மொழிபெயர்ப்புகள்

அன்புள்ள அப்பா – நபநீதா தேவ் சென் (தமிழில் – அருந்தமிழ் யாழினி)

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

து ஒரு மங்களகரமான புதன்கிழமை மாலை. சோமேஷ் காணாமல் போன அன்று அதிர்ஷ்டமில்லாத நட்சத்திரங்களோ, கெட்ட சகுனத்தை காட்டும் நட்சத்திரக் கூட்டங்களோ கூட சொர்க்கத்தில் தென்படவில்லை. அவன் மனைவி இந்திராணி எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டாள் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்னும் கொஞ்சம் விவரங்களை சேகரித்ததில் சோமேஷ் அவனது அலுவலகத்தில் மூன்று மாதம் மருத்துவ விடுப்பு எடுத்திருக்கிறான் என தெரியவந்தது. உடல்நலக் குறைவிற்கான எந்த ஒரு சிறு அறிகுறியும் அவன் காட்டியதாக யாருக்கும் தோன்றவில்லை. சொல்லப்போனால் மருத்துவ விடுப்பை விண்ணப்பிக்கும்போது உற்சாகமாகவே தான் இருந்தான். சுருக்கெழுத்து பணியிலிருக்கும் ஜெனிபரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து விளையாடிக்கொண்டிருந்தான். அலுவலகத்தை விட்டு வெளியேறியதும் மீத்தா பானை வாயிலிட்டு சுவைத்தபடியே அங்கிருந்து சென்றுவிட்டான். ஆனால் எங்கே போனான் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. அலுவலகத்தில் அவனுக்காக கொடுக்கப்பட்டிருந்த வாகனத்திலும் செல்லவில்லை. அவன் வீட்டில் ஒரு மர்மமான கடிதத்தை வைத்து விட்டுப் போயிருந்தான் அதில், “இந்திராணி எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னை மன்னித்துவிடு. Que Sera, Sera! எதுவெல்லாம் நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும். எதிர்காலம் நம் கைகளில் இல்லை பார்ப்பதற்கு”. என எழுதி இருந்தான். அவனது நாட்குறிப்பில் நல்ல பெரிய எழுத்துக்களில் ஷெஷார் கபிதா நாவலில் இருந்து ஒரு வரியை எழுதியிருந்தான். “யாராவது எனக்காக ஆவலுடன் காத்திருந்தால்,அவள் என்னை நன்றியுடையவனாக்குவாள்” என. அவனது அலுவலக குறிப்பேட்டில் இப்படி எழுதியிருந்தான் “வனம் அழகாகவும் இருண்டும் ஆழமாகவும் இருக்கிறது. ஆனால் அதில் நான் பாயும் முன்பு ஒரு வாக்கை காப்பாற்ற வேண்டியுள்ளது பல மைல்களை கடக்க வேண்டியுள்ளது” என. அந்த முதல் வார்த்தை தவறு. அவள் அதை குறித்தே கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். வங்கியில் தேவையான வழிகாட்டுதல்களை அவன் செய்திருந்தான். கூட்டு கணக்கின் காசோலை புத்தகத்தை விட்டுசென்றிருந்தான். கூடவே அவன் இல்லாத போது அவனுடைய சம்பளத்தை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுத்து மூன்று கடிதத்தையும் எழுதியிருந்தான். அதேபோல் ஒரு உறையில் கல்கத்தா காவல் நிலையத்தின் முகவரி எழுதி அதில்”தயவு செய்து என்னைத் தேட வேண்டாம். மாறாக என்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நான் கொஞ்ச நாட்களில் திரும்பி விடுவேன்” என எழுதியிருந்தான். இந்திராணியின் பெரியண்ணன் காவல்துறையில் தான் வேலையில் இருந்தான். முகம் வாடிப்போய் அந்த குறிப்பு சீட்டை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் அவன். பிறகு ஆலோசனைக்காக அவரது அலுவலக இயக்குனர் திரு. கொஷ், சௌஹான் மற்றும் ரோணு பேனர்ஜியை சந்தித்துப் பேசினான். ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் காவலர்களுக்கு எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை. காவலர்களின் திறமையின்மையைப் பற்றி இந்திராணி அவன் அண்ணனிடம் கடுமையாக சாடினாள். “நாங்கள் நிஜமாகவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் எல்லாவற்றையும் வைத்து முயன்று கொண்டிருக்கிறோம். இப்போது இருப்பதெல்லாம் எங்களுடைய நிபுணத்துவமும் உன்னுடைய அதிர்ஷ்டமும் தான்” இதை மட்டும் தான் அவனால் சொல்ல முடிந்தது.

ஆனால் இரண்டுமே வெற்றிகரமானதாக தெரியவில்லை. இப்போது கிட்டதட்ட இரண்டு மாதம் ஆகப் போகிறது.

இந்திராணி இப்போதெல்லாம் ஆச்சரியப்படுவதும் வருந்துவதுமாகவே இருந்தாள். ஆமாம், அவள் அந்த நேரத்தில் ‘சரி’ என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படி சொல்லி இருந்தால் குறைந்தபட்சம் அவன் வீட்டிலாவது இருந்திருப்பான். அவன் இந்திராணியிடம் கெஞ்சினான் அவள் காலில் கூட விழுந்து மன்றாடினான். ஆனால் அவனால் அவளை சம்மதிக்க வைக்க முடியவில்லை. அது இந்திராணியின் முட்டாள்தனம். அவள் சோமேஷ் சொல்லவந்த எதையும் காதில் வாங்காமல் உணர்ச்சிவசப்பட்டவளாய் தேம்பிக்கொண்டிருந்தாள். அய்யோ கடவுளே! அது எப்படி சாத்தியமாகும்? நம்ம அப்பா அம்மா என்ன நினைப்பாங்க? பண்ட்டு, மிண்ட்டு, ஷொண்ட்டு அவங்க நிலைமை என்னாகும்? அக்கம்பக்கத்துல நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்ன சொல்லுவாங்க? இல்ல, இல்ல! முடியாது. இது பைத்தியக்காரத்தனம். இப்படி ஒரு கேவலமான விஷயத்தை நான் என் வாழ்க்கையில கேட்டதே இல்லை. அவமானம்!

