நிலம் என்பது பூகோளம் சார்ந்தது மட்டுமல்ல. மனிதர்களும் அவர்களின் கலாசாரமும் நிலம் எனும் வெளியை பல்வேறு விதமாக படைத்தளிக்கிறார்கள். அப்படியாக நான் இப்போது வசிக்கும் ப்ரைன்ட்ரீ (Braintree) பற்றி தேடி வாசிக்க ஆரம்பித்தேன். இதையெல்லாம் உங்களுக்கு ஏன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது எழும். ஆனால் இப்படி அந்நியத் தகவல்களைப் பதிவு செய்து தருவது ஒரு முக்கியமான செயல்பாடாகத் தோன்றுகிறது. பொதுவாக பயணக் கட்டுரைகளில் அல்லது புலம் பெயர் இலக்கியங்களில் இந்தத் தன்மை இருப்பதைக் காணலாம்: சொந்த மண்ணின் மீதான ஏக்கம் அல்லது விரக்தி. இவைகள் இரண்டு வித்தியாசமான கலாசாரங்களை ஒப்பிட்டு ஒன்றை உயர்த்தியும் மற்றொன்றை தாழ்த்தியும் பேச வழிவகுக்கும். இதற்கு நம் பெருமைமிகு ஜி.டி.நாயூடு எழுதிய பயணக் குறிப்புகளை சான்றாக சொல்லலாம்.
ஆனால் எனக்கு புலப் பெயர்ச்சி ஒரு வாய்ப்பு அவ்வளவுதான். இதைப் பயன்படுத்தி இங்குள்ள பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன். அதைப் பதிவு செய்கிறேன். இப்படிப் பதிவு செய்வது வாசகர்களின் பார்வையை விரிவடையச் செய்கிறது. அதேபோல ஒரு மாற்று ரசனையை இந்தப் பதிவுகள் முன்வைக்கிறது.
அமெரிக்கர்களின் வளர்ச்சியை இன்று உலகமே வியப்பதற்கு முக்கிய காரணியாக நான் பார்ப்பது அவர்களின் வரலாற்று உணர்வும் பொறுப்புணர்வும் தான். இந்தப் பொறுப்புணர்வு சார்ந்து தான் சுதந்திரம் என்பது முன்வைக்கப்படுகிறது. வரலாற்றுணர்வு ஏன் முக்கியமாகிறது? பெரிய ஒரு மரத்தின் வளர்ச்சி அதன் வேரிலிருந்து தானே தொடங்குகிறது? அப்படியாக இன்று இந்த உயரத்தில் நாம் இருப்பதற்கு நம் முன்னோர்கள் காரணமாகிறார்கள். இப்படிச் சொல்வது முன்னோர்களுக்கான துதிப்பாடல் அல்ல. முன்னோர்களின் தவறுகளிலிருந்தும் நாம் பாடம் கற்கலாம். அதையும் இந்தத் தேசம் கடமையுணர்ச்சியுடன் செய்து வருகிறது.
