இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 1

தொடர் | வாசகசாலை

பிறழ்வின் கலைஞன்

புதியத் தொடர் வழியாக உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. மேற்குலக வாழ்க்கையில் ஒரே சமயம் வசீகரமும் ஒவ்வாமையும் இருந்துகொண்டேயிருக்கிறது. புதுமைப்பித்தனின் கதை மாந்தர்களைப் போலவே எப்படியாவது தாய்நாடு சென்றுவிட வேண்டும் என்ற நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கழிந்துக் கொண்டிருக்கிறது. கலை கலாச்சார நிகழ்வுகள் தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நான் பார்த்தவரை பொருளீட்டுதல் மட்டுமே இங்குள்ள வெளிநாட்டவரின் தலையாயக் கடமையாக இருக்கிறது. அதனால் ஓர் அந்நிய நிலத்தின் கலாச்சரங்களை கொண்டாட்டங்களை ஒதுக்கிவிடுகிறார்கள். நான் ஒருநாளும் வெளிநாட்டு மோகத்தில் தகித்ததில்லை. பாஸ்டன் வந்ததும் மிகவும் தற்செயலான ஒரு விஷயம்தான். எனவே ஒரு பயணியாக என் ஒவ்வொரு அனுபவங்களையும் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அதன் நீட்சியான இத்தொடரை எவ்வித முன்முடிவுகளும் இன்றி ஆரம்பிக்கலாம். இசை, பயணம், தத்துவம், உணவு, ஓவியங்கள் இப்படி இலக்கின்றி பயணிக்கலாம்.

கல்லூரியில் என்னை புத்தகம் இல்லாமல் வெறுங்கையுடன் பார்த்ததேயில்லை என்று சமீபத்தில் பார்த்த நண்பன் சொன்னான். தீவிரமாக வாசிப்பை மேற்கொண்ட காலங்கள் அவை. பெரிய இலட்சியம் என்றெல்லாம் ஒன்றுமில்லை, தேர்ந்துகொண்ட படிப்பு அப்படி. படிக்க பெரிதாக ஒன்றுமில்லை. அதனால் கிடைத்ததை வாசித்துக்கொண்டிருப்பேன். தஞ்சாவூரில் ரயில் நிலையத்திலிருந்து வெளி வந்தவுடன் இருக்கும் பெரிய டீக்கடையில் ‘உயிர்மை’ இதழும் ‘காலச்சுவடு’ இதழும் கிடைக்கும். வாங்கிவிட்டால் ஒரு மாதத்துக்கு வாசித்துக்கொண்டேயிருக்கலாம். இனி தமிழ் நாடு வந்தால் ‘புரவி’ எங்கெல்லாம் கிடைக்கும் என்று பார்த்துவைக்க வேண்டும். உயிர்மையும், காலச்சுவடும் எனக்கு இரண்டு கண்கள் போல. அதில் வரும் உலக சினிமா விமர்சனங்களை படிப்பதோடு நில்லாமல், குறிப்பிட்ட படங்களைத் தேடிப் பிடித்து பார்த்துவிடுவேன். அதேபோல எதாவது புத்தகங்கள் பற்றிய குறிப்பு இருந்தால் அடுத்த சில தினங்களில் புத்தகத்தை வாங்கி வாசித்துவிடுவேன். அதில்தான் எனக்கு மேற்கத்திய ஓவியங்களின் அறிமுகமும் கிடைத்தது.

பாஸ்டன் வந்தவுடன் நான் செய்த முதல் விஷயம் என்னைச் சுற்றி எத்தனை அருங்காட்சியகங்கள் இருக்கிறது அவற்றில் எந்தெந்த ஓவியங்கள் இருக்கிறது என்பதை தேடிக் குறித்துக் கொண்டேன். ஜாக்சன் பொலாக்கின் (Jackson Pollock) ஓவியங்கள் பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிந்தவுடன் ஆர்வம் தாங்க முடியவில்லை. பொலாக்கின் ஓவியங்கள் மிகப் பிரம்மாண்டமானவை. நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் அவற்றுக்கு முன் மக்கள் திகைத்துப் போய் அமர்ந்திருந்த படங்களை பார்த்திருக்கிறேன். Abstract Art என்றறியப்படும் பொலாக்கின் ஓவியங்களில் புரிந்துகொள்ள எதுவுமில்லை. இன்று பொலாக்கின் பெயரைத் தட்டினால் இணையத்திலே அத்தனை ஓவியங்களையும் பார்த்துவிடலாம். முடியுமானால் அவர் படம் வரைவதை வீடியோ பதிவு செய்துவைத்திருக்கிறார்கள் அதையும் பார்த்துவிடுங்கள். அதுமட்டுமல்ல அவரின் வாழ்க்கையை மையப்படுத்திய திரைப்படமும் வந்திருக்கிறது. நீங்கள் விரும்பினால் சில மணி நேரங்களில் ஜாக்சன் பொலாக்கின் நண்பராகிவிடலாம். அவ்வளவு தரவுகள் இணையத்தில் கிடைக்கின்றன.