சோமேஷ் இரவெல்லாம் ஒரு புத்தகம் மாற்றி இன்னொன்று என படித்தான். இந்திராணியையும் அதை படிக்க வைக்க முயற்சி செய்தான். “கடந்த இருபத்தி ஐந்து வருடத்தில் இது போன்ற நிகழ்ச்சி இந்தியாவிலும் நடந்திருக்கிறது. இங்க பாரு மும்பைல ஃபரா ரஸ்டாம்……”

சோமேஷ் இந்திராணியிடம் ஒரு புத்தகத்தை படிப்பதற்காக கொடுத்தான். மறுநிமிடமே அதை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்து விட்டாள். அந்தப் புத்தகம் பக்கத்து வீட்டு வராண்டாவில் போய் விழுந்தது.

“பண்ட்டு, மிண்ட்டு, ஷொண்ட்டு” சோமேஷ் அழைத்தான்.

“வரோம்பா”.

“பக்கத்து வீட்டு வராண்டாக்கு போங்க”

“உடனே கொண்டு வரோம் அப்பா”.

சோமேஷ் அந்தப் புத்தகத்தை சுத்தம் செய்து அலமாரியில் வைத்தான். ஆனால் இந்திராணி அதைப் படிக்கப் போவதில்லை. “இல்ல, இல்ல, இல்ல! இப்படி ஒரு கேவலமான விஷயத்தை என்னுடைய குடும்பத்தில் நடக்க விடமாட்டேன். அதுக்கு பேசாம நான் செத்துப் போயிடுவேன் ….”

சோமேஷ் இந்திராணிக்கு புரிய வைப்பதற்காக நீண்ட காலமாக மிகவும் கஷ்டப்பட்டு முயற்சி செய்தான். “நீ எதுக்காக உங்க அப்பா அம்மா பத்தி கவலைப்படுற? எதுவும் அவங்களை ஒன்னும் செய்யாது. இதுக்கு முன்னாடி இருந்தது போல இப்பவும் அவங்களுக்காக நாம இங்க ரெண்டு பேரும் இருப்போம். அப்புறம் இந்த அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க, அவங்க எது வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும். அவங்கள நாம கண்டுக்க தேவையில்லை. குழந்தைகளுக்கு இதுக்கு முன்னாடி கிடைச்ச மாதிரி அன்பு, அரவணைப்பு, கல்வி எல்லாம் கிடைக்கும். இழப்பின் வலிய அனுபவிக்க போற ஒரே ஆளு நீ மட்டும் தான் இந்து. அதனாலதான் உன் முன்னாடி நான் கெஞ்சிட்டு இருக்கேன். எனக்காக இந்த ஒரு தியாகத்தை நீ தாங்கிகிட்டு செய்ய மாட்டியா? சதி, சாவித்திரி போன்ற மனைவிகள் இருந்த நிலத்துல இருந்து வந்தவ நீ, இங்கு மனைவிகள் கணவர்களுக்காக பெரிய தியாகங்களை செய்திருக்கிறார்கள்”.

“யாரு, யாருக்காக என்ன செஞ்சிருக்காங்க அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. என்னால அந்த வெட்கமில்லாத, அர்த்தமில்லாத. கோரிக்கைக்கு சரின்னு சொல்ல முடியாது”. என்னால முடியாது எப்பவும்! இந்திராணி பிடிவாதமாக நின்றாள்.

“தயவுசெஞ்சு இந்து, உன்னோட கணவன் எவ்வளவு அசிங்கமா மாறி இருக்கான்னு உன்னால பார்க்க முடியலையா? வெறும் உள்ளாடையோடு என்னுடைய உடம்பை காட்ட முடியல. கிளப்ல இருக்க நீச்சல் குளத்துக்கு கூட போகிறத விட்டுட்டேன். என்னுடைய வலிய உன்னால உணர முடியலையா? ஒரு முறை உன்னால சரினு சொல்ல முடியாதா?”

ஆமாம். இந்திராணியால்இப்போது புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் அந்த நேரத்தில் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது சுலபமாக இரண்டும் இரண்டும் நான்கு ஆகிறது!

சோமேஷுடைய தோற்றம் எப்போதுமே ஒரு பெண்மைக்குண்டான இனிமையோடு இருக்கும். அவனுடைய நடவடிக்கையும் சங்கடப்படுத்த கூடிய ஒரு பெண் தன்மையோடே இருக்கும். இந்திராணி அவனை திட்டுவாள். முன்னொரு நாள் அவனுக்கு காய்கறியினுடைய தண்டு பகுதியை சுவைக்க வேண்டும் போலிருந்தது. பழைய புகழ் பெற்ற சரத் சந்திராவின் நூல்களில் உள்ள பெண்களைப் போலவே அதை மென்று கொண்டே தட்டின் பக்கத்தில் சக்கையை அடுக்கிக் கொண்டிருந்தான். ஆனால் இதை விட மோசமானது என்னவென்றால் வீட்டிற்கு வரும் பெண் விருந்தினர்களிடம் அவன் நடந்து கொள்வது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவளை புகழ்ந்து கொண்டு இருப்பான் சோமேஷ். “வாவ், என்ன ஒரு அழகான புடவை Mrs. குலாத்தி. இருங்க நான் இத பார்க்கிறேன், இது என்ன ஆர்கன்ஸா பிரிண்ட்டா? ரொம்ப அற்புதமா இருக்கு!” இல்லையென்றால் இப்படி கேட்பான், “ஏ, Mrs. ராய் இந்த புது வளையல்களை எப்ப வாங்குனீங்க ! இதுக்கு முன்னாடி நான் இத பார்த்ததே இல்லையே. நல்ல நுட்பமான வேலைப்பாடு! எவ்வளவு தங்கம் ஆச்சு இதை செய்வதற்கு?”. இவையெல்லாம் இந்திராணியியை மிகவும் எரிச்சல்படுத்தும். எப்படி ஒரு ஆணுக்கு பெண் தன்மை இருக்கமுடியும்? சோமேஷினுடைய குரலும் அவனைப்போலவே இனிமையாக மாறிக்கொண்டிருந்தது. தொலைபேசியில் பேசும்போது நிறைய நேரம் அவனுடைய குரலை ஜெனிஃபருடையது என நினைத்து குழம்பியிருக்கிறாள்.சமீபகாலமாக சோமேஷ் நிறைய உணர்ச்சிவசப்படுகிறான். சின்ன விஷயத்திற்கு கூட அவனுடைய கண்கள் ஈரமாகிறது. எல்லாரும் அதை கவனிக்கிறார்கள்.