ப்ரைன்ட்ரீ பாஸ்டனுக்கு வெகு அருகில் இருக்கும் ஒரு சிறிய நகரம். 1640 ஆம் ஆண்டு பாஸ்டனிலிருந்து தனி நகரமாக ப்ரைன்ட்ரீ பிரிகிறது. நகரின் பெயரை உச்சரித்ததும் எனக்கு மூளைக்குள் மரம் முளைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது மூளை ஒரு பெரும் மரமாக நிலைக் கொண்ட பிம்பம் வந்து போகும். ஆனால் ‘ப்ரைன்ட்ரீ’ என்ற வார்த்தைக்கு பழைய ஆங்கிலத்தில் ‘குன்றின் மேல் அமைந்த நகரம்’ என்று பொருள். வாலஸ்டன் குன்றில் வசித்தவர்கள் இந்நகரத்தின் முதல் குடிகளாக அறியப்பட்டதால் வந்தப் பெயராக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தில் உள்ள நகரங்களின் பெயர்களை தாங்கள் கைப்பற்றும் இடங்களுக்குச் சூட்டுவார்கள். உதாரணமாக நம் உதகைப் பகுதிகளில் இருக்கும் பல இடங்களுக்கு ஆங்கில நகரங்களின் பெயர் இருப்பதைக் காணலாம், வெலிங்க்டன், பெட்ஃபோர்ட். அதேபோல பாஸ்டன் இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நகரத்தின் பெயர். அப்படியாக ப்ரைன்ட்ரீ என்பதும் இங்கிலாந்தில் இருக்கும் ஒரு இடத்தின் பெயர். ஜான் ஆடம்ஸ் இங்கிலாந்துக்கு வியாபாரம் நிமித்தம் சென்றிருந்த போது இந்தப் பெயர் காரணங்களையெல்லாம் ஆராய்ந்து வந்தார். ப்ரைன்ட்ரீயை சார்ந்த ஜான் ஆடம்ஸ் சுதந்திர அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். பிறகு அவரது மகன் ஜான் க்வின்ஸி ஆடம்ஸ் ஆறாவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக இரண்டு குடியரசுத் தலைவர்களைக் கொடுத்த பெருமைமிகு நகரம் ப்ரைன்ட்ரீ.
ஒருவேளை இந்தத் தகவல்களை நீங்கள் இணையத்தில் சரிப் பார்க்க முனைந்தால் உங்களுக்கு வேறொரு தகவல் கிடைக்கும். City of Presidents என்று நீங்கள் தேடினால் Quincy – Massachusetts என்று வரும். ப்ரைன்ட்ரீ பிற்காலத்தில் நிர்வாக வசதிக்காக சின்னச் சின்ன நகரங்களாகப் பிரிந்தது. அப்படி உருவான நகரம் தான் க்வின்ஸி. இரண்டு குடியரசுத் தலைவர்கள் வாழ்ந்த பகுதிகள் இப்போது க்வின்ஸி பகுதியில் இருப்பதால் இந்நகரம் ‘சிட்டி ஆஃப் பிரசிடன்ட்ஸ்’ என்று அறியப்படுகிறது. பொதுவாக மேச்ஸூசடஸ்வாசிகளுக்கு ஊர்ப் பெருமை அதிகம். அதுவும் பாஸ்டன் வாசிகளுக்கு சொல்லவே தேவையில்லை. சார்ல்ஸ் நதியும் மிஸ்டிக் நதியும் சேர்ந்துதான் அட்லாண்டிக் மாகசமுத்திரத்தை உருவாக்குவதாக நம்புபவர்கள் பாஸ்டன் வாசிகள். அமெரிக்காவில் முதல் முதலாக என்று எதெல்லாம் சொல்லப்படுகிறதோ அதெல்லாம் பெரும்பாலும் தொடங்கிய இடம் மேசஸூசடஸாகத் தான் இருக்கும். கூடைப்பந்து விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது இங்கேதான். இணையம் பயன்பாட்டுக்கு வந்தது இங்கேதான். சரி, நான் இவற்றையெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டிருக்கக் காரணம், தாமஸ் வாட்சனை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். வாட்சன் சேலம் – மேசஸூசட்ஸில் பிறந்தவர். பிறகு ப்ரைன்ட்ரீக்கு குடியேறினார்.