என்னுடைய முதல் குளிர்காலத்தில் நானிருக்கும் இடத்திலிருந்து நடந்தே பாஸ்டன் அருங்காட்சியகம் செல்வதென்று முடிவெடுத்தேன். என்னிடம் கார் இல்லை ஆனால் என்னை அருங்காட்சியகத்தில் இறக்கிவிட நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். பயங்கரமானக் குளிர். முதல்நாள் பனி பொழிந்து சாலையின் இரு மருங்கிலும் உப்புக் குவியல் போல பனி. குளிர் என்றால் நம் கணக்கின் படி -20 டிகிரி செல்சியஸ். இதில் நடந்து போனதற்கு ஒரே காரணம், ஜாக்சன் பொலாக் என்னும் கலைஞனை வந்தனம் செய்ய வேண்டும். அதற்கு எனக்கு தெரிந்த வழி இதுமட்டும் தான்.

ஏற்கனவே சொன்னது போல நீங்கள் பொலாக் படம் வரையும் வீடியோவைப் பார்க்க வேண்டும். சிகரெட் புகைத்துக் கொண்டு தன் ஓவியத்தின் மீது நடந்து பல்வேறு பிரஷ்களை பயன்படுத்தி ஒரு மனப்பிறழ்வு நிலையில் படங்களை வரைவார். அந்தப் பிறழ்வு பார்க்கும் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொள்வதுதான் கலையின் மர்மம். பாஸ்டனில் கடந்த வருடம் அவரின் பெரும் படைப்பான Mural (1943) காட்சிப்படுத்தப்பட்டது. பொலாக்கின் ஓவியத்தின் முன் நிற்கும் போது மனதில் உள்ள அத்தனை துயரங்களும் வடிந்து இறகைப் போல மிதக்கும் தன்மை வந்துவிடுகிறது. நவீன ஓவியங்கள் பார்வையாளர்களுக்கு பெரும் சவாலை முன் வைக்கிறது. ஒரு ரசிகனாக என்னை எல்லா ஓவியங்களும் கவர்ந்திழுக்கும். நவீன காலத்துக்கு முந்தைய எந்த ஓவியங்களும் பார்வையாளருக்கு பெரும் சவால்களை தந்ததில்லை. நான் நவீன ஓவியங்களை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வேனென்றால், நாம் வியந்து பார்க்கும் ஏதோ ஒன்றின் பலநூறு முறை பெரிதாக்கப்பட்ட ஒரு சிறு இடம் என்பேன்.

அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே

என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. இதைத் தான் ஒவ்வொரு நவீன ஓவியனும் தூரிகையின் வழி காட்சிப்படுத்துகிறானோ என்று தோன்றும். பிக்காஸோவின் Cubism ஓவியங்கள் புரியவில்லை என்ற விமர்சனத்தை முன் வைத்தபோது, அவைகள் பேசும் மொழி பார்வையாளர்களுக்கு புரியவில்லை என்றால் நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேட்டாராம். பிக்காஸோவின் இளம் பருவத்து ஓவியங்கள் வியக்கத் தக்க வகையில் எல்லோருக்கும் புரியும் படியான நேரடியான ஓவியங்களாக இருந்தன. ஏதோ ஓர் ஆர்வத்தில் நவீன ஓவியங்களை முதலில் தொட்டுவிட்டேன். நவீன காலத்துக்கு முந்தைய ஓவியங்களில் கால் பதித்தால் தான் இப்போதைய ஓவியங்களின் தீவிரம் புரியும். அடுத்த முறை அப்படியான ஓவியத்துடன் மீண்டும் சந்திக்கலாம்.

(தொடரும்…)

அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button