உண்மையில் ஒரு முடிவெடுப்பதற்காக இந்திராணி மிகவும் முயன்று கொண்டிருந்தாள். சோமேஷ் குரோமோசோம் பரிசோதனை செய்ய வேண்டும் என விரும்பினான். இந்திராணி அவனை அனுமதிக்கவில்லை. சோமேஷ் அதை பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியவனாய் நாளிதழ் படிப்பதும் அதன் ஓரத்தில் X+YY+YX+X etc… என கிறுக்குவதுமாய் இருந்தான். இந்திராணி அவனோடு விவாதம் செய்வாள் “உங்களுக்கு எதுக்காக இப்ப சாட்சி வேணும்? உங்க பசங்கள பாருங்க, அந்த சாட்சி உங்களுக்கு போதாதா?”.

“ஆனா அதெல்லாம் கடந்த காலம். எனக்கு என்னுடைய எதிர்காலத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்”.

“சரி அப்ப ஏதாச்சும் ஜோசியர் கிட்ட போகலாம்”.

“ஜோசியக்காரர் கிட்ட இல்ல, இந்து, எனக்கு ஒரு மருத்துவர் வேணும். என்னோட உடம்புல என்ன நடந்துகிட்டு இருக்குன்னு எனக்கு தெரியணும் புரிஞ்சுக்கணும். இதெல்லாம் வேண்டுமென்றே நடக்க கூடிய நிகழ்வுகள் இல்லை. எனக்கு தெரியவேண்டியது அறிவியல்பூர்வமான….”

இந்திராணி அவளுடைய கடினமான வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்பினாள். இதில் உண்மையாகவே அவனின் தவறு எதுவும் இல்லை. இது ஏதோ ஒரு துரதிர்ஷ்டம் அப்படி நடந்து விட்டது. குறைந்தபட்சம் மருத்துவரிடம் செல்வதற்காகவாவது இந்திராணி ஏன் ஒத்துக்கொள்ளாமல் போனாள்? அவள் ஏன் அவ்வளவு பிடிவாதமாக இருக்க வேண்டும்? அந்த நேரத்தில் அவள் கொஞ்சம் ஒத்துழைத்திருந்தால் இவ்வளவு பெரிய பேராபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். இப்போது அவன் சென்று விட்டான். இமயமலைக்கோ என்னவோ. இந்த வசவுகளை எல்லாம் தாங்க முடியாமல் தற்கொலை கூட செய்திருக்கலாம். யார்தான் அவனை குற்றம் சொல்ல முடியும்? அவன் இமயமலைக்கு சென்று இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் அலமாரியில் இருந்த குளிர்கால கையுறைகள் காலணிகள் மேல் உடுப்பு எல்லாம் காணாமல் போயிருந்தன. தொடர்ந்து வருந்துவதும் அழுவதும் இந்திராணியின் கண்களில் புரை வளர தொடங்க காரணமாய் அமைந்தது. இதனால் அவள் புதிய கண்ணாடி வாங்க வேண்டி இருந்தது. இப்போது மூன்று மாதம் ஆகிவிட்டது சோமேஷ் பற்றிய எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. ஒருவழியாக இந்திராணி சேறு படிந்திருந்த அந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். கிறிஸ்டின் ஜார்ஜென்சன் வாழ்க்கை வரலாறு, ஜேன் மோரிசனின் வசனங்கள், ஃபரா ரஸ்டாமின் விளக்கங்கள் என நீண்டது அவை. அவள் அவளுடைய காவல்துறை அண்ணனிடம் கேட்டு “சோமேஷ் தயவுசெய்து திரும்ப வாருங்கள். ரத்தப் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கிறேன்” என செய்தித்தாளில் ஒரு விளம்பரம் போடலாம் என முடிவு செய்தாள். அப்போதுதான் அவளுக்கு தந்தியில் ஒரு செய்தி வந்தது “சோமேஷ் சௌவுத்ரி மூன்று மாதங்களுக்கு முன்பே Dr. சங்கிங்கர்ஸ் நர்ஸிங் ஹோம்மிலிருந்து காலாவதியாகிவிட்டார். இப்படிக்கு சோமா”. என்று.

இந்திராணி அப்படியே சரிந்து போய் சோபாவில் விழுந்தாள். இடைவிடாமல் அழுகவும் கவலைப்படவும் ஆரம்பித்தாள். கடைசியாக மருத்துவர் தூக்க மருந்து கொடுத்து அவளை தூங்க வைக்கவேண்டியிருந்தது.. தூங்குவதற்கு சற்றுமுன்பு இந்திராணி நினைத்தாள் “யார் அந்த சோமா?

அவள் தூங்கி எழுந்து பார்த்தபோது அவளது மைத்துனி நவ நாகரிகமாய் அவளது அருகில்’ ஃபெமினா’ புத்தகத்தை படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். சோஹினி, விமான பணிப்பெண் மும்பையில் வசிக்கிறாள். எப்போதாவது எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் கல்கத்தாவிற்கு வந்துவிடுவாள். அவளுக்கு ஊர் சுற்றுவது மிகவும் பிடிக்கும். இந்திராணிக்கு அவளைப் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. “நீயா? எப்ப வந்த?”.

அவளின் அந்த விருந்தாளி நன்றாக திருத்தப்பட்ட தன் புருவத்தை உயர்த்தி நீல நிற கருவிழியை குவித்து பரிகாசமாய் அந்த நீளமான இமைகளால் அவளைக் கடிந்து கொள்வது போல் பார்த்தாள்.

“அவமானம் இந்து, நீ அப்படியெல்லாம் என்னை குறிப்பிட கூடாது!”.

“அய்யோ கடவுளே! நீங்களா?” இந்திராணி திணறிப் போனாள்.

சோமேஷ் வெட்கப்பட்டு சிரித்தான். “இது நானே தான். வேற யாரு?”. அவன் சிரிக்கையில் அவனுடைய சிவப்பு உதடுகளும் அதிர்ந்தன. கூடவே இந்திராணியின் இதயமும். நல்ல ஒழுங்கான புருவங்களுக்கு இடையே வைக்கப்பட்ட நீல பொட்டும், பாய் கட் வைத்து நன்கு ஷாம்பு போட்ட முடியும், பத்து விரல்களிலும் பொருத்தமான பிங்க் நிற நகப்பூச்சுடனும் லாவகமாக நாளிதழை பிடித்துகொண்டிருக்கிறாளே யார் இந்த நபர்? என இந்திராணி நினைத்தாள். அந்த கட்டிலுக்கு பக்கத்தில் ஒரு கோப்பையில் ஆரஞ்ச் பழச்சாறு இருந்தது. சோமேஷ் நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கியவாரு “சரி? உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? இப்போது என்னுடைய பெயர் சோமா”. என சொன்னான்.