1876ல் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தொலைப்பேசியைக் கண்டுபிடித்த போது முதல் முதலாக தாமஸ் வாட்சனிடம் தான் பேசினார். “மிஸ்டர் வாட்சன் – இங்கே வாருங்கள் – நான் உங்களைக் காண வேண்டும்” இதுதான் கிரஹாம்பெல் தொலைப்பேசியில் முதலில் பேசிய வாக்கியம். தாமஸ் வாட்சன் ப்ரைன்ட்ரீயில் இருந்ததில் எங்களுக்கு ஒரு பெருமை. இங்குள்ளவர்களால் தாமஸ் வாட்சன் ‘டெலிஃபோன் வாட்சன்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இதுமட்டும் ப்ரைன்ட்ரீயின் வரலாறு என்று சுருக்கிவிடக் கூடாது. ஐரோப்பியர்கள் இந்நிலத்தை ஆக்கிரமிக்கும் முன்னர் கிட்சமாகின் (Cochamakin – கிட்சமாகின் என்றே உச்சரிக்க வேண்டும்) என்ற பழங்குடியினத் தலைவருக்கு சொந்தமாக இருந்தது. இவரின் சகோதரர் சிக்கடாவ்புட் (Chikatawbut) பெரியம்மை தாக்கத்தில் இறந்து போகிறார். உங்களுக்கு அந்தக் கொடும் வரலாறு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அமெரிக்க பழங்குடிகளிடமிருந்து (செவ்விந்தியர்கள் என்று பொதுவாக அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பல்வேறு பழங்குடிகள் இங்கு வசித்திருக்கிறார்கள் இப்போதும் சிலர் இருக்கிறார்கள்.) நிலத்தை அபகரிக்க பெரியம்மைக் கண்டவர்களின் போர்வைகளை பரிசாக ஐரோப்பியர்கள் வழங்கினார்கள். அவற்றை பயன்படுத்தியவர்கள் பெரியம்மைத் தாக்கி அவர்கள் வழியாக மற்றவர்களுக்குப் பரவி கொத்துக் கொத்தாக மாண்டார்கள்.
நிலம் பழங்குடியினர்களின் பெரும் பலமாக இருந்தது. நிப்பான்செட் ஆற்றங்கரையில் வசித்த கிட்சமாகின் காட்சிட்டோ (Cochato) இனத்தை நிர்வகித்து வாழ்ந்து வந்தார். இன்றும் இவ்வினத்தின் நினைவாக காட்சிட்டோ ஆறு ப்ரைன்ட்ரீயில் ஓடிக் கொண்டிருக்கிறது. காட்சிட்டோ என்ற பெயரின் அர்த்தம் ‘அமைதி நிறைந்த மக்கள்’. பெயருக்கேற்றார் போல மிகவும் அமைதியானவர்கள் இவர்கள். அதனை தங்களுக்கு சாதகமாக ஐரோப்பியர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். பெரியம்மை பரப்பியவர்கள் ஐரோப்பியர்கள் என்றறியாத அப்பாவி பழங்குடியினர் அவர்களிடம் மிகவும் நட்பாக இருந்தார்கள். திடீரென 1642ஆம் ஆண்டில் கன்னடிக்கெட் மாகணத்திலிருந்து வந்த சில ஆங்கிலேய அதிகார்கள் கிட்சமாகினை கைது செய்கிறார்கள். அப்பாவி ஒரு மனிதனைக் கைது செய்ய நாற்பது வீரர்கள் கொண்டப் படை நிப்பான்செட் ஆற்றங்கரைக்கு வருகிறது. கைது செய்யப்பட்ட கிட்சமாகினின் மீது சுமத்தப்பட்ட குற்றம் வெள்ளையர்களுக்கு எதிராக புரட்சி செய்ய திட்டமிட்டார் என்பதே. ஆனால் அது நிரூபிக்கப்படாததால் நிபந்தனையின் பெயரில் அவர் விடுவிக்கப்படுகிறார். “பழங்குடியின கடவுள் வணக்கத்தையும் அந்த மதத்தையும் விட்டு (மறுதலித்து) உண்மையான கடவுளின் (கிறிஸ்தவம்) பத்துக் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும்” என்பதே அந்த நிபந்தனை.
ஏகாதிக்க வரலாறுகள் இம்மாதிரியான துரோகங்கள் மூலமாக கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
(தொடரும்…)