
-
அங்கிருந்து தான்
இரட்டைப் பிரகாரமுள்ள அழிக்கும் கடவுளுள்ள கிழக்குப் பார்த்த
கோயிலின் கிழக்கே,
கோயில் குளம் தாண்டின
வேப்ப மரம் முன்னிற்கும்
மேற்குப் பார்த்த ஓட்டு வீடே
அவள் வீடு.
அங்கிருந்து தான்,
இரவு முடிந்து விடிகாலை
வரும் வரைக்கும்
முந்தைய நாளின் காலையில்
எழுந்தது முதல், கல்லூரிச் சென்று
மீண்டும் வீடு திரும்பும் வரை
நடந்த நிகழ்வுகளை
மழலை மொழியில் ஒன்றுவிடாமல்
என்னிடம் அசடு வழிய
கூறுவாள்.
அங்கிருந்து தான்,
பெற்றோர் வேலைக்குச் சென்ற
வேளையில்,
திருட்டுத்தனமாக அலைபேசியில்
அழைத்து,
முன்னிரவில் வீட்டின் தொழுவத்தில்
பிறந்த கன்றுக்குட்டிக்கு
“தேன்மொழி” எனப் பெயரிட்டுள்ளேன்
என்று கூறி மகிழ்ந்தாள்.
அங்கிருந்து தான்,
“என் வீட்டுத் தோட்டத்தில்
பயிரிட்ட முல்லைக் கொடியில்
முதன்முதலாய் பூத்த
முல்லைப் பூவைச்
சூடியுள்ளேன்”
என்ற மேற்கோளுடன்
செல்ஃபி எடுத்து,
பகிரியின் நிலைப்பாட்டில்
எனக்கு மட்டும் பகிர்ந்தாள்.
அங்கிருந்து தான்,
அவளுக்குத் தெரிந்த அளவில்
போட்டோஷாப்பில் எடிட் செய்து,
நாங்கள் கற்பனையாக பேசும்
எங்கள் கற்பனையான
திருமணத்திற்கு,
அவளின் கற்பனையில்
திருமணப் பத்திரிகை ஒன்றை
உருவாக்கி
என்னிடம் காண்பித்தாள்.
அங்கிருந்து தான்,
கடைசியின் கடைசியாக
அவளின் தந்தை
சாதியின் பெயரால்,
எங்கள் கற்பனைகள் அனைத்தையும்
கானல் நீராய் ஆக்கினார்.
அங்கிருந்து தான்…
-
முத்தம்
பொங்கல் விடுமுறைக்கு
முதல்நாள் தன்
சொந்த ஊருக்கு செல்ல
முன்பதிவு செய்பவனுக்கு
கிட்டும்,
அலாதியான
கடைசி தட்கல் சீட்டாய்
நிகழலாம்
உன் முத்தம்.