“ஓ, நீதான் அந்த சோமாவா. எனக்கு ஆச்சரியமாயிருந்தது…” இந்திராணி தைரியம் வந்தது போல் உணர்ந்தாள். அவன் பார்ப்பதற்கு அழகாகவே இருந்தான். அசிங்கமாக பாதி பெண் போல் தெருவில் பாடியும் நடனமாடியும் திரிபவர்களை போல இல்லை அவள். சொல்லப்போனால் பார்ப்பதற்கு அசப்பில் அவனது தங்கை சோஹினி போலவே இருக்கிறான். இந்திராணியும் சோஹினியை எப்போதும் விரும்பத்தான் செய்தாள்.

பெண் தன்மையோடு இருந்த சோமேஷ் இப்போது உண்மையாகவே ஒரு அழகான பெண். அந்தத் தெளிவான நீல நைட்டியில் அவனது அங்க வடிவங்கள் மூன்று பிள்ளைகளுக்கு தாயான இந்திராணியையே கொஞ்சம் பொறாமை பட வைத்தது. அவளும் அழகுக்கு பெயர் போனவள் தான் ஆனால் இந்த மாதிரி அல்ல. அம்மாடி! அவனுடைய இடுப்பு குளவி போல் எவ்வளவு மெலிதாக இருக்கிறது!. சோமேஷ் எந்த அழகிப்போட்டியில் வேண்டுமானாலும் சுலபமாக வெற்றிப்பெற முடியும்.அவன் இப்போது அப்படியே இருபது வயது இளையவனாக இருக்கிறான். இந்திராணிக்கு உள்ளுக்குள் பொறாமையாக இருந்தது. “இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீங்க? “. இந்திராணி கோபமாக கேட்டாள்.

நான்தான் அந்தத் தந்தியிலேயே சொல்லி இருந்தேனே. நான் Dr. சங்கிங்கர் நர்சிங் ஹோம்ல இருந்தேன். அவங்க வெறுமனே அறுவை சிகிச்சை மட்டும் பண்றது இல்ல. அதற்குப்பிறகு நம்மளை எப்படி பார்த்துக்கணும் அப்படிங்கறதுக்கும் வகுப்பு எடுக்கிறார்கள். புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர்கள் மாடல்ஸ் எல்லாம் அங்கு வந்து எப்படி உடை அணிய வேண்டும்,நடக்க வேண்டும்,பேச வேண்டும், ஒப்பனை செய்து கொள்ள வேண்டுமென கற்றுக்கொடுக்கிறார்கள். இது எல்லாமே மூன்று மாதத்தில். உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? நான் நன்றாக தானே இருக்கிறேன்,இல்லையா?”.

“அப்புறம்?” இந்திராணி பதில் ஏதும் சொல்லாமலே கேட்டாள்.

“அப்புறம்னா, என்ன சொல்ல வர நீ?”.

“இப்ப என்ன செய்யலாம்னு இருக்கீங்க? உங்க தங்கச்சி போல ஹேர்ஹோஸ்டஸ் ஆக போறீங்களா? இல்ல விளம்பரத்துல போஸ் கொடுக்க போறீங்களா?”

“அதெல்லாம் விடு. அந்த மாதிரியான வேலைக்கு போற வயசு இல்ல எனக்கு. அதோட என்னுடைய மருத்துவ விடுப்பு முடியப்போகுது. திங்கட்கிழமை திரும்ப வேலைக்கு போகணும்.”

“என்ன சொல்ல வரீங்க, அதே வேலைக்கு? அதே ஆபீஸ்லயா?”

“ஆமா கண்டிப்பா. எதுக்காக நல்ல வேலைய மாத்தணும்? இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆண் பெண்ணுக்கு சரி சமமான வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கு இல்ல.”

இந்திராணி வாயடைத்துப் போனாள்.

அவன் சொல்வது நியாயப்படி சரிதான். பாரத பிரதமர் பெண்ணாக இருக்க முடியுமெனில், ஏன் ஒரு விளம்பர நிறுவனத்தின் மூத்த நிர்வாகியாக இருக்க முடியாது? சொல்லப்போனால் இந்த வசீகரிக்க கூடிய தோற்றத்தில் அவனுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு கூட தகுதி இருக்கிறது. இந்திராணி கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தவளாய் வெட்கத்துடன் கேட்டாள்” இப்போது நான் உன்னை எவ்வாறு அழைக்க வேண்டும் என நீ விரும்புகிறாய் சோமா?

“ஏன்? நீ இப்போது என்னை எப்படி கூப்பிட்டாயோ அப்படி. அல்லது நீ என்னை சோமா என்று கூட அழைக்கலாம்”. சோமேஷ் அழகாக குழிவிழுந்த அந்த கன்னத்தோடு சிரித்தான். நல்ல பரிட்சயமான புன்னகை ஆனால் இப்போது பிங்க் நிற உதட்டுச் சாயத்தோடு. அது இந்திராணிக்கு ஏதோ ஒரு வகையில் அந்நியமாகத் தெரிந்தது.

“எனக்கு உன்னுடனான உறவு எப்போதும் மாறாது. அப்படி விநோதமா பார்க்காத”.சோமா சௌத்ரி புன்னகைத்தாள்.

“இப்போது பிரச்சனை எல்லா ஆவணங்களிலும் மாற்றம் செய்வதுதான். சட்டப்படி என்னுடைய பாலினத்தை, பெயரை,அடையாளத்தை எல்லாவற்றையும் மாற்றுவதுதான். என்னுடைய வேலையில் இதைச் செய்தாக வேண்டும் பாஸ்போர்ட்டில்,எல்லா இடத்திலும்.நீதிமன்றத்திலிருந்து ஆவண பத்திரம் வாங்க வேண்டும் அதில் எல்லாவற்றிலும் கையெழுத்து வாங்க வேண்டும். 40 வயதில் அடையாளத்தை மாற்ற வேண்டும் என்பது எளிதாக இருக்கப்போவதில்லை! கடவுளே!”.

“பிறகு நான் திருமதி சோமா சௌத்ரி ஆகப்போகிறேனா? ஒரு பெண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்வது சட்டப்படி சரியா?”

சோமேஷ் தீவிரமாக யோசனையிலாழ்ந்தான். “நீ என்னை விவாகரத்து செய்ய வேண்டி வரலாம். ஆனால் அது கட்டாயமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்து, நீ என்னை விட்டுட்டு போக மாட்டல, ஆமா தான?”.

அந்த அக்கறையான வார்த்தைகளை சோமேஷின் இனிமையான பெண் குரலில் கேட்கும்போது இந்திராணி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டாள். அவன் இன்னமும் அவளின் மீது அக்கறையோடு தான் இருக்கிறான் என.

