாரியில் அடித்தேன். “அம்மா, நான்தான் உன்னைக் கொன்னுட்டேன். என் கைல, வார்த்தைலதான் உன் விதி இருந்ததா? இப்படியொரு சூழ்நிலை எனக்கு ஏன் வந்தது? குற்ற உணர்ச்சியில் காலமெல்லாம் நான் அணு அணுவாய் சாவதற்கா? எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத இந்தக் குற்ற உணர்வோடு அப்பாவை எப்படிப் பார்த்துக் கொள்ளப் போகிறேன்? இனி நான் என்ன செய்வேன்? எந்த அசம்பாவிதம் நடந்தாலும், இதனால்தானோ என்று மனம் பதறுமே?”
வலியும், கண்ணீருமாய் உறங்கிப் போனேன். மனம் வித்தியாசமாக எதையோ உணரத் துவங்க திடுக்கிட்டு எழுந்தேன். திடீரென்று அறையில் மஞ்சள் குங்கும வாசனையுடன் ஒரு மணம் நிரம்பியது. சின்ன வயதில் இருந்து நானறிந்த, உணர்ந்த, நுகர்ந்த மணம் என் நாசியில் நிரம்பியது. மனதின் படபடப்பு குறைந்தது.
அம்மா…? ஆமா.. அம்மாவின் வாசம்தான். அதே மணம்தான். அம்மா!!!!!
அம்மாவுக்கென்று தனி வாசம் உண்டு. மஞ்சளும், குங்குமமும் கலந்து அன்பும், தெய்வீகமும் கூடிய வாசம். கோயிலில் நுழையும் போது கிடைக்கும் இதமும், மன அமைதியும், அம்மாவைக் கட்டிக் கொள்ளும் போதும் கிடைக்கும். அதே வாசம் இப்போது என் அணுக்களில் நுழைந்து என்னை ஆறுதல்படுத்தியது. மனசு லேசானது.
“கண்ணு..” அம்மாவின் குரல் என்னை அழைத்தது. “உன் தப்பு ஒண்ணுமில்ல ராஜாத்தி. எனக்குப் போதும்னு தோணித்து. கிளம்பிட்டேன் அப்பாவையும், பேரப்பசங்களையும் நல்லா பாத்துக்கோ கண்ணா.” ஆதூரம் நிரம்பிய அந்தக் குரல் என் காதுக்குள் மென்மையாகக் கேட்டது.
வியர்த்துக் கொட்டி அலறி எழுந்தேன். இது என்ன கனவா? என் குற்ற உணர்வுதான் கனவாக என்னைத் துரத்துகிறதா?
ஆனால், அம்மாவின் வாசனை இப்போதும் இந்த அறையில் நிரம்பியிருக்கிறதே?
கூடத்தைப் பார்த்தேன். அந்த இரவின் ஒற்றைத் தீபமாக, வாசமாக அம்மா ஃபோட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் காலை சமையலறையில் வேலையாக இருந்தேன். சின்னவன் ஓடி வந்தான்.
“அம்மா, அம்மா… இங்க வாயேன். “
“என்ன குட்டி?”
“இங்க வந்து பாரு, பாட்டி பாத்து பாத்து வைச்சு, பூ இன்னும் வரல வரலன்னு சொல்லிண்டேயிருந்தாளே, அந்த ராமபாணம் செடில இன்னிக்கு முதல் பூ பூத்திருக்கு, சீக்கிரம் வந்து பாரு.”
ஓடிச் சென்று பார்த்தேன்.
“பாட்டி இப்ப ரொம்ப ஹேப்பி ஆயிருப்பா… இல்லம்மா?”
அவனை அணைத்துக் கொண்டேன். “ஆமாடா கண்ணு”
அவன் என் புடவையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, “அம்மா, நல்ல வாசனை” என்று சொல்லியபடி மூச்சை இழுத்து வாசம் பிடித்தான்.
“அம்மா எங்கேயும் போகல, இங்கதான் இருக்கா” என்பதாக மனம் நிறைந்தது.
அழகான கதை…
வாழ்த்துகள் அகிலா.