“பசங்க எங்க?” சோமேஷ் கேட்டான்.

“வார இறுதி இல்லையா அதனால அப்பா அம்மா வீட்டுக்கு போய் இருக்கிறார்கள்”. என இந்திராணி சொன்னாள். அது ஒரு வகையில் அவளின் பெற்றோர்களை ஆறுதல் படுத்துவதற்காகவும் தான்.

“அவ்வளவு தூரத்திலிருந்து அவங்கள கூப்பிட வேண்டாம் அவங்க திங்கட்கிழமை வந்துடுவாங்க”. தணிந்த குரலில் இந்திராணி சொன்னாள்.

“அப்புறம் உங்க அப்பாவுடைய கண்புரை? அதற்கு ஏதாச்சும் செஞ்சியா?”.

அட! குடும்பத்த பத்தியும் அவனுக்கு அக்கறை இருக்கு! இந்திராணி நன்றியோடு நினைத்தாள்.

“ஆமா அவரும் திட்டம் போட்டுட்டு தான் இருக்கார் அவருடைய இரண்டு கண்களும் முதிர்ச்சி அடைஞ்சிடுச்சி. எல்லாம் உங்கள நினைச்சு கவலைப்பட்டுதான்! இப்படி தான் சொல்லாம கூட ஓடி போவீங்களா?”

“எப்படியோ, நான் ஓடி போனதுல சில நல்லது நடந்ததே”. சோமேஷ் சிரித்துக்கொண்டே இந்திராணியை லேசாக இடித்தான்.

திங்கட்கிழமை திருமதி சோமா சௌத்ரி அலுவலகத்திற்கு திரும்பினாள். இந்த நவீன உலகத்தில் இது உண்மையாகவே ஒரு சவுகரியம். செல்வி, திரு அல்லது திருமதி என எதுவும் சேர்த்து எழுத தேவையில்லை.

அலுவலகத்தில் ஒரு பூகம்பமே வெடித்தது. ஆங்கிலோ- இந்திய சுருக்கெழுத்தாளர் ஜெனிஃபர் மட்டும்தான் எவ்வித ஆச்சரியமும் அடையாமல் இயல்பாக இருந்தாள். மற்ற எல்லாரும் Mrs. சௌத்ரியை பார்த்ததில் திகைப்படைந்தார்கள். நல்ல பிங்க் நிற ஷிபான் புடவை, நறுமணம் வீசும் வாசனை திரவியம், ஒழுங்கான விரும்பக்கூடிய ஒப்பனை செய்யப்பட்ட கண்களும் இமைகளும், உதடுகளோடும் நான்காவது எண் குறிக்கப்பட்ட அம்பாசிடர் காரில் இருந்து இறங்கினாள் அவள். வாயில் காவலன் பகதூர் அவனை நிறுத்த முயற்சி செய்தான் ஆனால் அந்தக் காரைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டான். பழைய பழக்கத்தில் அவனுக்கு இவன் வணக்கம் கூட வைத்தான். சோமேஷும் அவனுக்குத் திரும்ப வணக்கம் செய்தான் பழைய நாட்களைப் போலவே. அது பகதூரை கொஞ்சம் திகைப்படைய வைத்தது.

“அடக்கடவுளே! சௌத்ரி சாப்பா இது?” அவன் கண் அகல விரிந்தது.

எந்த மாடி? பழைய தானியங்கி இயக்கும் பணியாள் கேட்டான்.

“எப்படி இருக்க இப்ராஹிம்?” சோமேஷ் பதிலளித்தான்.

பொத்தானை அழுத்த மறந்தவனாய் மாறாக தலையில் அடித்துக் கொண்டு அப்படியே மேசையின் மீது விழுந்தான் அவன்.

“இன்ஷா அல்லா! சௌத்ரி சாஹிப்? தவ்ஃபா! தவ்ஃபா!”

“இனிமேல் சாஹிப் இல்ல, மேடம் சௌத்ரின்னு கூப்பிடனும் புரிஞ்சுதா?” சோமேஷ் இனிமையாக சிரித்தான். சீக்கிரம் … என்னாச்சி?

தானியங்கிலிருந்து எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் நேராக அவனுடைய அறைக்குள் நுழைந்தான் சோமேஷ். நிதிராம் கதவுக்கு வெளியே ஒதுக்கப்பட்டிருந்த அவனுடைய இருக்கையில் இல்லை. சிறிது நேரம் பொறுத்து Mrs. சௌத்ரி அவனுக்கான அழைப்பு பொத்தானை அழுத்தினாள். ஒரு அழகான பெண் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை நிதிராம் பார்த்து அவன் செய்ய வந்த காரியத்தையே மறந்துபோனான். மூன்று மாதத்தில் ஏகப்பட்ட கோப்புகள் சேர்ந்து விட்டிருந்தது. அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் “கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா” என்றான் சோமேஷ்.

அடக்கடவுளே! இது எப்படி நடந்தது? நிதிராம் ஆச்சரியம் அடைந்தான். இதுதான் உலகத்தின் கடைசி காலம்! கடவுளே ! நாங்க இப்ப என்ன பண்ண போறோம்?.

அவனுடைய சத்தமான வருத்தமான குரல் சக பணியாளர்களை கவர்ந்திழுத்தது.

சௌஹான்தான் முதலில் வந்தான். “என்ன ஒரு அதிர்ஷ்டம்! கருணை! Mr. சௌத்ரி, ஜீனத் அம்மன் சாய்ரா பானு போல எல்லாருடைய மனசையும் படபடக்க வைத்துவிட்டார். சோமேஷ் சௌத்ரி போய்விட்டார் இனி சோமா சௌத்ரி தான். சோமா சௌத்ரி நீடூடி வாழ்க !.

நான் இப்ப வருத்தப்படுறேன். இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்றதுக்கு அவசரப்பட்டு இருக்க வேண்டாம்! Mr. கோஷ் சொன்னார்.

“சோமா சௌத்ரி முற்றிலுமாக கவர்ந்திழுக்கிறார். இந்த வார இறுதியில் உங்களோடு ஒரு டேட் போலாமா? நடனமாட போகலாம். போகலாமா? ஆலக் ரோனு பேனர்ஜி கேட்டான்.

கை வைக்காத பிங்க் நிற சட்டையோடு அழகாக நடந்தவாறு “நன்றி ரோனு, நான் அதைப் பற்றி யோசிக்கிறேன்” என சொன்னான் சோமேஷ்.

அங்கிருந்தவர்களில் வயதான உதவியாளர் ராதாகிருஷ்ணன் மட்டும்தான் எதனாலும் ஈர்க்கப்படவில்லை. அவர் கொஞ்சம் காட்டமான மனிதர். இதற்கு முன்பு ஒரு வெள்ளைக்கார அதிகாரியின் கீழ் வேலை செய்தார் இப்பொழுது ஒரு பழுப்பு நிற அதிகாரியின் கீழ். அதைப் போலவே முன்பு ஒரு ஆண் அதிகாரியிடம் இப்போது ஒரு பெண் அதிகாரியிடம். அது பெரிதாக என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடப்போகிறது? எந்த ஒரு ஆச்சரியமும் இல்லாமல் முகத்தை கடினமாக வைத்துக்கொண்டு கையில் ஒரு நோட்டுப் பேனாவுடன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். “சொல்லுங்க சார், மன்னிச்சிடுங்க சொல்லுங்க மேடம். நாம் ஆரம்பிக்கலாமா? என தொடர்ந்தார் அவர்.

இதற்கிடையில் இந்த செய்தி சுனாமி அலை போல் அந்த அலுவலகம் முழுவதும் பரவியது. எல்லாரும் போவதும் வருவதும் அதைப் பற்றி பேசுவதுமாக இருந்தார்கள். சோமேஷ் சௌத்ரியை தவிர வேறு யாருக்கும் இருப்புக் கொள்ளவில்லை.

மகிழ்ச்சியான மனநிலையோடு சோமா சௌத்ரி வீடு திரும்பினாள். இந்திராணிக்கு இன்னும் இந்த சூழலை எப்படிக் கையாள்வது என்பதில் தெளிவில்லாமல் இருந்தது. சோமாவிற்கு ஈடு கொடுப்பதற்காகவே அவள் அழகு நிலையத்திற்கு சென்று அவளுடைய முடி மற்றும் நகங்களை அழகு படுத்தினாள். ஆனால் பிரச்சனை அவளுடைய உடல் வடிவம். அதை சீக்கிரமாக சரி செய்வது என்பது முடியாத காரியம். அந்த விஷயத்தில் விவாதத்திற்கு இடம் இல்லாமல் சோமேஷ் தான் வெற்றியாளர். ஒரு அழகு இன்னொரு அழகை வாசற்படியில் இருந்து வரவேற்றது. “ஹலோ டார்லிங்” என கூறியவாறே பெண் போலவே சோஹினி எப்படி செய்வாளோ அதைப் போலவே சோமேஷ் இந்திராணியை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“வேணாம், வேணாம்! அப்படி எல்லாம் பண்ணாதீங்க”. இந்திராணி உளறினாள். சோமேஷ் கண்சிமிட்டியவாறே “அதெல்லாம் ஒன்னும் இல்லை”. என சொல்லியவாறு அவனுடைய புருவத்தை உயர்த்தி “நீ பார்க்க அழகா இருக்க இந்து! முடியை எங்க போய் சரி பண்ண?அந்த ஃபேஷியலும், நல்லா அழகா பண்ணிருக்காங்க” என்றான்.

இந்திராணியை அந்த பாராட்டுகளை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. தேநீரில் சர்க்கரை போட்டவாறே கேட்டாள். “அப்புறம்? ஆபீஸ்ல உங்க கூட வேலை செய்றவங்க எல்லாம் என்ன சொன்னாங்க?”

சோமேஷ் முதலில் முகம் கழுவிக்கொண்டு உடைகளை மாற்றி விட்டு நாற்காலியில் நல்ல வசதியான காட்டன் புடவையில் சாவகாசமாய் அமர்ந்துகொண்டு சிகரெட்டை பற்றவைத்து கொஞ்சம் சூடான தேநீரையும் பருகினான். அதற்குப் பிறகு அவனுடைய கதையை சொல்லத் தொடங்கினான். “இன்னைக்கு ஆபீஸ்ல என்ன நடந்ததுன்னு உன்னால யோசிக்க கூட முடியாது “பகதூர் இப்ராஹிம், நீதிராம், சௌஹான், கோஷ், ராதாகிருஷ்ணன், ரோனு பேனர்ஜி என இருண்ட முகத்தோடு இருந்த ஜெனிஃபரை தவிர வேறு யாரையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் சொன்னான். ரோனு பேனர்ஜி சொன்னதைக் கேட்டு இந்திராணிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்னது? அவன்கூட நீங்க டான்ஸ் ஆட போறிங்களா? அய்யோ கடவுளே! இன்னும் எவ்ளோலாம் அசிங்கப்படனுமோ…”.

“முட்டாள்தனம்! நீ ரொம்ப ஏமாந்தவளா இருக்க!” என சொல்லி கொன்றுவிடும் பார்வையோடு இந்திராணியை பார்த்தான். “அது ஒரு நாகரீகம், நன்றி சொல்வது போல, புரிஞ்சிச்சா?”

அங்கு வீட்டு வேலை செய்யும் ஹரிதாஸி உள்ளே நுழைந்தாள். “Mr. கணஷ்யம் உங்களைப் பார்க்க வந்திருக்காரு பாபு” என சொன்னாள். அவளும் சரி அங்கு சமையல் செய்யும் கங்கா தாக்கூரும் சரி முடிந்தவரை சோமேஷை தவிர்க்கவே நினைத்தார்கள். அவர்கள் சங்கடப்படுகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. பக்கத்து வீடுகளில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு மத்தியில் அவர்கள் ரொம்பவே அவமானப்பட்டார்கள். ஒரு வீட்டினுடைய தலைவன் பெண்ணாக மாறியிருக்கிறார்! மற்றவர்களாவது வேறு யாராவது சொல்லி கேட்கிறார்கள் ஆனால் இவர்களோ கண்கூடாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் பல வருடங்களாக அந்த வீட்டில் இருக்கிறார்கள். சோமேஷின் பெற்றோர்கள் காலத்திலிருந்து. அவர்கள் இரண்டு பேரும் இந்திராணியின் திருமணத்தில் உதவி செய்திருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் அந்த வீட்டை விட்டு பிரிக்க முடியாதவர்கள்.

“ஐயோ! ஹரிதாஸி திரும்பவுமா? பாபுனு கூப்பிடாதனு நான் சொன்னனா இல்லையா?” சோமேஷ் புருவத்தை உயர்த்தினான்.

“அப்புறம் நான் உங்களை என்னன்னு கூப்பிடுறது? அம்மா நா? அப்புறம் அம்மாவை என்னன்னு கூப்பிடுறது?” என அப்பாவித்தனமான கண்களோடு ஹரிதாஸி அவனைப் பார்த்தாள்.

“அது உண்மைதான்!” சோமேஷ் சிகரெட்டை கடித்தவாறு ஒரு நிமிடம் யோசித்தான். “சரி இதுக்கு முன்னாடி கூப்பிட்ட மாதிரி அவளை அம்மானே கூப்பிடு, என்னை மேடம்னு கூப்பிடு சரியா? பாபுனு சொல்லாத”. என சொன்னான். அவள் விஷமத்தனமான ஒரு சிரிப்பு சிரித்து மேடமா? என கேட்டாள்.

கணஷ்யம் சோமேஷின் நீண்டகால பள்ளித் தோழன். எல்லா நாளும் இரவு உணவுக்கு முன்பாக அவர்கள் சதுரங்கம் விளையாடுவார்கள். இது கல்லூரி காலத்திலிருந்தே அவர்களுடைய பழக்கம். அவர்களிருவரும் அருகிலேயே இருப்பதால் திருமணத்திற்குப் பிறகும் இது அப்படியே தொடர்ந்தது.

ஃபிரஞ்ச் பர்ஃப்யூம் வாசனையோடும் காற்றில் பறந்த முடியை சரி செய்து கொண்டும் சோமேஷ் கணஷ்யத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தான்.

“அய்யோ! என்னடா பண்ணி வச்சிருக்க உன்ன?” கணஷ்யம் கத்தினான். அட கடவுளே! இப்படி எல்லாம் செய்யாதடானு நிறைய முறை உனக்கு சொல்லி இருக்கிறேனா இல்லையா? இது இந்தியா அமெரிக்கா இல்ல. இங்க நிறைய கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கும். நான் சொல்றதை நீ ஏன் கவனிக்கவே மாட்டேங்கற? நீ ஏன் எப்பவும் இவ்வளவு பிடிவாதமா இருக்க?”

“ஏன் கோணா? நான் பார்க்க நல்லா இல்லையா?” சோமேஷ் அப்படியே அடங்கிப் போனவனாய் கேட்டான்.

“செருப்பு! நீ பாக்க அப்படியே கோமாளி மாதிரி இருக்க!” கணஷ்யம் அவன் நண்பனின் கண்களை தவிர்த்தவனாய் சதுரங்க காய்களை தூரமாய் எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தான்.

“அத ஏன் எடுத்துப் போட்டுட்டு இருக்க? விளையாட வேண்டாமா? “.

“என்னத்த விளையாடுறது?”

“இப்படி நடந்துகிறத நிறுத்து”.

“யார் இப்படி நடந்துக்கிறா? இப்படி நான் உன் கூட தினமும் விளையாட வந்தா நம்ம நண்பர்கள், சுத்தி அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? அய்யோ! அதுக்கெல்லாம் நான் தயாராயில்லை. என்னோட மனைவி அதுக்கெல்லாம் சுத்தமா அனுமதிக்க மாட்டா. அது இல்லாம என்னோட குழந்தைங்க வளர்ந்துக்கிட்டு இருக்காங்க அவங்க என்ன பத்தி என்ன நினைப்பாங்க? இல்ல! நான் உன்னோட இந்த கேவலமான விளையாட்டுக்கு வரல”.

“என்ன சொல்லிட்டு இருக்க கோணா நீ!” நம்பிக்கையற்று கதறியழுதான் சோமேஷ். “பைத்தியமாயிட்டியா நீ? 20 வருஷமா நாம நண்பர்கள். யாரு நம்மள என்ன சொல்லபோறாங்க?”.

“அதெல்லாம் விடு. அது பழைய கதை. நீ இப்போ மதியம் வந்து என்னோட மனைவி கூட பரமபதம் விளையாடலாம் அத நான் மறுக்க மாட்டேன். முட்டாள், துரோகி, எவ்வளவு முறை நான் உனக்கு …” கணஷ்யத்திற்கு தொண்டை அடைத்தது.

சோமேஷின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. முந்தானையால் அதனை துடைக்க முயன்றான். கணஷ்யம் அழுது கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான். “அவமானம், அவமானம்”.

அப்போது கீழே காரின் ஒலி கேட்டது. அது குழந்தைகளாக தான் இருக்கக்கூடும். இந்திராணி விரைவாக வாசற் கதவிற்கு அருகில் சென்றாள்.சோமேஷ் அவனின் கண்ணீரை துடைத்துக் கொண்டான். அவன் நண்பனின் இழப்பை மறந்தவனாய் கையில் சிகரெட்டோடும் மை கலைந்த கண்களோடும் அன்பும் அக்கறையும் பெருக்கெடுத்தவனாய் மிகவும் ஆர்வமாய் குழந்தைகளை பார்ப்பதற்காக எழுந்து நின்றான். சர்பிரைஸ்! குழந்தைகளுக்கு அவர்களுடைய அப்பா திரும்பி வந்தது தெரியாது.

“அப்பா!”

“அப்பா!”

“அப்பா! “மூன்று பேரும் ஆர்வமாய் கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். அந்த அறைக்குள் வரும்போதே அவர்களுடைய அப்பாவின் விருப்பமான சிகரெட் புகையின் வாசனையை கண்டுகொண்டார்கள். இதற்கு மேலும் அவர்களால் பொறுத்திருக்க முடியவில்லை. இது அப்பாவினுடைய வாசனை! இது அப்பாதான்!.

அவர்கள் அந்த அறைக்குள் நுழைந்ததும் அப்படியே சிலைபோல நின்றார்கள். அவர்கள் என்ன பார்த்தார்களோ அப்படியே அதிர்ந்து போய் நின்றார்கள். ஐந்து வயது ஷொண்ட்டு அழத்தொடங்கினான், “எங்க என்னுடைய அப்பா?” புடவையில் இருக்கும் சோமேஷிடம் சென்றான் ஷொண்டு ஆனால் திரும்ப ஓடிவந்து இந்திராணியின் கரங்களுக்கு இடையில் தன்னை புகுத்தி கொண்டான். இந்திராணி அவனை தூக்கிக்வைத்துக்கொண்டு அலங்காரத்தோடு நிற்கும் சோமேஷிடம் கை நீட்டி காட்டினாள்.

“அதோ உன்னுடைய அப்பா”.

“இல்ல, இல்ல! அவர் என்னுடைய அப்பா இல்ல”. ஷொண்ட்டு தேம்பினான். அவனுடைய சின்ன உடல் இன்னும் குறுகியது. பண்ட்டு எட்டாவது படிக்கிறான். அரும்பு மீசை எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது. மிண்ட்டு பார்ப்பதற்கு துறு துறு பட்டாம்பூச்சி போல இருந்தான்.

வெளியே மிகவும் பரிச்சயமான சிகரெட் வாசனையை நுகர்ந்ததும் அவர்களுடைய அப்பாவை எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்பாவினுடைய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெண் யார்? அவள் பரிட்சயமானவளாக இருக்கிறாள். சோஹினி அத்தையை போல ஆனால் முழுமையாக இல்லை. வேறு யாரோ போல். யாரது?

நகப்பூச்சினால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பத்து விரல்களையும் விரித்தவாறு பேரன்போடு சோமேஷ் அவர்களை அவனிடமாய் அழைத்தான். “தயவுசெய்து அழாதே ஷொண்ட்டு, சோனா… இங்க வா, இங்க வா, வந்து என்னோட மடியில உட்காரு. பாரு நான் உனக்கு என்ன எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்னு. நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்..”

“ஷொண்ட்டுவும் சரி பண்ட்டுவும் சரி ஒரு அடி கூட நகரவில்லை”.

மிண்ட்டு தான் தயங்கியவாறே முதல் அடி எடுத்து வைத்தான். “ஹே, இங்க பாரு இன்னொரு சர்ப்ரைஸ் ….” அவன் பக்கத்தில் இருக்கும் பையை எடுத்தான். ஷொண்ட்டு நகரவே இல்லை.

“போ. உன் அப்பா கிட்ட போ”. இந்திராணி அவன் மகனை தள்ளினாள். “எதுவும் தப்பா நடந்துக்காத இப்போ”.

“வாங்க பசங்களா, உங்க அப்பாகிட்ட போங்க. அவர் உங்களை கூப்பிட்டு இருக்காரு”.கணஷ்யம் சொன்னான். யாருமே கவனிக்கல அவன் எப்போது திரும்பி வந்தான்னு. அப்பா சொல்றத கவனிக்கணும். அவர் புடவை கட்டிருக்காரோ வேட்டி கட்டிருக்காரோ, அப்பா எப்பவுமே அப்பா தான். போங்க,அவன் கிட்ட போங்க”. என சொன்னான் அவன்.

“என்ன அப்பான்னா அப்பா தான்? இப்போ எப்படி அவங்க அவன அப்பானு கூப்பிடுவாங்க? அம்மானு இல்ல இப்ப அவங்க அவனை கூப்பிடனும்?” ஹரிதாஸி கதவிற்கு அருகில் இருந்து முணுமுணுத்தாள்.

குழந்தைங்க இப்போ உங்கள எப்படி கூப்பிடனும் நினைக்கிறீங்க பாபு? ஐயோ மன்னிச்சிடுங்க, மேடம்.அவங்க உங்கள அப்பான்னு கூப்பிடணும்னு நினைக்கிறீங்களா இல்ல மேடமா? அவள் பின்புறமாக இப்படி சொல்லிக் கொண்டிருந்தாள். சோமேஷ் ஜான் மோரிஸ் ஜேன் மோரிஸாக மாறியதை பற்றி படித்துக் கொண்டிருந்ததை ஞாபகப்படுத்தி பார்த்தான். அவருக்கும் நன்கு வளர்ந்த குழந்தைகள் இருந்தார்கள். முன்பு இருந்த அதே உறவு முறையைதான் தொடரவும் செய்தார்கள். அவர்களிடையே அந்த அரவணைப்பிற்கும் கதகதப்பிற்கும் எந்த குறையும் இல்லை. ஆனால் ஜோன் மோரிசனுடைய குழந்தைகள் அவரை எப்படி அழைத்தார்கள்? ஜோன் என்றா? இல்லை அப்பா என்றா? அந்த வாழ்க்கை வரலாறு அதைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. சோமேஷ் ஏக்கத்தோடு அதை சிந்தித்தான். அவன் புருவம் வேர்த்தது தன்னுடைய கைக்குட்டையால் அதை மென்மையாக துடைத்தான்.

ஷொண்ட்டு அவன் அம்மாவை இறுக்கமாக பிடித்துக்கொண்டு உறுதியாக, “இல்லை நான் அவர்களிடம் போக மாட்டேன்”. என்று சொன்னான்.

பண்ட்டு அமைதியாக அவனுடைய அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு கையில் கைப்பையும் மற்றொரு கையில் தங்க வளையல்களும் இரண்டு விரல்களுக்கு இடையில் புகைக்கப் பட்ட சிகரெட்டும், ஆரஞ்சு வண்ண புடவையும் அதற்கு ஏற்றார் போல் இரண்டு புருவங்களுக்கு இடையே ஆரஞ்சு வண்ண பொட்டும், கலைந்த மையுடைய இமைகளும்,கையில்லாத சட்டையும், எதுவும் அற்ற வழவழப்பான இடையும்… பண்ட்டு அவன் கண்களை மூடிக்கொண்டான். இதற்கு மேல் எதையும் பார்க்க அவன் விரும்பவில்லை.

மிண்ட்டு தான் இன்னொரு அடி எடுத்து வைத்தான். அவன் செல்லம் கொடுத்து கொஞ்சம் கெட்டுப்போனவன் குறிப்பாக அவனுடைய அப்பாவால். “பாப்பியாவிடமிருந்து நல்ல இனிய மணம் வருது அம்மா, நல்ல பர்ஃபியூம்!”. என்று சொன்னான் அவன் அம்மாவிடம். மிண்ட்டு ஏற்கனவே அவனுடைய அப்பாவினை பெண்பால் பெயரை கொண்டு அழைக்க துவங்கிவிட்டான். பாப்பிலிருந்து ‘பாப்பியா’ என.

ஹரிதாசி தட்டு நிறைய தின்பண்டங்களுடன் உள்ளே வந்தாள். அவள் கதவருகே நின்று கொண்டு ஒரு பெரிய அசட்டு சிரிப்பை உதிர்த்தாள். “அவ்ளோ தான்! பிரச்சனை முடிஞ்சு போச்சு. பாப்பியா! சரியா இருக்கு கேட்க. வாங்க பசங்களா இதுக்கு மேலும் தூரமா நிக்காதீங்க… உங்க பாப்பியா கிட்ட போங்க. இனிமே நீங்க உங்க பாப்பியாகிட்ட இருந்து எப்பவுமே தள்ளி நிக்க கூடாது… எப்படி இருந்தாலும் அவள் உங்களுடைய அப்பா!!”

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button